Page 1 of 1

அதிகாலைப் பொழுது

Posted: Sat Jul 04, 2020 6:20 pm
by Bhanurathy Thurairajasingam
விடியலும் இல்லாத இராத்திரியும் இல்லாத அதிகாலைப் பொழுது அது...

தொலை தூரமாகத் தேவாலயத்தின் மணியோசையும்

அருகேயுள்ள பிள்ளையார் கோவில் மணியோசையும்

இணைந்து காதுகளில் ஒலித்த அந்தத் தருணத்தில்

முற்றத்தில் அமர்ந்திருந்த மாமரத்துக் குயிலின் பாட்டுக்குப்

பின்பாட்டு இசைக்கின்ற திறமான வித்துவான் போல

தூரமாக இருந்த வேப்பமரத்துக் குயிலும் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தது...

சாமத்துக் கோழிகளும் இன்னும் சில பறவைகளும் கூட

நான் நீயெனப் போட்டி போட்டுக் கொண்டு எழுப்பிய சத்தங்கள் கூட

அதிகாலை நேரத்துப் பூபாளமாகச் செவிக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது...

செம்பருத்திச் செடியில் இருந்த பூவோ மலர்வதா வேண்டாமா என்பது போல

விரிந்தும் விரியாமலும் குனிந்து தரை பார்த்துக் கொண்டிருந்தது...

மேற்கு வானத்தின் கீழ்ப்பகுதியில் விடி வெள்ளி பிரகாசிக்க...

நிலவு அதுவோ நிற்கவோ போகவோ என்பது போல இருந்தது...

பகல் முழுவதும் பூமியை வெப்பத்தால் தகிக்கச் செய்த இயற்கை அன்னையோ

தான் செய்த செயலுக்காக மெல்லக் கண்ணீர் கசிந்ததால்

அது பனித்துளியாகப் புற்கள் மீது மணிமகுடமென வீற்றிருந்தது...

வயல் வரப்புக்களில் நடந்த பொழுது மெல்லனப் பனித்துளி ஈரம்

பாதம் தீண்டி சில்லென்ற உணர்வை உண்டாக்கியது...

                                        ✒பானுரதி✒