Page 1 of 1

உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 2

Posted: Sun Sep 06, 2020 9:06 am
by Madhumathi Bharath
அத்தியாயம் 2

அந்த பிரமாண்டமான கட்டிடத்தின் கீழே நின்று கொண்டு இருந்த சக்தி அந்த கட்டிடத்தை பார்த்ததும் மலைத்துப் போனாள். இந்த பத்து மாடி கட்டிடத்தில் தான் இனி தான் வேலை பார்க்கப் போகிறோம் என்ற உணர்வே அவளுக்கு பயத்தையும், பெருமையையும் ஒருசேரக் கொடுத்தது.

‘எவ்வளவு பெரிய கம்பெனி... இந்த கம்பெனியில் இன்று முதல் நானும் ஒருத்தி.... எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து நல்ல பேர் எடுக்கணும். சீக்கிரமே பெரிய பதவிக்கு வரணும். அப்போ தான் நிறைய சம்பாதிக்க முடியும். இந்த வேலை எனக்கு ஒரு சாக்கு.. மற்றபடி என்னோட நோக்கமே வேற தானே. இல்லையென்றால் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இப்படி வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை’ என்று எண்ணிக் கொண்டவள் தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

ஏற்கனவே இன்டர்வியூ எல்லாம் முடித்து வேலைக்கு அவளை தேர்ந்தெடுத்து விட்டார்கள். இன்று தான் முதல் நாள் வேலையில் சேரப் போகிறாள்.

“யார் நீங்க? யாரைப் பார்க்கணும்?” ரிஷப்ஷனில் இருந்த பெண் கேட்க... பதட்டத்தை மனதில் மறைத்துக் கொண்டு கையில் இருந்த கவரை நீட்டினாள்.

“ஓ.. புது அப்பாயின்மென்ட்டா? நீங்க நாலாவது மாடிக்கு போய் அங்கே மேனேஜரைப் பாருங்க” என்று சொன்னதுடன் தன்னுடைய வேலை முடிந்தது என்று எண்ணும் விதமாக மீண்டும் கம்ப்யூட்டருக்குள் புகுந்து கொள்ள லிப்ட்டை தேடி நான்காவது மாடிக்கு வந்து சேர்ந்தாள் சக்தி.

நாலாவது மாடியில் அவள் நீட்டிய காகிதத்தை கையில் கூட வாங்காமல் மூக்கு கண்ணாடி வழியே அவளது முகத்தையே எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்த மேனேஜரிடம் சிரித்த முகமாகவே நிற்க பெரும்பாடுபட்டாள்.

‘இந்தாளுக்கு எதுக்கு இத்தனை கோபம்?’

“ஹ்ம்...புதுசு புதுசா யாரையாவது அப்பாயின்ட் செஞ்சிட வேண்டியது... நாம கஷ்டப்பட்டு ட்ரைனிங் கொடுத்தா கொஞ்ச நாள் கழிச்சு இதை விட பெரிய கம்பெனியா பார்த்து ஓடிட வேண்டியது. படிப்பைக் கூட முடிக்கலை. அதுக்குள்ளே இவ்வளவு பெரிய கம்பெனியில் வேலை. கல்யாணம் ஆகாத பொண்ணு வேற... கொஞ்ச நாளில் கல்யாணம் செஞ்சுகிட்டு ஓடிடும்.. அப்புறம் வேற ஒரு ஆளை தேடித் பிடிச்சு மறுபடியும் முதல்ல இருந்து நான் ட்ரைனிங் கொடுக்கணும்.” என்றவரின் முணுமுணுப்பு சக்திக்கு தெளிவாகவே கேட்டாலும் எதுவும் பேசாமல் சுற்றுப்புறத்தை ஆராய்வது போல நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“எங்கே நான் சொல்றதை கேட்கிறாங்க... அப்பவே சொன்னேன் என்னோட பிரண்டு பையனுக்கு அந்த வேலையை கொடுக்கலாம்ன்னு... இந்த எம்டி சார் கொஞ்சம் கூட காதில் வாங்கவே இல்லையே... புடவை கட்டி இருந்தால் போதும்...” என்று அவர் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டே இருக்க... சக்தியின் உடல் அதிர்ந்தது.

‘என்ன இவர் இப்படி எல்லாம் பேசுறார்... உண்மையிலேயே எம்டி அப்படி பெண்கள் மேல் விழுந்து பழகும் ரகமா? இல்லை அவர் சொன்ன ஆளுக்கு வேலை கொடுக்காத கோபத்தில் இப்படி எல்லாம் பேசுறாரா? ஒண்ணும் புரியலையே’ என்று குழம்பியவளுக்கு லேசாக தலை சுற்றுவது போல இருந்தது.
‘காலையில் சாப்பிட்டேனா இல்லையா?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு அழைப்பு வர..... வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.

மேனேஜிங் டைரக்டர் என்ற போர்ட் மாட்டப்பட்டு இருந்த கதவில் இரண்டு முறை நாசுக்காக தட்டி அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சக்தி.

“வெல்கம் மிஸ் சக்தி” என்ற ஆர்ப்பாட்டமான குரலில் கவரப்பட்டு நிமிர்ந்து பார்த்தாள். அங்கே சேரில் இருந்து எழுந்து நின்று அவளுக்கு கை குலுக்கி வாழ்த்துவதற்கு தயாராக சிரித்த முகத்துடன் நின்று கொண்டு இருந்தவனைப் பார்த்து அவளுக்கு ஏனோ எரிச்சலாக இருந்தது. முதன்முதலாக ஒரு மனிதனை சந்திக்கும் பொழுதே ஏன் இப்படி தோன்ற வேண்டும்? என்று மூளை அலசி ஆராய முற்பட அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு எதிரில் நின்றவனின் மீது பார்வையை செலுத்தினாள்.

‘இப்போ எதுக்கு இவர் இப்படி அதிகப்படியா நடந்துக்கிறார்?’ என்று அவள் யோசித்தது அவனுக்குமே புரிந்து இருக்கும் போல.. நீட்டிய கையை மடக்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டவன் அவளையும் அமர சொல்லி விட்டு பேசத் தொடங்கினான்.

“ஐ யம் கிஷோர். மேனேஜிங் டைரக்டர் ஆப் சுபம் குரூப் ஆப் கம்பெனீஸ் (I am Kishore Managing Director Of Subam group of Companies) என்று அறிமுகப்படுத்திக் கொள்ள ... லேசாக தலை அசைத்து கேட்டுக் கொண்டாள்.
“உங்களோட வேலையில் எந்த சந்தேகம் வந்தாலும் என்னிடம் கேட்கலாம் சக்தி... இப்போ ஏதாவது கேட்க வேண்டி இருக்கா?”

“என்னோட டேபிள் எங்கே இருக்கு சார்?” என்றாள் நேரடியாக

“இதோ” என்று அவனுக்கு எதிரில் இருந்த மேஜையை காட்ட அவளது முகம் சுருங்கிப் போனது.

“நான் ஒண்ணும் உங்க பிஏ இல்லையே சார்... எதுக்கு எனக்கு உங்க அறையிலேயே சீட் கொடுத்து இருக்கீங்க?” என்றாள் கொஞ்சம் கோபத்தை முகத்தில் தேக்கியபடி...

“இதோ பாருங்க சக்தி... இங்கே உங்க வேலை எனக்கு உதவியா நிறைய ரிப்போர்ட் எடுத்து தர்றது தான். அதுக்கு நான் ஒவ்வொரு முறையும் உங்களை தேடி வர முடியாது. அதுக்காகத் தான் இந்த ஏற்பாடு...”என்று தெளிவான குரலில் பேசியவனை மறுத்து பேச முடியவில்லை அவளால்.

“இல்லை. எனக்கு இந்த இடம் வேண்டாம்... வெளியே மத்தவங்களோட கலந்து வேலை பார்க்கிறேன்...”தயங்கியவாறே சொல்லி முடித்தாள்.

“அதை நீங்க முடிவு செய்ய முடியாது சக்தி.... நான் சொல்வதைத் தான் நீங்க கேட்டாகணும். அப்படி உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க இப்பவே கூட கிளம்பலாம்” என்று அழுத்தமான குரலில் சொல்ல, அதை செய்ய முடியாத தன்னுடைய சூழ்நிலையை எண்ணி சக்தி சோர்ந்து போனாள்.

“இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா நீங்க?” என்று அவள் அங்கே இருப்பதை சுட்டிக் காட்டி அதீத ஆச்சர்யம் காட்டினான் கிஷோர்.

அவளின் சோர்ந்த முகத்தைப் பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை. குரலில் மென்மையை குழைத்துப் பேசினான்.

“என்னுடைய பிஏவும் இங்கே இந்த அறையில் நம்முடன் தான் இருப்பாங்க சக்தி.. என்னுடன் தனியா இருக்கணுமோ அப்படிங்கிற பயம் வேண்டாம். மோர்ஓவர் (Moreover) பெண்களை பார்த்ததும் மேலே பாய்ந்து விடும் அளவிற்கு நான் கெட்டவன் இல்லை.” என்று சொன்னவனின் முகத்தை அதிர்வுடன் பார்த்தாள்.

‘கோபமா இருக்கிறாரோ.. இல்லையே கோல்கேட் விளம்பரத்தில் நடிக்க வந்த மாதிரி முப்பத்திரெண்டு பல்லையும் இல்ல காட்டிக்கிட்டு இருக்கார்’ என்று நினைத்தவள் அவன் தன்னையே ஆழ்ந்து பார்க்கவும் வேகமாக போய் தன்னுடைய இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

மறுமொழி பேசாமல் தன்னுடைய சீட்டில் அமர்ந்து வேலையை பார்க்கத் தொடங்கவும் அவன் முகத்தில் மெச்சுதலான பார்வை வந்தது.

“குட்... இப்படியே நான் சொல்றதை எல்லாம் மறுபேச்சு பேசாமல் கேட்டா அது உனக்... உங்களுக்கு ரொம்ப நல்லது சக்தி...” என்றவனின் அமர்த்தலான பேச்சில் ஏதோ ஒன்று உறுத்த... அவனை நிமிர்ந்து பார்த்தாள் சக்தி. அவளது பார்வையை உணர்ந்தும் உணராதவன் போல அவன் கம்ப்யூட்டரில் மூழ்க சக்தியின் முகம் யோசனையானது.

‘எதுவோ சரியில்லை என்று அவள் தலையை போட்டு குடைய அதைப்பற்றி தொடர்ந்து சிந்திக்க விடாமல் அவளுக்கு வரிசையாக வேலைகளை கொடுத்தான் கிஷோர்.

“இதுல நம்ம கம்பெனி தயாரிக்கும் மருந்துகளைப் பற்றியும், அது என்னென்ன நோய்க்கு மருந்தா இருக்கு.. அதுக்கு தேவையான மூலப்பொருள்கள் பத்தியும் இந்த பைலில் இருக்கு... இதை எல்லாம் படிச்சு நல்லா மனசில் பதிய வச்சுக்கோங்க சக்தி” என்று கூறிவிட்டு அவள் முன்னால் பைல்களை நிரப்ப அத்தனை பைல்களையும் பார்த்தவள் வாயை பிளந்து விட்டாள்.

‘இத்தனை பைலா?’

“என்ன சக்தி முதல் நாளே இவ்வளவு வேலையான்னு பயப்படுற மாதிரி இருக்கே?” அவளை சீண்டி விடும் விதமாக அவன் பேச...

“இன்னிக்கே முடிச்சுடுவேன் சார்” என்று விறைப்பாக சொன்னவள் பைலில் இருக்கும் சின்ன தகவலைக் கூட விடாமல் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து மனதில் பதிய வைத்துக் கொண்டாள். அவள் வேலையில் மூழ்கி இருந்த தருணத்தில் அவள் அறியாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்தன கிஷோரின் விழிகள்.

விலை குறைவான காட்டன் புடவையை அவள் அழகுற, பாங்குடன் கட்டி இருந்த விதமும், எந்த ஒப்பனையுமே இல்லாமல் ரதியென இருந்தவளை அவன் கண்கள் ஆசையுடன் பருகிக் கொண்டிருந்தது.

‘கண்ணம்மா... கொல்றியே என்னை... இத்தனை நாள் உன்னை தள்ளி வச்சு பார்த்துட்டு இருந்தேன். இப்போ நானாகவே உன்னை இங்கே கொண்டு வந்துட்டேன். அதுவும் நீ படிச்சுக்கிட்டு இருக்கும் பொழுதே... இனி பக்கத்தில் வைச்சுகிட்டே எப்படி சமாளிக்கப் போறேனோ தெரியலையே. மாமன் மேல கொஞ்சம் கருணை காட்டு தாயி... சீக்கிரம் என் வழிக்கு வந்துடு செல்லம்’ என்று அவன் மனதுக்குள் புலம்பித் தீர்த்தான்.

கிஷோரின் பார்வைகளையோ, அவனுடைய மனதின் எண்ணங்களையோ உணராமல் வேலையில் மூழ்கி இருந்தாள் சக்தி.

ஒரே நாளில் எல்லாவற்றையும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவளது உடலை சோர்வடைய செய்தாலும் மதிய உணவு நேரம் தாண்டியும் இருக்கையை விட்டு அசையாமல் தன்னுடைய பணியில் மூழ்கி இருந்தாள் சக்தி.

“சாப்பிட போகலையா சக்தி?” என்ற கிஷோரின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் அவனது பார்வையில் குழம்பிப் போனாள்.

‘என்ன பார்வை இது? ஆச்சரியமா? எதிர்பார்ப்பா? என்ன இருக்கிறது இவன் பார்வையில்’ என்று எண்ணியவள் பார்வையை வேகமாக திருப்பிக் கொண்டாள்.

“இதோ இன்னும் கொஞ்ச பைல் தான் சார் இருக்கு. அதையும் பார்த்து முடிச்சுட்டு சாப்பிட போறேன் சார்...”

“ஒரே நாளில் எல்லாத்தையும் கத்துக்க முடியாது சக்தி. அப்படி செய்ய நினைச்சா மூளை குழம்பிடும். பொறுமையா கத்துக்கலாம். இப்போ எழுந்து சாப்பிட போகலாம்” என்று சொன்னவன் அவளது அனுமதியை எதிர்பார்க்காமல் கம்ப்யூட்டரை அணைத்து விட, அவளால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

கம்பெனி முதலாளி அவனே வேலை பார்த்தது போதும் என்று சொன்ன பிறகு அவள் என்ன செய்ய முடியும். அவனை முறைத்தபடியே எழுந்து சென்றவளின் பாதையில் கை நீட்டி தடுத்தான் கிஷோர்.
“அந்தப்பக்கம் இல்லை சக்தி.. இந்தப் பக்கம்...”

“ஸ்டாப் கேண்டீன் இந்தப் பக்கம் தானே சார் இருக்கு”

“ஆமா.. ஆனா நீங்க அங்கே சாப்பிட போக வேண்டாம்... என்னோடு சாப்பிட வாங்க” என்று சொல்லவும் உஷ்ணமான முறைப்பை அவனுக்கு கொடுக்க பயந்து நடுங்குபவன் போல பாவனை காட்டினான் கிஷோர்.

“ஒண்ணுமில்லை சக்தி.. எந்த அளவுக்கு விவரங்கள் தெரிஞ்சு வச்சு இருக்கீங்கன்னு சாப்பிட்டுகிட்டே கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு தான். ஏன்னா சாப்பிட்டு முடிந்ததும் எனக்கு வெளியில் வேலை இருக்கு. கிளம்பி போய்டுவேன். உங்களிடம் சாயந்திரம் உட்கார்ந்து பொறுமையா பேச முடியாது. அதனால தான். மத்தபடி நான் ரொம்ப நல்ல பிள்ளை” என்று சொல்ல அவளையும் மீறி அவள் உதட்டோரம் மெல்லிய புன்னகை வந்தது.

“குட் ..இப்படியே சிரிச்ச முகமா இருங்க.. பார்க்க நல்லா இருக்கு” என்று சொல்லவும் சட்டென்று அவள் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போனது.

‘ஹ்ம்.. ஒரு வார்த்தை கூட பேசிடக் கூடாதே.. உடனே நத்தை மாதிரி கூட்டுக்குள் சுருங்கிடுவியே... இதை இப்படியே நீடிக்க விட மாட்டேன் சக்தி’ என்று உள்ளுக்குள் சூளுரைத்துக் கொண்டான். வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் மேனேஜர் மற்றும் முக்கியமான விருந்தினர்கள் அலுவலகத்திற்கு வந்து இருந்தால் அவர்களுக்கு என்று தனியே ஒதுக்கப்பட்டு இருந்த உணவு உண்ணும் பகுதிக்கு அழைத்து வந்தான்.

நீண்ட ஹாலில் ஆங்காங்கே சாப்பாட்டு மேசைகள்... அங்கே இருந்த ஒரு பெல்லை அழுத்தியதும் ஒரு பணியாள் வேகமாக வந்து என்ன உணவு வேண்டும் என்று கேட்டு குறித்துக் கொண்டு உள்ளே சென்று விட சக்திக்கு இதெல்லாம் அதிகப்படியாகவே தோன்றியது.

‘எதிர்புறம் ஸ்டாப் கேண்டீன் இருக்கு. அங்கே போய் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால் ஆகாதா? அவர்களும் மனிதர்கள் தானே? இவங்களுக்கு மட்டும் பெருசா கொம்பு வச்ச மாதிரி தனியா சாப்பிடற இடம்... ஓடி வந்து கேட்டு கேட்டு உணவு பரிமாற ஆள்.. இது மருந்து கம்பெனியா? இல்லை ஸ்டார் ஹோட்டலா?’ என்று உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள்.

“நம்ம கம்பெனி கூட டீலிங் வச்சு இருக்கிறவங்க அடிக்கடி இங்கே வருவாங்க சக்தி... அப்படி அவங்க வரும் பொழுதெல்லாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்டார் ஹோட்டலில் போய் சாப்பிட வைத்து பிரமாதப்படுத்தி விட முடியும். ஆனா அதற்கு பதிலா இங்கே நம்ம ஆபிஸ் உள்ளேயே இப்படி இருக்கிறது நல்லது அப்படிங்கிறது என்னோட எண்ணம்.

இங்கே கிடைக்கும் சாப்பாடு எல்லாம் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்காது. நம்ம பாரம்பரிய முறைப்படி செய்யப்படுது. இதெல்லாம் நம்ம மண்ணோட பாரம்பரிய உணவு வகைகள். இதை சாப்பிட்ட பிறகு யாருக்கும் வெளியே சாப்பிட மனம் வராது.” என்று அவன் அவள் மனதை படித்ததைப் போல விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்க...

“பழைய சோறு கிடைக்குமா?” என்று தனக்கே உரிய துடுக்குத்தனத்துடன் கேட்டவள், கேட்ட பிறகே தன்னுடைய தவறை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டு அமைதியாகி விட்டாள். கிஷோர் அதை தவறாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக சிரித்தான்.

“நிச்சயம் கிடைக்கும்...”என்று கூறி அவளை அதிர வைத்தான் கிஷோர்... அது மட்டும் இல்லை.. கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், வரகரிசி சாப்பாடு... இப்படி இங்கே எல்லா விதமான பாரம்பரிய முறையான உணவு வகைகளும் கிடைக்கும். நம்ம கம்பெனி மூலிகைப் பொருட்கள் மூலமா தயார் ஆகுற மருந்துகளை வாங்கத் தான் நம்ம கம்பெனிக்கு அவங்க வர்றாங்க. சோ பாரம்பரியமான சாப்பாட்டை போட்டா அவங்க ரொம்ப ரசிச்சு சாப்பிட்டு நம்ம கூட வியாபார ஒப்பந்தம் செஞ்சுக்குவாங்க”

“ஒருவேளை வர்றவங்க எனக்கு இட்லி, தோசை தான் வேணும்னு கேட்டா?”

“அதுவும் உண்டு... ஆனா பெரும்பாலும் நம்ம ஆபிஸ் ஸ்டாப்களும் சரி.. வெளியாட்களாக இருந்தாலும் சரி பெரும்பாலும் நம்ம பாரம்பரிய உணவு வகைகளைத் தான் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க” என்று பொறுமையாக விளக்கம் அளித்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் சக்தி.

“ஆக எல்லாமே வியாபாரம் தான் இல்லையா?” என்று கேட்டவளின் முகத்தில் இருந்து வெறுப்பு வாய்ப்பு கிடைத்தால் அவனை குதறி விடும் வேகத்தில் அவள் இருப்பதை சொல்லாமல் சொன்னது.

“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். வியாபார நோக்கம் இல்லைனா இப்போ இருக்கிற போட்டி நிறைந்த உலகத்தில் ஜெயிக்க முடியாது. அதே நேரம் நாம செய்யுறது மத்தவங்களை பாதிக்காத விஷயம் தானே. அப்புறம் அதில் குறைபட என்ன இருக்கிறது?” என்று கேட்க.. அவள் மௌனமாகி விட்டாள்.

சாப்பாடு வந்ததும் பேசிக் கொண்டே அவள் தெரிந்து கொண்ட விஷயங்களைப் பற்றி அவன் கேட்க.. எல்லாவற்றுக்கும் யோசித்து பொறுமையாக.. அதே சமயம் தெளிவான பதில்களை சொன்ன சக்தியின் திறமையில் அசந்து தான் போனான் கிஷோர்.

“வெல் டன் சக்தி... முதல் நாளில்... அதுவும் அரை நாளில் இதுவே அதிகப்படி... மிச்சம் இருக்கிற வேலையையும் இன்னிக்கு முடிச்சுட்டு நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.. யார் கிட்டயும் நீங்க ரிப்போர்ட் செய்ய வேண்டாம்.” என்று இலகுவாக முடித்து விட அவளும் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு தன்னுடைய டேபிளை நோக்கி செல்ல... பின்னால் இருந்து அவளை பார்த்தபடியே அளவிட்டுக் கொண்டு இருந்தான் கிஷோர்.

‘இவளது அதீத புத்திசாலித்தனம் எனக்கு சாதகமா இல்லை பாதகமா?..எது எப்படி இருந்தாலும் சரி... உன்னை நான் விடப் போவதில்லை சக்தி. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன்னோட மனசை என் பக்கம் திருப்பிடுவேன். ஒருவேளை பின்நாளில் உனக்கு எல்லா உண்மையும் தெரிய வந்தாலும் கூட அப்பொழுது நீ முழுசா எனக்கு சொந்தமானவளா மாறி இருப்பாய்.’ என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டான்.