காதல்_25

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_25

Post by Rajeswari.d »

25
குரு அன்றைக்கு பேசி விட்டுப் போனவன் அதற்கு பிறகு இத்தனை நாள் ஆகியும் ஒரு நாள் கூட இவளை வந்து பார்க்கவில்லை.

அவன் இங்கே இருக்கிறானா இல்லை வேறு ஊருக்கு சென்று விட்டானா எனபது கூட இவளுக்கு தெரியாது.

எப்போதும் வழக்கம்போல வீட்டுக்கு தேவையான பொருட்களை குருவின் கடையில் தான் வாங்கிக் கொண்டிருந்தாள்.

ஒருமுறை குருவை அங்கே பார்த்தது போல மறுபடியும் அவனை பார்க்கும் சந்தர்ப்பம் எப்போதுமே இவளுக்கு அமையவில்லை.

நான்கைந்து முறை சென்று வாங்கியவள் ஒருமுறை அங்கிருக்கும் வேலையாட்களிடம் கேட்டிருந்தாள்.
"இங்கே குருன்னு ஒருத்தர் இருந்தாரே அவர் இப்போ இந்த கடைக்கு வர்றது இல்லையா.."

இவள் கேட்டவர் வயதில் முதிர்ந்தவர் நீண்ட நாட்களாக அந்த கடையில் வேலை செய்பவர் சரியான நபரிடம் தான் இவள் இந்த கேள்வியை கேட்டிருந்தாள்.

"சின்ன தம்பியை கேக்குறீங்களா அவரு இப்போ இங்க இல்லம்மா பொள்ளாச்சி பக்கத்துல ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆரம்பிச்சிருக்காங்க புதுசா... அங்க வேலை செய்து கொண்டிருக்கிறார் அந்த கடையை அந்த தம்பிக்காக தான் ஆரம்பிச்சு இருக்காங்க.."

"வேலை போய்க்கிட்டு இருக்குது மா ஆறு மாசமா தம்பி அங்க தான் இருக்காங்க .இங்க வர்றது கிடையாது ஞாயிற்றுக்கிழமை மாதிரி ஒரு தடவை வந்து எட்டிப் பார்த்துட்டு போய்க்கிட்டு இருக்காங்க.."

"ஒ.".என்று கேட்டதோடு சரி அதற்குப் பிறகு அடிக்கடி அங்கே சென்றாலும் குருவைப் பார்க்க இயலவில்லை.

நித்யஸ்ரீ மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மொத்தமாக அவள் தன்னை மறந்து விட்டான் இனி மேல் நம்மை பார்க்க வர மாட்டான்.

மனதிற்குள் எங்கோ ஒரு ஓரத்தில் வலி எடுத்தாலும் இவள் விரும்பியதும் இதைத்தானே..

எங்கேயோ நன்றாக இருந்தால் சரி தான் இனிமேல் இதைப் பற்றி யோசிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.

பூர்ணிமா தன்னுடைய மகளுடன் அவளுடைய தாய் தந்தையை காணச் சென்றிருந்தாள்.பத்து நாட்கள் சென்று தங்கி விட்டு வருவதாகக் கூறிச் சென்று இருந்தாள்.

அதனால் வீடு சற்று அமைதியாகவே காணப்பட்டது.
லஷ்மியும் முன்பு போல அடிக்கடி இவளிடம் எதுவும் சொல்வது கிடையாது

விதிப்படி நடக்கட்டும் என்பது போல அமைதியாக இருந்தார் தந்தை குமார் இப்போது இவளோடு ஃபேக்டரிக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார்.

ஃபேக்டரி கூட எப்போதுமே பரபரப்பாக இருந்தது. நிறைய ஆர்டர்கள் வந்த வண்ணம் இருந்தது. ஓய்வு என்பது எல்லாம் நித்துவுக்கு கிடைக்கவில்லை.

எப்போதுமே பரபரப்பாக சென்று கொண்டிருந்தாள். இதை நேரில் பார்த்ததாலோ என்னவோ குமார் தன்னுடைய மனைவியிடம் கூறி இருந்தார்.

"அவளுக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்குது லஷ்மி நீ சும்மா சும்மா எதையாவது சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.நிச்சயமா நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பேன் ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரலைன்னு தோணுது."

லஷ்மிக்கு சற்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம்.இப்போது அவருடைய வேண்டுதல் ஒன்றே ஒன்றுதான்

நித்யஸ்ரீ சீக்கிரமாக திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி அவர் அருகே இருக்கும் ஒவ்வொரு கோவிலாக சுற்றிக் கொண்டிருந்தார்.

நாட்கள் மட்டும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல்.

குருவின் பெயரில் ஆரம்பித்திருந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கூட இப்போது ஓபன் செய்து இருந்தனர்.

அன்றைய தினசரி நாளிதழில் தொடங்கி விளம்பரம் நிறைய செய்து இருந்தனர் தினசரி பேப்பரை பார்க்கும் போது மனதிற்கு நிறைய நிறைவாக இருந்தது நித்யஸ்ரீக்கு....

அவனுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்க ஆரம்பித்துவிட்டான் இனிமேல் அவன் நல்ல படியாக முன்னேறி நன்றாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தினாள்.

இவர்கள் இருக்கும் பகுதியில் இருந்து பொள்ளாச்சி சற்று தூரம் தான் தினமும் ஒரு மணி நேரம் வீட்டுக்கு வந்து செல்ல நேரம் ஆகியது.

காலையில் எட்டு மணிக்கு இங்கே இருந்து புறப்பட்டு சென்றான் என்றால் அங்கே பொள்ளாச்சியை அடைய ஒன்பது மணி ஆகி விடும்.

அதன்பிறகு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை ஓபன் செய்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்றால் இரவு வரையுமே நேரம் நீண்டு கொண்டே செல்லும்.

இரவு பத்து மணிக்கு கடையை அடைத்துவிட்டு மறுபடியும் வீட்டிற்கு வரும்போது பதினோரு மணியைத் தாண்டி விடும் இதுவே இவனுடைய வழக்கமாக இருந்தது.

காலை முதல் இரவு வரை ஓய்வு என்பதே இல்லாத அளவிற்கு நேரம் சரியாக இருந்தது.

அவ்வப்போது தோன்றும் நித்யஸ்ரீயின் முகம் மட்டுமே தற்சமயம் இவனை ஓட வைத்துக் கொண்டிருந்தது.

நிச்சயமாக தன்னுடைய முடிவு தவறு என்று ஒரு நாள் உணர்வாள். அப்போது தன்னைத் தேடி வந்து விடுவாள் என்ற நம்பிக்கை நிறைய இருக்க எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருந்தான் குரு.

எவ்வளவு தான் காத்திருந்தாலும் அதற்கும் ஒரு காலம் உண்டல்லவா அந்த காலம் மாற துவங்கி இருந்தது.

ஒருவேளை லஷ்மி கோயில் கோயிலாக இவளுக்காக வேண்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்க... அது தான் அந்த தெய்வத்தின் காதிற்கு விழுந்து விட்டதோ..

அன்று காலை விடியும் போதே பூர்ணிமா போனில் அழைத்து பேசியிருந்தாள் கொஞ்சம் பதட்டமாக..

அவளுடைய போனை அட்டென்ட் செய்தது நித்யஸ்ரீயின் தந்தை குமார்."என்னம்மா என்னோட பேத்தி என்ன சொல்லுறா என்று ஆர்வமாக கேட்க அங்கே எதிர்முனையில் பூர்ணிமா போனில் அழுது கொண்டிருந்தாள்.

"மாமா என்னன்னு தெரியலை வைரஸ் ஃபீவர் என்று சொல்லுறாங்க பொண்ணு ரொம்ப டயர்டா தெரியறா ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டுப் போனா அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க .நான் ஹாஸ்பிடல் வாசலில் இருந்து பேசுறேன். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல்ல பயமா இருக்கு" என்று அழுதபடி கூறினாள்.

"காய்ச்சல் வருவது சகஜம் தான் மா நீ அதற்காக எதுக்கு அழற கூட யார் இருக்கிறார்கள்.."

"அப்பா அம்மா ரெண்டு பேருமே வந்து இருக்காங்க மாமா .எனக்கு தான் பயமா இருக்கு கையில் குளுக்கோஸ் எல்லாம் பாப்பாவுக்கு போட்டு இருக்கிறார்கள்" என்று கூறினாள்.

"சரி.. அழ கூடாது..ஒன்றும் இல்ல நம்ம பாப்பாவுக்கு எதுவும் ஆகாது நீ அழாதம்மா… நான் இப்பவே புறப்பட்டு வருகிறேன் "என்று பூர்ணாவுக்கு சமாதானம் சொன்னவர்.

தன்னுடைய மனைவியை பார்த்து "பூர்ணிமா வீட்டு வரைக்கும் போயிட்டு வந்திடறேன் .குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி அழுது கிட்டு இருக்கிறா" என்று கூறினார்.

"அப்பா அங்கு போனதும் போன் பண்ணுங்க பா.. எப்படி இருக்கிறான்னு சொல்லுங்க நாங்க வரணும்னாலும் சொல்லுங்க நானும் அம்மாவும் உடனே அங்கே வந்திடறோம் பா "என்று நித்யஸ்ரீ கூறினாள்.

"இன்றைக்கு ஆர்டர் எல்லாம் அனுப்பி வைக்கனும் இல்லையா... இன்னைக்கு பிரீ டைம் கிடைக்கிறதே உனக்கு கஷ்டம் அதனால் நீ வரவேண்டாம்... அங்க ஆபீஸ்ல வேலையை பாரு .பெருசா பயப்படுற மாதிரி எதுவும் இருக்காது பூர்ணிமாவுக்கு குழந்தைன்னா உயிர் இல்லையா கொஞ்சம் வாட்டமா இருந்தாலே அவளாள தாங்க முடியாது அதனால தான் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறா என்று நினைக்கிறேன் .அங்க போய் பார்த்துட்டு உனக்கு போன் பண்ணறேன் நித்து.." என்றபடி புறப்பட்டு இருந்தார்.

அங்கே ஹாஸ்பிடலுக்கு செல்ல நிலைமை கொஞ்சம் சீரியஸாக தான் இருந்தது.

இங்கே அட்மிட் செய்த போது காய்ச்சல் 104 டிகிரியை தொட்டிருக்க... கையில் குளுக்கோஸ் ஏற்றியபடி குழந்தையை படுக்க வைத்திருந்தனர்.

ஆனால் தற்சமயம் ஓரளவிற்கு காய்ச்சல் குணமாகி இருந்தது.ஆனாலுமே ஒருநாள் முடிக்கின்ற வரையிலும் அட்மிட் ஆகி இருக்கட்டும் என்று தலைமை மருத்துவர் கூறியிருந்தார்.

அங்கு சென்றவர் பூர்ணிமாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவளுடைய தாய் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்.

நித்துவுக்கும் அழைத்து பேசியிருந்தார்.. இங்கே வரும்போது கொஞ்சம் காய்ச்சல் அதிகமாக இருந்திருக்கும் .இப்போ ஓகே நல்லாதான் இருக்கிறா.. ஹாஸ்பிடல்ல ஒரு நாள் இருக்கட்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் நான் இன்றைக்கு இங்கே தங்கிக்கறேன் நீயும் அம்மாவும் வீட்டில் இருங்க... பயப்பட ஒன்னும் இல்ல "என்று கூறினார்.

"சரிப்பா நான் அம்மாவை பார்த்துக்கறேன்" என்று கூறி போனை வைத்து இருந்தாள் நித்யஸ்ரீ.

எல்லாமே சரியாக நடப்பதாக தோன்றினாலும் அன்றைக்கு அப்படி எல்லாம் எதுவும் நடந்திருக்கவில்லை.

இரவு பதினோரு மணி ஆகியிருந்தது நித்யஸ்ரீ வீட்டிற்கு வந்து சேர்ந்த போது.. லட்சுமி சட்ட சோர்வாகவே அமர்ந்தபடி ஹாலில் இருந்த டீவியை பார்த்து கொண்டிருந்தார்.

"அம்மா சாப்பிட்டாச்சா அம்மா..ஏன் இன்றைக்கு ரொம்ப சோர்வா தெரியுதுங்க" என்று பேச்சுக் கொடுத்தபடி தன் தாயாரிடம் வந்து அமர்ந்தாள் நித்யஸ்ரீ.

"ஒன்னும் இல்ல நித்து... ஏனோ எனக்கு மனசு ரொம்ப பாரமா இருக்குது..ஏதேதோ யோசனை பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்பத் திரும்ப கண்ணு முன்னாடி வந்துட்டு இருக்கு."

"இந்த பரத்திக்கு இப்படி ஆகி இருக்க வேண்டாம் இல்லையா..அவன் இருந்தா... இப்படியெல்லாம்...நம்ம வீடு இப்படியா இருக்கும் எவ்வளவு கலகலப்பா சிரிச்சுகிட்டு நேரம் போய்க் கொண்டிருக்கும் .வீட்டை பார்க்கும் போது எனக்கு சுத்தமா பிடிக்கல நித்யஸ்ரீ ரொம்ப அமைதியா இருக்குது."

தன் தாயார் அளவுக்கதிகமாக தனிமையில் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பது கொஞ்சம் புரிய மெல்ல அவளது கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டாள்.

"அம்மா நடந்து முடிஞ்சது பத்தி யோசிச்சு என்ன ஆகப்போகுது இனிமே நடக்குறது பற்றி பார்க்கலாம் நீங்கள் இவ்வளவெல்லாம் யோசிக்க வேண்டாம் சாப்டிங்களா இல்லையா" என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.

"தனியா உக்காந்து என்ன பண்ணறது.. எனக்கு சாப்பிட எல்லாம் பிடிக்கல நித்து மா..சாயங்காலத்திலிருந்து இங்கதான் உட்கார்ந்திருக்கிறேன். ரொம்ப மனசு படபடனு ஒரு மாதிரியா இருக்கு."

"என்னமா இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க நீங்க இங்கே உட்கார்ந்து இருங்க நான் போயி சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்."

"தினமும் தான் சாப்பிடறேன் மா இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடாட்டி செத்தா போய்விட போறேன்.சாப்பாடு வேண்டாம். என் பக்கத்திலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு."

"என்னம்மா என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அப்பா போன் பண்ணி பேசினீங்களா.."

"ஆமா மதியம் போன் பண்ணினாங்க பாப்பாக்கு நல்லா இருக்குது ஒன்னும் பயப்பட எதுவும் தேவையில்லை நீ தைரியமா இரு. இன்றைக்கு மட்டும் இங்கேயே ஹாஸ்பிடல்ல கூட இருந்துட்டு நாளைக்கு வந்துடறேன் அப்படின்னு சொன்னாங்க."

"அண்ணியுயும் பாப்பாவையும் இங்கே கூப்பிட்டுட்டு வர சொல்லிடுங்க அம்மா நம்ம பார்த்துக்கலாம்."

"நானும் அதைத்தான் உங்க அப்பாகிட்ட சொன்னேன் என்ன பண்றாங்கன்னு தெரியல ஒருவேளை சரியான பிறகுதான் வருவேன்னு சொன்னா ஒன்னும் சொல்ல முடியாது இல்லையா…"

"அதுவும் சரிதான் அம்மா அவர்களுக்கு உரிமை இருக்கிறது தன்னுடைய மகளை தன்னுடைய பேபியை பார்த்துக்கணும் என்கிற ஆசை அவங்களுக்கும் இருக்கும் இல்லையா அண்ணி அவங்க வீட்டுக்கு ஒரு பெண்ணும் கூட.."

"ஆமாம் நித்து அதனாலதான் நானும் ஒன்றும் சொல்லவில்லை "என்று சொன்னபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தார்.

"என்னம்மா ஏன் என்ன பண்ணுது ஏன் இப்படி பண்ணறிங்க தூக்கம் வருதா என்ன... தூக்கம் வருதுனா ரூம்ல போய் தூங்கலாம் மா" என்று பதில் கூறினாள்.

"நான்தான் சொன்னேனே எனக்கு ஒரு மாதிரியா தல சுத்திக்கிட்டே என்னமோ போல இருக்கு..எனக்கு சொல்ல தெரியல ஏதேதோ யோசனை நீயும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கற.. இதோ இப்போ இருபத்தி ஒன்பது வயது தொடங்க போகுது... எதையோ யோசிக்கிறேன் விடுமா.."

"அம்மா ஏன் என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு இருக்கிறீங்க எல்லாமே நல்லா நடக்கும்மா…"

"நானும் அப்படித்தான் நினைச்சேன் கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறேன். இன்றைக்கு காலையிலிருந்து விரதம். எனக்கு ஏதாவது ஒரு பதில் சொல்லுன்னு சொல்லி அந்த கடவுள் கிட்ட கேட்டுகிட்டு உட்கார்ந்திருக்கிறேன் என்ன நடக்குமோ நடக்கட்டும்.."

"என்னமா இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க அப்படின்னா காலையிலிருந்தே நீங்க சாப்பிடலையா இருங்க நான் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன் ஒரு டம்ளர் குடிங்க.. அதற்கு பிறகு ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டு விட்டு படுக்கலாம் "என்று வேகமாக சமையல் அறை நோக்கி சென்றாள் .

வேகமாக கேஸ் அடுப்பை பற்ற வைத்து பால் காய்த்து டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு இங்கே வரும்போது லஷ்மி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த அவர் ஒரு பக்கமாக சரிந்து விழுந்து இருந்தார்.

அம்மா என்ற சத்தத்தோடு சற்று பதட்டமாக அவருக்கு அருகில் வேகமாக ஓடி வந்தாள் நித்யஸ்ரீ.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”