காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_4

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_4

Post by Rajeswari.d »

4
இங்கு காலேஜில் சேர்ந்த நாளில் இருந்தே அபிநயாவை காலேஜ்க்கு அழைத்து வருவது இவளுக்கு நன்றாகத் தெரியும்.

அவனுடைய அத்தை பெண் என்பதும் நன்றாகவே தெரியும். அதனால் சற்றென்று அவளிடம் "அபி அவனை எங்கே பார்த்த" என்று கேட்டாள்.

"அங்கே கிரவுண்ட்ல எனக்கு பயமா இருக்கு நித்து"என்று கூற இரண்டு பேருமே வேகமாக விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடினர்.

சுற்றிலும் புழுதி பறக்க கூட்டமாக மாணவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இரண்டு பேரும் மண்ணில் உருண்டு கொண்டு இருந்தனர்.

நித்தி வேகமாக அவனுக்கு அருகில் சென்றவள் "குரு சண்டை போடாத எழுந்து வா "என்று அவனது சட்டையை பிடித்து நிறுத்த போனாள்.

கோபத்தில் குரு ருத்ர மூர்த்தியாக அங்கே நின்று கொண்டு இருந்தான். இவள் தொட்டவேகத்தில் *போடி...போடின்னு சொல்றேன்ல" என்று வேகமாக இவளை உதறி விட... நான்கடி தள்ளி போய் விழுந்தாள் நித்யஸ்ரீ.

வேகமாக அபிநயா அவளை வந்து தாங்கிக் கொண்டாள். இத்தனை நாளும் குருவைப் பார்த்து இருக்கிறாளே தவிர அவனது கோபத்தை நேரடியாகப் பார்த்தது கிடையாது.

நித்திக்கு இது புதிது இந்தக் கோபம் இவனின் இந்த பரிணாமம் புதிது.அதிர்ச்சியோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அவனுக்கு கோவம் வந்தால் அப்படித்தான் நித்தி அவனை கண்ட்ரோல் பண்ண முடியாது. நீ எழுந்திரு நாம புறப்படலாம். அவன் எப்போதோ வரட்டும் "என்றபடி இவளை எழுப்பி நகர்த்தி சென்றாள்.

போகும்போது கூடகுருவையே பார்த்தபடி நகர்ந்து சென்றாள் நித்யஸ்ரீ…

இப்போது தான் ஞாபகம் வந்தது. வழக்கமாக அபிநயா தானே அவனொடு வீட்டிற்கு வண்டியில் செல்பவள்.

இன்று இவளை அழைத்துக்கொண்டு நகர்கிறாள் என்றால்…" நீ குரு கூட வரலையா" என்று கேட்டாள் நித்யஸ்ரீ.

"இல்ல அவன் இப்போதைக்கு வர மாட்டான். அவன் பொறேமையா வீட்டுக்கு வரட்டும். நான் ஏதாவது ஒரு டாக்ஸி பிடித்து வீட்டுக்கு போயிடுறேன்."

"வீட்ல.. வீட்ல அம்மா அப்பா கேட்டா என்ன பதில் சொல்லுவ... அபி ப்ளீஸ் அவன மாட்டி வைத்துடாதே.."

"அதெல்லாம் இல்ல வா நித்து" என்று
அழைத்துச் சென்றாள். வீட்டிற்கு சென்ற பிறகும் கூட நித்யஸ்ரீக்கு… குருவின் ஞாபகமாகவே இருந்தது.

அடிக்கடி போனை எடுத்துப் பார்த்தவள் அவனிடம் அழைத்து பேசலாமா என்று யோசித்தாள். ஆனால் அவனுடைய இன்னொரு மனமோஅவனிடம் பேசக்கூடாது என்று எடுத்துரைத்தது.

அத்தனை பேர் பார்க்கும் போது உன்ன தள்ளிவிட்டான் தானே... எக்காரணம் கொண்டும் நீ அவனிடம் பேச கூடாது. பத்து நாள் பேசாம சுத்த விட்டால் ஆட்டோமேட்டிக்கா அவனோட தப்பு அவனுக்குபுரியும். இப்படி நினைத்தவள் அமைதியாகி விட்டாள்.

ஆனால் பரத் வீட்டிற்கு வந்த நேரத்தில் இருந்தே இவளை கவனித்துக்கொண்டிருந்தான்.

சாப்பிட்ட பிறகு தன்னுடைய அறைக்கு சென்ற உடனேயே அவள் பின்னோடு பரத்தும் வந்திருந்தான்.

"குட்டிமா உனக்கு என்ன பிரச்சனை எங்கிட்ட சொல்லறியா... இப்போது... என்ன ஆச்சு.. காலேஜ்ல ஏதாவது பிரச்சனையா.. சொல்லு குட்டிமா" என்று கேட்டான்.

"பிரச்சினையெல்லாம் எனக்கு எதுவும் இல்ல ணா..அதுவும் நீங்க இருக்கும் போது என்கிட்ட பிரச்சனை வந்து விடுமா என்ன.. அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது நான் வேற ஒரு விஷயம் யோசிச்சிக்கிட்டு இருந்தேன் அதுதான் உங்களுக்கு அப்படி தோனி இருக்கு."

"நான் பிறந்ததிலிருந்து உன்ன பாத்துக்கிட்டு இருக்கறேன் குட்டிமா... உன்னோட அசைவு ஒவ்வொன்றும் எனக்கு அத்து படி.. சொல்ல மாட்டேன்னா சொல்லு நான் கேட்கலை…"

"அண்ணா உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போறேன்.. காலேஜில குரு சண்டை போட்டான்.."

"குட்டிமாகிட்டேயா பொதுவா அவன் உன்கிட்ட சண்டையெல்லாம் போட மாட்டனே. நீ தான் அவனோட பெஸ்ட் பிரன்ட் ஆச்சே.."

"அண்ணா... என் கூட இல்லை கூட படிக்கிற பையன் கூட…பயங்கரமான சண்டை யாராலையும் அவனை தடுக்கவே முடியலை எனக்கு பயமா இருந்தது".

"அதுக்கு எதுக்கு நீ இப்படி மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்கிற…நார்மலாக இரு எதுவும் ஆகி இருக்காது.ஏன் பயப்படற".

"ஏதாவது ஆகி இருக்குமொன்னு கொஞ்சம் பயமாய் இருக்கிறது ணா.."

"அப்படினா போன் பண்ணி பேசு முடிஞ்சது இதுக்கு எதுக்கு உன் முகத்தை இப்படி வச்சுக்கிட்டு இருக்கிற…"

"தடுக்கப் போன என்ன அவன் தள்ளி விட்டான்... நான் அவன் கிட்ட எல்லாம் பேச மாட்டேன்."

"ஓகே புரியுது... குட்டிமாவுக்கு ஏன் கோபம்னு இப்ப நல்லா புரியுது.. ஒன்னும் இருக்காது டா நாளைக்கு வழக்கம் போல காலேஜ்க்கு வருவான் போதுமா.."

"சரி ணா... குட் நைட் "என்று கூறினாள் நித்யஸ்ரீ..

"குட் நைட் ரா காலைல பாக்கலாம்" என்றபடி தன்னுடைய அறையை நோக்கி நகர்ந்தான் பரத்.

பரத் இத்தனை நாட்களாக தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சென்று கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கனவு வேராக இருந்தது... படித்தது எல்லாமே எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப் பட்டதாக இருக்க... அவன் அந்தத் துறையில் பெரிய அளவில் ஃபேக்டரி வைக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசை.

ஆனால் பரத்தின் தந்தை தற்சமயம் அதற்கு சம்மதிக்கவில்லை... "பரத் வெளியுலக பழக்கம் வேணும் பரத்.. அதனால கொஞ்ச நாளைக்கு நீ வேலைக்கு போ.. பிறகு சொந்தமாக ஃபேக்டரி வைக்கிறது பற்றி யோசிக்கலாம் "என்று ஒரே வரியில் முடித்து விட்டார்.

ஆனாலும் அவனது கனவு எல்லாமே சொந்த பேக்டரி பற்றியதாக மட்டும்தான் இருந்தது.

நித்துவை கேட்டால் எப்போதுமே அவளுடைய அண்ணன் பக்கம்தான். "அண்ணாவுக்கு நிறைய டேலண்ட் இருக்குதுப்பா.. நீங்க தைரியமா அவன புது ஃபேக்டரி வைக்க சொல்லலாம். தோற்று எல்லாம் போக மாட்டாங்க. அண்ணனுக்கு உதவியாக நானும் இருப்பேன்"இப்படி கூறுவாள்.

"அதுதான் எனக்கும் தெரியுமே நித்து.. உங்க அண்ணாவுக்கு பக்கபலமாய் எப்போதும் நீ இருப்பேன்னு.."

"ஆமா அவள் சொல்வாள் அவளுக்கு என்ன? நீங்க வேற..பொட்ட பிள்ளையே கல்யாணம் பண்ணிக் கொடுக்காம பிஸ்னஸ் பண்ண அனுப்பி வைப்பிங்களா.. அவ சொல்றான்னு நீங்க கேட்டுக்கிட்டு இருக்கிறீங்க "என்று லட்சுமி நடுவில் வந்தார்.

"அம்மா எப்பவுமே இப்படித்தான் பா.. எதையாவது பேசிக்கிட்டே இருப்பாங்க... எங்க அண்ணாவுக்கு நான் இருக்கிறேன் அண்ணாவோட ஆசை எல்லாமே நடக்கணும்..அதுதான் என்னோட ஆசை" என்று கூறி சிரித்தாள் நித்யஸ்ரீ.

இதையெல்லாம் யோசித்தபடி பரத் தன்னுடைய அறைக்குள் சென்றான்.

இங்கே குரு வீட்டிற்கு வரும்போது நேரம் எட்டு மணியை தொட்டிருந்தது. நடந்த அடிதடி சண்டையில் கையில் நல்ல அடிபட்டு இருக்க காயத்திற்கு பிளாஸ்டர் ஒட்டி இருந்தான்.அதற்கு மேல் சிறு கட்டும் போட்டு அனுப்பி இருந்தனர்.

நேரத்தோடு வீட்டிற்கு வந்தால் தாய் தந்தையிடம் மாட்டிக்கொள்வோம் என்று நோட்ஸ் எழுத வேண்டும் அதனால் பிரெண்ட் வீட்டுக்கு செல்கிறேன் இரவு வர நேரமாகும் என்று கூறி இருந்தான்..

குருவின் குடும்பம் சற்று பெரியது.. கூட்டுக் குடும்பம் என்பதினால் அவ்வளவு சீக்கிரம் அவர்கள் கண்களில் இருந்து தப்பிக்க முடியாது.

கையில் அடிபட்டு இருந்த காயத்தை காட்டாமல் தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு படி ஹாலிற்குள் பிரவேசித்தான்.

அபி நிமிர்ந்து அவனைப் பார்த்தாலே தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. குருவின் தாயார் புவனா இவனைப் பார்த்து…" வா குரு இப்போது தான் முடிந்ததா.. வந்தாச்சா சாப்பிட எடுத்து வைக்கவா "என்று கேட்டார்.

"அம்மா பிரண்டு வீட்டுலேயே சாப்பிட்டேன் மா ரொம்ப கம்பெல் பண்ணினான். வேண்டாம்னு சொல்ல முடியல. அப்பா எங்க மா…"

"இப்பதான்டா ரூமுக்குள்ள போனாங்க.. கூப்பிடனுமா என்ன.."

"இல்லைமா வேண்டாம் நாளைக்கு பார்த்து பேசிக்கலாம்... பெரியப்பா அண்ணா எல்லாரும் வந்தாச்சா.."

"எல்லாருமே சாப்பிட்டு தூங்க போயாச்சுடா..நீதான் இன்னும் இங்கே சுத்திக்கிட்டு இருக்கிற.."

"ஸாரிமா" என்றபடி வேகமாக தன்னுடைய அறைக்கு சென்றான்.

அவன் சென்ற சில நிமிடங்களிலேயே அபிநயா ஒரு தட்டில் இட்லிகளை எடுத்துக்கொண்டு குருவின் அறையை நோக்கி நகர்ந்தாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அபிநயாவின் தங்கை அனுசுயா... "என்னக்கா தட்டில் இட்லி ஸ்பெஷலா போகுது.. என்ன விஷயமாம் "என்று கேட்டாள்.

"பேசாமல் இருக்கிறாயா இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்... வேணும்னா நீயும் என் பின்னாடி வா…"

"எதுக்கு? அங்க வந்தா மாமா என் மண்டையிலேயே கொட்டுவாங்க…"

"இன்றைக்கு ஹோம் ஓர்க் பண்ணலையா.. கரெக்டா பண்ணினா குரு எதுக்கு உன்னை அடிக்க போறான்."

"ஏய் நீ வேற... ஏற்கனவே மாமா சரியா படிக்கிறது இல்லன்னு மண்டையில் கொட்டி கொட்டி சொல்லி தராங்க.. நீ வேற கடுப்படிக்காத".

*அத்தனை பயம் இருக்குற நீ என்ன செய்யணும்.. கொடுக்கிற ஹோம் ஒர்க்கை என்றைக்காவது மாமாகிட்ட எழுதிக்காட்டி இருக்கிறியா.. தினம் உன்கிட்ட முறைச்சுகிட்டே இருக்கணும் தானே.. என்ன இன்றைக்கு டியூஷன் எடுக்க வரலைனு ஹேப்பியா இருக்கிறியா என்ன.."

"தெய்வமே கிளம்பு.. உன்கிட்ட பேசி என்னால முடியாது. நான் எதையும் கேட்கல. நானே நேத்து கொடுத்த மேக்ஸ் இன்னும் போட முடியலை கவலையோடு இருக்கிறேன்."

"நம்பிட்டேன்" என்று சொன்னபடி நகர்ந்து சென்றாள் அபர்ணா.

அங்கே குருவின் ரூமுக்குள் செல்ல.. அங்கே அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தான்.

"சந்தோசமா சண்டை போட்டு முடிச்சாச்சா.. "என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள் அபர்ணா..

"தப்பு தப்பா பேசினா அப்புறம் அடிக்காமல் என்ன பண்ண சொல்ற... கொஞ்சவா செய்ய முடியும்.."

"ஏன் குரு நித்யஸ்ரீய பத்தி தப்பா ஏதாவது பேசினார்களா..அதனால தான் அந்தப்பையன் கிட்ட சண்டை போட்டியா... அப்படி போட்டு அடிக்கிற உனக்கு அவளை ரொம்ப பிடிக்குமா.."

"ஏய் லூசு மாதிரி பேசாத.. உன்னப் பத்தி பேசினா கூட அடிப்பேன்.. ஏன்னா எனக்கு நீயும் ஒன்னுதான் அவளும் ஒன்றுதான். ரெண்டு பேருக்கும் பாரபட்சம் கிடையாது."

"சாரி குரு இப்படி கேட்டிருக்க கூடாது..கோச்சுக்காம இந்த இட்லியை சாப்பிடு.."

"இல்ல அபர்ணா நான் சாப்பிட்டு வந்துட்டேன்…"

"எனக்கு உன்ன நல்லா தெரியும் குரு. நாள் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கிறேனே.. நிச்சயமா நீ இதுவரைக்கும் வெளியே சாப்பிட்டது எல்லாம் கிடையாது. கை கட்டை மறைக்க தானே இவ்வளவு நேரம் கழிச்சு வந்த... நான் வீட்டில யார்கிட்டயும் எதுவும் சொல்லல.. அதனால கவலை இல்லாமல் தூங்கி எந்திரி.. முதல்ல கையை காட்டு அதைப் பாக்கணும்.."

அவள் கேட்கவும் தன்னுடைய கையை எடுத்து அவள் முன்னால் நீட்டினான் குரு.

"மை காட் இவ்வளவு பெருசா காயமாகி இருக்கு... நாளைக்கு அப்பா கேட்டால் என்ன பதில் சொல்லப் போற... மொதல்ல அத்தை இத பார்த்தா பயந்திடுவாங்களே…"

"அதுதான் சத்தம் இல்லாமல் இந்தப்பக்கம் வந்து விட்டேன்.. நாளைக்கு கேட்கும் போது ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்…"

"சரி அது போகட்டும்… முதல்ல வாயை திறந்து நான் தரும் இட்லியும் வாங்கிக்கோ... அதென்ன அத்தனை கோபம் குரு.. இதுவரைக்கும் இத்தனை ஆக்ரோஷமா உன்ன பார்த்ததே இல்ல..எனக்கு உன்னை பார்க்கும்போது பயமா போச்சு.."

*உன்னை யாரு அங்கே எல்லாம் வர சொன்னது..பத்து நிமிஷம் அங்கேயே நின்றிருந்தா நானே அங்கே வந்திருப்பேனே…"

"நல்லா வருவ... நான் வந்து உன்னை தடுக்கறேன். நித்யா வந்து தடுக்கறா.. நீ என்ன பண்ணின ரெண்டு பேரையும் தள்ளி விடற… அந்த நிமிஷம் உன்னோட முகத்தை பார்க்கவே அவ்வளவு பயமா இருந்தது தெரியுமா."

*நித்யாவை தள்ளி விட்டேனா…"

"சரியா போச்சு உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா... நான்தான் பிடிவாதமா அந்த இடத்திலிருந்து அவளை நகர்த்தி கூட்டிட்டு வந்தேன். பிறகு நான் வீட்டுக்கு கிளம்பலாம் என கால் டாக்சி புக் பண்ணி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்."

"ஓ.. ஆண்டவா" வேகமாக நித்யஸ்ரீயின் நம்பருக்கு அழைப்பு விடுத்தான் குரு.

போன் தான் மறுபடியும் மறுபடியும் அடித்துக்கொண்டிருந்ததே தவிர நம்பரை பார்த்த நித்யா சைலண்ட் மோடில் போட்டுவிட்டு படுத்துக் கொண்டாள். அந்த நிமிடம் குரு மீது அவளுக்கு அத்தனை கோபம்.

எப்படி இப்படி ஒரு கண்ணுமண்ணு தெரியாத கோபம் உனக்கு வரலாம். தடுக்க வந்த என்ன போடின்னு தள்ளிவிடற.. இதுக்கு நிச்சயம் நீ பதில் சொல்லித்தான் ஆகணும். நிச்சயமா உடனே நான் சமாதானமாக மாட்டேன். பார்க்கறேன் நீ என்ன செய்யறேன்னு... இனிமே நம்ம நட்பு தொடரனும்னா நிச்சயமா நீ நிறைய சாரி சொல்ல வேண்டியது இருக்கும்.இப்படி நினைத்தபடி படுத்திருந்தாள் நித்யா.

அடுத்த நாள் அழகாக விடிந்து இருந்தது...காலையிலேயே தன்னுடைய தந்தையின் அறைக்குள் சென்றவன் "அப்பா நேற்று வரும்போது சின்ன ஆக்சிடன்ட் ஆயிடுச்சு பா.. வண்டிக்கு எதுவும் ஆகல.. கைல தான் சின்னதா அடிபட்டு இருக்கு..அம்மா நைட் பார்த்தா பயந்திடுவாங்கன்னு சொல்லி அவங்ககிட்ட எதையும் சொல்லல.. உங்ககிட்ட அப்படி சொல்லாமல் இருக்க முடியாதே…" என்று பாதி உண்மையும் பாதி பொய்யுமாக கூறி இருந்தான்.

சில நிமிடம் தாண்டும்போது புவனா அங்கே வந்திருந்தார். "ஏண்டா நேத்து சொல்லி இருக்கலாம் இல்ல.. ஏன் இப்படி இருக்கிற.. ரொம்ப வலிச்சுதா டாக்டர்கிட்ட போனியா"..

"அதெல்லாம் போயாச்சு மா ஒண்ணுமே இல்ல சின்ன காயம் தான்... நீங்க பயப்பட எல்லாம் வேண்டாம்.."

"இதுக்குத்தான் வண்டி வாங்கி கொடுக்கும் போதே சொன்னேன்.. அவனுக்கு வண்டி எல்லாம் வேண்டாம் அவனுக்கு பொறுமையே கிடையாது..கொஞ்ச நாள் காலேஜுக்கு பஸ்ஸிலேயே போகட்டும்னு.. உங்க அப்பா தான் கேட்கல.. அபர்ணா இருக்கிறா அவள குரு கூடவே அனுப்பி வைக்கலாம். அப்பதான் பார்த்து நிதானமா போவான் அப்படின்னு சொன்னீங்க.. இப்ப பாருங்க இப்படி அடி வாங்கிட்டு வந்து இருக்கிறான்.. ஒருவேளை அபர்ணாவை கூப்பிட்டுகிட்டு வரும்போது இது போல ஆகி இருந்தா.. என்னால யோசிக்கவே முடியல.."

"அம்மா முதலில் இத்தனை பதட்டம் தேவையில்லை மா.. அபர்ணா என்கூட இருந்தா நிறைய ஜாக்கிரதையா தான் வண்டி ஓட்டுவேன். ப்ளீஸ் அம்மா ரிலாக்ஸ் "என்று கூறினான்.

அப்போது இவனுடைய பெரியப்பா அவருடைய இரண்டு மகன்கள் மூவருமே இவனை பார்க்க வந்திருந்தனர்.

"நீ ஏன் உடனே போன் பண்ணல குரு.. போன் பண்ணி இருந்தா நாங்க யாராவது அங்கே வந்து இருப்போமே..
தனியா ஹாஸ்பிடல் போய் கையில கட்டுப்பாட்டுடன் தனியா வர்ற அளவுக்கு நீ என்ன கூட யாரும் இல்லாதவனா.."

"ஐயோ பெரியப்பா ரொம்ப சின்ன காயம்... அதனாலதான் யார்கிட்டயும் எதுவும் சொல்லல.. இனிமே இது போல நடக்காது பெரியப்பா.ஏதாவதுன்னா முதல்ல உங்கள கூப்பிட்டு சொல்லிடறேன் சரியா."

"ஒவ்வொரு தடவையும் இதுமாதிரிதான் ஏதாவது செஞ்சிக்கிட்டு வர்ற பிறகு இப்படித்தான் சமாதானம் சொல்லி தப்பிச்சுக்கற…"

"இல்ல பெரியப்பா அப்படி எல்லாம் எதுவும் இல்லை.."

"அப்பா அவனே கையில காயத்தோடு வந்திருக்கிறான். நீங்களும் பேசிக்கிட்டே இருந்தா எப்படி.. நீங்க குடோனுக்கு கிளம்புங்க பா.. நான் கொஞ்ச நேரம் குரு கிட்ட பேசிட்டு வரேன் "என்று பெரிய மகன் கதிர் கூறினார்.

"பேசிட்டு சீக்கிரம் வந்து சேரு "என்றபடி நகர்ந்து சென்றார் அவர்.

"இப்போ சொல்லுடா என்ன பிரச்சனை நிச்சயமா ஆக்சிடெண்ட் கிடையாது எனக்கு உன்ன நல்லா தெரியும். எங்க ரகளை பண்ணின காலேஜ்லயா.."

"அண்ணா என்ன இது.. இப்படி தாக்கறீங்க.. அதுவும் நேர்ல பார்த்தது போல இருக்குது நீங்கள் பேசுவதை பார்க்கும் போது.."

"அப்ப உண்மை அதுதான் இல்லையா.. ஜாக்கிங் போகும்போது பாத்தேன்டா.. உன்னோட வண்டியில சின்ன கீறல் கூட கிடையாது.. வீட்ல இருக்குற பெரியவங்க வேணும்னா கவனிக்காமல் இருக்கலாம் ஆனால் நான் உன்னோட அண்ணன் இல்லையா.. பார்க்கும்போது தெரிஞ்சு போச்சு.தில்லாலங்கடி வேலை செஞ்சிருக்க அப்படின்னு.. அதனால எதுவும் வீட்ல சொல்லல.. ஆனா நேத்து வீட்டுக்கு வந்த நேரத்தில் இருந்து அபியோட முகமே சரியில்ல.அடிக்கடி வாசல் அதான் பார்த்துக்கிட்டு இருந்தா.. நீ வேற வரலையா ஒன்னும் ஒன்னும் ரெண்டு அவ்வளவுதான்."

"உங்க கிட்ட ரொம்ப கவனமா இருக்கணும் கதிர் அண்ணா.."

"போடா அதெல்லாம் இல்ல... சீக்கிரமா படிச்சு முடிச்சிட்டுநம்ம டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கவனிக்க வந்து சேரு.. இங்கே நம்பிக்கையான ஆள் இல்லாம ரொம்பவே நாலு பேருமே சிரமப்படறோம்."

"அண்ணா...கதிர் அண்ணா எனக்கு இந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எல்லாம் வேண்டாம். என்னோட கனவு வேற.. ஏதாவது நல்ல கம்பெனியில வேலை செய்யணும். இதுதான் இப்போதைய ஆசை. என்ஜினியரிங் சேர்த்துவிட்டு டிபார்ட்மென்டல் ஸ்டோர்... உங்களுக்கு இதெல்லாம் ஓவரா தெரியல.."

"டேய் படிப்புக்கும் வேலைக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு.. படிப்பு உன்னோட ஆசைக்கு வேலை இந்த வீட்டுக்காக செய்கிறது".

"பாக்கலாம்ணா.. இன்னும் நிறைய நாள் இருக்கே.. காலேஜ் சேர்ந்து முழுசா ஆறு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இப்பவே இத்தனை பெரிய பொறுப்பை என் தலையில் சுமத்தி நான் எப்படி?"

"போடா வாயாடி கிளம்பு.. நான் கிளம்புறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

வீட்டை பொறுத்த வரைக்கும் குரு எல்லாருக்குமே விளையாட்டுப் பிள்ளை மட்டுமல்ல.. அன்பானவனும் கூட... அத்தனை பேருக்குமே அவனை மிகமிகப் பிடிக்கும்.

இவனும் இது வரைக்கும் யாரையும் மரியாதைக் குறைவாக எல்லாம் நடத்தியது கிடையாது. குடும்பம் என்றால் அனைவருமே இவனுக்கு உயிர் தான்.

அப்போது அனு அந்த பக்கமாக வந்தாள்.பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் மாணவி இவள்... வீட்டைப் பொறுத்தவரைக்கும் கடைக்குட்டி.. எல்லோருக்குமே பயங்கர செல்லம்..எல்லோரையுமே கலாய்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பது இவளது வழக்கம்.

*என்ன மாமா நேத்து சாப்பாடெல்லாம் ஊட்டி விட்ட மாதிரி இருந்தது.. வீட்டுக்குள்ள என்னதான் நடக்குது. எங்ககிட்ட எல்லாம் சொல்ல மாட்டீங்களா "என்று கேட்டாள்.

*நேத்து கொடுத்த ஹோம் ஒர்க் பண்ணியாச்சா இல்லையா…"

"என்னது ஹோம் ஒர்க்கா.."

"ஏன் மறந்து போச்சா.. நேத்து டியூஷன் எடுக்க முடியல அதற்காக அப்படியே விட்டுடுவேன்னு நினைக்க வேண்டாம். எனக்கு சாயங்காலம் வரும்போது அத்தனையையும் போட்டு எடுத்துட்டு வந்து இருக்கணும்."

'யப்பா... நல்லா இருக்கிறீர்களா என்று விசாரிக்க வந்தா இத்தனை கேப்பீங்களா.. இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியலையா.. நான் இரண்டு நாள் டியூஷனுக்கு எஸ்கேப் ஆகலாம்னு பிளான் பண்ணி னா.. இப்படி சொல்லுறீங்க.. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க மாம்ஸ்... ஒன்னும் அவசரம் இல்லை நான் இங்கேதான் இருப்பேன். இன்றைக்கு இல்லாட்டி நாளைக்கு பார்த்துக்கலாம்.."

"ஒ... அப்படியா.. இந்த முடிவு எடுத்தது அத்தைக்கு தெரியுமா.."

"ஏன் இப்ப அத்தையை இழுக்கறீங்க... இதெல்லாம் சரி இல்ல பார்த்துக்கோங்க.. இப்ப என்ன ஹோம் ஒர்க் எழுதனுமா ..எழுதறேன்... எப்போதும்போல டியூஷனுக்கு வரேன்
" என்றபடி இவனை சற்றே முறைத்து விட்டு நகர்ந்தாள் அவள்.

*குரு நீ மட்டும் இல்லைன்னா இவ எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்திடுவா.."என்று கூறினாள் அபிநயா.

"ம்.. தெரியுமே" என்றபடி காலேஜுக்கு புறப்பட்டான் குரு.

"ஆமா புறப்பட்டாச்சு ஆனா நீ இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ.. நாளைக்கு காலேஜ்க்கு வந்தால் போதும் குரு. கை காயத்தோட வலி கொஞ்சம் குறைந்து விடும் இல்லையா"..

"ரெஸ்டா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. அங்கே நித்து வேற கோபமா இருக்கிறா.. முதலில் அவளை சமாதானப்படுத்தனும்.. அடுத்ததுதான் மத்த வேலை.."

"இத்தனை பயம் இருக்கிறவன்அவள அப்படி தள்ளி விட்டு இருக்கக்கூடாது." என்று விட்டு நகர்ந்து சென்றாள் அபர்ணா.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”