Episode 1

Moderator: Madhumathi Bharath

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

Episode 1

Post by Madhumathi Bharath »

அத்தியாயம் 1
“கெட்டி மேளம் கெட்டி மேளம்” ஐயரின் குரல் கணீரென்று ஒலிக்க ரோமங்கள் அடர்ந்த வலிமையான கரம் ஒன்று தன்னுடைய கழுத்தில் தாலி கட்டுவதை உணர்ந்தாலும் எந்தவிதமான உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் அப்படியே இறுகிப் போய் அமர்ந்து இருந்தாள் பொழிலரசி.


தாலியை கட்டும் முன் ஒரு சில நிமிடங்கள் அந்தக் கரங்களுக்கு உரியவன் லேசாகத் தயங்கினாலும், இனி எதையும் மாற்ற முடியாது என்பதை நன்கு அறிந்ததினால் தயக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி வைத்து விட்டு தாலியை கட்டி முடித்தான்.


மூன்றாவது முடிச்சையும் அவனே போட்டு முடித்த பின்னர்த் தன் கைகளில் தெறித்து விழுந்த அவளின் கண்ணீர் துளியை உணர்ந்தவனின் உடல் ஒரு நிமிடம் விரைப்புற்று, பின் யாரும் அறியாமல் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு,தன்னில் சரி பாதியாக ஏற்றுக் கொண்ட தன் மனைவியின் நெற்றியில் குங்குமம் வைத்து விட முனைந்தான்.


அந்த நிமிடம் அவளும் நிமிர்ந்து அவனைப் பார்க்க இருவர் பார்வையும் ஒரு நிமிடம் ஒற்றை நேர்க் கோட்டில் சந்தித்தது.அவளுடைய கண்களில் அவள் வெளிப்படுத்திய துயரம் அவனைத் தாக்க, கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றாகச் சேர்த்துக் குங்குமத்தை எடுத்தவன் அவளது நெற்றி வகிட்டில் அழுத்தமாகப் பதித்தான்.


அவனின் விரலின் அழுத்தத்தின் மூலம் அவன் சொல்ல வருவது என்ன?புரியாமல் தவித்தாள் பேதையவள். ‘உனக்காக நான் இருக்கிறேன் என்று சொல்கிறானா? இல்லை இனி எதுவும் மாறப் போவது இல்லை என்று அழுத்தம் திருத்தமாக என்னுள் பதிய வைக்க முயற்சி செய்கிறானா?’


‘தாலி கட்டியவனின் அழுத்தமான பார்வை தன்னிடம் சொல்ல வருவது என்ன?’ என்று புரியாமல் அவனையே ஒரு சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தவள் பார்வையை வெறுப்பாக வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.


‘இதை நீ செய்து இருக்கக் கூடாது! ஏன் இப்படிச் செய்தாய்? உனக்கு எப்படி மனம் வந்தது? என் மனம் படும் பாடு உனக்குப் புரியவில்லையா? நீயும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தானே?அன்பு,பாசம்,இதெல்லாம் உனக்கு மறந்து விட்டதா?’ மனதிற்குள்ளேயே ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தாள்.


ஐயர் ஏதேதோ சடங்குகள் செய்யச் சொல்லிக் கொண்டு இருக்க, கைகள் அவள் போக்கில் செய்தாலும் அவள் பார்வை கொஞ்சமும் அசையாமல் தனக்கு முன் எரிந்து கொண்டு இருந்த ஹோம குண்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.அதை துடைக்கும் எண்ணம் அவளுக்கு வரவும் இல்லை.அதை தடுத்து நிறுத்தும் எண்ணமும் சுற்றி இருந்தோர் யாருக்கும் இருப்பது போலத் தெரியவில்லை.கணவன் உட்பட…


‘நீ அழுகிறாயா அழுது கொள்.அதை பற்றி எங்களுக்கென்ன’ என்பது போல இருந்தது சுற்றி இருந்தவர்களின் நடவடிக்கை.தனக்கு ஆதரவாக யாரேனும் இருக்கிறார்களா? என்று சுற்றி இருந்த ஒவ்வொரு முகத்தையும் வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள்.


சுற்றி இருந்த முகங்களில் எதுவுமே அவளுக்குப் பரிச்சயமான முகமாக இல்லை.அத்தனை பேரின் பார்வையிலும் தன் மீது இருக்கும் வெறுப்பு மட்டுமே அவளால் உணர முடிந்தது.ஒவ்வொரு இடமாகப் பார்வையை நகர்த்திக் கொண்டே வந்தவளின் பார்வை கடைசியாக நிலைத்தது சற்று முன் அவளுக்குத் தாலி கட்டிய கணவனின் முகத்தில்.


பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரத்தின் மறு இலக்கணமாகத் திகழ்ந்தான் அவளுடைய கணவன்.தொழிலதிபர் விக்ரமாதித்யன் என்று சொன்னால் ஊரில் அத்தனை பேருக்கும் தெரியும்.மிகப்பெரிய கோடீஸ்வரன்.தேவைக்கு அதிகமாக யாரிடமும் நின்று ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டான்.


இவனிடம் ஒரு வார்த்தையாவது பேசி விட மாட்டோமா என்று பலர் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். அப்படிப் பட்டவனுடன் தனக்குக் கல்யாணம்.நியாயமாகப் பார்த்தால் பொழிலரசி மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலா அவள் இருக்கிறாள்?


காட்டில் தனித்து மாட்டிக் கொண்டு தவிக்கும் குழந்தையின் மனநிலையும் அவளுடைய மனநிலையும் அந்த நிமிடம் ஒன்றாகத் தான் இருந்தது.சுற்றிலும் அவளுடைய சொந்த பந்தங்களோ, தெரிந்தவர்களோ யாருமே இல்லாத இந்த நிலையில் அவனிடம் இருந்து மட்டும் எனக்கு என்ன ஆதரவு கிடைத்து விடப் போகிறது? என்ற நிராசையுடன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் அரசி.


அம்மி மிதித்து அவளுக்கு மெட்டி அணிவித்து முடித்ததும் , ஐயர் மேலும் ஏதேதோ சடங்குகள் செய்யச் சொல்லி மணமக்களை அழைக்க அது அனைத்தையும் ஒற்றைக் கை அசைவில் மறுத்து விட்டு அவளைக் கையோடு அழைத்துக் (இழுத்து) கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கினான் விக்ரமாதித்யன்.


மணமகள் அறை என்று போர்டு மாட்டப்பட்டு இருந்த அறையின் உள்ளே கிட்டத்தட்ட அவளைத் தள்ளியவன் சற்றுத் தொலைவில் நின்று கொண்டு இருந்த யாரோ ஒரு பெண்ணைப் பெயர் சொல்லி அழைத்தான்.


“வள்ளி…”


“சொல்லுங்க சார்” கேள்விக்குறி போல வளைந்து நின்று பணிவு காட்டினாள் அவள்.


“மேடம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்.ரூமை பூட்டிக் கொள்.அவங்க கூடத் துணையா இரு.என்னைத் தவிர வேறு யாரையும் இந்த அறைக்குள் அனுமதிக்காதே.புரிந்ததா?” உத்தரவாகச் சொல்லிவிட்டு மின்னலென அங்கிருந்து அகன்று விட்டான்.


எஜமானரின் உத்தரவிற்குப் பணிந்து உள்ளே வந்து பூட்டிக் கொண்டாலும் அரசி நின்று கொண்டு இருந்த பக்கம் கூடத் திரும்பவில்லை வள்ளி .அவள் கொஞ்சம் திரும்பினால் அவளிடம் எதையாவது கேட்கலாம் என்ற எண்ணத்தோடு அரசி நின்று கொண்டு இருக்க, அந்த எண்ணத்தை முன் கூட்டியே அறிந்து கொண்டது போலவே இருந்தது வள்ளியின் செய்கை.


அறையின் உள்ளே வந்து கதவை பூட்டிக் கொண்டவள் அந்த இடத்தை விட்டு அசையவும் இல்லை அரசியின் புறம் திரும்பவும் இல்லை.சுவற்றில் பல்லி ஒட்டிக் கொண்டு இருப்பதைப் போலக் கதவையே ஒட்டிக் கொண்டு இருந்தாள்.


கொஞ்ச நேரம் அவள் திரும்புவாள் என்று பொறுத்துப் பார்த்த அரசிக்கு சில நிமிடங்களில் அவளாக அந்த இடத்தை விட்டு அசைய மாட்டாள் என்பது புரிந்து விட லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.


அந்தப் பெண் வயதில் சின்னவளாகத் தென்பட , “தங்கச்சி…”


“நான் ஒண்ணும் யாருக்கும் தங்கச்சி இல்லை”முகத்தில் அடித்தாற்போலப் பதில் வந்தது.திரும்பாமலேயே.
ஒரு நிமிடம் திகைத்து நின்றவள் மெல்ல தன்னைச் சமாளித்துக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தாள்.


“சரிமா.தெரியாமல் அப்படிச் சொல்லிட்டேன்.”


“…”


அவள் ஏதேனும் பதில் பேசுவாளா என்று சில நிமிடங்கள் அமைதியாக நின்று பார்த்து விட்டு மீண்டும் அரசி தானாகவே பேச வாய் திறக்கும் முன் பட்டெனப் பேச தொடங்கினாள் வள்ளி.


“அய்யா வரும் வரை உங்களுக்குத் துணையாக இருப்பது மட்டும் தான் என் வேலை.மற்றபடி என்னை எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்” தெளிவாகச் சொன்ன பிறகு குரலை குறைத்து தனக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள் வள்ளி.


“சரியான இம்சை.எங்க அய்யாவோட வாழ்க்கை இப்படியா பாழ் ஆகணும்.போயும் போயும் இந்தப் பைத்தியம் தானா அவருக்குக் கிடைச்சுது” குரலை குறைத்து முணுமுணுத்தாலும் அவளுடைய வார்த்தைகள் ஒன்று கூடத் தவறாமல் அரசியின் காதுகளை வந்து அடைந்தது.


மின்னல் தாக்கியது போல அப்படியே அங்கிருந்த ஒற்றைப் படுக்கையில் பொத்தென அமர்ந்து விட்டாள் அரசி.


‘பைத்தியம்…யார் பைத்தியம்…நான் பைத்தியமா?இல்லையே நான் நன்றாகத் தானே இருக்கிறேன்.அப்புறம் ஏன் இந்தப் பெண் இப்படி எல்லாம் பேசுகிறாள்.இரண்டு கைகளாலும் தலையை அழுந்த பிடித்துக் கொண்டவள் அப்படியே யோசிக்க ஆரம்பித்தாள். சிந்தனை எங்கெங்கோ சென்று மீண்டது.பின்னந்தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல ஒரு வலி.


உட்கார்ந்த இடத்தை விட்டுக் கொஞ்சம் கூட அசையவே இல்லை அவள்.சற்று நேரத்தில் அறைக்கதவு தட்டப்பட வெகு கவனத்தோடு அறைக்கதவை திறந்து யாரென்று பார்த்தாள் வள்ளி.கதவின் மறுபுறம் நிற்பது விக்ரமாதித்யன் என்று தெரிந்ததும் சட்டெனப் பவ்யமாகக் கதவை திறந்து விட்டாள்.


அறையின் உள்ளே வந்தவனின் பார்வை மனைவியைத் தேட ,கட்டிலில் பொழிலரசி கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டு இருக்கும் காட்சியைக் கண்டவன் திரும்பி வள்ளியை ஒரு உஷ்ணப் பார்வை பார்த்து வைத்தான்.ஒரே பார்வை தான்.


ஒரு கோபமான வார்த்தை கூட அவன் பேசவில்லை.ஆனாலும் வள்ளிக்குப் பயம் வந்தது.ஆதித்யனின் ஒற்றைப் பார்வைக்கு அப்படிப்பட்ட சக்தி இருந்தது.கோபத்தை உணர்த்த அவன் ஆயிரம் வார்த்தைகள் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை.அவனுடைய ஒற்றைப் பார்வை எதிராளிக்கு உணர்த்திவிடும் அவனுடைய கோபத்தின் அளவை.


“அவளுக்குத் தலைவலி வந்து இருக்கு.அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கத்தான் உன்னைத் துணைக்கு அனுப்பினேனா?” உறுத்துப் பார்த்தான்.


“இல்லைங்க சார்…”மேலும் ஏதோ சொல்ல முயன்றவளை ஒற்றைக் கையசைவில் தடுத்து நிறுத்தினான்.


“காபி கொண்டு வா”


யாரோ துரத்துவது போல நிமிடத்தில் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிப்போய்க் கையில் சூடான காபியுடன் வந்து நின்றாள் வள்ளி.
தன்னுடைய வேகத்தைப் பார்த்து முதலாளி தன்னைப் பாராட்டி பேசுவாரோ என்று வள்ளி ஆவலாக ஆதித்யனின் முகம் பார்த்தபடி நின்று கொண்டு இருக்க அவனோ அவளைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் காபியை மட்டும் கையில் வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.
‘எப்பவும் எங்க சார் சிரிச்ச முகமா இருப்பார்.இந்த பைத்தியம் வந்த உடனே எங்க சார் சிரிப்பையே மறந்த மாதிரி இல்லை நடந்துக்கிறார்.எல்லாம் இவளால் தான்’ மனதுக்குள் திட்டியபடியே பொழிலரசியை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் வள்ளி.


தன்னைச் சுற்றி இத்தனை கலவரம் நடந்து கொண்டு இருக்க,அது எதையுமே உணராமல் தலைவலியுடன் போராடிக் கொண்டு இருந்தாள் பொழிலரசி.மெல்ல நிதானமான நடையுடன் அவளை நெருங்கியவன்,கண் அசைவில் வள்ளியை அறையை விட்டு வெளியேற்றி விட்டு பொழிலரசியின் அருகில் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தான்.


மெல்ல அவளது தோளை தொட்டு உசுப்பி அவளை அழைக்க,திடுக்கிட்டுப் போய்ச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.எதிரில் அமர்ந்து இருந்த கணவன் அவளுக்கு அன்னியனாகத் தோன்ற எதுவும் பேசாது தலையைக் குனிந்து கொண்டாள்.தன்னுடைய சட்டை பையில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்து அவளிடம் நீட்டினான்.


“தலைவலி மாத்திரை போட்டுக்கோ…காபியை குடிச்சா உனக்குக் கொஞ்சம் நல்லா இருக்கும்” என்று சொன்னவன் அவள் வாங்காமல் இருக்கவும் தானே எழுந்து அவளது வாயில் மாத்திரையைப் பிரித்துப் போட வந்தான்.


மனதில் சட்டென மனதில் மூண்ட கலவரத்தால் பயந்து கொஞ்சம் பின்னுக்கு நகர்ந்து அமர்ந்தவள் கை நீட்டி மாத்திரையை வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள்.


மாத்திரையை முழுங்கியதும் காபி சூடாக இருக்கவே மெல்ல ஊதி ஊதி அதைக் குடித்துக் கொண்டு இருந்தாள்.அவள் மாத்திரையை விழுங்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் மெல்ல அவளை அங்குலம் அங்குலமாகப் பார்வையிட்டான்.குழந்தை தனமான முகம்,எந்த வித செயற்கை தனமும் இல்லாமல் குத்து விளக்கை போலச் சுடர்விடும் அழகு,மருண்ட பார்வை அவளின் பயத்தைப் பறை சாற்றியது.


ஆகாய நீல நிறத்தில் பட்டு புடவையும் அதற்குத் தோதாக முன் தினம் தான் வாங்கிக் கொடுத்த வைர ஆபரணங்களும்,அது அனைத்தையும் விடச் சில நிமிடங்களுக்கு முன் தான் அவளுக்குக் கட்டிய மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலியும் போட்டி போட்டுக் கொண்டு அவளுக்கு மேலும் அழகை ஊட்ட ,அதைப் பற்றிய உணர்வு கொஞ்சமும் இல்லாது அமர்ந்து இருந்தாள் பொழிலரசி.


ஆதித்யன் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கும் உணர்வே அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்க முடிந்தவரை வேகமாகக் காபி கப்பை காலி செய்தாள்.அவள் குடித்து முடித்ததும் காபி கப்பை அவளிடம் இருந்து வாங்கி அருகில் இருந்த டேபிளின் மீது வைத்தவன் மெல்லிய குரலில் அவளிடம் பேசினான்..


“கொஞ்ச நேரம் படு.” என்று கனிவாகச் சொன்னவன் கட்டிலில் இருந்து எழுந்து நின்று கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.


‘நான் படுத்துத் தூங்கும் வரை இவன் இந்த இடத்தில் இருந்து அசைய மாட்டான் போல் இருக்கிறதே’ என்று நினைத்தவள் மெல்ல படுக்கையில் சாய்ந்து அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.அவன் அறையை விட்டு வெளியேறியதும் எழுந்து விடலாம் என்ற எண்ணத்தோடு படுத்தவள் நொடிகளில் அவளை அறியாமல் உறங்கியும் போனாள்.அவன் கொடுத்த தூக்க மாத்திரையின் உபயத்தால்.


அவள் தூங்கி விட்டதை உறுதி செய்து கொண்டவன் அறையின் வெளியே இருந்த வள்ளியை அழைத்து அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி பலமுறை சொல்லிவிட்டு சிந்தனையுடன் அறையை விட்டு வெளியேறினான்.


‘இவளை சிந்திக்க விடக்கூடாது.அது மேலும் ஆபத்தைத் தான் ஏற்படுத்தும்.இவளது கவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் அறியாமல் திசை திருப்பினால் தான் எனக்கு நல்லது’ என்ற எண்ணத்துடன் அழுத்தமான நடையுடன் அங்கிருந்து வெளியேறினான்.



Post Reply

Return to “காதலே நீ கானலா”