Page 1 of 1

சிங்கப் பெண்ணே

Posted: Thu Apr 01, 2021 6:04 pm
by முத்து சரஸ்வதி
பெண்ணாக பிறந்த அனைவரும் சிங்க பெண்களே ,  காலை முதல் மாலை வரை பம்பரமாய் ஓடும் மாதரசி அனைவரும் சிங்க பெண்களே . கதை கட்டுரைகள் படிக்கும் போதும் சிங்கப் பெண்ணே பாடல் கேட்கும் போதும்  மயிர் கூச்சறியும் , கண்களில் கண்ணீரும் உள்ளத்தில் உணர்வுகளும் கரை புரண்டோடும் ..

ஆனால் யதார்த்த வாழ்வில் நாம் அவ்வளவு தூரம் பெண்களை புரிந்து கொள்ளவில்லை அன்றி புரிந்து கொள்ளாதது போல் நடிக்கின்றோம் ‌‌ . எவ்வாறு ??? அம்மா என்ன இன்றும் தோசையா  என்று கேட்கும் மகன்களும் , என் மனைவி இன்னிக்கு உப்புமா வ போட்டுட்டா என்று சமூக வலை தளத்தில் போட்டோ பிடித்து போடும் கணவன்மார்களும் இருக்கதான் செய்கிறார்கள் ‌. ( பி.கு : இவர்களுடைய வாட்சப் ஸ்ட்டேஸ் ல் சிங்க பெண்ணே பாடலும் என்னுடைய அம்மாதான் சிறந்த அம்மா , இப்படி ஒரு மனைவி கொடுத்ததற்கு நன்றி இறைவா என்று நிச்சயம் போட்டிருப்பார்கள் ) பாவம் அவர்கள் மனைவியின் மாதவிடாயின் வலியையோ அல்லது தாயின் வயது காரணமாக தேய்ந்த  கை எலும்போ தெரியவில்லை ‌அவர்களுக்கு ‌. பாவம் என் செய்வார்கள் அவர்கள் ‌ .. அனைத்து ஆடவர்களையும் இங்கே கூறவில்லை ‌‌..

உண்மையை சொல்ல போனால் பெண்களை ஆஹா ஓஹோ என்று சொல்ல வேண்டாம். நீங்கள் தரும் சிறு சிறு பாரட்டுகளும் , கனிவான நல்வார்த்தைகளும் போதும் , அவளுக்கு ஆர்பரிக்கும் கடலை போல் புத்துணர்ச்சி கிடைக்கும் . 


பெண்களுக்கு மாங்கல்யம் உண்மையில் ஒரு பாதுகாப்பான  வேலி தான் .. அலுவலக்த்தில் கண்ட கயவனின் கள்வ பார்வையில் இருந்து தப்பிப்பதற்கு அவளின்நெற்றி பொட்டு வகிட்டு குங்குமும் , காலில் உள்ள மெட்டியும் ஓரளவு உதவி புரிகின்றது ‌‌..   அவர்களிடம் இருந்து தப்பித்து அலுவலக வேலையை முடித்து வீடு வந்து சேர்ந்தால் மாமியாரின் வசவு சொற்கள் வரவேற்கும் ‌. என்னத்த பிள்ளை  பெத்து வச்சிருக்க ஒண்ணுமே சாப்பிட மாட்டிக்கு என்று வசை வேறு. உட்கார்ந்த இடத்திலே ஊட்டி கொடுத்தா என் பொண்ணு சாப்பிடமாட்டா அத்தை கொஞ்சம் எந்தரிச்சு சாப்பாடு ஊட்டணும் என்று வாய் வரை வந்த வார்த்தைகளை மென்று விழுங்கிவிட்டு பிள்ளையை வாங்கி முத்தமிடுவாள் அவள் . கை நிறைய சம்பாதித்தாலும் கணவன் மேல் உள்ள ஆழமான அன்பு மற்றும் மாமியாரின் வயதின் மேல் உள்ள மரியாதையால் மெளனம் காக்கும் பெண்களும் புதுமை பெண்களே .
 

அலுவலகம் செல்லும் பெண்கள் மட்டுமல்ல தின கூலி செய்யும் பெண்களும், வீடுவீடாக வியாபாரம் செய்யும் பெண்களும் சிங்க பெண்களே .  வீடு வீடாக சென்று விற்கும் பெண்களும் பல நேரங்களில் இயற்கை உபாதையை அடக்குபவர்களே .. முதல்நாள் பேப்பரில் படித்த வினோத திருட்டின் காரணமாக இவளை கவனமாக கையாள வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரமாக கீரையை வாங்கி விட்டு அவள் அம்மா பாத்ரூம் போகலாமா என்று கேட்கும் கேள்வியை நூதன திருட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரமாக கதவை மூடிட்டு வெற்றி பெருமிதத்தோடு ( திருட்டில் இருந்து தப்பித்தற்காக) அடுக்களை நோக்கி நடையை கட்டும் நம்மை போன்ற சிலரையும் சமாளித்து அத்தடைகளையும் தாண்டி வயிற்று பிழைப்புக்காக வியாபாரம் இல்லை யாகம் செய்யும் அவளும் ஒரு சிங்கபெண்ணே .

இவர்கள் மட்டுமன்று , வீட்டில் இருக்கும் பெண்களும் இவர்களுக்கு நிகரான சவால்களை அணுகுகிறார்கள் . ஒரு மனிதன் உச்சகட்ட வலியை தொடும் பொழுது  450 டெசிபலை அடைகிறாள்‌ . ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய பிரசவ நேரத்தில் அதே வலியை அடைகின்றாள் . ஆங்கிலத்தில் கூட வீட்டில் இருக்கும் பெண்களை housewife என்றுதான் அழைக்கிறார்கள் . ஆனால் நம் தமிழிலோ அவளை இல்லத்தரசி என்று அழைக்கிறார்கள் ‌‌ . எனவே ஒவ்வோரு மாதரசியும் போற்றப்பட வேண்டியவர்களே‌. அவளுக்குதான் ஓய்வு என்பதே இல்லையே.

இக்கட்டுரை படித்து முடித்தவுடன் உங்களை சார்ந்த பெண்களிடம் அது அம்மா, மனைவி, மகள் அல்லது சகோதரி யாரவது ஒருவரிடம் ஆவது இன்று மிகவும் களைப்பாக இருப்பதை போல் காணப்படுகிறாயே , இரு சிறிது தேநீர் கலந்து தருகிறேன் என்றோ அல்லது அவளிடம் இன்று அலுவலகத்தில் உயர்தர ஹோட்டலில் விருந்து வைத்தார்கள் ஆனால் உன் சமையல் போல் இல்லை என்று நீங்கள் கூறுவீர்களானால் அதுவே இக்கட்டுரைக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி .

நானும் பெண்ணாக பிறந்ததற்கு பெருமை கொள்கின்றேன் ..