சாரல் 16

Post Reply
Sutheeksha eswar
Moderators
Posts: 31
Joined: Fri May 15, 2020 11:21 pm
Has thanked: 29 times
Been thanked: 1 time

சாரல் 16

Post by Sutheeksha eswar »

ஹாய் நட்பூஸ்,

சாரல் 16 போட்டுட்டேன். போன பதிவுக்கு எனக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றியோ நன்றி. நீங்க இல்லனா எனக்கு இது சாத்தியமே இல்லை. உங்க வார்த்தைகள் தான் எனக்கு பூஸ்ட் ஹோர்லிக்ஸ் எல்லாமே. சோ உங்க பொன்னான கருத்துக்களை தெரிவிங்க மக்களே. எவ்வளவு முயன்றும் என்னால வாரம் ஒரு பதிவு தான் கொடுக்க முடியுது. தலைகீழா நின்னா கூட ஒரு நாளைக்கு நூறு வார்த்தை டைப் செய்றதே எனக்கு குதிரை கொம்பா இருக்கு மக்களே. என்னோட நிலையை புரிந்துகொள்வீங்க என நம்புறேன்.

உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்




சாரல் 16

காலை நேரத்து பட்சிகளின் ரீங்காரத்தில் புரண்டு படுத்தான், விஷ்வா. இதமான குளிர் பரவி இருக்க, போர்வையை இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டான். சட்டென எதுவோ தோன்ற போர்வையை நோக்கினான். அவன் மீது ஒரு கனமான போர்வை போர்த்தப்பட்டிருக்க, புருவம் சுருக்கி யோசித்தவனுக்கு நேற்றைய நினைவுகள் மனக்கண் முன் விரிய, தாயின் செயலாக தான் இருக்குமென யூகித்தவனின் முகம் மென்மையை பூசிக் கொண்டது. அன்னை மடி ஆழ்ந்த அமைதியை தந்திருக்க, மனம் நிர்மலமான உணர்வு அவனுள். போர்வையை மடித்து எடுத்துக் கொண்டவன் முகம்தனில் நெடு நாள் கழித்து ஒரு வித இளக்கம்.

அறைக்கு வந்தவன் கதவை திறக்க போன நொடி, நேற்றைய நிகழ்வுகள் வரிசையாய் ஓட, ஆழ்ந்த மூச்செடுத்து, மனையாள் என்ன பேசினாலும் எதிர்வினையாற்ற கூடாது எனும் உறுதி எடுத்தவனாய் அறைக்குள் நுழைந்தான். படுக்கையில் அபி படுத்திருக்க, விறுவிறுவென குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டான். வெளியே வந்தவன், கண்ணாடிமுன் நின்று முகம் துடைத்துக் கொண்டிருந்தான். முகம் துடைத்து நிமிர்ந்தவன் பார்வையில் அதுபட, மீண்டும் கண்ணாடியில் தனது பார்வையை பதித்தான், விஷ்வா.
அவனது பார்வை ஓரிடத்தில் நிலைகுத்த, அவளது கையில் இருந்து வடிந்த குருதி அந்த இடத்தில் சொட்டு சொட்டாய் அந்த இடம் முழுதும் படிந்திருக்க, பார்த்தவன் அதிர்ந்து போனான். வேகமாய் அவளை நெருங்கியவன், அவளது கரத்தில் பார்வையை பதிக்க, கையில் இருந்த காயத்தில் ரத்தம் காய்ந்து போய் இருந்தது. நெஞ்சம் திடுமென அதிர, மனையாளை நெருங்கியவன், காயப்பட்ட கரத்தை கையில் எந்த, அந்நொடி அவனுள் கண்மண் தெரியாத கோபம் தான் முகிழ்த்தது.

பல்லை கடித்தபடியே தண்ணீர் பாட்டில் எடுத்து அவளது முகத்தில் தெளிக்க, மயக்கம் தெளிந்து விழித்தாள், அபி. அவனது பார்வை அவளை துளைக்க, புரியாது முகம் சுருக்க, நொடியில் அவளுக்கும் அனைத்தும் நினைவிலாட, அவனது பார்வையை ஒருவித அலட்சியத்தோடு எதிர்க்கொண்டாள். அதில் அவனுக்கு சுர்ரென்று ஏற, “ஏண்டி நீ படிச்சவ தானே! லூசாடி நீ? அறிவு கெட்டவளே! மூளையை எங்கேயாவது கடன் குடுத்திட்டியா?” பல்லை கடித்தபடி ஆத்திரத்தில் உறும, அவனது கடைசி வாக்கியத்தில் கணவனை தீயாய் முறைத்தாள், பெண்.

“என்னடி! என்ன முறைக்கிற! லூசு மாதிரி கையை கிழிச்சு வச்சிருக்க, இனிமே கையை கிழிக்காத கழுத்தை கிழிச்சுக்கோ! நானாவது நிம்மதியா இருப்பேன்?” விஷ்வா வார்த்தையை விட, நொடியில் பெண்ணவளுக்கு கண்ணில் நீர் திரண்டது. அவனுக்கு அதனை காட்டகூடாது என வீம்பாய் வெளிக்காட்டாது அமர்ந்திருந்தாள்.

“ஏண்டி நான் இங்க கத்திக்கிட்டு இருக்கேன்! நீ எனக்கென யாருக்கோ சொல்ற மாதிரி இருக்க?” ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க, அவனை சட்டை செய்யாது மெதுவாய் சிரமத்துடன் கையை ஊன்றி எழுந்துக் கொண்டவள், கணவனை கிஞ்சித்தும் கண்டுக்கொள்ளாது, முதலுதவி பெட்டியை தேடி எடுத்தாள். அவளது நடவடிக்கையை கண்ணில் கனலுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சிரமப்படுவது உணர்ந்து, ஈரெட்டில் அவளை அடைந்தவன், கையில் இருந்த பஞ்சை வாங்கி காயத்தை துடைக்க ஆரம்பித்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அபி.

வாய் அதன் பாட்டில் திட்டிக்கொண்டிருக்க, “பைத்தியக்காரி! பைத்தியக்காரி!” எனும் வசவுடன் அவன் சுத்தம் சட்டென முகிழ்த்த சினத்தில், வேகமாய் கையை அவனிடமிருந்து உருவ முயற்சித்தாள், முயற்சித்தாள் அவ்வளவே. அவனது வலுவான பிடியில் அவளால் கரத்தை அசைக்கக்கூட முடியாது போக, மறுபடி முயன்றாள். அதில் அவனது பிடியும் நொடிக்கு நொடிக்கு இறுக, வலியில் தீயாய் அவனை முறைக்க துவங்கினாள்.


அவளை நிமிர்ந்தும் பாராமலே, இவ்வளவும் நடக்க, “சும்மா இருடி அப்புறம் இன்னும் வலிக்கபோகுது!” நக்கலாய் விஷ்வ மனையாளை எச்சரிக்க, அவனை தீர்க்கமாய் பார்த்தவள், “என்ன பதிலுதவியா!” அவனையும் விட நக்கலாய் கேட்டாள். அதில் அவனது கரம் ஒருநொடி நின்று, மறுபடி செயல்பட ஆரம்பித்தது.

“இது போண்டா….ட்டினு என் மேல இருக்க பாசமா? அக்கறையா? இல்ல…” நக்கலாய் இழுத்தவள், “இல்ல காதலா?” கேலியாய் முடிக்க, அவளை கணக்கில் எடுக்காமல், கடமையே கண்ணாயினான்.

அவனிடம் பதிலின்றி போக, “உன்கிட்டதான்யா கேட்டேன்!” என்றாள். “இது பொண்டாடினு என்மேல இருக்கிற காத…. காதலா இருக்க வாய்ப்பில்லை. உன் மகளோட அம்மானு ஒரு கரிசனமா!” மேலும் வார்த்தைகளால் சீண்ட, கையை சுத்தம் செய்து முடித்திருந்தான்.

“என்ன பதிலையே காணோம்?” விடாது கேட்க, “உனக்கு எப்படி தோணுதோ அப்படியே வச்சுக்கோ!” கடினமாய் வந்தது குரல். “ஹ்ம்ம்! ஏற்கனவே பழக்கமோ!” அடுத்த கேள்வியை தொடுக்க, அவளது கேள்வியில் புருவம் சுருக்கியவன், நிமிர்ந்து பார்க்க, “இல்ல ஏற்கனவே இதுமாதிரி யாருக்கோ… செஞ்சு பழக்கமோ?” அந்த “யாருக்கோ”வில் அழுத்தம் கொடுக்க, காதே கேளாது போல மருந்திட்டு கட்டியவன், இறுதியில் கட்டை இறுக்கி, தன் கோபத்தை வெளிபடுத்தினான்.

“ஆ!” என அலறியவள், வேகமாய் தனது கையை உதற, “என்கிட்ட எப்போதும் பார்த்து வார்த்தையை விடுன்னு உன்கிட்ட பலதடவை சொன்னதா ஞாபகம்!” இதழ்களில் சிறுபுன்னகை நெளிய பதிலுறுக்க, உள்ளுக்குள் சுறுசுறுவென ஏறியது, அபிக்கு.

“போ! போய் உருப்படியா எதாவது வேலை இருந்தா பாரு!” நக்கலாய் சொல்லிவிட்டு அவன் வெளியே சென்றுவிட, அவனையே வெறித்தது அவளது விழிகள். அவனிடம் எதையோ எதிர்பார்த்ததோ அவள் மனம்?


மகனை உச்சி முகர்ந்த பிருந்தா, மகளின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்து, குறும் புன்னகையுடன் அவளை நோக்கி கைகளை நீட்ட, முகம் திருப்பிக் கொண்டாள், தன்யா. அதில்
மலர்ந்த சிரிப்புடன் மகளை நெருங்கி அவளது கன்னத்தில் முத்தம் பதிக்க, “ச்சீ! டர்ட்டி!” என்றபடியே தனது கன்னத்தை அழுந்த துடைக்க, பிருந்தாவின் முகமோ ஒளியிழந்து போனது. முயன்று தன்னை சமாளித்துக்கொண்டவள், “சரி சரி ரெண்டு பேரும் எழுந்திரிங்க! ஸ்கூல்க்கு டைம் ஆச்சு பாருங்க !” பிள்ளைகளை கிளப்ப, “நான் இன்னைக்கு ஸ்கூல் போக மாட்டேன்! எனக்கு ஸ்கூல் போக பிடிக்கலை!” எழுந்தவுடனே படுக்கையை விட்டு எழாமல், தன்யா அன்றைய நாளுக்கான பஞ்சாயத்தை கூட்ட, “ஏன் போக மாட்ட!” தாய் கேட்க, “எனக்கு பிடிக்கலைனா பிடிக்கலை! அவ்வளவுதான்! அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை!” என்றாள், மகள். மகளின் வார்த்தைகளில் முகம் மாறியபோதும், “இல்ல இன்னைக்கு நீ ஸ்கூல் போற அவ்வளவுதான்!” தான் உனக்கு தாய் என்பதை உணர்த்தினாள்.


தாயை முறைத்த வண்ணமே தயாராகி வந்தாள். அதற்குள்ளே பிருந்தாவுக்கு பாதி சக்தி வடிந்தது போல இருந்தது. வழக்கம் போல உணவு மேஜையில், தட்டில் இட்லியை வைத்தவுடன், “அய்ய இட்லியா? எனக்கு இட்லி பிடிக்காது போ!” எனக்கு சப்பாத்தி தான் வேணும்!” அவள் அடுத்ததை ஆரம்பிக்க, “தன்யா இன்னைக்கு சப்பாத்திக்கு போடல! இட்லியை சாப்பிடு !” பிருந்தா மகளிடம் சொல்ல, “ஹ்ம்ம்… எனக்கு இட்லி வேணாம்! நான் சாப்பிட மாட்டேன்! எனக்கு சப்பாத்தி தான் வேணும்!” என பெருங்குரலில் வீரிட, பிருந்தா பொறுமையாய், “தன்யா அம்மாதான் சொல்றேன்ல! இன்னைக்கு இட்லி சாப்பிடு. அம்மா நைட் உனக்கு சப்பாத்தி செய்து தரேன்”

“எனக்கு வேணாம்!” என்பதை மட்டுமே மந்திரம் போல சொன்னாள், மகள். பொறுமையிழந்த பிருந்தா, “தன்யா என்னதிது இப்படி இல்லாததை கேட்டு அடம்பிடிக்கிற பழக்கம்? நான்தான் நைட் செய்து தரேன்னு சொல்றேன்ல” என கடிய, வீரிட்டு அழ ஆரம்பித்தாள், தன்யா. “என்ன.. என்ன இங்க சத்தம்! தன்யா கண்ணு ஏன்மா அழற?” சம்மன் இல்லாது சரியாய் தவறான நேரத்தில் ஆஜரானார் சாரதா. வார்த்தை பேத்தியிடம் இருந்தாலும், பார்வை மருமகளிடம் தான் இருந்தது. பாட்டியை கண்டவுடன் துணைக்கு ஆள் கிடைத்த தைரியத்தில் அழுகையை கூட்டினாள், பிருந்தாவின் சின்ன மாமியார்.

அதில் சாரதாக்கு உருகி போய்விட, “ஏய் அவ எதுக்கு அழறா?” மருமகளிடம் கேட்க, “அவ சப்பாத்தி வேணும்னு கேட்குறா!” பிருந்தா மெதுவாய் சொல்ல, “என்ன கேட்குறாளோ கொடுக்க வேண்டியது தானே!”

“இல்ல இன்னைக்கு சாப்பாத்திக்கு போடல!” மெதுவாய் மொழிய, “ஏன் ஏன் இன்னைக்கு போடல! அவ கேட்குறத செய்றதவிட அம்மாவா உனக்கு வேற என்ன வேலை!” சாரதா நாக்கில் நரம்பின்றி பேச,

“நீங்கதான் நே…த்..து மெ..னு மெனுல சப்பாத்தி வேண்டாம்னு சொன்னிங்க!” திணறலாய் அவள் சொல்லி முடிக்க, நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டவர், “ஏன் இப்ப என்ன ஆகிப்போச்சு போய் செய்ய வேண்டியது தானே!” அவளுக்கு கட்டளையிட, “இல்லை இதுக்கு மேல செய்ய நேரம் இல்லை. அவ குருமாதான் கேட்பா! அதுக்குள்ள நேரமாகிடும்!” பிருந்தா சொல்ல,

“என்ன.. என்ன நேரமாகிட போகுது! சின்ன பிள்ளை ஆசைப்பட்டு கேட்குறா அதை உடனே செய்ய வேண்டியது தானே! பேசுற நேரம் இந்நேரத்துக்கு பாதி செஞ்சே முடித்திருக்கலாம்!” தோரணையாய் மொழிந்தார், சாரதா.

“இல்ல அவளுக்கு ஸ்கூல்க்கு நேரம் ஆகிடும்! ஏற்கனவே நேரமாகிடுச்சு!” பிருந்தா சொன்னது தான் தாமதம். “என் பேத்திக்கு இந்த வீட்டுல அவ ஆசைபட்டத்தை சாப்பிட உரிமையில்லையா? சின்ன குழந்தை கேட்குறா அதை செய்றதை விட்டுட்டு உனக்கு வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை?” எப்போதடா மருமகள் சிக்குவாள் என காத்திருக்கும் சாரதா அதுதான் சாக்கென அவளை திட்ட ஆரம்பித்தார்.


“இது என்ன உங்கப்பன் வீடு மாதிரி ஒண்ணுமில்லாத வீடா? என் வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார்! என் மகன் சம்பாதிக்கிறான்! உட்கார்ந்து சாப்பிட்டாகூட பல தலைமுறைக்கு தாங்கும். உன் குடும்பம் போல மாசசம்பளம் வாங்கி அதை எண்ணி..எண்ணி செலவு பண்ற அவசியம் எங்களுக்கு இல்லை!” அந்த “எண்ணி”யை இழுத்தார், மாமியார்.

எப்போதும் கேட்டு பழகியது தான் என்றாலும், தனது பிள்ளைகள் முன்னே, பிறந்த வீட்டை அவமானப்படுத்துவதை தாள முடியவில்லை. தொண்டைக்குள் அடைத்ததை கண்ணீரால் விழுங்கிக் கொண்டாள், பெண்ணவள்.


அந்த நேரம் முரளி படியிறங்க, அவனை கண்டுவிட்ட சாரதா, “இன்னும் எவ்ளோ நேரம் இங்கேயே நிப்ப, இந்த வீட்டுல என் பேச்சுக்கு ஒரு மரியாதை இல்லை!” என மூக்கு சிந்த ஆரம்பிக்க, “என்னம்மா? என்ன ஆச்சு?” கேள்வியுடனே வந்தான், சாரதாவின் மகன்.


“அது ஒண்ணுமில்லைப்பா நீ விடு!” என மழுக்க, “என்னம்மா? என்ன ஆச்சு?” மகனும் விடாது கேட்க, “ஒண்ணுமில்லைப்பா தன்யாக்கு இட்லி பிடிக்காது! சப்பாத்தி கேட்டிருக்கா! உன் பொண்டாட்டி செஞ்சு கொடுக்க மாட்டேங்குறாப்பா!” பாவமாய் சொல்ல, மனைவியை ஏறிட்டது அவனது விழிகள், “இ..ல்..ல.. இல்ல இன்னைக்கு செய்யல…!” என்றதும், பொசுக்கியதுஅவனது விழிகள். அதில் எச்சில் விழுங்கியவள், “அத்தை தான்…!” பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எங்கே தனது குட்டு உடைந்திடுமோ என்ற அவசரத்தில், “என்ன… இப்ப என்ன நாந்தான் நேத்து வேண்டாம்னு சொன்னேன் அதுக்காக குழந்தைக்கு இப்ப செஞ்சு கொடுத்தா ஆகாதா?” அவளுக்கு முன், தான் முந்திக்கொண்டார்.

“ஏன் இந்த வீட்டுல உனக்கு உரிமை இல்லையா? நீ இந்த வீட்டு மருமக தானே! அதுசரி.. உனக்கு பெரியவீட்டு மருமகன்னு என்னைக்கு நினைப்பிருக்கு? என் மகன் என்ன குறையாவா சம்பாதிக்கிறான்? நீ என்னைக்கும் மாச சம்பளக்காரன் மகளா தானே உன்னை நினைச்சுக்குவ!” சந்தடி சாக்கில்
மகனை துதிபாடி, மறுபடியும் மகனின் முன்னிலையிலே பிருந்தாவின் வீட்டை சாடினார்.


அந்த வளர்ந்து கெட்டவனும் தாயை அடக்கவில்லை. தாய் அவனின் புகழ் பாடியவுடன் கண்களில் கர்வம் குடியமர, தாயின் வார்த்தைக்கு அமைதியாய் இருந்தான். “இவளை சொன்ன நேரத்துக்கு நானே போய்…!” புடவையை இழுத்து சொருகியபடி, சமையலறைக்கு செல்வது போல பாவனை செய்ய, “அம்மா நீங்க ஏம்மா அதெல்லாம் செய்யணும்! நான் சம்பாரிச்சு போடவும் சாப்டுட்டு வீட்டுல நிம்மதியா தானே இருக்காங்க அவங்க செய்யட்டும்!”

“விடுப்பா என் பேத்திக்கு யாரு செஞ்சா என்ன? பாவம் குழந்தை பசில துவண்டு போய் இருக்கும்!” என தன்யாவின் கன்னம் பிடித்து சொல்ல, கண்களில் கனல் பறந்தது முரளிக்கு, மகள் பசியோடு இருக்கிறாள் எனும் வார்த்தையில்.

“இன்னும் நீ இருக்கிற இடத்தை விட்டு அசையாம அப்டியே தானிருக்க!” என பல்லை கடிக்க, “இல்ல.. அவ ஸ்கூல் போக கூடாதுன்னு தான் அப்படி செய்றா!” எனும் பிருந்தாவின் வார்த்தைகள், தொண்டை குழியினோடே அடங்கி போனது.
“அதற்கும் இந்த சின்ன குழந்தையை என்னவெல்லாம் சொல்றா! குழந்தை முகத்தை பார்த்தா அப்டியா தெரியுது? உன் பொண்டாடிக்கு என்னைய கண்டாலே பிடிக்காது. அதான் என்னைய மாதிரி இருக்க என் பேத்தியை மகள்னு கூட நினைக்காம ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கா!” என்பார், சாரதா.
கணவன் மற்றும் மாமியாரின் குணம் தெரிந்தும், காலையிலேயே அவர்களின் மாட்ட விரும்பாது, அடுக்களை நோக்கி செல்ல போக, “ஏய் நில்லு இதுக்கு மேல நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்!” என்ற முரளியின் வார்த்தை தடுத்தது.

சாரல் அடிக்கும்….

அப்புறம் எல்லாரும் எதுக்கு சாரதா தன்யாவ ஒரு மாதிரியும் ராகுல் அஹ் ஒரு மாதிரியும் நடத்துறாங்க என்று கேட்டு இருந்தீங்க இந்த பதிவு அதுக்கான விடையை தந்திருக்கும் என நம்புறேன். இதெல்லாம் ஒரு காரணமான்னு நீங்க நினைக்கலாம் ஆனா இதுமாதிரி பல விஷயங்கள் இந்த உலகத்துல நடக்கத்தான் செய்து. Hope நீங்க எல்லாரும் கதையை தொடர்ந்து படிப்பீங்க என நம்புறேன்.

ஹாப்பி ரீடிங் மக்களே.



Post Reply

Return to “Enai Nanaikum Sarale”