சாரல் 17

Post Reply
Sutheeksha eswar
Moderators
Posts: 31
Joined: Fri May 15, 2020 11:21 pm
Has thanked: 29 times
Been thanked: 1 time

சாரல் 17

Post by Sutheeksha eswar »

சாரல் 17

“இல்ல.. அவ ஸ்கூல் போக கூடாதுன்னு தான் அப்படி செய்றா!” எனும் பிருந்தாவின் வார்த்தைகள், தொண்டை குழியினோடே அடங்கி போனது.
“அதற்கும் இந்த சின்ன குழந்தையை என்னவெல்லாம் சொல்றா! குழந்தை முகத்தை பார்த்தா அப்டியா தெரியுது? உன் பொண்டாடிக்கு என்னைய கண்டாலே பிடிக்காது. அதான் என்னைய மாதிரி இருக்க என் பேத்தியை, மகள்னு கூட நினைக்காம ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கா!” என்பார், சாரதா.


கணவன் மற்றும் மாமியாரின் குணம் தெரிந்தும், காலையிலேயே அவர்களின் வாயில் அரைபட விரும்பாது, அடுக்களை நோக்கி செல்ல போக, “ஏய் நில்லு இதுக்கு மேல நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்!” என்ற முரளியின் வார்த்தை தடுத்தது.


அவள் பிரச்சனை வேண்டாம் என நினைத்து அந்த இடத்தை விட்டு செல்ல நினைத்தாலும், பிரச்சனை அவளை விட வேண்டுமே! தேவையற்ற வாக்குவாதமோ சச்சரவோ குழந்தைகள் முன்னிலையில் வேண்டாம் என நினைத்து பிருந்தா அவ்விடத்தை விட்டு அகல, “இதுக்கு மேல நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்!” என அவளை தடுத்து நிறுத்தியது கணவனின் குரல். அதில் பிருந்தா அப்படியே நிற்க, “குழந்தை கேட்ட போதும் செய்யல! எங்க அம்மா சொன்னப்பவும் செய்யல! இப்ப கடைசி நேரத்துல தாண்டி குதிப்பாளாம்! நீ வாடா செல்லம் அப்பா இன்னைக்கு உனக்கு வெளிய வாங்கி தரேன் !” என்று மனைவியிடம் ஆத்திரத்துடன் கத்தியவன், மகளை நெருங்க, முரளி என்றபடி வந்தார் வைத்தியநாதன்.

“தோ வந்துட்டார்ல மருமகளை காப்பாத்த! இவருக்கு மட்டும் எப்படி தான் தெரியுமோ! கழுகுக்கு மூக்குல வேர்த்த மாதிரி! கரெக்ட்டான நேரத்துல வந்து எல்லாத்தையும் கெடுத்துடுவார்!” சாரதா கணவனை மனதினுள் தாளிக்க, அவர் மனதினுள் நினைத்தது கேட்டது போல, அவர் புறம் தனது பார்வையை திருப்பினார், வைத்தி. அதில் படக்கென தனது பார்வையை திருப்பிக் கொண்டார், சாரதா.

“ஆமா… எங்க என் அத்தையம்மா! இந்நேரம் இவளுக்கு ஜால்ரா தட்ட வந்திருக்கணுமே!” கணவனுக்கு பின்னே தனது மாமியாரை தேட, “எப்ப பாரு இந்த வீட்டுல எதாவது ஒரு களபரம்! ஏன் சாரதா பிருந்தா மேல உனக்கு இவ்வளவு வெறுப்பு?” மகனை தொடர்ந்து வந்த அமிர்தம் பாட்டி சொல்ல, “எங்கடா ஆளை காணலையேன்னு நெனச்சேன்!” என நொடித்துக் கொண்டார், சாரதா.


“என்ன இது பழக்கம் குழந்தைங்க முன்னாடி சத்தம் போடுறது! குழந்தைகளை அது பாதிக்கும்ன்னு படிச்ச உனக்கு தெரியாதா முரளி?” பாட்டி பேரனை பார்த்து தீர்க்கமாய் கேட்க, பதில் பேச முடியாது தனது பார்வையை திருப்பினான் முரளி.


“ஏன் சாரதா? உனக்கு எத்தனை தடவை நான் சொல்லிட்டேன்! முதல தன்யாவ செல்லம் கொடுத்து கெடுக்கிறத நிறுத்து! உன்னால தான் அவ பாதி கேட்டு போறா!” மருமகளையும் கடிய,

“நான் என்ன அத்தை செய்தேன்? குழந்தை ஆசைப்பட்டதை செய்ய சொன்னது ஒரு தப்பா? பாருப்பா முரளி! உங்க பாட்டி எப்படி பேசுறாங்க என்னை! என் பேத்தி மேல நான் பாசம் காட்ட கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா?” கண்ணை கசக்கினார், சாரதா.


தாய் கண்ணை கசக்கியதும் பொறுக்கமுடியாது, வேக எட்டுக்களில் தாயை நெருங்கி அவரை தோளோடு அணைத்துக் கொண்டவன், “பாட்டி இப்ப எதுக்கு அம்மாவை நீங்க திட்டுறீங்க? அவங்களுக்கு என் பசங்க மேல பாசம் காட்டவும், கண்டிக்கவும் முழு உரிமை இருக்கு!” வார்த்தைகள் பாட்டியிடம் இருந்தாலும், பார்வை மனையாளிடம் தான் பதிந்து இருந்தது.

“உரிமையும் பாசமும் இருக்க வேண்டியது தான். ஆனா அம்மாவை தாண்டி தான் எல்லாமே முரளி!” இதற்கு மேல் அவனிடம் பேசுவது வீண் என உணர்ந்து அமைதியாய் போனார் அமிர்தம் பாட்டி.


“அம்மா நீங்க சாப்டுங்க!” என தாய்க்கு நாற்காலியை இழுத்து போட்டு அமர வைத்தார், வைத்தி.
உணவு நேரம் ஒருவித இறுக்கத்துடனே கழிந்தது உணவு நேரம்.


“தன்யா தாத்தா இன்னைக்கு உன்னை ஸ்கூல்ல ட்ரோப் பண்றேன்!” என தன்யாவின் ஆசையில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டார் வைத்தி. தாயை தவிர வேறு யாரிடமும் தனது வாயை திறக்க மாட்டாள், பிருந்தா முரளியின் சீமந்த புத்ரி, தன்யா. தனது பாட்டியை போல!...

அலுவலகத்தில்….


ஒரு விஷயமாக தந்தையின் அறைக்குள் நுழைந்தான், முரளி. பேச்சு முடிந்து அவன் எழப் போக, “முரளி இந்த வாரம் நம்ம புதுசா டை-அப் பண்ண போற கம்பெனி கூட சின்னதா ஒரு பாமிலி கெட்டுகெதர் மாதிரி அரேஞ் செய்யலாம்னு நினைக்கிறேன் நீ என்ன சொல்றப்பா?” கோப்பில் கையெழுத்திட்டு கொடுத்தபடி மகனிடம் வினவ, இது அவர்களது தொழில் முறையில் அடிக்கடி நடப்பது தான் என்றாலும், அனைத்திலும் குடும்பத்தை உள்ளே இழுக்க மாட்டார் வைத்தி.


தேவையான இடங்களில் மட்டுமே குடும்பத்துடனான சந்திப்பாக இருக்கும். பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே சென்று வருவர். ஆனால் தந்தை சொல்லவும், மகனது புருவம் ஆச்சரியமாய் உயர்ந்தது.

“என்னப்பா பதிலையே காணோம்?” வைத்தி கேட்க, “இல்லப்பா நீங்க….!” தந்தையின் குணம் தெரிந்திருந்தாலும், மகன் முடிக்காது நிறுத்த, “ஓஒஹ் அதுவா! எனக்கு அந்த பையன் பிரகாஷ பார்த்தவுடனே ரொம்ப புடிச்சு போச்சுப்பா! ரொம்ப டேலன்ட்டான பையன். நல்ல அறிவு, ரொம்ப பொறுப்பான புத்திசாலியான பையன்!” வைத்தி அந்த பிரகாஷை புகழ, ஏனோ காரணம் இன்றி முரளியின் மனதினுள் ஒரு மெல்லிய தீ பற்ற ஆரம்பித்தது. அவன் மனம் அதை உணரவும் இல்லை. அதை பற்றி ஆராயவும் விரும்பவில்லை. ஒரு நொடி ஒரே ஒரு நொடி அவனிடம் தோன்றிய உணர்வு. பிறகு அவன் சகஜமாகி விட்டான்.


“சரிப்பா நீங்க என்ன மாதிரி செய்யணும் என்று சொல்லுங்க! நான் ஆளுங்க கிட்ட சொல்லிடுறேன்!” முரளி தந்தையிடம் சொல்ல, “ம்ம்ம் முரளி ஆளுங்க கிட்ட எல்லாம் வேண்டாம்! நீயே பர்சனலா கொஞ்சம் நேர்லயே எல்லாத்தையும் கூட இருந்து பார்த்துக்கோ! அண்ட் அப்புறம் அவங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிடலாம்ன்னு நினைக்கிறேன்! வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிடு முரளி” என தந்தை சொல்ல, மகனின் புருவமோ உச்சி மேட்டுக்கே சென்றது இன்னொரு முறை.

அந்த நாளில் அவனது தந்தை அவனை இரண்டாவது முறை வியப்பில் ஆழ்த்தினார். ஏதோ கேட்க வந்தவன் தனது மனதினோடே அதனை வைத்துக் கொண்டான்.


சிலருக்கு ஒருவரை பார்த்தால் பிடித்து விடும்! சிலரை பார்க்க பார்க்க பிடித்து விடும்! சிலரை பார்த்தவுடனே மனதுக்கு நெருங்கியவர் போலவே தோன்றிடுவர்! இதில் கடைசியில் தான் பிரகாஷ்-வைத்தி.
****************************************************


அறையில் கண்ணாடி முன் நின்று டையை அணிந்துக் கொண்டிருந்தான் விஷ்வா. அவனையே படுக்கையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள், அபி. அவள் பார்ப்பது தெரிந்தும் அவளை சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை அவன். அவளுக்கும் அது தெரிந்து தான் இருந்தது.

“ஏண்டி! அவன் தான் உன்னைய கண்டுக்குறதே இல்லைல! அப்புறம் ஏன் அவனையே பார்க்குற!” என மூளை கேட்க,

“ம்ம்ம் என் புருஷன் நான் பார்க்குறேன்!” என்றது அவள் மனம். “ம்ம்க்கும் நீ இப்படி இருக்கிறதால தான் அவன் இப்படி இருக்கான்!” என்றது அவள் மனசாட்சி.

“பரவாயில்லை!” என்றாள். அவன் மீதான தனது பார்வையை மாற்றாது, கேள்வனை நோக்கி ஒவ்வொரு அடியாய் அவள் முன்னேற, அவனிடம் அப்போதும் ஒரு மாற்றமும் இல்லை.


“திமிர் பிடிச்சவன்!” என மனதினுள் சொல்லிக் கொண்டாள், பாவை.


“என்ன மிஸ்டர் விஷ்வா! எங்க கிளம்பிட்டீங்க?” கைகளை கட்டியபடி சுவற்றில் சாய்ந்தபடி அவள் கேட்க, டையை சரி செய்தபடி அவளை ஒரு முறை பார்வையிட்டவன், “ஒரு பாமிலி கெட் டு கெதர்!” என்றான் சிக்கனமாய்.

“அதுக்கு பாமிலியால போகணும்!” அவனை சீண்ட, “நான் கூப்பிட்டா நீதான் வர மாட்டியே!” என்றான், தனது பணியை தொடர்ந்தபடி. அவனது உதாசீனம் அவளை சீண்ட, “நானும் வரேன்!” என்றாள் வீம்பாய்.

“லூசாடி நீ?” என்றான் வேகமாய்.


“அதெல்லாம் எனக்கு தெரியாது! நீ வேற இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க! உன்னை தனியா விட்டுட்டு, எவ உன்னைய கொத்திட்டு போவாளோனு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு என்னால இங்க வீட்டுல நிம்மதியா இருக்க முடியாது!” என்றாள், அவன் மனையாள். அவளது வார்த்தையில் கோவம் சுறுசுறுவென ஏற, ஆத்திரத்தில் கண்களை மூடித் திறந்தான், விஷ்வா. அவளிடம் பதில் பேசி இருக்கும் மனநிலையை கெடுத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.


ஒன்று தான் எதாவது சொன்னால் தனது பொறுமை பறக்க, அதற்கு நேர்மாறாக செய்வாள். கடைசியில் எதாவது சண்டையில் முடியும் வாய்ப்பும் அதிகம்! இவன் விட்டு சென்றால், வேண்டுமென்றே எதாவது கிறுக்குத்தனமாக செய்தாலும் செய்வாள் என இருவரையும் பற்றியும் அறிந்தவன் ஆதலால், பொறுமையை கடைபிடிக்க முடிவு செய்தான்! “உனக்கு பதினைஞ்சு நிமிஷம் டைம்! அதுக்குள்ள வர! நான் ஹால்ல வெயிட் பண்றேன்! எதாவது பண்ணி வேணும்னே லேட் பண்ணின! அவ்வளவுதான்!” என எச்சரித்து விட்டு சென்றான் விஷ்வா.


ஹாலில் மனையாளுக்காக காத்திருந்த நேரம், ”காபி வேணுமா விஷ்வா?”வினவினார், வித்யா. “ம்ம்ம் கொடுங்கம்மா!” என்றவன், பல நாள் கழித்து தாயின் கையால் அருந்தும் காபி அவனது சுவை அரும்புகளை தூண்டியது. காபியை ரசித்து அருந்தும் மகனை வாஞ்சையுடன் நோக்கினார் தாய். “எவ்வளவோ இடத்துல எவ்ளோ காபி குடிச்சாலும் நீங்க போடுற காபி மாதிரி எதுவும் இல்லமா!” சிலோகித்தான் மகன். அவனது வார்த்தையில் தொண்டை கமறியது பெற்றவருக்கு. நாள் முழுதும் ஓட்டம்! அவன் வீட்டில் இருப்பதே அரிது. அவன் வரும் நேரமும் ஆந்தை அலறும் நேரமாக பெரும்பாலும் இருக்க, அதில் அன்னையாய் அவருக்கு பெரும் மனத்தாங்கல்.


எதுவும் சொல்ல விரும்பாது, “இளைச்சுகிட்டே போறியே விஷ்வா!” ஆற்றாமையுடன் வெளி வந்தது அன்னையின் குரல். அதற்கு அவனது பதில் புன்னகை மட்டுமே. தாயிடம் கோப்பையை நீட்டியவன், “அம்மா சின்னதா ஒரு பாமிலி கெட் டு கெதர். நானும் அபியும் போகலாம்னு இருக்கோம்! நீங்களும் எங்க கூட வாங்கம்மா!” என்று அழைத்தான் மைந்தன். அதில் ஆச்சரியம் வித்யாவுக்கு. அது முகத்திலும் வெளிப்பட, மனதினுள் சிறு மின்னலாய் முகிழ்த்தது மகிழ்ச்சி. “இல்லப்பா! நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க! நானும் பாப்பாவும் வீட்டுல இருக்கோம்!” என்றார் மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்க எண்ணி.


தாயின் எண்ணம் புரிந்தவன் போல அவரது மகிழ்ச்சியை குலைக்காத வண்ணம் மெதுவாய் தலையசைத்தவன், எதேச்சையாய் படிக்கட்டு புறம் திரும்ப, அங்கே புடவை கட்டி பூச்சூடி நிகழ்வுக்கு ஏற்றவாறு தயாராகி வந்தாள், அபிரக்ஷிதா. அழகி தான் அவள். நிச்சயம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! இருவரும் வித்யாவிடம் விடைபெற்று வர, அவனின் கார் வழுக்கி கொண்டு சாலையில் பயணித்தது. காரில் நிசப்தமே குடிக்கொண்டிருக்க, ஓரக்கண்ணால் கணவனது பார்வை தன் மீது படிகிறதா? என அடிக்கடி நோட்டம் விட்டுக்கொண்டாள், பெண். நேரமாக நேரமாக, கணவனின் பார்வை தன்னை சீண்டாததில், அதுகாறும் வரை அவளுள் இருந்த இலகு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்க, அந்த இடத்தில் சீற்றம் குடியேற ஆரம்பித்தது.


“கொஞ்சமாவது திரும்பி பார்க்குறானான்னு பாரேன்! ரோபோ! ரோபோ! திமிரு! திமிரு! உடம்பெல்லாம் திமிரு! ஒரு வார்த்தை! ஒரு வார்த்தை! நீ அழகா இருக்கனு சொன்னா கொறஞ்சா போய்டுவான்! தேடி தேடி இவன்தான் வேணும்னு ஒத்தகால்ல நின்னு கட்டினேன் பாரு! என்னைய தான் சொல்லணும்!” என அவன் கண்டுக்காத ஆத்திரத்தில் முதலில் மனதினுள் முணுமுணுத்தவள், பின்னர் கடுப்பில் வாய்க்குள் முணுமுணுத்தாள்.


மனைவி வாய்க்குள் முனங்குவது அவனுக்கு புரிந்தாலும் அவன் அலட்டிக் கொள்ளவில்லை. அவன் காதில் விழ வேண்டும் என்றே அடுத்து சத்தமாய் அவள் முனக, அவனது பார்வையோ அவளை அழுத்தமாய் துளைத்தது. அவனது பார்வையை உணர்ந்தவள், அவனுக்கு சளைக்காமல் அவளும் பார்க்க, “என்ன பார்க்குற? இப்படி பார்த்தா பயந்துடுவோம்மா?” என உள்ளுக்குள் பயம் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாது தெனாவட்டாய் கேட்க, காரை ஓரம் கட்டினான். அவள் புரியாது பார்க்க, அவளையே தீர்க்கமாய் பார்த்தவன், அவள் என்ன ஏதென்று உணரும் முன்பே பெண்ணவளின் மலரிதழ்கள் கேள்வனின் வசமாகி இருந்தது. அதில் அவள் விழிகளோ திகைப்பில் விரிந்து, பின்னர் அதிர்வில் படபடவென பட்டாம்பூச்சியாய் சிறகடித்து, இறுதியில் அவனது எதிர்பாரா முத்தத்தில் மூழ்கியது.

தங்களை கடந்து சென்ற காரின் ஹாரன் ஒலியில், தன்னினைவில் இருந்து கலைந்தால் பெண். நொடிகள் கடந்திருக்க, மீள முடியாது கண்மூடி அமர்ந்திருந்தாள், கோதை. அவன் அவளது முகத்திற்கு நேரே சொடக்கிட, திடுக்கிட்டு கண் விழித்தவள், புருவ முடிச்சுடன் கணவனை பார்க்க, அவனும் அவளை தான் விசித்திரமாக பார்ப்பது புரிந்து தெளிந்தாள், மாது.

“ச்சே கனவா?” பெண் மனம் நிதர்சனம் புரிந்து தெளிந்த வேளை, “ம்ம்க்கும் இவனை கட்டிக்கிட்டு உனக்கு லிப்லாக் வேற கேட்குதா? உனக்கெல்லாம் அது கனவுல கூட நடக்க வாய்ப்பில்லை!” என மூளை எக்காளமிட, அதனை கொட்டி அடக்கியவள் முகமோ அது சொன்னதில் இறுகி போனது.

சாரல் அடிக்கும்…



Post Reply

Return to “Enai Nanaikum Sarale”