சாரல் 14
Posted: Sun Oct 09, 2022 9:50 am
சாரல் 14
தந்தையின் பார்வை தன்னைமீது இருப்பது உணர்ந்து தலை நிமிராமலே, “ “மாசம் கைகட்டி சம்பளம் வாங்குற சமையல்காரன்…. எல்லாம் என்கிட்ட பேசுறான்!”
தட்டுத்தடுமாறி அர்ச்சனா முடிக்க, அந்த அறையில் ஏசியின் மெல்லிய சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, அங்கு நிசப்தமே குடிகொண்டிருந்தது.
மகளின் வார்த்தைகளைக் கேட்டு வைத்தியநாதன் பெரிதும் வருந்தினார். சட்டென்று ஏறிட்டு பிருந்தாவை பார்க்க, அவளோ உதடு கடித்து வரும் கண்ணீரை அணையிட்டு கொண்டிருந்தாள். அவரது பார்வை அனைவரையும் வலம் வந்தது. முரளி முகத்தில் இருந்து எதையும் படிக்க முடியாது போக, அர்ச்சனா இன்னும் குனிந்த தலை நிமிராது இருக்க, சாரதா முகத்திலோ ஒரு செருக்கு கலந்த பூரிப்பு தெரிந்தது.
தனது குரலை செருமிக் கொண்டவர், “இவ்ளோ நேரம் ரெண்டு பேரும் அந்த குதி குதிச்சீங்க! இப்ப என்ன சொல்ல போறீங்க!” வைத்தியநாதன் மனைவி, மகன் இருவரையும் பார்த்து கேட்க, முரளியை முந்திக் கொண்டு, “அதுக்காக அவன் இவமேல எல்லார் முன்னாடியும் தண்ணியை ஊத்துவானா?” மகனை சிந்திக்க விடாது, மகள் செய்தது தவறே இல்லை என்பது போலவும், முகுந்தன் மீது தன தவறு என்பது போலவும் பேசினார்.
பிருந்தாவுக்கு நெஞ்சமெல்லாம் வலி பரவி வதைத்தது. இந்தியாவில் 90 சதவீத பெண்கள் அனுபவிக்கும் வலி. தன் மீதோ, தங்கள் குடும்பத்தின் மீதோ, தவறே இல்லாத போதும், எதுவும் பேச முடியாமல், அமைதியாய் கேட்டுக் கொண்டிருக்கும் வலி.
உதடுகள் துடிக்க, ஏதேனும் பேசிவிடும் வேகம் எழுந்தாலும், தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள். கோபத்தில் முகம் சிவக்க, “நிறுத்து சாரதா! முகுந்தன்னு இல்லை தன்னோட வேலையை நேசிக்கிற யாரா இருந்தாலும், அப்படி தான் செய்வாங்க! அதுவும் பொது இடத்துல வச்சு உன் மகள் அப்படி பேசுனது தப்பு இல்லையா? இல்ல அது தப்புன்னு உனக்கு தெரியவே இல்லையா?” வைத்தியநாதன் மனையாளை கேட்க, அவரின் உடல் மொழியில் அப்போதும் மாற்றம் இல்லை.
“அவ என்ன தப்பாவா கேட்டா? சரியா தானே பேசி இருக்கா?” தான் பிடித்த முயலுக்கு மூன்று இல்லை, முக்கால் கால் தான் என அவர் வாதிட, சலித்து போனது வைத்திக்கு.
முட்டாள்களிடம் பேசுவது நேரம் வீண் என அவரும் நினைத்தாரோ! கண்களை மூடி திறந்தவர், “எல்லாரும் போய் படுங்க நேரமாச்சு!” என்றார். சாரதா பிருந்தாவை எள்ளலாக பார்க்கவும் தவறவில்லை.
பிருந்தாவால் அதை நன்கு உணரவே முடிந்தது. தளர்ந்த நடையுடன் அவள் திரும்ப, பெருமூச்சு விட்டவர், “நீ எதுவும் சொல்ல விரும்புறியாம்மா பிருந்தா?” அவள் அமைதி கண்டு, “தேவை படும் நேரம் தன்னோட குடும்பத்துக்கோ இல்ல தனக்கோ எதாவது மரியாதை குறைவு நடக்கும் போது நம்ம எதிர்த்து கேள்வி கேட்க வாயை திறக்கலாம்! தப்பில்லைம்மா!” எனவும் மாமனாரை நிமிர்ந்து பார்த்தவளின் இடது கண்ணில் சரேலென ஒரு துளி நீர் கன்னம் நோக்கி பயணம் செய்ய, அவளை நோக்கி கசந்த முறுவல் புரிந்தார். “கடவுளே இந்த பொண்ணுக்கு சந்தோசத்தை கொடுப்பா!” என்று வேண்டுதல் வைத்தது அவரது இளகிய மனம்.
அறைக்குள் பிருந்தா நுழைந்த நேரம், முரளி இன்னும் தூங்காமல், கூண்டு புலி போல குறுக்கும் நெருக்குமாய், பால்கனியை அளந்துக் கொண்டிருந்தான். கணவனை கவனித்தாலும், குழந்தைகளின் அறைக்குள் நுழைந்தவள், தன்யா இறைத்து போட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு திரும்ப, ராகுல் தனது பொருட்கள் அனைத்தையும் சமத்தாய் எடுத்து வைத்திருந்தான், அதனை கண்டு புன்முறுவல் பூக்க, இருவருக்கும் போர்வையை போர்த்திவிட்டு, மகளின் நுதலில் முத்தமிட, தூக்கத்திலும் முகத்தை சுருக்கியது பெண்.
அவளது செய்கையில் பிருந்தாவின் முகத்தில் சிறுப்புன்னகை தோன்ற, அரவம் எழுப்பாது, மகளது கன்னத்தை கிள்ளி கொஞ்சிக் கொண்டாள். விழித்திருக்கும் நேரம் தாயை அருகேயே அண்டவிட மாட்டாளே! “செல்ல ராட்சசி!” மனதினுள் மகளை கொஞ்சி கொண்டு மகனுக்கும் முத்தமிட, ஆழ்ந்த நித்திரையின் பிடியில் லயித்திருந்தபோதிலும், தாயின் ஸ்பரிசம் உணர்ந்து, அம்மா என்று மெல்லிய குரலில் அழைத்தவன், அவளது புடவை முந்தானையை பற்றியும் கொண்டான்.
“ஸ்ஸ்!” நாக்கை கடித்துக் கொண்ட பிருந்தா, மெதுவாய் மகனது துயில் கலையா வண்ணம் தனது புடவையை விடுவித்துக் கொண்டவள், அறையின் விடிவிளக்கை போட்டு விட்டு தங்களது பகுதிக்கு வர, முரளி அப்போதும் அளப்பதை நிறுத்தவில்லை.
அவள் படுக்கையை தட்டி போட்டு கொண்டிருக்க, வேகமாய் அவளை நெருங்கி கைகளை பற்றிக் கொண்டவன், “என்னடி உன் தம்பிக்கு அவ்ளோ திமிரா? எல்லார் முன்னாடியும் என் தங்கச்சியை அவமான படுத்தி இருக்கான்! அவனுக்கு என்ன மனசுல பெரிய இவன்னு நெனப்பா?” என கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளையும் கடித்து துப்ப, வலி மிகுதியோடு அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“பதில் சொல்லுடி! கண்ணாலயே கதை பேசுற! வாயை திறந்து பதிலை சொல்லுடி! எப்ப பாரு ஊமைக் கோட்டான் மாதிரியே இருந்துட்டு எல்லா வேலையும் பார்க்க வேண்டியது! அக்காவுக்கும் தம்பிக்கும் உடம்பெல்லாம் திமிரு…. திமிரு!” அவன் வார்த்தைகளை மென்று துப்ப, பிருந்தாவின் கண்ணில் கோபம். அதனை கண்டுக் கொண்டவன், “ஒண்ணுமில்லைன்னாலும் அக்கா தம்பி ரெண்டு பேருக்கும் இந்த கொழுப்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை!” எப்போதும் தான் திட்டினால், அழுதோ இல்லை அமைதியாய் இருக்கும் மனைவி, இன்று முறைத்துக் கொண்டு நிற்கவும், அவளை காயப்படுத்தும் வேகம் முகிழ்த்தது அவனுள்.
“என்னடி! மொறச்சா நான் பயந்துடுவேனா? நீயும் அவனும் கூட்டு சேர்ந்து தானே இதை செய்தீங்க! எனக்கு நல்லா தெரியும்டி நீங்க காசுக்காக எதையும் செய்ய தயங்காத ஆட்கள் தானே!” விஷமாய் வார்த்தைகளை கக்க, அவனது பிடியின் அழுத்தத்தில் நெளிந்துக் கொண்டிருந்தவள், “சும்மா உங்களுக்கு தான் பேச தெரியும்னு பேசாதீங்க! நாங்க எதுக்கு அப்படி செய்யணும்! அர்ச்சனா பேசுனது மட்டும் சரியா?” என்பது போல அவள் கண்கள் அவனிடம் கேள்வி கேட்க,
“வாயை திறடி!” அவளை சுவரோடு ஒட்டிவைத்து கழுத்தை பிடிக்க, “எங்க….ளுக்கு யா… யா..ரையும் அவமா…னப் படுத்தனும் என்…கிற எண்ண….ம் கிடையா…து…. அதுக்…அதுக்கான அவசியமும் கிடையாது!” அவனது பிடி வலித்தாலும், வலித்த தொண்டையை செருமிக் கொண்டு, “யா.. ர் யாரு எப்படி…ன்னு உ…ங்க ம.. ம..னசுக்கு தெ…ரியும் அ…அதை கேட்…ட்டு பா…ருங்க!” அவனது பிடியில் தொண்டை வலித்த போதும், தம்பியின் மீது குற்றம் சுமத்துவதை பொறுக்க முடியாது அவள், தீர்க்கமாய் அவனது விழிகளை பார்த்து சொல்ல, தனது கைகளில் அழுத்தத்தை கூட்ட, வலி தாளாமல், கண்களில் கண்ணீரை சிந்தினாலும், திடமாய் அவனது பார்வையை எதிர் கொள்ள, அவள் மூச்சுக்கு தவிப்பது உணர்ந்து, சட்டென்று தனது கரங்களை அகற்றினான், முரளி.
இவ்வளவு நேரம் அவனது அழுத்தமான பிடியில், மூச்சு விட முடியாது திணறியவளுக்கு கண்கள் கலங்கி முகமே சிவந்து வீங்கி விட்டது. தொண்டையை இரு கைகளாலும் பிடித்து கொண்டு அவள் இடைவிடாது இரும, தனது கோபம் அத்தனையும் கதவை அறைந்து சாற்றி வெளியேறினான்.
கதவை சாற்றிய வேகத்திலேயே அவனது கோபம் புரிய, அந்த கதவையே வெறித்து பார்த்திருந்தாள். இதுநேரம் வரை கணவனுக்கு வைராக்கியமாய் தன் கண்ணீரை மறைத்தவள், அப்படியே மடங்கி அமர்ந்து அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியேற்றினாள்.
*************************************************
கைகளை தலைக்கு கொடுத்தபடி அண்ணாந்து வானத்தை வெறித்தபடி கல் மேடையில்(sit-out) படுத்திருந்தான், விஷ்வா. மேககூட்டத்தின் நடுவே நட்சத்திர தோழிகளோடு, விரிந்த வானில் நிலவு பவனி வந்துக் கொண்டிருந்தது.
எங்கோ தூரத்தே மழை பொழிந்துக் கொண்டிருக்கும் போல, சில்லென்ற குளிர் காற்று மேனியை தழுவ, அதனை கூட உணராது இருந்தான், மாயவன். உடலும் மனமும் சோர்ந்து போய் இருந்தாலும், தூக்கம் வருவேனா? என அட்டூழியம் செய்தது.
நாள்முழுதும் அயராத, தளராத ஓட்டம் அவனை தொய்வடைய செய்யவில்லை. மாறாக தன்னை, தனது கவலையை மறக்க தான் அதன் பின்னே ஓடினான். மனதினுள் நிம்மதி இருந்தால் தானே தூக்கம் வர, ஏனோ மனம் மிகவும் சோர்ந்து போனதை போல உணர்ந்தான். அயர்வுடன் கண்களை மூடியவனின் விழிகளின் ஓரம் கண்ணீர் வடிய, அதனை கூட உணராது படுத்திருந்தான்.
சற்று முன்பு நடந்ததை எண்ணி, வேதனை அடைந்தது உள்ளம்.
மகளை படுக்கையில் விட்டு, குளியலறைக்குள் நீரிடம் தஞ்சம் புகுந்தவன் மனம் தணலாய் தகிக்க, நீரின் குளுமை அவன் மனம் கொண்ட வெம்மையை தணிக்க முடியாது தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, அவனது காலடியில் வீழ்ந்தது.
தலையை துவட்டியபடியே வந்தவன், தன் போக்கிற்கு வேலைகளை செய்தபடியே இருக்க, பொறுமையிழந்து போனாள், அவன் மனையாள். அவன் படுக்கையில் விழுந்த சமயம் வேகமாய் வந்தவள், போர்வையை இழுத்து தூர எரிய, கண்திறந்து பார்த்தவன், சலிப்புடன் திரும்ப கண்களை மூடிக்கொள்ள, பார்த்தவளுக்கு இன்னுமின்னும் வெறி கூடியது. அவனது தலையணையை பறித்தவள் அதையும் எரிய, அவனோ இன்னொன்றை தலைக்கு வைத்துக்கொண்டு விட்ட தூக்கத்தை தொடர, அவளுக்கு கோபம் தலைகேறியது. “என்ன செய்வது? என்ன செய்வது? என யோசித்தவள் கண்கள் அலைபாய, எதையாவது செய்து அவனை அவன் தூக்கத்தை கெடுத்துவிடும் வேகம் அவளுள். நொடியும் யோசிக்காது பக்கத்தில் இருந்த தண்ணீர் புட்டியை எடுத்தவள் அவனது முகத்தில் ஊற்ற, படாரென்று கண்களை திறந்தவன் விழிகளோ, கோவைப்பழம் போல சிவந்து கிடந்தது. அவனது முகம் கண்டு உள்ளுர அஞ்சினாலும், வெளியே அவனை மிதப்பாய் பார்த்து வைத்தாள், அபிரக்ஷிதா.
“என்ன உன் காதலி… இல்ல… கள்ளக்காதலியை பார்த்து கொஞ்சிட்டு வந்தாச்சா?” நக்கலாய் அவனை காயப்படுத்திவிடும் நோக்கில் அவள் வினவ, எழுந்து சோபாவில் படுத்துக் கொண்டான். விடாது அவனை தொடர்ந்தவள், “நான் ஒருத்தி இங்க கேட்டுட்டு இருக்கேன்! நீ காதிலேயே வாங்காம இருந்தா என்ன அர்த்தம்!” அவளது குரல் உயர, வேகமாய் எழுந்தவன், “ஏய் கத்தாதடி! பாப்பா தூங்கிட்டு இருக்கா! எழுந்துட போறா!” என்றது தான் வினயமே!
“ஒஹ்! உன் பொண்ணு தூக்கம் கெட்டுடும்னு யோசிக்கிற நீ யாரோ பெத்த பொண்ணை பத்தி யோசிக்கிலல!” ஆங்காரமாய் கேட்க, வேகமாய் மகளின் அறையை எட்டி பார்த்தான். “அங்க என்னய்யா பார்வை எனக்கு பதில சொல்லு!” மேலும் எகிற,
“இப்ப எதுக்குடி லூசு மாதிரி அர்த்த ராத்திரில கத்திகிட்டு இருக்க?” பல்லை கடித்தபடி விஷ்வா கேட்க, “ஆமாய்யா நான் லூசு தான்! நான் லூசே தான்! எல்லாம் என் தலைஎழுத்து! யாரையும் சொல்லக்கூடாது என்னை தான்… என்னைத்தான் சொல்லணும்!” பெருங்குரலில் அழ, இவனது பொறுமையோ பறந்தது. “ஏய் படிச்சவ தானேடி நீ! கத்தாதன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்ல! சத்தம் கீழ கேட்க போகுது!” என அவன் உறும,
“நான் கத்துறேனா? நான் பேசுறது உனக்கு கத்துற மாதிரிதான் இருக்கும்! அவ பேசுறது மட்டும் காதுல தேன்வந்து பாயுற மாதிரி இனிக்குமே! அப்படிதான் கத்துவேன்” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் மேலும் குரல் உயர்த்த, அதற்குமேல் அவளுடன் பேச தெம்பின்றி அவன் அமைதியாகி போக, “நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்! நீ பாட்டுக்கு அமைதியா இருந்தா என்னய்யா அர்த்தம்!” கோபத்தில் அவனை நோக்கி பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எரிய, அது அங்கிருந்த கண்ணாடியை பதம் பார்த்தது. “சிலீர்” என கண்ணாடி நொறுங்கிய சப்தம் இரவின் நிசப்தத்தில் கணீர் என கேட்க, திடுக்கிட்டு போனான் விஷ்வப்ரகாஷ். அவனது நிதானம் கண்டு தன்னிலை இழந்த பெண்ணவள், அறையில் உள்ள பொருட்களை எல்லாம் உடைத்தும் ஆத்திரம் அடங்க மறுக்க, விரைவாய் உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து கரத்தில் வெட்டப்போக, நொடியில் அவள் செய்ய விளைந்த காரியம் உணர்ந்து, அவளை நெருங்கி அவளிடமிருந்து அதனை பறிக்க போக, இருவருக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம். அதில் அவனது கரத்தை கண்ணாடித்துண்டு பதம் பார்த்து விட, “ஸ்ஸ்ஆ!” வலியால் துடித்தான், விஷ்வா.
அவள் அதனை உணராது தன்னை காயப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இருக்க, வலியையும் மீறி, அதனை அவளிடம் இருந்து பறித்தவன், அவளை ஓங்கி அறைய அதில் தான் நிதானம் அடைந்தாள், அபி.
சுயம் அடைந்தவள், கன்னத்தை பற்றியபடி அவனை பார்த்தவள், கன்னத்தில் ஈரம் உணர்ந்து கையை பார்க்க, அப்போது தான் கணவனின் கரத்தில் கசியும் உதிரம் கண்டாள்.
ஐயோ என்றபடியே அவனது கரத்தை பற்ற முற்பட, வேகமாய் கையை பின் இழுத்தான். “ஐயோ ரத்தம் விஷ்வா!” என்றபடியே கரத்தை மீண்டும் பற்ற, “விடுடி! விடுடின்னு சொல்றேன்ல!” அவனது மறுப்பையும் பொருட்படுத்தாமல், வேகமாய் கரத்தை ஆராய்ந்தவள் கண்களிலோ பெரும் தவிப்பு. படுக்கையில் அவனை அமர வைத்தவள், புயல் வேகத்தில் முதலுதவி பெட்டியை எடுத்து மருந்திட முயல, அவளது உதவியை ஏற்க மறுத்து, கையை மடக்க, கண்களில் கோபம் கொப்பளிக்க அவனது கையை பிடித்து காயத்தை சுத்தம் செய்தாள்.
சாரல் அடிக்கும்…