Page 1 of 1

சாரல் 15

Posted: Sun Oct 09, 2022 9:51 am
by Sutheeksha eswar
ஹாய் நட்பூஸ்,

சொல்லாம கொள்ளாம ஓடி போய்டேன். அம்மாவீட்டுக்கு வந்தேன். என் பையன் வழக்கம் போல என்னைய வச்சு செய்துட்டான். லேப்டாப் போன் எதையும் நெனச்சு கூட பார்க்க முடியலை. சொல்லாம லீவ் எடுத்தது தப்பு தான். அடுத்து தீபாவளி அப்புறம் விசேஷம் என்று இன்னும் ஒரு மாசம் எப்ப வருவேன் எப்படி ud போடுவேனு எனக்கே தெரியாது. ஆனா வாரம் ரெண்டு அல்லது மூன்று நாளுக்கு ஒரு குட்டி எபியாவது கொடுக்க முயற்சி செய்றேன்.

யாரும் என்னை கட்டைய தூக்கி அடிக்க தேடாம, உங்க வீடு பிள்ளையா நெனச்சு என்னைய மன்னிச்சு விட்ருங்க மக்களே.

போன பதிவுக்கு எனக்கு லைக், கமெண்ட் செய்து என்னை உற்சாகப்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. இந்த பதிவுக்கும் உங்க அன்பை வாரி வழங்குங்க மக்களே.

உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 15

அறையில் படுக்கையில் அமர்ந்திருந்த வித்யா, தன் மகனையும் அவன் வாழ்கையும் நினைத்து வருந்தாத நாளே கிடையாது. பெட் சைட் லாம்ப் அருகே இருந்த தங்களது குடும்ப படத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்.


தனது மனக்கவலைகளை சொல்ல ஆளின்றி, தெய்வமாகி போன கணவரிடம் தினமும் தனது மனக்கவலையை இறக்கி வைத்திடுவார். இன்றும் அப்படி தான்.


ஏனோ மனம் மகனை நினைத்து அதிகமாக துவள, அறைக்குள் இருப்பதே மூச்சடைப்பதை போல உணர்ந்தவர், சற்று வெளிக்காற்று வாங்கினால் தேவலாம் போல தோன்ற, மாடிக்கு சென்றார்.

படியேறி வந்தவர், அந்த நேரத்தில் மேடையில் யாரோ படுத்திருப்பது போல தெரியவும், திடுக்கிட்டு போனவர், அது மகன் என்பது தெரிந்து துடித்து போனார்.
வாழ வேண்டிய வயதில், துணை இருந்தும், தனிமையில் மகன் இருப்பது கண்டு தாயாய் மனம் வெதும்பி போனார்.

மெதுவே அவன் அருகே வந்து நிற்க, தன் மீது நிழல்படுவது உணர்ந்து கண் விழித்தான், விஷ்வா. மெதுவாய் கைகளை விலக்கி பார்க்க, தாயை இந்த நேரத்தில் கண்டு பதறி போனான், மகனாய்.

“என்னம்மா? என்னாச்சு?” தாய் முகம் கண்டு பதட்டமாய் கேட்க, அவனது கவலை உணர்ந்து, அன்னையாய் அந்த நேரத்திலும் பூரித்தது பெற்ற மனம். அவரை நெருங்கி கை பிடித்து, மேடையில் அமர வைத்தவன், “என்னம்மா?” உயிர் உருக அழைக்க, அவனின் குரலில், உள்ளே எதுவோ உடைவதை உணர்ந்தார் வித்யா. நடுங்கும் கரம் கொண்டு, மெல்ல கரம் நீட்டி அவனது கன்னம் தாங்க அதிர்ச்சியில் அகல விரிந்தது அவன் கண்கள்.


தாயின் நடுக்கம் உணர்ந்து “ம்ம்மா!” தவிப்பாய் வார்த்தைகள் உதிர, “அம்மாவ மன்னிச்சுடுடா கண்ணா!” மகனின் வருத்தம் கண்டு பல நாட்கள் கழிந்து தனது மௌனத்தை உடைத்தார் வித்யா. உடைந்து போய் அன்னை சொல்ல, பதறி போனான் ஆண்மகன். “என்னம்மா! மன்னிப்பு அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க! நான் உங்க மகன்மா என்கிட்டே போய்!” தாயை தேற்ற முனைந்தான் மகன்.

“இல்ல… நாங்க எல்லாரும் எங்க இஷ்டத்துக்கு தான் உன்னைய வளைக்க பார்த்தோம். வளைச்சோம்! உனக்கு என்ன தேவை என்று ஒரு அம்மாவா நான் கவனிக்க தவறிட்டேனோனு எனக்கு நெஞ்சு குறுகுறுக்குது விஷ்வா! உன்னைய நான் கவனிச்சு இருந்தா நீ இப்ப இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்காதே. நாந்தான்.. நான் தான் எல்லாத்துக்கும் காரணம்!” என்றவர் முகத்தை மூடியபடி அழுதார்.

“அம்மா… அம்மா… என்னம்மா…. என்னம்மா நீங்க! நீங்க என்னம்மா செய்தீங்க? நடந்த எதுக்கும் நீங்க காரணம் இல்லையேமா! அது…” சொல்ல முடியாது கமறிய தொண்டையை எச்சில் விழுங்கி சரி செய்தவன், “அது என் தலைவிதிம்மா. அதுக்கு நீங்க என்ன செய்ய முடியும்!” நெஞ்சை அடைத்த துக்கத்தை மறைத்துக் கொண்டு, தன்னையும், தன் வாழ்க்கையையும் கண்டு மருகும் தாய்க்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்தவென தெரியாது, வாய்க்கு வந்ததை சொல்லி தேற்ற முயன்றான், விஷ்வா.


“அப்ப ஏண்டா நீ இந்த அர்த்த ராத்திரில இங்க தனியா நின்னுகிட்டு இருக்க?” மகனது வாழ்க்கையில் தலையிடாதவர் தான் வித்யா. கணவன் மனைவி அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர் தான். என்ன இருந்தாலும், எத்தனை தான் கண்டுக் கொள்ளாமல் இருப்பதை போல காட்டிக் கொண்டாலும், தாய் மனம் பெற்ற மகனின் வாழ்க்கையை கண்டு கதறி துடிக்க தான் செய்தது.

தாயின் கேள்வியில் விஷ்வாவின் முகத்தில் ஆயிரம் வர்ண ஜாலங்கள். என்ன சொல்வது என்று, ஆயிரம் வார்த்தைகள் தெரிந்தும், பதில் சொல்ல முடியா ஊமையாகித்தான் போனான் அந்த நேரத்தில்.

மகனின் மௌனத்தில், “சொல்லுடா ஏன் பதில் சொல்லாம தவிக்குற? முடியலைல! உன்னால பதில் சொல்ல முடியலைல. என்னால முடியலைடா… என்னால முடியலை! என் பையன் வாழ்க்கை கடைசி வரை இப்டியே இருந்திடுமோனு எனக்கு கவலையா இருக்குடா விஷ்வா!” அவர் கதற, அவர் அழுவது பொறுக்காது வேகமாய் சென்று தாயை தோளோடு அணைத்துக் கொண்டான், தனையன்.

சற்று நேரம் தனது மனபாரம் தீரும் மட்டும் அவரை அழுக விட்டவன், “ம்மா போதும்மா! அழுதது போதும். உடம்புக்கு எதாவது முடியாம வந்திட போகுது! அவன் அதட்ட, விலுக்கென நிமிர்ந்து அவன் முகம் கண்டவர், “ஆமா… இந்த உடம்புல உசுரு இருந்து என்ன பிரயோஜனம்! எல்லாத்தையும் பார்த்துட்டு நான் நல்லா தானே இருக்கேன்!” என்றார் மனம் வெதும்பி.


“அம்மா” பதறியபடி வேகமாய் தாயின் வாயை கைக்கொண்டு மூடினான், விஷ்வ பிரகாஷ். “என்னமா இப்படி சொல்லிட்டீங்க! நீங்க இல்லனா நான் அநாதையாகி போயிடுவேனேம்மா!” குரல் உடைய, தாயின் கரம் பற்றி கலங்கினான், அந்த கம்பீரமான ஆண்மகன்.

“எனக்குன்னு உங்களுக்கு அடுத்து யாருமா இருக்கா!” என உணர்ச்சி வேகத்தில் தன்னையும் அறியாது அவன் புலம்ப, கேட்டவரின் மனதில் பெரும் பாரம் ஏறிக் கொண்டது. “அதை தான் நானும் சொல்றேன் விஷ்வா! இதோ இப்ப நீ இங்க தனியா வந்து இருக்கிறதுளையே எனக்கு அது தெரியாதுன்னு நெனச்சியா!” எனவும் அவனது கண்ணில் அழுகை மறைந்து அதிர்ச்சி குடி கொள்ள, “ம்மா!” என்றான் திணறலாய்.


“என் மகன் எப்படி வாழ்றான் என்கிறதை கூட புரிஞ்சிக்க முடியாதவன்னு நெனச்சியா உன் அம்மாவை!” தாயின் குரல் கூர்மையாய் ஒலிக்க, கண்களில் நீர் திரள, வேகமாய் அன்னையின் மடியில் அடைக்கலம் புகுந்தான், அந்த வளர்ந்த குழந்தை.

மெதுவாய், ஆதரவாய், ஆதூரமாய் அவன் தலை வருட, பல நாள் கழித்து கிடைத்த தாயின் அருகாமையில், அவரின் புடவை முந்தானையை பற்றியபடி, தாயின் வாசத்தை நுரையீரலில் சேமித்துக் கொண்டு கண் மூடினான் மகன்.

அறையில் சிதறிய பொருட்களுக்கு நடுவே அமர்ந்து தொலை வானத்தை வெறித்தபடி இருந்தாள், அபி ரக்ஷிதா.

மெதுவாய் தனது கரத்தை தூக்கி பார்க்க, அதில் தன்னவனின் ரத்தம் காய்ந்து கிடக்க, திடீரென்று எதுவோ தோன்ற படக்கென எழுந்தவள், ஈர துணி கொண்டு கரத்தை துடைத்தாள். துடைத்து விட்டு கரத்தை பார்க்க, ஏனோ அவளுக்கு அவனது ரத்தக்கறை இன்னும் தனது கரங்களில் படிந்திருப்பது போல ஒரு பிரம்மை. மறுபடி மறுபடி அதனை துடைத்தவளுக்கு என்ன முயன்றும் அது இன்னும் இருப்பது போல ஒரு எண்ணம். விலுக்கென எழுந்தவள், வேக வேகமாய் அறையை துளாவினாள். அவளது பார்வைக்கு அவள் தேடியது தட்டுப்பட அந்த கூரிய கண்ணாடி துண்டை எடுத்து, தனது உள்ளங்கையை வெட்டிக் கொண்டாள், அபி.


கைகளில் இருந்து குருதி வடிய, அதனை கண்டு திருப்தி கொண்டவள், தளர்ந்து போய் படுக்கையில் அமர்ந்துக் கொண்டாள். அவளது கரத்தில் இருந்து ரத்தம் சொட்டு சொட்டாய் வடிந்து தரையில் சிந்த, அதில் அவ்வளவு நேரம் புயலில் சிக்கிய தோணி போல இருந்த அவள் உள்ளம் பேரமைதி கொண்டது.

இது எதையும் அறியாது தாயின் மடியில், அன்னையின் கதகதப்பு தந்த அமைதியில் தனது மனக் கிலேசம் அனைத்தும் தூர ஓடி ஒளிந்தது போல தோன்ற, வெகு நாட்கள் கழித்து கிடைத்த அவரின் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்த வண்ணம் தூங்கி போனான், விஷ்வா.


மகனின் சிகையை வருடியவரின் கண்கள் வானத்து வெண்ணிலவை வெறிக்க, அவருள்ளும் பல பல நினைவுகள். துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணில் பொங்கும் கண்ணீருக்கு அணையிட முயன்று தோற்று போனார், வித்யா.

அவரின் விழிநீர் விஷ்வாவின் மீது பட்டுவிட, லேசாய் அசைந்தான் தனையன். பதறி போனவர் வேகமாய் விழிநீரை உள்ளிழுத்துக் கொண்டு, மகனது முகத்தையே வாஞ்சையாய் பார்த்தார்.

கண்ணோரம் விழுந்த சுருக்கங்களும், கண்ணை சுற்றி இருந்த கருவளையமும் அவனது நிற்காத ஓட்டத்தை சத்தமின்றி பறை சாத்த, வெளியில் இருந்து பார்ப்பவருக்கு அது அவனது தொழில் மீதான ஈடுபாடு, அதற்கான ஓட்டம் என்று தான் தோன்றும். ஆனால் மகனை நன்கு அறிந்து வைத்திருந்த தாய்க்கு மட்டும் தான் தெரியும் மகனின் உள்ளக்கிடக்கை.

மகன் மனம் அறிந்தவரால், அவனின் மனம் அறிய தவறியதை எண்ணி, எண்ணி உள்ளுக்குள் குமைந்து தான் போனார். வானத்து வெண்ணிலவு அவரை பார்த்து கண் சிமிட்ட, மனமோ தனது மன்னவனை எண்ணி வேதனை கொண்டது. “இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் நீங்க முன்னாடியே போய்டீங்களா?” மறைந்த கணவனை நினைத்து கேள்வி எழுப்பியவர், “ஆனா என்னைய மட்டும் இதெல்லாம் பார்க்க விட்டுட்டு தனியா போய்டீங்களே! இதெல்லாம் பார்க்கணும் என்று தான் எனக்கு எழுதி வச்சிருக்கோ! இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோன்னு எனக்கு தெரியலையே!” என அவரின் மனம் அரற்ற, அது உண்மை தான் என்பது போல, பிற்காலத்தில் அவர் கனவிலும் நினைத்து பார்க்காத பல நிகழ்வுகள் அவர் கண் முன்னே நிகழ போவதையும், அதை தானும் எதுவும் செய்ய முடியாது வேடிக்கை மட்டும் பார்க்க போவதை அறியாது தான் போனார். அதில் அவர் இன்னும் இன்னும் உடைந்து போக போவதையும் தெரியாது அமர்ந்திருந்தார், வித்யா.
கடவுளின் கைகளில் அனைவரின் வாழ்க்கையும் நூல் பாவையாய் சிக்கி இருக்க, யாரால் தான் அவனை மீறி என்ன செய்துவிட முடியும்?


“என்னங்க! என்னால அவன் கஷ்டப்படுவதை பார்க்க முடியலை! எல்லாரும் நல்ல இருக்கணும்னு நினைக்கிற நம்ம மகனுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே! அவனுக்கு நீங்க தான் எப்பவும் துணையாய் இருக்கணும்!” மறைந்து போய் காற்றோடு காற்றாய் கலந்திருந்த தனது கணவனிடம் வேண்டி கொண்டார் அந்த பாசமிகு தாய்.


வானில் அருவமாய் இருந்த சுந்தரும், தனது மகனும் மனைவியும் தானின்றி அடையும் துயர் கண்டு கலங்கி இருப்பார் போலும். நடக்க போவதை எண்ணி அவராலும் எதுவும் செய்ய முடியாது என தெரிந்து மனைவிக்கு இணையாய் அவரும் கலங்கி தான் போனார். தான் அவர்கள் உடன் இருக்க முடியா நிலையை எண்ணி வருந்தினார்.

காலை விடிவெள்ளி யாரையும் பற்றிய கவலை இன்றி, தனது கடமையை செவ்வென செய்ய கிழக்கு திசையில் உதயமாக, பறவைகள் தனது “கீச் கீச்” ஒலியால் ஆதவனை வரவேற்றுக் கொண்டிருந்த நேரம் அது. திரை சீலை மெதுவே காற்றுக்கு விலக, அந்த இடைவெளியில் மெல்ல மெல்ல உதயவன், தனது ஒளி கீற்றுகளை கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான்.

இரவு அமர்ந்த இடத்திலேயே அழுதபடியே தன்னையும் அறியாது பிருந்தா அங்கேயே உறங்கி போய் இருக்க, காலை இளம் வெயில் முகத்தில் படவும், மெல்ல மெல்ல கண் மலர்த்தினாள், பாவை. கண்கள் இரண்டும் சரியான உறக்கம் இன்றியும், அழுததாலும், நெருப்பாய் தகிக்க, தலை வேறு பாரமாய் இருந்தது. மெல்ல சுயநினைவுக்கு வந்த பிருந்தா, மெதுவாய் விழிகளை திறக்க முற்பட, காந்திய கண்கள் திறக்கவிடாது அவளை இம்சித்தது. கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டவள், மறுமுறை கண்களை சிரமமப்பட்டு திறந்து மெதுவாய் விழிகளை சுழல விட்டாள்.

முதலில் சூழல் புரியவே நேரமெடுத்தது பெண்ணுக்கு. நேரம் பார்த்து பதறி போனவள், வேகமாய் எழ முற்பட, ராத்திரி முழுக்க ஒரே இடத்தில் இருந்ததால் கால்கள் அவளது கட்டளையை ஏற்க மறுத்தது. முயன்று சமாளித்து, எழுந்து நிற்க, முடியாது தடுமாறினாள்.

தன்னை சுத்தப்படுத்தி கொண்டு குளித்து முடித்தவள், துரிதமாய் குழந்தைகளின் அறையை எட்டிப் பார்க்க, “தன்யா ராகுல் நேரமாச்சு எழுந்திருங்க! ஸ்கூல் போகணும்!” என குரல் எழுப்பியபடியே திரைசீலையை விலக்க, காலை சூரியனின் ஒளிக்கீற்று முகத்தில் படவும், அசைந்தாள் தன்யா. தலையணையை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டவள், “அம்மா முதல அந்த ஸ்க்ரீனை க்ளோஸ் பண்ணுங்க!” கண்களையே திறவாமல் க்ரிச்சிட, அவளை சட்டை செய்யாது, குளியல் அறையில் ஹீட்டரை ஆன் செய்து வந்தவள், “ராகுல்! ராகுல் கண்ணா எழுந்திருங்க! ஸ்கூலுக்கு நேரமாச்சு பாருங்க!” மகனை எழுப்ப முனைய, தாயின் குரலில் மெதுவாய் கண்களை பிரித்த ராகுல்,“குட்மார்னிங் அம்மா!” தாயை கண்டு புன்னகை புரிய, தனது இன்னல்கள் அனைத்தும் மகனின் புன்னைகையில் மறைந்தது போன்ற உணர்வு பிருந்தாவினுள்.


மகனை நெருங்கியவள், அவனது நுதலில் முத்தமிட்டு, “குட் மார்னிங்டா கண்ணா!” தானும் வாழ்த்த, தாயை அணைத்துக் கொண்டான், தனையன். இவர்கள் இருவரையும் கண்களில் வழியும் பொறாமையோடு பார்த்திருந்தாள், தன்யா.


சாரல் அடிக்கும்…