Page 1 of 1

சாரல் 29

Posted: Mon Jan 09, 2023 6:50 pm
by Sutheeksha eswar
ஹாய் நட்பூஸ்,

சாரல் 29 பதிவு செய்துட்டேன். இந்த முறையும் பதிவு தாமதம் ஆகிடுச்சு. நெறைய பேர் கதை படிக்குறீங்க. ஆனா அதுக்கான கமெண்ட்ஸ் வரது இல்லையே நட்பூஸ். கதை எங்கேயாவது போர் அடிக்குதா? இல்ல உங்களுக்கு notification எதுவும் வரது இல்லையா?

இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்து எழுத ஆரம்பித்த கதை. நடுவுல எனக்கு பல தடங்கல்கள் காரணாம இந்த கதையை தொடர முடியாம போச்சு.

எதோ ஒருவித அழுத்தம், என்னால கதையில் கவனம் செலுத்த முடியலை. காட்சிகளை சரியா கோர்க்க முடியலை. முன்னாடி நான் பிளான் செய்து வைத்திருந்ததே வேற. இப்ப எனக்கு எப்படி தோணுதோ அப்படியே தான் எழுதிகிட்டு வரேன். அதாவது சில பல மாற்றங்கள் தான் செய்திருக்கேன்.

இந்த கதையை சரியா முடிக்கணுமே, ஒழுங்கா ud கொடுக்க முடியலையே எனும் அழுத்தம் என்னை இந்த கதையை எழுதவிடாம செய்யுது. இதனால் என் மேல் உங்களுக்கு வருத்தம் கூட இருக்கலாம்.

கொஞ்சம் நான் இந்த கதையில் இருந்து பிரேக் எடுத்துக்கவா மக்களே? கொஞ்சம் கணம் இல்லாத கதை எழுதினா படிப்பீங்களா நட்பூஸ். உங்களது கருத்தை என்னிடம் தெரியப்படுத்துங்க நண்பர்களே.

இல்லை என்றால், நான் மெதுவாக தான் பதிவுகள் தர முடியும். இத்தனை வருஷம் கழிச்சு, ஏனோ தானோ என கதையை என்னால கொண்டு போக முடியாது. அதுனால தான் சொல்றேன். எதையும் திணிக்க எனக்கு விருப்பமும் இல்லை. போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்து ஆதரவு தந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

இதோட flashback முடியுது. சில விஷயங்களை கதையின் போக்குல அங்கங்கு பாக்கலாம். ஒரேடியா பிளாஷ்பாக் எழுத எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. அது கதையை இழுக்கிற மாதிரியான உணர்வு எனக்கு. தொடர்ந்து உங்க ஆதரவை தருவீங்களா மக்களே.


சாரல் 29

நேரம் நடுசாமத்தை தொடவிருந்தது. கூடத்தில் இருந்த உணவு மேஜையில், மகனுக்காக காத்திருந்தபடியே உறக்கத்தை தழுவியிருந்தார், வித்யா. திடீரென முழித்த சுந்தர், அருகில் மனையாளை காணாது அறையை விட்டு வெளியே வந்தவர், மனைவி கூடத்தில் அமர்ந்தபடியே உறங்குவதை கண்டு நேரத்தை பார்த்தார். அப்போது தான் அவரருகில் இரவு உணவு அப்படியே இருப்பது கண்டு புருவம் சுருக்கி யோசனையானார். “இந்த பையன் இன்னுமா வரல?” தனக்குள்ளே கேட்டுக் கொள்ள, அந்நேரம் வெளி கேட் திறக்கும் சத்தம் கேட்டவும், வாசலை பார்த்தார். அங்கே விஷ்வா தளர்ந்த நடையோடு வீட்டினுள் வந்தவன், கதவை பூட்டி விட்டு திரும்ப, நிச்சயமாய் தந்தையை அந்நேரம் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவனது திகைத்த பார்வையே சொன்னது.

“இது தான் நீ வீட்டுக்கு வர நேரமா விஷ்வா?” தந்தை கேள்வி எழுப்ப, பதில் சொல்லாது தலை குனிந்தான், மகன். “கேட்கிறேன்ல!” குரலை உயர்த்த, என்ன சொல்வான் அவன்? என்னை துரத்தும் அவளின் நினைவுகளை கண்டு அஞ்சி ஒளிகிறேன் என்றா?

தந்தையின் அதட்டலில், நிமிர்ந்து அவர் முகம் காண, மகனின் வதனத்தில் இருந்து என்ன கண்டாரோ? அவரது விழிகள் தனயனின் பார்வையை எதிர்கொள்ள முடியாது தாழ்ந்தது. கணவரின் சத்தத்தில் விழித்துக் கொண்ட வித்யா, இருவரின் முகத்தையும் கண்டவர், “என்னப்பா இப்ப தான் வரியா? கை கால் கழுவிட்டு வா! அம்மா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!” நிலைமையை சுமூகம் ஆக்கும் பொருட்டு கூற, “இல்லை வேண்டாமா பசிக்கலை!” குரலில் ஏகத்துக்கும் சோர்வும் வருத்தமும் மிதமிஞ்சி இருக்க, தாயின் முகம் பார்க்காது சொல்லிவிட்டு படியேறினான், விஷ்வா.


மகனின் நிலைக்கண்டு தாய்க்கு கண்ணீர் அரும்ப, கணவனை கலங்கும் விழிகளோடு ஏறிட்டார், வித்யா. செல்லும் மகனை பார்த்த வண்ணமே, “நீ சாப்பாடு சூடு பண்ணி வை! நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்!” என்றவர் வேகமாய் படியேற துவங்கினார்.

மகனது அறைவாயில் வரை வந்து தயக்கம் கொண்டு அங்கேயே தேங்கி நின்றவர், சில நொடி தயக்கத்திற்கு பின், கதவை தட்ட, “அம்மா சாப்பாடு வேண்டாம்மா!” உள்ளிருந்து குரல் மட்டும் கேட்க, தயக்கம் துறந்து கதவை திறந்தார். கதவு திறக்கும் சத்தத்தில், கைகளால் முகத்தைமூடி படுத்திருந்த விஷ்வா, கைகளை விலக்கி பார்க்க, நிச்சயம் தந்தையை எதிர்ப்பார்க்கவில்லை. வேகமாய் எழுந்து அமர்ந்தவன், தந்தையின் முகம் காண மறுத்து, வெளியே தனது பார்வையை செலுத்த, மகனின் செய்கை வருத்தம் ஏற்படுத்தினாலும், அதனை வெளிக்காட்டாது, “சாப்பிட வா!” என அழைக்க, “பசி..!” பசிக்கவில்லை என சொல்ல வந்தவன், அவரின் பார்வையில், அமைதியாய் ஓய்வறைக்குள் புகுந்துக் கொண்டான். அவன் வரும் வரை காத்திருந்தவர் அவன் வந்ததும், கீழே செல்ல அமைதியாய் வந்தவன், தட்டில் என்ன இருக்கிறது என்று கூட பாராது பேருக்கு அனைத்தையும் விழுங்கிவிட்டு, அறைக்குள் முடங்கிக்கொண்டான்.

அவனது நிலைக்கண்டு பெற்றவர் இருவருக்கும் நெஞ்சியில் பாரமேறிதான் போனது. தளும்பும் விழிகளை துடைத்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே மறைந்தார், வித்யா. படுக்கையில் படுத்த சுந்தருக்கு, மகனின் ஒட்டாத நிலை தளர செய்ய, முதல் முறை தவறு செய்து விட்டோமோ என மனம் கிடந்து அடித்துக் கொண்டது. எங்கே தவறி போனோம்? அவருள்ளே கேட்டுக் கொள்ள அதற்கு பதில் தான் கிடைக்கவில்லை.

ஓயாத யோசனைகள் அவரை அல்லலுற செய்ய, சிந்திக்க பிடிக்காதவராய் கண்களை மூடிக் கொண்டார், சுந்தர். மூடிய விழிகளுள் பல விஷயங்கள் அணிவகுக்க பட்டென கண்களை திறந்தவரின், அன்றைய தூக்கம் பறிபோனது. பாவம் அவரின் தூக்கம் இனிமேல் தொலைந்து போகபோவது அறியாது!


மறுநாள் எழுந்தவர், மகனிடம் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டு அவனது அறைக்கு செல்ல, வெற்று அறையே அவரை வரவேற்றது. இவ்வளவு சீக்கிரம் எங்க போயிருப்பான்? மகனை தேடி கண்களை சுழல விட்டவர் வெளியேற எத்தனித்த சமையம், அவனது படுக்கையில் படபடத்துக் கொண்டிருந்த அந்த காகிதம் அவரின் கருத்தை கவர்ந்தது.

ஏதோவொரு உந்துதலில் சென்றவர், அதனை எடுத்து பார்க்க, பார்த்தவரின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்துக் கொண்டது. “பிந்துமா விஷுத்தான்” என பிருந்தா எழுதிய காகிதம் அவரை குற்றம் சுமத்துவது போன்றிருக்க, கண்கள் உணர்த்திய செய்தியை நம்ப மறுத்து மனம் சண்டித்தனம் செய்தது. அடுத்த அதிர்ச்சியாய் சரண்யா இருவரையும் எடுத்த புகைப்படங்களில் சில
அவரை கண்டு ஏளனம் செய்வது போல இருந்தது. கண்கள் கலங்கி காட்சிகளை மறைக்க, மகனின் மனம் அறிய தவறியதற்காக மனம் அவரையே குற்றம் சாட்டியது.

*****************************************

வாய்க்கால் கரையோரம் பாய்ந்து வரும் நீரை பார்த்தபடி நின்றிருந்தார், சுந்தர். அவரது மனதும் ஆழி போலவே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி அவரின் விழிகள் வழியையே தொட்டு தொட்டு மீண்டது. அவர் வந்து கிட்டத்தட்ட அரைமணி நேரத்தை நெருங்கியிருக்க, மேலும் பத்து நிமிடங்கள் கடந்த பின்னே வந்தார், முத்துவேல்.

“என்னடா மாப்பிள்ளை போனை பண்ணி வர சொன்ன! எதுவும் முக்கியமான விஷயமாடா? வீட்டுல பேசாம இங்க வர சொல்லியிருக்க?” அடுக்கடுக்காய் கேள்விகள் தொடுத்தார், முத்துவேல். அவரின் சகஜமான பேச்சில் வார்த்தை வர மறுத்தது, சுந்தருக்கு. தனது பார்வையை அவர் மீது செலுத்தியவர் நாவோ அவரிடம் ஏதோ சொல்ல துடித்தது. பிள்ளைகள் இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துணிவை திரட்டிக் கொண்டு, “மாப்பிள்ளை நான்… நான் அதுவந்து!” அவர் திணற, முத்துவேலின் கண்கள் கூர்மை பெற்றது.

நண்பன் முகம் காண மறுத்து, “மாப்பிள்ளை இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்திடலாம் மாப்பிள்ளை….” ஒருவழியாய் அவர் சொல்ல, எதிரே எந்த அரவமும் இல்லாது போகவும், நிமிர்ந்து நண்பனின் முகம் நோக்கினார், சுந்தர். “அது அது வந்து…” பிருந்தாவும் விஷ்வாவை காதலித்தாள் என்பதை பெற்றவனிடம் எப்படி சொல்வது என தவித்தவர், அந்த நேரமும் தங்கை மகளே ஆனாலும் அவள் பெயர் வெளிபடக்கூடாது என்றே நினைத்தார், சுந்தர்.


நண்பனின் சலனமற்ற பார்வை உள்ளுக்குள் எதோ செய்ய, “அது நம்ம பிருந்தாவும், விஷ்வாவும் ஒருத்தர்கு ஒருத்தர் விரும்புறாங்கடா… அந்த பிள்ளை மனசுல என்ன இருக்குனு தெரியாம நம்ம பாட்டுக்கு ஏதேதோ முடிவு செய்துட்டோம்! பாவம் ஆசைபட்டவங்களை பிரிச்ச பாவம் வேண்டாம்டா!” தட்டுதடுமாறி ஒருவழியாய் அவர் சொல்லி முடிக்க, அதே பார்வை தான் முத்துவேலிடம்.


நண்பனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பக்குவமாய் பேச வேண்டும் என பலமுறை மனதினுள் நினைத்தபடியே இருந்தார், சுந்தர். தனக்கே இந்த விஷயம் இவ்வளவு அதிர்ச்சி தரும்போது, தங்கையின் கணவன் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவன், மெதுவாய் விசயத்தை சொன்னால், முதலில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பின்னர் இருவரின் மனதையும் புரிந்துக் கொள்வான் என்றே சுந்தர் நினைத்திருந்தார்.

முத்துவேலின் அசையாத நிலை கண்டு மனதில் பயம் உதிக்க, “டேய்!” என அழைக்க, “இப்ப என்ன சொல்ல வர?” அவர் கேட்க, “அது நம்ம பிருந்தாவும்!” என ஆரம்பிக்க, “என்ன? பிருந்தாவும் விஷ்வாவும் காதலிக்குறாங்க! இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்திட்டு இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னா?” முத்துவேல் கேட்க, “ஆமா!” என்ற சுந்தருக்கு அப்போது தான் நண்பனின் குரல் உரைத்தது.


நண்பனின் குரல் பேதத்தை அப்போது தான் உணர்ந்தவராய், நிமிர்ந்து பார்க்க, மனம் அதனை நம்ப மறுக்க, மூளையோ நீ உணர்ந்தது சரிதான் என செய்தி அனுப்பியது.


“அப்… அப்போ உனக்கு முன்…!” முடிக்க முடியாது கேட்க, “தெரியும்!” ஒற்றை வரியில் எதிரில் இருப்பவரின் உயிர் கொன்றார், முத்துவேல். செவியில் விழுந்த செய்தியை இதயம் நம்ப மறுக்க, கண்களில் அதிர்வை அப்பட்டமாய் தேக்கியபடியே தங்கை கணவனை வெறித்தார், சுந்தர்.

“ஏண்டா!” காற்றாகிப் போன குரலில் சுந்தர் கேட்க, பதில் சொல்ல பிடிக்காது முகத்தை திருப்பிக்கொண்டார், மனிதர். தன்னை மீட்டுக் கொண்டவர், “என்ன வேணா இருக்கட்டும்டா! பாவம் ஆசை பட்டவங்களை பிரிக்க வேண்டாம்டா!” நண்பரிடம் தனது பிள்ளைகளுக்காக இறைஞ்ச, மனம் இளகாது நின்றார், முத்துவேல்.


“கொஞ்ச நாள் அதெல்லாம் கஷ்டமா தான் இருக்கும்! கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் புருஷன், குடும்பம் குழந்தைங்கன்னு வந்த அப்புறம் எல்லாத்தையும் மறந்து போய்டுவா!” அசட்டையாய் பதிலிறுத்தார், முத்துவேல்.

தங்கை மகளின் குணம் தெரிந்தவராய், “டேய் நீ என்ன நம்ம பாப்பாவை அவ்வளவு லேசாவா நினைச்சிருக்க?” அவர் குரலில் ஏகத்திற்கும் பரிதவிப்பு நிறைந்திருக்க, எதிரில் இருப்பவரின் குரலில் நிரம்பியிருந்த பரிதவிப்பு வேறு விதமாய் அவரை சென்றைடைய, அதில் “என் மகளை என்னை விட இவனுக்கு நன்றாக தெரியுமா?” என அவரின் ‘தான்' எனும் அகம் விழித்துக் கொண்டது. பாசம் கொண்ட மனதிற்கு தான் உறவு, நட்பு, உற்றார், உறவினர் என தெரியும். தனக்கு வேண்டியவர்களே தன்னை காயப்படுத்தினாலும், தனது சுயமிழந்து திரும்ப திரும்ப அவர்களிடமே சென்று நிற்கும். அதே ‘தான்’ எனும் அகந்தையை அணிந்துக் கொண்டிருக்கும் மனதிற்கு உறவுகளோ, அதன் முக்கியத்துவமோ எதுவும் தெரியாது. அதற்கு ‘தான்’ எனும் கர்வமும், செருக்கும் தான் பிரதானமாக இருக்கும். கர்வத்தில் அது தன்னை மட்டும் அழித்துக் கொள்ளாது, தன்னை சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும், சந்தோசத்தையும், ஏன் சில நேரம் அவர்களேயே கூட தனது அகந்தைக்கு பலி கொடுத்துவிடும் என்பதை அந்த நேரம் முத்துவேல் உணராது தான் போனார்.

நண்பனின் இளகாத தோற்றம் கண்டு தானே இறங்கி வந்தார், சுந்தர். “வேண்டாம்டா! இது பிள்ளைங்களோட வாழ்க்கை. நம்ம இதுக்காக அவங்க வாழ்க்கையை அழிக்கிற உரிமை நமக்கில்லை. இதை என் மகனுக்காக மட்டும் நான் கேட்கலை. என்னோட மருமக பிருந்தாவுக்காகவும் தான் கேட்கிறேன் தயவு செஞ்சு இந்த ஏற்பாட்டை நிறுத்திடுடா! உனக்கு கோடி புண்ணியமா போகும்!” கிட்டதட்ட இறைஞ்சினார், சுந்தர்.


அமைதியாகவே நின்ற முத்துவேல், நெடுநேரம் கழித்து, “சரி!” எனவும் சந்தோசமடைந்த சுந்தர், நண்பனை பார்க்க, “சரி நீ சொல்ற மாதிரியே இந்த கல்யாண ஏற்பாட்டை நான் நிறுத்திடுறேன்!” என்றவுடன் கோடி பிரகாசம் சுந்தரின் வதனத்தில். “நிறுத்திட்டு… விஷ்வா பிருந்தாவுக்கே கல்யாண ஏற்பாடு நான் பண்ணுறேன்! ஆனா…” கேள்வியாய் நிறுத்த,

“ஆனா….” கேள்வியாக நண்பனின் முகத்தை பார்த்தார், சுந்தர். “ஆனா இவன் இந்த விவசாயம், வயலு, தோப்பு, துறவு, அப்புறம் பேக்டரி ஆரம்பிக்க போறேன், மக்களுக்கு வேலை கொடுக்க போறேன்னு பினாத்திக்கிட்டு
இருக்கானே அதெல்லாம் விட்டுட்டு, எதாவது ஒரு வேலையில உட்காரணும். அவனை ஒழுங்கா படிச்சு, நாலு அஞ்சு வருஷத்துல… ஒரு கவர்ன்மென்ட் வேலையில உட்கார சொல்லு! முடியுமா உன்னால?” நண்பனிடம் எகத்தாளமாய் கேட்டார், முத்துவேல்.


எப்படி முடியும் அவரால்? அவனது சிறுவயது லட்சியம், கனவு அனைத்தும் இது அல்லவா? இதற்காக தானே அவன் இத்தனை கஷ்டங்கள் படுவது. அவனது உழைப்பின் அருமை அறிந்தவர் அவரல்லவா? அதனை விட்டு வா என்று எப்படி அவரால் சொல்ல முடியும்? பிருந்தாவுடனான அவனது காதல், அவனின் உயிர் என்றால், விவசாயம் அவனது உயிர்ப்பு அல்லவா? காதலுக்காக அவனது உயிர்ப்பை தொலைத்து எப்படி அவன் நடமாடுவான்? இப்போது காதல் கை கூடினாலும், அந்த மகிழ்ச்சி சிறிது நாட்களுக்கு தானே! பின்னர் இதுவே அவர்களின் வாழ்வில் புயல் வீச காரணமாகி விடாதா? அவர்களின் காதல் அந்த புயலில் காணாமல் போய்விடாதா? என பல பல சிந்தனைகள் சுந்தருக்கு சுழன்று அடித்தது.

“ஒன்னும் அவசரமில்லை மாப்பிள்ளை. நீ உன் மகன்கிட்ட பேசு! பேசிட்டு நாளைக்கு காலையில முடிவை சொல்லு!” என்றவாறு சென்றுவிட்டார், முத்துவேல். நண்பனின் வார்த்தைகள் தந்த தாக்கத்தில் இருந்து மீளாது, அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தார், சுந்தர். முடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போல எப்போது எப்படி வீட்டை அடைந்தார், என்றே தெரியவில்லை. அறைக்குள் முடங்கியவர் தான். என்றும் இல்லாத நாளாய் அறைக்குள் முடங்கிய கணவனை கண்டு சந்தேகம் கொண்டு வித்யா எழுப்ப, சோர்ந்து வாடி தெரிந்த முகம் கண்டு பதறி போனார், அவர் மனைவி. எவ்வளவு கேட்டும் அவர் பதில் சொல்ல மறுக்க, புலம்பியபடி, வெளியே சென்றார், வித்யா.


அன்றைய இரவு மகனுக்காக கூடத்தில் காத்திருந்த கணவனை ஆச்சரியமாக பார்த்தார், வித்யா. “தூக்கம் வரல. நீ முழிச்சுக்கிட்டு உடம்பை கெடுத்துக்காத. நான் தம்பி வந்தா சாப்பாடு போடுறேன்!” என்று மனையாளை விரட்டினார். அன்றைய தினமும் விஷ்வா தாமதமாக வர, தாய்க்கு பதிலாக காத்திருக்கும் தந்தையை கண்டு ஆச்சரியம் அடைந்தவன், பின்னர் எதையும் வெளிகாட்டவில்லை. அமைதியாக அவனுக்கு பரிமாறியவர், அவன் உண்டு முடிக்கும் தருவாயில், “உன்கிட்ட பேசணும் தம்பி கொஞ்சம் மேல வா!” அழைப்பு விடுத்துவிட்டு சென்றுவிட்டார், தந்தை.

அவனுக்கும் தந்தை தன்னிடம் எதோ பேச காத்திருப்பது புரிந்து தானிருக்க, அமைதியாய் பின்தொடர்ந்தான். அவன் சென்றபோது கண்டது, தூரத்து விண்மீனை வெறித்தபடி இருந்த தந்தையை தான். அரவம் உணர்ந்து மகன் புறம் திரும்பியவரின் வதனத்தில் சொல்லாவோண துயரம் மண்டிக் கிடந்தது. எத்தனை கஷ்டங்கள் வந்த போதும் கம்பீரமாக நின்ற தந்தையை இப்படி காண சகிக்கவில்லை, விஷ்வாவுக்கு. தனது கோபம் வருத்தம் அனைத்தும் மறந்தவனாய், “அப்பா!” தவிப்புடன் தந்தையை அழைக்க, “நீ இந்த விவசாயம் எல்லாத்தையும் விட்டுட்டு உன் தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு வேலை தேடிக்கயேன்பா!” மகனின் முகம் கண்டால், தனது உறுதி அனைத்தும் கரைந்துவிடும் என்று அவன் முகம் காண முடியாது, சட்டென்று சொல்லிவிட்டார், சுந்தர்.

முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தனது காதில் விழுந்தது நிஜம் தானாவென நம்பமுடியாது நின்றான். தனக்கு எப்போதும், எதிலும், தனது அனைத்து முடிவிலும் உறுதுணையாக நின்ற தந்தையா இப்படி சொல்வது? என அதிர்ந்து நின்றான், விஷ்வா.

“வேண்டாம் விஷ்வா! இதுயெல்லாம் என்னோடவே போகட்டும்! நீயாவது உன் தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல வேலையில உட்காரு!” மனதை கல்லாக்கிக் கொண்டு சொன்னாலும், என்ன முயன்றும் அவரின் மனதின் தவிப்பு அவரின் குரலில் வெளிப்பட்டுவிட்டது.

தந்தையிடம் விரைந்தவன், அவரின் தோளை தொட, கலங்கி தவித் த தந்தையை கண்டு உடைந்து போனான், விஷ்வா. மேலோட்டமாய், அந்த நேரத்திலும் நண்பனை விட்டுக் கொடுக்காது அவர் சொல்ல, கேட்டிருந்த விஷ்வாவின் உடலோ ஒருநொடி இறுகியது. எதையோ சிந்தித்தவன், “வேண்டம்ப்பா பிந்துகுட்டி நல்லா இருக்கட்டும்!” தந்தையின் ஆசை உணர்ந்து, தனது காதலை தூக்கி எறிந்தான், விஷ்வா. மகனது பதிலை கேட்டு தந்தையானவரின் மனம் பூரிக்க, வேகமாய் மகனை இறுக்கி அணைத்துக் கொண்டார், மனிதர். அவனின் பதில், பெற்றவர் மனதை குளிர்வித்தாலும், அவனது ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே எனும் வருத்தம் மனதின் ஓரம் இருக்க தான் செய்தது.

தன்னை அணைத்திருந்த தந்தையின் கண்ணீர் தனது தோள்களில் விழுவதை உணர்ந்தவன், மனமோ ஊமையாய் கதறியது. இருந்தும் தந்தைக்காக என நினைத்தவன் மனமோ உறுதியாய் ஒரு முடிவெடுத்தது.
கண்களை துடைத்துக் கொண்டவன், ஒருமுறை தந்தையை இறுக்கி அணைத்து கீழே சென்றான். மகன் சென்றதும், கண்களை துடைத்துக் கொண்டவர் மனமோ நண்பன் சொன்ன, “உன் மகனும் உன்னைய மாதிரியே பிழைக்க தெரியாதவனா தான் தோட்டம், துறவு, விவசாயம் வயல்ன்னு இருக்கான்!” என்ற வார்த்தைகளிலே உழன்றது.
அந்த நேரத்திலும், நல்லவேளை மகன் மாமனின் எண்ணத்தை அறியாது போனானே! என ஒருபுறம் நிம்மதி அடைந்தது. மகனிடம் இதெல்லாம் மறைத்தவர் மனதிலோ இத்தனை நாட்கள் நண்பனின் மனதில் தங்களை பற்றிய எண்ணமறிந்து விரக்தியாய் எண்ணிக் கொண்டது.


சாரல் அடிக்கும்…