Page 1 of 1

தலையணை மந்திரங்கள்

Posted: Sun Oct 11, 2020 9:21 pm
by yaazhistories
#தலையணை_மந்திரங்கள்

எத்தனை முறைகளடி
தலையணை மந்திரத்தின்
உண்மை நிலையினை
உன்னிடம் சொல்வது...

முகத்தின் சுருக்கம்
முதுமையினை சொல்லிவிட
துள்ளி குதித்திடும்
நெஞ்சத்தின் விளையாட்டில்
மூச்சிரைக்க கூறுகின்ற
மாயவித்தைகள் போதுமடி கண்ணம்மா...

யாருக்கும் தெரியாமல்
இரவுகளின் நீட்சியிலே
மௌன வார்த்தைகளில்
கொஞ்சியது போதவில்லையோ?

வரிகள் நிரம்பாத
வறண்ட உதடுகளில்
உன்மீது எழுதிட்ட
கவிதைகளும் கதைகளும்
அன்பின் சாட்சிகளாய்...

நேசவிதை தூவிய
நேத்திரத்தின் மொழிகளிலே
நிசப்தமும் உணர்ந்ததடி
நான் கொண்ட காதலதை...

முகம் புதைத்து
முகவரிகள் தேடிசெல்ல
முடியாத இரவுகளாய்
எத்தனை நாட்களடி கண்ணம்மா...

போர்வைக்குள் போராட்டமொன்று
புயலுக்கு பின் அமைதிபோல
சத்தமின்றி நடுந்திடுதே
சித்திரமும் தோன்றிடவே...

உனக்கு மட்டும் கேட்க
மெல்லிய குரலில்
ரகசியங்கள் சொல்லி
நீரில் நனைத்து
நிஜங்களை உணர்ந்திட்ட
நிமிடங்களும் வருடங்களாய்
தொடர்ந்தும் வருகிறதே....

இத்தனை வருடங்கள்
இருளினில் தந்தசென்ற
இனிமையான நொடிகளின்
இறந்தகால நிகழ்வுகளை
குறுநகையில் கடந்துபோக
குழந்தையாய் நீயும் நானும்....

விலக்குகள் இல்லாமல்
விடியும்வரை கட்டிபிடித்து
கொஞ்சிய நேரங்களும்
கெஞ்சிய நேரங்களும்
செதுக்கிய சிற்பமென
சிந்தையிலே தினம் தினம்...

முடித்து கொள்வோமடி கண்ணம்மா

காலம் முழுவதும்
கனவுகளில் நனைந்து
முள்ளாய் குத்தும்
முடிந்துபோன நாட்களின்
மறக்க இயலாத
மனதின் வலிகளை
தலையணையிடம் சொல்லி
ஆறாத வடுக்களுக்கு
ஆறுதல் தேடியதும்
கண்ணீர் சிந்தியதும்
கதறி அழுததும்
போதுமடி கண்ணம்மா...

காலன் அழைக்கும்
கடைசி நேரத்திலாவது
உயிருள்ள பிணமாய்
உலவிடும் எனக்கு
நிம்மதியை கொடுத்துவிடு
விடுதலையே தராத
உந்தன் நினைவுகளிடமிருந்து

விடுதலை பெறட்டும்
தலையணையாவது என்னிடமிருந்து...

- சேதுபதி விசுவநாதன்

Re: தலையணை மந்திரங்கள்

Posted: Sun Oct 11, 2020 9:26 pm
by Madhumathi Bharath
தலைப்பு பார்த்துட்டு எப்படி இருக்குமோனு நினைச்சுக்கிட்டே தான் படிக்க ஆரம்பிச்சேன்.அசத்திட்டீங்க... வாழ்த்துகள் சகா.

Re: தலையணை மந்திரங்கள்

Posted: Sun Nov 01, 2020 11:45 am
by yaazhistories
நன்றிங்க சகோ