புதையுண்ட காதல்
Posted: Fri Jul 17, 2020 7:24 am
உறவாக மறுத்துவிட்டு
உடலை மட்டும் தனியேவிட்டு
உயிர்பிணமாய் மாற்றியவள் அவள்...
விடியாத இரவுகளில்
விடிய விடிய பேசிய நாட்களை
விடியும் வரை நினைத்து அழ
விதியாக மாற்றியவள் அவள்...
கைகோர்த்து நடந்த இடங்களில்
தனியாக நடக்க வைத்து
கண்ணீரை சிந்த வைத்து
சிரிப்போடு வாழ்பவள் அவள்...
காரணமே தெரியாமல்
கடந்ததை எண்ணி
கலங்கி நின்றிடும்
காதல் பைத்தியம் அவன்...
பிரிவின் வலிகளோடு
விடைகளை தேடிக்கொண்டே
ஒருமுறையேனும் முகம் பார்க்க
ஏங்கி காத்திருக்கும்
நேசத்தின் பைத்தியம் அவன்...
விழிநீர் துடைக்கவும்
ஆறுதல் வார்த்தைள் சொல்லவும்
யாருமின்றி தனிமையிலே
நினைவுகளோடு பயணிக்கிறான்...
அவளுக்கு மட்டும்
அளித்திட்ட மனதினை
வேறொருத்திக்கு தர மறுத்து
வேரில்லாமல் வாழ்கின்றான்
விடுகதையாகி சென்றுவிட்ட
வெளிதெரியாத கதை அது...
கிமுவில் புதையுண்ட
கீழடியின் வரலாறும் கிடைத்துவிட்டது
கீறல்களாய் ஒட்ட மறுத்த
கிழிந்த இதயத்தில்
அவன் காதல் மட்டும்
யாருக்கும் தெரியாமல்
அவளின் பொக்கிஷமாய் உறங்குகிறது...
- சேதுபதி விசுவநாதன்