Edhir Dhuruvangal ( E D - Teaser )

Post Reply
RS novels
Moderators
Posts: 2
Joined: Wed Mar 02, 2022 4:52 pm
Has thanked: 1 time

Edhir Dhuruvangal ( E D - Teaser )

Post by RS novels »

எதிர் துருவங்கள்......

பரந்து விரிந்த ஆரண்யத்தின் மிக பெரும் தலைகளான ஆளியும் புலியும் சிறந்த வேட்டை வன விலங்குகளே .... அது போல் தான் நம் கதையின் நாயகர்கள்.... ஒருவன் காவல் துறையில் உச்சானிக் கொம்பில் அமர்ந்து சட்ட சீர்திருத்தத்தின் படி கூட்டாக சேர்ந்து மனிதன் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் விலங்கினத்திற்கும் கீழான மிருகங்களை ஓட ஓட விரட்டியடித்து வேட்டையாடுவதில் அரிமாவின் சீற்றத்தைக் கொண்டவன் என்றால் ... மற்றொருவனோ அதே சட்டத்தில் உள்ள ஓட்டையில் ஒளிந்து மறைந்து கொண்டு சமூகத்தில் பல அநியாய அட்டூழியங்கள் புரியும் வெறி பிடித்த பண நரிகளை பதுங்கி இருந்து பாய்ந்து ஆக்ரோஷமாய் வேட்டையாடுவதில் புலியின் சூழ்ச்சியைக் கொண்டவன்.....

ஒரே குணாதிசயங்களைக் கொண்ட இவ்விருவரும் வேட்டையாடுவதில் வல்லவர்கள் தான் என்றாலும், ஒரே கருத்தை மேற்கொண்டு வரும் இவ்விருவரும் தங்கள் பயணிக்கும் பாதைகளில் எதிரெதிர் துருவங்களாய் வேறுபட்டால் ....? கடமை தவறாத காவல் துறையின் நாயகனான அகத்திய வர்மன்..... நடுமக்களோடு இசைந்து வாழும் நாயகனான அர்வின் சாகர்..... ஆகிய இருவரும் தங்களுக்குள் இடையில் ஏற்படும் முறைபாட்டால் நேருக்கு நேர் மோதிக் கொண்டால்.....
இதில் வெற்றி பெறுவது யாராக இருக்கும் ....?

வலிமையும் திடமும் பொருந்தி தனித்து மட்டுமே வேட்டையாடி பழக்கப்பட்ட அரவின் சாகரால் நன்கு வேட்டை பயிற்சி பெற்று தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நகரத்தில் எவரையும் உள்ளே நுழைய அனுமதிக்காமல் தன்னுயிரையும் கொடுத்து போராடி காப்பவன் சமயத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதிய நுட்பங்களை புகுத்தி கையாலும் அகத்திய வர்மனை அவ்வளவு எளிதில் அடித்து வீழ்த்திவிட முடியுமா....???

எதிலும் கடமையையும் நேர்மையையும் மட்டுமே கையாண்டு தனக்கென்று ஒரு கண்ணியத்தை உருவாக்கி கொண்ட அகத்திய வர்மனால் அடிபட்ட புலியாய் மாறி கடுஞ்சினத்தை கண்களில் கொணர்ந்து வெறியாட்டம் போடும் கயவர்களை தேடிகண்டுபிடித்து வளைந்த வரிகளை உடல் முழுவதும் கொண்ட குயவரியை போல் தண்டனைகளை தனக்கு ஏற்றவாறு வளைத்தும் நெளித்தும் தீர்ப்பளிக்கும் அர்வின் சாகரை அவ்வளவு சுலபத்தில் அடி பணிய வைத்து விட முடியுமா....?

தங்களுக்குள் ஏற்படும் பிளவால் இவ்விருவருமே தங்களின், வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் நாயகிகளின் மீது வைத்திருக்கும் உயிரினும் மேலாகிய காதலையும் நேசத்தையும் இழந்து தவிப்பார்களா....??? அல்லது அந் நேசத்தின் விளைவால் தங்கள் பகையை மறப்பார்களா....???

எதிர் துருவங்கள்.....

*********************************************************
எதிர் துருவங்கள்

அத்தியாயங்களிலிருந்து சில துளிகள்.....

டீசர்.....

பார்ப்பவர்களை மிரட்டும் தொனியில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில் ஆங்காங்கே சில புகைப்படக் கலைஞர்கள் தத்தமது கைகளில் கேமிராக்களுடனும் மைக்குடனும் நின்று அதிர்ச்சியுடனும் ஆவலுடனும் பேசிக் கொண்டிருக்க அவர்களை கடந்து சென்ற பரத் அருகில் இருந்த தலைமை காவலரை அழைத்து

" இன்னும் பத்து நிமிடத்திற்குள் இங்கிருக்கும் எல்லா மீடியாக்களையும் பத்திரிகையாளர்களையும் அப்புறப்படுத்துங்கள்.... " என்றதும் " சார் எப்படி சார்...? இறந்தது சினிமாத்துறையில் உச்சத்தில் இருக்கும் பிரபல நடிகர் சஞ்சய் குமரன் அவரைப்போய் ஒருவன் கொலை செய்திருக்கிறான் இதை தெரிந்ததும் எல்லா மீடியாக்களும் இங்குதான் குழுமி இருக்கிறார்கள் இப்ப அவங்களை அப்புறப் படுத்துவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை சார்... " என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இடையில் குறுக்கிட்டவன்


" யோவ் புரியாமல் பேசாதய்யா... இந்த கேஸை ஹேண்டில் பண்ணபோறது மிஸ்டர் அகத்திய வர்மன் தான்.... அவரே நேராக இதில் இறங்குகிறார் அவருக்கு இதெல்லாம் பிடிக்காது அவர் வருவதற்குள் இங்கிருக்கிற பிரஸ் மீடியா எல்லாவற்றையும் சரி கட்டி அனுப்பி விடு.... " என்று உத்தரவிட்ட பதினைந்து நிமிடத்திற்குள் சைரன் ஒலி காதை கிழிக்க மின்னலென இறங்கி வந்தான் அகத்திய வர்மன்....

அகத்திய வர்மன்.... S. P

சுப்ரிடெண்டண்ட் ஆப் போலீஸ்.... ( காவல் கண்காணிப்பாளர் )

கண்களில் எப்போதும் கண்டிப்புடன் சேர்ந்து குடியேறியிருக்கும் இளஞ்சிவப்பும் முறுக்கிய மீசையும் கூர்மையான நாசியும் புடைத்திருக்கும் இள நரம்புகளும் அவன் ஒரு அசாத்தியமான மனிதன் என்றும் பயம் என்பதே இவன் அகராதியில் எள்ளளவும் கிடையாது என்பது போல் அடிக்கடி தனது மீசையை முறுக்கிக் கொள்ளும் கம்பீரமும் ஒரே நேரத்தில் எத்தனை பெயர்கள் வந்தாலும் துச்சமென அவர்களை அசால்ட்டாக பந்தாடுவதில் வல்லவனாகவும் சுழற்றி அடிப்பதில் சூறாவளியாகவும் திகழ்ந்து திணறடிப்பவன்....

அரசியல்வாதியாக இருந்தாலும் சரி பணம் படைத்தவர்களாக இருந்தாலும் சரி.... யாராக இருந்தாலும் தவறு என்று தெரிந்துவிட்டால் எவருக்கும் அஞ்சாது எதற்கும் அடிபணியாது அவர்களை வெளுத்து ஒழித்துக் கட்டுவதில் அவனுக்கு நிகர் அவனே ஆவான் சில சமயங்களில் அவர்களுக்கு அசுரனும் அவனே ஆகிவிடுவான் அனைத்திலும் நேர்மையை கடைப்பிடிப்பவன் அவ்வளவு நேர்மையிலும் துணிச்சல் கொண்டவன் பார்க்கும் உத்தியோகத்தை கடமைக்காக அல்லாமல் காதலித்து பார்ப்பவன்.....

மற்றவர்களை கட்டுப்படுத்துவதை விரும்புபவன்....அதே மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பாதவன்.....

அகத்திய வர்மன்.......

*********************************************************

' இவர் சாதாரணமாகப் பார்த்தாலேயே கொலையாளி கதி அதோகதிதான்..... இப்போ இப்படி வெளிப்படையாக பாவங்களை வெளியிடுகிறார்.... அப்படி என்றால் விஷயம் ஏதோ விவகாரமானது மட்டுமல்ல விபரீதமாகவும் கூட இருக்கலாமோ...' என்று எண்ணி கொண்டிருக்கையிலேயே அங்கிருந்த தலைமைக் காவலரை அழைத்து அடுத்து செய்ய வேண்டியவற்றை காலம் தாழ்த்தாமல் கட்டளையிட்டு செய்ய சொல்லி முடித்தவன் பின் பரத்தை நோக்கி அடி எடுத்து வைத்து வர அவன் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாகி ஆணி அடித்ததுபோல் அசையாமல் நின்றான் பரத்.....

அவனைத் திரும்பியும் பாராமல் புயலென தன் காரை நோக்கி நடந்து செல்கையில் அவனது டக் டக் என்ற ஷூவின் சத்தத்தில் பரத் தன்னை மீட்டுக் கொண்டு கிட்டத்தட்ட ஓடிச்சென்று அவன் அருகில் விரைந்தான் ....

*********************************************************

அவனின் எண்ண ஓட்டத்தை துல்லியமாக கணித்தும் எதுவும் பேசாமல் அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்த அகத்தியன் நேரே சென்று நிறுத்தியது அமைச்சர் சத்தியமூர்த்தியின் வீட்டின் முன்பு தான்....


இங்கும் அதே போல் குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களை கடந்து உள்ளே சென்ற அகத்திய வர்மன் திகைத்தது ஒரு நொடிதான்.... அதற்கும் காரணம் சஞ்சய் குமரனின் மரணமும் அவன் மரணித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே சத்தியமூர்த்தியின் இரண்டாவது மகனான சிவனேஷின் மரணமும் ஒன்று போல் இருந்தது தான்....

*********************************************************

" ஹலோ வர்ஷு.... எங்க இருக்க...? " என்ற மறுமுனையில் கேட்கப்பட்ட கேள்விக்கு

"நான் இப்போ தான் ரேகா வீட்டில இருந்து கிளம்புறேன்.... இன்னும் கொஞ்ச நேரத்தில ஸ்பாட்டிற்கு வந்திடுவேன்.... " எனவும்
அதற்கு முன்பு மேனேஜர் அவளிடம் பேச வேண்டும் என்று சொன்னதை கூறி அவளை ஆபீஸ் வந்து மேனேஜரை சந்தித்து விட்டு போக சொன்னாள்....

"சரி நான் வர்றேன் " என்றவள் நேராக அலுவலகம் நோக்கி செல்ல ஏற்கனவே தாமதம் ஆகிவிட்ட காரணத்தால் குறுக்கு பாதையை தேர்ந்தெடுத்தாள்.... சரியாக ஒரு கார் போகும் அளவிற்கான இடைவெளியே இருக்கும் சந்தில் நுழைய அதே நேரத்தில் சொல்லி வைத்தாற் போன்று எதிரில் அகத்திய வர்மனின் காரும் நுழைந்தது.... இப்போது இருவரும் எதிரெதிரில் வர யாரவது ஒருவர் முன்னே செல்வதற்கு மற்றொருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் அகத்தியனோ காரை பின்னுக்கு கொண்டு செல்வது என்பது கடினம் என நினைத்து அப்படியே நிற்க இங்கே வர்ஷனாவிற்கோ பொறுமை இழக்க துவங்கியது....

' பாரு... எப்படி நிற்கிறானு....? ஏன் எப்போதும் போல இப்போதும் பொண்ணுங்க அடிமையாவே இருக்கணுமா....? நான் பின்னாடி போக மாட்டேன் ' என மனதிற்குள் நினைத்தவள் அவன் யாரென்று தெரியாமல் ஹாரன் சத்தம் கொடுக்க காரை விட்டு கீழிறங்கி நின்றான்....

அடர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அதற்கேற்றாற் போல் வெள்ளை நிற முழுக்கை சட்டையை பாதி வரை மடித்து விட்டு துச்சமென நோக்கி எதிராளிகளை ஒற்றை பார்வையிலேயே துவம்சம் செய்யும் கண்களை மறைத்தவாறு சில்வர் ஸ்கொயர் சன்கிளாஸ் அணிந்து 'என்ன ' என்பது போல் இரு நெற்றி புருவங்களையும் ஏற்றி இறக்கி நின்றவனை நோக்கியவள் ஒரு நொடி அவனின் கம்பீரத்தில் எதிர்த்து வாயாடாது அப்படியே நின்று விட்டாள்.... அவளின் முன் தன் கைகளை உயர்த்தி சொடுக்கிட.... தன் உணர்விற்கு வந்தவள் பெண் என்று பாராமல் காரையும் ரிவர்ஸ் எடுக்காமல் இறங்கி நின்ற தோரணையில் எரிச்சலடைந்தவள் மேலும் அவன் தன்னை சொடுக்கிட்டு அழைக்க 'என்ன திமிரு ' என்று அதில் இன்னும் எரிச்சலடைந்தாள்....

" ஹலோ சார்.... எப்போதுமே பொண்ணுங்க தான் இறங்கி வரணுமா....? " என்றவளின் கேள்வியில் தான் யாரென்று தெரியாமல் பேசுகிறாளோ என்று எண்ணியவன் சட்டென்று தனக்குள் மின்னல் தோன்றியதை உணர்ந்து அதை மறைத்து குரலில் மிடுக்கை கூட்டினான்....

"அப்படி னு நான் சொல்லலை... வேற யாரு சொன்னது....? " என்றான் கண்களால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அவளை அளவிட்ட படியே சிறு எள்ளலுடன் ....

"வெரி குட்.... நீங்க சொல்லலை இல்லையா.... அப்போ பின்னாடி போங்க " என்றாள் பிசிறில்லாத துணிவுடன்.....

அவளின் துணிச்சலை கண்டு எவராக இருந்தாலும் எதிரே நின்று கூட பேச தயங்குபவர்கள் மத்தியில் இவள் அதிரடியாக துணிந்து கேள்வி எழுப்பியதையும் தன்னையே ரிவர்ஸ் எடுக்க சொன்னதையும் நினைத்து வியந்து போக .... தான் யாரென்று கூறாது எதுவும் பேசாது அமைதியுடன் சட்டென்று காரில் ஏறி ரிவர்ஸ் எடுத்து அவள் போவதற்கு வழி விட்டான் அகத்திய வர்மன்....

*********************************************************

"பாவி.... இப்படி பண்ணிட்டாளே.... அவளை நம்பி வந்ததிற்கு நல்லா பழி வாங்கிட்டாள்.... " என்று தோழி மீதிருந்த ஒட்டுமொத்த கோபத்தையும்
தன் சுடிதார் துப்பட்டாவின் நுனியில் காட்டியவள் சோ வென்று அடித்து கொட்டிய மழையில் நனையாமல் அந்த பேருந்து நிறுத்தத்தை ஒட்டி நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.... அங்கே அவளோடு சேர்த்து மழைக்கு என்று ஒதுங்கிய ஓரிருவர்களை தவிர வேறு யாரும் இல்லை.... நேரம் செல்ல செல்ல ஒருவித பயத்துடன் காத்து கொண்டு நிற்க 'இப்போ என்ன பண்றது.... திட்டு வாங்கினாலும் பரவாயில்லைன்னு பேசாமல் அண்ணனுக்கு கால் பண்ணிடலாமா...? திட்டினால் கூட பரவாயில்லை.... ஆனால் அது வீட்டுக்குள்ளே சிறை வைச்சிடுமே....? ! ம்ஹும்... வேண்டாம் யார்கிட்டேயாவது லிப்ட் கேட்டோ இல்லை பொடி நடையா கூட நடந்து போய்டலாம்... ' என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தூரத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வருவதை கண்டு இனியும் தாமதிக்க இயலாது என்பது புரிந்து தன் வலது கையை நீட்டி லிப்ட் கேட்டாள் அக்ஷரா....

அவள் அருகில் வந்து நின்ற போலார் வொயிட் நிற ஹூண்டாய் சாண்ட்ரோ கார் காரன் ஜன்னலை திறந்து விட்டு என்ன என்பது போல் பார்க்க....

" ஸார் நான் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.... ஒரு பஸ்சும் ஆட்டோவும் வரலை.... என்று அவள் இறங்கும் இடத்தை குறிப்பிட்டு நீங்க தப்பா எடுத்துக்கலைனா என்னை கொஞ்சம் ட்ராப் பண்றீங்களா.... ப்ளீஸ்.... " என்றாள் கலக்கத்துடன்.....


' இன்னைக்கு ஸ்ட்ரைக் என்பதே தெரியாதா...? இல்லை மறந்திட்டாங்களா....? ' என்று எண்ணியவாறே " சரி வாங்க.... " என்றதும் அவள் யோசிக்காது சட்டென்று முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தவளின் புத்தியில் அவன் அவளின் பக்க விண்டோர்ஸை க்ளோஸ் பண்ணியதும் தான் திக்கென்றிருக்க ' அவசரப்பட்டு ஏறிவிட்டோமோ....? ' என்றே தோன்றியது...


எதிர் பாருங்கள்.......

எதிர் துருவங்கள்.
images (30).jpeg
IMG_20210120_183908.jpg
You do not have the required permissions to view the files attached to this post.
Last edited by RS novels on Wed Mar 02, 2022 7:04 pm, edited 1 time in total.



User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

Re: Edhir Dhuruvangal ( E D - Teaser )

Post by Madhumathi Bharath »

Double hero subject ah... Teaser super ma... Expecting story soon.



RS novels
Moderators
Posts: 2
Joined: Wed Mar 02, 2022 4:52 pm
Has thanked: 1 time

Re: Edhir Dhuruvangal ( E D - Teaser )

Post by RS novels »

Thank u madhu.....



Post Reply

Return to “எதிர் துருவங்கள்”