Thanalai Erikum Panithuli 10

1
1450
thanalai erikum panithuli madhumathi bharath Tamil novels

அத்தியாயம் 10

மருதாணியின் உள்ளம் ஆத்திரத்தில் கனன்று கொண்டிருந்தது. இன்று ஏதோ அவளின் நல்ல நேரம் … சரியான நேரத்தில் கெளதம் வந்து விட்டான்… இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்? இந்த முத்தையா கொஞ்சமும் மாறவில்லை. அவனை சும்மா விட்டால் மறுபடியும் இதே மாதிரி முயற்சி செய்து கொண்டே தான் இருப்பான்.

அதே நேரம் அவளுக்கு கௌதமின் மீதும் கோபம் எழுந்தது. கண்டிப்பாக அவனுக்கு அங்கே என்ன சூழ்நிலை என்பது புரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் மருதாணிக்கும் , அவனுக்கும் இடையில் நின்று கொண்டு அவளுக்கு கண் ஜாடை செய்து அங்கிருந்து கிளம்ப சொல்லி இருக்க மாட்டார்.

அவர் ஏன் அவனை அடிக்கலை… குறைந்தபட்சம் திட்டியாவது இருக்கலாமே… ஓ.. என்ன இருந்தாலும் நான் கேட்பதற்கு ஆள் இல்லாத அனாதை தானே… அவருக்கும் அந்த எண்ணம் தான் போலும். அதனால் தான் அவரும் அமைதியாகி விட்டார் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். மனதுக்குள் ஆயிரம் நினைவுகள் ஓடினாலும் கை அவள் போக்கில் புடவையை கட்டி முடித்து இருந்தது.

“மருதாணி மேடம்… வரலாமா?” என்று கெளதம் அனுமதி கேட்க… முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ள முயன்றாள்.

புடவையை கட்டி விட்டு வெளியே வந்தவள் எதுவுமே பேசாமல் அவனுக்கு சாப்பாடு பரிமாற முனைந்தாள்.

“மேடம்… கொஞ்ச நேரம் இருங்க… ஒரு சின்ன வேலை முடிச்சுட்டு வந்து சாப்பிடறேன்” என்றவனை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வீட்டின் பின்புறத்திற்கும் , முன்பக்கதிற்கும் அவன் நடப்பது தெரிந்தாலும் அவனை பார்க்க விரும்பாதவள் போல வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இனி கவலை இல்லை மேடம்…” என்றவனின் குரலில் திரும்பியவள் பேச மறந்து போனாள். வீட்டின் பின் பகுதியில் குளிப்பதற்கு போட்டு இருந்த கூரை மறைப்பை எடுத்து வந்து வீட்டில் முன்பகுதியில் அவள் தங்கி இருந்த இடத்தில் வைத்து கயிறால் கட்டி அந்த திண்ணையையே சிறு அறை போல மாற்றி இருந்தான் கெளதம்.

“இனி கவலை இல்லாம இங்கேயே ட்ரெஸ் மாத்திக்கலாம்” என்று சொன்னவனின் அக்கறையில் நெகிழ்ந்து தான் போனாள்.

அதே நேரம் அவன் முத்தையாவை கண்டிக்காமல் விட்டது அவளது நெஞ்சில் முள்ளாக குத்த.. மௌனமாக அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தாள் மருதாணி.

“என்ன மேடம்… ஒண்ணுமே சொல்லலை… உங்களுக்கு பிடிக்கலையா?”

“…”

“உங்க வீடு தான்… அதுல உங்களுக்கு நான் ஏற்படுத்தி கொடுத்த இந்த ஏற்பாடு கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் தான்… உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும். நீங்க தான் அன்னிக்கு நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் உங்க வீட்டை பயன்படுத்திக்க மறுத்துட்டீங்களே. ஏற்கனவே நீங்க வீட்டை விட்டு வெளியில்… கொட்டுற பனியில் படுத்து இருக்கிறதே எனக்கு உறுத்தலா இருக்கு மேடம்… இன்னிக்கு நடந்த சம்பவத்துக்கு ஏதோ ஒரு வகையில் நானும் காரணம்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு மேடம்.

ஒருவேளை நான் உங்க வீட்டில் வந்து தங்கலைனா இன்னிக்கு நடந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லையே… அதான் என்னோட மனத் திருப்திக்காக இந்த ஏற்பாடு… இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல… நீங்க உங்க வீட்டுக்குள் தங்கிக்கோங்க… நான் வெளியில் டென்ட் அடிச்சு படுத்துக்கிறேன்.”

“நீங்க குளிக்கிறதுக்கு இருந்த இடத்தை இப்படி செஞ்சுட்டீங்களே…”

“பொண்ணு நீங்களே அருவியில் போய் தான் தினமும் குளிச்சுட்டு வர்றீங்க.. ஆம்பிளை எனக்கென்ன மேடம்… நானும் அங்கேயே போய் குளிச்சுக்கிறேன்… அடுத்த வாரத்திற்குள்ள வேற ஒண்ணு புதுசா கட்டிக்கலாம் மேடம்” என்று சொல்ல ஏனோ மேலும் பேச்சை வளர்க்க விரும்பவில்லை அவள்.

அவளுக்காக என்று எல்லாமே அவன் பார்த்து பார்த்து செய்யும் பொழுது எதை மறுத்து பேசுவது என்று புரியாமல் தவித்தாள் அவள்.

“சூடா இருக்கும் பொழுதே சாப்பிடுங்க…” என்று சொன்னவள் அவனுக்காக சமைத்து வைத்திருந்த நண்டு குழம்பை பரிமாறினாள்.

கௌதமின் இந்த செயல் ஏதோ ஒரு வகையில் மருதாணியின் மனதை அசைத்தாலும்… அவன்  முகம் ஏனோ தெளிவில்லாமலே இருந்தது.

சாப்பிட அமர்ந்தவன் சாப்பிடாமலே எழுந்து விட்டான்.

‘ஏன்’ என்றாள் கண்களாலேயே…

“ஒரு சின்ன வேலை மேடம்.. மறந்துட்டேன்… இதோ வந்திடறேன்…”

“எந்த வேலையா இருந்தாலும் சாப்பிட்ட பிறகு செய்ங்க.. சாப்பிடும் பொழுது சாமியே வந்தாலும் எழுந்து  போகக் கூடாது…அது அன்னத்தை அவமதிக்கிற மாதிரி”

“இல்ல மேடம்… அந்த வேலையை முடிக்கலைனா எனக்கு சாப்பாடு இறங்காது… சீக்கிரமே வந்திடறேன்” என்று சொன்னவன் வேகமாக அறைக்குள் சென்று தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு ஓடினான்.

‘அப்படி என்ன அவசர வேலையோ ‘ என்று எண்ணியபடி சாப்பிட அமர்ந்தவளால் ஏனோ அவனில்லாமல் சாப்பிட முடியவில்லை.

சாப்பாட்டை அளைந்து கொண்டே… பருக்கைகளாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தவனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி…

“இப்போ கொடுங்க மேடம்… சாப்பிடறேன்” என்றவனின் முகம் முழுக்க அத்தனை சிரிப்பு… சிரிக்க சிரிக்க பேசி… அவளையும் சிரிக்க வைத்தபடி  உணவை உண்டு முடித்தான். மருதாணியும் அவனது கலகலப்பில் அவன் மீது இருந்த கோபத்தைக் கூட மறந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

“சாப்பாடு பிரமாதம் மேடம்… வழக்கமா சாப்பிடறதை விட ஒரு கவளம் கூடவே சாப்பிட்டு இருக்கேன். நானும் எத்தனையோ ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் சாப்பிட்டு இருக்கேன். அங்கே எல்லாம் கூட இந்தளவிற்கு டேஸ்ட் இல்லையே… அது எப்படி மேடம் இப்படி டேஸ்ட்டா சமைக்கறீங்க?”என்று சிலாகித்துப் பேசினான்.

“நாங்க சமையலில் எந்த மசாலாவும் சேர்க்கிறது இல்லை.. இயற்கையாகவே இந்த மண்ணில் விளையும் பொருட்களுக்கு ருசி அதிகம்.. அது தான் காரணம்… மத்தபடி நான் தனியா வேறெதுவும் செய்யல… எங்கம்மா சமையல் இதை விட அருமையா இருக்கும்” என்று சொன்னவள் அதன்பிறகு சட்டென்று வாய் மூடி மௌனமாகி விட கௌதமிற்கு அவளின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

‘என்ன மாதிரியான பெண்ணிவள்… துக்கம் தொண்டை வரை அடைக்கும் பொழுது கூட வாய் விட்டு சொல்லி அழ மறுக்கிறாளே…’

சாப்பிட்டு முடிந்ததும் பேசிக் கொண்டே எழும்பொழுது கௌதமின் கையில் இருந்த அவனது பை நழுவி விழ அதில் இருந்து ரத்தம் தெறித்த அவனது உடைகள் கீழே விழுந்ததை பார்த்ததும் மருதாணியின் முகம் கலவரமானது.

“என்னாச்சு…”

“அது… சும்மா”

“எப்படி அடிபட்டுச்சு… வலியை காட்டிக்காம தான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீங்களா?”

“உங்களோட பதட்டம் அனாவசியம் மேடம்… நீங்க டென்ஷன் ஆகாதீங்க”என்றான் அமைதியாக

“எப்படி அமைதியா இருக்க முடியும்?”

“இருக்கணும்… இருந்தாகணும்… ஏன்னா அது என்னோட ரத்தம் இல்லை” என்று அழுத்தமாக சொன்னவனின் விழிகளில் இருந்த சேதியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் மேலே எதுவும் கேட்கும் முன் வீட்டுக்குள் நுழைந்தவன் தன்னுடைய லேப்டாப்பை எடுத்து வைத்து வேலைப் பார்க்கத் தொடங்க… மருதாணி அவனையும், அவனது செயல்களையும் குழப்பத்துடனே பார்வையால் பின் தொடர்ந்தாள்.

அவளது கேள்விகளுக்கு விடை அன்று மாலையில் அவளுக்கு கிடைத்தது.

முத்தையாவை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.

உள்ளுரில் வசதியான மருத்துவமனை இல்லாததால் வெளியூரில் சேர்த்து இருந்தார்கள். கை, கால் எல்லாம் முறிந்து போய் காட்டுக்கு நடுவில் கேட்பாரற்று கிடந்தவனை சுள்ளி எடுக்கப் போன பெண்கள் பார்த்து பதறிப்போய் தகவல் தெரிவித்து மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

மயக்கம் தெளிந்து எழுந்த முத்தையாவிற்கு என்ன நடந்தது என்பதே நினைவில் இல்லை. மருதாணியின் வீட்டில் இருந்து கிளம்பியவன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தது மட்டும் தான் அவனுக்கு நினைவில் இருந்தது. யார் அடித்தது?  என்பதே அவனுக்கு நினைவில் இல்லை. தலையில் வேறு அடிபட்டு இருந்ததால் இப்பொழுதைக்கு எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஓய்வு எடுப்பது அவசியம் என்று மருத்துவர்கள் சொல்லி விட… யாரும் அதன்பிறகு அதைப்பற்றி கேட்கவில்லை.

விஷயம் கேள்விப்பட்டதும் அவளுக்கு மதியம் கெளதம் சாப்பாட்டு நேரத்தின் பொழுது அவசரமாக கிளம்பிப் போனதும்… பின் மீண்டும் முகத்தை மறைக்கும் கவசமும்,சட்டையும் ரத்தத்தால் நனைந்த நிலையில் இருந்த அவனது சட்டையும் நினைவில் வந்து போனது.. அது அத்தனையையும் தாண்டி மீண்டும் திரும்பி வந்த பொழுது அவன் முகத்தில் இருந்த அந்த பாவனை…

மருதாணியால் நம்ப முடியவில்லை.

‘தனக்காகவா’

மதியம் கூட அவன் மேல் கோபப்பட்டாளே… ஆனால் அவன் அவளுக்காக முத்தையாவை போட்டு துவைத்து எடுத்து இருக்கிறானே’

“என்ன மருதாணி மேடம்… முகமெல்லாம் பளிச்சுன்னு இருக்கு… என்ன விஷயம்?” சிரித்த முகத்துடன் வந்தவனுக்கு அவளது மகிழ்ச்சியின் காரணம் இதுவாகத் தான் இருக்கும் என்ற தெளிவு இருந்தது.

“உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டவளின் பார்வை அவனை ஊடுருவ அவனது முகத்தில் இருந்த அமைதியையும் தாண்டி இதழோரம் இருந்த கள்ளச்சிரிப்பு அவனை காட்டிக் கொடுத்தது.

‘எனக்காகவா’ ஒன்றுமே பேசாமல் அமைதியாக அவன் சென்று விட… அன்றைய தினம் இரவு வெகுநேரம தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்த மருதாணி… வெகுநேரப் போராட்டத்திற்குப் பின் கெளதம் அவளுக்கு முதல் நாள் கொடுத்து இருந்த போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கினாள்.

அவளது செய்கை அவளின் மனமாற்றத்தை தெளிவாக எடுத்துரைக்க கெளதம் மகிழ்ந்து போனான்.

‘பாதி கிணறு தாண்டியாச்சு… இனி அடுத்த கட்ட வேலையில் இறங்க வேண்டியது தான்’

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here