Thanalai Erikum Panithuli 11

2
2208
thanalai erikum panithuli madhumathi bharath Tamil novels

அத்தியாயம் 11

மருதாணியின் முகம் வெகுநாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியில் நிரம்பி இருந்தது. தனிமைத் துயர் நீங்கியதைப் போல ஒரு குதூகலம். அத்தனைக்கும் காரணமாணவன்  அவளின் வீட்டின் உள்ளே ஆறடி உயரத்தில் உறங்கிக் கொண்டிருந்தான். வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவளின் பார்வை அடிக்கடி வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த  கௌதமின் முகத்தில் படிந்து விலகியது.

அவன் அவளுக்காக பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவளது மனம் தட்டுத்தடுமாறி அவன் காலடியில் விழ துடித்துக் கொண்டிருந்ததை அவள் உணரத் தொடங்கினாள். அவளின் அந்த எண்ணம் ஈடேறுமா? என்பதை குறித்தெல்லாம் அவள் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவளுக்குள் அரும்பு விடத் தொடங்கி இருந்த அந்த மெல்லிய உணர்வுகளை தன்னுள்ளே மட்டும் பதுக்கி வைத்துக் கொள்ள விரும்பவில்லை அவள்.

அவனிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினாள். அதன் பிறகு அவளை ஏற்பதும், மறுப்பதும் முழுக்க முழுக்க அவன் விருப்பம். ஒருவேளை அவளை பிடிக்காமல் அவன் விலகி சென்றாலும் அவனை அவள் கண்டிப்பாக தடுக்க மாட்டாள் தான். ஆனால் அங்கே அவளுக்கு அருகில் அவன் இருக்கப் போகும் நாட்களை எல்லாம் இனி பொக்கிஷமாக மனதில் வைத்துக் கொள்ள முடிவெடுத்தவள் முகம் முழுக்க பூரிப்புடன்  எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கினாள்.

காலை எழுந்து பல் விளக்கி விட்டு வந்ததும், நுரை பொங்க அவள் கொடுத்த காபியை குடித்தவனுக்கு ஏனோ அன்று ருசி கூடியது போல இருந்தது. எதேச்சையாக திரும்பிப் பார்க்க அவனையே பார்த்துக் கொண்டிருந்த மருதாணியின் பார்வை அவனுக்கு வித்தியாசமாகப் பட்டது.

‘என்ன’ என்று பார்வையாலேயே கேட்டபடி குறும்பாக புருவத்தை ஏற்றி இறக்க.. சிவந்த முகத்தை மறைப்பதற்காக டக்கென்று திரும்பி நின்றாள் மருதாணி.

அவனா கண்டுபிடிக்க மாட்டான்… எமகாதகன் ஆயிற்றே… கண்டுகொண்டான். அவன் கண்களில் மின்னல் தெறித்தது.

“நான் இதுவரை எத்தனையோ பெண்களை பார்த்து இருக்கேன் மருதாணி மேடம்.. ஆனா யாருக்கும் உங்களைப் போல இப்படி இயல்பா… அழகா … இயற்கையா முகம் சிவந்து பார்த்தது இல்லை” என்று சொல்ல மருதாணி கோபமாக அவனை திரும்பி பார்த்தாள்.

‘என்ன முறைக்கிறா… தப்பா எதுவும் சொல்லிட்டேனா?’

“இதுவரை எத்தனையோ பெண்களை பார்த்து இருக்கேன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்படி எத்தனை பெண்கள் கூட பழகி இருக்கீங்க?” என்று உரிமையோடு அவள் கேட்ட விதத்தில் அவன் வாய் விட்டு சிரித்தான்.

‘அப்பாடி இவ்வளவு தானா’ என்று நினைத்து மனதுக்குள் சிரித்தவனுக்கு கொஞ்சம் திகைப்பாகவும் இருந்தது.

‘அவளின் ஒற்றைப் பார்வை தன்னை இந்த அளவுக்கு தன்னை பாதிக்கிறதா’

“மருதாணி மேடம்… பெண்களை பார்த்து இருக்கேன்னு தான் சொன்னேன்… பழகி இருக்கேன்னு சொல்லலை” என்று குறும்பாக சொல்ல மருதாணிக்கு என்ன சொல்லி அவனது வாயை அடைப்பது என்றே தெரியவில்லை.

“முதலில் அந்த மேடத்தை விடுங்க.. யாரோ எவரோ மாதிரி கூப்பிடாதீங்க” என்று எரிச்சலுடன் சொன்னவள் அங்கிருந்து வேகமாக நகர முயல… கௌதமின் ஆழ்ந்த குரல் அவளை அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி செய்தது.

“வேற மாதிரி… மனசுக்கு நெருக்கமானவங்க கூப்பிடுற மாதிரி கூப்பிட எனக்கு உரிமை இருக்கா மனு” என்றவனின் வார்த்தைகளில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று விட்டாள்.

‘அவளிடமா பேசினான்… அதுவும் செல்லமாக பெயர் வைத்து… மனு…’ அவன் வைத்த பெயரையே மீண்டும் மீண்டும் மனதுக்குள் உச்சரித்தாள் மருதாணி. தலை முதல் கால் வரை சிலிர்த்தது அவளுக்கு.

“அம்மாடி மருதாணி” என்ற குரலில் எரிச்சலோடு திரும்பிப் பார்த்தாள் மருதாணி. இனிமையான கனவு கலைந்து விட்ட ஆத்திரம் அவளுக்கு… அங்கே இருந்த பெண்மணியைப் பார்த்ததும் முகத்தை முயன்று  சாந்தமாக்கிக் கொண்டு  லேசாக தலையை அசைத்து அவரை உள்ளே வரவேற்றாள்.

“என்ன மருதாணி சவுக்கியமா?” என்று கேட்டவரின் பார்வை கௌதமை அளவிட்டுக் கொண்டிருந்தது.

“என்ன விஷயமா வந்தீங்க” என்றாள் நறுக்கென்று

“உனக்கு எங்க எல்லார் மேலயும் கோபம் இருக்கும் தான்… ஆனா அன்னிக்கு எங்க சூழ்நிலை…”

“என்ன விஷயம்னு கேட்டேன்” என்று அழுத்தமாக பேசியவளைக் கண்டு மனதுக்குள் நொந்து கொண்டான் கெளதம்.

‘இப்போ தான் கொஞ்சம் சிரிக்க ஆரம்பிச்சா… அது பொறுக்கலையா? யார் இவங்க… இவங்களைப் பார்த்ததும் முகம் பழையபடி கடுகடுன்னு மாறுதே… இது சரியில்லையே’ என்று எண்ணியவன் அவரையே பார்த்துக் கொண்டு நிற்க…

“நான் உன்கிட்டே நம்ம குடும்ப விஷயமா பேசணும்னு வந்தேன் கண்ணு.. அதனால தனியா…”

அவரின் பேச்சில் பின்பாதி தனக்காக சொல்லப்பட்டது என்பதை உணர்ந்து கொண்ட கெளதம் அங்கிருந்து நகர முயல பார்வையால் அவனை தடுத்து நிறுத்தினாள் மருதாணி.

“நம்ம குடும்பமா… கூடப் பிறந்த தம்பியும், தம்பி பொண்டாட்டியும் இறந்து பிணமாக் கிடக்கும் பொழுது அவங்க பிணங்களை பார்க்கக்  கூட வராத பாசக்கார அக்காவாச்சே நீங்க…” வார்த்தையால் வந்திருந்தவரை குத்திக் குதறத் தொடங்கினாள் மருதாணி.

“அன்னிக்கு எங்க நிலைமை…”

“என்ன நிலைமை… அப்பா, அம்மா  பேரும் இறந்து உயிரில்லாத உடம்பா இருந்தப்போக் கூட வீடு தேடி வந்து கல்யாண செலவுக்காக அப்பா கடனா வாங்கி வச்சு இருந்த பணத்தை எடுத்துட்டு போனீங்களே… கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம… பத்திரிக்கை அடிச்ச கடைக்கு அந்த காசைத் தான் கொடுக்கணும்னு சொல்லி தூக்கிட்டு போனீங்களே… இப்போ எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு இங்கே வந்தீங்க”

“மருதாணி அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு தான் கொஞ்சம் கேளேன்” கெளதம் அவருக்காக பரிந்து கொண்டு பேச… ஆத்திரமாக இடையிட்டாள்

“இதுல அனாவசியமா நீங்க  தலை இடாதீங்க… இவங்க எல்லாம் இரக்கமே இல்லாதவங்க.. ஒட்டுண்ணி மாதிரி அடுத்தவங்கள உறிஞ்சு குடிச்சே உயிர் வாழறவங்க”

“மருதாணி இதெல்லாம் அநியாயம்… நான்  ஒண்ணும் அப்படி இல்லை.எனக்கு என் தம்பின்னா உயிர்.”

“எது அநியாயம்… கட்டின பொண்டாட்டியும், பெத்த மகளும் பட்டினியா இருந்தாலும் கூட புருஷன் இல்லாத அக்காவும், அக்கா பையனும் பட்டினி கிடக்கக் கூடாதுன்னு மாசாமாசம் உங்க வீட்டுக்கு மளிகை சாமான்ல இருந்து உங்க பையனுக்கு போட்டுக்கிற ஜட்டி வரை வாங்கிக் கொடுத்த மனுசனின் சாவுக்குக் கூட வராத நீங்க எல்லாம் என்ன சொந்தம்”

“தப்புதான் மருதாணி… மன்னிச்சுக்கோ.. இப்போ நான் வந்தது உன்கிட்டே மன்னிப்பு கேட்கத் தான்… என் தம்பி மட்டும் இந்நேரம் உயிரோட இருந்து இருந்தா என்னை இப்படி கெஞ்ச விட்டு வேடிக்கைப் பார்த்து இருப்பானா?” என்று கண்ணைக் கசக்க…

“ஏன் இன்னிக்குத் தான் நல்ல நாளா? தம்பியும், தம்பி பொண்டாட்டியும் இறந்து எட்டு மாசம் கழிச்சு வந்து இருக்கீங்க… இப்போ என்ன காரியம் ஆகணும்னு வந்து இருக்கீங்க” என்று மருதாணி வார்த்தையால் அவரை வறுத்தெடுக்க குனிந்த தலை நிமிராமல் கேட்டுக் கொண்டவர் கையேந்தி அவள் முன் நின்றார்.

“என் பையனுக்காகத் தான் வந்திருக்கேன் மருதாணி… நீ என்னை என்னவேணா திட்டு… ஆனா எனக்குனு இந்த உலகத்தில் இருக்கிறது அவன் ஒருத்தன் தான். அவனை காப்பாத்திக் கொடு தாயி… உன் கால்ல வேணும்னாலும் விழறேன்” என்று சொன்னபடி அவளின் காலைப் பிடிக்க முனைய.. வேகமாக இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

“என்னோட காலைத் தொட்டு அந்த பாவத்தை என்னை சுமக்க வைக்காதீங்க… நீங்க போனதுக்கு அப்புறம் இந்த இடத்தை கழுவி விட்டாகணும் நான். கிளம்புங்க முதல்ல…” என்று தயவுதாட்சணம் இன்றி அவள் துரத்த… கெளதம் அவரின் முகத்தைப் பார்த்து பரிதாப்பட்டு அவருக்கு உதவ முன்வந்தான்.

“உனக்கு என்ன கோபம் இருந்தாலும்.. அவங்களை கொஞ்சம் பேச விடு மருதாணி” என்றவன் அவரைப் பார்த்து தலை அசைக்க அதையே சாக்காக வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார் அவர்.

“முத்தையா ஹாஸ்பிடலில் இருக்கிறது உனக்கு தெரியும் தானே கண்ணு… அவன் கண்ணு முழிச்சதில் இருந்தே உன்னோட பேரைத் தான் சொல்லி புலம்பிட்டு இருக்கான். நீ வந்து ஒருமுறை அவனை பார்த்துட்டுப் போனா நல்லா இருக்கும்னு டாக்டருங்க எல்லாரும் சொல்றாங்க கண்ணு”

“உங்க பையன் இருந்தா என்ன.. செத்தா எனக்கென்ன” என்று ஆத்திரமாக மொழிந்தவள் அங்கே நிற்கப் பிடிக்காதவள் போல வேகமாக அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாள்.

கௌதமிற்கு அதுவரை அவர் முத்தையாவின் அம்மா என்பது தெரியாது. முத்தையா மருதாணியின் அத்தை மகன் என்ற தகவலும் சேர… கவலைக்குள்ளானான்.

‘அந்த முத்தையாவோட அம்மான்னு தெரிஞ்சு இருந்தா அவங்களுக்காக சப்போர்ட் செஞ்சே பேசி இருக்க மாட்டேன்’ என்ற ரீதியில் அவன் யோசிக்க… அந்த பெண்மணி அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

“நீங்க தானே தம்பி அவ கூட தங்கி இருக்கிறது”

“மன்னிக்கணும்… மருதாணி கூட தங்கி இருக்கலை.. அவங்க வீட்டில் ஒரு பகுதியில் தங்கி இருக்கேன்”

“எப்படியும் ஒண்ணு மண்ணா இருப்பீங்க.. நீங்க சொன்னா அவ கேட்டுப்பா” என்று சொன்னவரின் வார்த்தைகளில் விஷம் இருந்ததோ என்று அவனது பார்வை கூர்மையுடன் அவரை அளவிட…அவர் முகம் இயல்பாகவே இருந்தது.

“இதில் நான் சொல்றதுக்கு என்ன இருக்குங்க… இது அவங்க சொந்த விஷயம்..இதுல நான் எப்படி தலையிட முடியும்?”என்று மறுப்பாக தலை அசைக்க வந்தவரோ கொஞ்சமும் பின் வாங்காமல் பேசினார்.

“அவளுக்கு சொந்த அத்தை நான்… ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கே வந்து இருக்கேன்.. என்னிடம் முகம் கொடுத்துக் கூட பேசலை… ஆனா உங்களுக்கு காபி பலகாரம் எல்லாம் கொடுத்தா போலவே” என்று இடக்காக பேச… அதை மறுத்து பேச முயற்சி செய்தான்.

“சாப்பாட்டுக்கு பணம் கொடுக்கிறேன்… மூணு வேளைக்கும்…”

“பணம் அதுக்கு மட்டும் தானா?” என்றவரின் பேச்சில் திகைத்துப் போனான் கெளதம். ‘மருதாணி இருந்தவரை இவர் பேசிய முறை என்ன… இப்பொழுது இவர் பேசும் விதம் என்ன என்று எண்ணியவன் இவரிடம் தொடர்ந்து பேசாமல் இருப்பது தான் நல்லது’ என்ற எண்ணத்துடன் அங்கே இருந்து கிளம்ப முயன்றவனை அவரது குரல் தடுத்தது.

“இது கிராமம் தம்பி… யாராவது சட்டுன்னு நாக்கு மேல பல்லைப் போட்டு பேசிட்டா.. அப்புறம் கஷ்டம்… இன்னிக்கு வேணா அவ எங்க மேல கோபமா இருக்கலாம்.ஆனா ரொம்ப நாளைக்கு அவளால் அந்த கோபத்தை பிடிச்சுட்டு இருக்க முடியாது. என்ன தான் இருந்தாலும் அவ எங்க வீட்டுக்கு மருமகளா வரப் போற பொண்ணு… அதனால நீங்க சீக்கிரமா வேற இடத்தைப் பார்த்துப் போறது நல்லது.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட கெளதம் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கினான்.

அவர் சொன்ன பேச்சின் உட்கருத்தை அவனால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்து திகைத்தான் கெளதம்.

மருதாணி அழகானவள்,சுவைபட சமைக்கிறாள் என்பதால் அவனுக்கு அவள் மீது ஈர்ப்பு உண்டு என்பதை அவன் அறிவான். ஆனால் அவளுக்கும் , முத்தையாவிற்கும் நடக்கப் போகும் திருமணத்தை இவன் மனம் வெறுக்கிறது என்றால் கௌதமின் நெஞ்சம் நடுங்கியது.

‘கடவுளே’ அவன் மனம் அரற்றியது.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here