
அத்தியாயம் 4
ராஜேஷின் தந்தை பல விதமான பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தார். அவரது நெடுநாள் ஆசை தான் இந்த வியாபாரத் திட்டம். அதன்படி புதுக்கோட்டை அருகில் உள்ள பழங்குடியின மக்களிடம் இருந்து அவர்கள் பாரம்பரிய முறைப்படி செய்யும் சில பொருட்களையும், சில மூலிகைகளையும் வாங்கி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே அந்த திட்டம். ஆனால் அவரின் அந்த திட்டம் அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் கூட தோல்வியில் தான் முடிந்தது. பலமுறை முயன்றும் வெற்றி காண முடியாததால் அந்த வருத்தத்திலேயே அவர் கடைசி நாட்களை கழித்ததாகவும் கௌதமிற்கு தெரிய வந்தது.
அவர் மட்டும் அல்ல… அதன் பிறகு ராஜேஷின் கம்பெனியில் இருந்து எத்தனையோ பேர் அதை முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் எல்லாருக்கும் கிடைத்தது தோல்வி மட்டும் தான். அந்த விஷயத்தைத் தான் இப்பொழுது கெளதம் தலையில் கட்டி விட்டார் விசாலம்.
ராஜேஷின் தந்தை பிசினெஸில் ஊறிப் போனவர்.. அவரால் முடியாமல் போன விஷயம்.. அதே ஆபிசில் வேலை பார்த்த மற்ற சீனியர்களால் செய்ய முடியாமல் தோல்வியில் முடிந்த விஷயத்தை தான் இப்பொழுது இவன் கையில் எடுத்து இருக்கிறான் என்பது புரிய… சில நிமிடங்கள் அமர்ந்த நிலையிலேயே யோசித்தான் கெளதம்.
இதை அவன் செய்து முடிப்பதாக இருந்தால் இங்கே ஆபிசில் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது. அங்கே அவர்களை தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாக வேண்டும். அவர்களை அந்த திட்டத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும். அதுதான் இப்பொழுது விசாலம் அவனுக்கு விடுத்திருக்கும் சவால். கண்களை மூடி சில நொடிகள் யோசித்தவன் மதிய உணவு இடைவேளை முடியும் முன்னரே ராஜேஷின் முன் சென்று அந்த திட்டத்தை செய்து முடிக்க சம்மதம் தெரிவித்தான்.
ராஜேஷ் பதற.. விசாலமோ உணவை உண்பதில் கவனம் போல காட்டிக் கொண்டார்.
“கெளதம் ப்ளீஸ்! அம்மா சொன்னதுக்காக நீ அவசரப் பட வேண்டாம்.. நாம பொறுமையா உட்கார்ந்து பேசலாம்… இந்த வேலையை நான் வேற யார்கிட்டயும் கொடுக்கிறேன்” என்று கூற ஓரப்பார்வையால் கெளதம் விசாலத்தைப் பார்க்க.. அவர் பார்வை ஏளனமாக கௌதமை அளவிட்டது.
‘அவன் தடுப்பான் என்று தெரிந்து தானே இங்கே வந்து சம்மதம் சொல்கிறாய்?’ அவர் கேளாமல் கேட்ட விதம் அவனை வெகுண்டு எழ செய்ய தன்னுடைய முடிவில் உறுதியாக நின்றான் கெளதம்.
“இல்லை ராஜேஷ்… நான் என்னோட முடிவில் உறுதியா இருக்கேன்… தயவு செஞ்சு என்னை தடுக்காதே… எனக்கு இன்னும் இதைப் பத்தின தகவல்கள் வேணும்… நான் நாளைக்கே கிளம்புறேன்” என்று உறுதியாக முடித்து விட.. நண்பனை தடுக்க முடியாமல் தவித்துப் போனான் ராஜேஷ்.
“அங்கே சாப்பாடு.. தங்குவது எல்லாமே கஷ்டம் கெளதம்… நீ எப்படி அங்கே போய்”
“வேலைக்குன்னு வந்துட்டா சொகுசா இருக்க முடியுமா ராஜேஷ்? அதெல்லாம் உன்னோட பிரண்டுக்கு தெரியாதா என்ன? “ கௌதமை மேலும் வெறியேற்றினார் விசாலம்.
“அம்மா… ப்ளீஸ்! நீங்க கொஞ்சம் சும்மா இருங்க… கெளதம்.. உன்னை நான் என்கிட்டே வேலை பார்க்கிறவன் போலவா நடத்துறேன்… ப்ளீஸ்டா… அங்கே உனக்கு ஏதாவது ஆபத்து வந்தா உன்னோட அப்பா, அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?” என்று தன்னால் முடிந்தமட்டும் கெஞ்சிப் பார்த்தான் ராஜேஷ். ஆனால் கெளதம் உறுதியாக நின்றான்.
விசாலத்திற்கு அந்த வேலையை செய்ய முடியாமல் தான் தோல்வி அடைந்து திரும்புவதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருப்பதை அறிந்து கொண்டான். அந்த சந்தர்ப்பத்தை மட்டும் அவருக்கு கொடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
மீதம் இருந்த அரை நாளில் கெளதம் தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு.. அதுநாள் வரையில் அவன் பார்த்து இருந்த வேலைகளை எல்லாம் வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு போன் செய்து பேசினான்.
விஷயத்தை கேள்விப்பட்ட அவனது தாய் மரகதம் போனிலேயே அழத் தொடங்கி விட்டார்.
“அம்மா.. ப்ளீஸ்! அழ வேண்டாம்… நீங்க இப்படி அழுதா எப்படிம்மா?”
“அழாமல் என்னடா செய்ய சொல்ற… ஒரே பையன் நீ.. உன்னை பக்கத்தில் வச்சு பார்த்துக்க முடியல… இத்தனை நாள் ஏதோ கொஞ்சம் தள்ளி இருக்கறியேன்னு சந்தோசப்பட்டேன்… இப்போ என்னடான்னா காட்டுக்குள்ளே போய் தங்கி இருக்கப் போறேன்னு சொல்றியே… அங்கே புலி, சிங்கம்…”
“அம்மா… அந்த அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்லை … நான் என்ன அங்கே தனியாகவா இருக்கப் போகிறேன். அங்கே இருக்கும் பழங்குடி மக்களோடு தானே இருக்கப் போறேன்…” சமாளிப்பாக பேசினான் கெளதம்
“அங்கே போய் எங்கே தங்குவ? என்ன சாப்பிடுவ?,,, ஹுகும் அதெல்லாம் சரி வராது… நீ வேலையை விட்டுட்டு இங்கே வந்துடு தம்பி…” தாய் மனம் பிள்ளைக்காக தவித்தது.
“அம்மா அதெல்லாம் கம்பெனியில் ஏற்பாடு செஞ்சு இருக்காங்க.. ஒண்ணும் பயமில்லை…” மனதார பொய் சொன்னான் கெளதம்… அது போல எந்த ஏற்பாடும் அவனுக்கு செய்யப்பட்டு இருக்கவில்லை.அதை எல்லாம் சொன்னால் தாயார் மேலும் வருந்துவாரே என்று எண்ணி அவன் சமாளிப்பாக பேசினான்.
“வேண்டாம் தம்பி.. அங்கே உனக்கு பாதுகாப்பா இருக்காது.. அம்மா சொல்றதை கொஞ்சம் கேளேன்”மகனிடம் கெஞ்சினார் மரகதம்.
“அம்மா… அங்கே டவர் கிடைக்கிறது கஷ்டம்னு சொல்றாங்க. வாரத்தில் ஒருநாள் நான் வெளியே வந்து பக்கத்து டவுனுக்கு வந்து தான் உங்களுக்கு போன் பேச முடியும்… நீங்க தேவை இல்லாம பயப்படுவீங்கன்னு தான் இதையெல்லாம் உங்ககிட்டே இப்பவே சொல்றேன்… இல்லேன்னா நான் அங்கே போன பிறகு போன் செஞ்சு எடுக்கலைன்னு நீங்க பயப்படுவீங்க இல்லையா…”
“அப்போ முடிவெடுத்துட்ட அப்படித்தானே… கெளதம்?” ஒட்டுதல் இல்லாமல் வந்த தாயின் குரலில் நொந்து போனான்.
“அம்மா என்னை நம்பி பொறுப்பை கொடுத்து இருக்காங்க .. அதை நல்லபடியா முடிச்சுட்டு வந்தா தானே உங்க பையனுக்கு பெருமை…”
“நீ தான் முடிவெடுத்துட்டியே கெளதம்.. இனி என் பேச்சை மட்டும் இல்லை வேறு யார் பேச்சையும் கேட்க மாட்டேன்னு எனக்குத் தெரியும்.” என்று நலிந்த குரலில் பேசியவர், போனை கணவரிடம் கொடுத்து விட்டு நகர்ந்து விட கௌதமிற்கு தான் கஷ்டமாகிப் போனது.
“அப்பா… அம்மா வருத்தமா இருக்காங்க போலவே…”
“பெத்தவ இல்லையா தம்பி… இயல்பான பயம் தான்.. உனக்கு அங்கே சாப்பாடு, தங்கும் இடம் இதெல்லாம் சரியாக இருக்குமா? அப்படின்னு கவலை… அதுவும் இல்லாமல் இப்பொழுது போல நினைத்த நேரம் உன்னிடம் பேச முடியாது இல்லையா…”
“அப்பா… என்னோட நிலைமை…” என்று அவன் விளக்க முற்படுகையில் அவனை தடுத்தார்.
“அதெல்லாம் அவசியம் இல்லை தம்பி… நீ பத்திரமா பார்த்து போய்ட்டு வா… எனக்கு அது தான் முக்கியம்”
“அம்மா… ரொம்ப கவலையா..”
“அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் தம்பி… நீ பத்திரமா போய் வேலையை நல்லபடியா முடிச்சுட்டு வா” என்று இதமாக பேசினார்.
“அதே மன நிலையுடன் பாட்டி , தாத்தாவிடமும் பேசினான். பாட்டியிடமும், தாத்தாவிடமும் அன்னையை பத்திரமாக கவனித்துக் கொள்ளுமாறு வேண்டுதலை விடுத்தவன் மனமே இல்லாமல் போனை வைத்தான். தன்னுடைய அறைக்கு வந்து அத்தியாவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு… வேறு சில பொருட்களையும் கடைக்கு போய் வாங்கிக் கொண்டு வந்தான்.
போவது காட்டுக்கு… அதற்கு தோதான வகையில் சில உடைகள், பூச்சிகள் கடித்தால் அதற்கு தடவ மருந்துகள், தங்குவதற்கு இடம் கிடைக்கா விட்டால் என்ன செய்வது சென்று டென்ட் போடுவதற்கு தேவையான உபகரணங்கள், சமைப்பதற்கு கொஞ்சமாய் சில சாமான்கள்,பாத்திரங்கள் , பேட்டரி லைட், பவர் பேங்க் இப்படி சில பொருட்களை கவனமாக வாங்கிக் கொண்டவன் பசிக்கு சாப்பிடுவதற்கு பழங்கள், பிஸ்கட்,துரிதமாக உணவு தயாரிக்க நூடுல்ஸ் போன்றவைகளையும் வாங்கிக் கொண்டான்.
அந்த இடத்தில் அவனுக்கு எப்பேர்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது தெரியாத பட்சத்தில் எல்லாவற்றிக்கும் தயாராகவே கிளம்பினான் கெளதம்.
Superb ah iruku. Goutham ku anka katla ena mari varaverpu iruku nu therinjikanum. Sikarama next ud podunka sis….