
ரொம்ப பயத்தோட தான் இந்த எபி எழுதி போஸ்ட் பண்ணி இருக்கேன் மக்கா… எந்த நேரம் கம்ப்யூட்டர் காலை வாரும்னு தெரியலை… புது வருடத்திற்குள் சரி செய்ய முயற்சி செய்றேன்.
அத்தியாயம் 5
விடியற்காலை நேரத்தில் பஸ்ஸில் வந்து இறங்கினான் கெளதம்… நகரத்தில் இருந்த சிலரிடம் வழி கேட்டு ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்தான். தோளில் இருந்த கனமான பைகளையும் தூக்கிக் கொண்டு நடப்பது சிரமமாகவே இருந்தாலும் அவனது நடையில் கொஞ்சமும் சோர்வில்லை. ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு அவர்களது இருப்பிடத்தை வந்து சேர்ந்தான்.
அழகான கிராமம்… இன்னும் முழுதாக விடியாத அந்த நேரத்தில் கூட அந்த மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதை எண்ணி வியந்து போனான். பெண்கள் அணிந்திருக்கும் சேலை கூட வேறு விதமான முறையில் இருந்தது. பின் கொசுவம் இடுப்பு வரை மயிலின் தோகை போல விரிந்து இருந்தது. ஆண்கள் அணியும் முழுக்கை சட்டை போல கை முழுவதும் மறைந்தபடி அவர்கள் உடுத்தி இருந்த ஜாக்கெட் தொப்புள் வரை நீண்டது.. கணுக்கால் கூட வெளியே தெரியாத அளவிற்கு அத்தனை பாங்குடன் அவர்கள் உடை அணிந்திருந்த விதம் அவனை கவர்ந்தது.
புதிதாக ஒருவன் அங்கே நுழையவுமே… பெண்கள் வேகமாக தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கொள்ள… இளவயது பையன்கள் அவனது பாதையை மறித்துக் கொண்டு நின்றார்கள்.
“யார் நீங்க? இங்கே எதுக்கு வந்து இருக்கீங்க?” என்றான் ஒருவன்…
“ஹ.. வழக்கம் போல ஏதாவது கம்பெனியில் இருந்து வந்திருப்பார் போல முத்தையா…”என்றான் மற்றவன்
“அப்படி மட்டும் சொல்லட்டும்… வழக்கமா நாம அந்த மாதிரி வந்தவங்களுக்கு என்ன கவனிப்பு கொடுப்போமோ அதையே கொடுத்துடுவோம்” என்று அவர்களுக்குள்ளேயே பேசிக் கொள்ள கெளதம் சுதாரித்தான்.
‘இவங்க கிட்டே இப்போதைக்கு உண்மையை சொன்னா … வந்த காரியம் கெட்டுடும்’ என்று எண்ணியவன் அவர்களைப் பார்த்து சிநேகமுடன் சிரித்தான்.
“இங்கே ஊர்த் தலைவர் யாரு? நான் அவரைப் பார்க்கணுமே..” என்றான் முகத்தை நல்ல பிள்ளையாக வைத்துக் கொண்டு.
“முதல்ல நீங்க யாரு? என்ன விஷயமா இங்கே வந்தது இருக்கீங்கன்னு சொல்லுங்க… அதுக்கு பிறகு அய்யாவை பார்க்க உங்களை விடறதா இல்லையானு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்.” என்று முத்தைய்யன் அமர்த்தலாக கூற… நிதானம் இழக்காமல் இருக்க வெகுவாக போராடினான் கெளதம்…
‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு… இப்பொழுது காரியம் தான் முக்கியம்’ என்று மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டவன் முகத்தை சிரிப்பை பசை போட்டு ஒட்டிக் கொண்டதை போல வைத்துக் கொண்டான்.
“நான் வெளியூர்…”
“அதுதான் எங்களுக்கே தெரியுதே…”என்று மீண்டும் முத்தைய்யன் ஊடாக நக்கலாக பேச… அவனது நக்கல் பேச்சில் கொஞ்சம் பாதிப்படையாதவன் போல தொடர்ந்து பேசினான்.
“என்னோட படிப்புக்காக இங்கே தங்கி உங்க வாழ்க்கை முறையை எல்லாம் தெரிஞ்சுக்க வந்தது இருக்கேன்… எனக்கு தங்க ஒரு இடம் வேணும்” மற்றவர்களின் பார்வையில் இப்பொழுது மாற்றம் வந்திருக்க முத்தைய்யன் மட்டும் சந்தேகத்துடன் இன்னும் ஊன்றி பார்த்தான்.
“உன் பேர் என்ன? எந்த ஊரில் இருந்து …” என்று அவன் விசாரித்துக் கொண்டிருக்கைலேயே ஏதோ சலசலப்பு நிகழ… திரும்பிப் பார்த்த முத்தைய்யன் மரியாதையுடன் ஒதுங்கி வழி விட்டு நின்றான்.
“அய்யா… இவன் ஏதோ படிப்புக்காக நம்ம ஊரைப் பத்தி…”என்று பேசிக் கொண்டே போனவனை ஒற்றை கை உயர்த்தி தடுத்தார் அந்த மனிதர்.
‘இவர் தான் இந்த மக்களுக்கு தலைவர் போல’ என்று எண்ணிக் கொண்டவன் அவரைப் பார்த்து மரியாதையுடன் கரம் குவித்தான்.
“பொதுவா நாங்க வெளியாட்களை எங்க கூட தங்க அனுமதிக்கிறது இல்லை”
“அய்யா… நான் உங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்க மாட்டேன்… மக்களை சந்திச்சு உங்க பழக்க வழக்கத்தை மட்டும் கேட்டு தெரிஞ்சுப்பேன்… அதுவும் அவங்களுக்கு தோதான நேரத்தில்… அவங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் தான்” வேகமாக சொல்லி முடித்தான் கெளதம்.
“அதுக்காக எல்லாம் அசலூர்க்காரனை நம்பி எங்களோட சேர்த்துக்க முடியாது…”
“அப்படி சொன்னா எப்படி அய்யா? உங்க மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம் எல்லாம் நாலு பேருக்கு தெரிஞ்சா உங்களுக்கு பெருமை தானே?”
“அப்படி எந்த பெருமையும் எங்க மக்களுக்கு தேவை இல்லை”என்றார் தலைவர் மருது பட்டென…
“இப்படி உங்களை மாதிரியே நிறைய பேர் நினைச்சு இருந்தாங்கன்னா நமக்கு பலகாலம் முன்னாடி வாழ்ந்த எத்தனையோ பேரைப் பத்தி இப்போ இருக்கிற மக்களுக்கு தெரியாமலே போய் இருக்கும்… ராஜராஜ சோழன், கரிகாலன், வீரபாண்டிய கட்ட பொம்மன்…”
“அது நம்ம சிவாஜி நடிச்ச படமில்லை…” கூட்டத்தில் யாரோ ஒருவர் சந்தேகம் கேட்க… மொத்த கூட்டமும் கொல்லென்று சிரித்து வைத்தது.
“பார்த்தீங்களா சார்… சிவாஜின்னு ஒருத்தர் இல்லன்னா நம்மில் பலபேருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படிங்கிற ஒரு பெரிய வீரனைப் பத்தி தெரியாமலே போய் இருக்கும். அதே மாதிரி தான் இதுவும்… உங்க மக்களோட பெருமையை எல்லாம் நான் தெரிஞ்சுக்கிட்டு போய் ஊரில் எல்லாருக்கும் சொன்னா.. தலைமுறை தாண்டியும் நிலைச்சு இருக்கும் உங்க பெருமை” என்று சரியான இடத்தில் அடிக்க… அவரையும் அறியாமல் அவர் தலை தானாகவே ஆடியது.
“முத்தைய்யா … தம்பிக்கு நல்லதா ஒரு வீட்டைக் காட்டு… அப்படியே வேற எதுவும் உதவி தேவைபட்டா அதையும் செஞ்சு கொடு.” என்று கூறிவிட்டு அவர் நகர… அவரை தடுத்து நிறுத்தி அவர் காதில் எதையோ முத்தையன் குசுகுசுக்க .. சில நொடி தயங்கியவர்..அடுத்த நிமிடமே சம்மதமாக தலை அசைத்து விட்டு நகர… அது என்ன ரகசியம் என்ற சிந்தனை கௌதமுக்குள் ஓடத் தொடங்கியது.
‘எதுவா இருந்தாலும் சமாளிச்சுக்க வேண்டியது தான்.’ என்ற துணிவுடன் வெற்றிகரமாக முதல் அடியை எடுத்து வைத்து விட்ட நிம்மதியுடன் பெருமூச்சு விட்டான் கெளதம்.
“அவரை ஏமாத்தின மாதிரி என்னை ஏமாத்த முடியாது… என்னோட பார்வை எப்பவும் உன்னை சுத்தி தான் இருக்கும்.. ஏதாவது தப்பு செஞ்சன்னு தெரிஞ்சது அப்புறம் உன்னோட உடம்பில் உயிர் இருக்காது” என்று அவனை மிரட்டிய முத்தையன் முன்னால் நடக்க.. பயந்தவன் போல முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை தொடர்ந்து சென்றான் கெளதம்.
சில குடிசைகளைத் தாண்டி அங்கே கௌதமை அழைத்துப் போன முத்தைய்யன் ஒரு பாழடைந்த வீட்டின் உள்ளே குரல் கொடுத்தான்.அந்த ஊரில் அதுவரை அவன் பார்த்த வீடுகளிலேயே அது கொஞ்சம் வசதியான ஓட்டு வீடாக இருந்தது. அதே சமயம் கொஞ்சம் பாழடைந்தும் காணப்பட்டது.
“மருதாணி…. ஏ… மருதாணி… சீக்கிரம் வெளியே வா… எத்தனை நேரம் கூப்பிடறோம் காதில் விழலையா உனக்கு… செவுட்டு…****” என்று திட்ட… அது எதையும் கெளதம் கண்டுகொள்ளவில்லை.
அந்த வீட்டின் கதவு திறக்க… சூரியனின் கதிர்களை விட அதிக பிரகாசத்துடன் வெளியே வந்து நின்றாள் மங்கையவள். அழகென்றால் சாதாரணமான அழகில்லை… விண்ணுலக தேவதை போல தெய்வீகமான அழகு… ஆனால் அந்த அழகிற்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத கவலை அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது.
அவளது அழகில் கெளதம் சில நொடிகள் பிரமித்து போனது என்னவோ நிஜம்… ஆனால் கடமை அவனுக்கு வந்து இருக்கும் வேலையை பற்றி நினைவுறுத்த… முயன்று மனதை அடக்கினான்.