Thanalai Erikum Panithuli 6

2
1108
thanalai erikum panithuli madhumathi bharath Tamil novels

அந்த குழந்தைத்தனமான முகத்தில் இருந்து பெரும்பாடுபட்டு பார்வையை திருப்பினாலும் அவளது கண்களில் இருந்த சோகம் அவன் நெஞ்சைப் போட்டுக் குடைந்தது.

“அப்படி என்ன தான் செஞ்சுகிட்டு இருக்கே இவ்வளவு நேரம்… தரித்திரம் பிடிச்ச கழுதை பொழுதுக்கும் தூங்கிட்டே இருப்பியா?” என்று அவளை அதட்ட.. கௌதமனுக்கே முத்தையனின் குற்றச்சாற்று அநியாயமாக தோன்றியது.

குளித்து முடித்து பளிச்சென புதுமலரைப் போல இருந்தாள் அவள். இடைவரை நீண்டிருந்த அவளது கூந்தலில் இருந்து சொட்டிய நீர்த்துளிகள் அவள் சற்று முன் வரை குளியலறையில் இருந்ததை சொல்லாமல் சொன்னது.

அதற்காக அவளுக்கு பரிந்து கொண்டு அவன் பேசி விட முடியுமா? வாய் மூடி வேடிக்கை பார்த்தான்.

“வழியை விடு…”

“எதுக்கு?” மெல்லிய குரலில் கேட்டாலும் அந்த குரலுக்கு பதில் சொல்லாமல் யாராலும் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது என்றே அவனுக்கு தோன்றியது.

“அதை எல்லாம் உனக்கு சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை.. புரிஞ்சுதா?”

“இது என்னோட வீடு.. அதனால எனக்கு பதில் சொல்லித் தான் ஆகணும்” மீண்டும் அதே குரல்… ஓரக்கண்ணால் அவளைப் பார்க்கத் தொடங்கினான் கெளதம்.

“உன்னோட வீடா? போனா போகுதுன்னு தங்கிக்க இடம் கொடுத்தா… சொந்தம் கொண்டாடுறியா…. வெட்கம் கெட்ட ஜென்மமே.. ஒழுங்கா வழியை விட்டு நகர்ந்து நில்…”

அப்பொழுதும் அவள் நகரவில்லை. அவளது உறுதி அவனை அசைத்தது.

“இந்த வீட்டில் இவரை தங்க வைக்க சொல்லி தலைவர் சொல்லி இருக்கார்…” என்று அவன் உத்தரவாக சொல்ல..அவள் முகத்தில் ஏதேதோ உணர்வலைகள்…

“அவர் இங்கே தங்கினால் நான் எங்கே தங்குவது?” அவள் குரல் லேசாக நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

“ஏன் உனக்கென்ன போக இடமா இல்லை..தினமும் ஒரு வீட்டு வாசலில் போய் தங்கு…”

“சொந்தமா வீடு இருக்கும் பொழுது நான் எதுக்கு வீடு வீடா போய் தங்கணும்”

“இது தலைவரோட முடிவு..இதை கேட்டுகிறதும்… மறுக்கிறதும் உன்னோட விருப்பம்..ஆனா விளைவுகள் எப்படி இருக்கும்னு உனக்கு நான் சொல்லித் தான் தெரியணும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்று கூறிய முத்தையாவை எதிர்த்து பேசாமல் அமைதியாகவே நின்றாள்.

“உன்னோட முடிவைப் பத்தி எங்க யாருக்கும் கவலை இல்லை… அப்படியே நீ ஏதாவது சொல்லணும்னா தலைவர் கிட்ட பேசிக்கோ…இப்போ எங்களுக்கு வழியை விடு” என்று அதட்டி பேச அப்பொழுதும் அவள் அசையவில்லை.

“இது என்னோட அப்பாவும்,அம்மாவும் வாழ்ந்த வீடு… இதை விட்டு நான் வெளியேற மாட்டேன்..இங்கே தான் இருப்பேன்..”

“இந்த வீட்டில் தான் அவரை தங்க வைக்க சொல்லி அய்யா சொல்லிட்டார்னு சொல்றேனே..அப்புறம் ஏன்… ஓ..இப்போ புரியுது… இந்த வெளியூர் ஆளோட இந்த வீட்டிலேயே ஒண்ணா இருந்துக்கலாம்னு நினைச்சியோ?”என்று விஷமமாக கேள்வி கேட்க.. அடுத்த நொடி அவள் கண்களில் அனல் பறந்தது.

“என்னோட குலசாமி வன பத்ரகாளி… அவளை கும்பிடுற நானும் காளியா  தான் இருப்பேன். மத்தவங்களுக்குத் தான் தெரியாது. என்கிட்டே வம்பு செஞ்சதுக்காக என் கையாலே அடி வாங்குனியே.. உனக்குமா மறந்து போச்சு” என்று எள்ளலாக அவள் கேட்ட விதத்தில் அவளுக்கு ஒரு சபாஷ் போடத் தோன்றியது கௌதமுக்கு…

“ஏய்!” என்று அவளை நோக்கி கையை ஓங்கியபடி முன்னேறினான் முத்தையா. அவளது அலட்சியம் நிரம்பிய பார்வையில் தானாகவே அவனது கை கீழிறங்கியது.

“ஏத்தா… மருதாணி.. நீயும் என்ன இப்படி பேசிக்கிட்டு திரியற.. இந்த வீட்டில் இந்த பையனை தங்கிக்க சொல்லி நம்ம அய்யாவோட உத்தரவு… நீ என்ன சொல்ற… முடிவா சொல்லு” என்றார் கூட்டத்தில் இருந்த வேறொருவர். முத்தையாவை நம்பி இனியும் பயன் இல்லை என்பது அவருக்கு மட்டுமில்லை அவர்களது கூட்டத்திற்கே தெளிவாகவே தெரிந்தது.

“இந்த வீட்டை விட்டு நான் வெளியேறனும் அப்படின்னு தானே தலைவர் உத்தரவு…”

“ஆமா…”

“சந்தோசம்.. இவர் எங்க  வீட்டில் தங்கிக்கட்டும்.. நான் எங்க வீட்டு திண்ணையில் படுத்துக்கறேன்…”

“என்ன மருதாணி..விளையாடுறியா.. கொட்டுற பனியில் வெளியில் படுத்தா இரண்டே நாளில் சீக்கு வந்து செத்துடுவ…”

“அதை தானே நீங்களும்… உங்க அய்யாவும்.. ஏன் இந்த கிராமமும் எதிர்பார்க்குது?”என்று நெற்றிப்பொட்டில் அடித்தார்ப் போல அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தான் அங்கே யாரும் தயாராக இல்லை…

அந்த வார்த்தைகளில் இருந்த வேதனையை உணர்ந்து கொண்ட கெளதம் லேசாக விழி உயர்த்தி அவளைப் பார்த்தான். கானகத்தில் தொலைந்து போன  சின்னஞ்சிறு குழந்தை போலவே பரிதவிப்புடன் இருந்தது அவளது முகம்….

ஒரு நொடி தான்.. நொடிகளுக்குள் தன்னை மீட்டுக் கொண்டவள் தலையை நிமிர்த்தி அவர்களிடம் பேசத் தொடங்கினாள்.

 “இவரை கொஞ்சம் இங்கேயே இருக்க சொல்லுங்க.. வீட்டுக்குள் எனக்கு வேணும்கிற அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துட்டு வர்றேன்… அதுக்குப் பிறகு இவர் உள்ளே போகட்டும்” என்று ஆணையிட்டவள் உள்ளே சென்று திரும்பி வரும் பொழுது கையில் சில பாத்திரங்களும்.. கம்பளியும் இருந்தது. மங்கிப் போன ஒரு போட்டோவை அங்கே ஒரு ஓரமாக வைத்து கும்பிட்டவள் கட்டளையிடும் முக பாவத்துடன் எதிரில் நின்றவர்களை பார்த்து பேசத் தொடங்கினாள்.

“வீட்டில் தங்கிக்க மட்டும் தான் அனுமதி… வீட்டில் இருக்கும் பொருட்களை எடுக்கவோ…கலைக்கவோ… மாற்றி வைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை… புரிந்ததா?” என்றவள்… அவர்களின் பதிலை எதிர்பாராமல் வேக நடையுடன் அங்கே இருந்த திண்ணையில் போய் அமர்ந்து கொண்டாள்.

‘ஆமா..பெரிய அரண்மனை … இங்கே இருந்து திருடிட்டு போகப் போறேன்’ என்று எண்ணியவன் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அங்கே இருந்த பொருட்களை கலைக்காத வண்ணம் தன்னுடைய பொருட்களை எடுத்து வைத்தவனின் காதுகளில் அவனுடன் வந்தவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசியபடி கலைந்து செல்வது தெரிந்தது.

‘அப்பாடா… எல்லாரும் போய்ட்டாங்க.. ஒரு வழியா கிராமத்துக்குள்ளே வந்தாச்சு… இனி அடுத்து என்ன செய்றது?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே மெலிதான சீறல் அவனது கவனத்தை கலைத்தது.

“என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.. உன் வேலையைப் பார்த்துட்டு நீ போ…”

“வீணா பிடிவாதம் பிடிக்காதே மருதாணி… இப்போ மார்கழி மாசம் இந்த நேரத்தில் நம்ம காட்டில் அதிகமா குளிர் எடுக்கும்… இப்படி திண்ணையில் படுத்தா குளிரில் விறைச்சே செத்துடுவ…”

“ஆடு நனையுதேன்னு..ஓநாய் அழுவுதே”

“நான் சொன்னா தலைவர் உன்னை மன்னிச்சுடுவார்…”

“ம்ம்ம்.. அப்புறம்…”

“ஏற்கனவே பேசின மாதிரி நானே உன்னை கல்யாணமும் செஞ்சுக்கறேன்…”

“அதுக்கு வேற எவளையும் பாரு…”

“இந்த அளவுக்கு பிடிவாதம் நல்லதில்லை மருதாணி…”

“இன்னுமா நீ கிளம்பல…”

“எனக்கு பணிஞ்சு போறதைத் தவிர உனக்கு வேற வழியில்லை மருதாணி…”

“இந்த மருதாணி எரிஞ்சு சாம்பல் ஆனாக் கூட உன்னோட திட்டம் பலிக்காது…”

“எத்தனை நாளைக்கு என்கிட்டே இருந்து தப்பிச்சுட முடியும்னு நினைக்கிற… இப்போ எனக்கு வசதியா நீயும் தெருவில்  தான் இருக்க.. உன்னைக் காப்பாத்திக்க நாலு சுவர் கூட இல்லை… ஒழுங்கா என் சொல் பேச்சு கேட்டு நட…இல்லைன்னா ”

“வெளியே போடான்னு சொன்னா போவியா.. இல்ல அதுக்குள்ளே நீயாகவே ரோசப்பட்டு கிளம்பிடுவியா?”  எள்ளலாக அவள் கேட்ட விதத்தில் முகம் ஆத்திரத்தில் சிவக்க, அவளை நோக்கி கையை ஓங்கியபடி முன்னேறினான் முத்தையா.

“ஏய்! என்னடி…” என்று ஆத்திரத்துடன்  முத்தையா முன்னேற… அதற்கு மேலும் தாமதிப்பது ஒரு நல்லதல்ல என்பதை உணர்ந்த கெளதம், வேகமாக கதவை திறந்து கொண்டு அவர்கள் முன் போய் நின்றான்.

முத்தையாவை பகைத்துக் கொண்டால் தான் வந்திருக்கும் வேலை கெட்டுவிடும் என்று தோன்ற… முகத்தில் அமைதியை வருவித்துக் கொண்டு இயல்பாக பேசத் தொடங்கினான்.

“இங்கே யார் வீட்டிலும் எனக்கும் சேர்த்து சாப்பாடு சமைச்சு கொடுப்பாங்களா?”

அவன் அங்கே இருப்பதையே இருவரும் மறந்து விட்டார்கள் போலும்… திடீரென இவன் இடையில்  வந்து அப்படி கேட்கவும் இருவரும் சில நொடிகள் முழித்தார்கள். மருதாணி பார்வையை திருப்பிக் கொள்ள… முத்தையா பல்லைக் கடித்தபடி கௌதமுக்கு  பதில் அளித்தான்.

“இங்கே என்ன ஹோட்டலா கட்டி விட்டு இருக்கோம்… உனக்கு பசிச்சா நீ தான் பொங்கி திங்கணும்…”

“பணம் கொடுத்திடறேன் சார்… எனக்கு சமைக்க தெரியாது…”

“அப்புறம் எதுக்கு தனியா கிளம்பி வந்த… கூட சமையலுக்கும் சேர்த்து யாரையாவது கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல… இங்கே வந்து எங்களோட  உயிரை வாங்குற…” என்று எரிச்சலாக சொல்லிவிட்டு , மருதாணியை முறைத்தவண்ணம் அங்கிருந்து நகர… திரும்பி பார்க்காமலே மருதாணியின் நிம்மதிப் பெருமூச்சை கௌதமால்  உணர முடிந்தது.

யாருமே இல்லாத ஒரு பெண்ணுக்கு உதவியதோ அல்லது வேறு காரணமோ எதுவென்று தெரியாமல் கௌதமின் நெஞ்சில் இதம் பரவியது.

‘இந்த பெண்ணுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஒரு மனமும்… என்ன வேலைக்கு இங்கே வந்தாயோ…அதை மட்டும் பார்’ என்று மறுமனமும் மாறி மாறி உள்ளுக்குள் கூச்சலிடத் தொடங்கியது.

முதல் நாளே இது தனக்கு வேண்டாத வேலை என்று எண்ணியவன் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை குறித்து சிந்திக்கத் தொடங்கினான்.

வீட்டுக்குள் இருந்தாலும் அவ்வபொழுது அவன் கண்கள் மருதாணியை சுற்றி வந்து அவள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டது.

Facebook Comments Box

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here