Thanalai Erikum Panithuli 7

0
1001
thanalai erikum panithuli madhumathi bharath Tamil novels

அத்தியாயம் 7

கெளதம் ஊரில் இருந்து கிளம்பும் பொழுதே ஒரு சில துரித உணவு வகைகளை கையோடு கொண்டு வந்திருந்தான். இங்கே ஒருவேளை தன்னை ஊருக்குள் தங்கவும்… சாப்பிட உணவும் கொடுக்காமல் இருந்து விட்டால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கையுடன் அவன் வந்து இருந்தான். இப்பொழுது அவன் முத்தையாவிடம் சாப்பாடை பற்றி  கேட்டதற்கு காரணம் அவனை அந்த வீட்டில்  இருந்து வெளியே அனுப்புவதற்காகத் தான்.

யாருமற்ற நிலையில் நிராதரவான தோற்றத்துடன் இருந்த மருதாணியை ஏனோ அவனால் அப்படியே விட முடியவில்லை. அவளுக்கு என்ன பிரச்சினையோ அவனுக்குத் தெரியாது. வாழ்நாள் முழுவதும் அவனால் அவளை காக்கவும் முடியாது. ஏதோ அவனால் முடிந்த சிறு உதவி என்ற அளவில் மட்டும் தான் அப்போதைக்கு அவன் மனதில் எண்ணம் இருந்தது. அதையும் மீறி அவன் மனதில் அவளது அழகும், தைரியமும் தாக்கத்தை ஏற்படுத்தியது நிஜம். ஆனால் அதை அவன் இன்னும் உணராமல் போனது தான் சோகம்.

விடியற்காலை நேரத்தில் அங்கே வந்ததால் காலை பத்து மணி அளவில் கையில் கொண்டு வந்திருந்த பழங்களை உண்ணத் தொடங்கினான். காலை உணவை முடித்த பின் மெல்ல எட்டி வெளியில் பார்த்தான். மருதாணி வாசலின் ஒரு மூலையில் கல்லை வைத்து அடுப்பு மூட்டி எதையோ சமைத்துக் கொண்டிருந்தாள்.

கையில் கரண்டிக்கு பதிலாக குச்சியும் அதன் நுனியில் கொட்டாங்குச்சியும் இருந்தது. அதை கரண்டி போல பயன்படுத்திக் கொண்டிருந்தாள்.

மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தவன் சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.

“நான் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வர்றேன்… வீட்டை பூட்டிட்டு போகட்டுமா? நீங்க இங்கே தான் இருப்பீங்கன்னா திறந்து வச்சுட்டே போவேன்…”

“….”

“மருதாணி மேடம்… உங்களைத் தான்…”அழுத்தமாக கூப்பிட்டான்.

“நான் இங்கே தான் இருப்பேன்… இருந்தாலும் உள்ளே உங்க பொருட்கள் இருக்கு.. அதனால பூட்டிட்டு போய்டுங்க…” உணர்ச்சிகள் அற்ற அந்த குரல் கௌதமை ஏதோவொரு விதத்தில் வருத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

“வீட்டுக்குள்ளே உங்க பொருட்களும் இருக்கே… உங்களுக்கு ஏதாவது எடுக்க வேண்டி இருந்தா…”

“அவசியம் இல்லை.. நீங்க பூட்டிட்டே போகலாம்” என்று சொன்னவள் தொடர்ந்து அங்கேயே நின்றால் கெளதம் பேச்சை தொடருவான் என்று நினைத்தாளோ என்னவோ வேலை இருப்பது போல நகர்ந்து வீட்டின் பக்கவாட்டின் வழியாக சென்று கொல்லைப்புறத்திற்குள் சென்று விட… கௌதமிற்கு முகம் இருண்டு போனது.

‘நான் என்ன வேண்டுமென்றே பேச்சை வளர்ப்பதற்காகவா அவளிடம் பேசினேன்… இப்படி நடந்து கொள்கிறாள்’ என்று எண்ணியவன் அதே கோபத்துடன் விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறினான்.

உள்ளூர் மக்கள் யாரிடமும் பேச்சை வளர்க்காமல் ஊரை சுற்றி வந்தான்.

‘தான் வந்திருக்கும் வேலையை முடிக்க எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதில் தவறில்லை. ஆனா எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும். நான் இதை நல்லபடியா முடிச்சா தான் விசாலம் அம்மா என்னைப் பார்க்கிற பார்வையில் மரியாதை இருக்கும். அதற்காகத் தானே இத்தனை பாடு…’

அன்று முழுக்க… வெறுமனே ஊரை சுற்றி வந்தான். கண்ணில் எதிர்படும் ஆட்களிடம் எல்லாம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக அவ்வபொழுது அவர்கள் வீட்டையும்… ஊரில் சில இடங்களையும் போட்டோ எடுத்தான். அவர்களைப் பற்றியும்… அவர்களின் பழக்க வழக்கங்களையும் முழு ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அவர்கள் பேசுவதை எல்லாம் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டான். மதியமும் கைகளில் இருந்த பழங்களை சாப்பிட்டவன் இரவு வீடு திரும்பும் வரை நிறைய பேரை சந்தித்து சாதாரணமாக பேசி சில தகவல்களை சேகரித்தான்.

இரவு ஏழு மணி வாக்கில் வீட்டுக்கு திரும்பியவன் மிச்சம் மீதி இருந்த பழ வகைகளையும் தின்று தீர்த்தான். பழங்கள் சீக்கிரமே கெட்டு விடுவதற்கான வாய்ப்புகள் இருந்ததால் அதை முதலில் சாப்பிட்டு காலி செய்தான்.

அன்றைய நாள் முழுக்க அந்த மக்கள் பேசியதை எல்லாம் மீண்டும் மீண்டும் ஒலிக்க செய்து கேட்டான். அதில் ஏதாவது தனக்கு பயன்படுமா என்ற விதத்தில் யோசித்துக் கொண்டிருந்தான். சட்டென மருதாணியின் நினைவு வர… காலையில் அவள் மீது ஏற்பட்ட கோபத்தை எல்லாம் மறந்து விட்டு வேகமாக வாசலுக்கு விரைந்தான்.

ஏனெனில் அவன் வீட்டிற்கு திரும்பியதில் இருந்து அவளைப் பார்க்கவே இல்லை… அவள் வெளியே போய் விட்டாளா? அல்லது தான் இல்லாத நேரத்தில் அந்த முத்தையா வந்து எதுவும் வம்பு செய்து அவள் ஆபத்தில் மாட்டிக் கொண்டாளோ? என்று அவன் மனம் நொடிப்பொழுதில் ஆயிரம் கற்பனைகளை செய்தது.

மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்டு இருந்த அந்தப் பகுதி அந்த நேரத்திலேயே இருட்டி இருந்தது. அளவுக்கதிகமான பனியினால் தான் கெளதம் சீக்கிரமே வீட்டுக்கு திரும்பி இருந்தான். இந்த இருட்டிலும், பனியிலும் அவள் எங்கே போய் இருக்கக்கூடும்?

எதற்கும் ஒருமுறை தேடிப் பார்க்கலாம் என்று நினைத்தவன் தன்னுடைய போனில் டார்ச்சை ஆன் செய்து விட்டு வீட்டின் திண்ணைப் பகுதியில் தேடினான். அங்கே இல்லாமல் போகவே… காலையில் அவள் நுழைந்த பக்கவாட்டு பகுதி வழியாக நுழைந்து கொல்லைப்பகுதிக்கு சென்றான்.

அங்கே வீட்டின் பின்புறம் போடப்பட்டு இருந்த கல்லில் நிழல் ஓவியமாக மருதாணியைப் பார்த்த பிறகு தான் அவன் மனம் நிம்மதி அடைந்தது.

அவளைக் காணும் முன் வரை ஏன் அத்தனை பதட்டம் அவனுக்கு?…

‘ஒருவேளை அவளுக்கு ஏதாவது நடந்தால் முதல் கேள்வி தன்னிடம் தானே கேட்பார்கள் என்ற எண்ணத்தில் தான் அந்த பதட்டம் வந்தது போல’ என்று தன்னைத் தானே  சமாதானம் செய்து கொண்டான்.

அவனுடைய கணிப்பு சரியாக இருந்தால்… காலையில் அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிளம்பி அங்கே வந்தவள் அதே இடத்தில் தான் இத்தனை மணி நேரமாக நின்று கொண்டிருக்க வேண்டும்… அவளை தேடி வாசலுக்கு போன பொழுது காலையில் அவள் சமைத்துக் கொண்டிருந்த பாத்திரத்தில் உணவு தீய்ந்து போய் இருந்தததை கெளதம் பார்த்தான்.

‘காலையில் இருந்து அவள் சாப்பிடவும் இல்லை.. இருந்த இடத்தில் இருந்து அசையவும் இல்லை… என்ன தான் பிரச்சினை இந்த பெண்ணுக்கு…’

“மருதாணி… ஏன் இங்கே நிற்கறீங்க?”

“அது தான் என்னோட வீட்டை பிடுங்கி உங்களுக்கு கொடுத்துட்டாங்களே… நான் பின்னே வேறெங்கே இருப்பேன்…” என்று ஆத்திரமாக பெசியவளின் பேச்சில் இடைபுகுந்தான் கெளதம்.

“இல்லை மருதாணி… நான் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டுமென்று தான் உங்க தலைவர் கிட்டே கேட்டேன்… உங்க வீட்டில் தங்கிக்க சொல்லி அவராகத் தான் சொன்னார்… மேலும் உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டு என்னை இங்கே தங்க சொல்வார்னு எனக்குத் தெரியாது”.கௌதமின் குரலில் இருந்த வருத்தம் அவளுக்கு புரிந்தது போலவே தெரியவில்லை.

“அது தான் இப்போ தெரிஞ்சுடுச்சே… என்ன செய்ய போறீங்க… இந்த ஊரை விட்டு கிளம்ப போறீங்களா?”

“அது முடியாது மருதாணி… நான் வந்த வேலையை முடிக்காம நான் எப்படி கிளம்புவேன்?”

“அப்புறம் எதுக்காக இங்கே வந்து நின்னு இப்படி பேசிட்டு இருக்கீங்க…”

“ஒண்ணுமில்லை மருதாணி… நான் இந்த ஊருக்கு கிளம்பி வரும் பொழுதே… தங்குறதுக்கு இடம் கிடைக்கலைன்னா என்ன செய்றதுன்னு கூடாரம் போடுறதுக்கு உண்டான பொருட்கள் எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கேன். ஒரு ஆள் தாராளமா படுத்துக்கலாம். அதை வேணா உங்களுக்குத் தர்றேன்… நீங்க அதுல படுத்து தூங்கறீங்களா?”

“ஹ… என்னோட வீட்டை புடுங்கிட்டு கூடாரம் கொடுக்கறீங்களா? சபாஷ்… ஆனா காரணம் என்னவோ?”

“இதோ பாருங்க மருதாணி… தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க இப்படி வெளியில் தங்க நான் ஒரு காரணம் ஆகிட்டேன். வயசு பொண்ணு உங்களை… இந்த குளிரில் தனியா படுக்க வச்சுட்டு உள்ளே போய் பாதுகாப்பா படுத்துக்க எனக்கு மனசு வரல… அதே நேரம் உங்களை உள்ளே வந்து படுத்துக்க சொல்லவும் பயமா இருக்கு…நீங்க வயசுப் பொண்ணு வேற.. உங்க ஊர்க்காரங்களுக்கு தெரிந்தால் அது மேலும் உங்களுக்கு ஆபத்தாக முடியலாம். அதனால தான் சொல்றேன்… இந்த எண்ணம் உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க உங்க வீட்லயே படுத்துக்கோங்க… நான் கூடாரத்தில் படுத்துக்கறேன்.”

“உங்க அனுதாபம் எனக்குத் தேவை இல்லை… என்னோட  வீட்டைத் தான் தலைவர் பெரிய மனசு பண்ணி உங்களுக்கு தூக்கி கொடுத்துட்டாரே.. அப்புறம் எப்படி நான் அங்கே வந்து தங்குவேன்… வர மாட்டேன்.. ஒரு நாளும் வர மாட்டேன்… இந்த குளிரில் என்னோட மனசை மாதிரியே உடலும் விறைச்சு போகட்டும்… என்னோட  மனசுல இருக்கிற காயம் இன்னும் அதிகமாகட்டும். அப்போ தான் இதை விட அதிகமா வலிக்க வலிக்க அவங்களுக்கு திருப்பி கொடுக்க முடியும்.” என்று மூச்சு விடாமல் பேசியவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் கெளதம்.

‘இந்த ஊரின் மீது அவளுக்கு இத்தனை வெறுப்பா? ஒருவேளை என்னுடைய வேலைக்கு இவள் மூலம் எதுவும் உதவி கிடைக்குமா?’ என்ற யோசனையுடன் அவள் முகத்தையே இருளில் துளையிடுவதைப் போல பார்த்தான்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here