Thanalai Erikum Panithuli 8

0
1375
thanalai erikum panithuli madhumathi bharath Tamil novels

அத்தியாயம் 8

“மருதாணி மேடம்… உங்களுக்கு இந்த ஊர் மேல் ஏன் இத்தனை வெறுப்பு?… நீங்க எதுவும் தப்பு செஞ்சீங்களா? அதனால தான் இந்த ஊர் தலைவர் உங்க கிட்டே இத்தனை கடுமையா நடந்துக்கிறாரா?” தூண்டிலை வீசினான் கெளதம்.

அவன் கேட்ட கேள்வியில் அவளது இதயப் பறவை துடித்த துடிப்பு அவளின் கண் வழியே தெரிந்தது.

அடுத்த நொடியே அவள் பார்வையில் ஆவேசம் கூடி இருந்தது… அவளது வேல் விழிக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் அந்நேரமே அவனது உயிர் அவனை விட்டு பறந்திருக்கும்… அத்தனை கோபம் இருந்தது.

சுடர் விட்டு எரிந்த அவளது விழிகள் சொல்லாமல் சொன்னது அவள் தவறு செய்யாதவள் என்பதை. ஆனாலும் அப்படியே விட முடியாதே… அவள் வாய் வழியாக உண்மையை சொன்னால் தானே அவளை வைத்து தான் வந்திருக்கும் வேலையை முடிக்க முடியுமா , இல்லையா  என்பது குறித்து அவன் சிந்திக்க முடியும்.

“சொல்லுங்க மருதாணி… நீங்க என்ன நடந்ததுன்னு சொன்னா தானே என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியும்?” என்று கேட்க..மருதாணி தன்னுடைய பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

“எனக்கு உதவி செய்ங்கனு உங்க கிட்டே நான் எப்போ கேட்டேன்?”

“நீங்களா கேட்கலை தான்..ஆனா இப்போ நீங்க இருக்கிற நிலையில் இன்னொருவரின் உதவி உங்களுக்கு அவசியம் தானே…”அவளால் மறுக்கமுடியாத படி பேசினான் கெளதம்.

“இன்னொருவரின் உதவி எனக்குத் தேவையாக இருக்கலாம். ஆனால் அந்த இன்னொருவர் நீங்க தான்னு நான் உங்க கிட்டே சொல்லலியே…”

“அடுத்தவங்க கேட்டா தான் உதவி செய்யணுமா என்ன?… எனக்கு யாராவது கஷ்டத்தில் இருந்தா உடனே உதவி செஞ்சு தான் பழக்கம்..அவங்க வந்து கேட்கிற வரை வெயிட் பண்ணிட்டு இருக்க மாட்டேன்.” என்று பவ்யமாக கூற முதன்முதலாக மருதாணியின் கண்களில் மின்னல் வந்து போனது.  

“உங்க பழக்கத்தை பத்தி எல்லாம் இங்கே யாருக்கும் கவலை இல்லை… யாருனே தெரியாத ஆள் வந்து கேட்டதும் மனசுல இருக்கிற எல்லாத்தையும் கடகடன்னு ஒப்பிக்க நான் என்ன முட்டாளா?” என்று அலட்சியமாக கேட்டவளை வியப்புடன் பார்த்தான் கெளதம்.

‘நான் நினைத்த அளவிற்கு இந்தப் பெண் சாதாரணமானவள் இல்லை…அதி புத்திசாலி… இவளிடம் எச்சரிக்கையாக நடந்து கொண்டால் தான் நான் வந்திருக்கும் வேலையை கனகச்சிதமாக முடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டவன்…அப்போதைக்கு அவளிடம் பேசுவதை தள்ளிப் போட்டான்.

“ சாப்பிட்டீங்களா மருதாணி…”

“ஒரு விஷயத்தை தயவு செஞ்சு உங்க மனசில் பதிய வச்சுக்கோங்க…”

‘இப்போ நான் என்ன தப்பா கேட்டேன்’

“இது கிராமம்.. அதுவும் எங்க ஊரில் நிறைய கட்டுப்பாடுகள் உண்டு…”

‘இருந்துட்டுப் போகட்டும்’

“அதையும் மீறி ஒரு ஆம்பிளை இருக்கிற அதே இடத்தில் நானும் இருக்கிறேன்னா… அதுக்கு ஒரு காரணம் என்னோட பெத்தவங்க வாழ்ந்த இந்த இடத்தை விட்டு நகரப் பிடிக்காமத் தான்…”

“இதை எல்லாம் எதுக்கு என்கிட்டே சொல்லிட்டு இருக்கீங்க…”

“நமக்கு பக்கத்திலேயே இருக்க சம்மதிச்சுட்டாளே… அப்படின்னு உங்க மனசில் வேற ஏதாவது எண்ணம் ஓடினா…”

“ஹா ஹா… வாட்? கம் அகெயின்” என்று கேட்டவன் அடக்க முடியாமல் சிரித்து முடிக்க…. மருதாணியின் முகம் யோசனையானது…

 “இதோ பாருங்க மருதாணி… நான் இங்கே வந்தது வேலை விஷயமாகத் தான்… மற்றபடி இங்கே வந்ததும் எந்த பொண்ணையும் பார்த்ததும் மயங்கி… அப்புறம் மயக்குற ஆள் நான் கிடையாது… நான் வேற ரகம்… எனக்கு எப்பவும் என்னோட வேலை தான் முக்கியம்… இப்போ உங்க கிட்டே நான் வந்து பேசினதுக்குக் காரணம் மனிதாபிமான அடிப்படையில் தான்.

காலையில் நீங்க சமைச்ச சாப்பாடு தீஞ்சு போய் இருந்ததைப் பார்த்தேன்… நீங்க வேற சமைச்சு சாப்பிட்ட மாதிரியும் தெரியல… அதனால தான் சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்… என்கிட்டே கொஞ்சம் பழங்கள் இருக்கு…அதை உங்களுக்கு தரலாமே அப்படிங்கிற எண்ணம் மட்டும் தான் எனக்கு… மற்றபடி நீங்க சொல்ற… x y z எல்லாம் என் பக்கத்தில் நெருங்கக் கூட முடியாது…” என்று தீர்க்கமாக பேசி முடித்தவன் அதன்பிறகு அங்கே நில்லாமல் கிளம்பி வீட்டுக்குள் சென்று விட தனித்து விடப்பட்ட மருதாணி யோசனையானாள்.

‘அவசரப்பட்டு அவர்கிட்டே அப்படி பேசிட்டோமோ’ என்று எண்ணியவள் அதே நினைவுடன் திண்ணைக்கு சென்றாள்.

அவள் வந்து அமர்ந்ததும் சில நிமிடங்கள் கழித்து அங்கே வந்து நின்றான் கெளதம்.

“இந்த தட்டில் கொஞ்சம் பழங்கள் வச்சு இருக்கேன்… இது என்கிட்டே கூடுதலா இருக்கிற போர்வை… இரண்டில் எது உங்களுக்குத் தேவைப்படுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்… ஒருவேளை  இதை எல்லாம்  எடுத்துக்கிட்டா இவன் நம்ம கிட்டே தப்பா நடந்துப்பானோ அப்படின்னு எண்ணம் இருந்தா.. இது எதையும் நீங்க  தொட்டுக்கூட பார்க்க வேண்டாம்…” என்று சொன்னவன் அடுத்த நொடியே அங்கிருந்து சென்று விட்டான்.

சாப்பிட்டு முடித்து சில மணி நேரங்கள் கழித்து மருதாணி என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்க்க… அவளோ உடலைக் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.அவன் கொடுத்து இருந்த இருந்த பொருட்களை அவள் தொட்டுக் கூட பார்க்கவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு மனதுக்குள் ஏமாற்றம் சூழ்ந்தது.

‘இங்கே வந்து ஒரு நாள் தானே ஆகுது… அதுக்குள்ளே எப்படி இந்த பொண்ணு மனசு மாறும்? கொஞ்சம் கொஞ்சமா தான் மாற்ற முடியும்?’ என்று நினைத்தவன் அறைக்குள் புகுந்து அன்று பதிவு செய்த தகவல்களை ஹெட்செட்டில் கேட்கத் தொடங்கினான்.

வீட்டிலும், அமெரிக்காவிலும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு இந்த வாழ்க்கை புதிதாக இருந்தது. இரவில் ஏதேதோ பூச்சிகளின் அலறல்களும், மிருகங்களின் சத்தங்களும் அவனை நிம்மதியாக தூங்க விடவில்லை.அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டான்.

நள்ளிரவில் எழுந்து தூக்கம் வராமல் அறைக்குள்ளேயே சற்று நேரம் நடந்தவன்… ஜன்னல் வழியாக மெல்ல எட்டிப் பார்த்தான்.

குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள் மருதாணி. அவளிடம் இருந்த போர்வையை அவள் போர்த்தி இருந்தாலும் அங்கே அடித்த குளிரில் இருந்து முழுதாக அவளை காத்துக் கொள்ள முடியவில்லை அவளால்.அறையை திறந்து கொண்டு வெளியே வந்தவன் தன்னுடைய போர்வையை அவளுக்கு போர்த்தி விடலாமா என்று சிந்தித்தவன் வேண்டாம் என்று விட்டு விட்டான்.

‘அவளாகவே வந்து அந்த போர்வையை எடுத்து போர்த்திக்கட்டும்… இப்போ வேற வழி தான் யோசிக்கணும்’ என்ற முடிவுக்கு வந்தவன்… சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தான்.

காலையில் அவள் சமைப்பதற்காக வைத்திருந்த இடத்தில் இருந்த மிஞ்சிப் போன விறகுகளைப் பார்த்தவன் அதை எல்லாம் அவளுக்கு கொஞ்சம் அருகில் வைத்தவன் நெருப்பு மூட்டி… கணப்பை ஏற்பாடு செய்தான்.

முழுதாக குளிரை விரட்டாவிட்டாலும் ஓரளவுக்கு அவளுக்கு உதவியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தவன் அதன் பிறகு அறைக்குள் போய் உறங்கி விட்டான்.

காலையில் எழுந்த மருதாணி முதலில் பார்த்தது தனக்காக அவன் செய்திருந்த அந்த மாற்று ஏற்பாடைத் தான். ஒரு நொடி அவள் உள்ளம் நெகிழ்ந்து போனது.

தாயும், தந்தையும்  இருந்த  வரை எத்தனை அன்புடனும், பாதுகாப்புடனும் இருந்தோம் என்ற நினைவுகள் அவள் கண்ணில் வந்து போக… கண்ணின் ஓரம் ஒரு துளி நீர் கூட எட்டிப் பார்த்தது.பெற்ற தாயைப் போல தன்னை நினைத்து எப்பொழுதும் அம்மாடி… தாயி.. என்று அழைக்கும் தந்தையின் முகமும்… அன்னையின் மங்களகரமான முகமும் அவள் கண் முன்னே வந்து போனது.

‘இத்தனை அவசரம் ஏன் அவர்களுக்கு? இந்த உலகத்தை விட்டு போவது என்று முடிவெடுத்த பின் என்னையும் அவர்கள் அழைத்து செல்லாதது ஏன்? அவர்கள் சொல்லி இருந்தால் மறுத்து பேசி இருப்பேனா? சாவிலும் கூட இணை பிரியாமல் அவர்கள் சென்று விட… தன்னை மட்டும் மறந்து போனதை எண்ணி அவள் கண்ணீர் வடிக்காத நாளே இல்லை எனலாம். இன்று கௌதமின் ஒரு சிறு செய்கை போதுமானதாக இருந்தது அவளின் பெற்றோர்களை நினைவுபடுத்த…

அவர்களின் இறப்பிற்கு பின் தான் அவளைப் பற்றி அந்த ஊரில் யாருமே ஒரு பொருட்டாக கருதுவது இல்லையே…

அன்பு , பரிவு, பாசம் என்பது போன்ற வார்த்தைகளையே அவள் மறந்து இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவளின் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்தால் கெளதம் அவளை பகடைக்காயாக பயன்படுத்த நிச்சயம் முயற்சி செய்திருக்கவே மாட்டானே…

அப்படிப்பட்டவளின் வாழ்க்கையில் நுழைந்து கெளதம் அவளிடம் தன்னுடைய தேவைக்காக அன்பை காட்டுகிறான். அதை அவள் தெரிந்து கொண்டால் என்னாகும்? கௌதமை அவள் மன்னிப்பாளா ? அப்படி அவளுக்கு தெரிந்த பின் கெளதம் வந்திருக்கும் வேலையை வெற்றிகரமாக முடிப்பானா? விசாலம் அவனுக்கு கொடுத்த சவாலை வென்று பத்திரமாக ஊர் திரும்புவானா?

பொறுத்திருந்து பார்ப்போம்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Previous PostMMK tamil novels 9
Next PostMMK tamil novels 10
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here