Theendatha Thee Neeye Tamil Novel 1

5
9229

அத்தியாயம் 1

பிரமாண்டமான அந்த திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.மொத்த ஊரும் வாயில் விரல் வைக்கும்படி எல்லா ஏற்பாடுகளும் அத்தனை சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.மண்டபத்தின் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்த முடியாமல் வெளியே ரோட்டில் நிறுத்தியதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த ஏரியாவே அதகளப் பட்டுக் கொண்டு இருந்தது அந்த திருமணத்தால்.

பட்டாசு சத்தமும், வான வேடிக்கையும் காதை செவிடாக்கும் வண்ணம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.வந்து இருக்கும் விருந்தினர்களை வாசலில் இருந்தே வரவேற்கும் பொருட்டு மண்டபத்தின் நுழைவாயிலில் இருந்தே பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆரம்பித்து விட்டது.

மண்டபத்தில் மணப்பெண் அறையில் சர்வ அலங்காரத்துடன் மகிழ்ச்சியில் கன்னங்கள் பளபளக்க கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தை பார்த்து இமைக்க மறந்து போனாள் வானதி.கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்தில் ஒவ்வொரு இடங்களிலும் ஜொலித்த நகைகளை அவள் கை விரல் ஆசையுடன் வருடிக் கொண்டிருந்தது.

அது நகையின் மீது கொண்ட ஆசையினால் அல்ல… அந்த நகையை அவளுக்கு பரிசளித்தவன் மீது கொண்ட ஆசையினால்…

யாருக்கு கிடைப்பான் இப்படிப்பட்டவன்? ஒன்றுமே இல்லாத அனாதைப் பெண் என்று யாரும் தன்னைப் பார்த்து சொல்லி விடக் கூடாது என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் அவனுடைய அன்பில் சிக்கித் தவித்தது கன்னி மனம்.

விடிந்ததும் தனக்கு தாலி கட்டப் போகும் அவளது காதலனை எண்ணி அவளது முகம் பெருமையில் விசிகசித்தது. சென்னையில் உள்ள துறைமுகத்தின் முடிசூடா மன்னனாக திகழ்பவன் யார் என்று கேட்டால் அடுத்த நொடி அவனின் முகம் கண்ணில் தோன்றி மறையும்.

“சம்ஹார மூர்த்தி” மனதுக்கு இனியவனின் பேரை ஒருமுறை வாயார சொல்லி மகிழ்ந்தாள். பேருக்கு ஏற்றார்போல அவனுக்கு ஏற்படும் கோபத்தை அறிந்து வைத்து இருப்பதால் ஊரே அவனுடைய கோபத்திற்கு அஞ்சும்.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் அவன். ஒருவரை எதிரி என்று அவன் முடிவு செய்து விட்டால் அவர்களின் வாழ்க்கையை ஒன்றுமே இல்லாமல் செய்து விடுவான். அவனை பகைத்துக் கொண்டால் அத்தோடு அவர்களின் எதிர்கால வாழ்க்கை அஸ்தமனமாகி விடும் என்பது அவனைப் பற்றி அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இப்படி ஊரெல்லாம் பயந்து நடுங்கும் ஒருவனின் மென்மையான மறுபக்கத்தை அறிந்தவள் தான் மட்டுமே என்பதை உணர்ந்தவளின் முகத்தில்  கர்வத்தால் நிறைந்து இருந்தது.முதன்முதலாக அவனை சந்தித்த அந்த அழகான நாளும் அவளுடைய கண் முன்னே வந்து போனது.

அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்த வானதி எப்பொழுதும் தனக்கென்று யாருமே இல்லை என்று வருந்தியதே இல்லை.

‘நமக்காவது பாதுகாப்பாக தங்க ஒரு கூரை இருக்கிறது. ஆனால் எத்தனையோ பேருக்கு அது கூட இல்லையே… அதிலும் வயது வந்த பெண்களுக்கு வெளியே நடக்கும் ஆபத்துக்களை எல்லாம் அறிந்து கொண்ட பொழுது அவளுக்கு சாதாரணமாகக் கூட வெளியே செல்வதற்கு அவள் பயப்படத் தொடங்கினாள். இயற்கையிலேயே அவள் பயந்த சுபாவம் என்பதாலும் அவள் தனித்து எங்கேயும் செல்ல முயற்சித்ததில்லை..

ஆசிரமத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரிடமும் பேச மாட்டாள் . அவளது பயந்த சுபாவத்தை அறிந்து வைத்து இருந்ததாலேயே ஆசிரம உரிமையாளர் சுந்தரேசனும் அவளை வெளியே அனுப்பாமல் வைத்துக் கொண்டார்.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் பொழுது அதிர்ந்து கூட பேசத் தெரியாத வானதியின் மீது அவருக்கு எப்பொழுதுமே அன்பு அதிகம் தான். இருப்பதை வைத்துக் கொண்டு போதும் என்ற மனதுடன் திருப்தி அடைந்து கொள்ளும் வானதியின் குணமே அதற்குக் காரணம்.

வானதி முதன்முதலாக அந்த இல்லத்திற்கு வந்த பொழுது அவளுக்கு வயது ஐந்து தான் இருக்கும். பெற்றவர்கள் இருவரும் ஒரு விபத்தில் பலியாகி இருக்க காவல் துறையை சேர்ந்த சில நல்லவர்களால் சுந்தரேசன் நடத்தும் அவருடைய அனாதை இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டாள். சுந்தரேசனுக்கு பெரும் அளவில் சொத்துக்கள் இருந்தும் அவர் திருமணம் செய்து கொள்ளாததால் அவருக்கென்று தனியே எந்த குடும்பமும் இல்லை.

சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் விளைவாக அவர் இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற விவரத்தை அறிந்து கொண்டவர் தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள முயலாமல் பெற்றோர் இல்லாத குழந்தைகளை தன்னுடைய ஆசிரமத்தில் வளர்க்க ஆரம்பித்தார். வெளியில் யாரிடமும் இருந்து பண உதவி பெறாமல் தன்னுடைய சொந்த பணத்திலேயே நடத்துவதால் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரும் உண்டு.

வானதி அந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த இரண்டே மாதத்தில் தன்னுடைய கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து சுந்தரேசனிடம் கொடுத்து விட்டாள். அதற்கு அவளே காரணமும் சொன்னாள்.

“ஆயா சொன்னாங்க… இங்கே என்னை மாதிரி பாப்பா நிறைய பேர் வந்துட்டா அப்புறம் சாப்பாடு போடுறது கஷ்டம்னு… அதான் இதை வித்து எல்லாருக்கும் சாப்பாடு போடுங்க அய்யா”

அந்த பிஞ்சு வயதில் அவளுக்கு இருந்த தயாள குணம் அவரை அளவுக்கு அதிகமாகவே ஈர்த்தது. அவள் கொடுத்த சங்கிலியை வாங்கி பத்திரப்படுத்தியவர் அவளின் பதினெட்டாம் வயதில் ஒரு நாள் அவளை அழைத்து அதைக் கொடுத்தார்.

“இது உன்னுடையது தான் வானதி… நீ இங்கே வந்து சேர்ந்தப்போ நீ போட்டு இருந்தது.இனி நீ காலேஜ் எல்லாம் போகப் போற இல்லையா?வெறும் கழுத்தோட போக வேணாம்.இதை போட்டுக்கிட்டு போ”

“வேணாம் அய்யா” என்று அமைதியாக மறுத்தவளைக் கண்டு அவர் குழம்பி நிற்க அவளே தொடர்ந்து பேசினாள்.

“இங்கே இருக்கும் மற்ற பெண்களைப் போல நானும் ஒரு அனாதை தானே அய்யா… இப்போ நான் மட்டும் இப்படி தங்கத்தில் நகை போட்டுகிட்டா மத்த குழந்தைங்க ஏங்கிப் போய்டுவாங்க. அதனால வேணாம் அய்யா… நீங்களே வச்சு இருங்க… எனக்கு தேவைப்படும் பொழுது நான் வாங்கிக்கறேன்” என்று மறுத்து கூறியவளை அவரும் வற்புறுத்தவில்லை.

ஆசிரமத்திற்கு சொந்தமான பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து வந்தவள் கல்லூரி செல்ல முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள். புது மனிதர்களை சந்திக்கப் பயப்படும் அவளது குணத்தை அறிந்து வைத்து இருந்ததால் மெல்ல அவளை சமாதானம் செய்து ஆசிரமத்திற்கு அருகில் இருந்த கல்லூரியிலேயே அவளுக்கு படிப்பதற்கு சீட் வாங்கிக் கொடுத்தார் சுந்தரேசன்.

சுந்தரேசனுக்கு நன்றாகத் தெரியும். இப்பொழுதும் அவளது பயத்தை எண்ணி அவளை கல்லூரிக்கு அனுப்பாமல் விட்டு வைத்தால் கல்லூரிப் படிப்பை அவள் நிச்சயம் முடிக்க மாட்டாள். அது அவளது எதிர்காலத்திற்கு நல்லது இல்லை என்பதாலும் கல்லூரி முடித்த பிறகு எப்படியும் வேலைக்கு செல்ல நேர்கையில் அவள் வெளி உலகத்தை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பதை உணர்ந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அவள் இதையெல்லாம் பழகட்டும் என்று நினைத்தவர் அவள் தனியே கல்லூரிக்கு போகும் படி உத்தரவாக சொல்லி விட்டார்..

கல்லூரிக்கு போன முதல் நாளே அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மறுநாள் நான் மீண்டும் கல்லூரிக்கே போக போவதில்லை என்று அடம் பிடித்தாள் வானதி. என்ன என்று விசாரிக்கும் பொழுது தான் கல்லூரியில் மாணவர்கள் அவளை ரேகிங் செய்த விவரத்தை அவள் அழுது கொண்டே கூற அதை பற்றி நிர்வாகத்திடம் முறையிட அடுத்த நாள் வானதியையும் அழைத்துக் கொண்டு அவர் சென்ற பொழுது தான் முதன்முறையாக அவனைப் பார்த்தாள்.

சுந்தரேசன் அவளை அழைத்துக் கொண்டு நேராக பிரின்சிபால் அறைக்குள் நுழைய தயக்கத்துடன் அவரை பின் தொடர்ந்தாள் வானதி. எதிரில் அமர்ந்து இருந்தவர்களை நிமிர்ந்து பார்க்கவும் அஞ்சியவளாய் அவள் தலை குனிந்து நின்று கொண்டாள். நடந்த விஷயங்களை சுருக்கமாக அவரிடம் எடுத்து சொல்லியவர் இனி இது போல நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுதலாக கேட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறும் முன் அவர்களை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.

“அந்த பசங்க யாருன்னு அடையாளம் காட்ட முடியுமா?” கம்பீரமான அந்த குரலை அந்த நிமிடம் தான் முதன்முறையாக கேட்டாள் வானதி… அப்பொழுது தான் பிரின்சிபால் அறையில் வேறு ஒருவர் அமர்ந்து இருக்க, அவருக்கு அருகில் பவ்யமாக ப்ரின்சிபால் நின்று கொண்டு இருப்பதையும் பார்த்தாள். அவள் பதில் சொல்லாமல் திருதிருவென முழிப்பதை பார்த்த ப்ரின்சிபால் அவள் கேட்காமலே அவனைப் பற்றிய விவரங்களை அள்ளி வழங்கினார்.

“சார் தான் இந்த காலேஜ் ஓனர்… பேரு சம்ஹார மூர்த்தி… பயப்படாம என்ன நடந்துச்சுன்னு சொல்லுமா” என்று அவர் மேலும் ஊக்க, வானதி அந்தப் புதியவனின் ஊடுருவும் பார்வையில் பயந்து போய் தன்னை முழுதாக சுந்தரேசன் அய்யாவின் முதுகுக்குப் பின் மறைத்துக் கொண்டாள்.

அவளுடைய பயத்தையும், அவள் கண்களில் தெரிந்த மிரட்சியையும் ஒருவித சுவாரசியத்துடன் அவன் பார்க்க அவளுக்கு சுத்தமாக பேச்சே வரவில்லை.

“முன்னாடி வந்து பேசுங்க” என்று உத்தரவாக சொன்னவன் சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளின் முகத்தையே குறுகுறுவென பார்த்து வைத்தான்.

சுந்தரேசனும் அவளுடைய பயத்தை உணர்ந்து, அவளது கையைப் பிடித்து இழுத்து அவனுக்கு முன் நிற்க வைத்தார்.

“பயந்துகிட்டே இருந்தா எந்தப் பிரச்சினையும் தீர்ந்துடாது வானதி… பிரச்சினை தீரணும்னா தைரியமா வந்து அவர் கிட்டே சொல்லு… நேத்து என்கிட்டே அப்படி அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சியே… இங்கே மட்டும் பேசுறதுல என்ன தயக்கம்…”

‘இந்த புதியவனின் முன்னால் இப்படி திட்டு வாங்கத் தான் வேண்டுமா?’ என்று அவள் உள்ளுக்குள் நொந்து கொண்டாள். அவள் பேச்சை தொடங்கும் முன்னரே அவனது குரல் மீண்டும் கம்பீரமாக ஒலித்தது.

“உண்மையிலேயே அப்படி ஒரு விஷயம் நடந்து இருந்தா சொல்லுங்க… இல்லைன்னா நீங்க கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டு அவன் கையில் இருந்த பைலில் மூழ்கி விட முயன்று தன்னை சமாளித்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள் வானதி.

“நே…நேத்து காலேஜ்ல சில பேர் என்னை ரேகிங் செஞ்சாங்க” பார்வையை நிலத்தில் பதித்தபடியே பேசினாள் வானதி.

“என்ன செஞ்சாங்க?” அவன் குரலில் இருந்த சீற்றம் அவளை மேலும் பயம் கொள்ள செய்தது. அருகில் நின்ற சுந்தரேசனின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டவளைப் பார்த்தவனின் முகம் ஒரு நொடி மென்மையாகி பின் மீண்டும் கடுமையை தத்தெடுத்தது.

“கேட்கிறேன் இல்ல” என்று அவன் அதட்டல் போட வானதியின் உடல் வெளிப்படையாகவே அதிர்ந்தது. அவள் கண்களில் கண்ணீர் தேங்கி அடுத்த நொடியே விழுவதற்கு தயாராக இருந்தது. மூர்த்தியின் கோபத்தையும் ,இவளின் பயத்தையும் உணர்ந்து கொண்ட சுந்தரேசன் இருவருக்கும் இடையில் வந்து பேசத் தொடங்கினார்.

“நான் சொல்றேன் தம்பி…நேத்து இவ காலேஜ்க்கு வந்தப்போ நாலைஞ்சு பசங்க சுத்தி நின்னு இவளைப் பத்தி கேள்வி கேட்டு இருக்காங்க… இவ என்னோட ஆசிரமத்தில் வளருறா அப்படின்னு தெரிஞ்சதும் அனாதைப் பொண்ணுன்னு சொல்லி ரொம்ப கிண்டல் பண்ணி இருக்காங்க. அ..அவளால அதை தாங்கிக்க முடியலை. என்னோட ஆசிரமத்தில் வளருற யாரையும் நான் அப்படி நினைக்கலை தம்பி..

எல்லாரையும் என்னோட சொந்த பிள்ளைங்க மாதிரி தான் வளர்க்கிறேன். அதுலயும் வானதி என்னோட பொண்ணு மாதிரி… அவங்க சொன்ன வார்த்தையை என்னாலேயே தாங்கிக்க முடியலை… இவளால எப்படி தாங்கிக்க முடியும்?” என்று கேள்வி கேட்டவரின் குரல் கரகரத்து அடங்க சில நிமிடங்கள் அவரது முக பாவனையை அளவிட்டவன் அசால்ட்டாக பேச ஆரம்பித்தான்.

“அவங்க சொன்னது உண்மை தானே… இதுக்கு ஏன் நீங்க இரண்டு பெரும் இவ்வளவு வருத்தப் படறீங்க?” என்றவனின் வார்த்தையில் வானதியும், சுந்தரேசனும் ஒருங்கே அதிர்ந்து போனார்கள். அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

“இன்னிக்கு காலேஜ்ல அப்படி பேசுற பசங்களை நான் கூப்பிட்டு கண்டிக்கலாம். ஆனா பிரச்சினை அதோட முடிஞ்சுடுமா என்ன?… இந்தப் பொண்ணு அநாதை ஆசிரமத்தில் வளருவது உண்மை தானே… நாளைக்கு படிப்பை முடிச்சு வெளியில் வேலைக்கு போகும் போது அங்கேயும் யாராவது இப்படி பேசினா என்ன செய்வீங்க… கம்பெனிக்கு போய் இதே மாதிரி பேசுவீங்களா?

முதல்ல நிதர்சனத்தை எதிர்கொள்ள பழகிக்கோங்க… நீங்களே உடைஞ்சு போய் பேசுனா… அந்தப் பொண்ணுக்கு யார் தைரியமும் தெம்பும் தருவாங்க… வாழ்க்கையில் எது நிஜமோ அதை ஏத்துக்கவும், எதிர்கொள்ளவும் உங்க பொண்ணைப் பக்குவப் படுத்துங்க… அப்புறம் இதெல்லாம் என்ன… இதை விட பெரிய பிரச்சினைகளையும் அசால்ட்டாக சமாளிக்கலாம்” என்று சொன்னவன் அவர்கள் சிந்திக்க சற்று நேரம் அவகாசம் கொடுத்தான். அவர்களின் முகத்தில் லேசான தெளிவு வந்ததும் அவர்களைப் பார்த்து இதழ் பிரியாமல் சிரித்தவன் நொடியில் தன்னுடைய முகத்தை மாற்றி கடுகடுவென வைத்துக் கொண்டான்.

அவனின் லேசான புன்னைகையே அவ்வளவு அசத்தலாக இருந்தது. ‘வாய் திறந்து சிரிக்காமலே இவ்வளவு அழகா இருக்கே இவரோட சிரிப்பு’ என்ற எண்ணத்துடன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்த வானதியை நோக்கி சட்டென்று பார்வையைத் திருப்பினான் சம்ஹார மூர்த்தி.

சட்டென்று அவன் தன்னைப் பார்த்ததும்,ஆடு திருடியவளைப் போல முழித்தவள் தலையை மீண்டும் கீழே குனிந்து கொள்ள அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து வேகமான நடையுடன் அவளை நோக்கி வந்தவனைக் கண்டதும் பயத்தில் சுந்தரேசனின் பின் ஒளிந்து கொண்டாள் வானதி.

“பெண்களோட முதல் எதிரி யார்னு தெரியுமா? அவங்களோட பயம்… முதல்ல அதை விட்டு வெளியே வா… இந்த உலகத்தில் நீ வாழணும்னா முதல்ல பயத்தை விட்டொழி… உன்னை கேலி செய்றவங்களை  பார்த்து பயப்பட்டா அந்த இடத்திலேயே உன்னோட தோல்வி ஆரம்பிச்சுடும்…புரிஞ்சுதா” என்று அதட்டினான்.

பயத்தில் இடமும் வலமும் வேகமாக தலையை ஆட்டியவளைப் பார்த்து அவனுள் ஏதோ ஒன்று பொங்கி பிரவாகம் செய்தது. சட்டென்று தன்னுடைய எண்ணங்களுக்கு அணை போட்டவன்  “கிளாசுக்கு போ” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு தன்னுடைய சேரில் அமர்ந்து சிசிடிவியின் மூலமாக அவள் எங்கே செல்கிறாள்? எப்படி நடந்து கொள்கிறாள்? என்பதை எல்லாம் கவனித்தான். சுந்தரேசனும் அவளுக்கு அறிவுரைகள் கூறி அங்கே இருந்து சென்று விட, ஒற்றையாக நின்று கொண்டு இருந்த  அவள் முகத்தில் இன்னும் மிரட்சி மறையாததைக் கண்டு சட்டென்று எழுந்து அவள் இருந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
13
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0

5 COMMENTS

  1. Mam ipothan first padikaren super mam I need full story link mam pls …. Enaku epdi ithula padikanum nu therila

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here