Theendatha Thee Neeye Tamil Novels 21

2
4848

அத்தியாயம் 21

கடலில் குதித்து எழுந்ததால் உடல் முழுக்க ஈரத்துடன் கைகளில் அந்த இரண்டு பெரிய அளவு மீன்களுடன் வீட்டிற்குள் நுழைந்தான் ஈஸ்வர்.அதை பத்திரமாக வைத்து விட்டு வந்தவன் உடைகளை களைந்து வேறு உடைக்கு மாறிய பின் அடுப்படிக்குள் நுழைந்தான்.அங்கே பாத்திரங்களை விளக்கி வைத்துக் கொண்டு இருந்தவளை லட்சியம் செய்யாமல் பரபரவென்று அந்த மீன்களை சுத்தம் செய்யத் தொடங்கினான்.

துடித்துக் கொண்டிருக்கும் அந்த மீன்களைக் கண்டதும் அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

“அது பாவம்… ரொம்பவும் துடிக்குது… விட்டுடுங்களேன் சார்…”என்றாள் கெஞ்சுதலாக…

ஒரு நொடி தயங்கிய அவன் விரல்கள் அடுத்த நொடி முன்பைக் காட்டிலும் அதிக வேகத்துடன் அதை சுத்தம் செய்யத் தொடங்கியது.

“இந்த வார்த்தை மீனுக்காக சொன்னியா..இல்லை உனக்காக சொன்னியா சில்லக்கா…”என்றான் அவள் புறமே திரும்பாமல்…

“எப்படி இருந்தால் என்ன? கண்ணு முன்னாடியே ஒரு உயிர் துடிக்குது..அதை கொன்னு சாப்பிட எனக்கு மனசு வரலை…ப்ளீஸ் சார்..அந்த பாவம் சும்மா விடாது”

“ஹ…பாவம் வந்தாலும் கடவுள் என்னோட அக்கௌண்டில் தான் கிரெடிட் பண்ணுவார்..அதனால அதை எல்லாம் யோசிக்காம ஒழுங்கா சாப்பிடு…”

“இல்லை சார் … எனக்கு வேணாம்…”

“ஏன்…அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கும் உன்னுடைய காதலனுக்காக உண்ணாவிரதம் இருக்க போறியா” என்றான் நக்கலாக…

“இருந்தாலும் தப்பு இல்லை சார்..அவர் எனக்காகத் தான் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கார்.”என்றாள் ரோஷத்துடன்…

“அவனுக்கு என்ன குறைச்சல்…கப்பல் முழுகும் பொழுது தண்ணீரில் அவன் குதித்த சமயம் அவன் மீது இரும்பு ரேடார் விழுந்ததில் கையும்,காலும் உடைஞ்சு போய் கட்டு போட்டு படுத்து இருக்கான்…எப்படியும் இன்னும் மூணு மாசத்துக்கு அவனால எழுந்து நடமாட முடியாது…அப்புறமும் எதுக்கு இந்த விரதம் எல்லாம்”

“ஒரு உயிரை கொன்னு சாப்பிடறது பாவம்”

“அந்த மீனுக்கு பாவம் பார்த்தா நீ செத்துடுவ…இந்த தீவில் நீ எதிர்பார்க்கிற மாதிரி காய்கறி,பழம் எதுவும் கிடைக்காது..அதுவும் இல்லாம அதை நம்பி சாப்பிடவும் முடியாது..விஷ செடியா கூட இருக்கலாம்.

இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சு தான் உனக்கு நான் கேன்னுடு புட்ஸ் (Canned Foods) வாங்கி வச்சேன்..நீ அதை எல்லாம் தொட்டுக் கூட பார்க்க மாட்டேங்கிற..இப்படியே போனா சரியா சாப்பிடாம செத்துடுவ…அப்புறம் என்னால பதில் சொல்ல முடியாது”

“இப்படி எனக்காக சிரமப்பட்டு கடலில் மீன் பிடிச்சு தர்றதை விட என்னை அவர் கிட்டே அனுப்பி வச்சுடுங்க…”

“அதுக்கு பதிலா நானே உன்னை பட்டினி போட்டு கொன்னுடுவேன்…இல்லேன்னா இங்கேயே கிடந்து சாவுன்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு கிளம்பி போய்க்கிட்டே இருப்பேன்”என்றான் அலட்சியமாக…

அவளும் இந்த தீவிற்கு வந்த இந்த பதினைந்து நாட்களும் எப்படி எல்லாமோ பேசிப் பார்த்து விட்டாள்.ஆனால் அவன் மனமோ பாறையென இறுகிப் போய் இருந்தது.எப்படிக் கேட்டாலும் அவனிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை.

ஆளில்லா அந்த தீவை எப்படித் தான் கண்டுபிடித்தானோ தெரியாது…அதில் மனிதர்களும் கிடையாது…மிருகங்களும் கிடையாது.ஒரு சில பறவை வகைகள் மட்டுமே உண்டு.அவைகளும் அங்கேயே நிலைத்து தங்கி இருப்பது இல்லை.வெகுதொலைவு கடலில் நீந்தி வந்த பறவைகள் அந்த குட்டித் தீவில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் கிளம்பி விடும்.அடர்ந்த காடு போல நிறைய மரங்கள் இருந்தன.அந்த தீவு மொத்தமும் மிஞ்சிப்போனால் ஒரு மூன்று கிலோமீட்டர் தான் வரும்.மிக சிறிய தீவு தான்.அதை தாண்டினால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்… கடல்… கடல்… மட்டுமே

தினமும் மீன் பிடிப்பதற்காக அவன் மட்டும் செல்வதற்கு ஒரு சிறிய ரப்பர் படகை வைத்து இருந்தான்.வந்த முதல் நாளே அதை கவனித்தவளின் முகம் கொஞ்சம் பிரகாசமாக அதை கண்டுகொண்டவன் வாய் விட்டே சிரித்து விட்டான்.

“இது சாதாரண ரப்பர் போட் தான்…அலைகள் கம்மியா இருக்கிற இடத்தில மட்டும் தான் பயன்படுத்த முடியும்.நீ பாட்டுக்கு வீரமா எனக்குத் தெரியாம எடுத்துக்கிட்டு கிளம்பிடாதே..அப்புறம் அன்னிக்கு சுறாவுக்கு எல்லாம் நீ தான் சாப்பாடே…”என்று சொல்ல அந்த எண்ணத்தையும் குழி தோண்டி புதைத்துக் கொண்டாள் வானதி.

இந்த எமகாதகனிடம் இருந்து தப்பிப்பது என்பது நடக்காத விஷயம்..ஒருவேளை அப்படியே தப்பினாலும் எந்த திசையில் போக வேண்டும் என்பது கூடத் தெரியாமல் ஒரு ரப்பர் போட்டை நம்பி கிளம்புவது முட்டாள்தனமாகவே அவளுக்குப் பட்டது.

“இந்த வீட்டுல மட்டும் எப்படி கரண்ட் இருக்கு” முடிந்த அளவுக்கு அவனுடைய வாயைக் கிண்டி எதையாவது தெரிந்து கொள்ள முயன்றாள்.அவன் சொல்லும் ஏதாவது ஒரு விஷயம் தனக்கு சாதகமாக இருந்தால் அங்கே இருந்து சுலபமாக தப்பி விடலாம் என்று எண்ணினாள் அவள்.அவனும் அவள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சாதாரணமாகவே பதில் கொடுப்பான்.குரலில் எந்த மாறுபாடும் இருக்காது.ஆனால் அவனது பார்வையில் அசாத்திய கூர்மை இருக்கும்.

“இந்த வீட்டுக்கு கரண்ட் கொடுக்கிறது மிஸ்டர் சூரிய பகவான்..ஐ மீன் இந்த வீட்டில் எல்லாமே சோலார் மூலம் தான் இயங்குது.உன்னை இங்கே கொண்டு வர முடிவு செஞ்ச பிறகு அவசர அவசரமா இந்த வீட்டை ஏற்பாடு செஞ்சேன்…”

“எதுக்கு..கப்பல்லயே இருந்து இருக்கலாமே”

“எதுக்கு அவன் என்னை ஈசியா கண்டுபிடிக்கவா?உன்னை நான் கப்பலில் வச்சு இருக்கும் பொழுது தான் இந்த தீவு பத்தின யோசனை வந்தது…ஒருவேளை நம்மைத் தேடி மூர்த்தி வராமல் இருந்து இருந்தால் நாம கப்பலிலேயே இருந்து இருக்கலாம்…நீ தான் புத்திசாலித்தனமா என்னை மாட்டி விட எல்லா ஏற்பாடும் செஞ்சியே?”

“அவருக்கும் உங்களுக்கும் இடையில் எதுவும் சொத்து தகராறா சார்? அப்படி இருந்தா சொல்லுங்க…நான் பேசி சரி செஞ்சிடறேன்…நான் சொன்னா அவர் கேட்டுப்பார்…”முடிந்த அளவு அவனிடம் தணிவாகவே பேசினாள் வானதி.

“சொத்துத் தகறாரு தான் சில்லக்கா…”என்றவனின் பார்வை எங்கோ தொலை தூரத்தை வெறித்துக் கொண்டு இருந்தது.

“அவர் ஏதாவது செஞ்சு இருந்தா…நிச்சயம் அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்.உங்க பக்கம் நியாயம் இருந்தா என்னிடம் சொல்லுங்க..அவருக்கு புரியற மாதிரி சொல்லி நிச்சயம் உங்களோட சொத்தை நான் மீட்டுத் தர்றேன்”என்றாள் உறுதியுடன்.

“அது உன்னால் முடியாது சில்லக்கா…”

“கண்டிப்பா முடியும்…அவங்க ரொம்பவும் நல்லவங்க சார்..நான் சொன்னா எதுவா இருந்தாலும் செய்வாங்க…”

“ஆமா..ஆமா..அவன் ரொம்ம்ம்ம்ப நல்லவன் தான்”என்று பேசியவனின் முகத்தில் இருந்த புன்னகை அவளை கலவரம் அடைய செய்தது.

“இதோ பார் சில்லக்கா கிட்டத்தட்ட ஒரு மாசம் ஓடிப் போச்சு…இன்னும் இரண்டு மாசம்…எந்த சேட்டையும் செய்யாம..முக்கியமா அவனோட புராணத்தைப் பாடாம இருந்தீன்னா உன்னை நல்லபடியா நானே அனுப்பி வைப்பேன்”

“இ..இல்லைன்னா?”

“இந்த ஜென்மம் முழுசும் உன்னை என்னோட கட்டுப்பாட்டிலேயே வச்சு இருப்பேன்”என்றவனின் குரலில் இருந்த உறுதி அவளை வாய் மூட செய்தது.

“கவலைப்படாதே சில்லக்கா…நான் கொடுத்த வார்த்தையை நிச்சயமா காப்பாத்துவேன்…நீ என்னை தூண்டி விடாம இருந்தா”என்று முதலில் நன்றாக பேசியவன் கடைசி வார்த்தையில் அவளை குழப்பினான்.

சில சமயம் அவனது பார்வை அவளிடம் எதையோ சொல்லத் துடிக்கும் ஆனால் ஒன்றுமே பேசாமல் விருட்டென்று அங்கிருந்து கிளம்பி சென்று விடுவான்.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ஈஸ்வர் அங்கே வந்து சேர்ந்த பிறகு அவளை மனதளவிலும் சரி,உடலளவிலும் சரி துன்புறுத்தவே இல்லை.

சம்ஹார மூர்த்தியைப் பற்றிய பேச்சை அவள் எடுத்தால் மட்டும் அவன் முகம் சட்டென்று செந்தணலாக மாறி விடும்…ஒரு சில முறைகள் முயற்சி செய்து பார்த்து விட்டு வானதி அதன் பிறகு மூர்த்தியைப் பற்றிய பேச்சை பேசவே இல்லை.ஆனால் அவள் மனதில் எந்நேரமும் அவனைப் பற்றிய எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.

மூர்த்தியை முதன்முதலாக சந்தித்த நாளில் இருந்து ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துக் கொண்டாள் வானதி.கடைசியாக நிச்சயதார்த்தத்தின் பொழுது அவன் மேடையில் இருந்து பொழுது தன்னைப் பார்த்ததும்,அவன் பார்த்த அந்த நொடி,தான் வெட்கப்பட்டு தலை குனிந்ததும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர மௌனமாக கண்ணீர் வடித்தாள் வானதி.

அந்த நேரம் பார்த்து அவளை கடந்து சென்றவனின் பார்வையில் அது பட்டாலும் ஒன்றும் சொல்லாமல் அவன் சென்று விட்டான்.அவன் வருவதையும்,தான் அழுவதை பார்த்த பிறகும்,தன்னை கண்டுகொள்ளாமல் அவன் சென்ற விதம் அவளை கோபமூட்டியது.வேகமாக எழுந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனின் முன்பு போய் நின்றாள்.

“எனக்கு ஒரு சந்தேகம்?”

“என்ன?”

“இல்லை…தினமும் மீன் பிடிக்க கடலுக்கு போறீங்களே…அப்போ நீங்க செத்துட்டா..என்னோட நிலைமை என்ன? நானும் இந்த ஆளில்லாத தீவில் கிடந்து சாக வேண்டியது தானா?” என்றாள் கோபமாக…

உணர்ச்சியற்ற பார்வையால் அவளைப் பார்த்தவன் எழுந்து நின்று பின்னால் வருமாறு சைகை காட்டி விட்டு அவளுக்கு முன்னால் நடந்தான்.

அங்கே மாடியில் சோலார் பொருத்தி இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றான் ஈஸ்வர்.அந்த அறை எப்பொழுதும் பூட்டியே இருந்ததால் அதை அவள் பார்த்தது இல்லை…இன்று தான் முதன்முறையாக பார்க்கிறாள்.

தன்னுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்தவன் அறையை திறந்து கொண்டு உள்ளே செல்ல, இவளும் பின்னோடு சென்றாள்.பெரிதாக அந்த அறையில் எந்த ரகசியமும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.

அங்கு ஜன்னல் திரைக்குப் பின்னால் , வெளியே தெரியாத வண்ணம் இருந்த ஒரு சுவிட்சை காட்டியவன் தொடர்ந்து பேசினான்.

“இது தான் சோலாரோட சுவிட்ச்…தினமும் நான் வந்து இதை ஆன் செஞ்சா மட்டும் தான் இந்த வீட்டுக்கு பவர் சப்பிளை (Power Supply) கிடைக்கும்.அப்படி இல்லேன்னா சோலார் ஒர்க் ஆகாது….

அப்படி ஒர்க் ஆகலன்னா அடுத்த நாள் இதோ இந்த மெஷினில் இருந்து கரண்ட் மூலம் என்னோட ஆட்களுக்கு சிக்னல் போகாது…அப்படி சிக்னல் போகலைனா…அடுத்த நாளே அவங்க வந்து உன்னைக் காப்பாத்தி…”

“அவர் கிட்டே ஒப்படைச்சுடுவாங்களா”என்றாள் முந்திரி கொட்டை போல…

“கண்டிப்பா… ஆனா…நான் சொன்ன மூணு மாச கணக்கு முடிஞ்ச பிறகு…”என்றான் பாறை போல இறுகிப்போன குரலில்.

வானதிக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை.அவன் இறந்து போனால் கூட அவள் பாதுகாப்பாக ஊர் போய் சேருவதற்கு என்ன ஏற்பாடுகள் உண்டோ அத்தனையும் முன்னேற்பாடாக ஏற்கனவே செய்து வைத்து இருக்கிறான்.ஆனால் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பது மட்டும் அவளுக்கு கிஞ்சித்தும் புரியவில்லை.

‘இந்த கல்லுளி மங்கனிடம் கேட்டாலும் கூட அவன் வாயைத் திறந்து சொல்ல மாட்டான்’என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளுக்கு இன்னொன்றையும் எடுத்து காட்டினான்.அது ஒரு செல்போன்…

“வேற ஏதாவது காரணத்தினால் சோலார் பழுதானாலோ அல்லது வேறு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் என்னுடைய ஆட்களை தொடர்பு கொள்வதற்கும் இந்த போனை வைத்து இருக்கிறேன்” என்றவன் போனை மீண்டும் அதே இடத்தில் வைத்து அறையை பூட்டி விட்டு கீழே சென்றார்கள் இருவரும்.

அந்த அறை சாவியை தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் அவன் வைப்பதை பார்த்தவள் எப்படியாவது அந்த சாவியை திருட முடியுமா என்று எண்ணத் தொடங்கினாள்.

அறையை திறந்து அந்த போனின் மூலம் யாருக்காவது தகவல் சொல்லி விட்டால் அவர் வந்து என்னை காப்பாற்றி விடுவார் என்று வேகமாக கணக்குப் போட்டவள் அன்று இரவு அவன் தூங்குவதற்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

அன்று இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவன் உறங்க சென்று விட, நடுநிசி வரை காத்திருந்தவள் மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.அந்த வீட்டில் இரண்டு தனித்தனி அறை  இருந்தாலும் ஈஸ்வர் மற்றொரு அறையில் தூங்க மாட்டான்.

அவளது அறை வாசலிலேயே ஒரு சோபாவை இழுத்துப் போட்டு அதில் தான் படுத்து இருப்பான்.இருட்டில் கண்கள் நன்கு பழகிய பிறகு மெல்லடி எடுத்து வைத்து அவனை நெருங்கினாள்.சீரான மூச்சு அவன் தூங்கிக் கொண்டு இருப்பதை உறுதி செய்ய சற்று முன் அவன் களைந்து போட்ட அவனது ஆடையை தேடி எடுத்தாள் வானதி.

சாவி அப்பொழுதும் அந்த பாக்கெட்டிலேயே இருக்க, கண்கள் மின்ன அதை கைப்பற்றியவள் அதை எடுத்துக் கொண்டு சத்தம் வராமல் மாடியை நோக்கி பயணிக்கத் தொடங்கினாள்.இருட்டில் முடிந்த அளவுக்கு தட்டுத்தடுமாறி மேலே சென்றாள். எப்படியோ அந்த அறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு அப்பொழுது தான் மூச்சே திரும்பி வந்தது.

விளக்கைப் போட்டால் அவன் முழித்து விடுவானோ என்ற பயத்தில் இருட்டிலேயே அந்த மொபைலை தேடி எடுத்தாள்.ஊரில் உள்ள எல்லா கடவுளுக்கும் நன்றி சொல்லி விட்டு அந்த போனை ஆன் செய்ய முயற்சி செய்தாள்.ஆனால் அவளின் கெட்ட நேரம் அந்த போன் ஆன் ஆகாமல் சதி செய்ய…எப்படி இதை ஆன் செய்வது என்று திணறத் தொடங்கினாள் வானதி.

அவளுக்கு இருக்கும் நேரம் ரொம்ப குறைவு..அவன் எழுந்து வருவதற்குள் போனில் சம்ஹார மூர்த்திக்கு தகவல் சொல்லி விட்டு மீண்டும் அறையை பூட்டி விட்டு சாவியை பழைய இடத்தில் வைத்து விட்டு நல்ல பிள்ளையாக அவள் தூங்கியாக வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு பதட்டத்தைக் கொடுக்க அந்த குளிரிலும் அவளுக்கு வேர்க்கத் தொடங்கியது.

“அந்த போனை ஆன் செய்ய என்னால் மட்டும் தான் முடியும் சில்லக்கா” என்ற அமர்த்தலான குரல் கேட்ட அந்த நொடியே அறையில் விளக்கின் வெளிச்சம் பரவ அவளது உடல் தூக்கி வாரிப் போட்டது.

பயத்தில் விறைத்துப் போய் நின்றவளின் அருகில் போய் நின்றவன் அவளின் கைகளில் இருந்த போனுக்காக கைகளை நீட்ட பொம்மை போல அவனிடம் கொடுத்து விட்டு அப்படியே அதிர்ந்து போய் நின்றாள் வானதி.

“இத்தனை நாள் ஆகியும் என்னை நீ புரிஞ்சுக்கலையே சில்லக்கா…”என்றவன் புன்னகை ததும்பும் முகத்துடன் அவளை நோக்கி முன்னேற அவளுக்கு இதயம் தொண்டையில் வந்து துடிக்க ஆரம்பித்தது.

“நான் காலையிலேயே சொன்னேனே சில்லக்கா…என்னை தூண்டி விடற மாதிரி எதுவும் செய்யாதேன்னு…இப்போ நீ செஞ்ச தப்புக்கு தண்டனை கொடுத்தே ஆகணுமே…என்ன செய்யலாம்?”என்று கேட்டவாறே அவனது தலையை கோதியபடி அவளை நெருங்கியவனைக் கண்டு அவளுக்கு உதறல் எடுத்தது.

தீ தீண்டும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

2 COMMENTS

  1. Interesting. Waiting for the next update eagerly. It’s not samhara moorthy but eeshwar is the hero. Waiting for the suspense to break. Thank you.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here