Theendatha Thee Neeye Tamil Novels 26

5
5087
Madhumathi Bharath Tamil Novels

அத்தியாயம் 26

கண் எதிரில் ஹாஸ்பிடல்…ஆனால் உள்ளே போவதா வேண்டாமா என்று வானதிக்கு சுத்தமாக தெரியவில்லை. வாழ்வே சூனியமானது போல ஒரு தோற்றம்.

‘நான் என்ன தவறு செய்தேன் ? எனக்கு ஏன் இப்படி ஒரு கொடூரமான தண்டனை… இவங்க இரண்டு பேருக்கும் நடுவில் எந்த பிரச்சினையா இருந்தாலும் அதை எல்லாம் பேசி தீர்த்து இருக்கலாமே…என்னை ஏன் பகடைக்காயா பயன்படுத்தணும்? நான் என்ன அவ்வளவு மட்டமா?

இவங்க ரெண்டு பேரோட சொத்துப் பிரச்சனைக்கு நான் பலியாடா? என்னை கல்யாணம் செஞ்சுக்கப் போறவரும் என்னை காப்பாத்தல… நாலு மாசமா என்னை பத்திரமாக பார்த்துகிட்டவர் நேத்து ஒரே ராத்திரியில் மிருகமாக மாறிட்டார்..ஏன்? மறுபடி வந்த என்னை சுந்தரேசன் அய்யா கூட நம்பலையே…

உங்க இரண்டு பேருக்கும் சண்டைனா நீங்க ரெண்டு பேரும் நேருக்கு நேரா மோதிக்க வேண்டியது தானே…என்னை ஏன் இடையில் கொண்டு வரணும்….கேட்க ஆள் இல்லாத அனாதைனா என்ன வேணா செய்யலாமா?

அன்பு, பண்பு அப்படின்னு அத்தனை விஷயங்களை ஆசிரமத்தில் சொல்லி வளர்த்தாங்களே…இந்த மாதிரி மோசமானவங்களை எப்படி சமாளிக்கணும்ன்னு ஏன் யாருமே சொல்லித் தரல…இவங்க ரெண்டு பேரும் அவங்க மனசில் என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க…

நேற்று இவர் என்னை பத்திரமாக ஒரு இடத்தில் சேர்த்து இருந்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா…காணாமல் போனவள் நான்கு மாதம் கழித்து பத்திரமாக திரும்பி வந்த பிறகும் ஏன் இந்த அலட்சியம்?

சுந்தரேசன் அய்யாவும் நேத்து என்னை ஆசிரமத்தில் தங்க அனுமதிச்சு இருந்தால் நான் பத்திரமா இருந்து இருப்பேனே….

இவங்க எல்லாரையும் கூட மன்னிச்சிடலாம்….ஆனா அவன்…எவ்வளவு நம்பினேன். என்னுடைய எல்லா நம்பிக்கையையும் குழி தோண்டி புதைச்சுட்டானே..பாவி..நம்பிக்கை துரோகி…இல்லை அவனை சும்மா விட மாட்டேன்…இப்படி என்னை நடுரோட்டில் நிறுத்தி விட்டு போய்ட்டா தப்பிச்சிட முடியும்னு எண்ணமா அவனுக்கு…

முதலில் ஹாஸ்பிடலில் இருப்பவரைப் பார்த்து நேற்று நடந்த விஷயங்களை சொல்லி கண்ணீர் விட்டு ஒருமுறை அழுது தீர்த்தால் தான் என்னுடைய மனபாரம் நீங்கும்’ என்று எண்ணியவள் சோர்ந்த நடையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அவளுக்கு அந்த நேரத்தில் சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவையாக இருந்தது.கதறி அழுதால் தன்னுடைய மன வலி குறையும் என்று எண்ணினாள்.

நேற்று நடந்ததில் அவளது தவறு எதுவுமே இல்லை எனும் பொழுது கண்டிப்பாக மூர்த்தி தன்னுடைய தோள்களில் சாய்ந்து அழும் உரிமையை அவளுக்குக் கொடுப்பான் என்ற நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தவளை முதலில் எதிர்கொண்டது சேகர் தான்.

“வாங்க மேடம்…நீங்க வந்ததும் சார் உங்களை அழைச்சுக்கிட்டு வர சொன்னார்…”என்று பவ்யமாக சொன்னவன் இரண்டாம் தளத்திற்கு அழைத்து செல்லாமல் நான்காம் தளத்திற்கு அழைத்து செல்ல கேள்வியாக அவன் முகத்தைப் பார்த்தாள்.

“சார்..இங்கே தான் கூட்டிக்கொண்டு வர சொன்னாங்க மேடம்” என்றவன் நான்காம் தளம் வந்ததும் நர்சிடம் கண் ஜாடை காட்டி விட்டு வெளியே செல்ல அவளின் அருகில் வந்த நர்ஸ் மெல்ல பேச்சுக் கொடுத்தபடியே அவளை கேட்ட கேள்விகளும், சொன்ன விஷயமும் அவளது நெஞ்சில் தீயை வாறி இறைத்தது.

ஆத்திரமும் அழுகையும் ஒரு சேர போட்டி போட்டது அவள் முகத்தில்…கன்னங்கள் சிவக்க…உதடுகள் துடிக்க ஆத்திரத்தோடு அங்கிருந்து எழுந்தவள் நேராக சென்றது சம்ஹார மூர்த்தியின் அறைக்குத் தான். அறை வாசலில் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தவன் அவளை கண்டதும் உற்சாகத்துடன் வரவேற்றான்.

“வா வானதி…இப்ப தான் வந்தியா…இந்த சேகரை நீ வந்தா தகவல் சொல்லணும்னு சொல்லி வாசலிலேயே நிறுத்தி இருந்தேனே..எங்கே போனான் அந்த முட்டாள்” என்றான் சற்றே கோபமாக

“அவர் தான் என்னை அழைச்சுட்டு வந்தார்…”என்றாள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி…

“ஓ…சரி வானதி..சாப்பிட்டியா?ஏதாவது கொண்டு வர சொல்லட்டுமா?”

“உங்க கிட்டே கொஞ்சம் பேசணுமே?” என்றாள் ஒட்டாத குரலில்…

“கேளு மா”

“அந்த சேகர் என்னை நாலாவது மாடிக்கு நீங்க சொன்னதா சொல்லி அழைச்சுட்டு போனார்…அங்கே ஒரு நர்ஸ் என்னவோ சொல்றாங்களே…அது…” பற்களை கடித்து துப்பாத குறையாக பேசினாள் வானதி.

அவளது முகத்தையே ஒரு வித ஆராய்ச்சியோடு பார்த்துக் கொண்டு இருந்தான் சம்ஹார மூர்த்தி. அவன் அறிந்த வானதிக்கு கோபம் காட்டக் கூட தெரியாது. அவளைப் பொறுத்தமட்டும் கோபம் என்றால் அது கண்ணை உருட்டி முறைப்பது மட்டும் தான். ஆனால் இவளோ அவனையே எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறாளே…

“என்ன வானதி..பேச்செல்லாம் புதுசா இருக்கு.இதுவரைக்கும் நான் சொன்ன எல்லா விஷயத்தையும் அப்படியே நீ செஞ்சதா தான் எனக்கு நியாபகம்…இப்போ மட்டும் என்ன வந்தது? யார் கொடுத்த தைரியம் இது” என்றான் எரிச்சல் மேலோங்க…

“கண்டிப்பா உங்க கிட்டே இருந்து வரலை” என்றவள் வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

“வானதி நில்லு வானதி…இப்போ எதுக்கு இந்த கோபம் சொல்லிட்டு போ…”

“ஏன்னு உங்களுக்கு தெரியாதா?” என்றவளின் கண்களில் இன்னும் கோபம் குறையவில்லை.

“அதுல தப்பு என்ன இருக்கு வானதி…என்னோட மொத்தக் குடும்பத்தையும் எதிர்த்துக்கிட்டு உன்னை நான் கல்யாணம் செய்யப் போறேன். அப்படிப்பட்ட எனக்காக இந்த சின்ன விசயத்தை செய்ய மாட்டியா?” என்றவனின் குரலில் காதலை விட கோபமே இருந்ததில் அவளுக்கு உடல் முழுவதும் தீயை வைத்ததைப் போல இருந்தது.

அருவறுப்புடன் அவனை அவள் பார்த்த ஒற்றைப் பார்வையில் அவனது சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. வானதியிடம் இருந்து இப்படி ஒரு எதிர்ப்பை அவன் நிச்சயம் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பது நிஜம்.அவளை சமாதானம் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு வந்தவன் அவளை நோக்கி ஓரடி முன்னேறினான்.

கைகளை அவனை நோக்கி நீட்டி அவனை தடுத்தவள் வெறுப்புடன் பேச ஆரம்பித்தாள்.

“ஒருவேளை இதுக்கு நான் சம்மதிக்க மறுத்தா?”

“நம்ம கல்யாணத்தைப் பத்தி நான் யோசிக்க வேண்டி இருக்கும்”என்று அவன் கொஞ்சமும் அலட்டாமல் பதில் சொல்ல ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள போராடினாள். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட அதை அழுத்தமாக துடைத்து விட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி வெளியே சென்றாள்.

“வானதி..எனக்கொரு பதிலை சொல்லாம போனா என்ன அர்த்தம் வானதி…”பின்னால் கத்தியபடியே வந்தான் சம்ஹார மூர்த்தி. அவளுக்கு இருந்த கோபத்தில் லிப்டுக்காக காத்துக் கொண்டு இருக்காமல் படிகளின் வழியே கீழே இறங்கினாள் வானதி. பின்னால் அவன் ஓடி வருவது தெரிந்தும் கூட அவளது நடை ஒரு நொடி கூட தயங்கி நிற்கவில்லை.உள்ளுக்குள் எரிமலையாக குமுறிக் கொண்டு இருந்தாள் வானதி.

அடுத்து எங்கே செல்வது எண்பது புரியாவிட்டாலும் அங்கே மூர்த்தியின் பார்வையில் படுமாறு நிற்பதைக் கூட அவள் விரும்பவில்லை. ஹாஸ்பிடலை விட்டு அவள் வெளியே வந்த அடுத்த நிமிடம் அவளை கும்பலாக சூழ்ந்து கொண்டனர் பத்திரிக்கை நிருபர்கள்…

“மேடம் நீங்க தானே வானதி…ஈஸ்வர் சார் கூட லிவிங் டூகெதரா இருந்தீங்களே..கப்பலை விட்டு இறங்கியதுமே உங்க இரண்டு பேரோட கல்யாணம்னு சொன்னீங்க….எப்போ வந்தீங்க? இங்கே என்ன வேலை உங்களுக்கு? உங்களுக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா? மாசமா இருக்கீங்களா?” என்பது போன்ற அநாகரீகமான முகம் சுளிக்கும் வகையிலான கேள்விகளை  கேட்டவர்களை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்தாள்.

‘இவர்களிடம் என்னவென்று சொல்வது…என்னை காதலித்தவனை வேண்டாம் என்று நான் ஒதுக்கி வைத்து விட்டேன்.அதற்குக் காரணம் அவன் என்னை நம்பாதது மட்டும் அல்ல… யாரையோ பழி வாங்குவதற்காக என்னுடைய கற்பை ஒருவன் சிதைத்து விட்டான் என்றா சொல்ல முடியும்…சொன்னால் தான் இவர்களில் யாராவது நம்பி விடுவார்களா என்ன?’ என்றெல்லாம் தனக்குள்ளேயே எண்ணி வருந்தியவளுக்கு சட்டென்று அந்த எண்ணம் உதித்தது.

‘நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏன் யாரையும் எதிர்கொள்ள பயப்பட வேண்டும்? தப்பு செய்தவன் அந்த ஈஸ்வர் தானே? அவன் எங்கோ நிம்மதியாக இருக்க…நான் மட்டும் வருந்துவதா? இத்தனை நாட்கள் நம்ப வைத்து என்னைக் கழுத்தறுத்த அந்தப் பாவிக்கு இனி வாழ்க்கையில் நிம்மதி என்ற ஒன்று இருக்கவே கூடாது’ என்று எண்ணியவள் அழுத்தமான பார்வை ஒன்றை மூர்த்தியின் புறம் செலுத்தி விட்டு அவர்களிடம் பேசத் தொடங்கினாள்.

அவள் இப்பொழுது இருப்பது யுத்த களத்தில்…யாருடைய பகைக்கோ தான் பகடையாக மாறிய நிலையில் இருந்து வெளியே வரத் துடித்தாள்.அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று விரும்பினாள்.கண்ணுக்கு முன்னால் இருந்த மலர் பாதையை ஒதுக்கி விட்டு முட்கள் நிறைந்த பாதையை தேர்ந்தெடுக்க  அவள் முடிவு செய்தாள்.

“கப்பலில் இருந்தப்பவே எங்க கல்யாணம் முடிஞ்சுடுச்சு…நேத்து தான் ஊருக்கு வந்தோம்…அவருக்கு நிறைய வேலைகள் அதை எல்லாம் முடிச்சுட்டு வந்ததும் நாங்களே உங்களுக்கு பேட்டிக் கொடுக்கலாம்னு நினைச்சோம். அதுக்குள்ளே நீங்களே முந்திக்கிட்டீங்க” என்றாள் லேசான புன்னகையுடன்.

உண்மையில் உள்ளுக்குள் அவள் அழுது துடித்துக் கொண்டு இருந்தாள். ஆனால் வெளியே தெரியாத வண்ணம் அவர்களை பேசி சமாளித்து அனுப்பி வைக்க நினைத்தாள்.

ஆனால் அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டதும் அவளுக்கு பேச்சு மறந்து போனது.

“அதனால என்ன மேடம்..அதுதான் ஈஸ்வர் சார் எங்க எல்லாருக்கும் பேட்டிக் கொடுத்துட்டாரே…உங்க இரண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் முடிஞ்ச விஷயத்தையும் சாரே சொல்லிட்டார். இந்த வாரத்தில் உங்க திருமண வரவேற்பு வச்சு இருக்கிறதாகவும் சொன்னார். அதுவும் இல்லாம இன்னைக்கு எல்லா பேப்பர்லயும் உங்க இரண்டு பேரோட கல்யாண விஷயம் தான் ஹாட் டாபிக்” என்று சொல்லி அதிர வைத்தார்கள்.

“உங்களுக்கும் மிஸ்டர் மூர்த்திக்கும் தானே கல்யாணம் நடப்பதா இருந்துச்சு…அப்புறம் ஏன் அதுல இருந்து ஓடிப்போய் ஈஸ்வர் சாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?”

“எனக்கு அந்த கல்யாணத்தில் கொஞ்சமும் விருப்பம் இல்லை…சொன்னாலும் யாரும் கேட்கலை..வேற வழியில்லாம தப்பிச்சுப் போனப்போ தான் அவரைப் பார்த்தேன்”கொஞ்சம் கூட உறுத்தலின்றி பொய் பேசினாள் வானதி.

“ஆமா மேடம்…உங்க கல்யாணம் எப்படி நடந்துச்சு? எங்கே நடந்துச்சு? எல்லாத்தையும் விவரமா சொன்னா மக்களும் தெரிஞ்சுப்பாங்க இல்லையா?”

‘நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கு..அதை எல்லாம் விட்டுட்டு இங்கே வந்து இருக்கீங்களே..நாட்டோட வளர்ச்சிக்கு இது ரொம்ப முக்கியம் பாருங்க’என்று மனதுக்குள் தாளித்தவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கும் பொழுது அவளின் முதுகுப்புறத்தில் கேட்ட குரலில் அவள் உடல் ஒரு நிமிடம் விறைப்புற்றது.

“அதை எல்லாம் நான் சொல்றேன்” என்றபடி அவளுக்கு அருகில் வந்து நின்றான் ஈஸ்வர்.

“கப்பலில் மோதிரம் மாத்தி கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்…இந்த வாரத்தில் எங்களோட திருமண வரவேற்பு இருக்கு…உங்க எல்லாருக்கும் அழைப்பு உண்டு கண்டிப்பா வந்து கலந்துக்கோங்க .இப்ப எங்களுக்கு நிறைய வேலை இருக்கு” என்றவன் அடுத்த கேள்விகள் கேட்கும் முன் அவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அவனுடைய வேகத்துக்கு அவனோடு இணைந்து நடந்தாலும் அப்பொழுது தான் கவனித்தாள் கைகளில் புதிதாக முளைத்து இருந்த அந்த மோதிரத்தை.இது நேரம் வரை அது அவள் கண்ணில் படவே இல்லை.இருந்த குழப்பத்தில் அதை கவனிக்கத் தவறி விட்டாள் வானதி.

காரில் ஏறும் முன் திரும்பி அவள் மூர்த்தியைப் பார்க்க அவன் முகம் ஆத்திரத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அதை விட அதிகமாக வானதியின் மனம் கொதித்துக் கொண்டு இருந்தது.

காரில் ஏறி அமர்ந்ததும் மௌனமாகவே இருவரும் இருந்தார்கள்.கார் ஒரு விலை உயர்ந்த ஸ்டார் ஹோட்டலின் முன் நின்ற பொழுது கூட அவள் வாய் திறந்து எதையும் பேசவில்லை. இயந்திரம் போல நடந்தவளுடன் இணைந்து வந்தவன் ரிசப்ஷனில் அறை சாவியை வாங்கிக் கொண்டு முதலாம் மாடியில் ஒரு அறைக்குள் நுழைந்தான்.

அவள் ஏதாவது பேசுவாள் என்று அவன் காத்திருக்க அவளோ வெறித்த பார்வை கொஞ்சமும் மாறாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.அவளின் நிலை கண்டு வருந்தியவன் மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“இப்போ ஏன் வீட்டுக்குப் போகாம ஹோட்டலுக்கு வந்து இருக்கோம்னு கேட்க மாட்டியா?”

“என்னை மாதிரியான தரங்கெட்டவளை எல்லாம் வீட்டுக்கு அழைச்சுட்டு போக முடியாதே” வார்த்தைகளை ஆயுதமாக்கி கடுமையாக அவனைத் தாக்கத் தொடங்கினாள்.

“வானதி” அவன் குரலில் ஆட்சேபமும்,கோபமும் ஒருங்கே தோன்றியது.

“ஏன்..சரியான வார்த்தை தானே அது…ஒருவேளை இன்னும் மோசமான வார்த்தை தான் எனக்கு சரிப்பட்டு வருமோ…அப்படி என்றால் என்னை விபச்சாரின்னு சொல்லலாம் இல்லையா?” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே “ஏய்” என்ற ஆத்திரக் கூச்சலுடன் அவளை அடிக்க பாய்ந்து விட்டான் ஈஸ்வர்.

இமைக்காத அவளின் பார்வையில் கடைசி நொடி தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“தமிழ்நாட்டில் இதுவரை எனக்குன்னு எந்த சொத்துக்களையும் நான் வாங்கியது இல்லை. இன்னும் தெளிவா சொல்லணும்னா ரொம்ப வருஷங்களுக்கு பிறகு இப்ப தான் தமிழ்நாட்டுப் பக்கமே நான் வந்து இருக்கேன்.என்னோட வீடு இருப்பதெல்லாம் ஆந்திராவில்…

உடனே வீடு வாங்கணும்ன்னு முடிவு செஞ்சாலும் வீடு எதுவும் தோதாக அமையல…அதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்…சீக்கிரமே நல்லதா ஒரு வீட்டை வாங்கிட்டு அங்கே உன்னை கூட்டிட்டு போயிடறேன்”

“நல்லவன் மாதிரி வேஷம் போட்டா நீ நல்லவன் ஆகிடுவியா? உண்மையை சொல்லு..உனக்கு ஏற்கனவே தெரியும் தானே…”

“எ.எது?” என்றான் பார்வையை எங்கோ பதித்தபடி…

“எனக்கு இன்னிக்கு கன்னித்தன்மையை சோதிக்கும் பரிசோதனை நடக்கப் போகுதுன்னு” என்றவளின் கண்கள் கலங்கிப் போய் இருந்தது.

“…”

“அவனுக்கும் உனக்கும் என்ன பெரிய வித்தியாசம்? அவன் நான் இன்னும் கன்னிதானான்னு சந்தேகப்பட்டு எனக்கு டெஸ்டுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கான்.நீ டெஸ்டில் நான் கன்னி தான்னு தெரிஞ்சு எனக்கு கல்யாணம் நடந்துடுமேன்னு என்னோட வாழ்க்கையை நாசமாக்கி இருக்க…அவனை விட ரொம்பவும் மோசமானவன் நீ தான். உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கலை…சீ..நீயும் மனுஷன் தானா?”

“உனக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?”

“அப்போ நான் கேள்விப்பட்டது பொய்யில்லை..இன்னைக்கு எனக்கு டெஸ்ட் நடக்கிறதா இருந்தது உண்மை தான் இல்லையா?”

அவளின் கேள்விக்கு பதிலை சொல்லாமல் அசால்ட்டாக தோளை குலுக்கிவிட்டு ஈஸ்வர் வெளியே சென்று விட தொய்ந்து போய் அப்படியே சோபாவில் சரிந்தாள் வானதி.

தீ தீண்டும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here