
அத்தியாயம் 27
ஹோட்டல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் வானதி.ஈஸ்வர் வந்து எவ்வளவோ கெஞ்சி சாப்பிட அழைத்த பொழுது கூட வர மறுத்து விட்டு, அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் வானதி. ஈஸ்வர் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அதே நேரம் அவளை நெருங்க வெகுவாகவே தயங்கினான்.
இரண்டு முறை அவளை சாப்பிட அழைத்ததற்கு அவனை அவள் பார்த்த பார்வையில் ஒன்றுமே பேச முடியாமல் மௌனமாக திரும்பி விட்டான் ஈஸ்வர். ஹோட்டல் பணியாள் மூலமாக அறைக்குள் கொண்டு வந்த சாப்பாடு கேட்பாரற்று கிடப்பதைக் கண்டதும் வேதனையில் முகம் கசங்கினான். அன்று மதியத்திற்குள் அவளை அழைத்துக் கொண்டு ஒரு புது வீட்டிற்கு சென்றான் ஈஸ்வர்.
அவன் கிளம்ப சொன்னதும் மறுபேச்சின்றி காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளின் கோபத்தை விட அமைதி அவனை வெகுவாக கலவரமூட்டியது என்று தான் சொல்ல வேண்டும். எந்த நேரமும் வெடித்து சிதறத் தயாராக இருக்கும் எரிமலையைப் போலவே வானதி காணப்பட்டாள்.
புதிதாக கட்டி முடிக்கப்பட்டு இருந்த ஒரு பிரம்மாண்டமான வீட்டின் முன் அவர்கள் சென்ற கார் நின்றது. காரின் முன் சீட்டில் அமர்ந்து இருந்த ஈஸ்வர் வேகமாக இறங்கி பீன் சீட்டின் கதவை திறந்து விட உணர்ச்சியற்ற பார்வை ஒன்றை அவனுக்கு பரிசளித்தவள் அவனை தாண்டிக் கொண்டு வீட்டின் உள்ளே செல்ல முயல அவளை தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.
“ஒரு நிமிஷம் நில்லுங்க தம்பி…இரண்டு பேருக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்கிறேன்” என்றபடி வெளியே வந்த ஒரு வயதான பெண்மணியை அவன் அன்புடன் பார்க்க,அவளோ குரோதத்துடன் பார்த்தாள்.
‘ஹுக்கும்…இது ஒண்ணு தான் குறைச்சல்…ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ விடாம என்னைத் தடுத்துட்டு இப்போ இது ஒண்ணு தான் குறைச்சல்’ என்று நொடித்தவள் வாசலில் நிற்காமல் வேகமாக வீட்டிற்குள் வந்து விட ஈஸ்வருக்கு முகத்தில் அடி வாங்கியது போல இருந்தது.
தர்மசங்கடமான முகத்துடன் எதிரில் நின்றவரைப் பார்க்க அவரோ அப்பொழுதும் புன்னகை முகம் மாறாமலே இருந்தார்.
“தப்பா எடுத்துக்காதீங்க ஆச்சி…அவளுக்குக் என் மேல் கொஞ்சம் கோபம்”
“இருக்கத்தானே செய்யும்…பரவாயில்லை தம்பி…நீ போய் பிள்ளையைப் பார்” என்று சொல்லி விட வேகமாக வீட்டிற்குள் நுழைந்து அவளைத் தேட அவளோ ஹாலில் இருந்த சோபாவில் நட்டநடு நாயகமாக கால்மேல் கால் போட்டு நிமிர்வுடன் அமர்ந்து இருந்தாள்.
அவளது தைரியத்தைப் பார்த்ததும் அவன் கண்களில் ஒரே ஒரு நொடி மின்னல் வந்து போனது. அவளையே இமைக்காமல் பார்த்தபடி அவளுக்கு அருகில் வந்தவன் அவளுக்கு அருகிலேயே சோபாவில் அமர முயல திரும்பி அவனை ஒரு உஷ்ணப்பார்வை பார்த்து வைத்தாள். அப்படியே நின்று விட்டான்.அவளது பார்வை அவனுக்கு சவால் விட்டது.
‘என் அருகில் உட்கார்ந்து விடுவாயா நீ… அந்த தகுதி உனக்கு இருக்கிறதா’ என்று கேளாமல் கேட்டாள் வானதி.
“வீடு மட்டும் வாங்கி இருக்கேன்…இன்னும் பர்னிச்சர் ஐட்டம் எல்லாம் வாங்கலை…இப்போதைக்கு அவசரத்துக்கு இந்த சோபாவும்,மாடி பெட் ரூமில் ஒரு கட்டிலும் மட்டும் ஏற்பாடு பண்ணி இருக்கேன். மத்த பொருள் ஏதாவது வாங்கணும்னா உனக்கு பிடிச்ச மாதிரி நீயே போய் வாங்கிக்க…இந்த வீட்டில் உன் இஷ்டப்படி நீ இருக்கலாம்…” என்று பேசிக் கொண்டே இருக்கும் பொழுதே அவனை இடைமறித்துப் பேசினாள்.
இந்த ஹாலில் நல்ல பெருசா மூர்த்தியோட போட்டோ ஒண்ணு வைக்கணும்…எங்க இரண்டு பேரோட நிச்சயதார்த்தம் அன்னிக்கு எடுத்த போட்டோவில் அவர் ரொம்ப அம்சமா இருந்தார்…அந்த போட்டோ கிடைச்சா அதை அப்படியே பெருசு பண்ணி மாட்டிடுங்க” என்று சொன்னவள் எழுந்து செல்லும் பொழுது அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.
இறுகிப் போய் இருந்த அவனது முகம் அவளது வெற்றியை பறை சாற்ற அடுத்த அம்பினை எய்த தயாரானாள் வானதி.
“எல்லாம் என்னோட இஷ்டத்துக்கு செஞ்சுக்கலாம்ன்னு சொன்னீங்களே சார்…என்னோட இஷ்டம் தினமும் அவர் முகத்தில் முழிக்கணும்கிறது தான்…இனி தான் அது நடக்க வாய்ப்பே இல்லாத மாதிரி செஞ்சுட்டீங்களே..அதான் அதுக்கு பதிலா அட்லீஸ்ட் அவரோட போட்டோவாவது இருக்கட்டும்னு நினைக்கிறேன்” என்று சொன்னவள் மாடியில் இருந்த அறைக்குள் செல்ல அவளின் பின்னாலேயே சென்றான் ஈஸ்வர்.
அறைக்குள் நுழைந்து அவள் ஜன்னலோராமாக நின்று வேடிக்கை பார்க்க அவன் அவளுக்காக ஒரு தட்டில் பழங்களும், பாலும் கொண்டு வந்து கொடுத்தான்.
“எனக்கு சாப்பிடத் தெரியும்…இப்படி எதையாவது சாக்கா வச்சுக்கிட்டு அடிக்கடி வந்து உங்க முகத்தை காட்டாதீங்க…எனக்கு வெறுப்பா இருக்கு” என்று முகத்தில் அடித்தது போல கூறியவளின் வார்த்தைக்கு மதிப்பளித்து அங்கிருந்து கீழே சென்றான் ஈஸ்வர்.
அவனது மனம் முழுக்க குற்ற உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. அவனுக்கு நன்றாகவே தெரியும்.தான் செய்தது எப்பேர்ப்பட்ட கொடுமை என்று.வேறு ஒருவனை மணக்க வேண்டியவளை அவளின் அனுமதி இல்லாமல் சூறையாடியது தப்பு என்பதை அவன் நன்கு அறிந்து வைத்து இருந்தான்.
வானதி அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்க, அவளது இந்த நிமிர்வான அணுகுமுறை கண்டு உண்மையில் வியந்து போய் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு திடத்துடன் அவள் அவனை எதிர்கொள்வாள் என்று அவன் நினைக்கவில்லை.
அழுது புலம்பி மீண்டும் அந்த மூர்த்தியிடம் தான் அவள் போய் நிற்பாள் என்று அவன் எண்ணி இருந்தான். அவளது மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத் தான் ஹாஸ்பிடல் வாசலில் அவளை இறக்கி விட்டு தொலைவில் இருந்தபடியே அவளது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தான்.
அவளது வாயில் இருந்தே அவளது மனதை தெரிந்து கொள்வதற்காகவே பத்திரிக்கை நிருபர்களை அங்கே அனுப்பி வைத்தான். அவர்களின் கேள்விக்கு ஆத்திரத்தில் ஈஸ்வர் தன்னைக் கடத்திக் கொண்டு போய் இத்தனை நாளாக ஒளித்து வைத்து இருந்ததையும், தன்னுடைய கற்பை சூறையாடியதைப் பற்றியும் அவர்களிடம் சொல்லி நீதி கேட்பாள் … அழுது புலம்புவாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்க, அவளோ அது எதையுமே அங்கே சொல்லவில்லை.
‘இருவரும் மனமார விரும்பி திருமணம் செய்து கொண்டதாக சொன்னாள். ஆனால் ஏன் அப்படி சொன்னாள்? அந்த மூர்த்தியை வெறுத்தனால் அப்படி சொன்னாளா? அல்லது கெடுத்த என்னுடனேயே தன்னுடைய வாழ்க்கையை தொடங்க எண்ணி அப்படி செய்தாளா? அல்லது அந்த மூர்த்தி உண்மை தெரிந்து அவளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டானா?’ என்றெல்லாம் பலவாறாக சிந்தித்து தலையை உடைத்துக் கொண்டான் ஈஸ்வர்.
ஏதேதோ யோசனையில் கீழே இறங்கிக் கொண்டு இருந்தவனுக்கு சட்டென்று அந்த விஷயம் நினைவுக்கு வர மின்னலை விட வேகமாக பாய்ந்து வானதியின் அறைக்குள் புகுந்தான். அங்கே கொண்டு வந்த பழங்கள் அப்படியே இருக்க, வானதி ஜன்னலின் அருகே சாய்ந்து நின்றபடி இருளை வெறித்துக் கொண்டு இருந்தாள்.
சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்தவன் பழங்களோடு சேர்த்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பத்திரபடுத்தியவன் வந்த சுவடு தெரியாமல் மீண்டும் வெளியேறி விட்டான். அவனது செய்கையை எல்லாம் அருகில் இருந்த நிலைக் கண்ணாடியில் வானதி பார்த்துக் கொண்டு இருந்ததை அவன் அறியவில்லை போலும்.
‘இப்போ எதுக்கு வந்தார்..கத்தியை திருட்டுத்தனமாக எடுத்து வச்சுக்கிட்டு மறுபடி ஏன் வெளியே போறார்’ என்றெல்லாம் யோசித்தவள் அதற்குப் பிறகு அதை அசட்டை செய்து விட மீண்டும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி அவளை குழப்பமடைய செய்தது.
சற்று நேரம் பொறுத்து அறைக்கதவு தட்டப்பட எரிச்சலுடன் யார் என்று பார்த்தாள்…கீழே ஆரத்தி எடுக்க முனைந்த அதே பெண்மணி நிற்கவும், ஒன்றுமே பேசாமல் மீண்டும் வெளியே திரும்பி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.
“என்னோட பேரு பவுனு தாயி…பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு தான். கல்யாணம் ஆகி வாழப் போனது..ஈஸ்வர் தம்பி ஊருக்குத் தான்.அவங்க வீட்ல தான் என்னோட வீட்டுக்காரங்க தோட்ட வேலை செய்யுறாங்க… நான் சமையல் செய்வேன். இப்போ தம்பி உங்களுக்கு ஒத்தாசைக்கு என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்து இருக்கார்” என்று கடகடவென்று பேசிக் கொண்டே போனார் அவர். அவள் கவனிக்கிறாளா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அவர் தன்னுடைய போக்கில் பேசிக் கொண்டே போக அவளுக்கு கோபம் வந்தது.
‘கொஞ்ச நேரம் தனியாக இருக்க விடாமல் என்ன நச்சரிப்பு இது’ என்று எரிச்சலுடன் அவள் நினைக்க தொடர்ந்து அவர் பேசிய பேச்சில் அவளது கோபம் கரைந்து காணாமல் போனது.
“எங்களுக்கு குழந்தைங்க இல்ல தாயி… இந்த வருசம் பிறக்கும்… அடுத்த வருசம் பிறக்கும்ன்னு காத்திருந்தது தான் மிச்சம். ஆனா அந்த ஆண்டவனுக்கு எங்க வேண்டுதல் கேட்கவே இல்லை போல… மாசாமாசம் சம்பளம் வாங்கியதும் எப்பவும் எங்க ஊரில் இருக்கிற அனாதை ஆசிரமத்துக்குப் போய் அந்த பிள்ளைகளோட ஒருநாள் முழுக்க இருந்துட்டு வருவோம்.” என்று அவர் கூற வானதிக்கு அவர் மேல் இரக்கம் சுரந்தது.
பெற்றவர்கள் இல்லாதவர்கள் அனாதைகள்…குழந்தை இல்லாதவர்கள்??? அவர்களும் ஒரு வகையில் அவளைப் போலவே அனாதை தானே?’ என்று எண்ணியவள் அதன் பிறகு அவரிடம் கோப முகம் காட்ட விரும்பவில்லை.
“ஏன் தாயி… காலையில் இருந்து எதுவுமே சாப்பிடலை போல… பழமாவது சாப்பிடலாம் இல்லையா…” என்று அவர் வாஞ்சையுடன் கேட்க… அவரது அன்பில் அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. இமை சிமிட்டி கண்ணீரை உள்ளே தள்ளினாள்.
‘நான் ஏன் அழ வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன் அழுவதற்கு….’ என்று கோபத்துடன் எண்ணிக் கொண்டாள்.
“பசி இல்லை ….எனக்கு எதுவும் வேண்டாம்…”
“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது தாயி… ஏதாவது கொஞ்சமா சாப்பிட்டு தூங்கி எழுந்திரிங்க… உடம்பும் மனசும் தெம்பா இருக்கும்” என்று அவர் லேசாக வற்புறுத்தவே அவரது பேச்சை மறுக்க முடியாமல் திணறினாள் வானதி.
“சரி தாயி… நான் கொஞ்சமா பால் கொண்டு வர்றேன்…. அதை குடிச்சுட்டு தூங்கி எழுந்திரிங்க எல்லாம் சரியாகிடும்” என்று சொன்னவரை விரக்தியுடன் பார்த்து சிரித்தாள் வானதி.
“தூக்கமா ….எனக்கா? அதெல்லாம் வராதும்மா…வேணும்னா உங்க முதலாளி கிட்டே கேட்டு தூக்க மாத்திரை வாங்கிட்டு வாங்க… அவர் தான் பாட்டிலை கையில் வச்சுக்கிட்டே சுத்துவார்” என்றாள் குத்தலாக…
ஆனால் விவரம் புரியாத பவுனோ நேராக கீழேப் போய் ஈஸ்வரிடம் தூக்க மருந்து பாட்டிலை கேட்க அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“எதுக்கு இப்போ மாத்திரை?”
“இல்ல தம்பி…பாப்பாவை தான் கொஞ்ச நேரம் தூங்க சொன்னேன். அது தான் தூக்கம் வரல…உங்க அய்யா கிட்டே கேளுங்க அவர்கிட்ட இருக்கும்னு சொன்னாங்க” என்று விகல்பம் இல்லாமல் சொல்ல அதை கேட்ட அவன் முகமோ இறுகியது. அவள் ஏன் அப்படி சொல்லி இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன?
இதற்கு முன்னர் பல முறை அவளுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததை சொல்லிக் காட்டுகிறாள் என்று எண்ணியவன் கோபத்துடன் வீட்டின் உள்ளே இருந்த தூக்க மருந்து பாட்டிலை எடுத்து நீட்ட, சந்தோசத்துடன் அதை வாங்கிக் கொண்டார் அவர்.
“சின்னப் பாப்பா சரியா தான் சொல்லி இருக்கு” என்று சிலாகிக்க அவனது கோபம் இன்னும் அதிகரித்தது.
தன்னுடைய கோபத்தை குறைக்க ஹாலில் நடை பயின்றவனின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டதும் தான் முழு பாட்டிலையும் அப்படியே அவளுக்கு கொடுத்தது நினைவுக்கு வர வேகமாக மாடி அறைக்கு ஓடினான் ஈஸ்வர்.
அங்கே அவள் மட்டுமாக தனித்து இருக்க,வேகமாக அவள் அருகில் சென்று அவள் தோள்களை பிடித்து உலுக்கினான்.
“எத்தனை மாத்திரை சாப்பிட்ட..பாட்டில் எங்கே?”என்று பதட்டத்துடன் உலுக்க அவளுக்கோ ஒன்று புரியவில்லை.அதே நேரம் அவனது பதட்டத்தை அவள் ரசித்தாள்.
‘எத்தனை முறை என்னை பதற வச்சு இருப்ப…’என்று வெஞ்ச்சினத்தொடு எண்ணிக் கொண்டாள்.
அவள் பதில் சொல்லாமல் போகவே அவளை தள்ளி விட்டு அறை முழுக்க தேடியவனின் பார்வையில் அந்த பாட்டில் பட வேகமாக சென்று அதை கைப்பற்றினான்.
மாத்திரைகள் குறையாமல் இருக்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டவனை வானதி வித்தியாசமாக பார்த்தாள்.
“டேபிளில் ஒரு மாத்திரை வச்சு இருக்கேன்…உனக்கு வேணும்னா அதை போட்டுக்கோ”என்று சொல்லி விட்டு வெளியேற வானதியின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.
“இப்போ எதுக்கு இந்த மாதிரி வித்தியாசமா நடந்துக்கறீங்க? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க…கத்தியை எடுத்து நரம்பை அறுத்துகிட்டோ…தூக்க மருந்தை பாட்டிலோட சாப்பிட்டுட்டோ தற்கொலை செஞ்சுப்பேன்னு நினைக்கறீங்களா… நான் எதுக்கு சாகணும்? சுயநினைவு இல்லாதப்போ என்னைக் கெடுத்த நீங்களும்… தன்னையே நம்பி வந்த ஒருத்தியை காப்பாதாமல் விட்ட அந்த மூர்த்தியும் இன்னும் உயிரோடு இருக்கும் பொழுது நான் மட்டும் ஏன் சாகணும்?’என்று பொட்டில் அறைந்தார் போல அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான் ஈஸ்வர்.
பூவாக இருந்தவளை காலம் புயலாக மாற்றி இருந்தது. தீயும்,புயலும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?
தீ தீண்டும்.
Thanks for the update. Could have been longer. Waiting for the next update. Please try to give us an about your next update. Thank you.
hai ma,
thanks for your comments…weekly 2 ud than ennala kodukka mudiyum ma…athuku mela enaku possible illa…
Superb va iruku ud. Next ud sikarama kudunka