Theendatha Thee Neeye Tamil Novels 29

11
5432
Madhumathi Bharath Tamil Novels

அத்தியாயம் 29

இருளில் பூனை போல அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்தாள் வானதி. ஈஸ்வர் எந்த அறையில் தங்கி இருக்கிறான் என்பது தெரியாததால் மிகுந்த கவனத்துடன் சுற்றுப்புறத்தை பார்வையால் அலசியபடியே வரத் தொடங்கினாள்.

நேராக வாசலுக்கு சென்றால் வாசலில் இருக்கும் காவலர்களிடம் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் பக்கவாட்டுப் பகுதியை நோக்கி செல்லத் தொடங்கினாள். அங்கே இருந்து மூர்த்தியின் முகம் தெளிவாக  தெரியாததால் சற்று தள்ளி கார் பார்க்கிங் ஏரியாவிற்கு முன்னால் இருந்த ஒரு சிறிய மர ஸ்டூலை கொண்டு வந்து அதன் மேல் ஏறி நின்று பேசத் தொடங்கினாள்.

“இங்கே எதுக்கு வந்தீங்க….”

“உன்னைப் பார்க்கத் தான் வானதி”

“என்னை எதுக்கு நீங்க பார்க்கணும்..உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்”

“என்ன வானதி இப்படி எல்லாம் பேசுற….நாம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம்.அதை மறந்துட்டியா”

“நான் எதையும் மறக்கவில்லை… நீங்க காதல் சொன்னதையும் மறக்கலை…திக்கற்று … போறதுக்கு இடமே இல்லாம உங்ககிட்டே வந்தப்போ எனக்கு ஒழுங்கான பாதுகாப்பு கொடுக்காமல் போனதையும் மறக்கல… இது எல்லாத்தையும் விட நான் இன்னும் கன்னிதானான்னு தெரிஞ்சுக்க எனக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முயற்சி செஞ்சீங்களே…அதையும் நான் மறக்கல” வானதியின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டைகளாய் மாறி சுழன்று அடிக்க மூர்த்தியின் தலை தானாகவே தொங்கிப் போனது.

“நான் செஞ்சது எல்லாமே தப்பு தான் வானதி…ஆனா அப்போ எனக்கு இருந்த சூழ்நிலை அப்படி.. அதுக்காக நீ என்னை விட்டுட்டு அந்த ஈஸ்வரை கல்யாணம் செஞ்சுக்க முடிவெடுக்கலாமா”

“ஏன் அவரை கல்யாணம் செஞ்சா என்ன தப்பு… அவர் ஒண்ணும் உங்களை மாதிரி என்னை சந்தேகப்படலையே”

தன்னுடைய கற்பை கேள்விக்குறியாக்கிய விஷயத்தை ஏனோ மூர்த்தியிடம் பகிர்ந்து கொள்ள அவளால் முடியவில்லை.அது எதனால் என்பது அவளுக்கு தெரியவில்லை.அது வெளியே யாரிடமும் இலகுவாக சொல்லும் விஷயம் இல்லை என்பதால் அந்த முடிவா அல்லது ஈஸ்வரின் மரியாதையை மூர்த்தியிடம் விட்டுக் கொடுக்க முடியாமல் அந்த முடிவை எடுத்தாளோ தெரியாது.

ஏனோ வானதிக்கு ஈஸ்வரை விட மூர்த்தியின் மீது அதிக கோபம் இருந்தது. ஈஸ்வர் ஆரம்பித்தில் இருந்தே அவளுக்கு வில்லன் தான். என்றுமே தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முயற்சி செய்தது இல்லை. ஆனால் மூர்த்தி அப்படி இல்லை..

மனதுக்குள் மூர்த்தியை ஹீரோவாக்கி சிம்மாசனம் போட்டு அமர வைத்து இருந்தாள். அப்படிபட்டவனின் செய்கையை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னை நம்பி வந்த பெண்ணை காப்பாற்றுவது தானே ஆண்மைக்கு அழகு.

அவனால் முடியாத சூழ்நிலை என்பது வேறு…ஆனால் தானாகவே அவனைத் தேடி சென்ற பிறகும் கூட தகுந்த பாதுகாப்பின்றி தன்னை அவன் அனுப்பியதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்பது தான் நிஜம்.ஒருவேளை அன்று அவன் பாதுகாப்பாக எங்கேனும் தங்க வைத்து இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்க வாய்ப்பே இல்லை எனும் உண்மை அடிக்கடி அவளது மனசாட்சியை உலுக்கிக் கொண்டு இருந்தது.

அது மட்டுமா அதன்பிறகு அந்த சோதனைக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் திருமணத்தை நிறுத்தி விடுவது போல பேசிய பேச்சும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவளால் இனி மூர்த்தியிடம் தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைக்க முடியாது தான். இருப்பினும் அவன் பொய்த்துப் போனதை அவளால் ஏற்க முடியவில்லை. எனவே கோபம் கொஞ்சமும் குறையாமல் மூர்த்தியை எதிர்நோக்கினாள்.

“வானதி எனக்கு ஒரேயொரு வாய்ப்பு தர மாட்டியா…என்னோட பக்கத்தை விளக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு வானதி”என்று அவன் கெஞ்ச…அமைதி காத்தாள் வானதி… அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.

“அன்னிக்கு ஹாஸ்பிடலில் அந்த டெஸ்ட்டுக்கு நான் ஏற்பாடு செஞ்சதுக்கு காரணம் ஈஸ்வர் தான் வானதி” என்றவன் கூறியதை நம்ப முடியாமல் வெறிக்கத் தொடங்கினாள் வானதி.

“ஆமா வானதி…மெய்…என்னை நம்பு…ஏற்கனவே என்னுடைய சொந்தங்களுக்கு உன்னைப் போல ஒரு வசதி இல்லாத வீட்டுப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்வது கொஞ்சமும் பிடிக்கவில்லை.அவர்களிடம் அவன் போய் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி அவர்களை எனக்கு எதிராக திருப்பி விட்டான்.

கப்பலில் இருந்தப்போ நீங்க இரண்டு பேரும் எல்லை மீறி பழகினதாகவும்… உங்க இரண்டு பேருக்கும் நடுவில் பண விஷயத்தில் ஏதோ சண்டை வந்ததால தான் நீ அவனை பிரிஞ்சு வந்துட்டன்னு இஷ்டத்துக்கு புளுகி இருக்கான்…நீ கேட்ட பணத்தை அவன் உனக்கு கொடுக்காததால தான் நீ அவனை விட்டு பிரிஞ்சு வந்ததாக அபாண்டமா சொல்லி இருக்கான்” என்று அவன் சொல்வதை எல்லாம் முகம் இறுக கேட்டுக் கொண்டிருந்தாள் வானதி.

“அவன் சொன்ன எல்லாத்தையும் அவங்க நம்பிட்டு என்னை ரொம்பவே தொந்தரவு செய்ய ஆரம்பிச்சாங்க… நான் அவங்க கிட்டே என்னால முடிஞ்ச அளவு மறுத்து பேசினேன். அந்த ஈஸ்வர் சொல்றதை எல்லாம் நம்ப வேண்டாம்னு எவ்வளவோ எடுத்து சொன்னேன். ஆனா அவங்க யாருமே அதை ஒத்துக்கலை… உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்கிறதை மூர்க்கமா தடுத்தாங்க.

எனக்கு அவங்களை எப்படி சமாதானம் செய்றதுன்னே தெரியலை. நான் ரொம்ப பிடிவாதமா சொல்லிட்டேன். கட்டினா உன்னைத் தான் கட்டுவேன்னு… அதுக்கு அவங்க போட்ட நிபந்தனை தான் அந்த டெஸ்ட் விஷயம்.

மடியில் கணம் இருந்தா தானே வழியில் பயம் வரும்…அதனால அவங்க சொன்னதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். நான் அதுக்கு சரின்னு சொன்னதுக்கு காரணம் உன் மேல் இருந்த அளவு கடந்த நம்பிக்கை தான் வானதி. ஆனா அதுவே உன்னை இந்த அளவுக்கு வருத்தப்பட வைக்கும்னு நான் எதிர்பார்க்கல”

“…”

“இன்னும் உனக்கு என் மேல கோபம் தீரலையா வானதி…என்னோட தப்புக்கு என்ன தண்டனை வேணா கொடு.. ஆனா அதை என்கூடவே இருந்து கொடு… என்னோட வந்துடு வானதி. இனி யாரைப் பத்தியும் நான் கவலைப்பட போறது இல்லை. எனக்கு நீ தான் முக்கியம்.

இது தான் சரியான நேரம்… இப்படியே என் கூட வந்துடு. நாம நிம்மதியா சந்தோசமா வாழலாம். அவனை கல்யாணம் செஞ்சுகிட்டா உன்னோட வாழக்கை நல்லா இருக்காது வானதி. ஏன்னா… அவன் சரியான பைத்தியம்.. சைக்கோ.. ராட்சசன்” என்று ஆத்திரமாக அவன் சொல்லிக் கொண்டே போனவன் சுவரை மேலும் நெருங்கி வர… அதே நேரம் அந்த வீட்டை சுற்றிலும் விளக்குகள் பிரகாசமாக ஒளிரத் தொடங்கியது.

‘யார்’ என்ற பதட்டத்துடன் இருவருமே திரும்பிப் பார்க்க அங்கே இருந்தவன் வேறு யாராக இருக்கக் கூடும் ஈஸ்வரைத் தவிர.

வானதி நின்ற இடத்திற்கு சில அடிகள் தள்ளி இருந்த கார் பார்க்கிங் பகுதியில் தன்னுடைய புத்தம் புது பெராரி (Ferari) காரின் முன் பகுதியில் சாய்ந்து படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து அண்ணாந்து வானத்தை வேடிக்கை பார்த்தவண்ணம்  படுத்து இருந்தவன் ஈஸ்வரே தான். அதுவரை இருளில் அவன் இருந்ததை கவனிக்காமல் விட்ட மடத்தனத்தை எண்ணி இருவருமே நொந்து கொண்டார்கள்.

“என்ன மூர்த்தி என்னைப் பார்க்க வந்து இருக்க போல.. வந்தது தான் வந்த… கொஞ்சம் நேரமா வந்து இருக்கலாம் இல்லையா.. அது என்ன திருடன் மாதிரி அர்த்த ராத்திரியில் வந்து இருக்க…” என்று அமர்த்தலாக கேட்டவாறே காரின் முன் பகுதியில் இருந்து லாவகமாக குதித்தவனைக் கண்டு மூர்த்தியின் கண்களில் லேசாக பயத்தின் சாயல்…

வானதி தங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்பது புத்திக்கு உறைக்க ஆத்திரத்துடன் பேசத் தொடங்கினான் மூர்த்தி.

“நானும் வானதியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்” என்றான் குரலில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு…

“ஹ…நானும் அவளும் நாளைக்கு காலையில் கல்யாணமே செய்யப் போறோமே” என்றான் அசட்டையாக…

“காதலிக்கிறவங்களை பிரிக்கிறது ரொம்ப பெரிய பாவம் ஈஸ்வர்…”

“அப்படியா” என்று அவன் கதை கேட்க மூர்த்திக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.

“வானதி என்னோடவ ஈஸ்வர். அவளை எனக்குக் கொடுத்துடு… பழைய பகையை மனசுல வச்சுக்கிட்டு எங்க காதலோட விளையாடாதே…”

“யாருடா பழைய பகையை மனசில் வச்சுக்கிட்டு இருக்கிறது… நீயா… நானா” என்று பேசிக் கொண்டே இருந்தவன் வானதி அங்கே இருப்பதை உணர்ந்து சட்டென்று ஒரு நொடி அமைதியானான்.

“தேவை இல்லாத பேச்சு வேண்டாம் மூர்த்தி. வானதி இனி எனக்கு மட்டும் தான் சொந்தம். இனி எந்தக் காலத்திலும் அவள் உனக்கு சொந்தமாகவே முடியாது. நீ திரும்பிப் போ…”

“வேண்டாம் ஈஸ்வர்… என்னிடம் விளையாடிப் பார்க்காதே… என்ன நினைச்சுக்கிட்டு இருக்க.. நான் நினைத்தால் இப்ப இந்த நிமிடமே வானதியை என்னோட கூட்டிக்கிட்டு போக முடியும். பார்க்கறியா?” என்றான் சவால் விடுவது போல…

“வேண்டாம் மூர்த்தி. வீணாக ஆபத்தை விலை கொடுத்து வாங்காதே… ஈஸ்வருக்கு சொந்தமான பொருள் மேல கை வைக்கிறதும் ஒண்ணு… கரண்ட் மேல கை வைக்கிறதும் ஒண்ணுன்னு உனக்கு தெரியாதா?” என்று அவன் அழுத்தமாக கேட்க மூர்த்திக்கு இன்னமும் ஆத்திரம் அதிகமானது..

வானதி தன்னை அசூசையாக பார்ப்பதை உணர்ந்து கொண்ட மூர்த்தி தன்னை சமாளித்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“இப்போ உன்னோட கண்ணு முன்னாடியே வானதியை கூட்டிட்டு போறேன் உன்னால முடிஞ்சா தடுத்துக்கோ” என்றவனை தடுக்க கொஞ்சமும் முயற்சி செய்யாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான் ஈஸ்வர்.

ஈஸ்வரின் புறம் எச்சரிக்கையாக பார்வையை செலுத்திய வண்ணம் அந்த சுவரை நோக்கி வந்தான் மூர்த்தி.

“வா வானதி”என்று கைகளை அவள் புறம் நீட்டியவாறே மேலும் ஒரு அடி நெருங்கியது மட்டும் தான் அவனுக்குத் தெரியும்.

அவன் அந்த சுவரை தொட்ட அடுத்த நிமிடமே அதிகபட்ச அழுத்தத்துடன் மின்சாரம் அவன் உடலில் பாய… இருபதடி தள்ளிப் போய் கீழே விழுந்து மூர்ச்சையானான் மூர்த்தி.அதே நொடி வீடு முழுக்க சைரன் ஒலிக்க மொத்த காவலர் கூட்டமும் அலறி அடித்துக் கொண்டு எழுந்தனர்.

கண் முன்னே அப்படி ஒரு நிகழ்வை பார்த்த வானதி உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

“ஆமா… என்ன மேடம் இவ்வளவு நேரம் வீரமா பேசிட்டு இருந்த மூர்த்தி இப்ப என்னடான்னா அவ்வளவு தூரம் தள்ளி ரோட்டில் கீழே படுத்து இருக்கார்… எதுவும் வேண்டுதலோ?…. எழுந்து பக்கத்தில் வர சொல்லேன்…” என்று முகத்தில் புன்னகையை தேக்கிக் கொண்டு பேசியவனைக் கண்டு அரண்டு போய் இரண்டடி பின்னால் நகர்ந்தாள் வானதி.

 “நீ உள்ளே போ” என்றான் அவளைப் பார்த்து…

இரண்டு நாட்களாக அவளிடம் அவன் அடக்கி வாசிக்கும் தைரியத்தில் அந்த இடத்திலேயே அழுத்தமாக கால் ஊன்றி நின்றாள் வானதி. ‘எனக்குத் தெரிந்து தான் ஆக வேண்டும். நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்’ என்று சொல்லாமல் சொல்வது போல…

மெதுவாக அவள் புறம் திரும்பி பார்த்தான் ஈஸ்வர். அவளின் செய்கைக்கான காரணத்தை உணர்ந்து கொண்டவனின் முகத்தில் மெல்லிய புன்சிரிப்பு… அவனது அந்த ஒற்றைச் சிரிப்பிலேயே அவளது தைரியம் எங்கோ ஓடிப்போய் ஒளிந்து கொண்டது.

‘மூர்த்திக்குத் தான் என்னைப் பத்தி தெரியாது..உனக்குமா தெரியாது” என்றே அதே உதட்டில் உறைந்த புன்னகையுடன் லேசாக தாடையை தடவியபடி அவன் கேட்க இருளிலும் பளபளத்த அவனது கண்கள் ஆரம்ப கால ஈஸ்வரை நினைவுபடுத்த அவளையும் அறியாமல் அவள் கால்கள் பின்னோக்கி செல்லத் தொடங்கியது.

“ம்..குட்…வீட்டுக்குள்ளே போய் நல்ல பிள்ளையா தூங்கு..காலையில் தாலி கட்டும் பொழுது தூங்கி விழுந்துடாதே” என்று கேலி கலந்த குரலில் சொன்னாலும் அவன் குரலில் இருந்த அழுத்தம் அவளை உள்ளே போக வைத்தது.

அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும் போனை எடுத்து யாருக்கோ தகவல் சொன்னான் ஈஸ்வர்.

“மயங்கிட்டான் போல”

“….”

“இன்னும் சாகலை” என்று வெறுப்புடன் அவன் கூறுவது கேட்டாலும் அங்கே நிற்கும் துணிவு இல்லை அவளுக்கு. வேகமாக மாடிக்கு வந்தவள் கட்டிலில் படுத்து போர்வையை இழுத்து போத்திக் கொண்டாள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்ற சத்தம் தெளிவாக கேட்டது. மூர்த்தியைத் தான்  தூக்கிக் கொண்டு போகிறார்கள் என்பதும்  புரிந்தது அவளுக்கு. இப்பொழுது அவள் மனம் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தது.

‘கரண்ட் ஷாக் அடித்ததே அந்த மூர்த்தி மயங்கினானா… அல்லது….செத்து எதுவும் போய் இருப்பானோ’

சுவரின் அருகே வந்த அதன் மீது கைகளை வைத்த அடுத்த நொடி மூர்த்தி தூக்கி எறியப்பட்ட காட்சி இன்னும் அவள் கண் முன்னே வந்து போய் கொண்டிருந்தது.

அந்தக் காட்சிகள் அவளை தூங்க விடாமல் இம்சிக்க அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வரும் காலடி ஓசையில் அவளது இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அவளுக்கு நன்கு அறிமுகமான காலடி ஓசை அது.

‘ஈஸ்வர் தான் வருகிறான்.ஆனால் ஏன்? இந்த நேரத்தில் அவனுக்கு இங்கே என்ன வேலை?’ என்று எண்ணியவள் படபடக்கும் இதயத்தோடு மூச்சு விடவும் மறந்து போனவளாக போர்வைக்கு அடியில் ஒளிந்து கொண்டாள் வானதி.

தீ தீண்டும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here