Theendatha Thee Neeye Tamil Novels 3

2
4737

அத்தியாயம் 3

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே பரபரப்பாக இருந்தாள் வானதி.அன்று நடக்கப் போகும் கல்லூரி விழாவில் பாடப் போகிறாள் இல்லையா…அதனால் ஏற்பட்ட இன்ப பரபரப்பு தான் எல்லாமும்.ஒரு நாள் வகுப்பில் யாரும் வருவதற்கு முன்னரே வந்து சேர்ந்தவள் யாரும் இல்லை என்ற நினைவில் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு பின்னால் வந்த அவளது தோழி சுதா அவளது குரலைக் கேட்டு வியந்தவள் அவளை கட்டாயப்படுத்தி கல்லூரி ஆண்டு விழாவில் பாடுவதற்கு பெயரை கொடுக்க வைத்து விட்டாள்.

அதுவரை ஏதோ ஒரு தைரியத்தில் இருந்தவள் நேரம் நெருங்க நெருங்க பதட்டத்திற்கு ஆளானாள்.இரவு முழுக்க அவள் தூங்கவே இல்லை.அவளுக்கு சங்கீதத்தில் ஆழ்ந்த ஞானம் எதுவுமில்லை.அவளுடைய பலம் அவளது இனிமையான குரல் வளம் மட்டுமே.அதை மட்டுமே வைத்துக் கொண்டு மேடையில் ஏறி அத்தனை பேர் முன்னிலையில் பாடி விட முடியுமா என்ற பயம் ஒருபுறம் இருக்க,பாடும் பொழுது மற்ற மாணவர்கள் எழுந்து கத்தி கூச்சல் போட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் ஒரு புறமும் அவளை ஆட்டுவிக்க அவள் உடல் மீண்டும் காய்ச்சல் கண்ட அளவுக்கு நடுங்கத் தொடங்கியது.

இரண்டு நாளைக்கு முன்பிருந்தே அவளுக்கு தெம்பூட்டும் விதமாக மற்ற தோழிகள் அவளுக்கு கொடுத்த அறிவுரைகள் அனைத்தும் காற்றோடு காற்றாக கலந்து போய் விட்டது.எத்தனையோ முறை அவளது ஆசிரமத் தோழிகள் கூட அவளை கிண்டல் செய்து பார்த்து விட்டனர் அவளின் இந்த பயத்தை.அவளும் தான் என்ன செய்வாள்…நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளுடன் இருக்கும் இந்த பயம் வெறுமனே மற்றவர்கள் கொடுக்கும் ஊக்கமான பேச்சினால் மட்டும் போய் விடுமா என்ன?அவள் பயம் அவளுக்கு…அது மற்றவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறதே என்று நொந்து கொள்வாளே தவிர அதை வாய் விட்டுக் கூட சொல்ல மாட்டாள்.அதற்குக் காரணமும் பயம்.

தெனாலி படத்தில் எல்லாவற்றிக்கும் பயம் என்று நடிகர் கமல் சொல்வாரே,அவளும் கிட்டத்தட்ட அதே போலத்தான்…என்ன ஒன்று அவளின் பயம் சக மனிதர்களிடம் தான் சற்று அதிகம்.எத்தனையோ முறை யார் யாரோ அவளின் பயத்தை போக்க என்னென்னவோ அறிவுரை கூறிப் பார்த்து விட்டார்கள்.ஆனால் அதன் பலன் என்னவோ பூஜ்யம் தான்.மற்ற மனிதர்களுக்கு பயம் என்பது ஒரு உணர்வு.வானதியை பொறுத்தவரை தீரா நோய்…

தன்னிடம் இருப்பதிலேயே ஓரளவிற்கு நன்றாக இருந்த ஒரு சுடிதாரை எடுத்தவள் குளித்து முடித்து அதையே உடுத்தியவள் முகம் மட்டும் தெரியக் கூடிய சின்னக் கண்ணாடியை முன்னும் பின்னுமாக வைத்து உடை எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டாள்.

மேடையில் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவியர்கள் முன் நிற்பதால் அதை எல்லாம் சரிப் பார்த்துக் கொள்ளத் தோன்றியது அவளுக்கு.அவளுக்கு இருந்த பயத்தில் அவளது அந்த சுமாரான உடை அவளைப் பார்த்து கேலி செய்வதைப் போலவே அவளுக்கு தோன்றியது.

‘சும்மாவே எல்லாரும் என்னை அநாதை என்று கேலி பேசுவார்கள்…அப்படி இருக்க அவர்கள் முன்னிலையில் இந்த பழைய உடையில் போய் நிற்பதா?ஆனா என்கிட்டே வேற புதுசா இல்லையே’என்று வருந்தினாளே ஒழிய அன்று கல்லூரிக்கு செல்லாமல் இருந்து விடலாம் என்ற எண்ணம் மட்டும் அவளுக்கு வரவே இல்லை…சுதாவை ஏமாற்றுவது போல ஆகிவிடும்.மேலும் அவளிடம் திடமாக மறுத்து இருந்தால் பரவாயில்லை.

அப்படி இல்லாமல் அவள் சொன்னதும் தலையை ஆட்டி ஒத்துக்கொண்ட பின் பயந்து பின் வாங்கினால் அதனால் சுதா பாதிக்கப்படுவதையோ,வருந்துவதையோ அவள் விரும்பவில்லை.
தன்னுடைய இயலாமையினாலும்,பயத்தினாலும் ஏற்படும் விளைவுகளை தான் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பதில் சிறுவயது முதலே உறுதியாக இருந்தாள் வானதி.தான் செய்த தவறுக்கு மற்றவர்கள் தண்டனை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணமே அதற்குக்காரணம்.

ஒருவழியாக கல்லூரிக்கு கிளம்பியவள் பாதி வழியில் மழையில் சிக்கிக் கொண்டாள்.லேசாக தூறலாக ஆரம்பித்த மழை அவள் சுதாரித்து எங்கும் ஒதுங்குவதற்கு முன்னரே பெருமழையாக மாறி அவளை நனைக்கத் தொடங்கியது.ஏற்கனவே உடையை எண்ணி கவலையில் இருந்தவள் இப்பொழுது மொத்தமாக சோர்ந்து போனாள்.இருந்தாலும் சுதாவின் முகத்தை ஒருமுறை மனக்கண்ணில் கொண்டு வந்தவள் அடுத்த அடி எடுத்து வைக்கும் பொழுது எங்கிருந்தோ வந்த கார் அவள் மேல் சேறை வாறி இறைத்தது.அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவள்,ஏற்கனவே இருந்த குழப்பத்தில் சுற்றுப்புறத்தைக் கூட மறந்து விட்டு முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“உனக்கு சிரிக்கவே தெரியாதா?” என்று அவளுக்கு அருகில் கேட்ட குரலில் விலுக்கென்று திரும்பிப் பார்த்தாள் சம்ஹார மூர்த்தி குடையுடன் நின்று கொண்டு இருந்தான்.அவனுக்கு பின்னால் பார்வையை செலுத்தியவள்,தன் மீது சேற்றை வாறி இறைத்தது அவனது கார் தான் என்பதை கண்டு கொண்டவள் கோபமாக முறைக்கத் தொடங்கினாள்.

வானதி முறைக்கத் தொடங்கிகிறாள் என்பதுமே யாரும் பெரிய அளவில் மனக் கோட்டைகள் கட்டி விட வேண்டாம்.அவளைப் பொறுத்தவரை அவளது முட்டைக் கண்ணை கொஞ்சம் விரித்துப் பார்ப்பதற்குப் பெயர் தான் கோபம்.

அவளுக்கு மறந்து போய்க் கூட யாரிடமும் கோபப்படத் தெரியாது.அன்பை மற்றவர்களிடம் யாசகமாக எதிர்பார்க்கும் ஆசிரமத்தில் வளர்ந்த பெண் என்ற காரணத்தினால் எப்பொழுதும் அவளுக்கு யார் மீதும் கோபம் வந்ததில்லை.அவள் மற்றவர்களிடம் இருந்து அன்பை பெறவும்,தன்னிடமிருக்கும் எல்லா அன்பையும் கொடுக்கவே முனைவாள்.

அப்படிப்பட்டவளின் கோபப்பார்வை (!) சம்ஹார மூர்த்தியை அசைத்துப் பார்த்து விடுமா என்ன?

அவன் முன்னிலும் அதிக அழுத்தத்துடன் அவள் மீது பார்வையை செலுத்தியபடி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘செய்றதையும் செஞ்சுட்டு பார்வையைப் பார்’என்று உள்ளுக்குள் பொங்கியவள் அவளுக்கே கேட்காத குரலில் கோபமாக (!) பேசினாள்.

“மேலே சேறை வாறி அடிச்சுட்டு இப்ப ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறீங்களா?”

“உன் மேலே சேறை அடிச்சது நான் இல்லை…என்னோட டிரைவர்…உன்னைத் தாண்டிய பின்னாடி தான் நீ இங்கே இருக்கிறதே தெரியுது…மழை தான் இப்படி வேகமா பெய்யுதே..எங்கேயாவது ஒதுங்கி நிற்க மாட்டியா…”கிண்டலில் ஆரம்பித்து அதட்டலுடன் முடிந்தது அவன் குரல்.“எங்கே ஒதுங்க..அதுக்குள்ள தொப்பலா நனைஞ்சு போயிட்டேனே”

“இப்போ காலேஜ்க்கு போறியா…இல்லை ஆசிரமத்திற்கா?”

“காலேஜ்க்கு போயே ஆகணும்”

“சரி..வண்டியில் ஏறு..நானும் அங்கே தான் போறேன்…”

அவளுக்கு மறுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.அவன் சொன்னதும் தலையை ஆட்டிக்கொண்டு வேகமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.மழையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது ஒரு காரணம் என்றாலும், சம்ஹார மூர்த்தியிடம் அவளுக்கு இருந்த மரியாதை அவளை மறுபேச்சு பேசாமல் காரில் ஏற வைத்தது.

அவள் மறுத்தே பேசாமல் காரில் ஏறியதை வியப்புடன் பார்த்தவன் குடையை மடக்கிவிட்டு காரில் ஏறி அமர்ந்து காரில் இருந்த ஹீட்டரை உயிர்ப்பிக்க அவளுடைய உடலில் இருந்த நடுக்கம் மெல்ல குறைந்து அவள் உடல் இயல்பானது.

என்ன தான் நடுக்கம் குறைந்தாலும்,அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.சேறு நிறைந்த உடை ஒரு பக்கம்,அவளது பயம் ஒருபுறமாக காரில் தவிப்புடனே அமர்ந்து இருந்தாள்.அவளின் உடல்மொழியை உணர்ந்து கொண்டவனோ கொஞ்சம் கடுப்பானான்.

‘காரில் ஏற சொன்னதும் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாம ஏறிட்டு இப்ப வந்து ஏன் இப்படி நடந்துக்கிறா…’

“இப்ப எதுக்கு இப்படி பயப்படுற…மழையில் நனைஞ்சுக்கிட்டே வரப் போறியேன்னு பாவம் பார்த்து உன்னை கூட்டிக் கொண்டு வந்தா…ரொம்ப பண்ணுற..”

அவன் பேசும் வார்த்தைகள் ஒன்றுக்குக் கூட அர்த்தம் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள் வானதி.

“நா…நான் என்ன செஞ்சேன்”

“எதுக்கு இப்போ பயந்து போய் கார் கதவில பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு வர்ற”

“ட்ரெஸ் எல்லாம் சேறா இருக்கே…அதுதான்…”

“பொய் சொல்லாதே…முகத்தில் பயமும் டென்ஷனும் டன் கணக்கா வழியுது”“இன்னைக்கு பங்க்ஷன்ல நான் பாடணும்…ஆனா டிரஸ் எல்லாம் இப்படி…”

“ஸோ…வாட்?” என்று கேட்டவன் அழகாக ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க ஒரு நிமிடம் தன்னை மறந்து பார்த்தவள் டக்கென தலையை குனிந்து கொண்டாள்.

“எனக்கு தெரிஞ்சு பாடுறதுக்கு தேவை நல்ல குரல் வளம் மட்டும் தான்.இப்போ நீ சொல்லித் தான் தெரியுது டிரஸ் நல்லா இருந்தா தான் பாட முடியும்னு”அப்பட்டமான கேலி வழிந்தது அவன் குரலில்.

“என்னோட நிலைமையைப் பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா?”உதடு பிதுக்கி அழத் தயாரானாள் வானதி.

“பின்னே வேற என்ன செய்ய சொல்ற…உன்னோட திறமை நீ போட்டு இருக்கிற டிரஸ்ல இருக்குனு நீ இவ்வளவு உறுதியா நம்புறியே”என்று சொன்னவன் அவள் சிந்திக்க சில நிமிடங்கள் அவகாசம் கொடுத்தவன் தொடர்ந்து பேசினான்.

“திறமைக்கும்,உடுத்துற உடைக்கும் எந்த எந்த சம்பந்தமும் இல்லை…ஸ்டேஜில் ஏறி எந்த பயமும் இல்லாம பாடு” என்றவன் அத்தோடு தன்னுடைய வேலை முடிந்தது என்பது போல போனை எடுத்து யாரிடமோ தொழில் தொடர்பாக பேச ஆரம்பித்தான்.

அவன் சொன்ன வார்த்தைகளை தனக்குள்ளாகவே யோசித்துக் கொண்டு இருந்தவளின் முகத்துக்கு நேரே சொடுக்கி தன்னுணர்வுக்கு கொண்டு வந்தான்.

“காலேஜ் வந்துடுச்சு…இப்படியே போக வேண்டாம்.என் கூட வா” என்று அழைத்து சென்றவன் ஒற்றை குடையில் அவளையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு உள்ளேயே இருந்த பெண்கள் விடுதிக்குள் நுழைந்து வார்டனை அழைத்துப் பேசினான்.

“இந்த பொண்ணு ட்ரெஸ் எல்லாம் ரொம்ப சேறாகிடுச்சு..ஹாஸ்டலில் இருக்கிற வேற பொண்ணோட ட்ரெஸ் ஏதாவது கொஞ்சம் வாங்கி கொடுங்க”என்று சொன்னதும் அவசரமாக மறுத்துப் பேசினாள் வானதி.

“அதெல்லாம் வேணாம்…இங்கேயே ஏதாவது ரூம்ல என்னோட ட்ரெஸ்சை காய வச்சா கூட போதும் எனக்கு” என்ற சொன்னவளை கட்டாயப்படுத்தாமல் அவளை வார்டனின் வசம் ஒப்படைத்து விட்டு அவன் வெளியேறி விட அங்கிருந்த ஒரு ரூமில் நுழைந்து தன்னுடைய உடையில் இருந்த சேறை கழுவி முடித்தபின் உடைகளை நன்றாக காய வைத்து விட்டு நேராக ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தாள் வானதி.

அங்கே வரும் வரை அவள் மனதை ஆக்கிரமித்து இருந்தவன் சம்ஹார மூர்த்தியே…ஒற்றைக் குடையில் வந்தாலும் கூட கொஞ்சம் கூட தன்னை நெருங்க நினைக்காமல் விலகி நடந்த அவனது கண்ணியம் அவளை ஈர்த்தது.

ஏற்கனவே இவள் வரத் தாமதம் ஆனதால் கை விரல்களில் இருந்த ஒவ்வொரு நகத்தையும் தின்று தீர்த்துக் கொண்டிருந்த சுதா இவளைப் பார்த்த பிறகு தான் நிம்மதியானாள்.“ஏன்டி இவ்வளவு நேரம் நான் ரொம்பவே பயந்து போனேன்…எங்கே வராமலே போய்டுவியோன்னு”என்று பேசியபடியே அவளின் கைபிடித்து மேடைக்கு பின்னால் அழைத்து சென்றாள்.

கலைந்து கிடந்த அவளின் கேசத்தை கைகளால் சரி செய்து விட்ட சுதா ,”பயப்படாம நல்லா பாடு”என்று கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளை மேடையில் அழைக்க பதட்டம் நிறைந்த விழிகளோடு மேடைக்கு சென்றாள் வானதி.

அவள் பார்வை பயததோடு சுற்றி இருந்தவர்களை பார்க்க மேடையின் மறுமூலையில் மற்ற முக்கியஸ்தர்களுக்கு நடுவில் நடுநாயகமாக அமர்ந்து இருந்த சம்ஹார மூர்த்தியை பார்த்தாள்.அவன் அவளைப் பார்க்கவேயில்லை.அருகில் இருந்த யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான்.

மேடையில் அமர்ந்து இருக்கும் சம்ஹார மூர்த்திக்கு பயந்து தான் மொத்த மாணவர் கூட்டமும் அமைதியை கடைபிடித்து வந்தது.இல்லையெனில் இவள் வந்து ஐந்து நிமிடங்கள் ஆகியும் வாயே திறக்காமல் இருப்பதற்கு இந்நேரம் கூச்சல் போட்டே அவளை ஓட வைத்திருப்பார்கள்.

தொடர்ந்து சில நிமிடங்கள் அமைதியாகவே இருக்கவும் சம்ஹார மூர்த்தி பேச்சை நிறுத்தி விட்டு மேடையை நோக்கி தன்னுடைய பார்வையை திருப்பியவன் வானதியை கண்டதும் இதழ் பிரிக்காமல் லேசாக புன்னகைத்து பாடு என்று கண்களால் பேசி தலையை லேசாக அசைக்க உற்சாகத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டு பாடத் தொடங்கினாள் வானதி.

‘பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைக்கணமும் எனக்கு இல்ல’

என்று அவள் பாட மொத்த அரங்கமும் ஊசி விழுந்தால் கேட்குமளவுக்கு அமைதியானது.

அவள் கண்களை இறுக மூடிக் கொண்டு பாடத் தயாரானதை பார்த்து சிரிப்புடன் அந்தப்பக்கம் திரும்பி பேசத் தொடங்கியவன் அப்படியே பேச்சை நிறுத்தி விட்டான்.அவன் பார்வை முழுக்க அவள் மீதே இருந்தது.வெண்ணை போல வழுக்கியது அவள் குரல்…தேன் சிந்தும் குரல் என்று கேள்விப்பட்டு இருக்கிறான் சம்ஹார மூர்த்தி…ஆனால் இவள் குரலோ அது அத்தனையையும் மிஞ்சியதாக இருந்தது.

அதுநேரம் வரை அமர்த்தலாக கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்து இருந்தவன் அவளின் பாடலை கேட்டதும் தன்னையும் அறியாமல் முகம் இளகிப் போய் அவள் புறம் பார்வையை செலுத்தத் தொடங்கினான்.

அந்தக் குரல் அவனை அடியோடு சாய்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.உயிரின் ஆழம் வரை சென்று அவனை ஆட்டி வைத்தது.யாரோ தன்னை கட்டி இழுத்து அவளின் காலடியில் தள்ளி விட்டது போல ஒரு பிரமை.அவள் பாடி முடிக்கும் வரை அவள் முகத்தில் இருந்து தன்னுடைய பார்வையை அவன் விலக்கிக் கொள்ளவே இல்லை.அவள் பாடி முடித்த அடுத்த நிமிடம் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.அவளை கேலி செய்த மாணவர்கள் கூட அவளது இனிமையான குரலை கேட்டு அசந்து போய் விட்டார்கள்.நிறுத்தாமல் தொடர்ந்து ஒலித்த கரகோஷத்தில் ஆச்சரியத்தோடு கண்களை திறந்து பார்த்தவளை மேடையிலேயே ஓடி வந்து கட்டிக் கொண்டாள் சுதா.

“ஹே…சூப்பர்டி..அசத்திட்ட…இவ்வளவு அருமையா பாடுவனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை…”என்று அவள் பாராட்டிக் கொண்டிருக்க வானதியின் பார்வையோ அவளையும் அறியாமல் தனக்கு ஊக்கமளித்த சம்ஹார மூர்த்தியின் புறம் திரும்பியது.

அவனது பார்வையில் நொடிக்கு நொடி கூர்மை ஏறத் தொடங்க படபடப்புடன் பார்வையைத் தழைத்துக் கொண்டாள் வானதி.
கண்களை மட்டும் லேசாக உயர்த்தி மீண்டும் ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க அவன் பார்வையோ அவளை மிரளவே செய்தது.

சுற்றி அத்தனை பேரும் தன்னை பார்க்கக்கூடும் என்ற உணர்வே இன்றி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் சம்ஹார மூர்த்தி.பார்வை அவளை விட்டு ஒரு அடி கூட அவன் நகர்த்தவில்லை.

தீ தீண்டும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here