Theendatha Thee Neeye Tamil Novels 45

1
4769

அத்தியாயம் 45

அருவிக்குள் சுகமாக நீந்திக் கொண்டு இருந்தான் ஈஸ்வர். வானதி கரையில் அமர்ந்து கொண்டு கால்களை மட்டும் நீரினுள் அமிழ்த்தியபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க… சில்லென்று நீரை வாரி அவள் மேல் இறைத்தான் ஈஸ்வர். கணவனின் செய்கையை உள்ளுக்குள் ரசித்தவள் வெளியே பொய்யாக கோபம் காட்டினாள்.

“முறைச்சது எல்லாம் போதும் இறங்கி வா.. கொஞ்சம் நேரம் அருவியில் நனைஞ்சுட்டு மீன் பிடிக்க போகலாம்.வா”

“இல்லையில்லை… முதலில் மீன் பிடிச்சுட்டு அப்புறமா குளிக்கலாம்” என்று பதறியவளை கொஞ்சம் விநோதமாக பார்த்தவன் தோளை அசட்டையாக குலுக்கிவிட்டு எழுந்து கரைக்கு வந்தான்.

“தூண்டில் எங்கே? இல்லைனா வலை போட்டு பிடிக்கப் போறீங்களா?” என்று அவள் கேள்விகளை அடுக்கிக்கொண்டே வர.. ஈஸ்வர் அமைதியாக புன்னகைத்தான்.

“ஏதாவது சொல்லுங்களேன்”

“கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து என்ன செய்யுறேன்னு பாரு” என்றவன் கடகடவென்று அங்கே ஓரமாக இருந்த ஒரு பழைய ஆயில் கேனை எடுத்தவன்… ஆற்றங்கரையில் குழி பறித்து.. தண்ணீர் உள்ளே வராதவாறு அணை கட்டினான்.

‘மீன் பிடிக்க போறேன்னு சொல்லிட்டு என்ன செய்யுறார்…” என்று அவள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே மளமளவென கட்டி முடித்தவன் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் கேன் வெளியே தெரியாதவாறு இலை, தழைகளால் அதை மூடி வைத்து விட்டு ஆற்று நீரில் கையை கழுவி விட்டு புறப்பட தயாராக… வானதிக்கு ஒன்றுமே புரியவில்லை.

“இப்போ என்ன செஞ்சீங்க? மீன் பிடிக்க எப்போ போறோம்?” என்று அவள் குழப்பமாக கேட்க.. அவளை பார்த்து குறும்புடன் சிரித்தான் ஈஸ்வர்.

“ஏய்! சில்லக்கா.. என்ன நினைச்சே.. தூண்டில் போட்டு ஒவ்வொரு மீனா புடிப்பேன்னு நினைச்சியா? எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? அந்த நேரத்தில் எவ்வளவோ முக்கியமான வேலை இருக்கும் பொழுது அதில் எல்லாம் நேரத்தை வீணடிக்க முடியுமா?” என்று சில்மிஷமாக கண்ணடிக்க… வானதியின் முகம் சட்டென்று சிவந்து போனது.

“இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்தே.. மாமனை மயக்கிற சில்லக்கா” என்று சொன்னவன் மயக்கும் பார்வையுடன அவளை  நெருங்க… வேகமாக இரண்டு அடி பின்னால் எடுத்து வைத்தாள் வானதி.

“இந்த வாய் ஜாலம் எல்லாம் அப்புறம்… முதல்ல இது என்னன்னு சொல்லுங்க…”

“ஹ.. சும்மா கேட்டா எப்படி சொல்லுவேன்.. அதுவும் இப்படி பத்தடி தள்ளி நின்னு கேட்டா… நான் சொல்லணுமா? போடி” என்று அசட்டையாக சொல்ல…

“டி’ யா”

“ஆமாண்டி என் பொண்டாட்டி…”

“பெரிய ஜமீன் வம்சம்…ஆனா பேச்சைப் பார்…”

“ஊருக்கே ராஜாவா இருந்தாலும் ராணிக்கு புருஷன் தானே சில்லக்கா…” என்று பேசியபடியே வந்தவன் அவள் எதிர்பாரா நேரம் அவளை ஆவலுடன் அள்ளி அணைத்துக் கொண்டான்.

“எது கேட்பதா இருந்தாலும் இப்படி கேளு.. அப்போ தான் பதில் வரும்” என்றான் உத்தரவாக…

“ஹும். இது எதுக்கு?”

“மீனுக்கு பொறி வச்சு இருக்கேன் சில்லக்கா..” அவளது காதோரம் உரசியபடியே பேசினான்.

“என்னது? மீனை வலை விரிச்சு பிடிப்பாங்க.. இல்லைன்னா தூண்டில் போட்டு பிடிப்பாங்க.. இதென்ன புதுசா?”

“அதுவா.. இப்படி செஞ்சா.. மீன் அந்த பிளாஸ்டிக் கேனுக்குள்ளே தானாவே வந்து மாட்டிக்கும். நமக்கும் நேர மிச்சம்.. அதுவரை நமக்கு முக்கியமான வேலை எத்தனையோ இருக்கே…” என்றவனின் கரங்கள் அவளது இடையில் அழுத்தமாக பதிய… அவனை தள்ளி விட்டு விலகி ஓடினாள் வானதி.

“ஏய்… வழி தெரியாம எங்கேயும் போய் மாட்டிக்காதே…” என்று பின்னால் இருந்து குரல் கொடுக்க… பயத்தில் அவளின் ஓட்டம் அப்படியே நின்று போனது.

“சரி வா அருவிக்கு போய் கொஞ்ச நேரம் குளிக்கலாம்.” என்று அவளது கையை பிடித்து இழுக்க… அவளோ கால்களை அழுத்தமாக தரையில் ஊன்றி வர மாட்டேன் என்று பிடிவாதம் செய்ய.. கேள்வியாக அவளைப் பார்த்தான்.

“நான் அங்கே வரலை…”

“ஏன் சில்லக்கா… அந்த அருவி பெருசா இருக்கே.. அதனால பிடிக்கலையா…”

“சே! சே… அப்படி எல்லாம் இல்லை.. ரொம்பவே அழகா இருக்கு.. அந்த இடம்… சுத்தியும் மலை வேற.. பார்க்கவே ரொம்ப ரம்மியமா இருக்கு…”

“அப்புறம் என்ன?”

அவன் முகம் பார்க்க முடியாது அவள் நாணத்துடன் தலை கவிழ்ந்து கொள்ள , ஈஸ்வரின் ஆர்வம் அதிகமானது.

“என்ன விஷயம் சில்லக்கா.. என்கிட்டே சொல்ல மாட்டியா?” மென்குரலில் கேட்டவனை நிமிர்ந்தும் பார்க்காது அவள் பேசத் தொடங்கினாள்.

“அந்த அருவி ரொம்ப பெருசா இருக்கு…. அங்கே ஒதுங்கி… மறைஞ்சு குளிக்கவும் இடமில்லை… அப்புறம்?”

“ம்ம்ம்.. அப்புறம்?” என்றான் கண்களில் சுவாரஸ்யத்தோடு அவளை பேச சொல்லித் தூண்டினான்.

“அருவியில் இருந்து தண்ணி கீழே வழிஞ்சு ஓடுற இடம் கொஞ்சம் ஆழமா இருக்கு… எனக்கு நீச்சல் தெரியாது..” என்று தயங்கி தயங்கி அவள் சொல்லி முடிக்க ஈஸ்வரோ உற்சாகமாக கூச்சலிட்டான்.

“ஹுர்ரே… இதை விட மனுஷனுக்கு என்னடி வேணும்?”

“…”

“புதுசா கட்டிக்கிட்ட பொண்டாட்டிக்கு நீச்சல் சொல்லித் தர வாய்ப்பு கிடைச்சு இருக்கு.. விடுவேனா?.. வா போகலாம்” என்றவன் அவள் வெட்கத்துடன்  கொஞ்சம் முரண்டவே… கைகளில் ஆசையுடன் அள்ளிக் கொண்டான்.

“இன்னிக்கு மாமன் உனக்கு நீச்சல் சொல்லித் தரப் போறேன்” என்று சொன்னவன் அவள் வெட்கத்தில் எவ்வளவு திமிறியும் கீழே இறக்கி விடவே இல்லை.

அருவி நீர் வழிந்தோடும் இடத்தில் இருந்து சற்று உயரத்தில் நின்றவன்.. அவள் கத்த, கத்த கொஞ்சமும் பொருட்படுத்தாது அவளை கைகளில் ஏந்தியவாறு அப்படியே நேராக தண்ணீரின் உள்ளே குதித்து விட்டான்.

ஒரு நொடி தான். அடுத்த நொடியே… தண்ணீரில் அமிழ்த்திய பந்தைப் போல குதித்துக் கொண்டு அவளோடு சேர்ந்து மேலே வந்து விட்டான். அவன் சிரித்துக் கொண்டு இருக்க.. வானதியோ மிரண்டு விழித்தாள். பயத்தில் அவன் கழுத்தை அவளது கரங்கள் அழுத்தமாக பற்றிக் கொண்டது.

“ஹே.. சில்லக்கா… கண்ணைத் திறந்து பாரு… பயம் தெளிஞ்சுட்டா… அதுக்கு அப்புறம் நீச்சல் ஈசியா கத்துக்கலாம். எந்தவொரு விஷயத்தை நீ புதுசா கத்துக்கணும்னு நினைச்சாலும் அதோட அடிப்படை தைரியத்தை கை விடக் கூடாது. தைரியமா இருந்தா எப்பேர்பட்ட வித்தையையும் சுலபமா கத்துக்கலாம்.” என்று அவளுக்கு தைரியம் சொல்ல… அடுத்த சில மணி நேரங்களுக்கு பொறுப்பான குருவாக நடந்து கொண்டான்.

“இன்னைக்கு இவ்வளவு போதும் சில்லக்கா… ஒரே நாளில் எந்த வித்தையையும் கத்துக்க முடியாது. உடம்பு அசதியாகிடும்… நீ கரையில் ஏறி டிரஸ் மாத்திக்கோ… நான் ஒரு பத்து நிமிஷத்தில் வந்திடறேன்” என்றவன் தண்ணீருக்குள் திளைத்து ஆட்டம் போட… கரையில் ஏறியவள் மரத்திற்கு பின்னால் நின்று ஈர உடைகளை மாற்றத் தொடங்கினாள்.

கணவனின் ஒவ்வொரு செய்கையிலும் தன் மீது இருக்கும் அன்பும் , அக்கறையும்  வெளிப்பட… ஈஸ்வரை எண்ணி அவள் உள்ளம் பூரிக்கத் தொடங்கியது. மனதின் ஓரத்தில் கடந்த கால நினைவுகள் அவளை அரிக்காமல் இல்லை. அதை ஒதுக்கி தள்ளி விட்டு இந்த நிமிடங்களில் வாழ முடிவு செய்தாள் வானதி. கடந்த காலத்தை எண்ணி நிகழ்காலத்தை வெறுத்து.. எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முட்டாள்த்தனமான செயலை செய்ய வானதி விரும்பவில்லை.

அதே நேரம் வானதி தன்னை கவனிக்காத வண்ணம் அருவியின் மறுமுனைக்கு சென்றவன் கரையின் மீது ஏறி… பாக்கெட்டில் பிளாஸ்டிக் கவருக்குள் ஒளித்து வைத்திருந்த மொபைலை எடுத்தவன் ரகசியமாக பேசத் தொடங்கினான்.

“டாக்டர்… நீங்க சொன்ன மாதிரி காலையில் அவளுக்கு கொடுத்த காபியில் அந்த மாத்திரையை கலந்து கொடுத்துட்டேன். ஏற்கனவே அவ சாப்பிட்ட மருந்துகளோட வீரியம் இனி குறைய ஆரம்பிச்சுடும் இல்லையா?”

“…”

“இல்லை டாக்டர்.. அவளுக்கு இன்னும் தெரியாது… அவ தான் இன்னும் கர்ப்பமா இருக்கிறதா தான் நினைச்சுக்கிட்டு இருக்கா…”

“…”

“ஒரு வாரம் சாப்பிட்டா போதுமா டாக்டர்… ஏற்கனவே அவ சாப்பிட்ட அந்த மருந்தால அவளோட கர்ப்பபைக்கு எந்த ஆபத்தும் வந்துடாது இல்லையா? இனி என்னோட குழந்தையை அவளால சுமக்க முடியும் தானே? பழைய மருந்தோட எபெக்ட் சுத்தமா இல்லாம போய்டும் தானே?” என்று அவன் தவிப்புடன் கேள்விகளை அடுக்க

“…”

“ரொம்ப நன்றி டாக்டர்… இப்போ தான் எனக்கு உயிரே வந்துச்சு. அப்புறம் இன்னொரு சின்ன உதவி… நான் உங்களுக்கு இப்போ போன் செஞ்சதோ… அவளுக்காக மாத்திரை வாங்கினதோ வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம்… என்னோட வீட்டு ஆட்களுக்கு கூட…”

“..”

“என்னோட வீட்டிலேயே அவளுக்கு பாதுகாப்பு இல்லாம போச்சு டாக்டர். அதனால அவளை இப்போ கூட்டிட்டு வெளியே வந்துட்டேன். நான் எங்கே இருக்கேன்னு கூட என்னோட வீட்டு ஆட்களுக்கு தெரியாது. என்னை தேடிக்கிட்டு இருப்பாங்க. அதனால நீங்களும் உங்களுக்கு எதுவும் தெரியாத மாதிரியே காட்டிக்கோங்க… அப்புறம் இன்னொரு விஷயம் டாக்டர்? என்னோட மனைவிக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் உயிரோட இருக்கிறாரா? இல்லை செத்துட்டாரா?”

“…”

“தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன் டாக்டர். நான் அன்னைக்கு அவரைப் போய் பார்த்தப்போ  ஆபத்தான நிலையில் இருக்கிறதா சொன்னாங்க… உண்மை தெரிஞ்சா நான் உயிரோட விட மாட்டேங்கிற பயத்தில் தற்கொலை செஞ்சுக்க முடிவெடுத்ததா அவரோட லெட்டர்ல சொல்லி இருந்தார்..”

“…”

“தெரியும் டாக்டர்.. எல்லாம் என் வீட்டு ஆட்களின் வேலை தான் இது.. அவங்களோட முட்டாள்தனத்தின் உச்சம் தான் வானதியின் மாதவிடாய் நாட்களைத் தள்ளி போடும் மாத்திரையை அவளுக்கு தெரியாமல் உணவில் கலந்து கொடுத்து.. அவள் கர்ப்பமாக இருப்பதாக டாக்டரை பொய் சொல்ல வைத்து இருக்கிறார்கள்.”

“…”

“சுத்த பைத்தியக்காரத்தனம்.. கர்ப்பமே இல்லாதவளை எத்தனை நாள் கர்ப்பமாக காட்ட முடியும்…. வானதிக்கே அவளுக்கு வாந்தி, மயக்கம் என்று எந்த தொந்தரவும் இல்லாமல் போகவும் சந்தேகம் வந்து விட்டது. என்னிடம் விஷயம் வந்ததும் நான் விசாரிக்கப் போய்த் தான் இத்தனையும் தெரிய வந்தது டாக்டர். சரி டாக்டர்.. நான் உங்ககிட்டே அப்புறமா பேசுறேன்” என்றவன் போனை பத்திரமாக பாக்கெட்டில் பத்திரப்படுத்தி விட்டு மீண்டும் ஆற்றினில் இறங்கி குளிக்கத் தொடங்கி விட்டான்.

சில நிமிடங்கள் கழித்து கரை ஏறியவன்…. மரத்தின் பின் பக்கமாக நின்றபடி ஈரக் கூந்தலை காற்றில் காய வைத்துக் கொண்டிருந்த வானதியைக் கண்டதும் அவன் மனம் வலித்தது.

‘என்ன தவறு செய்தாள் இவள்? வாழ்க்கை ஏன் இவளை மட்டும் இப்படி வஞ்சிக்கிறது?’ என்று எண்ணி ஒரு நொடி கலங்கியவன் அடுத்த நிமிடமே தன்னை சமாளித்துக் கொண்டான்.

‘இனி ஒரு நாள்… ஒரு பொழுது…. ஒரு நிமிஷம்… ஏன் ஒரு நொடி கூட அவளை கஷ்டப்பட விட மாட்டேன்’ என்று சூளுரைத்தவன் அவளை நோக்கி சென்றான்.

“போகலாமா சில்லக்கா…”

“வீட்டுக்கா?” அவளுக்கு இந்த ரம்மியமான சூழலை விட்டு அகல மனமில்லை என்பது அவனுக்கு புரிய, கனிவாக சிரித்தான்.

“நாளைக்கும் இங்கே வரலாம் சில்லக்கா… மதிய நேரத்தை தாண்டிடுச்சு பார்… மீனை எடுத்து சமைக்கணும் இல்லையா?” என்று சொல்லவும் கூதுகலமாக தலையாட்டினாள் வானதி. புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளப் போகும் குழந்தையின் ஆர்வம் அவள் கண்களில் தெரிவதை ரசித்த வண்ணம் அவளின் இடையில் கை கோர்த்தவாறு மீனுக்காக பொறி வைத்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

அங்கே இலை, தழைகளால் மூடி வைக்கப்பட்டு இருந்த அந்த இடத்தை தோண்டி உள்ளே இருந்த கேனை எடுத்து வெளியே வைத்ததும் அதைப் பார்த்தவள் ஆச்சரியத்தில் துள்ளிக் குதித்தாள்.உள்ளே பெரிய பெரிய மீன்கள் குதித்துக் கொண்டு இருந்தன.

“ஹை.. எவ்வளோ மீனு…” என்று கைதட்டி துள்ளிக் குதித்தவளை வாஞ்சையுடன் ஏறிட்டான் ஈஸ்வர்.

அந்த மீன்களை அள்ளி ஒரு பையினுள் போட்டுக் கொண்டவன் வீட்டுக்குப் போனதும் வீட்டின் முன்பகுதியில் தீ மூட்டி… மீனின் மேல் பகுதியில் கொஞ்சமாக எண்ணெய் தடவி… லேசான உப்பும், காரமும் மட்டும் சேர்த்து நெருப்பிற்கு நேர் மேலாக ஒரு குச்சியில் கட்டி விட்டவன் உள்ளே சென்று சாப்பாட்டை தயார் செய்யத் தொடங்கினான்.

வானதியும் அவனுக்கு உதவிகள் செய்ய… சிரிப்பும் கும்மாளமுமாக சமையல் செய்து முடித்தார்கள். சாதம், ரசம், சுட்ட மீன் வறுவல் என்று நொடியில் தயாரான சமையலை ரசித்து உண்டவர்கள் அலுப்பு தீர குட்டித் தூக்கம் போட்டனர். கணவனின் கையணைப்புக்குள் மனைவியும், மனைவியை ஆசையுடன் அணைத்தவாறு கணவனும் சுகமாக உறங்கத் தொடங்கினர்.

மூர்த்தி தன்னுடைய திட்டத்தை சிறு பிசகு கூட இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டு இருந்தான். ஈஸ்வர் ஏற்கனவே அவன் மீது சுமத்திய குற்றத்தால் அவனுடைய பெரும்பான்மையான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்க… அத்தனை நாட்கள் வரை அவனோடு சுற்றித் திரிந்து அவனது பணத்தை தண்ணீராக செலவு செய்தவர்கள் இப்பொழுது அவனிடம் கையிருப்பு குறையத் தொடங்கவே மெல்ல மெல்ல அவனை விட்டு விலகத் தொடங்க… மூர்த்தியின் வெறி இன்னும் அதிகமானது. அவனது பரம்பரை சொத்துக்கள் சிலதை விற்று பணம் புரட்டியவன் ஈஸ்வரும், வானதியும் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிய தன்னுடைய உயிரைத் தரவும் தயாராக இருந்தான்.

‘எத்தனை முறை தான் இந்த ஈஸ்வரிடம் தோற்றுப் போவது… அடுத்த முறை நான் கொடுக்கும் அடி… ஈஸ்வருக்கு மரண அடியாக இருக்க வேண்டும்’ என்று எண்ணியவன் காய்களை கவனமாக நகர்த்தத் தொடங்க… அப்பொழுது தான் அவனுடைய கவனத்திற்கு வந்தது திவான் பூபதியைப் பற்றிய தகவல்.

‘அவருக்கும், வானதிக்கும் அங்கே இருந்தவரை ஒத்துப்போகவில்லை’ என்ற தகவல் அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தர… அவரை தன் பக்கம் இழுக்க, காய்களை நகர்த்தியவன்… தன்னுடைய ஆட்களின் மூலம் அவருக்கு தூது அனுப்பி பேரம் பேசத் தொடங்கினான்.

அவனே எதிர்பாரா அளவுக்கு அந்த முயற்சி அவனுக்கு வெற்றி அளித்தது. மூர்த்தியுடன் கை கோர்க்க பூபதி சம்மதித்தார். ஒரே ஒரு நிபந்தனையுடன்…

வானதிக்கு என்ன ஆனாலும் அவருக்கு கவலை இல்லை… ஆனால்  ஈஸ்வரின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது… அதே சமயம் மீண்டும் வானதி ஈஸ்வரின் வாழ்க்கைக்குள் வரவே கூடாது என்ற நிபந்தனை விதிக்க… சந்தோசமாக அதை ஏற்றுக் கொண்டான் மூர்த்தி. அவனுக்கு வேண்டியது முதலில் வானதி தானே… அவள் தன்னிடம் வந்து விட்டால் அதன் பிறகு ஈஸ்வரின் கதையை பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவன் அவருக்கு சம்மதம் தெரிவிக்க… இப்பொழுது இருவரும் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்கள்.

இரு பறவைகள் சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருக்க… அவர்களை வீழ்த்த வேடன் காத்திருப்பதை அறிந்தால் அந்த பறவைகளின் மகிழ்ச்சி என்னாகுமோ?

தீ தீண்டும்…

Facebook Comments

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here