Theendatha Thee Neeye Tamil Novels 49

3
5811

ஹாய் மக்களே,

இன்னும் மிச்சம் மீதி இருக்கிற கதையையையும்,எபிலாக்கையும் சேர்த்து ஒரே பதிவா கொடுக்கிறேன்.காத்திருங்கள்.இது கொஞ்சம் பெரிய பதிவு.முடிந்த அளவு உங்களோட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.

அத்தியாயம் 49

வீட்டு வாசலை விட்டு  காட்டுக்குள் கொஞ்ச தூரம் சென்றதுமே சுந்தரேசனும், பூபதியும் அடியாட்களுடன் அவர்களை சூழ்ந்து கொள்ள… வானதி கலவரமானாள்.

‘இந்த பூபதி தாத்தாவுக்கு வேற என்னைப் பிடிக்காதே’ என்ற யோசனையில் அவள் மூழ்கி இருக்கும் பொழுதே..ஈஸ்வரின் நடை தடுமாறியது.

“தாத்தா… வானதி என்னைக் காப்பாத்துறதுக்காக விஷம் குடிச்சுட்டா..அவளை காப்பாத்துங்….”என்று பேசிக் கொண்டே வந்தவன் கால்கள் மடங்கி அப்படியே தரையில் சரிந்து விழுந்தான்.வானதியின் உடலில் இருந்த விஷத்தின் காரணமாக அவளுக்கும் பார்வை மங்கத் தொடங்க…இனி ஈஸ்வரை மீண்டும் பார்க்க முடியாதோ என்ற பயத்துடன் அவன் கைகளை இறுக பற்றியபடி அவளும் கண் மூடினாள்.

ஈஸ்வரின் உடலில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த அதிகபடியான ரத்தம் அவனது உயிருக்கு எமனாக மாற… நொடியும் தாமதிக்காமல் பூபதியின் ஆட்கள் அவர்கள் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு பறந்தனர்.இருவரும் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விஷம் குடித்த வானதியும், அதிகமான அளவில் ரத்தம் சேதாரம் ஆனதால் ஈஸ்வரும் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.விஷம் குடித்து சிறிது நேரத்திற்குள் சேர்க்கப்பட்டு இருந்த வானதியை காப்பாற்றி விட்டனர்.ஆனால் ஈஸ்வரின் உயிரைக் காப்பதற்கு வெகுவாக போராடிக் கொண்டு இருந்தனர்.அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருந்தது.ஈஸ்வரின் ரத்தம் ரத்த வங்கிகளில் கிடைக்கவில்லை.அரிதான ரத்த வகையாக இருந்ததால் ரத்தம் கிடைப்பதற்காக எல்லாரும் பெருமளவில் போராடிக் கொண்டு இருந்தனர்.

சில மணி நேரத்தில் வானதிக்கு முழிப்பு வந்து விட அவள் உடனடியாக ஈஸ்வரை பார்த்தே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க… வேறு வழியின்றி அவளை ஈஸ்வரின் அறைக்கு அழைத்து சென்றனர்.

உடல் முழுவதும் ஏதேதோ கருவிகள் பொருத்தப்பட்டு இருக்க, கணவன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த காட்சியில் வானதி வாய் விட்டு கதறி அழுதாள். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு கையில் குளுகோஸை நர்ஸ் ஒருவர் அவளுக்கு பிடித்துக் கொண்டு நிற்க…ஐசியு அறை வாயிலில் இருந்து அவள் கதறி அழுத காட்சி அங்கிருந்தோர் அத்தனை பேரின் நெஞ்சிலும் ரத்தத்தை வரவழைத்தது.

“அழாதீங்கம்மா… சின்ன ஜமீனுக்கு எதுவும் ஆகாது”ஆறுதல் சொன்ன பூபதியை வெறித்துப் பார்த்தாள் வானதி…

“இப்போ சந்தோசமா உங்களுக்கு? இன்னும் என்ன வேணும் உங்களுக்கு? நான் அவரை விட்டு பிரிஞ்சு போகணும்னு தானே ஆசைப்பட்டீங்க… நான் அவரை விட்டு போயிடறேன்…ஆனா அவர் எனக்கு உயிரோட வரணும்..அவருக்கு மட்டும் எதுவும் ஆச்சு… நா..நான்..உயிரோடவே இருக்க மாட்டேன்”

“அதை நீங்க சொல்லணுமாம்மா… உங்க உயிரைப் பத்திக் கூட கவலைப்படாம அவருக்காக விஷம் குடிச்சீங்களே… அதுலயே உங்களைப் பத்தி நான் தெளிவா புரிஞ்சுகிட்டேன்…”

“உங்களுக்கு என்னைப் பத்தி தெரிஞ்சா என்ன? இல்லேன்னா என்ன? எனக்கு அவர் வேணும்” என்று கதறி அழுதவளை தேற்றுவதற்கு முன் வந்தார் சுந்தரேசன்.

“தம்பிக்கு எதுவும் ஆகாது வானதி..நல்லபடியா திரும்பி வந்துடுவார்…”

“ரத்தம் கிடைக்கலையே அய்யா” என்று அவரின் கைகளை பற்றிக்கொண்டு  கதறி அழுதவளை ஆதரவாக தட்டிக் கொடுத்தார்.

“ரத்தம் ஏற்பாடு செஞ்சாச்சு வானதி..நம்ம ஆசிரமத்தில் இருப்பானே ரவி… அக்கா அக்கானு..உன் பின்னாடியே சுத்தி வருவானே”அவளுக்கு நினைவூட்ட முயன்றார்.

“ஆ..ஆமா…”

“அவனுக்கும் இதே ரத்த வகை தான்..இப்போ உள்ளே ரத்தம் கொடுக்கப் போய் இருக்கான்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் தம்பி கண் முழிச்சிடுவார்”என்று சொல்ல..அப்பொழுதும் வானதியின் மனம் அமைதியடையவில்லை.

நரகத்தை அவளுக்கு கண் முன்னே காட்டிய அந்த கொடிய நிமிடங்கள் கடந்த பிறகு…மலர்ச்சியான முகத்துடன் மருத்துவர் வந்து பேசத் தொடங்கினார்.

“உங்க ஹஸ்பண்டு நல்லா இருக்கார் மேம்..இனி கவலை இல்லை…நாங்க கொடுத்து இருந்த விளம்பரத்தை பார்த்துட்டு இன்னும் சிலர் வந்து இருந்தாங்க..சோ..தேவையான ரத்தம் கிடைச்சுது…”என்று புன்சிரிப்புடன் கூறியவரை முகம் மலரப் பார்த்தவள் அவசரமாக டாக்டரிடம் கேட்டாள்.

“நா… நான் அவரை பார்க்கணுமே” தவிப்புடன் வெளிவந்தது வார்த்தைகள்.

“கொஞ்ச நேரம் அப்ஷர்வேஷனில் இருக்கட்டும் மேடம்..ரூமுக்கு மாத்தின பிறகு நீங்க மட்டும் போய் பாருங்க..அவர் கண் முழிச்சதும் மத்தவங்க போய் பார்க்கலாம்”என்று சொல்லிவிட்டு நகர…சக்கர நாற்காலியில் அப்படியே சிலையென அமர்ந்து இருந்தாள் வானதி.

“தம்பிக்கு தான் ஒண்ணும் பிரச்சினை இல்லை சொல்லிட்டாங்களே வானதி…அப்புறமும் என்ன யோசனை? ஏதாவது கொஞ்சம் சாப்பிடறியா? தெம்பா இருக்கும்”

“எனக்கு எதுவும் வேண்டாம்…அவரை பார்த்து பேசணும்…அப்புறம் தான்…எல்லாமே..ஆமா அய்யா..நீங்க எப்படி அந்த நேரத்தில் அங்கே அவனது சேர்ந்தீங்க..அதுவும் இவரோட”என்றவளின் பார்வை பூபதியை துளைத்தது.

“ஈஸ்வர் தம்பி என்னை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தார் வானதி..உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறதா சொன்னார்… இந்த மாதிரி நடுக்காட்டில் இப்படி ஒரு அழகான வீடான்னு நான் பிரமிச்சு போய் பார்த்துட்டு இருந்தப்ப தான்…உள்ளே மூர்த்தி இருக்கிற விஷயம் தெரிஞ்சது…வீட்டுக்குள் வந்தா நானும்  அப்படியே மாட்டிப்பேனே.. போய் யாரையும் உதவிக்கு கூட்டிக்கிட்டு வரலாம்னு நினைச்சு போனப்போ தான் எதிரில் இவரைப் பார்த்தேன்…அதுக்கு அப்புறம் தான் நாங்க எல்லாரும் சேர்ந்து அங்கே வந்தோம் வானதிம்மா”

அவர் பேசப் பேச வானதி கேட்டுக் கொண்டு இருந்தாலும் அவள் முகம் உணர்ச்சிகள் தொலைத்த பாறை போல மாறிக் கொண்டிருந்தது.

“அதெல்லாம் சரி அய்யா..அவர் கூட மாசக் கணக்கில் தங்கி இருந்ததால் தானே உங்க மானம், மரியாதை எல்லாம் போச்சுன்னு என்னை திட்டி ஆசிரமத்தில் இருந்து துரத்தி விட்டீங்க…இப்போ எப்படி அவர் கூப்பிட்டதும் உடனே கிளம்பி வந்துட்டீங்க..அது எப்படி?”வானதியின் பார்வை வாளின் கூர்மையை ஒத்திருந்தது.

“அ..அது வந்து வானதி…இந்த விஷயத்தை எல்லாம் தம்பியே அவர் வாயாலே சொல்றது தான் நல்லது… நான் எப்படி?”

“நீங்க சொல்லித் தான் ஆகணும் அய்யா..என்னை சுத்தி இத்தனை நாளா என்னென்னவோ நடந்து இருக்கு..ஆனா அது என்னைத் தவிர எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு…சொல்லுங்க..நான் எதுவா இருந்தாலும் நீங்க சொல்லித் தான் தீரணும்”என்றவள் பேசிக் கொண்டே அவளது கையில் ஏறிக் கொண்டிருந்த குளுக்கோஸை ஆத்திரத்துடன் கழட்டி எறிய முயற்சிக்க.. எல்லாருமாக சேர்ந்து அவளைத் தடுத்தனர்.

“வானதி…மரணத்தோட வாசல் வரை போய்ட்டு வந்து இருக்க,இப்போ எதுக்கும்மா அதெல்லாம்..இப்போ உனக்கு ஓய்வு அவசியம்…கொஞ்ச நேரம் போய் தூங்குமா” என்று அவர் சமாதானம் கூறினாலும்…இறுதியில் வானதியின் பிடிவாதமே வென்றது.

“வ..வந்து வானதி… நான் சொல்லப் போறதை நீ சரியா புரிஞ்சுக்கணும்… நான் சொல்லி முடிச்ச பிறகு யாரைப் பத்திய தவறான முடிவுக்கும் நீ வரக்கூடாதுமா…”

“சரி அய்யா சொல்லுங்க” என்று பொறுமையை இழுத்து பிடித்தபடி அவள் பேச..தயங்கி தயங்கி பேசத் தொடங்கினார் சுந்தரேசன்.

“உன்னோட கல்யாணத்துக்கு முதல்நாள் அதாவது…மூர்த்திக்கும் உனக்கும் கல்யாணம் நடப்பதாக இருந்ததே அதற்கு முதல் நாள் ஈஸ்வர் வந்து என்னைப் பார்த்தார்…அவர் தான் பேசி ..”

“பேசி..?”

“என்கிட்டே சொல்லிட்டு தான் உன்னை அவர் கூட அழைச்சுட்டு போனார்”

“ஹாங்!”

“ஆமா வானதி..அப்போ எல்லா விவரத்தையும் உன்கிட்டே சொல்ல அவகாசம் இல்ல..எல்லா விஷயத்தையும் உன்கிட்டே சொன்னா..கண்டிப்பா மூர்த்திக்கு தகவல் போய்டும்..அது அந்த நேரத்தில் ஆபத்தில் முடிஞ்சு இருக்கும்.அதனால உடனடியா யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி உன்னை அங்கே இருந்து அப்புறப்படுத்தினோம்..”

“ஓஹோ….அப்படின்னா திரும்பி நான் வந்த பிறகு என்னை ஏன்  ஆசிரமத்துக்குள்ளேயே விடாம திருப்பி அனுப்பி வச்சீங்க?”

“வானதி…உண்மை எல்லாம் தெரிஞ்ச நானோ அல்லது ஈஸ்வரோ எந்த காரணத்தை முன்னிட்டும் மூர்த்தியோட உன்னோட வாழ்க்கை அமையுறத விரும்பல…ஈஸ்வர் உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சுட முயற்சி செஞ்சார்….அவர் எத்தனையோ முறை…எப்படி எல்லாமோ பேசியும் நீ உன்னோட முடிவை மாத்திக்கலைனு எனக்கு சொன்னார்…உன்னை மூர்த்தி கை விட்டாலும் நான் நல்லபடியா பார்த்துக்கணும்ன்னு என்கிட்டே ஏற்கனவே சொல்லி இருந்தார்.ஆனா எனக்கு அதில் விருப்பம் இல்ல.ஆசிரமத்துக்கு நீ வந்தா எப்படியும் மூர்த்தி உன்னை வந்து சந்திப்பான்…அதுக்குப்பதிலா உன்னை நான் ஒதுக்கி வச்சா..கண்டிப்பா ஈஸ்வர் உன்னை பார்த்துப்பார்ன்னு நான் நம்பினேன்.. அதனால தான்…”என்று இழுக்க…

“யாரோ ஒரு ஈஸ்வர்…நான் கல்யாணம் செஞ்சுக்க வேண்டியவர் கிட்டே இருந்து என்னைக் காப்பாத்தி..வெளிநாட்டில் மறைச்சு வைக்க வேண்டியதுக்கு என்ன அவசியம்?”

“ஏன்னா?…”அவர் தயங்க…

“ம்ம்ம்.. சொல்லுங்க”அவரை தொடர்ந்து பேச ஊக்கினாள் வானதி….

“அதுக்கு பதிலை நான் சொல்றேன் வானதி… ஏன்னா…நீ யாரோ ஒருத்தி இல்லை… அவரோட அத்தை மகள்…” என்ற பதிலை சொன்னவர் சாட்சாத் பூபதியே தான்.

“என்ன?” வானதிக்கு கண்களை இருட்டிக் கொண்டு மயக்கம் வருவது போல இருந்தது. இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

‘மயங்கும் நேரமில்லை இது.ஒருவேளை மயங்கி விட்டால் என்னுடைய வாழ்வின் மிகப் பெரிய ரகசியம் அப்படியே மறைக்கப்பட்டு விடும்’ என்று எண்ணியவள் மனதை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

“மிச்ச கதையையும் சொல்லுங்க” என்றாள் நெஞ்சை உறைய வைக்கும் அமைதியுடன்.

“உனக்கு உங்க அம்மா,அப்பா பேர் தெரியுமா வானதி?” அவளது நிலை உணர்ந்து வாஞ்சையுடன் கேட்டார் பூபதி…

வானதியின் தலை இடமும் வலமுமாக அசைந்து அவருக்கு உரிய பதிலைத் தர..தள்ளாத வயதிலும் வேக நடையுடன் வந்தவர் அவளது கைகளை தன்னுடைய கரத்தில் பதித்து வைத்துக் கொண்டு ஆறுதலாக வருடியவர் பேசத் தொடங்கினார்.

“உன்னோட அம்மா பேர் காயத்ரி தேவி… அப்பா பேர் நாராயண மூர்த்தி…. உன்னோட அம்மா ஈஸ்வரின் அத்தை..  ஈஸ்வரின் அப்பா ராஜேஸ்வருக்கு கூடப் பிறக்காத தங்கை… வைத்தி..அதாவது ஈஸ்வரின் தாத்தா ஒருமுறை குடும்பத்தோடு வெளியூர் போய்ட்டு திரும்பி வந்தப்போ ஒரு பெரிய விபத்தில் மாட்டினாங்க.. அப்போ ராஜேஸ்வருக்கு பத்து வயது இருக்கும்.விபத்தில் காரில் இருந்த வைத்தி வீட்டு ஆட்கள் காயத்துடன் தப்பித்து விட… அவர்களுக்கு முன்னால் போன கார் அப்பளமா நொறுங்கிப் போச்சு…அந்தக் காரில் பின் சீட்டுக்கு அடியில் இருந்து எடுத்த குழந்தை தான் காயத்ரி…

ஆரம்பத்தில் அவளை அவளோட சொந்தக்காரங்க கிட்டே ஒப்படைக்கத் தான் முயற்சி செஞ்சோம்… ஆனா யாருமே அவளை ஏத்துக்க தயாரா இல்லை…காயத்ரியை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போனதினால வைத்தி அவரே தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிச்சார். என்னை அவ சித்தப்பானு தான் கூப்பிடுவா.. உங்க அம்மா ரொம்பவே அழகா இருப்பா…அப்படியே செதுக்கி வச்ச அம்மன் சிலை மாதிரி…நீ கூட அசப்பில் அவளை மாதிரி தான் இருக்க…” கலங்கிய தன்னுடைய கண்களை துடைத்து விட்டுக் கொண்டவர் சில நொடி அமைதிக்குப் பின் மீண்டும் பேசத் தொடங்கினார்.

காயத்ரிக்கு அவ வளர்ப்பு பொண்ணு அப்படிங்கிற விஷயம் தெரியவே தெரியாது.அந்த வீட்டில் அவ வச்சது தான் சட்டம்.அவ எது கேட்டாலும் அடுத்த நொடியே கிடைச்சுடும். வைத்தியும்,ராஜேஸ்வரும் அவ மேல உயிரையே வச்சு இருந்தாங்க…சிட்டுக்குருவி மாதிரி வீட்டை சுத்தி வருவா… யார் கிட்டயும் அதிர்ந்து கூட பேச மாட்டா…காயத்ரி கிட்டே நிறைய திறமை இருந்தது.நல்லா வீணை வாசிப்பா… நாட்டியம் கத்துக்கிட்டா… பாட்டு அற்புதமா பாடுவா..அவ பாடினா … அந்த சரஸ்வதியே இறங்கி வந்து பாடுற மாதிரி அத்தனை அம்சமா பாடுவா… அதாவது உன்னோட குரல் மாதிரியே…” அவர் பேசப் பேச வானதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விஷயங்களும் புரியத் தொடங்கியது.

அவள் வாழ்வில் மூர்த்தியால் நடந்த மாற்றம் அத்தனையும் அன்று கல்லூரியில் தான் பாடிய பிறகு தான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

“ஈஸ்வரோட அம்மா இறந்த பிறகு அவ தான் ஈஸ்வரை முழுக்க முழுக்க பார்த்துகிட்டா… அவளுக்கு ஈஸ்வர்னா கொள்ளைப் பிரியம். ஈஸ்வரும் அவளை விட்டு வேற யார்கிட்டயும் ஒட்ட மாட்டான். ஈஸ்வரோட அம்மா இருந்து இருந்தா கூட அந்த அளவுக்கு அவன் மேல பிரியம் வச்சு இருக்க மாட்டா… எல்லாம் நல்லா தான் போச்சு…அந்த கடன்காரன் அவளோட வாழ்க்கையில் வரும் வரை…

ராஜேஸ்வர் பொறுப்பான அண்ணனா தங்கச்சிக்கு கல்யாணம் செய்ய முடிவு செஞ்சு… அந்த வட்டாரத்திலேயே பெரிய புள்ளியா பார்த்து தன்னோட தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்சு வச்சான்.இந்த ஜில்லாவிலேயே அந்த மாதிரி ஒரு கல்யாணம் நடந்தது இல்லைன்னு எல்லாரும் ஆச்சரியப்படுற அளவுக்கு சீரும் சிறப்புமா நடந்தது. உங்க அப்பன் வீட்டில் கேட்ட நகை,பணம்னு எதுலயும் குறை வைக்காம அவங்க கேட்டதை விட கூடுதலாவே தான் செஞ்சாங்க…அவனும் ,காயத்ரியை நல்லா தான் பார்த்துகிட்டான். உண்மை தெரியற வரை…

அப்போ உங்க அம்மாவுக்கு நிறை மாசம்..வளைகாப்பு போட்டு வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றதுக்காக இங்கே இருந்து எல்லாரும் கிளம்பி அங்கே போய் இருந்தோம்.எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது.பாதி விழா நடந்துட்டு இருக்கும் பொழுதே..அந்த நாராயணன் வந்து கன்னாபின்னாவென்று அங்கே எல்லார் முன்னாடியும் உங்க மாமாவையும், வைத்தியையும் திட்ட ஆரம்பிச்சாங்க… அப்புறம் தான் எங்களுக்கு விஷயம் புரிஞ்சது…

யாரோ ஒரு ஊர் பேர் தெரியாத அனாதை எப்படி எங்க வீட்டுக்கு மருமகளா இருக்க முடியும்னு அவங்க மொத்த குடும்பமும் சேர்த்து ஆட ஆரம்பிச்சாங்க..உங்க அம்மா அந்த இடத்தில் கூனிக்குறுகி போய் உட்கார்ந்து இருந்தா… நாங்க எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவங்க யாரும் அதை கேட்க தயாரா இல்லை…

‘எப்பேர்பட்ட வம்சத்தில் ஜாதி கெட்ட நாய் எல்லாம் மருமகளா இருக்க முடியாதுன்னு’ சொல்லி …. நேரம் கூடக்கூட அவங்க பேசிய பேச்சுக்களை எல்லாம் கேட்டு உங்க அம்மா முகமே செத்துப் போச்சு…

எங்க குடும்பத்தில் இப்படி ஒரு குலம், கோத்திரம் தெரியாத அனாதை மருமகளா இருக்கவே கூடாது அப்படின்னு சத்தம் போட்டு எங்க கண்ணு முன்னாடியே காயத்ரியை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினாங்க…காயத்ரி அவங்களை எதிர்த்து எதுவுமே பேசலை…அவங்க தள்ளி விட்ட இடத்தில இருந்து எழுந்திரிக்கக் கூட தோணாம அப்படியே இடிஞ்சு போய் இருந்தா…

வைத்தியும், ராஜேஸ்வரும் துடிச்சு போயிட்டாங்க…அந்த வீட்டில் அவளுக்கு ஆதரவா இருந்தது ஒரே ஆள் அந்த நாராயணனோட அம்மா மட்டும் தான்.எல்லார் கிட்டயும் அவளுக்காக எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாங்க… ஆனா…யாருமே உங்க அம்மாவை அந்த வீட்டுக்குள்ளே அனுமதிக்கல… வேற வழி இல்லாம நாங்க காயத்ரியை எங்களோடவே கூட்டிட்டு வந்துட்டோம்.

வீட்டுக்கு வந்த பிறகு காயத்ரி யார் கிட்டயும் அதிகமா பேசல…அவளோட ரூம்குள்ளேயே இருந்தா..தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கிட்டா…நாங்க எல்லாரும் எவ்வளவோ முயற்சி செஞ்சும் எங்களால அவளை நெருங்க முடியல… அந்த வீட்டில் அவளை நெருங்கின ஒரே ஆள் ஈஸ்வர் மட்டும் தான்.அவனுக்கு இந்த கதை எதுவுமே தெரியாவிட்டாலும்.சோகமாக இருக்கும் தன்னுடைய அத்தையை சிரிக்க வைக்க தன்னால் ஆன எல்லா வேலையும் செஞ்சான்.

நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே உன் மேல அவ்வளவு அன்பா இருந்தான்.அம்மா இல்லாத ஈஸ்வரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை நாங்க பழையபடி காயத்ரி கிட்டயே கொடுத்தோம்.அவ முழுசா அந்த சோகத்தை விட்டு வெளியே வரலைனாலும் ஓரளவுக்கு நடப்பு வாழ்க்கைக்கு திரும்பினா…

ஒருவேளை அவ புருஷனை நினைச்சு ஏங்குறா போலன்னு பேசிப் பார்த்தோம்..ஆனா அவளோட பதில் மௌனம் மட்டும் தான். நாட்கள் மெல்ல நகர்ந்து காயத்ரிக்கு நீயும் பிறந்த… நீ பிறந்ததும் ஈஸ்வர் தான் உன்னை முதன்முதலா பார்த்தது.ரோஜாப்பூ மாதிரி இருந்த உன்னை யார்கிட்டயும் தரவும் மாட்டான்.உனக்கு வானதி தேவின்னு பேர் வச்சதும் அவன் தான்.உன்னை எப்பவும் தேவின்னு தான் கூப்பிடுவான். அவன் கையிலேயே தான் வச்சுக்கிட்டு இருப்பான்.

நீ பிறந்த பிறகாவது உன்னோட அப்பா வீட்டு ஆட்கள் வருவாங்கன்னு நினைச்சோம்..ஆனா யாருமே வரல… தகவல் சொன்னதும் உங்க அப்பா கண்டிப்பா வருவார்னு காயத்ரி எதிர்பார்த்து இருப்பா போல…ஆனா அவர் வரலை..அவருக்கு பதிலா அவங்க வீட்டு வக்கீல் தான் வந்தார்.

முறைப்படி உங்க அம்மாவை விவாகரத்து செய்யப் போறதாகவும் அதுக்கு காயத்ரியோட கையெழுத்தை கேட்டும் வந்தாங்க… எல்லாரும் பிடிவாதமா மறுத்து பேசினப்போ அந்த வக்கீல் சொன்ன விஷயத்தில் நாங்க எல்லாருமே ஆடிப் போய்ட்டோம். விவாகரத்துக்கு கோர்ட்டில் உங்க அப்பா சொல்லப் போற காரணம்…தன்னோட மனைவியின் நடத்தை சரியில்லைன்னு சொல்லப் போறதா தெரிஞ்சதும்…ராஜேஸ்வர் கொதிச்சுப் போய்  வைக்கீலின் சட்டையை கோர்த்து பிடித்து அடித்து விட்டான். அன்னைக்கு வீட்டில் பெரிய ரகளையே நடந்தது.

அதன்பிறகு விவாகரத்து விஷயமா நிறைய பேர் பேச வந்தாங்க..எல்லாமே தோல்வி தான்..ராஜேஸ்வர் அதுக்கு ஒத்துக்கவே இல்லை.எப்படியாவது தங்கச்சியோட வாழ்க்கையை சரி செய்யணும்னு நினைச்சான்…இவ்வளவு போராட்டம் நடந்தும் காயத்ரி அது எதையும் கண்டுக்கவே இல்ல..அவ தன்னோட நேரத்தை எல்லாம் முழுக்க, முழுக்க உன்னோடவும்,ஈஸ்வர் கூடவும் செலவழிக்க ஆரம்பிச்சா..வேற எதைப் பத்தியும்..யாரைப் பத்தியும் அவ கவலைப்படலை…

உங்க அப்பன் கூட சில முறை வீட்டுக்கு வந்து கத்திட்டு போனான் டைவர்ஸ் கொடுக்க சொல்லி.. காயத்ரி கொஞ்சமும் அசைஞ்சு கொடுக்கலை. நல்ல வசதியான இடமா இருந்தாலும் ஜாதியை கட்டிக் கொண்டு அழுதவங்களை எப்படி திருத்துறதுன்னு தெரியாம எல்லாரும் குழம்பிப் போய் கிடந்தோம்.வசதியை மட்டும் பார்த்து ஜாதி வெறி பிடிச்ச மிருங்கங்கள் கிட்டே தங்கச்சியை கொடுத்து அவ வாழ்க்கையை கெடுத்துட்டோமோன்னு ராஜேஸ்வர் வருந்தாத நாள் இல்லை.

உங்க அப்பன் சிலமுறை உங்க அம்மாகிட்டே தனியா பேசணும்னு வருவான்…ஆனா கொஞ்ச நேரத்தில் உங்க அம்மாவோட அலறல் சத்தம் கேட்கும்…வேற்று ஜாதியில் பிறந்ததைத் தவிர வேறு ஒரு பாவமும் செய்யாத காயத்ரி அவன் வரும் பொழுதெல்லாம் சித்திரவதை அனுபவிச்சாள். ஒரு கட்டத்துக்கு மேல ராஜேஸ்வர் அவனை வீட்டுக்குள் விடலை.

எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு நாங்க எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா மனசை தேத்திக்கிட்டு நாட்களை நகர்த்தினோம்.காயத்ரிக்கு நீயும்,ஈஸ்வரும் தான் உலகம்…உனக்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும்…அப்போ ஈஸ்வருக்கு பன்னிரெண்டு வயசு.ஸ்கூல் போற நேரம் தவிர மற்ற நேரம் முழுக்க  உன்னையும்,உங்க அம்மாவையும் விட்டு நகரவே மாட்டான்.

ஒருநாள் உங்க அம்மாவோட மாமியார்..அந்த வீட்டில் அவளுக்கு ஆதரவா இருந்த ஒரே ஜீவன் காயத்ரியை பற்றிய கவலையிலேயே தன்னுடைய உயிரை விட்டு விட வெகுநாட்கள் கழித்து கதறி அழுதாள் காயத்ரி.அந்த அழுகை அவளோட மாமியார்காகவா இல்ல அந்த வீட்டில் அவள் மேல அன்பு வச்சு இருந்த ஒரே ஜீவனும் இறந்து போனதினாலயான்னு எங்க யாருக்கும் புரியலை…

அத்தோட அந்த வீட்டோட இருந்த மொத்த தொடர்பும் போச்சுன்னு நாங்க எல்லாரும் இருந்தப்போ தான் ஒருநாள் உங்க அப்பன்..அந்த பாவிப்பய வீடு தேடி வந்தான்.எல்லார்கிட்டயும் ரொம்ப உருக்கமா பேசினான்.நடந்த தப்புக்கு மன்னிப்பும் கேட்டான் சண்டாளன்.

அவங்க அம்மா சாகும் பொழுது இனி காயத்ரியோட ஒத்துமையா குடும்பம் நடத்தணும்ன்னு வேண்டி கேட்டுக்கிட்டு உயிரை விட்டதா சொல்லி வைத்தியின் காலில் விழுந்து கெஞ்சிக் கதறி அழுது நடித்தான் .இடையில் ஏகப்பட்ட வருடங்கள் கடந்து இருந்தாலும்கூட வீட்டில் இருந்த எல்லாருக்கும் மகிழ்ச்சி தான்…எல்லாருமா பேசி காயத்ரியை அவரோட சந்தோசமா அனுப்பி வச்சோம். காயத்ரிக்கு அங்கே போக விருப்பம் இல்லை…ஆனாலும் நாங்க எல்லாரும் சொன்னதால மறுத்து பேசாம கிளம்பினா…

அப்போ ஈஸ்வர் வீட்டில் இல்லை.ஸ்கூல் டூர் போய் இருந்தான்.ஒருவேளை அவன் வீட்டில் இருந்து இருந்தால் நிச்சயம் உங்களை வீட்டை விட்டு வெளியேற அனுமதித்து இருக்கவே மாட்டான்.

அங்கே இருந்து கிளம்பி இரண்டு நாள் ஆகியும் உங்க அம்மா கிட்டே இருந்து எந்த தகவலும் இல்லை…எங்களுக்கு கொஞ்சம் பயம் வர ஆரம்பிச்சுது.நேரா அவங்க வீட்டுக்கே போய் ராஜேஸ்வர் கேட்டப்போ… எங்களுக்குத் தெரியாதுன்னு எல்லாரும் கையை விரிச்சுட்டாங்க….உங்க அப்பன் ரெண்டு நாளா அந்தப் பக்கமே வரலைன்னு விசாரிக்கும் பொழுது தெரிஞ்சது…எங்களுக்கு ரொம்ப பயமா போச்சு…காயத்ரியையும்,உன்னையும் தேடி ஊர் ஊரா அலைஞ்சோம்… ஆட்களையும் ஏற்பாடு செஞ்சோம்…அப்போ தான் உங்களை கோயம்புத்தூர் பக்கத்தில் ஏதோ ஒரு பஸ் ஸ்டாப்பில் யாரோ பார்த்ததாக சொல்லவும் வைத்தியும்,ராஜேஸ்வரும் கிளம்பி வந்தாங்க…ஆனா அதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சு போச்சு”என்று சொன்னவரின் பார்வை சூனியத்தை வெறித்துக் கொண்டு இருந்தது.

வானதி அவர் சொன்ன அத்தனை சம்பவங்களையும் கண் கலங்க,உதடு துடிக்க கேட்டுக் கொண்டு இருந்தாள்.தன்னைப் பெற்றவள் வாழ்ந்த துயரம் மிகு வாழ்க்கையின் வேதனை அவளையும் தாக்கியது.ஐந்து வயது வரை ஒரு தன்னை உயிர் போல பாதுகாத்த அன்னையின் முகம் ஒரு நிழல் போல அவள் கண் முன்னே வந்து போனது.

“அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?”வறண்டு போன குரலில் கேட்டாள் வானதி.

“உங்க அப்பனோட அம்மா சாகிறதுக்கு முன்னாடி அவங்களோட சொத்துக்கள் எல்லாத்தையும் உன்னோட  பேரில் எழுதிட்டாங்க… அந்த விஷயம் அவங்க இறந்த பிறகு தான் அந்த வீட்டு ஆட்களுக்கு தெரிய வந்து இருக்கு… உன்னையும்,உங்க அம்மாவையும் கொன்னுட்டா.. அத்தனை சொத்தும் மறுபடியும் தங்களுக்கே வந்துடும்கிற எண்ணத்தில் உங்களை கொல்றதுக்காகத் தான் அந்தப் பாவி அழைச்சிட்டு போய் இருக்கான்.

வீட்டுக்குப் போகாம வண்டி திசை மாறி போகவுமே காயத்ரி சுதாரிச்சுட்டா…அவன் கிட்டே இருந்து தப்பிச்சு காட்டுக்குள்ளே எல்லாம் ஓடி இருக்கா…காட்டுக்குள் வழி தெரியாம ரெண்டு நாளா அலைஞ்சு திரிஞ்சு ஒரு வழியா ஊருக்குள் வந்துட்டா…  கையில் பணம் இல்லாததால் அவளுக்கு அடுத்து என்ன செய்யணும்னே தெரியலை…தன்னோட வளையலை  கொடுத்து பஸ் செலவுக்கு மட்டும் யார்கிட்டயோ பணம் வாங்கிட்டு…. ரெண்டு நாளா நீ பட்டினியா இருந்ததால உனக்கு சாப்பாடு வாங்கித் தர ஏதோ ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போகும் பொழுது தான் மறுபடியும் அந்த சண்டாளன் கண்ணுல பட்டு இருக்கா…

இரண்டு நாளா சாப்பிடாமல் காட்டில் அலைஞ்சு திரிஞ்சு தலை கலைந்து, களைச்சுப் போய் இருந்தவளோட தோற்றத்தை மத்தவங்க கிட்டே காட்டி அவ ஒரு பைத்தியம்…தன்னோட குழந்தையை தூக்கிட்டு வந்துட்டான்னு சொல்லி உங்க அப்பன் சொல்லவும்..அவளோட தோற்றத்தைப் பார்த்த அந்த ஊர் மக்களும் அது உண்மை தான்னு நம்பி… குழந்தையை அவ கிட்டே இருந்து பிரிச்சு அவன் கிட்டே கொடுக்க முயற்சி செஞ்சு இருக்காங்க…

இனிமேலும் தாமதிச்சா உனக்கு எதுவும் ஆகிடுமோனு பயந்து உங்க அம்மா உன்னை தூக்கிட்டு ஓடிப் போய் அங்கே வந்த ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துட்டா…. பசியில் நீ பக்கம் அழ…கட்டின கணவனே பெத்த குழந்தையை கொல்லத் துரத்துற வேதனை ஒருபுறமுமா உங்க அம்மா அப்போ அந்த நிமிஷமே மனசளவில் இறந்துட்டா…” என்றவர் தொண்டை கரகரக்க அப்படியே சில நொடிகள் அமைதியாகி விட… வழிந்தோடும் கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள் வானதி.அவள் பார்வை மட்டும் பூபதியின் முகத்திலேயே இருந்தது.

“அதுக்கு அப்புறமும் கூட அவளை விட்டு வைக்க கடவுளுக்கே மனசு வரலை போல…அவள் போய்ட்டு இருந்த பஸ்ஸை உங்க அப்பன் காரில் மறிச்சு நிறுத்த முயற்சி செஞ்சப்போ..பஸ்ஸில் பிரேக் பிடிக்காம கார் மேல மோதி பஸ் ஆக்கிசிடென்ட் ஆகிடுச்சு…பஸ் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்து பஸ்ஸில் இருந்த பாதி பேர் இறந்துட்டாங்க…

விவரம் தெரிஞ்சு நாங்க அங்கே வந்து சேரும் பொழுது தன்னுடைய கடைசி நொடிகளை எண்ணிக்கிட்டு இருந்த காயத்ரியை தான் நாங்க பார்த்தோம். அவ சொல்லித் தான் எங்களுக்கு இவ்வளவு விவரமும் தெரிஞ்சது.காயத்ரி சாகும் பொழுது எங்க கிட்டே கடைசியா கேட்டது ஒண்ணே ஒண்ணு தான்.

‘ எந்த காரணத்தை முன்னிட்டும் அந்த சொத்து என் மகளை விட்டு போகக்கூடாது. பணத்துக்காக சொல்லல..அது அவள் பேரில் இருந்தா தான் அவளோட பிறப்புக்கும் மரியாதை… என்னோட நடத்தைக்கும் சாட்சி அது…அதை விட ஆயிரம் கோடி அதிகமான சொத்துக்களை நீங்க என் பொண்ணுக்கு சேர்த்து வைக்கலாம்.ஆனா அது எதுவும் அவளுக்கு கௌரவத்தை தராது…’ அது தான் அவ கடைசியா பேசின வார்த்தை…போதும்டா இந்த ஜாதி வெறி பிடிச்ச கும்பலோட வாழ்ந்ததுன்னு நினைச்சு கண்ணை மூடிட்டா அந்த மகராசி…

அதுக்கு அப்புறம் தான் எங்க எல்லாருக்கும் உன்னோட நினைவு வந்துச்சு… அஞ்சு வயசில் எந்த குழந்தையும் அங்கே அட்மிட் ஆகலை…அந்த ஆக்சிடெண்டில் முகம் சிதைஞ்சு போய் இரண்டு குழந்தைங்க இருந்தாங்க…அது நீ தான்னு நாங்க எல்லாரும் நினைச்சோம்.ஆனா ஈஸ்வர் உறுதியா சொன்னான்.அது நீ இல்லைன்னு…எங்களுக்கு நீ எங்கே எப்படி மாயமா மறைஞ்சு போனன்னு தெரியல…உன்னைக் கண்டுபிடிக்க எங்களால முடிஞ்ச எல்லா வகையிலும் நாங்க முயற்சி செஞ்சப்போ தான் உன்னைப் பத்தி எங்களுக்கு தகவல் வந்துச்சு…உன்னைத் தேடி வைத்தியும்,ராஜேஸ்வரும் ப்ளைட்டில் வந்தப்போ தான் அவங்க வந்த ப்ளைட் ஆக்சிடென்ட் ஆகி ராஜேஸ்வர் இறந்ததும்… வைத்தி கோமாவுக்கு போனதும்…

“அந்த மூர்த்தி யார்?”

“ஹ… அந்த நாராயணனின் தங்கச்சி பையன்..அந்த குடும்பத்தின் ஒரே வாரிசு அவன் தான்”என்றார் கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன்…

“நான் தான் வானதின்னு… அதாவது காயத்ரி அவங்களோட பொண்ணுன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க? வெறுமனே பேரை வச்சு மட்டும் எப்படி அந்த முடிவுக்கு வந்தீங்க? ஒருவேளை நான் வேற யாரா வேணாலும் இருக்கலாமே”என்று அவள் கிடுக்கிப்பிடி போட…பூபதி புன்னகை முகத்துடன் அவளுக்கு பதில் சொல்ல தயாரானார்.

Facebook Comments

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here