தூக்கம் வராமல் அறையில் புரண்டு படுத்தவள் நள்ளிரவிற்கு மேலும் அதே நிலை தொடர, மெல்ல எழுந்து அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள்.ஆசிரமத்தில் இரவு நேரத்தில் எல்லாரும் ஹாலில் தான் தூங்கியாக வேண்டும்.தனியே தூங்குவதற்கு என்று எந்த அறையும் கிடையாது.எனவே மற்றவர்களின் தூக்கத்தைத் தொந்தரவு செய்யாத வண்ணம் மெல்ல எழுந்து தோட்டத்திற்குச் சென்றவள் அந்த நேரத்தில் சுந்தரேசன் அய்யாவை அங்கே கண்டதும் திகைத்து அப்படியே நின்று விட்டாள்.
சம்ஹார மூர்த்தி அவரிடம் பேசியதை அறிந்து வைத்து இருந்தாலும் இரவில் அவரைத் தொந்தரவு செய்ய மனமின்றி அப்படியே விட்டு விட்டாள்.காலையில் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று மனதைச் சமாதானம் செய்தாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.உறக்கம் கண்களைத் தழுவாமல் சண்டித்தனம் செய்தது.
சம்ஹார மூர்த்தியின் பூடகமான பேச்சு ஒரு காரணம் என்றாலும் , ‘அப்படி என்ன விஷயமாக இருக்கும்?’என்ற கேள்வி ஒருபுறமும் அவளது தலையைப் போட்டு குடையத் தூக்கமும் துளியும் வரவில்லை வானதிக்கு. அவளுக்குத் தான் இந்த நிலை என்று வெளியே வந்து பார்த்தால் அய்யாவும் இந்த நேரத்தில் தூங்காமல் இருக்கிறாரே என்று எண்ணியவள் பேசாமல் போய் விடுவோம் என்று எண்ணித் திரும்பிய பொழுது அரவம் கேட்டு திரும்பிய சுந்தரேசனின் பார்வையில் அவள் பட்டுவிட்டாள்.
“வானதி …இங்கே வாம்மா”வாஞ்சையுடன் ஒலித்தது அவர் குரல்.
மெதுவாக அவர் அமர்ந்து இருந்த சேரின் கால் பகுதியில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டவளின் தலையைப் பாசத்துடன் வருடினார் சுந்தரேசன்.இருட்டிலும் அவர் கண்களில் இருந்த பளபளப்பு அவர் அழுவதைத் தெளிவாக எடுத்துச் சொல்ல பயந்து போனாள் வானதி.
“அய்யா..என்ன ஆச்சு…ஏன் இப்படி இருக்கீங்க?கண்ணெல்லாம் கலங்கி போய்…உடம்புக்கு எதுவும் செய்யுதா அய்யா…நான் யாரையாவது கூட்டிக்கொண்டு…”என்று பதட்டமாகப் பேசியவளை ஒற்றைக் கை அசைவில் அமைதிப் படுத்தினார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை வானதி…மனசு ஒரு மாதிரியா இருக்கு..ஏதேதோ யோசனை…அதுவும் இன்னைக்குச் சாயந்திரம் அந்தத் தம்பி மூர்த்திக் கிட்டே பேசினதுக்கு அப்புறம் மனசு ஒரு நிலையாகவே இல்லை”
“ஏன் அய்யா..அவரு எதுவும் உங்க மனசு கஷ்டபடுற மாதிரி பேசிட்டாரா?”முட்டைக் கண்ணை விரித்துக் கோபப்படத் தயாரானாள் வானதி.
“சே! சே! அதெல்லாம் இல்லை வானதி…நிதர்சனத்தை ஏத்துக்க முடியாம நான் தான் தடுமாறுறேன்”
“ஏன் ஒரு மாதிரி பேசறீங்க அய்யா…நீங்க எப்பவும் இது மாதிரி பேச மாட்டீங்களே?”அவள் முகம் கவலையோடு அவரை அளவிட்டது.
“ஏன் வானதி… அந்தத் தம்பியை பத்தி நீ என்ன நினைக்கிற?”என்று கேட்டவர் அந்த இருளில் கூட அவளது முகத்தைக் கூர்ந்து பார்ப்பதை அவளால் உணர முடிந்தது.
“எ…என்ன அய்யா புதுசா இப்படி எல்லாம் கேட்கறீங்க?”அவளுக்கு உள்ளுக்குள் பயம். ‘மாலை அவனிடம் பேசிய அதிகப்படி பேச்சால் கோபம் கொண்டு அய்யாவிடம் எதுவும் மாட்டி வைத்து விட்டாரோ’ என்று எண்ணினாள்.இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாகப் பேச முயன்றாள்.
“அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்கு அய்யா…நான் படிக்கிற காலேஜ் ஓனர் அவர்..அதைத் தாண்டி வேற இருக்கு.அவரைப் பத்தி சொல்ல…”தயக்கத்தோடு அத்துடன் நிறுத்திக் கொண்டாள் பேச்சை.
“அந்தத் தம்பி இன்னைக்குச் சாயந்திரம் என்கிட்டே வந்து பேசினார் வானதி…நம்ம ஆசிரமத்துக்கு எவ்வளவு செலவு ஆகுது?பணத்துக்கு எப்படிச் சமாளிக்கறேன்? இந்த மாதிரி நிறையக் கேட்டார்.நானும் உண்மை நிலவரத்தை அவர் கிட்டே சொன்னேன்.அதை எல்லாம் அந்தத் தம்பி பொறுமையா கேட்டுட்டு என்கிட்டே சில விஷயம் சொன்னார்.அதுதான் எனக்கு உறுத்தலா இருக்கு”
“…”
“உன்கிட்டே சொல்றதுக்கு என்ன வானதி.. நான் என்னுடைய வருமானத்தை எல்லாம் முழுசா இங்கே ஆசிரமத்திலேயே உங்கள் செலவுக்காகக் கொடுத்திடறேன் இல்லையா? அதனால எனக்குன்னு தனியா எந்தச் சேமிப்பும் கிடையாது.வந்த வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வச்சு அதைத் தொழிலில் முறையா முதலீடு செஞ்சு இருந்தா இன்னும் வருமானம் பெருகி இருக்கும்.ஆனா அப்போ எனக்கு அது தோணாம போச்சு…யாருக்காக வருமானத்தைப் பெருக்கி வைக்கணும்ன்னு ஒரு எண்ணம்.”
“அதனால என்ன அய்யா..இப்போ எதுவும் பெருசா பணத்தேவை வந்து இருக்கா?எதுவா இருந்தாலும் சொல்லுங்க அய்யா…நாம எல்லாரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம்”சுந்தரேசன் அய்யா எந்த நிலையிலும் கலங்கி விடக் கூடாதே என்ற எண்ணம் தான் அவளை அவ்வாறு பேசத் தூண்டியது.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல வானதி இன்னைக்கு அந்தத் தம்பி உங்களோட எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது செய்யணும்னா இப்போ இருக்கிற படிப்பு,உணவு மட்டும் போதாதுன்னு சொல்லி என்கிட்டே பேசினார்.அதுவும் இல்லாம எனக்கு அப்புறம் இந்த ஆசிரமத்தை யார் பொறுப்பா பார்த்துப்பாங்கன்னு கேட்டார்.அது தான் எனக்கு யோசனையா போச்சு”
“ஏன் அய்யா…நான் இல்லையா…நான் பார்த்துக்க மாட்டேனா?” என்ற அவளின் கேள்விக்குச் சோகையாகச் சிரித்தார் சுந்தரேசன்.
“நானும் அந்த எண்ணத்தில் தான் இருந்தேன் வானதி…அது எவ்வளவு பெரிய தப்பு அப்படிங்கிறதே அந்தத் தம்பி வந்து பேசினதுக்கு அப்புறம் தான் புரியுது.”கண்கள் கலங்க பேசியவர், ஒரு சில நிமிடங்கள் தரையை வெறித்துப் பார்த்து தன்னுடைய உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார்.
“உங்களை எதுவும் தப்பா பேசினாரா அவர்?”சண்டைக்குத் தயாரானவளைப் பார்த்து ஆதுரமாகப் புன்னகைத்தார்.
“இல்லை வானதி..ஆயிரம் தான் இருந்தாலும் நீ ஒரு பெண் பிள்ளை..நாளைக்கு உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையும் பொழுது இந்த ஆசிரமம் அதுக்கு ஒரு தடையா இருக்கக்கூடாது இல்லையா?”
“என்ன அய்யா…என்னென்னவோ பேசறீங்க? இந்த ஆசிரமத்தை தவிர எனக்கு ஏது வாழ்க்கை?”கலக்கத்துடன் கேட்டவளை பாசம் ததும்பப் பார்த்தார் சுந்தரேசன்.
“இருக்குடா..உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு…நீ படிப்பை முடிச்சதும் நல்ல வேலைல சேரணும்…நிறைய கத்துக்கணும்.அப்புறம்…உனக்குன்னு ஒரு குடும்பம் அமையணுமே..அப்போ தான் எனக்குச் சந்தோசம்”
“அய்யா இப்போ எதுக்குச் சம்பந்தமே இல்லாம எதையெதையோ பேசறீங்க?அவர் உங்ககிட்டே என்ன தான் சொன்னார்?”
“ம்ம்ம்..நிறைய சொன்னார்டா.ஆனா நீ சின்னப்பிள்ளை இப்போ உனக்கு அந்த விவரம் எல்லாம் வேண்டாம்…அவர் இன்னைக்கு உன்னோட பாட்டைக் கேட்டாராமே…ரொம்பப் புகழ்ந்து தள்ளிட்டார்.ரொம்ப நேரம் உன்னைப் பத்தியே தான் பேசிக்கிட்டு இருந்தோம்.கிளம்பும் போது உன்னை அவரோட செலவில பாட்டுக் கிளாஸில் சேர்த்து விடுறதா சொன்னார்…”
“அதெல்லாம் வேணாம் அய்யா…”சுந்தரேசன் அய்யாவை வருத்தியவனின் காசில் பாட்டு கத்துக் கொள்வதா என்ற கோபம் அவளுக்கு.
“ம்ச்…அப்படி எல்லாம் மறுத்து பேசக் கூடாது வானதி…உன்னோட எதிர்காலத்துக்கு நல்லது செய்ய ஒருத்தர் முயற்சி செய்யும்பொழுது அதைத் தடுக்கிறது ரொம்பத் தப்பு”
“இல்லை அய்யா..நான் மட்டும் தனியா பாட்டு கிளாசுக்கு போனா மத்த பிள்ளைகள் வருத்தப்படுவாங்களே…”
“அப்படி எல்லாம் நீயா நினைச்சுக்கக் கூடாது வானதி…உனக்குத் திறமை இருக்கு.அதனால உதவிகள் தானா தேடி வருது.அதே மாதிரி அவங்களுக்கும் திறமை இருந்தா அவங்களுக்கும் யாராவது உதவி செய்வாங்க…அதையெல்லாம் யோசிச்சு நீ மனசை போட்டுக் குழப்பிக்காதே.இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு.மேலும் அவருடைய எண்ணங்களுக்கும் நாம் மதிப்பு கொடுக்க வேண்டும் இல்லையா?”
“அவருடைய எண்ணங்களுக்கு நாம் ஏன் முக்கியத்துவம் தர வேண்டும் அய்யா…அவர் யாரோ எவரோ?”
“அப்படிச் சொல்லாதே வானதி…நாளையே அவர் உனக்கு முக்கியமானவராக மாறினாலும் மாறலாம்…”
“என்ன அய்யா சொல்றீங்க…எனக்கு ஒண்ணும் புரியலை…”குழம்பிய முகத்தோடு பார்த்தாள் வானதி.
“அ..அது ஒண்ணுமில்லை வானதி..நாளையே நீ நன்றாகப் படித்தால் உன்னுடைய படிப்பை செலவை கூட அவரே ஏத்துக்கிறதா சொல்லி இருக்கார்.அதைத்தான் சொல்ல வந்தேன்”
“இல்லை அய்யா…எனக்கு விருப்பம் இல்லை”
“ம்ச்…இதென்ன வானதி சின்னபிள்ளை போலப் பிடிவாதம்…யாருக்கும் கிடைக்காத நல்ல சந்தர்ப்பம் உனக்குக் கிடைத்து இருக்கு..அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இப்படி வீணடிக்கப் பார்க்கிறாயே…”என்றார் கொஞ்சம் கோபமாக.
முதன்முதலாகத் தன்னிடம் கொஞ்சம் கடுமை காட்டி பேசிய சுந்தரேசன் அய்யாவின் முகத்தைப் பார்த்தவள் தலையை மட்டும் சம்மதம் போல ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர முனைய அவளைத் தடுத்து நிறுத்தினார் சுந்தரேசன்.
“இப்படி வருத்தமா தலையாட்டாதே வானதி…நான் உன்னோட நல்லதுக்குத் தானே சொல்வேன்…புரிஞ்சுக்கோ வானதி”என்றவரின் குரலில் கண்ணீர் சாயலை கண்டவள் பதறிக் கொண்டு அவரின் அருகில் வந்தாள்.
“என்ன அய்யா நீங்க இவ்வளவு தூரம் வருத்தப்படறீங்க…எனக்கு முழுச் சம்மதம்…பாருங்க நான் சந்தோசமாத் தான் இருக்கேன்.”என்று பேசியபடியே கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு வலிய முயற்சி செய்து முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்தாள்.
“என்னோட ஆசைப்படியே எல்லாம் நடந்துட்டா…அதுக்கு அப்புறம் இந்த உலகத்திலேயே நான் தான் சந்தோஷமான மனிதனா இருப்பேன்”என்று கூறிய அவரின் பேச்சின் உள்ளர்த்தம் எதுவும் புரியாவிட்டாலும் தலையை மேலும் கீழுமாக ஆட்டி வைத்தவள் அவரை அவருடைய அறையில் விட்டுவிட்டு தன்னுடைய இடத்திற்குப் போய்ப் படுத்தவள் அவளையும் அறியாமல் உறக்கத்தைத் தழுவினாள்.
மறுநாள் காலை நேரத்திலேயே அவளை அழைத்துச் செல்ல வந்த சம்ஹார மூர்த்தியைப் பாசமாக (!) பார்த்து வைத்தவளைக் கண்டு ஒற்றைப் புருவத்தை வசீகரமாக ஏற்றி இறக்கி அவளுடைய பொறுமையைச் சோதித்தான் அவன்.
கேள்வியாகத் திரும்பி சுந்தரேசனைப் பார்க்க அவரோ முகமெல்லாம் பூரிப்பாக அவளை அவனுடன் செல்லுமாறு பணிக்க ஆத்திரத்தை வெளியே காட்ட முடியாமல் வேண்டா வெறுப்பாக அவனுடைய காரில் ஏறப் போனாள் வானதி.
அவளின் கோபத்தைக் கண்டும் காணாதவன் போல “முன்னாடி ஏறு” என்று கூறி காரின் கதவைத் திறந்து விட்டு முன் தினத்தைப் போலவே அவனே அவளுக்குக் காரோட்டியானான்.
‘இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை’என்று உள்ளுக்குள் முணுமுணுத்தவள் அவன் புறமே திரும்பாமல் வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.
“என்ன மேடம்… காலையிலேயே ரொம்பச் சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கு”வேண்டுமென்றே அவளைச் சீண்ட வானதிக்கு வந்த கோபத்தில் முட்டை கண்ணை நன்றாக விரித்துப் பார்த்து அவனை முறைக்க அவனோ பக்கென்று சிரித்து விட்டான்.
“உனக்குத் தான் கோவப்படவே தெரியலையே…அப்புறம் ஏன் அதுக்கு முயற்சி பண்ணுற…விட்டுடு…உனக்கு அது சூட் ஆகலை”
“நேத்து அய்யாகிட்டே என்ன பேசுனீங்க?” என்று அவள் கேட்க ஒரே ஒரு நிமிடம் அவளைத் திரும்பி அழுத்தமான பார்வை பார்த்து வைத்தவன் லேசாகத் தோள்களைக் குலுக்கினான்.
“ஏன் உன்னோட அய்யா உன்கிட்டே எதுவும் சொல்லலியா?”அவளின் கேள்வியை அக்கறை இல்லாதவன் போலப் பேச அவளுக்கோ கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
“என்னைப் பாட்டுக் கிளாசுக்கு அனுப்புறதைப் பத்தி சொன்னார்…”
“ஓ…வேற எதுவும் சொல்லலியா?”
“வே…வேற என்ன?”
“ஒண்ணுமில்லை…”
“இல்லை.வேற ஏதோ இருக்கு…என்கிட்டே இரண்டு பேருமா சேர்ந்து மறைக்கப் பார்க்கறீங்க?”
“அப்படியா?”அநியாயத்திற்கு ஆச்சரியப்பட்டான் சம்ஹார மூர்த்தி.
“எனக்கு நல்லா தெரியும்…நீங்க ஏதோ செஞ்சு எங்க அய்யாவை மிரட்டி…அவர் கூடச் சண்டை போட்டு இருக்கீங்க?”என்று படபடவென்று பேசியவளைக் கண்டு ஆச்சரியம் மேலிடச் சட்டென்று காரைச் சடன் பிரேக் போட்டு நிறுத்தி விட்டான்.
“அடேங்கப்பா…இவ்வளவு தூரம் பேசுவியா நீ?”கேலியும், ஆச்சரியமும் சரிபாதி கலந்து இருந்தது அவன் குரலில்.
“பேச்சை மாத்தாதீங்க…என்ன சொன்னீங்க எங்க அய்யாகிட்டே…உண்மையைச் சொல்லிடுங்…” பேசிக் கொண்டே போனவளின் வார்த்தைகள் அந்தரத்தில் நின்று போயின அவனது துளைக்கும் பார்வையில்.
“நாங்க பேசினது முக்கால்வாசி உன்னைப் பத்தி தான்…ஆனா அதை நீ தெரிஞ்சுக்க இன்னும் நேரம் வரலை…உனக்கு அதுக்குப் பக்குவமும் இல்லை…கொஞ்ச நாள் போகட்டும் என்ன பேசினோம்னு சொல்றேன்.அதுவரை அதைப் பத்தி நினைக்காம நல்ல பிள்ளையா…படிப்பில் மட்டும் கவனம் செலுத்து…என்னையும் நல்ல பிள்ளையாகவே இருக்க விடு” என்று சொன்னவன் காரைக் கிளப்பிச் சாலையில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.
‘என்ன பத்தி பேசிட்டு நான் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்’ என்று எண்ணியவள் பார்வையைக் கோபமாக வேறுபுறம் திருப்ப அவளுடைய பார்வையின் பொருள் உணர்ந்தவன் தானாகவே பதில் பேச ஆரம்பித்தான்.
“நான் தான் சொன்னேனே…இந்த விஷயம் முழுக்க உன்னோட சம்பந்தப்பட்டது.அதை உன்கிட்டே சொல்லாம இருப்போமா…நேரம் வரும்பொழுது எல்லாத்தையும் சொல்வோம்…இன்னொரு முறை இதைப் பத்தி கேட்காதே…நான் வேற முறையில் பதில் சொல்ல வேண்டி இருக்கும் புரிஞ்சுதா?”என்று விளையாட்டாக எச்சரித்தவன் காரை நேராக ஒரு அபார்ட்மெண்ட்டில் கொண்டு போய் நிறுத்தினான்.
‘இது என்ன இடம்? இங்கே எதுக்கு வந்து இருக்கோம்?’என்று கண்களில் கேள்வியோடு பார்த்தவளை, அவள் அறியாமல் ரசனையுடன் பார்த்தவன் காரை விட்டு இறங்கி அந்தப்பக்கம் வந்து அவளுக்குக் கார் கதவைத் திறந்து விட்டான்.
“உனக்கு முறைப்படி சங்கீதம் சொல்லிக் கொடுக்க இங்கே தான் ஒரு லேடி கிட்டே பேசி இருக்கேன்.இப்ப ஜஸ்ட் அவங்களைப் பார்த்துட்டுப் போகலாம்.சாயந்திரம் தான் உனக்குக் கிளாஸ்”என்றவன் அவளுக்கு முன்னே நடக்க அவளும் அவனது வேகத்துக்கு ஈடு கொடுத்து அவனோடு சேர்ந்து அந்த மியூசிக் டீச்சர் சாரதாவை பார்த்து விட்டுச் சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்தவுடன் கிளம்பி மீண்டும் கல்லூரிக்கு அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
“இனி தினமும் காலையில உன்னை நானே கூட்டிக்கொண்டு வந்து காலேஜில் விட்டுட்டுச் சாயந்திரம் நானே வந்து பாட்டு கிளாசுக்கு கூட்டிட்டு போறேன்.தனியா இனி எங்கேயும் போகாதே”எச்சரிக்கைபோலச் சொன்னவனின் பேச்சைக் கண்டு அவளுக்குக் கோபம் தான் வந்தது.
உண்மையில் அவனது பேச்சு அவளுக்கு ஆறுதலைத் தான் கொடுத்து இருக்க வேண்டும்.காலேஜ்க்கு வரத் தொடங்கிய புதிதில் ரோட்டில் தனித்து நடக்கவே பயந்த வீராங்கனை அல்லவா அவள்…இப்பொழுது அவன்மீது இருக்கும் கோபத்தின் காரணமாக இடக்காகப் பேசினாள் வானதி.
“இத்தனை நாள் நான் தானே வந்துக்கிட்டு இருந்தேன்…இப்ப மட்டும் எதுக்குப் புதுசா உங்க துணை எனக்கு”
“இது நாள்வரை எப்படி வேணா இருந்து இருக்கலாம்…இனி அப்படி இருக்க முடியாது…இனி இது போன்ற விஷயங்களுக்கு நீ பழகிக் கொள்ளத் தான் வேணும் வானதி…”என்று உறுதியாக உரைத்தவன் அங்கிருந்து சென்று விட அவளுக்குத் தான் கோபம் அதிகரித்தது.
‘அப்படி என்ன ஆபத்து வந்துடுமாம்…சும்மா பயமுறுத்திகிட்டு இருக்கார்’ என்று அலட்சியமாக எண்ணியவள் அப்பொழுது அறியவில்லை அவளுக்கு ஏற்படப் போகும் ஆபத்தைப் பற்றி.
தீ தீண்டும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
+1
+1
+1
+1
+1
test