Theendatha Thee Neeye Tamil Novel 6
மாலை நேரத்தில் கல்லூரி முடிந்ததும் அவளுக்காக காத்திருந்த சம்ஹார மூர்த்தியை மற்றவர்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டு இருக்க,அவனோ அதைப் பற்றி எல்லாம் கவலைப் கொள்ளாமல் வானதியின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

கல்லூரி முடிந்ததும் புற்றீசல் போல வீட்டை நோக்கி கிளம்பியவர்கள் வழியில் சம்ஹார மூர்த்தியைப் பார்த்ததும் அவன் காரையும்,அவனையும் துளி கூட நெருங்கும் துணிவில்லாமல் அரை கிலோ மீட்டர் இடைவெளி விட்டு நடந்து போக அந்த கல்லூரியில் சலசலப்பு ஏற்பட்டது.

சம்ஹார மூர்த்தி எப்பொழுதாவது ஒருமுறை தான் கல்லூரிக்கு வருவான். அப்படி வந்தாலும் இப்படி காரை வழியில் நிறுத்தி யாரிடமும் பேசிக் கொண்டு இருக்க மாட்டான்.வந்ததும் நேரே தன்னுடைய அறைக்கோ அல்லது பிரின்சிபாலின் அறைக்கோ சென்று வந்த வேலையை முடித்து விட்டு உடனடியாக கிளம்பி விடுவான்.அப்படிப்பட்டவன் இன்று இப்படி இங்கே நிற்பதன் காரணம் புரியாமல் எல்லாரும் குழம்பிக் கொண்டிருந்தனர்.

வகுப்பு முடிந்ததும் வெளியே வந்த தேங்கி நின்ற கூடத்தைப் பார்த்து வானதியும் யோசனையானாள்.‘ஏன் இவ்வளவு கும்பலா இருக்கு…இந்நேரம் எல்லாரும் காக்காய் கூட்டம் மாதிரி பறந்து இருப்பாங்களே’ என்று எண்ணியபடியே வெளியே வந்தவளுக்கு காரணம் புரிந்து போனது சம்ஹார மூர்த்தியைப் பார்த்ததும்.

அலட்டல் இல்லாத அலட்சிய முக பாவனையுடன் காரில் சாய்ந்த வாக்கில் நின்று கொண்டே போனைப் பேசிக் கொண்டு இருந்தான்.எதிர்ப்புறம் யார் பேசுகிறார் என்றோ ,என்ன பேசுகிறான் என்பதோ அவளுக்குத் தெரியாது.ஆனால் அவன் அவர்களிடம் பேசிய விதம் அவளுக்குள் குளிரைப் பரப்பியது.வார்த்தைகளை கடித்துத் துப்பிக் கொண்டு இருந்தான்.வார்த்தைகளால் யாரையோ கொத்திக் குதறிக் கொண்டு இருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாக தெரிந்தது.

‘இப்போ எதுக்கு இங்கே வந்து இருக்கார்?’என்ற யோசனையுடன் அவனை நெருங்கிய பின் தான் அவளுக்கு உறைத்தது.அவன் தன்னை அழைத்துச் செல்லத் தான் வந்து இருக்கிறான் என்று.

வானதியைக் கண்டதும் பேசிக் கொண்டு இருந்த போனை அணைத்து பாக்கெட்டில் போட்டவன் அவளுக்காக கார் கதவை திறந்து விட மொத்த கல்லூரியும் சில நொடிகள் ஸ்தம்பித்து போனது என்னவோ நிஜம்.

திருவிளையாடல் படத்தில் ஒரு காட்சி வருமே…அசைந்து கொண்டிருந்த அனைத்தும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டதை போல…கிட்டத்தட்ட அதே போல ஒரு காட்சி தான் அங்கேயும் நடந்தது.

திறந்த வாய் மூடாமல் உலக அதிசயத்தை பார்ப்பது போல பலர் நிற்க அங்கிருந்த அனைவரின் பார்வையும் தன்மீது படிந்து இருப்பதை உணர்ந்த வானதியால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. தயங்கி மெல்லடி எடுத்து காரை அடைந்தவளின் கலவரம் நிறைந்த பார்வையைக் கண்டவன் ‘என்ன’ என்று கேள்வியாக ஒற்றைப் புருவத்தை உயர்த்த என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தாள் வானதி.

அவளின் உடல் அசைவுகளில் இருந்த தடுமாற்றத்தை உணர்ந்தவன் பார்வையை சுழல விட,அனைவரின் பார்வையும் தங்கள் இருவரின் மீதும் இருப்பதை உணர்ந்தவன் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தி விட்டு காரின் பின் சீட்டில் அவள் அமர்ந்ததும் காரை மின்னல் வேகத்தில் கிளப்ப அந்த வேகத்தின் பயனாக ,அங்கிருந்த மண் ஏற்படுத்திய புகையைக் காட்டிலும் அதிகமான புகை அங்கிருந்த பெண்களுக்கும், ஆண்களுக்கும் வந்தது.

பின்னே சும்மாவா…சம்ஹார மூர்த்தி ஒருவருக்காக காத்திருப்பது என்பதே பெரிது.அதுவும் அந்த நபர் ஒரு பெண் என்பது புதிது.இதில் காத்திருந்ததொடு மட்டும் அல்லாமல் அவனே அவளுக்காக கதவை திறந்து விட்டு ஒரு சேவகன் போல சேவை செய்த விதம் அங்கிருந்த எல்லார் மனதிலும் வீண் கேள்விகளை கிளப்பியது.

‘ஆனானப்பட்ட சம்ஹார மூர்த்தி ஒரு பெண்ணுக்காக கல்லூரி வாசலில் காத்திருந்து அவளை அழைத்துக் கொண்டு செல்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்லவே…யார் அந்தப் பெண்?அவளுக்காக அவர் ஏன் இதை எல்லாம் செய்ய வேண்டும்?’என்று கல்லூரி முழுக்க ஆளாளுக்கு தங்கள் வாயிற்கு வந்ததை முணுமுணுக்கத் தொடங்கினர்.

அடுத்த நாள் கல்லூரியில் எந்த மாதிரியான கேலிகளையும்,கிண்டல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்குமோ என்று எண்ணி அஞ்சியவள் தனக்குள்ளாகவே யோசனையில் மூழ்கியவாறு இருந்தாள்.

ஒரு கையால் காரை லாவகமாக ஒட்டியபடியே “என்ன மேடம்…யோசனை எல்லாம் பலமா இருக்கு போலவே?”என்றான் கேலியாக…

“உங்களை யாரு காலேஜ்க்கு வந்து என்னை பிக்கப் செய்ய வெயிட் பண்ண சொன்னாங்க…”பட்டாசாக படபடத்தாள் வானதி.

“ஏன் என்ன ஆச்சு?”அவளது கோபத்தின் காரணம் புரியாமல் நிதானமாகவே கேட்டான் சம்ஹார மூர்த்தி.

“இன்னும் என்ன ஆகணும்? நீங்க எவ்வளவு பெரிய ஆள்”

“ஆமா..ஒரு அஞ்சே முக்கால் அடி இருப்பேன் தான்”அவன் கேலி பேச வானதியின் கண்களில் கண்ணீர் சரம் தொடுத்தது.

பதறிப் போய் காரை நிறுத்தி விட்டான் மூர்த்தி.

“என்ன ஆச்சு வானதி…இப்போ எதுக்கு அழற?”

“என்னோட உணர்வுகள் உங்களுக்கு விளையாட்டா போச்சா? எப்போ பார்த்தாலும் கிண்டல் செய்றீங்க?”

“ஹே…எல்லாரும் இப்படி பேசுறது இயல்பு தானே…இதுக்கெல்லாமா அழுவது?” என்று அவளை சமாதானம் செய்ய முயல…அவளோ அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினாள்.

“இன்னைக்கு காலேஜ் மொத்தமும் ஒரு மாதிரியா பார்த்தாங்க….நீங்க அதை எல்லாம் கண்டுக்கவே இல்லை…உங்களை யாரு எனக்காக கார் கதவை எல்லாம் திறந்து விட சொன்னாங்க…”என்றாள் ஆற்றாமையாக“நான் செய்யாம வேற யார் செய்வாங்க… ஏன் எனக்கு உன்னிடம் கேலி பேச உரிமை இல்லையா?”என்று கேட்டவன் அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைக் காணவும் உடனடியாக சமாளித்தான்.

“இப்போ உனக்கு பாட்டு கிளாஸ்க்கு நான் தானே ஏற்பாடு செஞ்சு இருக்கேன்…நான் தான் உன்னை கூட்டிட்டு போகவும் வந்து இருக்கேன்…கார் கதவை திறந்து விடுறதால குறைஞ்சு போய்டுவேனா என்ன”அவளை சமாதானம் செய்ய முயற்சித்தான் மூர்த்தி.

அவளோ சமாதானம் ஆக மறுத்து தொடர்ந்து அழுகையில் கரைய அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.அவள் முகத்தை மூடிக் கொண்டு குனிந்து கொண்டே அழுது கொண்டு இருக்க,காரின் கண்ணாடிகளை மேலே ஏற்றி விட்டு காரில் சிடி பிளேயரை ஓட விட்டான்.அதில் காட்டு கத்து கத்தியபடி ஏதோ ஒரு பாப் பாடல் ஓட,அழுகையை நிறுத்தி விட்டு அரண்டு போய் திருதிருவென முழித்தாள் வானதி.

அமைதியான சூழலில் திடீரென்று பாடல் அலறவும் அழுகையை நிறுத்தி விட்டு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.அந்தப் பார்வையில் விழுந்து விழுந்து சிரித்து வைத்தான் சம்ஹார மூர்த்தி.அவள் நிதானத்துக்கு வந்ததும் பாடலை நிறுத்தியவன் அவளை மெல்ல நெருங்கி அமர்ந்தான்.

அவன் நெருங்கி அமரவும்,தன்னிச்சையாக பின்னால் நகர்ந்தவள் கார் கதவு தடுக்க,மீண்டும் பல்லி போல ஒட்டிக் கொண்டாள்.

அவளின் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்து சூள் கொட்டி தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டான் சம்ஹார மூர்த்தி.

“ம்ச்…என்ன இது..எதுக்கு இந்த பயம்?…அப்படி என்ன செஞ்சிடுவேன் நான் உன்னை…இதுவரை உன் மேல என் விரல் நகமாவது பட்டு இருக்கா… ‘இப்போதைக்கு’…நன்றாக கவனி இப்போதைக்கு மட்டும் எனக்குள் அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை.

எல்லாத்துக்கும் அழுதா எப்படி வானதி? நீ இன்னும் நிறைய இடத்திற்கு போக வேண்டி இருக்கும் பொழுது உன்னுடைய உயரம் ஜாஸ்தி ஆகும்.அப்போ இப்படித் தான் அழுதுகிட்டே இருப்பியா?”அவன் பொடி வைத்து பேச,அவளோ கசப்பாக புன்னகைத்தாள்.

“சுந்தரேசன் அய்யா மட்டும் இல்லைன்னா…எனக்கு அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லை…அதுதான் என்னுடைய நிலைமை…”

“நாளைக்கு நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம் வானதி”

“ம்ச்…மந்திரக்கோலை வச்சு மேஜிக் செய்யுற மாதிரி ஒரே நாளில் யாருடைய வாழ்க்கையும் மாற வாய்ப்பே இல்லை…நீங்க பேச்சை மாத்தாதீங்க…இனி என்னை காலேஜில் இருந்து கூட்டிக்கிட்டு போக நீங்க வர வேண்டாம்.”

“ஏன்…”அவன் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம் தெரிந்தது அவளுக்கு.

“இப்படி கோபமா கேட்டா எப்படி சொல்லுறதாம்?”வாயுக்குள் முணுமுணுத்தாள்.

“சரி…கோபமா கேட்கலை…சாதாரணமா கேட்கிறேன் சொல்லு”என்று சொன்னவன் கைகளைக் கட்டிக் கொண்டு அவள் முகத்தில் பார்வையை பதிக்க,அவளால் நிமிர்ந்து அவனைப் பார்க்க முடியாமல் போனது.

“நீங்க ரொம்ப பெரியவர்…பணத்தில்,பதவியில…இப்படி எல்லாத்திலயும்…நா..நான் ஒரு அனாதை…எப்பேர்பட்ட உயரத்தில் இருக்கும் நீங்க..எனக்கு ஏன் டிரைவர் வேலை பார்க்கணும்…பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க…எனக்கு சங்கடமா இருக்கு…

அதனால நாளையில் இருந்து உங்க டிரைவர் கூடவே நான் வர்றேன்”மனதில் நினைத்ததை எல்லாம் அவன் முகம் பாராமல் கடகடவென்று ஒப்பித்தவள் அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்ற ஆவலோடு அவன் முகத்தைப் பார்க்க,இயல்பாக இருந்த அவன் முகத்திலிருந்து அவளால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“காலையிலே உனக்கு சொன்னது தான் இப்பவும் சொல்றேன் வானதி.இனி சில விஷயங்களை நீ பழகித் தான் ஆகணும்.உனக்கு பிடிக்குதோ…பிடிக்கலையோ…தினமும் உன்னைக் கூட்டிக்கொண்டு போக நான் தான் வருவேன்.யார் என்ன சொன்னாலும் சரி…நினைத்தாலும் சரி”என்று தீவிரமான முகத்துடன் பேசிக் கொண்டே போனவன் அவளது அதிர்ந்த முகத்தைக் கண்டதும் சட்டென்று பேச்சை மாற்றினான்.

“அதென்ன…ஆரம்பத்தில் இருந்தே…நீங்க ரொம்ப பெரியவர்னு சொல்லிகிட்டே இருக்க…நான் உன்னை விட ஒரு ஐந்து வயது பெரியவனாக இருப்பேன்.அதுக்குப் போய் எப்பப்பாரு என்னை ஏதோ தொண்டு கிழம் ரேஞ்சுக்கு பேசி வைக்கிற நீ?”என்று பேசி அவன் பேச்சை மாற்ற முயல,

‘இவனிடம் பேசி பயனில்லை…வேறு ஏதாவது வழியைத் தான் யோசிக்க வேண்டும்’ என்று நினைத்தவள் அந்தப் பேச்சை அப்படியே விட்டு விட, அவனும் வானதி சமாதானமாகி விட்டதாக எண்ணி காரை எடுத்துக் கொண்டு சாரதாவின் அப்பார்ட்மெண்ட்டில் இறக்கி விட்டான்.

மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை அவளுக்கு வகுப்பு இருந்ததால் அவளை அங்கே இறக்கி விட்டதும் சம்ஹார மூர்த்தி தன்னுடைய வேலைகளை கவனிக்க கிளம்பி விட்டான். ‘மீண்டும் ஏழு மணிக்கு அவனே வந்து அவளை போனில் அழைத்த பிறகு கீழே இறங்கி வந்து காத்திருந்தால் போதும்’ என்று சொன்னவன் ஒருமுறைக்கு இருமுறையாக சாரதாவிடமும் அவளை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி எச்சரித்து விட்டே சென்றான்.

வானதிக்கு முறையாக சங்கீதம் பயின்று கொள்வதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை.அதற்கு காரணம் அவளால் அழகாக பாட முடியுமே தவிர,சங்கீதம் குறித்த ஞானம் அவளிடம் துளியும் இல்லை.

‘எப்பொழுது…எந்த நொடியில் சாரதா பல்லவி,அனுபல்லவி,சரணம் என்றெல்லாம் சொல்லி தன்னை கலங்கடிக்கப் போகிறாரோ என்று பயந்து கொண்டு இருந்தவள் அந்த பயத்திலேயே சீக்கிரம் கிளம்ப முனைந்தாள்.

ஆனால் வானதி இருந்த மனநிலையில் சம்ஹார மூர்த்தி கிளம்பும் முன் செய்த எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தவள் ஆறரை மணிக்கே கிளம்பி செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சாரதா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவன் வருவதற்கு முன் கிளம்பி சென்றுவிட,பயந்து போன சாரதா உடனடியாக சம்ஹார மூர்த்திக்கு தகவலை போனில் தெரிவித்தார்.

வானதிக்கு அப்பொழுது மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான். ‘இனி சம்ஹார மூர்த்தி தனக்கு ஒரு டிரைவரைப் போல இருக்கக் கூடாது’ என்பது மட்டுமே.ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு சுழலில் மாட்டிக் கொண்டதைப் போல, தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கூட அவன் ஆட்டுவிப்பது போல அவளுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.இப்படி அவனுக்காக காத்திருக்காமல் அவன் வருவதற்கு முன்னால் தானாகவே தனித்துக் கிளம்பி விட்டால் தன்னுடைய விருப்பமின்மையை அவன் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்வான் என்று எண்ணியவள் கடகடவென்று அந்த சாலையை கடந்து எதிரில் உள்ள பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இரண்டடி நடந்து வந்து இருப்பாள்…லேசான தூறல் போட்டு வானம் ஒரு முறை இடியுடன் மின்னலையும் வெளிப்படுத்தி அந்த இடத்தையே ஒரு நொடி பகல் போல மாற்றி பின் இயல்பானது.அந்த ஒரு நொடி வானதியின் கண்களுக்கு அவளுக்கு எதிரில் இருந்த சிவப்பு நிற கார் கண்களில் பட்டது.யாரையோ பார்த்ததும் அவசரமாக ஒரு உருவம் காருக்குள் வேகமாக ஒளிந்து கொள்வதும் தெரிந்தது.

‘யாரோ யாரையோ பார்த்து மறைந்து கொண்டால் எனக்கென்ன’ என்று எண்ணியவள் எப்பொழுதும் போல மிதமான வேகத்தில் ரோட்டில் நடந்து சென்றாள்.

சட்டென்று மழையின் வேகம் கொஞ்சம் அதிகரிக்கவும் நடந்து வந்த பாதையின் அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி வேகமாக நடந்தவள் அங்கே சற்று நேரம் ஒதுங்கி நின்று கொண்டாள்.

பளிச்சென கண்களை குருடாக்கும் மின்னல்…அத்தோடு சேர்த்து அதே சிவப்பு நிறக் கார்…

‘அந்தக் கார் இப்பொழுது கொஞ்ச நேரம் முன்பு எதிர் ரோட்டில் தானே நின்றது?’என்ற கேள்வி எழுந்ததும் உடனே தன்னுடைய மனசாட்சியை அதட்டினாள்.

‘ஏதாவது வேலையா வந்து இருப்பாங்க… உனக்கு எதைப் பார்த்தாலும் பயம் தான்’என்று சொன்னவள் மழை கொஞ்சம் குறையவும் மீண்டும் எதிர்சாலையை கடந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இருட்டி விட்ட இரவுப் பொழுதில்,மழையும் பெய்யவே ஊரே அமைதியுடன் இருக்க, அந்த நேரத்தில் ஒரு காரின் ஓசை மட்டும் அவளுக்குப் பின்னால் கேட்பதை அவளால் துல்லியமாக உணர முடிந்தது.ஆனால் காரின் ஹெட்லைட் வெளிச்சம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

சில நிமிடங்கள் கடந்த பிறகும் கூட அதே நிலை தொடர,அடுத்த மின்னலின் பொழுது பயத்துடன் திரும்பிப் பார்த்தவளின் உடல் வெடவெடக்கத் தொடங்கியது.அதற்குக் காரணம் நிச்சயம் குளிர் இல்லை. ‘அதே சிவப்புக் கார்’

நடையின் வேகத்தை அவள் துரிதப்படுத்த காரின் வேகமும் அதிகமானது.காரின் ஹெட்லைட்டோ,உள் விளக்குகளோ எதுவும் எரியாததால் உள்ளே இருப்பது யார் என்று அவளுக்குத் தெரியவில்லை.

‘அவர் பேச்சை மீறி தனியே வந்து இருக்கக் கூடாதோ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அந்த கார் மெல்ல அவளை நெருங்கியது.

தீ தீண்டும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here