Theendatha Thee Neeye Tamil Novel
பேய் துரத்துவது போல ரோட்டில் ஓடிக் கொண்டிருந்தாள் வானதி.அந்த கார் இன்னமும் அவளை விடாது துரத்திக் கொண்டு இருந்தது.அவள் பஸ் ஏற வேண்டிய பஸ் ஸ்டாண்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அங்கேயும் நொடி கூட நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஆங்காங்கே சில கடைகள் தென்பட்டாலும் அங்கே போய் உதவி கேட்க வேண்டும் என்ற எண்ணமோ, கத்தி கூப்பாடு போடலாம் என்ற எண்ணமோ அவளுக்கு தோன்றவில்லை.அந்தக் கார்க்காரனிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பது மட்டுமே அவளது நினைவாக இருக்க எங்கேயும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாள்.அது தான் அவள் செய்த தவறு…

அந்தக் கார்காரனின் மனநிலை என்ன என்பதும் அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.அவள் நின்றால் அவனும் நின்றான்.அவள் வேகமாக ஓடினால் ,அவனும் பின்னாலேயே வேகமாக வந்தான்.ஆனால் காரை விட்டு இறங்கவில்லை.

‘ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் தன்னை ஏதாவது செய்வானோ?’என்று அஞ்சி நடுங்கியவளாக ஓடிக் கொண்டே இருந்தாள்.

வெகுநேரம் ஓடிய பிறகு களைத்துப் போய்,கால்கள் தடுமாறி அப்படியே தரையோடு தரையாக விழுந்து விட்டாள் வானதி.மதியம் உணவு இடைவெளியின் போது சாப்பிட்டது.அதன்பிறகு நேராக சம்ஹார மூர்த்தி இங்கே அழைத்துக் கொண்டு வந்து விட ஓடுவதற்கு தேவையான சக்தி இல்லாததாலோ அல்லது பயத்தினாலோ அவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு மயக்கம் வருவது போல இருந்தது.

இது மயங்குவதற்கு ஏற்ற தருணம் இல்லை என்பது மனதுக்கு புரிந்தாலும் உடல் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை.கலவரத்தோடு சுற்றிலும் பார்வையை பதித்தவள் இருபுறமும் வெறும் மரங்களே இருப்பதை பார்த்து அரண்டு போனாள்.

மாலையில் சம்ஹார மூர்த்தியோடு வந்த பொழுது இதமாக இருந்த அதே சாலை,இப்பொழுது அந்த இருட்டு வேளையில் அரக்கத்தனமாக தோன்றி அவளை மிரட்டியது.கீழே விழுந்ததில் காலில் எங்கோ அவளுக்கு அடிபட்டு விட ,மீண்டும் எழுந்து ஓட முடியாமல் பயத்துடன் அப்படியே அமர்ந்து இருந்தாள் வானதி.



கொட்டும் மழை…இரவு நேரம்…ஆளில்லா பிரதேசம்…அவளுக்கு எதிரில் அதே சிவப்பு நிற கார்.

விர் விர் என்ற சத்தத்துடன் ஆக்சிலேட்டரை முறுக்கியபடி அந்தக் கார் எந்த நொடியும் அவள் மீது பாயத் தயாராக இருந்தது.

‘யார் இது? எதற்காக என்னைத் துரத்துகிறான்?என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்வானோ?ஒ…ஒருவேளை என்னைக் கடத்திக் கொண்டு போய் ஏதேனும் கும்பலிடம் விற்று விடுவானோ?’அவ்வபொழுது நாளேடுகளில் படித்த நிகழ்வுகள் அனைத்தும் அவள் கண் முன்னே வந்து போனது.

வானதியின் நெஞ்சம் அளவுக்கு அதிகமான வேகத்துடன் பட் பட்டென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.

கரண்ட் இல்லாததால் அவ்வபொழுது பளிச்சிடும் மின்னலின் உபயத்தினால் மட்டுமே அந்தக் காரை அவளால் பார்க்க முடிந்தது.சில நொடிகள் இடைவெளி விட்டு தெறித்த மின்னல்கள் தொடர்ந்து நான்கைந்து முறை மின்ன ஒவ்வொரு மின்னலுக்கும் அந்த காருக்கும் தனக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பதை அவளால் உணர முடிந்தது.

‘இவ்வளவு தூரம் தன்னை துரத்தி வந்த கார் இப்பொழுது பின்னால் போவது ஏன்?’காரணம் புரியாமல் அவள் விழிக்க அந்த வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்கி வேகம் கூட்டுவது அவளுக்கு தெளிவாக கேட்டது.அந்த காருக்கும் அவளுக்கும் இருபதடி தூரம் இருக்கும் என்பதை ஓரளவிற்கு கணிக்க முடிந்தவளால் அடுத்து அவன் என்ன திட்டமிடுகிறான் என்பதை ஊகிக்க முடியவில்லை.

‘என்ன செய்யப் போகிறான்…மேலே ஏத்திக் கொல்லப் போகிறானோ?கடவுளே என்னைக் காப்பாற்று…சுந்தரேசன் அய்யாவை இனியொரு முறை பார்க்க முடியுமா…இதோ காரை எடுத்து விட்டான்.வேகமாக வருகிறது…என் மீது மோதப் போகிறது…அவ்வளவு தான்…முடிந்து விட்டது என் வாழ்க்கை’என்று எண்ணியபடி கண்களை இறுக மூடிக் கொண்டாள் வானதி.

சற்று நேரம் அந்த இடத்தில் அமைதி மட்டுமே நிலவ கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள் வானதி…அந்த கார் அவளுக்கு பத்தடி இடைவெளியில் நின்று கொண்டு இருந்தது. ‘அவ்வளவு வேகமாக வந்து இடையில் ஏன் நிறுத்த வேண்டும்’என்று அவள் யோசிக்கும் பொழுதே அந்த காரின் ஹெட்லைட் பளீரென்று கண்ணை கூச வைக்கும் ஒளியைக் கக்கியது.

அதுநேரம் வரை இருளுக்கு ஏற்ப தன்னுடைய கண்களை பழக்கி இருந்த வானதிக்கு இந்த தீடீர் வெளிச்சம் கண்களை கூச செய்ய அவளால் எதிரில் இருந்த காரையோ,அதை ஓட்டுபவனையோ தெளிவாக பார்க்கவே முடியவில்லை.கண்களை மூடி அந்த வெளிச்சத்திற்கு கண்களை பழக்க முயன்ற பொழுது மீண்டும் அந்த கார் அவளை இடிக்க வேகமாக வந்தது.

அவளுக்கும் காருக்கும் இடையில் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருக்கும் பொழுது அந்த கார் மீண்டும் ப்ரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
வானதிக்கு ஒன்றுமே புரியவில்லை.அவள் மீது காரை ஏற்ற வருவதும்,பின் ரிவர்ஸ் எடுத்து மீண்டும் அவளை பயமுறுத்துவதுமாக இருந்த அந்த கார்க்காரனின் நோக்கம் என்ன என்று அவளுக்கு புரியாவிட்டாலும் அதற்கு மேலும் அப்படியே இருக்காமல் அவன் பின்னால் ரிவர்ஸ் எடுத்த நேரம், அடிப்பட்ட காலுடன் ஓட முடியாமல் தட்டுத்தடுமாறி ஓட ஆரம்பித்தாள்.
ஓடிக் கொண்டே இருக்கும் பொழுது அவள் மனதில் ஒரு விஷயம் தோன்ற ஆரம்பித்தது.

‘ஒருவேளை இவன் ஒரு சைக்கோவோ…உடலில் ரத்தம் வழிந்து கொண்டே காயத்துடன் ஓட முடியாமல் பயத்துடன் நான் ஓடுவதைக் கண்டு ரசிக்கிறானோ’என்ற எண்ணம் அவளுக்கு தோன்றிய வேகத்தில் ஓடிக் கொண்டே அந்தக் காரை திரும்பிப் பார்க்க இருளடைந்த அந்த கார் அவளுக்கு திகிலை ஊட்டியதே தவிர அதிலிருந்து அவளால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.



‘எவ்வளவு தூரம் தான் ஓடுவது…யாராவது வந்து தன்னை காப்பாற்ற மாட்டார்களா’ என்று தவிக்க ஆரம்பித்தாள் வானதி.தூரத்தில் எங்கோ சைரன் ஒலி கேட்பது அவள் காதில் விழுந்தாலும் அது அவளை கொஞ்சமும் ஈர்க்கவில்லை.

‘ஹ… நானே ஒரு அனாதை…என்னைக் காப்பாத்த எந்த போலீஸ் வரப் போகுது…அந்த சைரன் ஏதாவது ஆம்புலன்ஸ் வண்டியோடதா இருக்கும்’என்று எண்ணியவள் மீண்டும் ஓட சற்று தொலைவில் ஏதேதோ வாகனங்கள் கூட்டமாக வருவது அவளுக்கு தெரிந்தது.

எப்படியும் ஒரு நாலு அல்லது ஐந்து கார் இருக்கும் என்பது அந்த காரின் லைட் வெளிச்சத்தை வைத்துக் கணித்தாள்.அந்த வாகனங்களிடம் சென்று உதவி கேட்கலாம் என்ற எண்ணத்தில் அதை நோக்கி ஓடியவள் அந்த காரில் இருந்து ஒலித்த துப்பாக்கி சத்தத்தில் அரண்டு போய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.

‘இந்தப் பக்கம் கார்க்காரன்…அந்தப் பக்கம் துப்பாக்கி…இதில் யாரிடம் சிக்கி எப்படி என்னுடைய உயிர் போகப் போகிறதோ’ என்று அவள் பதற அதற்கு தேவையே இன்றி அந்தப் பக்கம் வந்தக் காரில் இருந்து துப்பாக்கியை ஏந்தியபடி இறங்கியவன் சம்ஹார மூர்த்தியே தான்.

அதுநேரம் வரை ஒடி ஒடி களைத்து இருந்தவள் சம்ஹார மூர்த்தியைப் பார்த்ததும் முகத்தில் நிம்மதி பூக்க இனி ஓட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்தவளாய் அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து விட்டாள்.

கைகளில் துப்பாக்கியுடன் வந்த சம்ஹார மூர்த்தியும் அவனது ஆட்களும் சரமாரியாக துப்பாக்கியால் சுட அந்த சிவப்பு நிறக் கார் நொடி கூட தாமதிக்காமல் பறந்து விட,தன்னுடைய ஆட்களை அனுப்பி அந்தக் கார்க்காரனை பின் தொடர செய்தவன் வேகமாக வானதியின் புறம் வந்தான்.

அரை மணி நேரமாக மழையில் நனைந்ததாலோ அல்லது பயத்திலோ குளிரில் உடல் வெடவெடக்க நனைந்த கோழி போல இருந்தவளை மரத்த பார்வையுடன் உடன் அழைத்து வந்திருந்த டாக்டர்களுடன் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பியவன் தன்னுடைய காரில் தொடர்ந்து வர, ஒரு வார்த்தை கூட அவளைப் பார்த்து பேச விரும்பாத அவனுடைய முகச் சுளிப்பு அவளுக்கு கலக்கத்தைக் கொடுத்தது.

ஆம்புலன்சில் ஏறியதும் டாக்டர்களும் நர்சும் தன்னுடைய பணியை செவ்வனே செய்ய அவளுக்குத் தான் என்னவோ போலிருந்தது.அது எதனால் என்று அவளுக்குப் புரியவில்லை.வாழ்க்கையில் முதன்முதலாக அவளுக்கு ஏற்பட்ட இந்த சம்பவமா? அல்லது துப்பாக்கி சூட்டை நேரடியாக பார்த்த அதிர்ச்சியா? அல்லது சம்ஹார மூர்த்தியின் மௌனமா? இனம் காண முடியவில்லை அவளால்.

‘அவர் கோபமாக இரண்டு வார்த்தை திட்டி இருந்தால் கூட பரவாயில்லை…ஆனால் இந்த மௌனம்… அவர் அவ்வளவு தூரம் சொல்லியும் நான் இப்படி செய்தது தவறு தானே’அவனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முனைந்தது அவள் மனம்.

அவள் மருத்துவமனைக்கு வரும் முன்னரே எல்லாம் தயார் நிலையில் இருக்க, மருத்துவமனை ஊழியர்கள் பறந்து பறந்து வேலை செய்தனர்.வானதிக்கு என்னவோ போல இருந்தது.காலில் அடிப்பட்டு இருப்பது உண்மை தான்.ஆனால் அதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் தேவை தானா என்று தோன்றத் தொடங்கியது அவளுக்கு.

ஆம்புலன்சில் வரும் பொழுதே டாக்டர் முதலுதவி செய்திருக்க தனி அறையில் வைத்து அவளுக்கு தொடர்ந்து மருத்துவம் பார்க்கப்பட்டது.அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அவளது உடலை முழு பரிசோதனை செய்ய சொல்லி சம்ஹார மூர்த்தி உத்தரவிட்டு இருப்பதாக கூறி அவளுக்கு எல்லா விதமான டெஸ்ட்களும் எடுத்தனர்.

ப்ளட் டெஸ்ட்,எக்ஸ்ரே,ஈசிஜி…இன்னும் அவளுக்கு புரியாத என்னென்னவோ டெஸ்ட்கள் அவளுக்கு எடுக்கப்பட அவர்களை தடுக்கும் வழி அறியாது விழித்தாள் வானதி.

ஒருவழியாக அவர்கள் ஓய்ந்ததும் அறைக்குள் பதைபதைப்புடன் நுழைந்தார் சுந்தரேசன்.அவரைப் பார்த்ததும் அதுநேரம் வரை இருந்த நிலை மாறி ,தட்டுத்தடுமாறி எழுந்து அவரது தோளில் சாய்ந்து அழத் தொடங்கினாள் வானதி.

சுந்தரேசன் அய்யாவுக்கும் அதே அளவு பயம் இருந்தாலும் இப்பொழுது தான் அவளை தேற்ற வேண்டும் என்பதை உணர்ந்து மெல்ல அவளின் தலையை வருடிக் கொடுத்தார்.



“ஒண்ணுமில்லை வானதி…அதுதான் எல்லாம் சரியாகிடுச்சே…இன்னும் என்ன அழுகை?”

“இல்லை அய்யா…அந்த..அந்த கார்…சிவப்பு கார்..என்னை து…துரத்தி…”

“ம்ச்…வேண்டாம் வானதி…விட்டுடு…அதுதான் அந்த தம்பி வந்து உன்னைக் காப்பாத்திட்டாரே…”

“ஒருவேளை அவர் வராம போய் இருந்தா என்னோட நிலைமை…”
“அதெப்படி அவர் வராம இருப்பார்…உன்னை பாட்டு கிளாஸில் விட்டதுக்கு அப்புறம் நேரா ஆசிரமத்துக்குத் தான் வந்தார்.உன்னைப் பத்தித் தான் பேசிக்கிட்டு இருந்தோம்.நீ ஆசிரமத்துக்கு எப்போ வந்த…உன்னோட பழக்க வழக்கம் எல்லாத்தை பத்தியும் பேசினோம்.அப்போ சாரதா டீச்சர் கிட்டே இருந்து போன் வரவும் பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தார்.”

“அப்படியா..அய்யா”அவளுடைய குரல் உள்ளே போய் இருந்தது.தேவை இல்லாமல் இவள் தானே அவன் பேச்சை மீறி நடந்து வம்பை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

‘ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணித் தானே அவர் என்னை பாதுகாக்க முயற்சித்தார்…’என்று தன்னுடைய தவறுக்கு உள்ளுக்குள் வருந்தினாள்.

‘அவரை நேரில் பார்க்கும் பொழுது மன்னிப்பு கேட்க வேண்டும்’என்று எண்ணிக் கொண்டாள்.

அதன்பிறகு சம்ஹார மூர்த்தியின் வருகையை வெகுவாக எதிர்பார்த்தாள் வானதி.ஆனால் அன்று முழுக்க அவன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அதன்பிறகு அவள் மருத்துவமனையிலேயே தங்க வேண்டி இருந்ததால் சுந்தரேசன் அய்யா அவளுக்குத் துணை இருக்க, அப்பொழுதும் கூட அவன் அவளைப் பார்க்கவே வரவில்லை.அது அவளுடைய மனதுக்கு உறுத்தலாகவே இருந்தது.

சின்ன காயமாக இருந்தாலும் வானதியை உடனே அனுப்பாமல் நன்கு குணமான பிறகு தான் அவளை அனுப்ப வேண்டும் என்று சம்ஹார மூர்த்தி கேட்டுக் கொண்டதால் அவள் தொடர்ந்து ஐந்து நாட்கள் அங்கே தங்க வைக்கப்பட்டு இருக்க,கடைசி நாள் அவள் டிஸ்சார்ஜ் ஆகும் பொழுது தான் சம்ஹார மூர்த்தி அங்கே வந்தான்.

வந்தவனின் பார்வை மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை. சுந்தரேசன் அய்யாவுடன் பேசியபடி அவன் முன்னால் சென்று விட வானதி அவர்கள் பின்னோடு சென்றாள்.

ஐந்து நாட்களாக அவனை நேரில் பார்க்கும் பொழுது அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு புரிந்து போனது அது அத்தனை சுலபமானது இல்லை என்று…

அவளுடைய முகம் பார்த்து அவன் பேச மறுக்கும் பொழுதே அவனது ஒதுக்கம் அவளுக்கு புரிந்து விட எப்படி பேசி சமாளிப்பது என்று யோசித்தவண்ணம் இருந்தாள் வானதி.

முகம் இரும்பென இறுகி கிடக்க உணர்ச்சிகள் தொலைத்து பாறை போல இருந்த முகத்தை பார்த்தவளுக்கு பேச்சே சுத்தமாக வரவில்லை என்பது தான் நிஜம்.



காரில் ஏறிய பிறகும் அதே மௌனம் தொடர,எதேச்சையாக விழி உயர்த்தி பார்த்தவள் கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தில் அரண்டே போனாள்.அவனது பேருக்கு ஏற்ப சம்ஹார மூர்த்தியாக காட்சி அளித்தான்.கண்களில் அப்படி ஒரு ரௌத்திரம்…இவரிடம் தனியாக சிக்கினால் தொலைந்தோம் என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்க,அவளது முகத்தில் இருந்தே அவளது எண்ணத்தை கணித்தவன் போல கார் ஆசிரமத்தை அடைந்ததும் சுந்தரேசன் அய்யாவின் புறம் திரும்பி பேசினான் சம்ஹார மூர்த்தி.

“வானதி கிட்டே கொஞ்சம் பேசணும்…நீங்க அனுமதி கொடுத்தா…”
“அதற்கென்ன தம்பி…நீங்க இரண்டு பேரும் பொறுமையா பேசிட்டு வாங்க…நான் உள்ளே போறேன்”என்று சொல்லி விட்டு அவர் இறங்கி சென்று விட காரில் இப்பொழுது வானதியும் சம்ஹார மூர்த்தியும் மட்டுமாக தனித்து இருந்தனர்.

‘எந்த நேரம் எப்படி பேசப் போகிறாரோ தெரியலையே….இந்த அய்யா வேற இவர் கிட்டே இப்படி கோர்த்து விட்டு போறாரே’ பயந்து போய் காரின் மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்து இருந்தாள் வானதி.

தீ தீண்டும்…

Facebook Comments Box

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here