Theendatha Thee Neeye Tamil Novels 8

4
4658

அத்தியாயம் 8

Theendatha Thee Neeye Tamil Novels
நரசிம்ம அவதாரம் போல அடக்க முடியாத ஆத்திரத்துடன் அமர்ந்து இருந்தவனை எப்படி அணுகுவது என்றே அவளுக்குத் தெரியவில்லை.

‘பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு இப்படி அமைதியாக இருந்தால் என்ன செய்ய?’என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

சுந்தரேசன் அய்யா வெளியே கிளம்பிய பிறகு கூட அவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு மனமில்லை.பயத்தில் ஒன்றோடு ஒன்று கோர்த்து கிடந்த விரல்களில் பார்வையை செலுத்திக் கொண்டு இருக்க ஏதோ சத்தம் கேட்டு பார்வையை உயர்த்தியவள் வெடவெடத்துப் போனாள்.
காரில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த சம்ஹார மூர்த்தி பின் கதவை திறந்து கொண்டு அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.

‘அருகில் அமர்ந்ததும் என்ன செய்வான்? கை நீட்டி அடித்து விடுவானோ?’என்று அவள் திகிலோடு அமர்ந்து இருக்க அவளின் அருகில் வந்து அமர்ந்தவன் கொஞ்ச நேரம் கண்களை இறுக மூடி அப்படியே அமர்ந்து இருந்தான்.

விறைப்புடன் இருந்த அவனது தோள்களும்,இறுக மூடிய அவனது விரல்களும்,ஆத்திரத்தில் துடித்துக் கொண்டிருந்த அவனது கன்னத்து தசைகளையும் பார்த்து அவன் கோபத்தை அடக்குவது புரிந்தது அவளுக்கு.தானாகவே சென்று அவனிடம் பேசினால் அடித்து விடுவானோ என்று அஞ்சியவள் அவனே பேசட்டும் என்று நினைத்தவளாக அப்படியே அமர்ந்து இருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து கண்ணைத் திறந்தவன் ஒரே ஒரு முறை அவளை உஷ்ணமாக பார்த்துவிட்டு வேகமாக மறுபுறம் திரும்பி அமர்ந்து கொண்டான்.

‘என்னுடைய முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிக்காத அளவுக்கு வெறுப்பு போல’என்று எண்ணியவள் அடுத்து வந்த அவனது கேள்வியில் நெஞ்சம் அதிர்ந்தாள்.

“ஏன்டி இப்படி செஞ்ச?”

“டீ யா?”முகத்தை சுளித்தாள் அவள்.

“இப்போ அது ரொம்ப முக்கியம்…நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”அதட்டினான் அவன்.

“…”

“கேட்கிறேன் இல்ல…பதில் சொல்லுடி”

“அப்படி கூப்பிடாதீங்க…எனக்குப் பிடிக்கலை”

“உன்னோட வசதியைப் பத்தி எல்லாம் நான் கவலைப்பட முடியாது…எனக்கு எப்படி தோணுதோ அப்படித் தான் கூப்பிடுவேன்.பேச்சை மாத்தாம ஒழுங்கா பதில் சொல்லு.உன்னை நானே வந்து கூட்டிட்டு போறேன்னு தானே சொல்லி இருந்தேன்.அப்புறம் எதுக்கு தனியா கிளம்பின?”கண்கள் இரண்டும் ரத்தமென சிவந்தபடி கேள்வி கேட்டவனை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்கு புரியவில்லை.

‘அன்றைக்கு மனதில் நினைத்ததை சொல்லி விட வேண்டும்…இல்லையென்றால் எனக்கு மூச்சு மூட்டத் தொடங்கி விடும் இவரின் அதிகாரத்தில்’ என்று எண்ணியவள் கண்களை இறுக மூடிக் கொண்டு ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்ததை எல்லாம் ஒப்பிப்பதை போல கடகடவென்று சொல்லி விட்டாள்.

“நீங்க எல்லாமே உங்களோட விருப்பத்துக்கு நடக்கணும்ன்னு நினைக்கறீங்க…அது சின்ன விஷயமோ பெரிய விஷயமோ என்னுடைய உணர்வுகளுக்கு அங்கே மதிப்பு இல்லை…. நீங்க கேட்கலாம் அனாதை உனக்கு இவ்வளவு ரோஷமான்னு… ஏன் இருக்கக் கூடாதா? என்னுடைய அப்பாவும்,அம்மாவும் அந்த விபத்தில் இறந்து போகலைனா நானும் இந்நேரம் மத்த எல்லாரையும் போல ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்ந்து இருப்பேன் இல்லையா?”

பேசி முடித்து விட்டு ஓரப்பார்வையால் அவன் புறம் பார்க்க அவனது இறுகிய தோற்றத்தில் இருந்து அவன் என்ன நினைக்கிறான் என்பது அவளுக்கு புரியவில்லை.

‘நான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாயிற்று.இனி அவன் என்ன சொல்கிறானோ சொல்லட்டும்…’என்று எண்ணியவள் காரில் அப்படியே அமர்ந்து இருந்தவள் அவனுடைய வருத்தம் நிறைந்த குரலில் வியப்புக்கு ஆளானாள்.

“சாரி வானதி…நான் உன்னை ரொம்பவே படுத்தி இருக்கேன் இல்லையா?இதுவரைக்கும் நான் அந்த விஷயத்தை யோசிக்கவே இல்லை.உன்னை பத்திரமா பாத்துக்கணும்ன்னு மட்டும் தான் யோசிச்சேன். இனி உன்னோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து நான் நடக்கிறேன்”என்று அவன் சட்டென்று இறங்கிப் பேச அவளால் அந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை.

அவளைப் பொறுத்தவரையும் சரி,அவனைப் பற்றி கேள்விப்பட்ட விதத்திலும் சரி அவன் ஒரு வணங்கா முடி…யாருக்காகவும் எதற்காகவும் எப்பொழுது தன்னுடைய முடிவுகளை அவன் மாற்றிக் கொண்டதே இல்லை..அப்படி இருக்கும் பொழுது அவனது இந்த செயல் அவளுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தியது.

‘யாருக்கும் அடி பணியாதவன் தன்னிடம் மட்டும் இறங்கி வந்து விட்டுக் கொடுப்பதேன்?’என்ற கேள்வி அவள் மண்டையை குடைந்தாலும் அதை எல்லாம் யோசிக்க அவள் தயாராகவே இல்லை.
பின்னே வேறு என்ன செய்வது? ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் எப்பொழுது மண்டியிடுவான் என்று அவள் யோசிக்கத் தொடங்கினால் அவளின் புத்தி தான் எதையெதையோ யோசித்து புல் மேயப் போய் விடுகிறதே…அதனால் எதற்கு வம்பு என்று அவள் யோசிக்காமல் அமைதியாகி விட சம்ஹார மூர்த்தி தொடர்ந்து பேசினான்.

“இனி உன் விருப்பப்படி எல்லாமே நடக்கும்.ஆனா தினமும் உன்னைக் கூட்டிக் கொண்டு காலேஜில் விடுவதும்,பாட்டு கிளாசுக்கு அழைத்துப் போவதும்,மறுபடியும் ஆசிரமத்தில் பத்திரமாக சேர்க்கும் வேலையை மட்டும் நான் தான் செய்வேன்…அது …உன்னுடைய நல்லதுக்குத் தான்.அதை மட்டும் நீ மறுக்கக் கூடாது…”என்று கெஞ்ச அவளுள் ஏதோவொன்று உருகியது.

சரி என்பதாக அவள் தலை அசைக்க அந்த ஒற்றை செய்கையில் அவன் முகம் பூரித்துப் போனது.

“ஏன் வானதி உனக்காக நான் இவ்வளவு தூரம் செய்றேனே..அதுக்கு என்ன காரணம்ன்னு உனக்கு எதுவும் தோணுதா? யோசிச்சு பார்த்தியா?”அவள் கண்களை ஊடுருவியபடி அவன் கேட்க அவள் தலை தானாக தாழ்ந்து இல்லை என்பதாக அசைந்தது.

“ஹ்ம்ம்…இனி தினமும் ராத்திரி சாப்பிட்டு முடிச்சதும் குறட்டை விட்டு தூங்காம என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சு பாரு…இல்லைனா என்னோட பாடு திண்டாட்டம் தான்”என்று புதிர் போட்டவன் காரில் இருந்து கீழிறங்கி அவளை பத்திரமாக உள்ளே அனுப்பி வைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்று விட அவன் கார் கண்ணில் இருந்து மறையும் வரை…ஒரு ஓரத்தில் மறைந்து நின்று அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.

அடுத்த நாள் முதல் எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு அவனே காலையும்,மாலையும் அவளை பொறுப்பாக அழைத்து சென்றான்.அவ்வபொழுது அவனின் பேச்சுக்கள் புதிராகவே இருக்கும் வானதிக்கு…விளக்கம் கேட்டாலோ அவன் வாயை திறக்கவே மாட்டான்.விளக்கம் கேட்டு ஓய்ந்து போனவள் அதன்பிறகு அவன் மர்மமாக எதை பேசினாலும் கண்டு கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டாள்.

காலையில் ஆசிரமத்தில் இருந்து அழைத்துச் செல்பவன் ,மாலை கல்லூரியில் இருந்து அழைத்துக் கொண்டு நேராக ஏதாவது ஹோட்டலுக்கு கூட்டி செல்வான். அவளது வயிறு வாடாமல் பார்த்து பார்த்து ஆரோக்கியமான உணவுகளை வாங்கிக் கொடுத்தவன் அதன்பிறகே பாட்டுக்கு கிளாசுக்கு கொண்டு போய் விடுவான்.வகுப்பு முடிந்ததும் மீண்டும் அவனே ஆசிரமத்தில் விட்டு செல்பவன் கிளம்பும் முன் அவளின் கண் பார்த்து ஒற்றை குட் நைட்டை சொல்லிவிட்டு சென்று விடுவான்.வானதிக்குத் தான் அந்த நொடி என்னவோ போல இருக்கும்.

அவ்வளவு நேரம் கோழி தன்னுடைய குஞ்சை அடைகாப்பது போல பிரியாமல் இருப்பவன் பிரிந்து செல்லும் நேரம் அவளுக்கு என்னவோ போல இருக்கும்.ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும்…அவன் போய்த் தானே ஆக வேண்டும்..

அவனுக்கு என்று தனி குடும்பமும் இருக்கிறது இல்லையா?..அதில் யார் எல்லாம் இருப்பார்கள்…என்னைப் போல இல்லாமல் நிச்சயம் பெரிய குடும்பமாக இருப்பார்… அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி,தங்கச்சி,சித்தப்பா,சித்தி,தாத்தா,பாட்டி..என்று பெரிய படையுடன் இருப்பார்.

அவருக்கு கல்யாணம் ஆகி இருக்குமா? என்ற கேள்வி தோன்றிய விரைவில் அழிந்து விட்டது…ஏனோ அவளால் அவனுக்கு திருமணம் ஆகி இருக்கும் என்று எண்ணவே முடியவில்லை.

‘ஒருவேளை ஆகி இருந்தால்?’ என்று எண்ணியவள் அடுத்த நிமிடம் தலையை உலுக்கி சுய நினைவை அடைந்தாள்.

‘இது என்ன வேண்டாத எண்ணம்…அவருக்கு திருமணம் ஆகி இருந்தால் எனக்கு என்ன? ஆகாவிட்டால் எனக்கு என்ன?…வேண்டாம் வானதி..உன்னுடைய புத்தி செல்லும் பாதை சரியில்லை…ஒழுங்காக படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்து’என்று தன்னைத் தானே அதட்டியவள் தூங்கச் சென்று விட…தூக்கம் தான் வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது.

மாலையில் அவனுடன் காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த தருணங்களை மெல்ல அசைப் போட்டாள்.வசதி படைத்தவர்கள் மட்டுமே உணவு உண்ணக்கூடிய இடம் என்பது பார்த்ததுமே அவளுக்கு புரிந்து போனது.தன்னுடைய வாழ்நாளில் முதன்முறையாக இந்த மாதிரி ஒரு இடத்திற்கு வந்து இருக்கிறாள் வானதி.

எல்லா இடத்தையும்,பிரமிப்புடன் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டே வந்தவளைப் பார்த்து அவனுக்கு திருப்தியாக இருந்தது.
டேபிளில் அமர்ந்த பிறகு அவள் புறமாக மெனுகார்டை நீட்ட,அவளோ மறுத்து விட்டாள்.

“எனக்கு இங்கே …இந்த இடமெல்லாம் புதுசு…என்ன கிடைக்கும்..எப்படி இருக்கும்..அதெல்லாம் தெரியாது…ஒரு காபி மட்டும் போதும்…பாட்டு கிளாஸ் முடிஞ்சதும் தான் ஆசிரமத்திற்கு போய் நைட் சாப்பிடுவேனே..அதனால காபி மட்டும் போதும்…”என்று வேகமாக சொன்னவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

சிரித்தால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று எண்ணியவன் முயன்று கட்டுப்படுத்திக் கொண்டான்.

‘விலை அதிகமாக இருக்கும் என்பதால் சாப்பிடத் தயங்குகிறாள் என்பதும் புரிய…இதமாக அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்தான்.

“வானதி…இந்த மாதிரி ஹோட்டல்ல சாப்பிடறது தான் எனக்கு சரிப்பட்டு வரும்.ஏன்னா…எந்த நேரத்தில் எங்கே இருப்பேன்னு சொல்ல முடியாது.ஸோ வழியில் இருக்கிற ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு மறுபடி வேலையை கவனிக்கப் போய் விடுவேன்.அதனால இந்த மாதிரி இடங்களுக்கு அடிக்கடி வருவேன்…

நான் நினைச்சா…ஒரே செக்கில் இந்த ஹோட்டலையே விலைக்கு வாங்க முடியும்…ஆனா எனக்கு அதில் விருப்பம் இல்லை…என்னோட இடம் துறைமுகம் தான்.இந்த இடத்துக்கு நான் உனக்காக வரலை..எனக்காக வந்து இருக்கேன்…

இந்த மாதிரி இடங்கள் தான் என்னுடைய ஸ்டேடஸ்க்கு அழகு…செலவழிக்கிற ஒவ்வொரு காசுக்கும் கணக்கு பார்க்கும் நேரத்தில் அதை விட பத்து மடங்கு பணத்தை நான் சம்பாதித்து விடுவேன்.அதனால் இதைப் பத்தி பேசி நேரத்தை வீணாக்காம சீக்கிரம் என்ன வேணுமோ சொல்லு..நீ ரொம்ப யோசிச்சு வேஸ்ட் ஆக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எத்தனை கோடி நஷ்டம் ஆகும் தெரியுமா?”என்றான் கண்ணில் சிரிப்போடு.

அவன் சொல்வது நியாயம் தான் என்றாலும் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோவொன்று உறுத்த மறைக்காமல் அதை கேட்கவும் செய்தாள்.
“அவ்வளவு பிஸியான நீங்க ஏன் இப்படி எனக்கு..என் கூடவே…”என்று கேட்க ஆரம்பித்தவள் அவனுடைய கூரிய பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தி விட்டு தலையை குனிந்து கொண்டாள்.

‘பேச ஆரம்பிச்சாலே இப்படி உத்து உத்து பார்த்தா எப்படி பேசுறதாம்?’

“ஏன் உனக்கு டிரைவர் வேலை பார்க்கிறேன்னு கேட்க வர்றியா?”அவள் முக பாவனைகளை அளந்து கொண்டே அவன் கேட்க அவள் தலையோ மெனு கார்டுக்குள் புதைந்து போனது.
“காரணம் இல்லாம இல்லை வானதி..ஆனா…”

“அதை இப்ப சொல்ல மாட்டீங்க அப்படித்தானே?” என்றாள் வெடுக்கென்று…

அவளுடைய கோபத்தில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.பின்னே முட்டைக் கண்ணை கொஞ்சம் உருட்டினால் அதற்குப் பெயர் கோபமா…

“வானதி நான் தான் சொன்னேனே…இன்னும் அதுக்கு நேரம் வரலை..நீ இன்னமும் உன்னோட படிப்பை முடிக்கலை..படிப்பை முடிச்ச பிறகு எல்லாத்தையும் நானே உன்கிட்டே சொல்றேன்…சரி தானா?அதுவரை நல்ல பிள்ளையா எந்த கேள்வியும் கேட்காம ஒழுங்கா படி…சங்கீதத்தை முறையா கத்துக்கோ…”

“சங்கீதத்தை முறையா கத்துக்கிட்டு என்ன செய்யப் போறேன் நான்…”தினமும் சாரதா சரிகமபதநி என்று ஒவ்வொரு ஸ்வரங்களாக விளக்கும் பொழுது அவளின் மண்டையில் ஒன்றுமே ஏறாது…அந்தக் கோபத்தையும் அவனிடமே காட்டினாள்.

“எவ்வளவோ செய்யலாம்?சினிமாவில் பாடலாம்..வெளிநாடுகளில் ஷோ பண்ணலாம்…இது எல்லாத்தையும் விட அழகா பாடி புருஷனை சந்தோசப் படுத்தலாம்”அவளின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டே பேச…அவனது கடைசி வரிகளில் அவளையும் அறியாது அவள் கன்னம் சிவந்ததை திருப்தியுடன் பார்த்தான் சம்ஹார மூர்த்தி.

அவன் பேசியதை ஒத்துக் கொள்ள முடியாமல் கன்னச் சிவப்பை மறைத்துக் கொண்டு வேண்டுமென்றே அவனிடம் வாதாடினாள் வானதி.

“அப்படி யாரோ ஒருத்தரோட சந்தோசத்துக்கு நான் எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்…எனக்கு இந்த பாட்டு கிளாஸ் எல்லாம் வேணாமே…”வீம்புடன் பேச ஆரம்பித்தவள் கெஞ்சலில் முடிக்க சம்ஹார மூர்த்தியோ வாய் விட்டு சிரித்து விட்டான்.

அவனுடைய சிரிப்பைப் பார்த்து அவளுக்கு ரோஷம் வர,வேகமாக அவனைப் பார்த்து கண்ணை உருட்ட அவனுக்கு சிரிப்பு மேலும் அதிகமானது.

“இப்ப எதுக்கு சிரிக்கறீங்க?” என்றாள் ரோஷத்துடன்…

“நீ என்ன செஞ்சாலும்…எப்படி பேசினாலும் …நீ பாட்டு கிளாசுக்கு போய் தான் ஆகணும்…எஸ்கேப் ஆக முடியாது.புரிஞ்சுதா?”என்று அவன் கிண்டல் செய்ய…தன்னுடைய திட்டத்தை தெரிந்து கொண்டானே என்று அவளுக்கு வெட்கமாக போய் விட்டது.

தலையைக் குனிந்து மீண்டும் காபியை அருந்த தொடங்கியவளைக் கண்டு மென்மையான குரலில் அழைத்தான்.

“வானதி…”

“ம்ம்ம்”

“உனக்கு என் மீது கோபம் வந்தால் அதை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்…சண்டை போடணும்னு ஆசை இருந்தா போட்டுடு…இனி மேல் கோபம் வந்தா என்னோட சண்டை போடணும் புரிஞ்சுதா?”என்று அவன் கேட்க அவளுக்குத்தான் குழப்பமாக போனது…

‘யாராவது என்கிட்டே சண்டை போடுன்னு சொல்வாங்களா?…இவர் சொல்றாரே…இவரோட பேச்சு நடவடிக்கை எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கே…’

“ரொம்ப யோசிச்சு மண்டையைப் போட்டு குழப்பிக்காதே…இப்போ கிளாசுக்கு நேரமாச்சு வா கிளம்பலாம்” என்று எழுந்து கொள்ள அவளும் பின்னாலேயே செல்லத் தொடங்கினாள் யோசனையுடன்.
அதன்பிறகு வந்த ஒரு வாரமும் அதே போல நடக்க எந்த பிரச்சினையும் இன்றி ஒழுங்காகப் போய்க் கொண்டு இருந்தது.அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது.

தீ தீண்டும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

4 COMMENTS

  1. Superb update. I think vanathy will understand her feelings when she sees samhara moorthy speaking with some other girl of her age group. Jealousy work. Waiting for the next update eagerly.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here