Theendaatha thee neeye Tamil novels 13

9
4603

அத்தியாயம் 13
பொங்கி வரும் கடல் அலைகள் ராட்சசனின் வேகத்தோடு அவளை விழுங்கத் துடித்தது. கைகளில் பற்றிக் கொள்ள ஏதேனும் கிடைத்தால் இந்த இக்கட்டில் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்தவள் பற்றிக் கொள்ள ஏதாவது கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கைகளால் துழாவ அவள் கைகளுக்குள் சிக்கியதோ பஞ்சு மூட்டை மட்டுமே…இதை வைத்துக் கொண்டு எப்படி தப்பிப்பது என்று எண்ணியவளை, வேகமாக வந்த அலை ஒன்று தண்ணீரில் மூழ்கடிக்க மூச்சுக் காற்றுக்காக ஏங்கித் தவித்தவள் வாய் வழியாக மூச்சுவிட முனைந்தாள்.


திடீரென்று ஏதோ இனம் புரியா படபடப்பு…பூகம்பம் ஏற்பட்டதைப் போல தன்னைச் சுற்றிலும் அதிர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். ‘கடலில் எப்படி பூகம்பம் வரும்?’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே தான் படுத்துக் கொண்டிருந்த படுக்கையில் இருந்து தொப்பென்று கீழே விழுந்தாள் வானதி.


கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு சுற்றுப்புறத்தைக் ஆராய முற்படும் பொழுது தான் அதுவரை அவள் கனவு கண்டாள் என்பதே அவளுக்குப் புரிந்தது.


‘அப்பா..எவ்வளவு மோசமான கனவு’என்று நடுங்கியபடியே பார்வையை ஓட விட்டவள் முன்னைக் காட்டிலும் அதிகமாக அதிர்ந்து போனாள்.


‘எந்த இடம் இது?’என்று பார்வையை ஓட்டியவளுக்கு நிச்சயம் அந்த இடம் பரிட்சயமானதாக தோன்றவில்லை.


‘என்ன நடந்தது? எப்படி இந்த இடத்திற்கு வந்தோம்? இது யாருடைய இடம்?’ என்ற யோசனையுடன் சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்.
நவீனமான அந்த அறையின் அமைப்பைப் வைத்து அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒருவேளை அவருடைய வீடாக இருக்குமோ என்று எண்ணியவள் கடைசியாக நடந்த நிகழ்வுகளை கோர்வையாக வரிசைப்படுத்திப் பார்க்க முனைந்தாள்.


கடைசியாக மண்டபத்தில் இருந்த பொழுது ஜன்னல் வழி சம்ஹார மூர்த்தியை பார்த்ததும் , அவன் தன்னைப் பார்த்து கண் சிமிட்டியதும் நினைவுக்கு வர இப்பொழுது இருக்கும் சூழ்நிலையைக் கூட மறந்து அவளது கன்னம் சிவந்தது.


நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவள் நடந்த நிகழ்வுகளை யோசிக்கத் தொடங்கினாள்.


நிச்சயதார்த்தத்தின் பொழுது தன்னை எந்த நேரத்திலும் மேடைக்கு அழைப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியும். ‘என்னை இந்த அலங்காரத்தில் பார்க்கும் பொழுது அவருடைய முகத்தில் நவரசமும் வந்து போகும் இல்லையா? என்னை ஆசையாக பார்ப்பாரே’ என்றெல்லாம் கனவுலகில் சஞ்சரித்தது எல்லாம் நினைவுக்கு வந்து போனது அவளுக்கு.


‘அப்பொழுது தான் கண்களை இருட்டிக் கொண்டு என்னவோ போல வந்தது… தூங்கிப் போய் விட்டேனா? அல்லது மயங்கி விட்டேனா? அய்யோ என்னுடைய நிச்சயதார்த்தம் என்ன ஆச்சு? கல்யாணப் பெண் நான் இல்லாமல் நடந்து இருக்காதே… அய்யோ! அவர் துடிச்சுப் போய் இருப்பாரே’ என்று தன்னுடைய மனம் கவர்ந்தவனுக்காக வருந்தினாள்.


‘அடி முட்டாளே …உன்னுடைய வாழ்க்கையே இங்கே கந்தல் துணியாக மாறப் போகிறதே..அதைப் பற்றி நினையாமல் இந்த நேரத்திலும் கூட மற்றவர்களின் துயரத்தைப் பற்றி நினைக்கிறாயே’ என்று சொல்லி கேலியாக விதி அவளைப் பார்த்து சிரித்தது.


இது சம்ஹார மூர்த்தியின் வீடாகத் தான் இருக்கும் என்று எண்ணியவள் அவசரமாக தன்னுடைய அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.
காரணம் அது ஒற்றை அறை இல்லை.ஏதோ ஒரு பெரிய அறையில் இருந்த உள் அறைக்குள் தான் இவ்வளவு நேரம் அவள் இருந்ததே.வெளியே வரலாம் என்று எண்ணியவள் உள்பக்கமாக பூட்டி இருந்த கதவுகளைப் பார்த்துத் திகைத்துப் போனாள்.


யாரோ தன்னை பின்னால் இருந்து தள்ளி விடுவது போல தோன்ற மீண்டும் ஒருமுறை தள்ளாடினாள்.


‘சே! மயக்கம் இன்னும் தெளியவில்லை போல…’ என்று எண்ணியவள் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தும்போது தான் அவளின் பக்கவாட்டில் அந்த சத்தம் கேட்டது.


சத்தம் என்றால் இரைச்சல் ஒலி அல்ல…… பியானோ இசை…. மெல்லியதாக கேட்ட அந்த ஒலி அவளை வா என்று அழைப்பது போல இருக்க, மென்நடை வைத்து அந்த திசையை நோக்கி நடந்தாள்.
அந்தப் பெரிய அறையின் தூண்களுக்கு அப்பால் நடுநாயகமாக வெள்ளை நிறத்தில் கோட் அணிந்தவன் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்தபடி அந்த பியானோவை நிதானமாக தலையை இடமும் வலமுமாக ஆட்டி ரசித்து வாசித்துக் கொண்டிருந்தான். அவன் அமர்ந்து இருந்த தோரணையும், அவனுடைய முதுகுப் புறத்தையும் வைத்தே அவன் சம்ஹார மூர்த்தி இல்லை என்பது அவளுக்குத் தெளிவாக தெரிந்தது.


‘அவருடைய வீட்டில் வந்து அமர்ந்து கொண்டு இப்படி உரிமையாக வாசித்துக் கொண்டு இருக்கிறாரே…ஒருவேளை அவருடைய நண்பராக இருப்பாரோ’ என்று எண்ணியவள் மெல்ல அவனை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.


மீண்டும் அவளது உடம்பு தள்ளாட, கீழே விழுந்து விடக்கூடாது என்று எண்ணி அங்கே சுவற்றின் அருகே பதித்து இருந்த அலமாரியைப் பற்றிக் கொண்டாள் வானதி.


“சா…சார்” தீனமான அவளது அந்தக் குரல் நிச்சயம் அவன் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே அவனது கை விரல்கள் ஒரே ஒரு நொடி தன்னுடைய வாசிப்பை நிறுத்தி, தன்னுடைய பேச்சு அவன் காதில் விழுந்ததை அவளுக்கு சொல்லாமல் சொல்லியது.


அவனுடைய அமைதி ஒரே நொடி தான். அடுத்த நொடி அவனது விரல்கள் முன்னைக் காட்டிலும் அதிக வேகத்துடன் அந்த பியானோவில் பயணித்தது. சற்று முன் மெல்லிய தென்றலைப் போல இதமாக ஒலித்த இசை இப்பொழுது வேகமாக நடந்து வரும் ஆயிரம் யானைகளின் நடை ஏற்படுத்தும் அதிர்வைக் காட்டிலும் அதிக அதிர்வை அவளுள் ஏற்படுத்தியது.


“சா…சார் யார் சார் நீங்க?”


“கடத்தினவனை மரியாதையா சார்ன்னு கூப்பிட்ட ஒரே ஆள் நீயாத் தான் இருப்ப” என்று அமர்த்தலான குரலில் சொன்னவன் வாசிப்பை நிறுத்தி விட்டு எழுந்து அவள் புறம் திரும்பி நின்றான்.


வெள்ளை நிற கோட் சூட்டின் பட்டனை ஸ்டைலாக போட்டபடி மென்குரலில் அவன் பேசிய கடின வார்த்தைகள் பொய்யோ என்று ஐயப்படும் வகையில் சிரித்த முகத்துடன் அவளை நோக்கித் திரும்பினான் அவன்.தீட்சண்யம் நிறைந்த கண்கள் அவளை ஊடுறுவும் பார்வையை செலுத்த, அவளிடம் இருந்து ஒரு கணம் கூட பார்வையை அவன் பிரித்தெடுக்கவில்லை.


அவளுக்கோ அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. ஏதோ அந்நிய தேசத்தில் புரியாத மொழி பேசினால் எந்த மாதிரி குழப்பம் வருமோ அதைக் காட்டிலும் அதிக குழப்பத்தை அவளது முகத்தில் கண்டவனின் சிரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. சிரிப்பு என்றால் இதழ் விரித்து சிரிக்கவில்லை. இதழ் பிரியாமல் இதழின் கடைக்கோடியில் ஒரு மெல்லிய பிளவு. அதுவே அவனுடைய வசீகரத்தை அதிகப்படுத்திக் காட்டியது.


“உட்கார்…கொஞ்சம் பேசலாம்” என்று அவன் கூற அவளோ இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது வெறித்த பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டவன் அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்து எதிரில் இருந்த சோபாவில் அவளை அமரும்படி சைகை செய்தான்.
சாவி கொடுத்த பொம்மை போல அவனின் எதிரில் அமர்ந்தவள் லேசாக சிரிக்க முயன்றபடி மீண்டும் அவனிடம் அதே கேள்வியைக் கேட்டாள்.


“சு..சும்மா விளையாட்டுக்குத் தானே சொல்றீங்க? யார் சார் நீங்க?”


“அதெல்லாம் உனக்குத் தேவையா என்ன?”


“அவரோட வீட்டில் இருந்துக்கிட்டு இப்படி என்னை வம்பு இழுக்காதீங்க சார். அவருக்குத் தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவார்…” அவனை மிரட்டிப் பார்க்க முடிவு செய்தாள்.


அவன் முகத்தில் இப்பொழுதும் கூட அந்த சிரிப்பு மாறவில்லை.ஆனால் அவனது பார்வை அவளுடைய கண் வழியே உயிரை ஊடுருவி பயணிப்பதைப் போன்ற ஒரு உணர்வு தோன்ற அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.


“நான் சார்… அவன் மட்டும் அவரா?” அவன் குரலில் கேலியோ, கிண்டலோ எதுவும் இல்லை.ஆனால் முகம் மாறாமல் அமர்த்தலாக அவன் கேட்ட விதம் ஏதோ ஒரு விதத்தில் அவளை பயம் கொள்ள வைத்தது.


“அவர் எங்கே சார்? மண்டபத்தில் இருக்கிறாரா? நான் அவர்கிட்டே பேசணுமே…கண் முழிச்சுட்டேன்னு அவருக்கு இன்னும் தெரியாது இல்லையா? போன் செஞ்சு தர்றீங்களா? நா…நான் அவர்கிட்டே பேசணும்” முன்னே பின்னே தெரியாதவனிடம் இவ்வளவு தூரம் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கிறதே என்று அவளுக்கு தயக்கமாக இருந்தது.


அவனது முகத்தில் இருந்த புன்னகை இப்பொழுதும் மாறவில்லை.
‘பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பு…நான் பேசிக்கிட்டே இருக்கேன். ஆனா இவன் லூசு மாதிரி சிரிச்சுகிட்டே இருக்கானே’ என்று உள்ளுக்குள் அவனை வசை பாடத் தொடங்கினாள்.


“அவருக்கு போன் செஞ்சு தர்றீங்களா?”


“முடியாதுன்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்?” என்று அதே அமர்த்தல் குரலில் அவன் கேட்க, இப்பொழுது அவளுக்கு கோபம் வந்தது.


‘அவரைப் பத்தி தெரியாம என்கிட்டே இப்படி விளையாடிட்டு இருக்கான் போல… அவருக்கு தெரிஞ்சா நீ செத்த…அவரு சம்ஹார மூர்த்திடா….ஏதோ அவருக்கு தெரிஞ்சவராச்சேன்னு கொஞ்சம் பொறுமையா பேசினா நீ என்னடான்னா சிரிச்சே என்னை வெறுப்பேத்துற’ என்று உள்ளுக்குள் அவனைத் திட்டித் தீர்த்தவள் வழக்கம் போல முட்டைக் கண்ணை விரித்துப் பார்த்து தன்னுடைய கோபத்தை அவனுக்கு உணர்த்த முயல, அவனோ அலட்சியமாக அவனது கோட்டின் கைப் பகுதியில் ஒற்றை விரலால் தூசை தட்டி விடுவது போன்ற பாவனை காட்ட வானதி பொங்கி எழுந்து விட்டாள்.


அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து வேகமாக எழுந்தவள் அவனுடைய முகம் பார்க்காமல் பேசினாள்.


“நான் அவர்கிட்டே போகணும்”


“இந்த இடத்தை விட்டு போகணும்கிற முடிவில் உறுதியா இருக்கியா?”


‘என்ன மடத்தனமான கேள்வி’என்று அவளுக்குத் தோன்றினாலும் சற்றும் தாமதிக்காமல் அவனுக்கு பதில் சொன்னாள்.


“ஆமா…நான் இப்பவே கிளம்பிப் போய் அவரைப் பார்த்தாகணும்”


“போ…”சலனமில்லாமல் அவன் வாயில் இருந்து வந்த வார்த்தையை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் ஒரு நிமிடம் தயங்கி நின்றாள். ரிமோட்டால் அறையின் கதவை அவன் திறந்ததை வாய் பிளந்து சில நொடிகள் வேடிக்கை பார்த்தவள், அடுத்த நொடி வேகமாக அறையின் கதவை திறந்து கொண்டு வெளியேறினாள்.


அறையை விட்டு வெளியேறியதும் அவளது குழப்பம் அதிகரித்தது.அறையின் உள்ளே ஒரு ஒரு நட்சத்திர ஹோட்டலைப் போல இருந்த அமைப்பு அந்த இடத்தை விட்டு வெளியே வந்ததும் முற்றிலுமாக மாறி வேறு தோற்றத்தில் இருந்தது.


எல்லாம் நவீன முறையில் தான் இருந்தது.ஆனால் அவள் மனதில் ஏதோ ஒரு நெருடல்.மீண்டும் தடுமாறி விழப் போனவள் அருகில் இருந்த படிக்கட்டுகளின் கம்பியைப் பிடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள்.


‘சே…இவ்வளவு நேரம் ஆகியும் இந்த தடுமாற்றம் குறைய மாட்டேங்குதே…’என்று எரிச்சலோடு நினைத்தவள் தட்டுத்தடுமாறி படிகளின் வழியே கீழே இறங்கினாள்.


சுற்றுப்புறமோ,அதில் இருந்த காட்சிகளோ எதுவுமே அவள் கண்ணில் பதியவில்லை.வேகமாக படி வழியே கீழே வந்தவள் அங்கே கண்ட காட்சியில் உறைந்து போனாள்.


அதிர்ச்சியில் அவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது. அவளது கட்டுப்பாட்டையும் மீறி அவளது உடல் நடுங்கத் தொடங்கியது. அதற்குக் காரணம் அவளது கண் முன்னே பரந்து விரிந்து தன்னுடைய சாம்ராஜ்யத்தை செலுத்திக் கொண்டு இருந்த கடல் அன்னை.


ஆம்!…கடல் அன்னை தான்.இப்பொழுது அவள் நட்ட நடுக்கடலில் ஒரு பெரிய கப்பலில் இருப்பதை உணர்ந்து கொண்டவளுக்கு அப்பொழுது தான் உறைத்தது. சற்று நேரம் முன்பு வரை அவள் தடுமாறியது மயக்கத்தினால் அல்ல..கப்பலில் இருப்பதால் என்று.
ரத்த பசையற்று வெளுத்துப் போன முகத்துடன் அமைதியாக தோற்றமளிக்கும் கடல் அன்னையை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் கடல்…கடல்…கடல் மட்டுமே. இது எந்த இடம்? இங்கிருந்து எப்படி போக முடியும்? நீச்சல் கலையை கற்றுத் தேர்ந்தவராலேயே இந்த ஆழ்கடலில் நீந்த முடியாது எனும் போது நீச்சலே தெரியாத அவளுக்கு அது எப்படி சாத்தியம்?


தன்னுடைய முதுகுக்கு பின்னால் ஒலித்த ஏதேதோ கலவையான குரல்களில் தன்னிலை அடைந்தவள் திரும்பிப் பார்க்க அவளுக்கு பின்னே முரட்டுத் தோற்றத்துடன் வாட்ட சாட்டமான ஆப்ரிக்க கறுப்பினத்தை சேர்ந்த நான்கு பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கு பின்னே அதே புன்னகை கொஞ்சமும் மாறாமல் அவன் நின்று கொண்டு இருந்தான்.


“உன்னைத் தான் போக சொல்லி சொல்லிட்டேனே…அப்புறமும் ஏன் இங்கேயே நிற்கிற?” ஒன்றுமறியா பாலகன் கூட அவன் முன்னே தோற்று விடுவான் அந்த அளவிற்கு ஒரு குழந்தை முகம். ஆனால் அதற்குப் பின்னால் மதங்கொண்ட யானையின் ஆக்ரோஷம் நிறைந்த ஒரு முகம் ஒளிந்து இருப்பது போல அவளுக்கு தோன்றியது.


“ஏன் போக வழி தெரியலையா? நான் வேணும்னா உதவி செய்யட்டுமா?” என்று கேட்டவன் அந்த நால்வருக்கும் கண்ணால் ஜாடை காட்ட அவர்கள் இயந்திரம் போல நடந்து வந்து அவளின் கைகளை அழுந்தப் பற்றினார்கள்.
அவர்கள் தன்னை நோக்கி வரும் பொழுதே மிரளத் தொடங்கி இருந்தவள் அவர்கள் தன்னுடைய கைகளை இறுக்கி பற்றியதும் முழுவதுமாக அதிர்ச்சிக்கு உள்ளானாள்.


“ஏய்! என்ன செய்றீங்க? விடுங்க என்னை” அவள் கதறக் கதற அவளை இழுத்துக் கொண்டு கப்பலின் மறுமுனையை நோக்கி அவளை இழுத்து சென்றார்கள்.


“நீ கத்துறது வேஸ்ட்… அவங்க யாருக்கும் தமிழ் தெரியாது” என்று சொன்னவன் ரொம்ப உன்னிப்பாக கை நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.


ஏற்கனவே அவள் மயக்கத்தில் இருந்து இப்பொழுது தான் கண் விழித்து இருக்கிறாள். அடுத்து அடுத்து அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவங்களினால் மூளை மரத்துப் போய் இருக்க, அவள் நடப்பதை உணரும் முன்னரே அந்த நான்கு தடியர்களும் சேர்ந்து அவளை அந்தக் கப்பலில் இருந்து நடுக்கடலில் தள்ளி விட்டிருந்தனர்.

தீ தீண்டும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here