Theendaatha thee neeye Tamil Novels 31

2
5087
Madhumathi Bharath Tamil Novels

அத்தியாயம் 31

தூங்க சொல்லி விட்டு அவன் சென்றாலும் உறக்கம் ஏனோ வர மறுத்தது அவளுக்கு. அறைக்குள் குறுக்கும்,நெடுக்குமாக நடந்து பார்த்தாள். விரல்களில் இருந்த நகம் முழுவதையும் கடித்து துப்பி… விரல்களையும் கடித்து துப்ப ஆரம்பிக்கும் வரையிலும் கூட அவளது பதட்டம் குறையவில்லை.

ஐந்து மணி வாக்கில் அவளது அறைக்கு வந்த ஈஸ்வர் அவளது பதட்டத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

“என்ன சில்லக்கா… கொஞ்ச நேரம் கூட தூங்கலை போல” என்றான் ஒன்றுமறியாதவன் போல…

‘தூங்குற மாதிரி பேச்சாடா நீ பேசிட்டு போன’ (இது என்னோட மைன்ட் வாய்ஸ்)

வானதி அவனை உற்றுப் பார்த்தாள்.அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் … அது அத்தனைக்கும் பதில் அவனிடம் இருக்கும் என்று தோன்றியது. சூத்திரதாரியான அவன் அதற்கான விடைகளை சொல்வான் என்று அவளுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை.

“எப்படி உங்களால எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது”என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து…

அவனிடம் எந்தவித பிரதிபலிப்பும் இல்லை.அதே நேரம் அவன் பார்வையை மாற்றிக் கொள்ளவும் இல்லை.

“இதோ பார் சில்லக்கா…இப்போ சொல்றது தான் நல்லா நியாபகம் வச்சுக்கோ…என்னை மறுபடி மறுபடி சொல்ல வைக்காதே… நான் தப்பே செய்யலைன்னு சொல்லலை… தெரியாம செஞ்சுட்டேன் அப்படின்னும் சொல்லலை…செஞ்ச தப்பை திருத்த முயற்சி செய்றேன். அதுக்கு நீ உதவி செய்னு மட்டும் தான் சொல்றேன்”

“இப்படி எல்லாம் பேசினா எனக்கு ஏற்பட்ட வலி காணாம போயிடுமா…”

“…”

“இப்படி எல்லாம் பேசி என்ன சொல்ல வர்றீங்க? நீங்க எனக்கு செஞ்ச கொடுமையை மறந்துட்டு நான் உங்களோட சேர்ந்து குடும்பம் நடத்தணும்ன்னு சொல்றீங்களா?”

“சில்லக்கா..நீ நடந்து முடிஞ்சதைப் பத்தி இருக்கிற வாழ்க்கையை நரகமாக்கிக்க பார்க்கிற.. நான் மேற்கொண்டு என்ன நடக்கனும்னு யோசிக்கிறேன்”

“உங்களுக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லையா? அதெல்லாம் கொஞ்சம் கூட உறுத்தாதா?”

“எதுக்கு உறுத்தணும்?”என்றான் அமர்த்தலாக

கோபத்தில் கண்கள் சிவக்க அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.

“நான் தப்பு செஞ்சேன் தான் வானதி..அதை மறுக்கலை..அதுக்காக அப்படியே இருந்துடலையே..அது தப்புதான்னு மனசாற வருந்துறேன். அதுக்கு பரிகாரமா உன்னை கல்யாணமும் செஞ்சுகிட்டேன்… இன்னும் என்ன செய்யணும்னு எதிர்ப்பார்க்கிற?” என்று அவன் கேட்ட விதம் அவளுக்கு கோபத்தை தான் கிளறியது.

“என் வாழ்க்கையிலேயே நீங்க வராம இருந்து இருக்கணும்…அப்படி இருந்து இருந்தா இந்நேரம் நான் ரொம்ப நல்லா சந்தோசமா இருந்து இருப்பேன்”

ஈஸ்வரின் பார்வையில் வெப்பம் கூடிக்கொண்டே போனது.

“அதாவது அந்த மூர்த்தி கூட சந்தோசமா இருந்து இருப்பன்னு சொல்றியா?”

“ஆமா..அதுல என்ன சந்தேகம்” என்றாள் அவளும் கோபத்துடன்

அவன் முகத்தில் இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முகம் முழுக்க புன்னகையைப் பூசிக் கொண்டான். அவனின் ரௌத்திரத்தை விட இந்த புன்னகை தானே அவளுக்கு எப்பொழுதும் பயத்தைக் கொடுக்கக் கூடியது. மனதில் தோன்றிய பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிமிர்வுடன் அவள் நிற்க, அவளை நெருங்கி வந்தவன் அவளின் தோளில் இரண்டு பக்கமும் கைகளை போட்டு தனக்கு அருகில் இழுத்துக் கொண்டு கண்ணோடு கண் கலந்தவாறு பேசத் தொடங்கினான்.

“இந்தக் கேள்விக்கான பதில் இன்னைக்கு நைட் உனக்கு சொல்றேன்… இப்போ போய் கிளம்பி ரெடியாகு சில்லக்கா… உன்னோட கலருக்கு காலையில் கட்டி இருந்த மாம்பழ கலர் புடவை அசத்தலா இருந்துச்சு. இன்னைக்கு நைட்டுக்கு உனக்கு ஸ்பெஷலா ஒரு மெருன் கலர் புடவை எடுத்து வச்சு இருக்கேன். பவுனம்மா கொண்டு வருவாங்க..அதையே கட்டிக்கோ..அப்பத் தான் எனக்குப் பிடிக்கும்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் அவளின் கன்னத்தை லேசாக தட்டி விட்டு சென்று விட முன்னைக் காட்டிலும் அதிகமாக நொந்து போனாள் வானதி.

‘இவன் சும்மாவே சாமியாடுவான்… இப்ப சலங்கை வேற கட்டி விட்டாச்சு..நைட் என்ன நடக்கப் போகுதோ’என்ற பயத்துடனே பொழுதை நெட்டித் தள்ளினாள்.

அவளுக்காக நொடி முள் நகராமல் நின்று விடுமா என்ன? நேரம் கடந்து கொண்டே இருந்தது. இரவு ஏழு மணி வாக்கில் அவளை சாப்பிட அழைத்தார் பவுனம்மா… வேண்டாம் என்று மறுத்தாலும் அவர் கேட்காமல் தொடர்ந்து வற்புறுத்தவே அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு கீழே இறங்கி சாப்பிடப் போனாள் வானதி. அங்கே அவன் இல்லை.கண்களால் அவனைத் தேடுவதை உணர்ந்து கொண்ட பவுனம்மா அவள் கேட்காமலே அவளுக்கு விவரம் கொடுத்தார்.

“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே இருந்தாலும் அவர் வீட்டுக்குள் எந்த பயலாலும் நுழைய முடியாது”என்றார் பெருமையாக.

“ஹுக்கும்… செவுத்துல கரண்ட் ஷாக் வச்சா அப்புறம் எவன் வருவான்’ என்று உள்ளுக்குள் திட்டித் தீர்த்தாள் வானதி.

அவள் மௌனமாக சாப்பிட அவளுக்கு உணவு பரிமாறிய வண்ணம் அவளிடம் ஈஸ்வர் புகழ் பாடத் தொடங்கினார் பவுனம்மா.

“தம்பி ரொம்ப நல்ல பையன் கண்ணு… மத்த இளந்தாரிப் பசங்க மாதிரி கிடையாது. தண்ணி,சிகரெட்ன்னு ஒரு கெட்டப் பழக்கம் கிடையாது. எப்பவும் தொழிலே கதின்னு கிடப்பார்…. அவரைத் தேடி ஒரு பெண் வந்தது கிடையாது. பொண்ணுங்க அப்படின்னா அவ்வளவு மரியாதையா தான் பேசும்.” என்ற ரீதியில் அவர் பேசிக் கொண்டே போக அவளுக்கு, ‘இரண்டு காதிலும் நெருப்பை வைத்துக் கொண்டால் என்ன?’ என்று தோன்ற ஆரம்பித்தது.

அவர் சொன்ன எல்லாமே உண்மை என்பது அவள் அறிந்த ஒன்று தானே… அவளை அவன் கடத்தி வைத்து இருந்த நாட்களில் ஒருநாள் கூட அவன் குடித்தோ, சிகரெட் பிடித்தோ அவள் பார்த்தது இல்லை. அவளிடம் கூட கண்ணியமாகத் தானே நடந்து கொண்டான். அந்த ஒரு கொடிய இரவைத் தவிர…

‘சே…என்ன இது எங்கே சுத்தினாலும்…மறுபடி மறுபடி அதையே நினைச்சுக்கிட்டு…’என்று எண்ணியவள் பாதி சாப்பாட்டில் எழ பவுனம்மா பதட்டமானார்.

“ஏன்மா… பாதி சாப்பாட்டில் எழுந்துட்டீங்க…”

“போதும் …” என்றவள் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டு அறைக்கு சென்று விட அடுத்து சில நிமிடங்கள் கழித்து வீட்டுக்குள் வந்தான் ஈஸ்வர்.அவன் முகம் முழுக்க யோசனையும், குழப்பமும் சூழ்ந்து இருந்தது. எதுவுமே பேசாமல் சாப்பிட அமர்ந்தவன் மௌனமாக சாப்பிட்டு எழ… பவுனம்மா வானதி சரியாக சாப்பிடாததை கூற அவன் கேள்வியாக அவர் முகம் பார்த்தான்.

“என்ன நடந்துச்சு? ஏன் பாதி சாப்பாட்டில் எழுந்து போனா?”

“ஒண்ணுமில்லை தம்பி…உங்களை பத்தி நல்ல அபிப்பிராயம் வரட்டும்னு உங்களைப் பத்தி கொஞ்சம் நல்ல விதமா சொன்னேன்…படக்குனு பாதி சாப்பாட்டில் எழுந்து போய்ட்டாங்க” என்றார் வருத்தத்துடன்…

“அவளுக்கு என் மேல் கெட்ட அபிப்பிராயம்ன்னு உங்களுக்கு யார் சொன்னதுமா? அவளுக்கு என்னைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். என் மேல் அவளுக்கு ரொம்பவும் நம்பிக்கை இருக்கு…மரியாதை இருக்கு…அது தான் அவளோட கோபத்திற்கு காரணம்” என்றான் தெளிவாக…

“ஒண்ணும் புரியலையே தம்பி”

‘நான் பொய்த்துப் போனதை அவளால தாங்கிக்க முடியலை…அது தான் நிஜம்’ என்று உள்ளுக்குள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டவன் வெளியே சாதாரணமாக சிரித்து வைத்தான்.

“நான் அவளுக்கு புரிய வச்சிடுவேன் மா… நீங்க அதை எல்லாம் யோசிச்சு வருத்தப் படாதீங்க….” என்று அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு யோசனையுடன் கீழே இருந்த மற்றொரு அறைக்குள் புகுந்து கொள்ள மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு மாடியில் அவளை தயார் செய்ய ஆரம்பித்தார் பவுனம்மா…

அவளது அறைக்கு பக்கத்துக்கு அறைக்கு அவளை அழைத்து சென்று உடை மாற்றி, நகை அணிவித்து…. என்று வழக்கமான காட்சிகள் நடந்தேற…வானதியின் இதயம் திம் திதும் என வெளியே கேட்காத வண்ணம் அதிர்ந்து கொண்டு இருந்தது.

அவள் ஒண்ணும் குழந்தை கிடையாது. திருமணத்தை ஆசையாய் எதிர்பார்த்தவள் தானே… ஆனால் ஈஸ்வரை அவள் அந்த இடத்தில் வைத்து பார்த்ததே இல்லையே… அதுவும் மாலை அவன் பேசிய பேச்சில் அவளுக்கு இன்னும் பயம் கூடிப் போய் இருந்தது.

ஈஸ்வர் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தினாலேயே அவன் சொன்ன புடவையை விடுத்து வேறு புடவையை எடுத்து கட்டிக் கொண்டாள் வானதி. பவுனம்மாவும் ஒரு மௌனப் பார்வை பார்த்து விட்டு ‘எனக்கெதுக்கு வம்பு’ என்ற ரீதியில் அவளை அலங்கரிக்கும் வேலையை செய்யத் தொடங்கினார்.

அளவான நகைகளுடன் பச்சை வண்ண டிசைனர் புடவையில் பேரெழிலுடன் இருந்தவளைப் பார்க்கப் பார்க்கக் தெவிட்டவில்லை அவருக்கு. அவராக கண் படாமல் இருக்க அவள் கன்னத்தில் மையினால் திருஷ்டி பொட்டு ஒன்றை வைத்து விட்டார்.

‘இந்த பொண்ணு கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று எண்ணியவர் பெருமூச்சோடு கீழே சென்று பால் சொம்பை எடுத்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு போய் அறையில் விட்டார். ஈஸ்வர் அங்கே இல்லாதததால் ஒரு நிமிடம் தயங்கி நின்றவர் அவளது கைகளை ஆதுரமாக பிடித்துக் கொண்டார்.

“ஒருத்தரை ஒருத்தர் நல்ல படியா புரிஞ்சுக்கிட்டு சந்தோசமா இருங்க… அது தான் நல்லது… வாழ்க்கை ரொம்ப அழகானது… எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசுங்க” என்று ஏதோ தன்னால் முடிந்த அளவு அறிவுரைகள் சொன்னவர் அதற்கு மேலும் தாமதிக்காமல் அவளை விட்டு அவர் கிளம்பி விட…அந்த அறையை நிமிர்ந்து பார்க்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த படுக்கை எதற்காக? என் வாழ்க்கையை பாழ் படுத்தியவனுக்கு கிடைக்கும் பரிசா? என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் அவளது மனம் ஈஸ்வருக்கு வக்காலத்து வாங்கியதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.

‘அத்தனை நாட்கள் கண்ணியமாய் நடந்து கொண்டவனின் கண்ணியம் அந்த ஒரு நாளில் ஏன் காணாமல் போனது?

அவன் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை இருந்து இருந்தால் அவன் அழைத்ததுமே மறுபேச்சு பேசாமல் காரில் ஏறி அவனுடன் சென்று இருப்பேன்… அந்த நம்பிக்கையை அழித்து விட்டானே… பாவி…’ என்றெல்லாம் அவனைத் திட்டித் தீர்த்துக் கொண்டவள் கதவு தாளிடும் ஓசையில் வேகமாக திரும்பிப் பார்த்தாள்.

பட்டு வேஷ்டி சட்டையில் சிங்கத்தின் கம்பீரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து வந்தவனைக் கண்டதும் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள் வானதி.

தான் சொன்னதற்காகவே பிடிவாதமாக வேறு புடவை அணிந்து கொண்டு நிற்கும் மனைவியின் கோபத்தில் உள்ள குழந்தை தன்மையை ரசித்தவாறே அவளின் அருகில் வந்தான் ஈஸ்வர்.

சட்டையின் கைப் பகுதியை முழங்கை வரை மடித்து விட்டவன் அவளின் கவனத்தை கவர  லேசாக செருமினான். அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லாததால் வேஷ்டியை லாவகமாக நுனி விரலால் மடித்துக் கட்டிக் கொண்டு அவளின் எதிரில் போய் நின்றான்.

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா சில்லக்கா”என்றான் இயல்பாக

“…”

“என்ன மேடம் பேச மாட்டேங்கறீங்க?”

“…”

“ஓ… வெட்கமா” என்றான் இதழில் குறுஞ்சிரிப்பு இழையோட

கண்களில் கனல் கக்க நிமிர்ந்து அவள் பார்த்த ஒற்றை பார்வையில் பயம் வந்தவனைப் போல பாசாங்கு செய்தான் அவன்.

“ஐயோ..அந்த முட்டைக் கண்ணால அப்படி முறைச்சு பார்க்காதே சில்லக்கா… எனக்கு ரொம்ப லவ்ஸ் வருது… அப்புறம் ஏடாகூடமா ஏதாவது செஞ்சுடுவேன்” என்று அவன் சொல்ல அவள் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

இமைக்கும் பொழுதில் அவளை தன்னுடைய கரங்களில் ஏந்தியவன் கைகளில் அவளை ஏந்திக்க் கொண்டு வேகமாக சுற்ற பயந்து போய் அவனது கழுத்தில் கரங்களை மாலையாக கோர்த்து இறுகப் பற்றிக் கொண்டாள் வானதி. நிற்காமல் சில பல நிமிடங்கள் சுற்றியவன் பயந்து போய் கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தவளை கனிவுடன் பார்த்தவன் மெல்ல அவளை கட்டிலில் கிடத்தி அவளின் அருகில் அவனும் வர, வேகமாக நகர முயன்ற வானதிக்கு கரங்களால் அணை கட்டினான் ஈஸ்வர்.

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா? தெரியுமா?

உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா? தெரியுமா?

அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க மஞ்சக் கயிரு எடுத்துனது
கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது

மணமாலை சூட்டி பலபேரும் வாழ்த்த
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டிப் புதுப்பாதை காட்டி
உறவாடும் திருநாளின் இரவில்
இளந்தென்றல் காற்றும் வளர்காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்

உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா? அது முடியுமா?
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா? தெரியுமா?

மென்குரலில் ஈஸ்வர் பாட இமை சிமிட்ட மறந்து போய் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.

‘இவனா பாடினான்? இவ்வளவு அழகா பாடுவானா இவன்?’ என்று அவள் ஆச்சரியமாக அவனைப் பார்க்க… அவனோ பாடிக் கொண்டே அவளுக்கே தெரியாமல் அவளிடம் தன்னுடைய ஆதிக்கத்தை மெல்ல செலுத்தத் தொடங்கி இருந்தான்.

பாடல் வரிகளுக்கு இடையே கன்னத்தை தீண்டுவதும், காது மடல் உரசியும் ,வளையலோடு விளையாடியும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்க… வானதியின் பார்வை பிரமிப்பு மாறாமல் அவன் மேலேயே நிலைத்து இருந்தது.

“என்ன வானதி அப்படி பார்க்கிற….” என்றான் அவளது காதோரம் குனிந்து…

வானதி இன்னும் அந்த பிரமிப்பில் இருந்தும், அவன் உச்சரித்த பாடல் வரிகளில் இருந்தும் மீளாமல் அந்த நொடிகளில் அப்படியே உறைந்து போய் இருக்க… அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நெருங்குவதை அவள் உணரவே இல்லை.

“நீங்க பாடுவீங்களா?”

“இப்போ பாடினதை கேட்ட இல்ல..அப்புறமும் எதுக்கு இந்த சந்தேகமாம்?” விரல்களால் அவள் நெற்றியில் விளையாடியபடி பேசிய அவன் குரல் குழையத் தொடங்கியது.

சில நிமிடங்கள் கழித்தே வானதி உணர்ந்தாள் அவனும் அவளும் நெருக்கமான நிலையில் இருப்பதை….கிட்டத்தட்ட அவளை அணைத்தவண்ணம் அவன் இருக்க… அவனுக்கு நெருக்கமான நிலையில் தான் இருப்பதை உணர்ந்து கொண்டவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

அவன் கண்களில் மோகமும், தாபமும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இருந்தது.

‘விலகு’ என்று அவள் மனம் கட்டளையிட அதை செயலாற்றும் வகை தெரியாமல் திணறத் தொடங்கினாள் வானதி.

தீ தீண்டும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
7
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here