Theendatha thee neeye Tamil Novels 32

2
5551
Madhumathi Bharath Tamil Novels

அத்தியாயம் 32

புதை மணலுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல உணர்ந்தாள் வானதி.அவன் அருகினில் அவள் மூச்சு முட்டத் தொடங்கியது அவளுக்கு.அவனை மீறி தன்னால் ஒரு இன்ச் கூட நகர முடியாது என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது.

அவளுக்குத் தெரிந்து ஈஸ்வரை இது தான் முதல் முறையாக இத்தனை நெருக்கத்தில் பார்ப்பது. அவன் பார்வை உரிமையுடன் அவள் மேல் படிந்ததில் அவளது தேகம் நடுங்கியது. அவன் விரல்கள் அவள் மேனியில் விளையாடிக் கொண்டு இருந்ததே தவிர, அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை.

‘இவனை நாமாக விலக்க நினைத்தால் கண்டிப்பா இவன் விலக மாட்டான்… ஏதாவது செய்டி வானதி’ என்று அவளது உள்மனம் அலறத் தொடங்க , அவளின் மூளையில் மின்னல் வெட்டியது போல வந்தது மூர்த்தியின் நினைவு தான்.

“மூர்த்தியை என்ன செஞ்சீங்க… அவர் இப்போ எங்கே இருக்கார்? எப்படி இருக்கார்?” என்று அவள் முயன்று வருவித்த நிதானத்தோடு கேட்க… அவள் மேனியில் நர்த்தனமாடிக் கொண்டு இருந்த அவன் விரல்கள் அப்படியே நின்று போனது.

“இப்போ இந்த கேள்வி முக்கியமா சில்லக்கா” என்று கேட்டவனின் குரலில் இருந்தே அவனுக்கு அந்த கேள்வி கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது புரிய வானதிக்கு உள்ளுக்குள் குதூகலமானது.

‘கடுப்பு வருதா? நல்லா வரட்டும்’ என்று எண்ணி குதூகலித்தவள் தொடர்ந்து பேசினாள்.

“எனக்கு முக்கியம்”

“எனக்கு பிடிக்கலை சில்லக்கா…வேற பேசலாமே” என்று அவன் கொஞ்சம் இறங்கி வர… அவளோ முரண்டு பிடித்தாள்.

“எனக்கு அதை பத்தி மட்டும் தான் பேசணும் ….”

“எனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய நினைக்காதே சில்லக்கா..விளைவுகள் பயங்கரமா இருக்கும்” என்றான் அவன் இறுகிப் போன குரலில்.

“எனக்கு மூர்த்தியை பத்தி பேசப் பிடிச்சு இருக்” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளது பேச்சு நிறுத்தப்பட்டது அவளது அருமை கணவன் ஈஸ்வரால்.

அவளது இதழ்களை ஆவேசமாக முற்றுகையிட்டான் ஈஸ்வர். அவளது பேச்சினால் விளைந்த கோபத்தை எல்லாம் அவளின் இதழின் மீது காட்டி அவளை திணறடித்தான் ஈஸ்வர்.

அவனை விலக்கித் தள்ள அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயன் இன்றி போக…அவளுக்கு பல யுகம் போல தோன்றிய சில நொடிகள் கடந்த பிறகு அவளை விட்டு நிதானமாக விலகினான் ஈஸ்வர். அவன் முகத்தில் கடுமை இல்லை. மாறாக கண்களில் ஒரு வித வெறுமை குடி வந்து இருந்தது.

“இனியொரு முறை எனக்குப் பிடிக்காததை செய்ய முயற்சி செய்யும் பொழுது அதோட விளைவுகளையும் ஏத்துக்க தயாரா இருந்துக்கோ”

அவனது செய்கையால் அவளது உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருக்க… அவனை எதிர்த்து பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவளது உடல் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

ஒரு ஆண்மகனின் முதல் தொடுகையில் அவளது தளிர்மேனி நடுங்கிக் கொண்டிருந்தது. அவளது நிலை கண்டு அவன் மனம் அவளுக்காக வருந்தியது.

‘ஏன்டி இப்படி பண்ணுற’ என்று அவளை அவன் திட்டினாலும் அவனால் அவளை கோபித்துக் கொள்ள முடியவில்லை.

இதற்கு முன்னரே ஈஸ்வர் அவளை சொந்தமாக்கி இருந்தாலும் அன்று நடந்த நிகழ்வுகள் எதுவுமே அவளுக்கு நினைவு இல்லாததால் அவளால் அவனது செய்கையை தாங்க முடியவில்லை என்பது அவனுக்கு புரியத் தான் செய்தது.

அவன் கோபத்தை காட்டிய விதமோ அல்லது அவனது முதல் தொடுகையோ இன்னதென்று இனம் பிரிக்க முடியாமல் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ஈஸ்வர்.

இந்த முறை அவனது செயலில் கோபம் இல்லை. மாறாக பயத்தில் நடுங்கியவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக இருந்தது அவனது செய்கை.

“ஒண்ணுமில்லை சில்லக்கா… பயப்படாதே… ஏதோ கோபம்….” என்று அவளை அவன் சமாதானம் செய்ய அவளது உடல் நடுக்கம் மெல்ல அடங்கியது.

“தூங்கு சில்லக்கா…” அவன் குரல் கட்டளையாக ஒலிக்க.. அவனது அணைப்பில் உறங்க மனமற்று அவள் விலக முயல அவனது அணைப்போ மேலும் இறுகியது.

“இப்படியே தூங்கு” என்று அதட்டல் போட… அவனது கரங்களுக்குள் அடங்க மறுத்து சற்று நேரம் திமிறிப் பார்த்தவள் அதனால் பயன் இல்லை என்பதை உணர்ந்து மெல்ல உறங்கத் தொடங்கினாள்.

அவள் உறங்கி விட்டாள் என்பது உறுதி ஆனதும் மெல்ல அவளை விட்டு விலகி படுத்தவன் உறங்கும் அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தான்.

“எனக்கு நம்பிக்கை இருக்கு சில்லக்கா… ஒருநாள் நீ என்னைப் புரிஞ்சுப்ப…அதுவரை நான் காத்துக்கிட்டு இருப்பேன்…எனக்குத் தேவை உன்னோட மனசு தான். அது முதலில் எனக்கு சொந்தமாகட்டும். முதலில் இந்த மூர்த்தியை நம்ம வாழ்க்கையில் இருந்து முழுசா விலக்கி வைக்கணும். அவனைப் பத்தி நீ பேசவோ, நினைக்கவோ கூடாது. அப்போ தான் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்” என்று சொன்னவன் அவளது உறக்கம் கலைக்காமல் அவளது நெற்றியில் மெல்ல இதழ்களை ஒற்றி எடுத்தான்.

அவளது முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளை அள்ளி தன் மேல் போட்டுக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான்.

காலையில் அவளுக்கு முன்னரே எழுந்து விட்டாலும் தன் மேல் படுத்து உறங்கும் மனைவியின் அழகு முகத்தில் மயங்கிப் போனவன் எழுந்து கொள்ள மனமில்லாமல் அவளை லேசாக அணைத்தவாறே அவளது முகத்தையே ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு உள்ளே ஒரு குரல் அவனைப் பார்த்து கேலி செய்து சிரித்தது.

‘உனக்கு நேத்து தான் கல்யாணம் நடந்து முடிஞ்சு இருக்கு…புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரியா நீ நடந்துக்கிற….ஏதோ குழந்தையை நெஞ்சில் போட்டு தாலாட்டுற மாதிரி செஞ்சுக்கிட்டு இருக்க’

‘எனக்கு அவ குழந்தை தான்…’

‘அவளை நீ குழந்தையாவே பார்க்கிற வரை உங்க கல்யாண வாழ்க்கையை தொடங்க முடியாது’ என்று அவனது மனசாட்சி சொல்ல… அதில் இருக்கும் உண்மையை யோசிக்கத் தொடங்கினான் ஈஸ்வர்.

‘முதலில் நீ அவளை நெருங்கு.. அப்ப தான் அவளும் உன்னை நெருங்குவாள்… இல்லைன்னா காலம் முழுக்க அவளை இப்படி நெஞ்சில் போட்டு ஆராரோன்னு தாலாட்டு பாடி நீ தூங்க வைக்க வேண்டியது தான்’ என்ற அவனின் மனசாட்சியின் கேலியில் இருந்த உண்மை அவனுக்கு புரிந்தது.

‘அவளே ஒதுங்கிப் போனாலும் இனி நான் ஒதுங்க மாட்டேன்’ என்ற அவசர முடிவு ஒன்றை எடுத்தவன் அவள் கண் விழிக்கும் நொடிக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

அவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விடியற்காலையில் அவள் எழுந்து கொள்ள முயல… அவளிடம் அசைவு தெரிந்ததும் அவசரமாக கண்களை இறுக மூடிக் கொண்டான் ஈஸ்வர்.

கண் விழித்த வானதி முதலில் பார்த்தது தன்னை அணைத்தவண்ணம் உறங்கிக் கொண்டு இருக்கும் ஈஸ்வரைத் தான். இரவு நடந்த அனைத்தும் கண் முன்னே ஒரு நொடி வந்து போக….அவளுக்கு குழப்பமே மிஞ்சியது.

‘இவன் பாம்பா…பழுதா? இவனைப் பத்தி இரு முடிவுக்கே வர முடியலையே’ என்று எண்ணியவள் அவனது உறக்கம் கலைக்காமல் எழுந்து கொள்ள முயல… அவளால் அது முடியுமா என்ன?

“என்ன சில்லக்கா எழுந்துட்டியா?” என்ற அவனின் குரலில் பதட்டத்தோடு நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அவன் கண்களோ மூடியபடியே இருந்தது. அவனுக்கு பதில் சொல்லாமல் நகர முடியாது என்பது உணர்ந்தவள் ஒற்றை எழுத்தில் முணுமுணுத்தாள்.

“ம்”

“எங்கே புருஷனுக்கு ஒரு மார்னிங் கிஸ் கொடு பார்க்கலாம்” என்று அவன் அசால்ட்டாக கேட்க, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“எ..என்னதுதுது?”

“ஏன் இப்படி ஷாக் ஆகுற… ஒரேயொரு முத்தம் தானே கேட்டேன்?” என்றான் அவன் கூலாக

‘விளையாடுகிறானோ’ என்று அவன் முகத்தையே அவள் உற்றுப் பார்க்க மூடிய கண்களில் இருந்து அவளால் எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லை.

“கட்டுன புருஷனுக்கு ஒரு முத்தம் கொடுக்க.. இவ்வளவு யோசனை தேவையா என்ன?”

“அதெல்லாம் முடியாது” என்று அவள் கூற… அவனோ கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் பேசினான்.

“அதனால என்ன பரவாயில்லை… நான் கொடுக்கிறேன்” என்றவன் அவளது இரு கன்னங்களிலும் மாறி மாறி இதழ் பதித்தவன் அடுத்து தன்னுடைய பார்வையை அவளது இதழுக்கு திருப்ப…வேகமாக இரண்டு கைகளையும் எடுத்து வாயின் முன் வைத்து அதை மறைத்துக் கொண்டவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு பீறிட்டு எழுந்தது.

“நான் கொடுக்கிற முத்தம் அவ்வளவு மோசமாவா இருக்கு…. இப்படி வாயை மூடிக்கிற?”என்று அவன் சீண்டலாக கேட்க… அவளோ வாயைத் திறந்து கூட பேசாமல் பேய் முழி முழித்தாள்.

அவள் அழுந்த மூடி இருந்த விரல்களை அவளுக்கு வலிக்காமல் பிரித்து எடுத்தவன் அவள் இதழ்களில் பட்டும்படாமலும் தன்னுடைய முரட்டு இதழ்களை ஒற்றி எடுத்தான்.

“இனி தினமும் காலையில் என்னை இப்படித்தான் எழுப்பணும்… புரிஞ்சுதா? கொடுக்காம எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்தா… அப்புறம் நடக்கிறதே வேற” என்று அவன் மிரட்டலாக முடிக்க அவள் கண்களை பயம் சூழ்ந்து கொண்டது.

அவனது உடல் வலிமை முன் தான் கண்டிப்பாக எதிர்த்து நிற்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். இவனை எப்படி சமாளிப்பது என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவள் கன்னம் தட்டி தன்னிலைக்கு கொண்டு வந்தான்.

“ரொம்ப யோசிக்காதே…. இன்னைக்கு முதல் நாள் அதனால இது போதும்… சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா….”

“…”

“என்ன குளிக்கப் போகும் எண்ணமில்லையா… வேணும்னா இரண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?” என்ற அவனின் கேள்வியில் அலறி அடித்துக் கொண்டு குளிக்கப் போனாள் வானதி.

அவளின் செய்கைகளை சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன் பக்கத்து அறைக்கு குளிக்க சென்று விட ,குளித்து விட்டு வெளியே வந்தவள் அங்கே அவன் இல்லாததைக் கண்டு நிம்மதியானாள்.

‘முன்னாடி எல்லாம் இப்படி நடந்துக்க மாட்டார்.. கல்யாணம் ஆனதும் இவரோட பேச்சு நடவடிக்கை எல்லாமே வித்தியாசமா இருக்கு… அதிகமா உரிமை எடுத்துக்கிற மாதிரி இருக்கே…. இதை எப்படி தடுக்கிறது?’

‘தடுத்து என்ன செய்ய போற வானதி… அவன் உன்னோட கணவன்… யாரிடம் போய் சொல்லுவ… என்னன்னு சொல்லுவ…கல்யாணத்திற்கு முன்னாடி நடந்தது எப்படி உங்க இரண்டு பேர் சம்பந்தப்பட்ட ரகசியமோ அதே மாதிரி தான் இப்பவும்.. இதையும் நீ வெளியில் மூணாவது நபர் கிட்ட சொல்ல முடியாது’ என்று அவள் மனசாட்சி எடுத்து சொல்ல, சோர்ந்து போன மனதுடன் கீழே சென்றாள் வானதி.

அங்கே டைனிங் ஹாலில் அவளுக்கு முன்பாக அவன் அமர்ந்து இருக்க அவனை ஒதுக்கி விட்டு அவள் தோட்டத்திற்கு செல்ல முயல பவுனம்மா அவளை அழைத்தார்.

“சாப்பிட வாங்கம்மா…”

“இல்ல..எனக்கு பசிக்கல… நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்”

“அது எப்படி பசி இல்லாம போகும்… கொஞ்சாமாவது சாப்பிடுங்க”

“அட உங்களுக்கு விஷயம் புரியலையாம்மா…”என்று இடை புகுந்தான் ஈஸ்வர்.

“என்ன விஷயம் தம்பி?”

“நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு…அவ எனக்கு ஊட்டி விட்டு…நான் அவளுக்கு ஊட்டி விட்டு அப்புறம் தான் சாப்பிட ஆரம்பிக்கணும்ன்னு நேத்து என்கிட்டே சொன்னா.. இப்போ நீங்க இருக்கவும் வெட்கப்படுறா மா” என்று அவன் ஒரு வெடிகுண்டை பற்ற வைக்க…. அவள் பயந்தது போலவே நடந்தது.

“அட..இவ்வளவு தானே ..நான் உள்ளே போயிடறேன்…நீங்க இரண்டு பேரும் சாப்பிடுங்க…” என்று சொன்னவர் வானதியின் கைகளைப் பற்றி அவனுக்கு அருகில் அமர வைத்து விட்டு செல்ல அவள் எழுந்து செல்ல முடியாத படி டேபிளுக்கு அடியில் அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான் ஈஸ்வர்.

“இருங்க தம்பி ஸ்வீட் செஞ்சேன்.. அதை கொண்டு வர மறந்துட்டேன்” என்று பவுனம்மா கிச்சனுக்குள் செல்ல…. பிடிவாதமாக எழுந்து செல்ல முயன்றவளை மீண்டும் அமர வைத்தவன் தன்னுடைய கால்களால் அவளது கால்களை கொக்கி போட்டது போல பிடித்துக் கொள்ள…வானதி உறைந்தே போனாள்.

முகத்தில் குறும்பு கூத்தாட… அவள் இருக்கும் நிலை கண்டு அவனுக்கு சிரிப்பு பீறிட்டு எழுந்தது. வானதி வெளியே சொல்லவும் முடியாமல் அவனை விலக்கவும் முடியாமல் அவள் போராடினாள்.

பவுனம்மா ஸ்வீட்டை கொண்டு வந்து டேபிளில் வைக்க… வானதியை சீண்டும் விதமாக பேசத் தொடங்கினான்.

“மதியம் என்ன சமையல் பவுனம்மா?”

“எல்லாம் உங்களுக்கு பிடிச்சது தான் தம்பி”

“அப்படியா சந்தோசம்… மறக்காம மெனுவில் சிக்கன் லெக் பீஸ் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க… அது என்னவோ தெரியலை.. லெக் பீஸ் எல்லாம் இப்ப ரொம்பவே பிடிக்குது” என்று சொன்னவன் அவர் அறியாத வண்ணம் வானதியைப் பார்த்து கண் சிமிட்ட… வானதியோ அவனை கண்களால் எரித்துக் கொண்டு இருந்தாள்.

அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் அவளுக்கும், அவனுக்குமாக சேர்த்து பரிமாறியபடி அவன் சாப்பிடத் தயாராக அங்கே இடைஞ்சலாக நிற்க மனமின்றி பவுனம்மா உள்ளே சென்று விட்டார்.

அவர் தலை மறைந்ததும் மொத்த கோபத்தையும் கண்களில் தேக்கி அவனை முறைக்க, அவனோ அவளை பார்வையால் பருக… வானதிக்கு தலையை முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“காலை விடுங்க…”

“என்னோட உட்கார்ந்து அமைதியா சாப்பிடறியா?” என்று அவன் பதில் கேள்வி கேட்க… அவனது எண்ணம் புரிந்து ஒரு நொடி அமைதியானவள் தலையை மட்டும் அசைக்க… மௌனமாக அமர்ந்து இருந்தவள் உணவை உண்ணாமல் கைகளால் தட்டில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தாள்.

“சாப்பிடும் பொழுது என்ன யோசனை? ஒழுங்கா சாப்பிடணும்” என்று உரிமையுடன் அதட்டியவனை அவள் பார்த்த பார்வையில் இருந்தது என்ன?

தீ தீண்டும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here