TTN Tamil Novels 38

3
4535

அத்தியாயம் 38

‘ஈஸ்வரால் தானே இத்தனையும்…. இப்படி முன்பின் அறியாதவர் கூட என்னை திட்டுகிறார் என்றால் அதற்குக் காரணமும் அவன் தானே? அவன் வரட்டும்… இன்னைக்கு என்னோட கேள்விக்கு அவன் பதில் சொல்லியே தீரணும்… எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்’ என்று வானதி உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்க, ஈஸ்வரின் கெட்ட நேரம் தானாகவே அவளைத் தேடி வந்தான்.

“என்ன மேடம் வேண்டுதல் பலமா? அப்படி என்ன வேண்டுதல்? சீக்கிரமே என்னுடைய மாமாவும் நானும் குடும்ப வாழ்க்கையை நல்ல படியா ஆரம்பிக்கணும்ன்னு வேண்டிக்கிட்டியா?” என்று அவன் கொஞ்சலாக கேட்க , அவனது பேச்சை கவனிக்காதவள் போல கோவிலை விட்டு வேகமாக வெளியேறி வந்து விட்டாள் வானதி.

அவளது செய்கையில் ஒரு நொடி முகம் சுருங்கினாலும் உடனடியாக சமாளித்துக் கொண்டு வேகமாக அவளை பின் தொடர்ந்து போனான் ஈஸ்வர்.

“என்னாச்சு சில்லக்கா… ரொம்ப கோபமா இருக்க போல?”

“சே! சே! உங்ககிட்டே எல்லாம் நான் கோபப்பட முடியுமா? நீங்க யாரு? எப்பேர்பட்ட ஆளு?” என்று அவள் மூக்கு விடைக்க கோபமாக பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே மறைவான பகுதிக்குள் அவளை இழுத்து தன்னுள் பொதித்துக் கொண்டான் ஈஸ்வர்.

“நான் உன் புருஷன்டி… என்கிட்டே கோபப்பட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு… சரி சொல்லு என்னோட மகாராணியை கோபப்படுத்தினது யார்?” என்றவனின் கரங்கள் அவளது இடையை வளைத்திருக்க கடும் பிரயத்தனம் செய்து அவனது கேள்விக்கு பதில் சொல்ல முயன்றாள் வானதி.

“இன்னும் எத்தனை நாள் இங்கே தங்கி இருக்கணும்?”

“இதென்ன கேள்வி வானதி? இது தான் நம்மோட வீடு… இங்கே தான் நாம இருக்கப் போறோம்…”

“இல்லை… இந்த வீட்டை எனக்குப் பிடிக்கலை…எவ்வளவு சீக்கிரம் இந்த வீட்டை விட்டு போறோமோ அவ்வளவு சீக்கிரம் போயாகணும்” என்றாள் கறாராக.

“இந்த வீட்டில் உனக்கு என்ன பிடிக்கலைன்னு சொல்லு வானதி… மாத்திடலாம்” என்றான் அவன் தன்மையாகவே…

“ஒண்ணா? இரண்டா? எதுவுமே பிடிக்கலை…”

“பிடிக்காதது இந்த வீடா? இல்ல வீட்டில் உள்ள மனுஷங்களா வானதி?” என்றான் துளைக்கும் பார்வையுடன்.

“பதில் தான் உங்களுக்கே தெரியும் போலவே” என்றாள் அவளும் பார்வையை எங்கோ பதித்து…

“வானதி என்னைப் பார்” என்று அவளுக்கு உத்தரவிட்டவன் அவளது கண்களை நேராக நோக்கி அவளது கண்களை ஊடுருவியவாறே பேசத் தொடங்கினான்.

“இது உன்னோட வீடு வானதி… இங்கே எது சரியில்லையோ அதை மாற்ற வேண்டியது உன்னோட பொறுப்பு…அதை விட்டுட்டு உன்னோட இடத்தையும், பொறுப்பையும் தட்டிக் கழிச்சிட்டு போறது புத்திசாலித்தனம் கிடையாது. புரிஞ்சுதா?”

“இது என்னோட வீடு … ஹ….. என்னோட வீடுன்னு நீங்க மட்டும் ஓயாம சொல்லி என்ன பிரயோஜனம்? மற்றவர்கள் என்னை அந்த மாதிரி பார்க்கலையே… ஏதோ எங்கிருந்தோ வந்த அனாதை சொத்தை கொள்ளை அடிக்கிறதுக்காக வந்த மாதிரி இல்லை எல்லாரும் நினைக்கிறாங்க” என்று உள்ளம் குமுற பேசியவளின் கண்களில் திரண்டு இருந்த கண்ணீர் அவளது மனவலியை சொல்ல, நொடியும் தாமதிக்காமல் அவளை இழுத்து அணைத்து இருந்தான் ஈஸ்வர்.

“அட… என் தங்கமே… உன்னை விடவா இந்த சொத்து பெருசு…இந்த சொத்து எல்லாத்தையும் காட்டிலும் விலை மதிக்க முடியாத பொக்கிஷம் நீன்னு அவங்களுக்கு தெரியலை.. தெரியாம மத்தவங்க உளறினதை எல்லாம் இவ்வளவு சீரியசா எடுத்துக்கிட்டு வருத்தப்படக் கூடாது சில்லக்கா… மாமா நான் இருக்கேன்ல”

அவனது பேச்சில் கொஞ்சம் அமைதி அடைந்தவள் இறுதி வரிகளில் வெகுண்டு எழுந்தவள் வேகமாக அவனை தள்ளி விட்டாள். அவளின் செய்கையை எதிர்பாராதவன் ஒரு நொடி தடுமாறி தன்னை சமாளித்துக் கொண்டு அவள் முகத்தையே பார்த்தான்.

கண்கள் கலங்கி உதடு துடிக்க நின்றவளின் கோலம் அவன் மனதை பிசையத் தொடங்கியது.

“எல்லாத்துக்கும் நீ தான்டா காரணம்.. உன்னால தான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்… நீ ஏன்டா என்னோட வாழ்க்கையில் வந்த?” என்று ஆத்திரத்தோடு கேட்டவள் அவனது நெஞ்சில் பலங்கொண்ட மட்டும் வேகமாக குத்தினாள்.

அவளின் அடிகளை எல்லாம் வாங்கிக் கொண்டவன் கற்பாறை போல இறுகிக் கிடந்தான்.

“உன்னோட வாழ்க்கையில் நான் வரல சில்லக்கா… என்னோட வாழ்க்கையில் தான் நீ வந்த…”

“ஆமா… உங்களுக்கும் அந்த மூர்த்திக்கும் முன்பகை… அவரை கல்யாணம் செஞ்சுக்க வேண்டி இருந்த என்னை கடத்தி அவரை வாழ்க்கையில் தோற்கடிச்சுட்டா… நீங்க ஜெயிச்சிடலாம்ன்னு நினைச்சு செஞ்ச ஏற்பாடு தானே இதெல்லாம்”

“ஒரு பெண்ணை பகடைக்காயா வைத்து ஜெயிக்கும் அளவுக்கு இந்த ஈஸ்வர் ஒண்ணும் மட்டமானவன் இல்லை வானதி. அவனை எனக்கு எதிரியா நான் நினைச்சு இருந்தா… அடுத்த நிமிஷமே அவனோட ஆயுள் முடிஞ்சு இருக்கும்.இப்ப வரைக்கும் அவன் உயிரோடு இருக்கிறதிலேயே தெரியலையா அவன் எனக்கு எதிரி இல்லைன்னு…”

“அப்புறமும் ஏன்? நான் என்ன பாவம் செஞ்சேன்?” என்று அவன் சட்டையை இழுத்து பிடித்து அவள் உலுக்க… சில நிமிடங்கள் அவளது செய்கையை வெறித்துப் பார்த்தவன் அடுத்த நிமிடம் ஓயாமல் பேசி புலம்பிக் கொண்டு இருந்த அவளது இதழ்களை சிறைப் பிடித்தான்.அவளை வன்மையாக தண்டிக்கிறோம் என்பது புரிந்தாலும் அவனது செய்கையை நிறுத்தாமல் தொடர்ந்தவன் வேண்டுமென்றே தாமதமாகவே அவளை விடுவித்தான்.

“பழைய ஈஸ்வர் உள்ளுக்குள் அப்படியே தான் இருக்கான் சில்லக்கா… உனக்காக… உன்னை வருத்தப்பட வைக்கக் கூடாதுன்னு அவனை எனக்குள்ளேயே புதைச்சு வச்சு இருக்கேன் அவ்வளவு தான்.நீ தேவை இல்லாத வேலை ஏதாவது செஞ்சா… அடுத்த நிமிஷமே அவன் வெளியே வந்துடுவான். புரிஞ்சுதா?” என்றான் மிரட்டலாக…

அவனையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தவளை கொஞ்சமும் சட்டை செய்யாது அவளை நெருங்கியவன் அவளது தாடையை அழுந்தப் பற்றி தன்னுடைய முகத்திற்கு அருகில் இழுத்தான்.

“ஒண்ணு மூர்த்தினு ஒருத்தன் உன்னோட வாழ்க்கையில் வந்ததை மறந்துடு… இல்லை… நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த எல்லா விஷயத்தையுமே மறந்துடு…அது தான் உனக்கு நல்லது..அதை விட்டுட்டு பழைய விஷயங்களை பிடிச்சு தொங்கிட்டு இருந்தன்னு வை… அப்புறம் உன்னோட நிகழ்காலம் கவலைக்குரியதா மாறிடும்” என்று ஒற்றை விரல் உயர்த்தி எச்சரித்தவன் அவளின் அதிர்ந்த கோலம் கண்டு கொஞ்சமும் மனம்  இறங்காமல் வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டான்.

‘சே! என்ன மனுஷன் இவன்? எப்போ எப்படி நடந்துப்பான்னு தெரியவே மாட்டேங்குது… இவன் இஷ்டத்துக்கு ஆடிகிட்டே இருந்தா இவன் நல்லவன்… ஏன்டா இப்படி செஞ்சன்னு எதிர்த்து கேள்வி கேட்டா இப்படித் தான் நடந்து கொள்வானா?’ என்று எண்ணியபடி அவனது இதழ் ஒற்றலின் போது தீயாய் உரசிச் சென்ற மீசை ரோமங்கள் ஏற்படுத்திய எரிச்சலை எண்ணி அவளுக்குள் ஆத்திரம் பெருகியது.

‘கூடாது… இவன் கூட இருக்கவே கூடாது… உடனே இங்கே இருந்து கிளம்பியாகணும்’ என்று எண்ணம் போன போக்கில் யோசித்துக் கொண்டிருந்தவள் ஆணி அடித்தது போல நின்று விட்டாள்.

‘ஏன்? … எதற்கு?… ’ என்ற கேள்வியை விட வேறு ஒரு கேள்வி பூதாகரமாக தோன்றி அவளை பயமுறுத்தியது.

‘எங்கே போவது? கண்டிப்பாக மூர்த்தியிடம் போகக் கூடாது. சுந்தரேசன் அய்யாவிடம் போய் சேர்ந்து விட வேண்டியது தான்.முதலில் கொஞ்சம் திட்டினாலும் பிறகு என்னை சேர்த்துக் கொள்வார்’ என்று தன்னுடைய போக்கில் எண்ணிக் கொண்டாள்.

‘அதெல்லாம் சரி… எப்படி இந்த வீட்டை விட்டு வெளியே போவது? மூர்த்தியை பார்க்கும் பொழுது அவனுடன் சேர்ந்து அப்படியே ஊருக்கு போய் விடலாமா?’ என்ற எண்ணம் தோன்றிய உடனே மறைந்து போனது.

‘தலையே போனாலும் அவனை நம்பி போவது ஆபத்து’ என்று உள்ளுணர்வு உந்த இங்கே இருந்தபடியே எப்படியாவது அய்யாவுக்கு தகவல் அனுப்பி விட வேண்டியது தான்’ என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் கண்களால் ஈஸ்வரைத் தேட அவன் சிக்காமல் போக , வேகமாக தங்களுடைய அறைக்கு சென்றவள் போனில் சுந்தரேசன் அய்யாவை தொடர்பு கொண்டாள்.

“ஹலோ” என்ற சுந்தரேசனின் குரலைக் கேட்டதும் பரபரப்பாக பேசத் தொடங்கினாள்.

“அய்யா… போனை வச்சுடாதீங்க…நான் தான் வானதி பேசுறேன்”

“…”

“இன்னமும் என் மேல இருக்கிற கோபம் தீரலையா? என்கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டீங்களா?”

“…”

“அய்யா… ப்ளீஸ் … எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலை…நான்..நான் மறுபடியும் நம்ம ஆசிரமத்துக்கே வந்துடட்டுமா?”

“…”

“இந்த ஈஸ்வர் என்னை எப்பப்பாரு மிரட்டிகிட்டே இருக்கான். இந்த வீட்டில் வேலை பார்க்கிற திவான் பூபதி அவர் ஒரு மாதிரி பேசுறார்.. இதெல்லாம் போதாதுன்னு இன்னைக்கு அந்த மூர்த்தி போன் செஞ்சு உன்னை நேர்ல பார்க்கணும்னு சொல்றான்…நான் என்ன தான் செய்ய?”என்று கோபமாக பேசத் தொடங்கியவள் அழுகையில் முடிக்க, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவளிடம் பேசத் தொடங்கினார் சுந்தரேசன்.

“அழுதா எதுவும் மாறப் போறது இல்லை…நான் கூடிய சீக்கிரம் உன்னை சந்திக்கிறேன்.”என்றவர் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனை வைத்து விட வானதியின் அழுகை அதிகமானது.

அவளின் அழுகையை திருப்தியுடன் திவான் பூபதியின் கண்கள் ரசித்துக் கொண்டு இருந்ததை அவள் அறியவில்லை.

‘கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்டே என்ன பேச்சு பேசின.. இப்போ உட்கார்ந்து அழறியா? அழு… நல்லா அழு…உன்னை கதற வைக்கிறேன் பார்’ என்று சூளுரைத்தவர் மனதில் திட்டத்தோடு அங்கிருந்து செல்ல இரவு உணவை மறுத்து விட்டு ஓய்ந்து போன தோற்றத்துடன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள் வானதி.

அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் ஈஸ்வர் வந்து சேர, அவனை பார்க்க விரும்பாமல் கண்களை இறுக மூடியபடியே உறங்குவது போல பாசாங்கு செய்தாள்.எப்பொழுதும் போல அவள் அருகே வந்தவன் அவளை எடுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டவன் தூங்க ஆரம்பிக்க வானதிக்கு உள்ளுக்குள் அத்தனை ஆத்திரம்.

‘பேசுறது எல்லாம் பேசிட வேண்டியது… செய்யுறது எல்லாம் செஞ்சிட வேண்டியது… கடைசியில் உத்தம பத்தினன் மாதிரி அப்படியே பொண்டாட்டி பக்கத்தில் இல்லேன்னா தூங்க முடியாத ஆள் மாதிரி நடந்துக்க வேண்டியது’ என்று அவனை மனதுக்குள் வறுத்துக் கொட்டியவள் சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்து விட்டு அவனது அணைப்பில் இருந்து விலகி படுக்க முயல…தன்னுடைய இரும்புக் கரங்களால் மங்கையவளை பூப்பந்தாய் தன்னுள் சுருட்டி வைத்துக் கொண்டான் ஈஸ்வர்.

அதிர்வுடன் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க, அந்த இருளிலும் கூட அவன் பார்வை அவள் மீது அப்பி இருந்ததை உணர முடிந்தவளுக்கு  மேனியில் மெல்லியதோர் நடுக்கம் பிறந்தது.

“ஏன்டி என்னை பலவீனப்படுத்துற?” என்றவனின் கேள்வி புரியாமல் கண்களை விரித்து அவனைப் பார்க்க… அந்த அழகில் மயங்கித் தான் போனான் அந்த கண்ணாளன்.

“அப்படி உன்னோட முட்டைக் கண்ணை விரிச்சு பார்க்காதடி… என்னால முடியல…” என்றவனின் பார்வை உணர்த்திய செய்தி…அவளை விதிர்விதிர்க்க செய்தது.

“முன்னாடி எல்லாம் இப்படி இருக்க மாட்டேன்டி… உன் விஷயத்தில் எல்லாமே என்னோட கட்டுப்பாட்டில் தான் இருக்கு… ஆனா எதுவுமே என் வசம் இல்லை… ஏன்?” என்று புரியாதவன் போல கேள்வி கேட்டவனுக்கு எப்படி பதில் சொல்வது என்று புரியாமல் அவள் தடுமாறினாள்.

“தயவு செஞ்சு பழசு எல்லாத்தையும் மறந்துடுடி… இப்போ இது தான் நிஜம்…இது தான் உன்னோட வாழ்க்கை அப்படிங்கிறத உன்னோட மனசில் நல்லா பதிய வச்சுக்க… சாயந்திரம் தோட்டத்தில் வச்சு உனக்கு முத்தம் கொடுத்ததில் இருந்து நான் நானாவே இல்லை… நானும் மனுஷன் தானே… எனக்கும் உணர்வுகள் இருக்காதா?கல்யாணம் ஆன பின்னாலும் பிரம்மசாரியா இருக்க சொன்னா எப்படிடி? சாயந்திரம் கொஞ்சமா கிடைச்சது… இப்போ நிறைய… மொத்தமா வேணும்னு மனசு கிடந்து அடிச்சுக்குதுடி… “ என்றவன் பேசிக் கொண்டே போக அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.

“என்னடி அப்படி பார்க்கிற? என்னோட தேவையை நான் உன்கிட்டே தானே சொல்ல முடியும்? பசிக்குதுன்னு எப்படி அம்மா கிட்டே சொல்றோமோ அது மாதிரி என்னோட தேவையை பொண்டாட்டி உன்கிட்டே தானேடி சொல்ல முடியும்?” என்றவனின் நேருக்கு நேரான கேள்வியை அசட்டையாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை அவளால்.

“எது எப்படி இருந்தாலும்… நமக்கு கல்யாணம் நடந்துடுச்சு… என்னுடைய உணர்வுகளின் பசிக்கு நீ மட்டும் தானேடி சாப்பாடு போட முடியும். உனக்கு புரியலையா இல்ல பிடிக்கலையா?” என்று அவன் தொடர்ந்து பேசிக் கொண்டே போக அவனது பேச்சை நிறுத்தும் வழி தெரியாமல் திணறினாள் வானதி.

ஒன்றுமே பேசாமல் அவளாகவே அவனது நெஞ்சின் மீது படுத்துக் கொண்டவள் கைகள் லேசாக நடுங்க… அவனை தட்டிக் கொடுத்து உறங்க வைக்க முற்பட்டாள். அவள் தனக்கு நிம்மதியை கொடுக்க முயல்கிறாள் என்பது புரிந்தாலும் அவனது இப்போதைய தேவை உறக்கம் இல்லையே…

சட்டென்று அவளை உதறித் தள்ளியவன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டான்.

“ஸோ… இது தான் உன்னுடைய முடிவு இல்ல…”

“…”

“நானா வாய் விட்டு கேட்ட பிறகும் கூட எனக்காக கொஞ்சம் கூட இறங்கி வர மாட்ட இல்ல…”என்று அவன் குரலை உயர்த்திக் கத்த… வானதிக்கு அடி வயிற்றில் பயப்பந்து உருண்டது.

கோபத்தில் இருந்து ஈஸ்வரின் முகம் மெல்ல மெல்ல புன்னகைக்கு மாற… பயத்தில் அவளுக்கு உடம்பெல்லாம் வேர்த்து வழியத் தொடங்கியது.ஈஸ்வரின் கோபத்தை சமாளித்து விடலாம்.ஆனால் அவனது புன்னகை அதிக ஆபத்து நிறைந்தது என்பது அனுபவத்தில் அவள் கண்ட உண்மை ஆயிற்றே…

புன்னகை மாறாமல் அவன் கேட்ட கேள்வியில் அவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தாள் வானதி.

தீ தீண்டும்.

Facebook Comments

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here