TTN Tamil Novels 40

6
4202

விழா முடிந்ததும் நிறைவான மனதுடன் வீட்டிற்கு வந்தாள் வானதி. அவள் மனம் முழுக்க அன்றைய நாளில் அவளை அன்போடு எதிர்கொண்ட தொழிலாளர்களின் முகமே நிறைந்து இருந்தது. அனாதையாக ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவள் வானதி. தன் மீது நேசம் வைக்கவும், அன்பு காட்டவும் இந்த உலகத்தில் யாருமே இல்லை என்ற எண்ணம் அவளது ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து இருந்தது. அப்படிபட்டவளின் மீது இன்று இத்தனை பேர் அன்பு செலுத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ஈஸ்வர் ஒருவன் மட்டுமே என்று அவள் உள்மனம் அடித்துப் பேசியதை ஏற்கவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் தடுமாறினாள் அந்த பேதை.

ஈஸ்வரின் பால் தன்னுடைய மனம் மெல்ல மெல்ல ஈர்க்கப்படுவதை அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவனுடன் பழகிய அந்த நான்கு மாதத்தில் அவனது குணம் அவளுக்கு அத்துப்படி. அவன் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் அளவுக்கு ஒழுங்கீனன் கிடையாது. அந்த நாட்களில் ஒரு தப்பான பார்வை கூட அவன் பார்த்தது கிடையாது.

தாலி கட்டி ஊரறிய மனைவியாய் மாறி விட்ட பின்பும் கூட தான் செய்த செயலை எண்ணி தவித்துக் கொண்டு இருப்பவன் அவன். அந்த காரணத்தினால் தான் மனம் முழுக்க ஆசையும், காதலும், தாபமும் இருந்தும் கூட, இன்னும் அவளை அவன் நெருங்கி ஆக்கிரமிக்காமல் இருக்கிறான் என்பதும் அவள் அறிந்ததே.

அவளுக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும்.. இருந்தும்… இருந்தும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது… அவன் நல்லவனாகவே இருந்தாலும் அவனை நெருங்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்தது. அதை எப்படி சரி செய்வது என்று புரியாமலே தொடர்ந்து வந்த நாட்களை கழிக்கத் தொடங்கினாள் வானதி.

அவள் அந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் கடந்து இருந்தது. அவளிடம் போனில் சொன்னது போல சுந்தரேசன் அய்யா அவளைப் பார்க்க வரவே இல்லை. அவர் அவளை சந்திக்க விருப்பம் இல்லாமல் வராமல் இருக்கிறாரா இல்லை அவரது வருகையை ஈஸ்வர் தடுத்துக் கொண்டு இருக்கிறானோ என்ற ஐயம் அவளுக்கு எழும்பாமல் இல்லை. ஈஸ்வர் தான் அவளை யாரும் சுலபத்தில் நெருங்கி விட முடியாதபடி அவளுக்கு அரணாக நிற்கிறானே.

அந்தக் குழப்பம் ஒரு பக்கம் இருக்க, மூர்த்தி அவளை பார்க்க வருவதாக சொன்னது வேறு அவளது மனதில் அவ்வபொழுது தோன்றி உறுத்திக் கொண்டே இருந்தது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தால் நிச்சயம் அவனை சந்திக்க முடியாது என்பது அவளுக்கு அங்கே வந்த கொஞ்ச நாளிலேயே புரிந்து போனது. அந்த வீட்டின் பாதுகாப்பை அந்த அளவிற்கு வலுப்படுத்தி இருந்தான் ஈஸ்வர்.

அவனை சந்தித்து நேரில் பேசி முடித்து விட்டால், அத்தோடு அவன் தொல்லை ஒழிந்து விடும். அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று எண்ணியவள் ஈஸ்வரிடம் ஒருநாள் தானாகவே வலிய சென்று ஒரு பிரச்சினையை உருவாக்கினாள்.

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல…”

“உன்னைத் தான்டி சில்லக்கா” என்றவன் குறும்பாக கண் சிமிட்ட… இழுத்து பிடித்து வைத்திருந்த கோபம் டாட்டா காட்டி விட்டு ஓடிவிடும் போல இருந்தது வானதிக்கு. வெகுவாக பிரயத்தனம் செய்து எச்சரிக்கையுடன் அவன் முகத்தை பார்க்காமல் முன்கூட்டியே பேசி ஒத்திகை பார்த்த வார்த்தைகளை மனதுக்குள் கோர்த்து அப்படியே ஒப்புவித்தாள் அவனிடம்.

“என்னை எப்பவும் சுதந்திரமா இருக்கவே விட மாட்டீங்களா? முன்னாடி கப்பலில் அடைச்சு வச்சு இருந்தீங்க.. அப்புறம் தீவில் அந்த தனி வீட்டில்… இப்போ இந்த வீட்டில்…”

“ஏன் சில்லக்கா… இங்கே உனக்கு ஏதாவது வசதி குறைவா இருக்கா?” என்றான் நிஜ அக்கறையுடன்.

“ஆமா.. எனக்கு மூச்சு முட்டுது.. இங்கே என்னை நீங்க எல்லாருமா சேர்ந்து அடைச்சு வச்சு இருக்க மாதிரி… காத்தே இல்லாத மாதிரி…”திணறலாக பேசியவளை கவலையுடன் உற்று நோக்கினான் ஈஸ்வர்.

“சரி.. சரி.. சிரமப்படாதே… என்னோட மகாராணிக்கு இப்போ என்ன வேணுமாம்?” என்றான் கொஞ்சலாக

“எனக்கு வெளியில் போகணும்”

“ப்பூ… இவ்வளவு தானா? நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு.. உலகம் பூரா உனக்கு மாமா சுத்திக் காட்டுறேன்… யாராவது கேட்டா ஹனிமூன்னு சொல்லிக்கலாம்… ஓகே வா” என்றான் உற்சாகமாக…

‘நீ அதிலேயே இரு’ என்று பல்லைக் கடித்தாள் வானதி. ஏனெனில் வானதியிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவளுக்காக அவன் இன்னமும் அமைதியாக காத்திருப்பதை மெல்லியதாக அறிவுறுத்த தயங்கியதில்லை ஈஸ்வர்.

அள்ளி அணைப்பது போல சில நேரம் கண்களில் ஆசையுடன் நெருங்குவான். அவள் கண்களில் மிரட்சியை கண்டு விட்டால் கடைசி நொடியில் தன்னை சமாளித்து ஒதுங்கி விடுவான். அதே நேரம் எல்லா நேரமும் அவன் அப்படி நல்ல பிள்ளையாக முற்றிலும் ஒதுங்கிப் போய் விடுவதும் கிடையாது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத தருணங்களில் அவளை ஆசையுடன் அணைத்து மென்மையாக இதழ் ஒற்றுவதும் உண்டு தான். ஒவ்வொரு முறையும் அவன் அவளுக்காக காத்திருப்பதையும், அவளது மாமா என்ற அழைப்பை கேட்பதற்காகவும் ரொம்பவே தவித்துப் போய் இருப்பதையும் அவளுக்கு உணர்த்தத் தொடங்கினான். இதை எல்லாம் உணர்ந்த வானதிக்கு நெஞ்சில் அச்சம் ஏற்படத் தொடங்கியது.அவளுடைய மனது உறுதியாக இருந்தால் அந்த அச்சத்திற்கு அவசியம் இல்லை.அவள் மனது தான் கொஞ்ச நாட்களாக ஈஸ்வர் ஜெபம் செய்யத் தொடங்கி விட்டதே.

“அங்கேயும் உங்க கூடவா?” என்று காரமாக அவள் எதிர்க்கேள்வி கேட்ட விதத்தில் அவனது உற்சாகம் காற்று போன பலூனாக வடிந்து விட்டது.

“ஓ… என்னோட வெளியே வர மேடம்க்கு இஷ்டம் இல்லை. அப்படித்தானே.. சரி வேற என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிற சில்லக்கா” அவன் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தாலும் அவனுக்காக இப்பொழுது இறங்கி வந்தால் காரியமே கெட்டு விடும் என்பதால் முறுக்கிக் கொண்டே இருந்தாள் வானதி.

“நான் தினமும் எங்கேயாவது வெளியில் போய்ட்டு வர ஏற்பாடு செய்ங்க”

“எங்கேயாவது னா?”அவன் பார்வையில் அழுத்தம் அதிகரித்தது.

“எங்கேயாவதுன்னு அர்த்தம்… கோவில், குளம், தோப்பு, துரவு இப்படி எங்கேயாவது”

ஈஸ்வரின் பார்வை அவளின் முகத்தை ஆராயும் விதத்தில் ஊடுறுவ சட்டென்று முகத்தை மாற்றி பாவம் போல வைத்துக் கொண்டாள்.

“சரி சில்லக்கா.. நான் ஏற்பாடு செய்றேன். ஆனா தனியா அனுப்ப மாட்டேன். யாரையாவது துணைக்கு அனுப்புவேன். அதே மாதிரி நான் தான் கூட்டிட்டு போவேன். மறுபடி என்னோட தான் நீ வீட்டுக்கு வரணும். சம்மதமா?” என்று கேட்க வேறுவழியின்றி அவள் தலை தானாகவே அசைந்தது.

வீட்டிலேயே அடைந்து கிடப்பதற்கு இது கொஞ்சம் பரவாயில்லை என்று எண்ணியவாறே அவள் உள்ளே சென்று விட ஈஸ்வரின் மூளை படுவேகமாக சிந்திக்கத் தொடங்கியது.

கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு யார் எல்லாம் வந்து போனார்கள் என்று விசாரிக்கத் தொடங்கினான். வீட்டிற்கு வந்த போன் கால்ஸ்… வெளியே யாருக்கு எல்லாம் போன் பேசப்பட்டு இருக்கிறது என்பது போன்ற விவரங்களை சேகரித்தவன் தலையை பிய்த்துக் கொண்டான்.

‘இதில் சந்தேகப்படும்படியாக ஒன்றுமே இல்லையே… ஆனால் அவளது முக பாவனை எதுவுமே சரியில்லையே’ என்று எண்ணி குழம்பித் தவித்தான் ஈஸ்வர்.அவளுக்காக அவன் செய்து இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் அதிகரித்தான்.வீட்டை விட்டு செல்லும் பொழுது அவன் தான் அழைத்து செல்கிறான் என்றாலும் அவன் சென்ற பிறகு அவளுக்கு பாதுகாப்பாக மைக்கேலையும், பவுனம்மாவையும் அழைத்து சென்றவன் தனியாக detective ஏஜென்சியில் சொல்லி அவளுக்கு ஷேடோ(Shadow)வும் நியமித்து இருந்தான்.அதன் பிறகே அவளை வெளியில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்தான்.

அதன்படி தினமும் ஒவ்வொரு இடமாக ஈஸ்வர் அவளை அழைத்து சென்றான். காலையில் அவன் வேலைக்கு புறப்படும் பொழுது அவளை கொண்டு போய் தோப்பில் இறக்கி விட்டுவிட்டு மதியம் ஒரு மணி வாக்கில் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவான்.

அது குறித்து திவான் பூபதி ஒருமுறை அவளை சந்தேகமாக பார்த்த பொழுது கூட அவள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை.

எப்பொழுதும் போல ஒருநாள் அவளை காலையில் அவர்களுக்கு சொந்தமான தோப்பில் இறக்கி விட்டு சென்று விட, அந்தப் பக்கத்தில் யாரோ ஒரு அரசியல்வாதி இறந்ததால் ஏரியாவே கொஞ்சம் கலவரமாக இருந்தது. அங்கங்கே கல் எறிவதும், பொது சொத்துக்களை சேதப்படுத்துவதுமாக இருக்க, வானதி கொஞ்சம் பயந்து போனாள். ஈஸ்வர் வராமல் தோப்பை விட்டு வெளியே போகவும் முடியாது. உடன் அவளது பாதுகாப்பிற்கு ஆட்கள் இருக்கிறார்கள் தான். இருந்தாலும் கூட துணைக்கு இருக்கும் யாரோ ஒருவர் எல்லாம் ஈஸ்வர் ஆகி விட முடியுமா? அவர்கள் தோப்பு இருக்கும் ஏரியாவிற்கு பக்கத்து தெருவில் கலகக்காரர்கள் பிரச்சினை செய்வது தெரியவர உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கினாள் வானதி.

ஈஸ்வர் இந்த நேரம் அருகில் இருந்தால் தனக்கு ஆயிரம் யானை பலம் கிடைத்து விடும் என்று மனது சொல்ல அவனது வருகையை ஒருவித பரபரப்புடன் எதிர்பார்த்தாள் வானதி.

ஒவ்வொரு நொடியும் திக் திக்கென்று கழிய அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் மின்னல் போன்ற வேகத்துடன் அவளை நோக்கி ஓடி வந்தான் ஈஸ்வர். தோப்பின் எல்லை வரை மட்டுமே காரில் வர முடியும். அதன்பிறகு நடந்து தான் வந்தாக வேண்டும்.

‘உள்ளே தான் வந்தாயிற்றே… கொஞ்சம் பொறுமையாகவே வந்து இருக்கலாமே’ என்று அவள் எண்ணும் பொழுதே அவளை நெருங்கியவன் பதட்டத்துடன் அவளை தலையில் இருந்து கால் வரை அலசினான்.

“உ.. உனக்கு ஒண்ணுமில்லையே சில்லக்கா”

“எனக்கு ஒண்ணும் இல்லை.. எதுக்கு இவ்வளவு பதட்டம்… நம்ம இடத்தில் தானே இருக்கேன்” என்றாள் அவனை அமைதிபடுத்துவது போல…

அவள் பேச்சையே கவனிக்காதவன் போல அவன் பார்வையாக லேசராக சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது.

பிறகு அவள் கைகளை பற்றியவன் அடுத்த நொடி வேகமாக அவளை இழுத்துக் கொண்டு போய் காரில் ஏற்றினான்.

“என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இவ்வளவு வேகம்?” என்று கேட்க அவன் பார்வை சுற்றுபுறத்தையே அலசி ஆராய்ந்து கொண்டு இருந்ததைப் பார்த்து விட்டு அவளும் வெளியே பார்வையை செலுத்த, ‘அங்கே சற்று தொலைவில் இருந்த மாமரத்தின் பின்னால் நிற்பவன் மூர்த்தி மாதிரி இருக்கிறதே’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே கார் புயல் வேகத்தில் பறந்தது.

‘ஒருவேளை இவர் மூர்த்தியை பார்த்து இருப்பாரோ’ என்று அவள் அஞ்சிக் கொண்டே அவன் முகத்தை பார்க்க… இறுகிப் போய் கிடந்த அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை அவளால். கார் இடையில் எங்கேயும் நிற்காமல் போக்குவரத்து விதிகளைப் பற்றிய கவலை கூட நின்றி ரோட்டில் புயலென சீறிப் பாய்ந்து நேராக அவர்களின் வீட்டிற்கு போய் சேர்ந்தது.

அவளை இறக்கி விட்டவன் பவுனம்மாவிடம் அவளை ஒப்படைத்து விட்டு கீழே இருந்த தன்னுடைய அலுவலக அறைக்குள் தன்னுடைய ஆட்களுடன் நுழைய , ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட வானதி மெல்ல படியேறி தன்னுடைய அறைக்குள் போனாள்.

‘மூர்த்தி எப்போ அங்கே வந்தார்? எப்படி வந்தார்? நான் இன்னைக்கு அங்கே வருவேன்னு தெரிஞ்சு என்னைப் பார்த்து பேசத் தான் வந்தாரோ? மூர்த்தியை அவர் பார்த்தாரா? பார்த்து இருந்தால் நிச்சயம் சும்மா விட்டு இருக்க மாட்டாரே’ என்றெல்லாம் எண்ணி அவள் குழம்பி தவித்துக் கொண்டு இருக்க அவளது அறையில் உள்ள டெலிபோன் அடிக்கத் தொடங்கியது. வீட்டு வேலையாட்கள் சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று கேட்க அழைக்கிறார்கள் என்று எண்ணி அசுவாரசியமாக போனை எடுத்தாள் வானதி.

“ஹலோ…”

“வானதி நான் மூர்த்தி பேசறேன்”

“சொ… சொல்லுங்க”

“இன்னைக்கு உன்னை பார்க்க நான் வந்து இருந்தேன்… ஆனா” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே ஈஸ்வரின் குரல் அருகில் நெருங்கி வருவது போல கேட்க, பட்டென்று போனை வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

“சில்லக்கா… நம்ம எஸ்டேட்டில் வேலை செய்யுற ஒரு பொண்ணுக்கு கல்யாணம். பத்திரிக்கை கொண்டு வந்து இருக்காங்க. இப்படி வந்தா நம்ம வீட்டு சார்பா கொஞ்சம் பணமும், புடவையும், தங்கமும் கொடுத்து அனுப்புறது நம்ம வீட்டு வழக்கம். இப்போ தான் நீ வந்துட்டியே… இனி நீயே இதெல்லாம் கொடு” என்றவன் அவளை அனுப்பி வைக்க.. அதே நேரம் மீண்டும் போன் அடிக்க வானதி பதட்டம் அடைந்தாள்.

‘கண்டிப்பா மூர்த்தி தான் கால் பண்ணுறார்… ஆனா இப்போ எப்படி பேசுறது’ என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளை கைப்பிடித்து அழைத்து அறையின் வாயில் வரை கொண்டு வந்து விட்டவன் கீழே போகுமாறு பணித்தான்.

“இந்த நேரத்தில் யாரோட போன்னு தெரியல… நீ போ சில்லக்கா.. நான் பேசிட்டு வர்றேன்” என்று சொன்னவன் அறைக்குள் சென்று விட கீழே செல்ல மனமின்றி அங்கேயே சுவற்றில் சாய்ந்து கொண்டு உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க நினைத்தாள் வானதி. அவள் இதயம் அதீத வேகத்துடன் துடித்துக் கொண்டிருந்தது. ஏதோ விரும்பத்தகாத நிகழ்வு ஏற்படப்போவதைப் போல அவள் நெஞ்சம் பதறியது.

மூச்சை அடக்கி உள்ளே என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள காதை நன்றாக தீட்டிக் கொண்டு காத்திருந்தாள் வானதி.

“ஹலோ…” என்ற ஈஸ்வரின் கம்பீரமான குரலை வெளியில் நின்றபடியே ரசித்துக் கொண்டு இருந்தாள் வானதி.

“…”

“ஹலோ… போன் செஞ்சிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்… யார் பேசுறது?” ஈஸ்வரின் குரலில் கோபம் அதிகரித்து இருந்ததை அவளால் உணர முடிந்தது.

“…”

“யாருன்னு சொல்றீங்களா… இல்லை” என்று பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே ஈஸ்வரின் பேச்சு சில நொடிகள் நின்று போனது.

“சொல்லுடா மூர்த்தி… எதுக்கு போன் செஞ்ச?” என்ற அசுவாரசியமான குரலில் கேட்க… வானதிக்கு இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.

‘போச்சு… மூர்த்திதான்னு கண்டுபிடிச்சுட்டார்… இனி என்ன ஆகப் போகுதோ’ என்று அவள் பதற ஈஸ்வர் போனில் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தான்.

“ஹா ஹா… ஏன்டா… அப்படிக் கூப்பிடக் கூடாதா? எனக்கு அந்த உறவு இல்லையா என்ன?” என்றான் அதீத நக்கலுடன்…

“…”

“ம்ச்… அண்ணன் கிட்டே அப்படி எல்லாம் பேசக் கூடாது தம்பி… மரியாதையா அண்ணான்னு வாய் நிறைய கூப்பிட்டு பழகு” என்றான் அதே புன்னகை மாறாமல்…

அறையின் வெளியில் இருந்த வானதிக்கு நடந்த பேச்சு வார்த்தையில் கண் முன்னே உலகம் இருண்டது. கொடிய கனவொன்று நிஜமானதை நம்ப முடியாமல் அப்படியே மயங்கி சுருண்டு விழுந்தாள் அந்தப் பேதை.

தீ தீண்டும்…

Facebook Comments
Previous NovelTTN Tamil Novels 39
Next NovelMannavan Paingili 2
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here