TTN Tamil Novels 41

4
3718

ஹாய் மக்காஸ்,
அடுத்த எபி போட்டாச்சு…போன எபியில் உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.
இந்த எபி கொடுக்க தாமதம் ஆகிடுச்சு. உடல்நிலையை கருத்தில் கொண்டு அதை புரிந்து கொண்டு காத்திருந்த நட்புகளுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்.

அத்தியாயம் 41

கொடுமையான வெயிலில் பாலைவனத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்ள தனியே நடந்து கொண்டு இருக்கும் பொழுது விஷப் பாம்பு ஒன்று துரத்தினால் எந்த அளவிற்கு பயம் வருமோ அதை விட அதிக பயத்துடன் அலறிக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்தாள் வானதி. கனவை விட நிஜம் அவளுக்கு அதிகமாக வலிக்க செய்தது.

அறையின் படுக்கையில் அவள் மட்டுமே படுத்து இருக்க… யாரையும் அருகில் காணவில்லை. யாரும் அருகில் இல்லாதது கூட அந்த நேரத்தில் அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏனெனில் அவள் இருக்கும் மனநிலையில் யாரையும்… குறிப்பாக ஈஸ்வரை தனித்து சந்திப்பதை அவள் விரும்பவில்லை. படுக்கையிலேயே மேலும் சில மணி நேரங்களை கழித்தாள் வானதி.

இது நாள் வரை எந்த உண்மையையும் அவள் தெரிந்து கொள்ளாமல் முட்டாள்த்தனமாக இருந்து விட்டாளா அல்லது வேண்டுமென்றே அந்த உண்மைகள் அவளிடம் இருந்து மறைக்கப்பட்டதா? ஈஸ்வரும், மூர்த்தியும் அண்ணன் , தம்பிகளா? அதை ஏன் யாருமே அவளிடம் கூறவில்லை. மற்றவர்கள் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த ஈஸ்வர் என்னிடம் ஏன் மறைக்க வேண்டும்? இவளுக்கு அது அனாவசியம் என்ற நினைப்பா அல்லது திட்டமிட்டு சதி செய்து நான் தெரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உண்மை இருட்டடிப்பு செய்யப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் அவளை குதறி எடுத்தன.

அவள் மனதில் அதுநாள் வரை தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், ஈஸ்வரும், மூர்த்தியும் வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் எப்படிப்பட்டவை என்பதை எல்லாம் அவள் மனதுக்குள்ளேயே ஒருமுறை ஓட்டிப் பார்த்தாள் வானதி.

வீட்டின் கீழ்பகுதியில் மற்றவர்களின் பேச்சுக் குரலும் ஆரவாரமும் கேட்டபடியே இருந்தது. அதில் அளவுக்கு அதிகமான உற்சாகத்தோடு இருந்த ஈஸ்வரின் குரல் அவளுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது.

‘எதுக்காக இவ்வளவு சந்தோசம்? எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?’ என்று எரிச்சலோடு நினைத்தவள் போர்வையை எடுத்து தலை முதல் கால் வரை இழுத்து போர்த்திக் கொண்டவளுக்கு அதற்கு மேலும் கீழே பேசிக் கொண்டிருந்த சத்தமும், கூச்சலும் கேட்பது போன்ற பிரமை ஏற்படவே தலையணையையும் எடுத்து முகத்தின் மீது வைத்து காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.

அறையின் கதவுகள் திறக்கும் சத்தம் கேட்டதும் நிச்சயம் அவனாகத் தான் இருக்கும். அவனை ஒரு வழி செய்து விட வேண்டும் என்ற முடிவுடன் போர்வையை விலக்கி விட்டு பார்த்தவளுக்கு சொத்தென்று ஆனது. காரணம்  எதிரில் வாத்சல்யத்தோடு நின்று கொண்டு இருந்தவர் பவுனம்மா.

‘இவரிடம் போய் என்ன பேசுவது’ என்று நினைத்தபடி மீண்டும் அவள் சோர்வுடன் கண்களை மூடிக் கொள்ள அவளுக்கு அருகில் நெருங்கியவர் அவளது கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.

“வம்சம் தழைச்சு இருக்கு தாயி… உங்களால… வீட்டில் எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்காங்க… அதுவும் சின்னவருக்கு தலை கால் புரியல… வீட்டில் வேலை செய்யுற எல்லாருக்கும் கையில் அகப்பட்டதை எல்லாம் வாரிக் கொடுத்துட்டு இருக்கார்.” என்று அவர் பேசிக் கொண்டே போக மின்னல் தாக்கியது போல அதிர்ந்து விழித்தாள் வானதி.

‘என்ன சொல்றாங்க இவங்க… எனக்குள்ளே ஒரு உயிர்… அதுவும் ஈஸ்வரின் வாரிசு… எப்படி சாத்தியம்? ஒரே ஒரு நாள் உறவில் பிள்ளைக் கனி சாத்தியமா?

யாருமற்ற அனாதை எனக்கு முதன்முறையாக சொந்தம் என்று சொல்லிக் கொள்ள என்னுடைய உதிரத்தில் பிறக்கப் போகும் பிள்ளை…’ வானதியின் உடலில் சிலிர்ப்பு தோன்றியது.

அவள் மனது வேகமாக நாட்களை கணக்கிடத் தொடங்கியது. கடைசியாக அவள் தலைக்கு குளித்து ஐம்பது நாட்களை கடந்தாகி விட்டது என்ற உண்மையும் அவளுக்கு உறைத்தது. உடம்பெல்லாம் சிலிர்த்தது அவளுக்கு.

ஏதேதோ இன்பக் கனவுகளில் மூழ்கி இருந்தவளை கலைத்தது ஈஸ்வரின் அட்டகாசமான சிரிப்பொலி.

எதற்காக இந்த சிரிப்பு?

என்னை வென்றதற்காகவா?

அல்லது அவன் குழந்தையை நான் சுமப்பதனாலா?

எப்படி வந்தது இந்த குழந்தை? நான் விரும்பியா வந்தது? இல்லையே… சுய நினைவே இல்லாத பொழுதில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியின் சின்னம் அல்லவா இந்த குழந்தை…

ஈஸ்வர் செய்த செயலுக்கு இந்த குழந்தை என்ன செய்யும்? ஆயிரம் தான் இருந்தாலும் அதுவும் ஒரு உயிர்… அதை நான் எப்படி வெறுப்பேன்? என்று தனக்குள்ளாகவே மாறி மாறி வாதிட்டுக் கொண்டு இருந்தாள் வானதி.

வானதியின் முகத்தில் தோன்றிய குழப்ப ரேகைகளை கவனித்த பவுனம்மா மேற்கொண்டு எதுவும் பேசாமல் மௌனமாக அங்கிருந்து சென்று விட அடுத்த சில நிமிடங்களில் உற்சாகமாக உள்ளே வந்தான் ஈஸ்வர்.

“சில்லக்காகாஆஆஆ” என்று கத்தியபடியே உள்ளே வந்தவனின் குரலில் இருந்த உற்சாகம் அவளுக்கு புதிதாக இருந்தது.

“நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா… இந்த நிமிஷம் இந்த உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமான ஆள் யாருன்னு கேட்டா அது நானா தான் இருப்பேன். இதை விட ஒரு விலைமதிப்பில்லா பரிசு நீ எனக்கு கொடுத்திட முடியாது. சொல்லுடா… உனக்கு என்ன வேணும்? ஏதாவது சாப்பிடணும் போல இருக்கா? இல்லைனா… நகை, புடவை…. இப்படி என்ன வேணுமோ கேளு…. இப்போ நீ என்ன கேட்டாலும் மாமா உனக்கு வாங்கித் தருவேன்” என்று மூச்சு வாங்க பேசிக் கொண்டே போனவன் தனக்கிருந்த உற்சாகத்தில் வானதியை கவனிக்கத் தவறி விட்டான்.

அவன் பேசப் பேச வானதி தனக்குள் இறுகிப் போனாள். தன்னை சுற்றிலும் ஏதோ கண்ணுக்கு தெரியாத மாயவலை இருப்பதை போன்றதொரு தோற்றம் ஏற்ப்பட்டது அவளுக்கு. ஈஸ்வரின் உற்சாகத்தைப் பார்க்க, பார்க்க அவளால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவனை காயப்படுத்தியே தீர  வேண்டும் என்ற எண்ணம் நொடிக்கு நொடி வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. தன்னுடைய வாழ்க்கையில் தனக்கே தெரியாமல் நிறைய மர்மங்கள் நிறைந்து இருப்பது போல தோன்ற ஆரம்பித்தது அவளுக்கு. அது அத்தனைக்கும் ஆரம்ப புள்ளியாக அவள் கருதியது ஈஸ்வரைத் தான்.

ஈஸ்வர் ஒருபுறம் உற்சாகத்தில் பொங்கி பேசிக் கொண்டே இருக்க… வானதியின் உள்ளத்தில் தோன்றிய எரிமலை வெடித்து சிதறியது.

“போதும் நிறுத்துங்க… எதுக்கு இத்தனை சந்தோசம்? எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? எதுக்கு இத்தனை கொண்டாட்டம்? எதுக்கு இவ்வளவு கோலாகலம்?

சுய நினைவே இல்லாத நிலையில் என்னோட வாழ்க்கையை மொத்தமா சீரழிச்சீங்களே.. அதுக்கு ஒரு சாட்சி வந்த சந்தோசமா? உங்க மேல நான் வச்சு இருந்த நம்பிக்கையை கெடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்க உங்களால எப்படி முடியுது? இப்பவும் நீங்களும், உங்க சந்தோசமும் மட்டும் தான் உங்க கண்ணுக்குத் தெரியுது. என்னோட வலி உங்களுக்குத் தெரியலையா? இந்தக் குழந்தையை நான் எப்படி ஏத்துப்பேன்னு நினைச்சீங்க… உங்களைப் பொறுத்தவரை அது உங்க வெற்றியின் அடையாளம். ஆனா… எனக்கு… அது வேண்டாத ஒரு பொருள்… நான் ஏமாந்து போனதை நினைவுப் படுத்துற ஒரு விஷயம்… இது எனக்கு வேண்டாம்.. வேண்டாம்..வேண்டாம்” என்றவள் உச்சபட்ச குரலில் கத்திக் கொண்டு தலை முடியை கைகளால் இழுத்து தலையை பிய்த்துக் கொள்வதைப் பார்த்த ஈஸ்வரின் உடலில் ஒரு நொடி அசைவே இல்லை.

“உனக்கு இந்த குழந்தை மேல இவ்வளவு வெறுப்பா?” என்றான் ஏதோ மரித்துப்போன குரலில்.

“வெறுப்பு தான்… ஆத்திரம் தான்.. குழந்தை மேல இல்ல… உங்க மேல… எனக்கு உங்களைப் பிடிக்கலை.. உங்களைப் பார்க்கப் பிடிக்கலை.. உங்களோட பேசப் பிடிக்கலை… உங்களோட முகத்தைப் பார்க்க சுத்தமா பிடிக்கலை… நீ ஒரு ஏமாற்றுக்காரன்” என்று கீறிச்சிட்டு கத்தியவள் அறையில் இருந்த பொருட்களில் கைக்கு அகப்பட்டது எல்லாவற்றையும் எடுத்து உடைக்கத் தொடங்கினாள்.

சத்தம் கேட்டு வந்து பார்த்த பவுனம்மாவையும் பார்வையாலேயே அவன் அனுப்பி வைத்து விட… கை ஓயும் மட்டும் எல்லா பொருட்களையும் எடுத்து உடைத்தவள்… ஒரு கட்டத்தில் உடைந்து போய் கதறி அழலானாள்.

அழும் அவளை ஆறுதல் படுத்தும் நோக்கத்தில் நெருங்கியவனைக் கண்டு அவள் பார்த்த பார்வையில் அப்படியே நின்று விட்டான் ஈஸ்வர். அத்தனை சோகத்தை சுமந்து கொண்டு இருந்தது அவள் முகம். இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அவள் முகத்தை இப்படி பார்த்தது இல்லை அவன்.

டாக்டர் அவனிடம் பேசும் பொழுது இந்த மாதிரியான நேரத்தில் பெண்களுக்கு மூடு ஸ்விங்க்ஸ் (Mood Swings) அடிக்கடி ஏற்படும். அந்த மாதிரி நேரங்களில் கொஞ்சம் விநோதமாக நடந்து கொள்வார்கள். தேவை இல்லாத சின்ன விஷயத்திற்கு எல்லாம் அவர்களுக்கு கோபமும், அழுகையும் வரக்கூடும். எனவே கொஞ்சம் கவனத்துடன் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது நினைவில் வர முயன்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டான்.

நின்ற இடத்தில் இருந்து ஒரு அடி கூட நகராமல் பார்வையால் அவளை வருடியவன் குரலை மட்டும் கடுமையாக மாற்றிக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“இதோ பார் சில்லக்கா… குழந்தை அப்படிங்கிறது கடவுள் கொடுக்கிற வரம்.நாம வேண்டி தவம் இருக்காமலே அந்த வரம் நமக்கு கிடைச்சு இருக்கு.அதை பொக்கிஷமா பாத்துக்கணும்.இதுக்கு முன்னாடி எனக்கு பெருசா எந்த ஆசையும் இல்ல..எப்போ நான் ஒரு குழந்தைக்கு அப்பாவாகப் போறேன்னு தெரிஞ்சுதோ அந்த நிமிஷத்தில் இருந்து அந்த குழந்தையை கையில் ஏந்தப் போற அந்த நொடிக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கேன். உனக்குள்ளே இருக்கிறது என்னோட குழந்தை சில்லக்கா… உனக்கு பிடிக்குதோ இல்லையோ நீ அதை பத்திரமா பெத்துக் கொடுத்துத் தான் ஆகணும்.”

“நான் மறுத்தா?” ஆத்திரமாக பேசத் தொடங்கியவளை விசித்திரமான முக பாவனையுடன் அளவிட்டான் ஈஸ்வர்.

“அடுத்த குழந்தைக்கு ஏற்பாடு செய்வேன்” என்று அலட்டல் இல்லாமல் கூறியவனின் பதிலில் வானதியின் முகம் அந்தி வானமானது.

‘பேச்சைப் பார்’ என்று மனதுக்குள் திட்டித் தீர்த்தாள் வானதி.

“எனக்கு என் குழந்தை வேணும் வானதி… இது என்னோட ரத்தம்… அதை நல்லபடியா நீயே பெத்துக் கொடுத்துட்டா நல்லது… இல்லைன்னா… அடுத்த குழந்தைக்கு முன்பை விட தீவிரமா முயற்சி செய்வேன்” என்று புன்னகை மாறாமல் தடாலடியாக சொன்னவன் அதற்கு மேலும் அங்கே நிற்காமல் சென்று விட வானதி அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டாள்.

ஈஸ்வரின் கோபத்தை விட அவனது புன்னகை ஆபத்தானது என்பதை இத்தனை நாட்களுக்குள் தெரிந்து வைத்திருந்தவளுக்கு அவனது பேச்சை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த குழந்தையின் மீது அவன் உயிரையே வைத்திருப்பதும், அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதும் அவளுக்கு புரிந்து போனது. மீண்டும் இந்த விஷயத்தில் அவளுக்கு தோல்வி. ஆனால் அதை அவளால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.

அதற்குக்காரணம் இரண்டு… ஒன்று அவளால் முழுமனதாக அந்தக் குழந்தையை வெறுக்கவும் முடியவில்லை. தாய்மைக்கே உரிய அன்புடன் அந்த குழந்தையை ஏற்கவும் முடியவில்லை. இரண்டுக்கும் இடையில் போராடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவளின் மனநிலை புரிந்ததாலோ என்னவோ ஈஸ்வர் அவளிடம் அதிகமாக வழக்கடிக்காமல் ஒதுங்கி நின்று கொண்டான். ஒரு வாரமாக இதே நிலை தொடர்ந்தாலும் அவளுக்கும், அவனது குழந்தைக்கும் எந்த குறையும் இல்லாமல் செய்ய வேண்டிய அனைத்தையும் செவ்வனே செய்து கொண்டு இருந்தான் ஈஸ்வர்.

அவளுக்குள் புதிதாக முளைத்திருந்த குழப்பங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற அவளது பழைய எண்ணத்தை மீண்டும் அவளுக்கு தலைதூக்க விடாமல் பார்த்துக் கொண்டது. அறையை விட்டு வெளியே வரப் பிடிக்காமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் வானதி.

வழக்கமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் எந்த தொந்தரவும் அவளுக்கு ஏற்படவில்லை. காலை நேர மயக்கமோ, வாந்தியோ எதுவுமே அவளுக்கு இல்லாமல் போக அவளை கவலை ஆட்கொண்டது.

“ஏன் பவுனம்மா எனக்கு அதெல்லாம் இல்லை?” என்று அவரிடம் கேட்க… அவரோ திருதிருத்தார். குழந்தை பெறாத அவரிடம் கேட்டால் அவரும் என்ன தான் சொல்லுவார். இருந்தாலும் அவளை சமாதானம் செய்து வைக்கும் விதமாக பேசத் தொடங்கினார்.

“எல்லார் உடம்பும் ஒரே மாதிரி இருக்காது தாயி.. ஒவ்வொருத்தர் உடல்வாகும் ஒவ்வொரு மாதிரி… சிலருக்கு ரொம்ப வாந்தி வரும். சிலருக்கு வாந்தியே இருக்காது. சிலருக்கு தூக்கமா வரும். சிலருக்கு சுத்தமா தூக்கமே வராது. அது ஒவ்வொருத்தருக்கும் மாறும். அதை எல்லாம் யோசிச்சு குழப்பிக்காதீங்க” என்று சமாதானம் சொன்னவர் அவளின் பயத்தை ஈஸ்வரிடம் தெரிவிக்கவும் மறக்கவில்லை. நாளை இது குறித்து டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈஸ்வர் குறித்துக் கொண்டவன் தன்னுடைய அலுவலில் மூழ்கி விட்டான்.

அதே நேரம் வானதி கர்ப்பமாக இருக்கும் செய்தி மூர்த்தியின் காதுகளுக்கு எட்ட அவனுடைய மனநிலை மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு கொடூரமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

“வானதிக்கு குழந்தையா? அதுவும் அந்த ஈஸ்வரின் குழந்தை… எல்லாம் சரியாக நடந்து இருந்தால் இந்நேரம் என்னுடைய குழந்தையை அல்லவா அவள் சுமந்து இருப்பாள். எல்லாவற்றையும் அந்த ஈஸ்வர் படுபாவி ஒரே நிமிடத்தில் தலை கீழாக மாற்றி விட்டானே… இல்லை விட மாட்டேன்… ஏதாவது செய்தே தீருவேன்… “என்று சூளுரைத்தவன் வெறி கொண்ட மிருகமாக மாறிப் போனான்.

அதே நேரம் வானதியின் உடல்நிலை குறித்து டாக்டரிடம் பேச எண்ணி அவரது வீட்டுக்கு சென்ற ஈஸ்வர் கோபத்தின் உச்சியில் இருந்தான். அதற்குக் காரணம் டாக்டர் சிவா தன்னுடைய வீட்டில் தற்கொலை முயற்சி செய்தது மட்டும் இல்லை. அதற்கு முன்னால் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் தான்.

கடிதத்தை படிக்க படிக்க அவன் உடலெங்கும் தீயைப் பற்ற வைத்தது போல எரியத் தொடங்க கட்டுபடுத்த முடியாத புயலைப் போன்ற வேகத்துடன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

தீ தீண்டும்….

Facebook Comments
Previous NovelMannavan Paingili 2
Next NovelMannavan Paingili 3
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here