TTN Tamil Novels 42

7
3660

ஹாய் மக்களே,

அடுத்த ud போட்டாச்சு… போன எபியில் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட எல்லாருக்கும் என்னுடைய நன்றிகள்…

உடல்நிலையில் இன்னும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை மக்களே… உங்களை ஏமாற்ற மனமில்லாமல் தான் ud கொடுக்கிறேன்.இதே நிலை தொடர்ந்தால் என்னால் வாரத்திற்கு ஒரு ud தான் கொடுக்க முடியும்.பொறுத்துக் கொள்ளுங்கள்.

அத்தியாயம் 42

வீட்டின் கீழ் பகுதியில் ஈஸ்வரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்க, என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக மெல்ல படி இறங்கி கீழே வந்தாள் வானதி. அவனுடைய அலுவலக அறையில் இருந்து சத்தம் வரவே, நடுங்கிக் கொண்டு ஆங்காங்கே வேலை செய்வது போல பாவ்லா செய்து கொண்டு இருந்த வேலையாட்களை தாண்டி அறையின் உள்ளே எட்டிப் பார்த்தாள் வானதி.

அறையின் உள்ளே வைத்தீஸ்வரன் தலை குனிந்து குற்ற உணர்வுடன் அமர்ந்து இருக்க, பூபதி எப்பொழுதும் போல ஈஸ்வரை திண்ணக்கத்துடன் முறைத்து பார்த்தபடி அமர்ந்து இருந்தார். கதவை வானதி திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிய ஈஸ்வரைக் கண்டு வானதிக்கு பயத்தில் பேச்சே வரவில்லை.

ஈஸ்வரின்  கண்கள் கொவ்வைப் பழமென சிவந்து இருந்தது. அவனது பேருக்கு ஏற்றபடியே ருத்ரனின் அம்சமாகவே நின்றவனைக் கண்டு அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது. அந்த நேரத்தில் வானதியை அங்கே எதிர்பாராத ஈஸ்வர், அவளது பயப்பார்வையைக் கண்டு நொடியில் தன்னை மீட்டேடுத்தான்.

“என்ன சில்லக்கா? எதுவும் பேசணுமா?” என்றான் முயன்று வருவித்த குரலில்…

“எ… எதுவும் பிரச்சினையா?” என்றாள் கொஞ்சம் பயந்து கொண்டே…

அவன் பார்வை எதிரில் நின்ற இருவரையும் கூறு போட்டதை பின்னால் நின்று கொண்டு இருந்தவளால் உணர முடியாமல் போனது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சில்லக்கா…”

“ஏதோ கோபமா பேசிக்கிட்டு இருந்த மாதிரி இருந்தது… அதான்”

“அது ஒண்ணுமில்லைடா.. பிசினஸ் டென்ஷன்” என்றவன் அவளது கைப்பிடித்து வேகமாக அங்கிருந்த சோபாவுக்கு இழுத்து வர, அனிச்சை செயல் போல அவனது கையை உதறினாள் வானதி.

“எதுக்கு இப்படி வேகமா என்னை இழுத்துக்கிட்டு வர்றீங்க? இந்த மாதிரி நேரத்தில் வேகமாக நடக்கக் கூடாதுன்னு பவுனம்மா சொல்லி இருக்காங்க.பாப்பாவுக்கு ஆகாதாம்” என்றவள் அவனது கையை பிடிக்காமல் பூமிக்கு நோகுமே என்று அஞ்சி நடப்பதைப் போல மென்நடை நடந்து சோபாவில் அமர்ந்தாள். விரும்பாத குழந்தையாக இருந்தாலும் அதை முழுமனதாக வெறுக்க முடியாததால் குழந்தையின் நன்மைக்காக ஒவ்வொரு சிறு செயலையும் பார்த்து பார்த்து செய்தாள் வானதி.

அவளின் நடவடிக்கைகளைப் பார்த்த ஈஸ்வரின் முகத்தில் தோன்றிய பாவனையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். அத்தனை சோகத்தை தாங்கி இருந்தது அவன் முகம். ஆனால் இது சோர்ந்து போகும் நேரம் இல்லையே… எதிரில் இருந்தவர்களை ஆத்திரத்துடன் உற்றுப் பார்த்தவனின் கண்களில் வெளிப்பட்ட ஆத்திரத்தை பூபதி சட்டை செய்யவே இல்லை… கண்களால் இறைஞ்சியபடி அவனை சமாதானம் செய்ய முயன்ற வைத்தீஸ்வரனின் புறம் அவன் திரும்பவும் இல்லை.

அவனது கவனம் முழுக்க வானதியின் புறமே இருந்தது.

“நீ மாடிக்குப் போ சில்லக்கா… நான் அங்கே வந்து பேசறேன். இங்கே வெளியாட்கள் முன்னாடி குடும்ப விஷயம் பேச வேண்டாம்” என்று பட்டு கத்தரித்தது போல பேசியவன் அங்கே நிற்கக் கூட விரும்பாமல் வானதியுடன் அறையை விட்டு வெளியேற வைத்தீஸ்வரன் அழும் குரலில் ஏதோ பேசத் தொடங்க… பூபதியின் முகமோ பயங்கரமா மாறிப் போயிற்று.

‘நேற்று வந்த அவளுக்காக என்னையே யாரோவாக்கி விட்டாயா ஈஸ்வர்?’ என்று சினத்துடன் எண்ணினார்.

‘இதுக்காக கண்டிப்பா நீ ஒருநாள் வருத்தப்படுவ ஈஸ்வர்…’ என்று மனதுக்குள் சூளுரைத்தவர் வைத்தீஸ்வரன் அமர்ந்து இருந்த சக்கர நாற்காலியை தள்ளிய வண்ணம் அங்கிருந்து சென்று வெளியே சென்று விட்டார்.

ஈஸ்வர் அதே நேரம் வானதியுடன் தங்களது அறையில் தீவிர யோசனையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.

‘எதுக்கு இப்படி நடை பயிலுறார்? அப்படி என்ன யோசனை?’ என்று அவனையே ஊன்றி பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.

“எதுவும் பிரச்சினையா?” தயங்கிபடியே கேட்க… ஈஸ்வரின் நடை நின்றது.

“சில்லக்கா … இப்போ நான் கேட்கிற கேள்விக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு… உனக்கு வேணும்னா டைம் கூட எடுத்துக்கோ… ஆனா எனக்கு உன்னோட உறுதியான முடிவு என்னன்னு தெரியணும்” என்று பலமாக பீடிகை போட தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கொஞ்சம் குழம்பித் தான் போனாள் வானதி.

“உனக்கு கண்டிப்பா… இந்த கு… குழந்தை வேணுமா? என்ன தான் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் இது உனக்கு பிடிக்காத விதத்தில் வந்த குழந்தை தானே? இதை… இதை அழிச்சிடலாமா?” என்று உடல் இறுக கேட்டவன் அவளை பார்க்கும் துணிவின்றி ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்துக் கொண்டான். அவனுக்கு அவளது பதில் என்னவாக இருக்கும் என்பது தெரிந்து இருந்தாலும் கூட அதை அவள் வாயால் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.

‘என்ன பேசுறார் இவர்?’ தன்னுடைய காதுகளில் விழுந்த வார்த்தை நிஜம் தானா? என்ற சந்தேகத்துடன் காதுகளை அழுந்த தேய்த்துக் கொண்டவளை பரிதாபத்துடன் பார்த்தான் ஈஸ்வர். அவளின் ஒவ்வொரு செய்கையிலும் அந்த குழந்தை மீது அவள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு வெளிப்பட அவன் உடலும், முகமும்  மேலும் இறுகி கற்பாறையானது.

“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சு இருக்கா?” கோபத்தில் தன்னை மறந்து கத்த தொடங்கினாள் வானதி.

“….”

“எனக்கு வெறுப்பு இந்த குழந்தை மேல கிடையாது. அது உருவான விதம் மேல தான். கோபத்தில் நான் ஆயிரம் வார்த்தை பேசுவேன். அதுக்காக என்னோட குழந்தையை அழிக்க நினைப்பீங்களா? அது என்னோட குழந்தை… எனக்கு வேணும்… என் குழந்தைக்கு மட்டும் எதுவும் ஆச்சு…. அப்புறம்… அப்புறம் உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்.. உங்க மூஞ்சியில கூட முழிக்க மாட்டேன்… நானும் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று மூச்சு வாங்காமல் படபடப்புடன்  பேசிக் கொண்டே போனவளை ஒரே எட்டில் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பில் இருந்து அவள் துள்ளி விலக முயற்சிக்க, அவனது அணைப்போ மேலும் இறுகியது. அவள் விலக, விலக அவன் அணைப்பு மேலும் இறுகத் தொடங்க ஒரு கட்டத்தில் வானதி சோர்ந்து போனாள்.

‘இப்போ எதுக்கு இந்த பேச்சு? ஒருவேளை இந்த குழந்தையை எதுவும் செஞ்சுடுவாரோ?’ என்ற எண்ணம் தோன்ற உடலும், மனமும் ஒருசேர அதிர்ந்தது அவளுக்கு.

“எ…என்னோட குழந்தையை எதுவும் செஞ்சுடுவீங்களா?” என்று மிரட்சியுடன் அவள் கேட்க.. அந்த கேள்வியின் கணத்தை தாங்க முடியாமல் , மேலும் அவளுக்குள் மூழ்கத் தொடங்கினான் ஈஸ்வர்.அவளுக்கு ஆறுதல் சொல்வதற்காக அவளை அணைத்துக் கொண்டானா அல்லது அவளது அணைப்பில் அவன் ஆறுதல் தேடினானா என்பது அவனுக்கே தெரியாமல் போனது தான் விந்தை.

அவனை விலக்கி நிறுத்த அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய… அவனாகவே விலகும் வரை காத்திருப்பதைத் தவிர வானதிக்கு வேறு வழி இல்லாமல் போனது.

சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவனின் முகத்தில் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்து விட்டு அதை செயலாற்றி விடும் முனைப்பு தெரியவே வானதிக்குள் கலவரம் மூண்டது.

அவளது மிரட்சியான முகத்தைப் பார்த்தவன் இயல்பான சிரிப்பொன்றை சிரித்து அவள் மனதில் பாலை வார்த்தான்.

‘அப்பாடி …. சிரிப்பில் வில்லத்தனம் இல்லை… அப்படின்னா நல்ல மூடில் தான் இருக்கார்’ என்று முடிவு செய்து கொண்டாள்.

“உன்னோட குழந்தை உனக்கு வேணும்… அவ்வளவு தானே… நான் பார்த்துக்கறேன்… சில்லக்கா… உனக்கு வேணும்கிற டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ.. நாம வெளியே போகணும்” என்றான் அறிவிப்பு போல…

“எங்கே?”

“அது சஸ்பென்ஸ்… போன பிறகு நீயே தெரிஞ்சுப்ப…”

“இப்போ எதுக்கு என்னை வீட்டை விட்டு வெளியே கூட்டிட்டு போறீங்க?” மீண்டும் சந்தேகமாக அவளைப் பார்க்க… அவனோ தடையே இல்லாமல் பதிலை வாரி வழங்கினான். அவன் தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டானே… அதன் பின் அவனை தடுக்க யாரால் முடியும்?

“அது ஒண்ணுமில்லை சில்லக்கா… இந்த அரண்மனையை முழுக்க பெயிண்ட் பண்ண சொல்லி இருக்கேன். வேற மாதிரியான கலர்ல…”

“அதுக்கு நாம எதுக்கு வெளியே போகணும்?”

“அடடா… பெயிண்ட் வாசத்தில் இருந்தா உனக்கு ஒண்ணுமில்லை.. குழந்தைக்கு தான் சேராதாம்…” என்றான் அப்பாவி போல…

“நிஜமாவா?”

“பின்னே… இந்த வாசம் வயித்தில இருக்கிற நம்ம பாப்பாவை பாதிக்கும்னு டாக்டர் சொன்னார்…”

“உடனே கிளம்பறேன்” என்று ஒரு நொடி கூட யோசிக்காமல் சொன்னவள் பெட்டியை எடுத்து தனக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைக்க தொடங்க… அவளையே கனிவுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளுக்கு பெட்டிகளை அடுக்குவதில் உதவி செய்ய.. அடுத்த சில நிமிடங்களில் இருவரும் தயாராகி கீழே போய் விட்டனர்.

கீழே சாப்பாட்டு மேசையில் இவர்களுக்காக வைத்தீஸ்வரனும், பூபதியும் காத்திருக்க, அவர்கள் இருவரையும் பொருட்டாக கூட மதிக்காமல் ஈஸ்வர் அவளின் கைகளை அழுந்தப் பற்றியபடி காரில் ஏறி சென்று விட வைத்தீஸ்வரனின் கண்கள் உடைப்பெடுத்தது.

“வைத்தி… இப்போ எதுக்கு அழுகுற? எங்கே போய்டுவான்? நம்ம அவனோட நல்லதுக்கு தானே செய்றோம்? அது புரிஞ்சா தன்னாலே நம்மை தேடி வரப் போறான்?”

“ஒரு வார்த்தை எங்கே போறோம்னு கூட சொல்லாம போறானே” என்றார் குளறலாக…

“அவன் சொல்லலைனா நம்மால கண்டுபிடிக்க முடியாது பாரு… அதெல்லாம் நம்ம ஆட்கள் பார்த்துப்பாங்க ” என்று செறுக்குடன் எண்ணியவருக்கு தெரியவில்லை ஈஸ்வரின் மனநிலையைப் பற்றி… ஈஸ்வர் அந்த நிமிடம் மூர்த்தியை விட அவர்கள் இருவரின் மீதும் தான் அதிக கோபத்தில் இருந்தான்.

காரில் ஈஸ்வருடன் பயணித்துக் கொண்டிருந்த வானதியின் மனநிலையும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தது.

சாப்பாட்டு மேசையில் அமர்ந்து இருந்த பூபதியின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்து இருந்தாலும் அவரிடம் நின்று பேசக் கூட விடாமல் ஈஸ்வர் வேண்டுமென்றே தன்னை இழுத்து வந்ததைப் போல இருந்தது.

“நாம எங்கே போறோம்னு தாத்தா கிட்டே சொல்லாமலே வந்துட்டோமே… தாத்தா கவலைப்படுவார் இல்லையா?” மெதுவான குரலில் கேட்டவளுக்கு நல்லவேளை ஈஸ்வரின் மனதில் நினைத்துக் கொண்டது வெளியே தெரியாமல் போனது.

‘அவங்களுக்கு நம்ம எங்கே இருக்கோம்னு தெரியாம இருக்கிறது தான் நல்லது’ என்று எண்ணியவன் வெளியே இலகுவாக சிரித்து வைத்தான்.

“சொல்லாம கிளம்பி வருவேனா? ஏற்கனவே அவங்ககிட்டே சொல்லிட்டேன் சில்லக்கா” என்று உண்மையை மறைத்து பேசியவனின் கண்கள் காரில் இருந்த ரியர்வியூ கண்ணாடியில் பதிய… மர்ம சிரிப்பொன்றை உதிர்த்தவன் எதிர்பாரா நேரத்தில் சட்டென்று காரை வேகமெடுத்து, புயல் வேகத்தில் கிளப்ப, அதை எதிர்பாராமல் அவர்களின் பின்னால் வந்த கார்… ஒரு இடத்தில் ஈஸ்வரின் காரை பின் தொடர்ந்து வர முடியாமல் தேங்கி விட … ஈஸ்வரின் முகத்தில் வெற்றிக்குறி தெரிந்தது.

நடுவில் இரண்டு முறை காரை நிறுத்தி அவளுக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்தவன் காரை ஓட்டிக்கொண்டு வந்து சேரும் பொழுது நேரம் கிட்டத்தட்ட நள்ளிரவைத் தாண்டி விட்டது. பாதி பயணத்திலேயே வானதியை உறக்கம் சூழ்ந்து கொள்ள… தன்னையும் அறியாமல் ஈஸ்வரின் தோள்களில் சாய்ந்து உறங்கத் தொடங்கினாள்.

முதன்முறையாக அவளாக அவனது தோள்களில் சாய்ந்தது ஈஸ்வரின் மனதுக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு இன்பத்தையும், நிம்மதியையும் தர, ஒரு கைகளால் அவளை லேசாக அணைத்தவாறே காரை லாவகமாக ஓட்டி வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தான் ஈஸ்வர்.

முதலில் இறங்கிப் போய் வீட்டை திறந்து விளக்குகளை ஒளிர செய்தவன், வானதியின் உறக்கத்தை கலைக்காமல் அவளை கைகளில் ஏந்தி மெல்ல அவளை படுக்கையில் கிடத்தினான். மாசு மருவற்ற குழந்தையைப் போல உறங்கும் மனையாளை எண்ணி கிலேசம் அடைந்தான் அவன்.

“நீயே இன்னும் வளராத குழந்தை தானே சில்லக்கா… உனக்கு குழந்தை மேல அவ்வளவு ஆசையாடி? பிடிக்காத விதத்தில் வந்து இருந்தாலும் கூட உன்னால எப்படிடி அந்த குழந்தை மேல இந்த அளவுக்கு நேசத்தை காட்ட முடியுது? இவ்வளவு ஆசையோட இருக்கிற உன்கிட்டே எப்படிடி சொல்வேன்… நீ கர்ப்பமா இல்லைன்னு… சை! எப்படி மனசு வந்துச்சு? தப்பு செஞ்சது எல்லாமே நான் தானேடி… ஆனா தண்டனை மட்டும் ஏன் எப்பவுமே உனக்கு கிடைக்குது?” என்றவனின் கண்களில் இருந்த தவிப்பை நல்லவேளை வானதி பார்க்கவில்லை.

உறங்கும் அவளை அள்ளி நெஞ்சில் போட்டுக் கொண்டவன், அவளது நெற்றியில் மென்மையாக முத்தத்தை பதித்து விட்டு  உறங்கி விட இவர்கள் இருவரும் எங்கே, எப்படி சென்று மாயமானார்கள் என்ற உண்மை புரியாமல் பூபதியும், வைத்தீஸ்வரனும் ஒரு பக்கம் குழம்பித் தவிக்க, சம்ஹார மூர்த்தி ஒரு பக்கம் வெறி பிடித்த மிருகமாக மாறிக் கொண்டு இருந்தான்.

தீ தீண்டும்….

Facebook Comments
Previous NovelMannavan Paingili 3
Next NovelMannavan Paingili 4
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

7 COMMENTS

  1. Ena sis ithu twist mela twist ah tharinka, vanathi pregnant illana avaluku ethavathu problem ah antha boopathi ethavathu vanathi ya senjitara,,,,,
    Ena sissssssssss………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here