TTN Tamil Novels 47

2
4981

ஹாய் மக்களே,அடுத்த எபி போட்டாச்சு..இனி மொத்தமாக எல்லா எபியையும் முடிச்சுட்டு தான் போடுவேன்.படிச்சுட்டு யாராவது கையில் ஆயுதம் எடுத்தா..அப்புறம் இந்த பக்கமே வராம ஓடிடுவேன் சொல்லிட்டேன்.இறுதி அத்தியாயம் ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்சம் லேட்டா தான் வரும்..காத்திருக்கவும்.

அத்தியாயம் 47

ஈஸ்வர் வாரத்திற்கு ஒருமுறை இப்படி காய்கறிகள் வாங்குவதற்கு செல்லும் பொழுது அவளை அழைத்து செல்வதில்லை என்பதால் வானதியும் அதை ஒரு குறையாக நினைத்தது இல்லை. ஈஸ்வர் காரணமில்லாமல் அவளை தனித்து விட்டு விட்டு வெளியே செல்ல மாட்டான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவே  அவன் வருவதற்குள் வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்வது.. போன்ற வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருப்பாள் வானதி.

அன்றும் அது போலவே செய்து கொண்டு இருந்தாள் வானதி… அன்று காலையில் ஆற்றில் பிடித்த மீன்களை எடுத்து சுத்தம் செய்து கொண்டு இருந்தாள் வானதி.

‘சுத்தம் செய்து மசாலா தடவி கொஞ்ச நேரம் ஊற வைத்து விட்டால் அவர் வந்ததும் சமைப்பதற்கு வசதியாக இருக்கும்’ என்று எண்ணியவள் அந்த வேலையில் மும்மரமாக இறங்கி இருக்க… கதவை திறக்கும் சத்தம் கேட்க…

‘இப்போ தானே வெளியே கிளம்பி போனார்..எதையும் மறந்துட்டாரோ?’ என்று கேள்வியாக எட்டிப் பார்த்தவள் அங்கே மூர்த்தியைக் கண்டதும் ஸ்தம்பித்து போனாள்.

‘இவன் எப்படி இங்கே?’ என்று அவள் அவனை பார்க்க…. அதே நேரம் மூர்த்தியும் அவளைப் பார்த்தபடியே கதவை தாளிட்டான்.

“நீ.. நீ… எப்படி இங்கே?”

“ஏன் என்னை எதிர்பார்க்கலையா இங்கே…. வேற யாரை எதிர்பார்த்தே? உன் புருசனையா? அவனை இனி உன்னால் பார்க்கவே முடியாது…”

“ம்ச்… என்ன உளறல் இது?”

“எது உளறலா? உனக்கு அப்படித்தான்டி தோணும்… உன் பின்னாடியே நாய் மாதிரியே சுத்தி வர்றேன்ல”

“பழைய கதை வேண்டாம் மூர்த்தி.. நான் இப்போ இன்னொருத்தரோட மனைவி… நீங்க இங்கே இருந்து கிளம்புங்க முதல்ல…” பேசியபடியே வானதியின் பார்வை மூர்த்தியை அளவிட்டது. முகமெல்லாம் தாடி வளர்ந்து… உடல் இளைத்து முன்பை விட முகம் அதிகமாக பொலிவிழந்து காணப்பட்டது.

‘தன்னை மறக்க முடியாமல் தேடி அலைந்ததின் விளைவு போலும் இது.. எடுத்து சொன்னால் புரிந்து கொள்ளக்கூடும்’ என்று எண்ணினாள் வானதி.

“ஹ.. மனைவி… தாலி கட்டிட்டான் .. அவளோ தானே… அதை கழட்டி எறிஞ்சுட்டு என்னோட கிளம்பு வானதி”

“முட்டாள் மாதிரி பேசாதீங்க… அவர் வருவதற்குள் இங்கே இருந்து கிளம்பிடுங்க.. அது தான் உங்களுக்கு நல்லது” என்று அவள் எச்சரிக்கை செய்ய.. அவளை கேலியாக பார்த்தான் மூர்த்தி.

“அவனால் இப்போதைக்கு இங்கே வர முடியாது… நீ உடனே என்னோடு கிளம்பு வானதி… நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்”

“ஓஹோ.. ஒரு முடிவோட தான் வந்து இருக்கீங்க போல… அவர் கட்டின தாலியை கழட்டி வச்சிடலாம்… ஆனா வயித்தில வளருதே அவரோட வாரிசு… அதை என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க?” என்று வானதி நிறுத்தி நிதானமாக கேட்ட படியே தன்னுடைய வயிற்றை மென்மையாக தடவ… மூர்த்தியின் முகம் பயங்கரமாக மாறியது.

“என்ன குழந்தையா? எப்படி? இல்லை.. அதுக்கு வாய்ப்பு இல்லை.. நீ பொய் சொல்லுற… என்னை ஏமாத்த பார்க்கிற” மூர்த்தியின் முகத்தில் நிதானம் போய் பதட்டம் வரத் தொடங்கியது.

“பொய் சொல்ல எனக்கு அவசியம் இல்லை… என் வயிற்றில் அவரோட வாரிசு வளருது… அதை நீங்க நம்பித் தான் ஆகணும்.. இது தான் நிதர்சனம். இப்பவாவது உங்க முடிவை மாத்திக்கோங்க… உங்க வாழ்க்கையில் இருந்து என்னை நீக்கிட்டு அதுக்கு பதிலா வேற ஒரு பொண்ணை நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோசமா இருங்க….”

“என்னடி விட்டா பேசிக்கிட்டே போற… என்னை வேற ஒருத்தியை கல்யாணம் செஞ்சுக்க சொல்றியே… நீ அவனை தூக்கி போட்டுட்டு வாடி… இப்போ என்ன? உன் வயித்துல அவனோட குழந்தை வளருது அதுதானே உன்னோட பிரச்சினை… என்னோட வா… ஒண்ணு அந்த குழந்தையை அழிச்சிடலாம்… அது முடியாதுன்னா அந்த குழந்தைக்கு நானே அப்பனா இருந்துட்டு போறேன்” என்று மூர்த்தி பேசிக் கொண்டே போக வானதிக்கு அருவருப்பில் குமட்டிக் கொண்டு வந்தது.

“பைத்தியம் மாதிரி பேசாதீங்க மூர்த்தி… நானும் அவரும் கணவன் மனைவி… எங்களோட காதலின் அடையாளம் தான் இந்த குழந்தை… அதுக்கு இன்னொருத்தரை அப்பாவா எப்படி அடையாளம் காட்ட முடியும்? என்னோட கணவரைத் தவிர வேற யாரும் என்னையோ… என்னுடைய குழந்தையையோ சொந்தம் கொண்டாட முடியாது” என்று வானதி அழுத்தம் திருத்தமாக பேச மூர்த்தியின் வெறி அதிகரித்தது.

கண்கள் ஆத்திரத்தில் பளபளக்க அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். மூர்த்தி தன்னை நோக்கி வரத் தொடங்கியதும் வானதி ஒன்றும் பயந்து போய் விடவில்லை. இத்தனை நாளில் ஈஸ்வர் அவளுக்கு கற்றுத் தந்த விஷயங்களில் முதன்மையானது பயத்தை வெளியில் காட்டாமல் எதிரியை வெல்லும் தந்திரத்தைத் தான்.

அவன் நெருங்கத் தொடங்கியதும் பதட்டமே இல்லாமல் அவளது மூளை சிந்திக்கத் தொடங்கியது. ஈஸ்வர் எப்படியும் அரைமணி நேரத்தில் திரும்பி விடுவார். அதுவரை மட்டும் இவனை சமாளித்தால் போதும் என்று எண்ணியவள் அவனிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள ஆயுதம் எதுவும் சிக்குமா என்று சுற்றும் முற்றும் பார்வையால் அலசியபடியே அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

மூர்த்தியோ அவளது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் பேச்சில் இருந்த தெளிவு… கண்களில் இருந்த தீர்க்கம் இது அனைத்தும் அவனுக்கு இன்னும் கோபத்தை தூண்டியது.

‘இது நல்லது இல்லையே… இவள் இப்படி முதுகெலும்போடு நிமிர்ந்து நிற்க கூடாது. எல்லாம் அந்த பயலின் வேலை… முதலில் இவளை என் வசம் கொண்டு வரணும். அதுக்கு அப்புறம் தான் அவனை கவனிக்க முடியும்’ என்று எண்ணி இவளிடம் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவன் பாய்ந்து அவளின் தலைமுடியை கொத்தாக பற்றிக் கொண்டான்.

தப்பி விடலாம் என்று எண்ணி ஓடியவளால் அதற்கு மேல் அசைய முடியாமல் போக… வலியில் முகம் சுளித்தாள் வானதி…

“என்னடி என்கிட்டேயே உன்னோட திமிரை காட்டுறியா? நான் யார் என்னோட லெவல் என்ன? இருந்தும் பைத்தியக்காரன் மாதிரி உன்னோட பின்னாடி நான் சுத்தினேனே… என்னை விட அவன் உனக்கு உசத்தியா போயிட்டானா? அப்படி என்னடி செஞ்சான்டி அவன் உனக்கு? கடைசியா சொல்றேன். அவனை விட்டுட்டு என்னோட வந்துடு.. இல்லேன்னா இதுதான் உன்னோட வாழ்க்கையின் கடைசி நாள்…” என்று மிரட்ட… வலியில் முகம் சுளித்தாலும் அவனது மிரட்டலுக்கு அஞ்சவில்லை வானதி.

“எப்படி கேட்டாலும்.. எத்தனை முறை கேட்டாலும் என்னோட முடிவு இது தான்… தேவை இல்லாம இப்போ நீங்க தான் ஆபத்தில் சிக்கிக்க முயற்சி செய்றீங்க? அவர் இல்லாதப்போ அவரோட வீட்டுக்கு வந்து என் மேல கையை வச்சது மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுனா கண்டிப்பா நீங்க இங்கே இருந்து உயிரோட திரும்ப முடியாது” என்று கண்களில் நம்பிக்கையை தேக்கி வைத்துக் கொண்டு அவள் பேச… மூர்த்தியின் ஆத்திரம் எல்லை கடந்தது. அவளது முடியை கொத்தாக பற்றியபடியே அவளது கன்னங்களில் மாறி மாறி அறைந்தான்.

“அவனைப் பத்தி என்கிட்டே உயர்வா பேசாதடி.. அவன் என்ன பெரிய இவனா? நானும் பார்க்கிறேன்.. உன்னை இன்னிக்கு எப்படி காப்பாத்தறான்னு” என்று கத்தியவன் வாங்கிய அடிகளில் சோர்ந்து போய் கிடந்தவளை அப்படியே தள்ளிக் கொண்டு போய் அங்கிருந்த சேரில் அவளது புடவை முந்தானையால் கட்டிப் போட்டான்.

வானதி ஈஸ்வரைப் பற்றி உயர்வாக பேசப் பேச அவனது வெறி அதிகமானது. வானதியின் கண் முன்னே அவனை கொல்ல வேண்டும் என்று எண்ணியவன் அவனது ஆட்களை ஈஸ்வரை பின்தொடர்ந்து வந்து அவனை கொல்லும் வேலைக்கு பதிலாக வெறுமனே பின்தொடரும் வேலையை மட்டும் கொடுத்தான். முன்னரே அவனை கொல்லும்படி சொல்லி இருந்ததை மாற்றி இப்பொழுது அளவு கடந்த ஆத்திரத்தின் காரணமாக அப்படி ஒரு முடிவை எடுத்தான் மூர்த்தி.

அதே நேரம் வெளியில் சென்று இருந்த ஈஸ்வர்… சுந்தரேசன் அய்யாவை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் வந்து கொண்டு இருந்தான்.

“வானதிக்கு உங்களை கூட்டிட்டு வரப் போறேன்னு தெரியாது… தெரிஞ்சா ரொம்ப சந்தோசப்படுவா…” என்று பேசிக் கொண்டே திரும்பியவனின் கண்களில் அவனை பின் தொடர்ந்து வந்த பூபதியின் ஆட்கள் பட… நொடியில் சுதாரித்தான். விஷயத்தை சொல்லி சுந்தரேசனையும் பதட்டமடைய செய்ய வேண்டாம் என்று நினைத்தவன், காட்டில் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு வீட்டின் உள்ளே ஆவலுடன் நுழைந்த பொழுது அங்கே கண்ட காட்சியில் அவன் இதயம் துடிக்க மறந்து போனது.

இதழோரம் ரத்தம் கசிய… சற்றே கண்கள் மேலே சொருகிய நிலையில் சேரில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வானதியை கண்டதும் தன்னை மறந்து அவளை நோக்கி ஓடினான்.

“சில்லக்காஆஆஆஆஆ” என்ற அவனின் கதறல் வீடு முழுக்க எதிரொலிக்க… அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தவன் பின்னோடு வந்த மூர்த்தியை கவனிக்கத் தவறி விட , ஈஸ்வர் எதிர்பாரா நேரம் அவனது பின்னந்தலையில் தாக்கினான். வலியில் ஈஸ்வர் துடித்த அந்த ஒரு நொடியில் சட்டென்று ஈஸ்வரை கீழே தள்ளி விட்டு , வானதியின் புறம் நகர்ந்து துப்பாக்கியை அவளது நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தினான் மூர்த்தி.

“எனக்கு உன்மேல இருக்கிற கோபத்துக்கு என் கையாலயே உன்னை அடிச்சு கொல்லணும் போல வெறி இருக்கு… ஆனா உன்னோட சாவு வேற மாதிரி இருக்கணும். கொஞ்ச நஞ்சமா எனக்கு கெடுதல் செஞ்சு இருக்க நீ?

நான் கல்யாணம் செஞ்சுக்க வேண்டியவளை கடைசி நிமிஷத்தில் உள்ளே புகுந்து தூக்குனியே… அது எவ்வளவு பெரிய தப்பு? இவளை உடனே தேடி வர முடியாதபடி என்னை ஒவ்வொரு இடமா என்னை அலைய விட்டியே அது எவ்வளவு பெரிய தப்பு? என்னோட சொத்துக்கள் எல்லாத்தையும் முடக்கி வச்ச.. ஜெயிலுக்கு தள்ளின… ஒருநாள் இரண்டு நாள் இல்ல.. மாசக்கணக்கில் அவளை உன்னோட வச்சிருந்து அனுப்பி வச்ச… அதுக்குப்பிறகும் கூட இந்த அனாதை கழுதையை கல்யாணம் செஞ்சு இவளுக்கு வாழ்க்கைப் பிச்சை போட நான் தயாரா தான் இருந்தேன். ஆனா… இந்த சண்டாளி என்னை கல்யாணம் செஞ்சுக்க மறுத்துட்டு உன்னை தேடி வந்தா…

சரி அதுக்கு அப்புறமாவது அவளை தூக்கலாம்ன்னு பார்த்தா.. எந்நேரமும் கோழி தன்னோட குஞ்சை பாதுகாக்குற மாதிரி உன்னோட பாதுகாப்பு வளையத்துலேயே வச்சு இருந்த… ஒரு வழியா இப்போ வந்து கேட்டா… புருஷன்னு சொல்றா… காதல்னு சொல்றா.. குழந்தைன்னு சொல்றா… என்னைப் பார்த்தா கேணையன் மாதிரி இருக்கா?” மூர்த்தி வானதியின் தலையை பிடித்து உலுக்கியவாறே பேசிக் கொண்டே போக ஈஸ்வரின் முகம் எரிமலையானது.

“அவ மேல கை வைக்காதே மூர்த்தி… அதோட விளைவுகள் பயங்கரமா இருக்கும். எதுவா இருந்தாலும் என்னோட மோது.. அவளுக்கு ஏதாவது ஆச்சு? உன்னை கொன்னு புதைச்சுடுவேன்” தலையில் இருந்து ஒழுகிய ரத்தத்தைக் கூட துடைக்கத் தோன்றாமல் முகம் இறுக ஈஸ்வர் பேசிய பேச்சில் மூர்த்திக்கு கொண்டாட்டமாக இருந்தது.

“அவளை அடிச்சா.. உனக்கு வலிக்குதா… வலிக்கும்.. வலிக்கணும்.. அது தெரிஞ்சு தானே இவ்வளவு தூரம் காய் நகர்த்தினேன். எல்லா விஷயத்திலும் என்னை நீ முந்திகிட்டே… எல்லா விஷயத்தையுலயும் தெளிவா இருந்த நீ உன்னோட சொந்த வீட்டிலேயே உனக்கு எதிரான ஆட்கள் இருக்கிறதை மறந்துட்டியே.. அதனால தான் என்னால நான் நினைச்சதை சாதிக்க முடிஞ்சது”

“அப்படியா?” என்ற கேட்ட ஈஸ்வரின் முகத்தில் இருந்த புன்னகை மூர்த்தியை பித்தம் கொள்ள செய்ய… கையில் இருந்த துப்பாக்கியை வானதியின் நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்தினான்.

“உன்னோட ஆட்டம் முடிஞ்சது ஈஸ்வர்… இனி என்னோட ஆட்டம் ஆரம்பம்… நீ உயிரோட இருந்தா… இவளை கூட்டிட்டு நான் எங்கே போனாலும் நீ விட மாட்டே.. அங்கேயும் வந்து நின்னு இவளை காப்பாத்திடுவன்னு எனக்குத் தெரியும்” என்றவன் அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சில பொருட்களை எடுத்து வெளியே வைத்தான்.

இவர்கள் இருவருமே கவனிக்கத் தவறிய விஷயம் ஈஸ்வருடன் வீட்டிற்குள் வந்த சுந்தரேசன் அப்பொழுது அங்கே இல்லாமல் போனதைத் தான். மூர்த்தியின் கவனம் முழுக்க ஈஸ்வர் மீதும், ஈஸ்வரின் கவனம் வானதி மீதும் இருந்ததால் அவரைப் பற்றி இருவருமே மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஈஸ்வர் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே வெகு கவனத்துடன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து வானதியின் முகத்தில் ஊற்றினான். மயக்கத்தில் இருந்து கண் விழித்த வானதி முதலில் பார்த்தது ரத்தம் ஒழுகும் தலையோடு தன்னையே இமைக்காமல்  பார்த்துக் கொண்டு இருக்கும் ஈஸ்வரைத் தான்.

“ஐயோ ரத்தம்…” என்று பதறியபடி எழ முயன்றவள் முடியாமல் போகவே அப்பொழுது தான் கவனித்தாள் தன்னை சேரில் கட்டிப் போட்டு வைத்திருப்பதை..

“ஏய்! என்னை அவிழ்த்து விடுடா…” இப்பொழுது மூர்த்தியின் மீதிருந்த மரியாதை குறைந்து போய் அது வார்த்தைகளில் தெறித்தது.

“என்னடி அவனைப் பார்த்ததும் தைரியம் வந்துடுச்சா? மரியாதை குறையுது… இன்னமும் இரண்டு பேரும் என்னோட பிடியில் தான் இருக்கீங்க… ஒரு வார்த்தை அதிகமா பேசினாலும் உன்னோட மூளை தெறிச்சுடும் ஜாக்கிரதை” என்று மிரட்ட… வானதி கொஞ்சமும் அசரவில்லை.

“என்னை கொன்னுட்டு… அவரைத் தாண்டி உயிரோட போயிடுவியா நீ?” என்று நக்கல் தெறிக்க அவள் பேசிய பேச்சு மூர்த்தியை உசுப்பி விட்டது.

“துப்பாக்கி முனை உன்னோட நெத்திப் பொட்டில் அழுத்திக்கிட்டு இருக்கு.. உன்னோட கண் எதிரில் அவன் ரத்த காயத்தோட நிக்கிறான். அதுக்கு அப்புறமும் கூட உனக்கு பயம் வரலை இல்ல…” ஓநாயாக குரூரத்துடன் பளபளத்தது அவன் கண்கள்…

“முட்டாள்… என் எதிரில் அவர் இருக்கும் பொழுது நான் எதுக்குடா பயப்படணும்?” என்றவளின் பேச்சில் ஆத்திரம் வரப் பெற்றவன் கைகளில் மறைத்து வைத்து இருந்த பொருளை எடுத்து வானதி அமர்ந்து இருந்த சேரின் கைப் பகுதியில் வைத்தான்.

“ஈஸ்வர்… இவ்வளவு தூரம் வந்த பிறகு உன்னை ஏதாவது செஞ்சே ஆகணும்னு எனக்கு வெறி வருதுடா… எதுக்கும் இருக்கட்டும்னு இதை கொண்டு வந்தேன்.” என்று கூறியபடியே அவன் எடுத்து வைத்தது சிறிய அளவிலான கூரிய கத்தியும், விஷ பாட்டிலும்…

‘இது எதுக்கு?’ என்று உள்ளுர பயத்துடன் வானதி பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே தொடர்ந்து பேசினான் மூர்த்தி.

“உலகத்திலேயே யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது ஈஸ்வர்.. உனக்கு நான் அப்படி ஒரு அருமையான சந்தர்ப்பத்தை கொடுத்து இருக்கேன். உன்னோட மரணம் இந்த இரண்டில் எதனால் இருக்கணும்னு நீயே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்று அலட்டல் இல்லாமல் சொன்னவனைக் கண்டு ஈஸ்வரின் புன்னகை கொஞ்சமும் மாறவில்லை.

“என்னடா…சிரிக்கிற… பயம்னா என்னன்னே தெரியாதா உனக்கு? சொல்லு… இந்த இரண்டில் எதை எடுத்து உன்னோட வாழ்க்கையை முடிச்சுக்கப் போற? என்கிட்டே இருந்து தப்பிக்கலாம்ன்னு மட்டும் நினைக்காதே… அந்த இடத்தில் இருந்து நீ ஒரு அடி நகர்ந்தாலும் இவளை கொன்னுடுவேன்” என்று எச்சரிக்க வானதியின் முகம் ரத்த பசையின்றி வெளுத்துப் போனது.

“வேண்டாம்…அவன் சொல்வதை கேட்காதீங்க.. வேற ஏதாவது வழி நிச்சயமா இருக்கும் யோசிங்க” என்று ஈஸ்வரைத் தூண்ட… மூர்த்தி எதைப் பற்றியும் யோசிக்காமல் வானதியின் காலை சுட்டு விட்டான்.

“அம்மாஆஆஆஆஆ”

“சில்லக்காஆஆஆஆஆ”

“கத்துடி.. இன்னும் நல்லா கத்து… என்ன ஈஸ்வர்.. இப்பவாவது நான் சொன்னதை கேட்கப் போறியா? இல்ல…” என்று பேசியபடியே அவளது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்த… கண்களை மூடி ஒரு நொடி அமைதியாக இருந்த ஈஸ்வர்… அமைதியான முகத்துடன் மூர்த்தியை நோக்கி பேசத் தொடங்கினான்.

“கத்தியை கொடு மூர்த்தி”

“குட் டெஷிஷன்… பட் ஒரு விஷயம் நினைவில் வச்சுக்கோ… கத்தியை என் மேல எறியணும்ன்னு நினைச்சே… அப்புறம் இவளை நீ உயிரோட பார்க்கவே முடியாது சொல்லிட்டேன்” என்று எச்சரித்தபடியே கத்தியை ஈஸ்வரின் அருகில் காலால் நகர்த்தி விட்டான்.

ஈஸ்வரின் காலுக்கு அடியில் வந்த கத்தியை நிதானமாக எடுத்த ஈஸ்வர் வானதியை மட்டுமே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் பார்வையில் இருந்த உறுதி கண்டு வானதியின் அடிவயிறு பிசைந்தது..

“சும்மா மேலே கோடு போடாதே.. சரியா மணிக்கட்டு நரம்பை வெட்டிக்கணும்… நீ இவ கண்ணு முன்னாடியே துடிதுடிச்சு உயிரை விடணும். நானும், அவளும் கண் குளிர பார்க்கணும். புரிஞ்சுதா?” என்று மூர்த்தி ஈஸ்வரை மிரட்ட…

வானதியை காதலோடு பார்த்த பார்வையை கொஞ்சமும் மாற்றாமல் அவன் கைகளில் மணிக்கட்டு பகுதியை அறுத்துக் கொண்டான் ஈஸ்வர். ரத்தம் குபுகுபுவென்று வெளியேறத் தொடங்க.. அதே மந்தகாசப் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தான் ஈஸ்வர்.

“மாமாஆஆஆஆஆஆ” என்ற வானதியின் அலறல் அந்த காட்டுப் பகுதி முழுமையிலும் எதிரொலித்தது.

தீ தீண்டும்….

Facebook Comments

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here