Un manadhil nanaa kavalanae 1

0
1267

அத்தியாயம் 1:

காலை வேலை ஆதவன் உதித்த பின் அனைவரும் தத்தமது வேலைகளை செய்ய ஆரம்பிக்க ராஜ் குரூப் ஆப்  இன்டஸ்ட்ரீஸ் முதலாளி ராஜசேகர் வீட்டின் முன் அந்த பெரிய கோலத்தை அழகாக இட்டுக் கொண்டிருந்தாள் அவள். ரோஜா பூவை ஒத்த நிறம், கருவிழிகள் சுழல பார்ப்போர் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் கண்மணியாள். மெலிந்த உடல்வாகு கார் கூந்தல் அழகி. கோலத்தை வரைந்து கொண்டே முன் உச்சி கேசத்தை நகர்த்தி காதோரம் சேர்க்கும்  அழகுக்கு கட்டிளம் காளைகள் வந்து அடி பணிந்து போகும் பாந்தமான தெய்வீக அழகு.

தனது கோலத்திற்கு வண்ணம் தீட்டி அதை ஒருமுறை பார்க்க திருப்தி அடைந்தவள் உள்ளே செல்ல முனைய அப்பொழுது அந்த வீட்டில் அன்று தனது கடைசி நாள் வேலைகளை முடித்து கொண்டு கிளம்ப ஆயத்தமானார் பவளம். அந்த வீட்டில் பல வருடங்களாக வீட்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பவர். அவளுக்கு இன்னொரு தாயாக இருந்தவர் என்று கூட சொல்லலாம்.

“என்னடி அம்மா மத்த வேலையெல்லாம் எப்போ முடிக்க போற. இந்த கோலத்தை அலங்காரம் பண்ணிக்கிட்டு இருக்க” கேட்க அவளும் “எல்லாம் முடிச்சாச்சு கிழவி. நீ வேணா ஒரு தடவை வந்து பாரேன்” என்று கூற அவரோ முகவாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டவர் “ஆமாடி அதுக்குதான் எனக்கு நேரம் இருக்கு பாரேன். உனக்கு தான் வேலை இல்ல எனக்கு மா இருக்காது. அந்த கோலத்தை யாருடி பாக்க போற.  இன்னும் கொஞ்ச நேரத்துல அது மேல காரு எல்லாம் சரசரன்னு போயி ஒட்டுமொத்தமா அழிக்க போறாங்க அதுக்கு ஏண்டி இவ்வளவு மெனக்கெடற  உன் அக்கப்போருக்கு அளவே இல்லாம போயிருச்சு” என்று அவர் தலையில் அடித்துக்கொள்ள,

 அவளோ “உனக்கு இதெல்லாம் புரியாது கிழவி. அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேண்டும் அழகை ரசிக்கிறதுக்கு. உனக்கு கண்ணே சரியா தெரியாது. நீ எங்க போய் அழகை ரசிக்க போற” என்று கூறியவள் “அதனாலதான் உன்னை இந்த ஊட்ட விட்டு துரத்துறாங்க” என்று கூற, அவரோ “இவங்க என்னடி தொரத்துறது நான் போறேண்டி. இனிமேல் ஒரு ராணி மாதிரி என் பேத்தி என்ன பாத்துக்குவா” என்று கூறியவர் அவளருகில் வந்து அவள் தலையை தடவியபடி “பார்த்து பக்குவமா இருந்துக்கோ. அவங்க என்ன சொன்னாலும் கொஞ்சம் பொறுத்துக்கோ சீக்கிரம் ஏதாவது ஒரு நல்ல பையன பாத்து  கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டை விட்டுப் போய்விடு” என்று கூற,

 அவளும் “நீ கவலைப்படாத கிழவி எனக்கென ஒரு வாட்ச்மேன் சிக்காமலா போய்விடுவான்” என்று கூற அவரோ தலையில் அடித்துக்கொண்டு “இன்னும் நீ அந்த வாட்ச்மேன் புராணத்தை விடலையா. உள்ள போடி இங்க இப்படியே நின்னுகிட்டு இருந்தா அந்த அம்மா வந்து அடிக்கப் போறாங்க” என்று அவர் கடுப்பான குரலில் கூற அப்பொழுதுதான் அவளுக்கு தான் இன்னும் காபி போடாதது ஞாபகத்திற்கு வந்தது.

” அட கிழவி முன்னாடியே சொல்ல மாட்டியா. ஐயோ எனக்கு இன்னைக்கு அவ்வளவுதான். நான் அப்புறம் பேசுறேன் நீ பத்திரமா உன் பேத்தி ஊருக்கு போ. அடிக்கடி எனக்கு போன் பண்ணு. அந்த பேத்திய பார்த்த  உடனே இந்த பேத்திய மறந்துடாத” என்று கூற, அவளிடம் “சரி நீ சீக்கிரம் போ அப்புறம் அந்த அம்மா உன்ன கீரையை ஆயிற மாதிரி ஆஞ்சுவிடும்” என்று கூற அவளும் சரி நான் போறேன் என்று வீட்டிற்குள் சிட்டாக பறந்து விட்டாள்.

அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் காலை வேளையில் அவர் அவர்கள் குடிக்கும் பானத்தை தயார் செய்ய ஆரம்பித்தவள் ஒவ்வொருவராக கீழே வருவதை கண்டாள். ஒவ்வொருவரும் வர அவர்களுக்கு விருப்ப பானத்தைக் கொடுக்க ஆரம்பித்தாள்.முதலில் வந்தது அந்த வீட்டின் மூத்த பெண்மணி பருவதம். அவரிடம் சென்று “இந்தாங்க பாட்டிம்மா உங்களுக்கு காலையில் நீராகாரம்” என்று அவரிடம் நீட்ட அவரும் மெல்லிய புன்னகையோடு அதை வாங்கிக்கொண்டார்.

” என்னடி உன்னோட கோலம் போடுற வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா” என்று கேட்க, அவளும் “எல்லாம் முடிஞ்சிடுச்சு பாட்டிமா” என்று கூற, “மீதி வேலையெல்லாம் சீக்கிரம் முடி. இல்ல என் மருமக வந்தா அவ்வளவுதான் உன்னை” என்று கூற அவளோ “சமையலுக்கான எல்லா ஏற்பாட்டையும் நான் செஞ்சுட்டேன். அதனால சீக்கிரம் வேலையை முடித்து விடுவேன்” என்று அவரிடம் ரகசியம் பேசினாள்.

அப்பொழுது “ஏய் மலர்மதி”  என்று மாடியில் இருந்து ஒரு குரல் வர வேகமாக மாடியில் நோக்கியவள் அங்கு மேலிருந்து இறங்கி கொண்டிருந்த அந்த வீட்டின் தலைவி வசுந்தராவை கண்டாள். அவரை கண்டவுடன் வேகமாக சமையலறைக்கு சென்றவள் அவர் குடிக்கும் காபியை எடுத்துக்கொண்டு வந்து பணிவாக “இந்த அம்மா காபி” என்று கொடுத்தாள்.

அதை வாங்கியவர் ஒரு மிடறு குடித்துவிட்டு அப்படியே கீழே துப்பி “என்னடி இது சூடு இவ்வளவு அதிகமா இருக்கு” என்று கத்த அவள் “அம்மா ஆற்றிகொண்டு வரேன்” என்று கூறி காப்பியை ஆற்றி கொடுக்க அவரும் திரும்ப குடித்து பார்த்தவர், அவள் மீது திரும்ப அந்த காபியை விசிறி எறிந்து “என்னடி இப்ப சுத்தமா ஆறிப் போச்சு” என்று கூற அவள் அதிர்ந்து நின்றாள்.

பருவத்திற்கு வசுந்தராவின் இந்த செய்கை சுத்தமாக பிடிக்கவில்லை. என்னதான் அவள் அந்த வீட்டில் வேலை செய்பவராக இருந்தாலும் இப்படி செய்வது சரியாக அவருக்கு படவில்லை. ஆனால் தனது மருமகளை எதிர்க்க முடியாது என்று உண்மை அறிந்தவர் அமைதி காத்தார். அப்படி அவர் எதிர்த்து ஏதாவது கேட்டாலும் அதற்கான பலன் என்னவோ மறுபடியும் மலரில் மேல் தான் விழும் என்று எண்ணியவர் தான் பேசாமல் இருப்பதே அவளுக்கு நல்லது என்று எண்ணினார்.

வேகமாக தன் மேலிருந்த காபியை துடைத்தவள் சமயலறைக்கு சென்று துணி எடுத்து வந்து அந்த இடத்தை துடைத்து விட்டு அவருக்கு மறுபடியும் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அவள்மேல் ஊற்றிய அந்த காபியின் சூடு கூட அவளுக்கு உறைக்கவில்லை அந்த அளவுக்கு அவள் உடல் மரத்துப் போய் இருந்தது. ஒரு முறை இரு முறை என்றால் அது வலிக்கும் வாழ்க்கையில் பல முறை அனுபவித்தவள் அவளுக்கு இப்பொழுது எல்லாம் அந்த சூடு  எதுவும் செய்யவில்லை சாதாரணமாக கடந்து செல்ல ஆரம்பித்துவிட்டாள்.

அவள் சமையலறைக்குள் திரும்ப செல்ல போகும் நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் வசுந்தராவின் செல்லமகள் வர்ஷினி. அவள் வருவதை கண்ட உடன் வேகமாக சமையலறைக்கு சென்றவள் அவளுக்கான க்ரீன் டீ எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். வர்ஷினி அப்படியே தனது தாயின் நகல். திமிரு அகம்பாவம் அடுத்தவரை மதியாது என அனைத்திலும் தனது தாயை கொண்டே இருந்தாள். அதனாலேயோ என்னவோ பருவத்திற்கு தனது பேத்தி என்றால் சுத்தமாக பிடிக்காது அதுவும் வீட்டின் ஒரே பெண் வாரிசு என்ற காரணத்திற்காக தனது மகனும் மருமகளும் அவளுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பதாகவே அவர் எண்ணுவார். ஒரே பெண் வாரிசு அதை நினைக்கும் போது அவர் உள்ளம் கசந்தது.

கிரீன் டீ வாங்கியவள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர அந்த இடத்தை விட்டு அகல முனைந்த மலரை நிறுத்தியவள் “மலர் இன்னைக்கு சொல்லு என் உடம்பு குறைஞ்சு இருக்கா” என்று கேட்க அவளை திரும்ப பார்த்த மலர் மனதிற்குள் ‘கிரீன் டீ குடிச்சா மட்டும் போதாது அதுக்கேத்த மாதிரி கட்டுக்கோப்பாகவும் இருக்கணும். சாப்பிடற விஷயத்துல வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கிரீன் டீ குடிச்சா எப்படி உடம்பு குறையும். இதுல தினம்தினம் உடம்பு குறையுதானு என்கிட்டே கேட்டா நான் எப்படி பொய் சொல்லுவது. காலங்காத்தாலேயே பொய் சொன்னா எனக்கு போஜனம் கிடைக்குமா. உண்மைய சொன்னா ஆத்தாளும் மகளும் சேர்ந்து ஆடுவாங்க. அந்த உண்மையை சொல்லனா என் மனசு என்ன காரி துப்பும். அப்போ நான் என்ன தான் பண்ணுவேன் முருகா’ என்று மனதிற்குள் எண்ணியவள் “கொஞ்சம் கொறஞ்ச மாதிரிதான் இருக்கு” என்று கூற, “அப்படியா எனக்கு எதுவும் தெரியலையே” என்று கண்ணாடி முன்னின்று தன்னைத் திரும்பத்திரும்ப பார்த்தாள் வர்ஷினி.

 மலரோ ‘எப்படி தெரியும் எப்படி தெரியும் குறைஞ்சா தான தெரியும்’ என்று எண்ணினாலும் முகத்தில் அதை வெளிக்காட்டாமல் பவ்யமாக நின்றாள்.

அவள் மனதிற்குள் வர்ஷினி வறுத்துக் கொண்டிருக்க வர்ஷினியோ “இங்க என்ன சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க. போய் என்னோட யோகா மேட்ட எடுத்துட்டு வா. நான் யோகா பண்ணனும்” என்று கூற அவளும் வேகமாக ஓடிச் சென்று அவளது யோகா மேட்டை எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் தந்தாள்.

அப்பொழுது அங்கு வந்த ராஜசேகர் அந்த வீட்டின் தலைவர் “மலர் என்னோட சத்துமாவு எங்கே” என்று கேட்க அவளோ “அய்யா இதோ கொஞ்ச நேரம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று சமையலறைக்கு ஓடியவள்.

 அவரது சத்துமாவுக் கஞ்சியை அவரிடம் கொண்டுவந்து தர, “என்ன நினைச்சுகிட்டு இருக்க நேரா நேரத்துக்கு எனக்கு கொடுக்கணும்னு உனக்கு தெரியாதா” என்று கேட்க வசுந்தரா “அவ நெனப்பு எல்லாம் இங்க இருந்தா ஆகும். கடமைக்கு ஏதோ ஒன்னு ரெண்டு வேலைய மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கா” என்று அலுத்துக் கொள்ள பர்வதமும் மனதில்  ‘இந்த வீட்ல இருக்க அத்தனை வேலையும் இவ மட்டும்தான் பாக்குற. இனிமேல் பவளமும் கிடையாது இவள் தலையில  இத்தனை பாரத்தை ஏற்றிவிட்டு ஒன்னு ரெண்டு என்று சொல்கிறார்களே’ என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டார்.

“காலையில் சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம்னு இருக்க” என்று வசுந்தரா கேட்க, “அம்மா இன்னைக்கு பொங்கல் பூரி வடை பண்ணலாம்னு இருக்கேன்” என்று சொன்னாள் மலர்.

“என்னது பொங்கலா அதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு தோசை தான் வேண்டும்” என்றாள் வர்ஷினி.

 மலரோ “இல்லம்மா நேத்துதான் தோசைமாவு தீர்ந்தது. இன்னைக்குதான் ஆட்டனும்” என்று கூற வசுந்தரா நடுவில் வந்து “வீட்டில் நீ என்ன வேலை கிழித்துக் கொண்டிருக்க. ஒரு மாவு ஆட்டி வைக்க கூட உனக்கு நேரம் இல்லையா. உன்னை எல்லாம் எதுக்கு வீணா தண்ட சோறு போட்டு நாங்க இங்க வெச்சிக்கிட்டு  இருக்கோம் என்று  எங்களுக்கு தெரியல” என்று கூற, ” இல்லம்மா வேலை இருந்தது” என்று ஏதோ மலர் கூற வர அவளை வேகமாக கண்ணத்தில்  அறைந்தவர் “வாயைத் திறந்து பேசாத. என் பொண்ணுக்கு அவ கேட்டது குடுக்காம இப்ப என்ன உனக்கு பேச்சு வேண்டி கிடக்கு” என்று அவளை திட்டி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவள் கண்ணத்தில் கைவைத்தபடி அதிர்ந்து நின்று கொண்டிருக்க பருவம்தான் அவளை சமையல் அறைக்கு அழைத்துச் சென்று “நீ என்ன பண்ணுனாலும் இவங்க எல்லாரும் நீ வேலை பார்க்கல என்று தான் சொல்ல போறாங்க. முடிஞ்ச அளவுக்கு நீ பண்ணு .எனக்கும் உனக்காக பேசணும்னு எண்ணம் இருக்கு தான்  ஆனா இங்க என் பேச்சை யாரும் மதிக்க போறது கிடையாது. சீக்கிரம் யாரையாவது ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணிட்டு நீ இந்த வீட்டை விட்டு கிளம்பி விடு” என்று கூறியவர் அவளது முகத்தை பார்க்க அவள் புன்னகை தவழ அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 “என்ன அடிச்சுட்டு போற நீ சிரிச்சுட்டு  இருக்க” என்று கேட்க, “பாட்டிம்மா ஒரு தடவ அடிச்சா வலிக்கும். அடிக்கடி அடிச்சா வலிக்காது. இப்ப எல்லாம் அவங்க அடிச்சா எனக்கு மசாஜ் பண்ற மாதிரி இருக்குது தெரியுமா. இப்போ எல்லாம் அவங்க அடிக்கிறது எனக்கு உறைக்கிறது கிடையாது. உங்களுக்கு இன்னொரு ரகசியத்தை சொல்லட்டுமா” என்று அவர் காது அருகில் சென்றவள், “நான் வேண்டுமென்றே தான் இன்னைக்கு அந்த பொண்ணுக்கு தோசைக்கு மாவு அரைக்கல.  சுட்டுக் கொடுத்தா ஒவ்வொரு தடவையும் இது மொறு மொறுனு வரல, அடுத்த தடவ இது ரொம்ப ரொம்ப முருமுரு வந்துருச்சுன்னு ரொம்ப பேசுது. அதனாலதான் ஒரு ரெண்டு நாளைக்கு அது தோசை இல்லாம இருக்கட்டுமுனு இப்படி பண்ணினேன்” என்று கூற, அவரோ “அடப்பாவி அப்ப வேணும்னே தான் பண்ணுனியா” என்று கேட்க, அவளும் “ஆமாம் ஒரு ரெண்டு நாளைக்கு தோசை சாப்பிடாம இருந்தா உங்க பேத்தி என்ன குறைந்தா போய்விடும்” என்று அவரிடம் கேட்க அவரோ “என் பேத்தியை பத்தி என்கிட்ட சொல்றியா” என்று மிரட்டுவது போல் பேசியவர் பின் சிரித்துக் கொண்டே அவளது தலையை ஆதரவாக தடவினார்.

பின் அவரே “சரி சரி நான் இங்கிருந்து போறேன். என் மருமக நான் உன் கூட பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்தா அதுக்கும் ஆட்டம் ஆடுவா. நான் போய் அமைதியாய் என்னோட இடத்துல உட்கார்ந்திருக்கிறேன்” என்று  மலர்மதியிடம் கூறிவிட்டு வேகமாக சமையல் அறையை விட்டு வெளியே சென்றார். அவளும் அன்றைய உணவுக்கான வேலைகளை பார்க்க துவங்கினாள்.

காலை உணவை அனைவரும் உண்டு விட்டு வெளியே சென்று விட மலர் பாத்திரம் அனைத்தையும் கழுவி வைத்துவிட்டு “பருவதம் பாட்டி நான் மார்க்கெட் போய் மதிய சமையலுக்கு காய்கறி வாங்கிட்டு வரேன்” என்று கூற, அவரோ “யாரு உன்  ஜோடி பொண்ணு அல்லி கூடவா” என்று கேட்க அவளும் ஆமாம் என்றாள்.

” போங்க ரெண்டு பேரும் போய் ஊர் கதையெல்லாம் ஒண்ணா பேசிட்டு வாங்க” என்று கூற, அவளோ “ஆமாமா அப்படியே ஊர் உலகக் கதையெல்லாம் நாங்க பேசி விட்டாலும். நீங்க வேற ஏன் மா  என்ன காய்கறி, நாளைக்கு என்ன சமைக்கிறது இதுதான் எங்களுக்குள்ள அதிகம் பேச்சா இருக்குது. என்ன பண்றது” என்று சலித்துக் கொண்டவள் மார்க்கெட் செல்ல வெளியே வந்தாள்.

தினமும் காலை 10 முதல் 12 வரை அவள் அல்லியுடன் மார்க்கெட் செல்லும் நேரம் தான் அவர் சந்தோஷமாக இருக்கும் நேரம். தினமும் காய்கறிகளை புதிதாக வாங்க வேண்டும் என்று அந்த வீட்டில் கட்டளை இருக்க அவளுக்கு அது சாதகமாக போயிற்று. அதனால் தினமும் தனது தோழியுடன் வெளியே சென்று விடுவாள்.

அல்லி பக்கத்து வீட்டில் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவளுடன் நட்பாக பழக ஆரம்பித்து இப்போது இருவருமே நண்பர்கள் ஆகிவிட்டனர். அன்று அவர்கள் மார்க்கெட் செல்லும் வழியில் ஒரு படத்தின் கல்யாணம் நடப்பது போல் இருந்த போஸ்டரை கண்ட அல்லி “அங்க பாரடி மலரே நமக்கெல்லாம் அந்த மாதிரி கல்யாணம் நடக்குமா” என்று கேட்க, அவளோ “ஏன் நடக்காது தாராளமா நடக்கும்” என்றாள். “எப்படி சொல்ற” என்று அல்லி கேட்க “எவனாவது ஒரு இளிச்சவாயன் நமக்குனு வந்து மாட்டாமலா போய்விடுவான். பார்க்கலாம்” என்றாள் மலர் சிரித்துக்கொண்டே.

“ஆமாடி மலர் உனக்கு எப்படி மாப்பிள இருக்கணும்னு ஆசை” என்று கேட்க சற்று நேரம் யோசனை செய்தவள், “உனக்கு தெரியாதா எனக்கு ஒரு வாட்ச்மேன் தாண்டி மாப்பிள்ளையா வேண்டும்” என்று முகம் பூரிப்பில் மிளிர கூறினாள்.

“நீ சும்மா சொல்லிக்கிட்டு இருக்கேன் நெனச்ச நீ என்ன நிஜமா சொல்ற” என்று கேட்க, “இதுல போய் யாராவது விளையாடுவீங்களா. எனக்கு வரப் போற புருஷன் வாட்ச்மேனா தான் இருக்கணும்” என்றாள்.

 அவள் “அடியே ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் பெரிய பெரிய வேலை இல்லை பாக்கிறவங்க தான் வேணும்னு கேட்பாங்க. நீ என்னனா வாட்ச்மேனை போய் கேட்கிற” என்று கேட்க,

” பின்ன உன் மூஞ்சிக்கும் என் மூஞ்சிக்கும் கலெக்டர் வேலை பாக்குறவனா வருவான். நமக்கும் இந்த வாட்ச்மேனை போதும்” என்று கூற, அல்லி “ஆனா ஏன் வாட்ச்மேன்”  என்று கேட்க,

“உனக்குதான் தெரியுமே எங்க அம்மா நான் பார்த்ததுகூட இல்லை. நான் பிறக்கும்போது அவங்க இறந்துட்டாங்க. என் அப்பா இங்க  கார் டிரைவராக இருந்தவர்.  அவரும் அடிக்கடி வெளியில் போய்விட்டு வருவார். அதனால நான் தனியாவே இருக்க வேண்டியதா போயிடுச்சு. ஒரு தடவை ஐயாவையும் அம்மாவையும் வெளியில விட்டுட்டு  வரும்போது விபத்தில் இறந்து போயிட்டாரு. அதனால நம்ம புருஷன் நம்ம இருக்கிற அதே இடத்தில் இருக்கணும்னா அவன் வாட்ச்மேன் இருந்தா மட்டும்தான் முடியும்” என்று கூற அல்லியோ புரியாமல் “என்னடி சொல்ற” என்று கேட்டாள்.

“அடியே இப்போ நான் வீட்ல வேலை பார்த்துகிட்டு இருக்கேன். என் புருஷன் அதே வீட்ல வாட்ச்மேனா இருந்தா அவன் என்ன பண்ணுவான் வீட்டிலேதான் இருப்பான். எஎங்கயும் வெளில போக மாட்டான். நாலபின்ன எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னு வச்சுக்கோ எனக்கு குழந்தை பிறந்துக்கு  அப்புறம் அவன் என் குழந்தையை பார்த்துப்பான் வீட்டிலேயே இருக்கனால.  அதனால குழந்தையை பார்த்துக் கொள்வதில் சிரமம் இருக்காது குழந்தையும் அப்பா இல்லை என வருத்தப்படாதே” என்று அவள் இயல்பாக கூற அல்லிக்கோ அவளது சின்ன வயது கஷ்டங்கள் புரிந்தது.

அவளது நிலையை உணர்ந்த அல்லி “கவலைப்படாத உனக்கு ஒரு வாட்ச்மேன் வீட்டுக்காரரா வருவார்” என்று அவளை ஆசிர்வதிப்பது போல் கூற பெரும் மகிழ்ச்சி கொண்ட மலர் “அப்படி மட்டும் நடந்து விட்டால் உனக்கு ஒரு புது பட்டுப்பாவாடை தாவணி எடுத்து தரன்”என்று கூற,  “இதுக்காகவாவது உனக்கு ஒரு வாட்ச்மேன்  புருஷனா வருவாரடி” என்று கூறினாள்.

பின் இருவரும் காய்கறிகள் வாங்கிக் கொண்டு தாங்கள் வேலை செய்யும் இல்லத்திற்கு வர அப்பொழுது ராஜசேகரன் இல்லத்தின் வெளியில் 6 அடி உயரத்தில் ஆஜானுபாகுவான உடல் வாகுடன் மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறத்தில்  நின்று கொண்டிருந்தான் ஒருவன்.

அவனது கம்பீரமான தோற்றம் மலரை ஈர்த்தது. அவன் அருகில் சென்று நின்றவள் வாயை பிளந்தபடி அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவனோ யாரோ தனது அருகில் வரும் அரவம் கேட்டு திரும்ப பார்த்தான். அங்கு மலர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன் “ராஜசேகர் சார் இருக்காரா” என்று கேட்க அவளுக்கு அவன் என்ன கேட்கிறான் என்பது காதில் விழவே இல்லை. அவனையே வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனோ மறுபடியும் “ராஜசேகர் சார் இருக்கிறாரா” என்று கேட்க அப்பொழுதும் அவளுக்கு சுயநினைவு வரவில்லை.

 அவன் “ஒருவேளை காது கேட்காதோ” என்று முணுமுணுத்து, சத்தமாக “ராஜசேகர் சார் இருக்காரா” என்று அவள் காதருகில் கத்த அவன் கத்தியதில் பதட்டம் அடைந்தவள் வேகமாக தனது கையில் இருந்த காய்கறி கூடையை கீழே விட்டு விட்டாள்.

அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தவள் அவனை என்ன என்பது போல் பார்க்க அவன்  உயர்ந்த  குரலில் “ராஜசேகர் இருக்காரா” என்று மறுபடியும் கேட்க,  அவளோ “எதுக்கு இவ்வளவு சத்தமா பேசுறீங்க. எனக்கு நல்லா காது கேட்கும்” என்று அவனிடம் சிடுசிடுக்க அவனோ “அப்போ இதுக்கு முன்னாடி நான் கேட்டப்போ நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க. காது கேட்காதவர்கள் எல்லாம் எதுக்கு தான் வீட்டில் வேலைக்கு வச்சிருக்காங்க” என்று அவன் கூற அவளுக்கு கோபம் சுருசுருவென ஏறியது.

அவன் தன்னை காது கேளாதவள் என்று கூறியது அவளது கோபத்தை அதிகரிக்க “யோவ் யாரய்யா காது கேட்காதவனு சொல்ற அடிச்சு மூஞ்சி எல்லாம் பேத்துடுவேன் பார்த்துக்க” என்று அவனிடம் எகிற, அவன் தனது தோள்பட்டைக்கு கூட வராதவள் தன்னை மிரட்டுவதை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ஆனால்  அதை வெளியில் காட்டாமல் “எத்தனை தடவை கேட்டும் பதில் சொல்லாமல் இருந்தால் காது கேட்காதவனு தான் சொல்லுவாங்க” என்று கூற அவளுக்கும் அவளது தப்பு புரிந்தது. தான்  அவனை மெய்மறந்து பார்த்துக்கொண்டு என்ன கூறுகிறார் என்று கவனிக்காமல் விட்டோமே என்று எண்ணியவள் தன்னை சமாளித்துக் கொண்டு “சரி சரி நீங்க யாரு எதுக்கு  வந்து இருக்கீங்க” என்று கேட்க அவனோ அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.

” என்னய்யா அப்படி பார்க்கிற வசதியான வீடு ஏதாவது ஆட்டையை போட்டு போலாம்னு பாக்குறியா” என்று கேட்க அவனோ “இல்ல நான் இங்க செக்யூரிட்டி வேலைக்கு வந்தேன்” என்று கூற அவள் கண்களில் மின்னல் மின்னி மறைந்தது

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here