Vanavil Sirpame – Episode 1

4
2870

அத்தியாயம் 1

‘எவ்வளவு நேரம் இப்படி ஒளிந்து கொண்டு இருப்பது?’பதட்டத்துடன் கை விரல்களை கடித்துத் துப்பிக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா . ‘வந்து இவ்வளவு நேரம் ஆச்சு! இன்னும் எங்கே அவளை காணோம்…ஒரு வேளை மாட்டிக் கொண்டாளோ’ என்ற சிந்தனையில் மூழ்கி இருக்கும் போதே அவளுக்கு அருகில் ஒரு உருவம் பொத்தென்று குதிக்க “ஆ…அம்மா …பேய்…” என்ற அலறலுடன் இரண்டு அடி தள்ளிப் போய் விழுந்தாள்.

“ஏன்டி பிசாசே இப்படி கத்துற… நான் தான்டி தனுஜா.”“ஏய் எருமை… இப்படியா குதிச்சு பயமுறுத்துவ…மெதுவா குதிக்க வேண்டியது தானே”

“ஏன்டி சொல்ல மாட்ட…எப்பவும் ரெண்டு பேரும் ஒண்ணா தானே சுவர் ஏறிக் குதிச்சு ஓடி வருவோம்.இன்னைக்கு ஏன்டி  நீ மட்டும் தனியா வந்த.நான் உன்னை காணோம்னு காலேஜ் கேம்பஸ் முழுக்க தேடிட்டு இப்ப தான் வரேன்.சொல்லிட்டு வர மாட்டியா?”

“ஹி ஹி… நீ முன்னாடியே வந்துட்டன்னு நினைச்சேன்.அதான்”“சரி சரி ரொம்ப வழியாதே…வா சத்தம் போடாம கிளம்பலாம்.காலேஜ்ல யார் கண்ணுலயும் பட்டோம் அப்புறம் சங்கு தான். சரிடி…இன்னைக்கு எங்கே போகலாம்?படத்துக்கு போகலாமா?”

“படத்துக்கு எல்லாம் வேணாம்…பீச்சுக்கு போகலாம்.”என்றாள் சங்கமித்ரா.“அடியே மணி இப்போ என்ன ஆகுது தெரியுமா?மதியம் 2 மணி.இந்த நேரத்தில் யாராவது பீச்சுக்கு போவாங்களா…வேற எங்கயாவது போகலாம்” “அதெல்லாம் வேணாம்.இன்னைக்கு பீச்சுக்கு போறதுன்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.ப்ளீஸ்! ப்ளீஸ் அங்கேயே போகலாம்.”

“சரி சரி வந்து தொலை” என்று சலித்தபடியே தோழிகள் இருவரும் ஆட்டோவில் ஏறி பீச்சிற்கு சென்றனர்.பீச்சிற்கு போய் வெயில் தாங்க முடியாமல் அங்கே இருந்த ஒரு படகின் மறைவில் போய் தோழிகள் நிழலுக்காக ஒதுங்கினர்.

“இப்போ சொல்லுடி சங்கி…எதுக்கு என்னை கிளாஸ் கட் பண்ணிட்டு வெளியே வர சொன்ன?”

“வர ஞாயிற்றுக்கிழமை என்னை பொண்ணு பார்க்க வராங்க”

“ஹே…சுப்பர் கங்க்ராட்ஸ் சங்கி.இதை ஏன் காலேஜ்லயே சொல்லல.மாப்பிள்ளை என்ன செய்றார்?போட்டோ பார்த்தியா?உனக்கு பிடிச்சு இருக்கா?” படபடவென கேள்விகளை அடுக்கிக்கொண்டே போன தோழியை பார்த்து ஒரு கசந்த முறுவலை வெளியிட்டாள் சங்கமித்ரா.

“ஏன் இவ்வளவு அவசரம் தனு.உனக்கு என்னை பற்றி தெரியாதா?அந்த மாப்பிள்ளையை பற்றி நான் எந்த விஷயத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. எனக்கு இன்னும் மேற்கொண்டு நிறைய படிக்க ஆசை.இப்போ அதை எல்லாம் விட்டுட்டு கல்யாணம்,குடும்பம்,குழந்தை…ஊப்ஸ் …இதை எல்லாம் நினைச்சு பார்க்கவே பிடிக்கலைடி.”

“சரி பிடிக்கலேன்னா.அப்படியே உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிட வேண்டியது தானே.”

“ஆமா…நான் சொன்னதும் ஆஹா அப்படியான்னு கேட்டுக்கிட்டு உடனே கல்யாணத்தை நிறுத்தி விடுவாங்க பாரு.ஏன்டி வயித்தெரிச்சலை கொட்டிக்கிற.நான் சொன்ன அதே டயலாக் தான் என்னோட அக்காவும் சொன்னா.அவளை படிக்க விட்டாங்களா என்ன? கல்யாணம் பண்ணிக்கொண்டு போய் புருஷன் வீட்டில் படின்னு சொன்னாங்க.இதோ அவளுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு.கையில குழந்தையோட அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் அலைஞ்சுக்கிட்டு இருக்கா?…”

“உங்க அக்கா படிக்காம விட்டுட்டா அதுக்கு அவங்க என்ன செய்வாங்க…”

“இல்லடி எனக்கு என்னவோ இதெல்லாம் சரியா வரும்னு தோணலை.கல்யாணம் ஒரு கமிட்மென்ட்.அதுல நுழைஞ்சுட்டா அதுக்குன்னு உண்டான சில கடமைகளை செஞ்சு தான் ஆகணும்.என்னால கல்யாணத்துக்கு அப்புறம் படிக்க முடியும்னு தோணல.”“சரி இதுக்கு இப்போ என்ன செய்யலாம்னு சொல்ற?”

“இல்ல…உன்னோட அப்பாவும் அம்மாவும் எங்களுக்கு பேமிலி பிரண்ட்ஸ் தானே.அவங்களை வந்து எங்க வீட்டில் பேச சொல்றியா? ப்ளீஸ்!”

“ஹே…இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்டி .இதை போய் நான் என் வீட்டில் பேசினா என் அப்பாவும் அம்மாவும் என்னை வெளுத்து விட்டுடுவாங்க.”

“இப்போ இதுக்கு என்ன தான் வழி…நீ பேசி உங்க அப்பா அம்மா மூலம் இந்த பிரச்சினையை சரி செய்வன்னு பார்த்தா…” என்று இழுத்த தோழியை பார்க்கையில் உள்ளுக்குள் கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது தனுஜாவுக்கு.ஆனால் இதில் தான் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் அவளுக்கு.என்ன இருந்தாலும் அவளுடைய பெற்றோரும் பெண்ணை பெற்றவர்கள் தானே.அவர்கள் கண்டிப்பாக மித்ராவின் பெற்றோருக்கு தான் சப்போர்ட் செய்வார்கள் என்று அவளுக்கு தெரியும்.அப்படி இருக்கையில் என்ன சொல்லி தோழியை சமாதானம் செய்வது என்று புரியாமல் யோசனையோடு பார்த்தாள் தனுஜா. சட்டென கண்கள் பளிச்சிட மித்ராவிடம் திரும்பி, “ஏன் மித்ரா உனக்கு பார்த்து இருக்கும் அந்த மாப்பிள்ளையிடம் பேசினால் என்ன?”

“இல்ல தனு அது சரி வராது…இந்த மாப்பிள்ளை போனா வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க…ஸோ அது வேலைக்கு ஆகாது.நாம பேச வேண்டியது என் வீட்டில் தான்.பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் இல்லை.”

“இப்போ என்ன தான் செய்யலாம்னு சொல்ற…எனக்கு எந்த ஐடியாவும் தோணலை.உனக்கு நல்ல ஐடியா வேணும்னா என்னை ஏதாவது நல்ல ஹோட்டலுக்கு கூட்டிக்கிட்டு போ…அதை விட்டுட்டு இப்படி மொட்டை வெயிலில் உட்கார வச்சு என்கிட்ட எந்த ஐடியாவும் கேட்காதே”

“எருமை…எருமை.பசிக்குதுன்னா நேரடியாவே சொல்லித் தொலை அதை விட்டு ஏன்டி இப்படி இவளோ லென்த்தா மூச்சு வாங்க பேசுற…சரி சரி முறைக்காதே.அதோ அங்கே ஐஸ்கிரீம் கடை இருக்கு அங்கே போய் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா”

“என்னது ஐஸ்கிரீம் கடையா? நான் உனக்கு என்னடி பாவம் பண்ணினேன்.மதிய சாப்பாடை கூட சாப்பிட விடாமல் இழுத்துக்கிட்டு வந்துட்டு இப்படி வெறும் ஐஸ்கிரீம் மட்டும் வாங்கித் தரேன்னு சொல்றியே…யானை பசிக்கு சோளப்  பொரியா?”

“நான் இங்கே எவ்வளவு பெரிய பிரச்சினையில் இருக்கேன்.நீ கொட்டிக்கிறதிலேயே குறியா இரு…உன்னை எல்லாம் பிரண்டா வச்சுக்கிட்டு நான் எல்லாம் என்ன செய்யப் போறேனோ” அலுத்துக் கொண்டாலும் தனுவை போலவே தானும் மதிய உணவை உண்ணாததால் பசி வயிற்றை கிள்ள சற்று தூரத்தில் தெரிந்த ஒரு உணவகத்தை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

பாதி வழியிலேயே இருவரது பாதையையும் மறைத்துக் கொண்டு வந்து நின்றான் புதியவன் ஒருவன். ‘யாரிவன்’ என்ற யோசனையுடன் மித்ரா அவனை பார்வையால் அளந்து கொண்டு இருந்தாள்.நல்ல ஆறடி உயரம்,வாட்ட சாட்டமான உடல்வாகு,காவல் தெய்வம் அய்யனாரை போல நல்ல கருப்பு நிறம்,வசீகரமான முகம்,சிரிக்கும் போது மின்னல் வெட்டியது போல அழகாக இருந்தது.தீர்க்கமான பார்வையுடன் அவனும் அப்பொழுது சங்கமித்ராவை தான் பார்வையாலேயே அளந்து  கொண்டு இருந்தான்.

‘எப்படி பார்க்கிறான் பார்… என்று கோபத்தோடு அங்கிருந்து மித்ரா செல்ல முற்படும் முன் அவனே பேச ஆரம்பித்தான்.  “எனக்கும் ரொம்ப பசிக்குது.நாம சேர்ந்தே சாப்பிட போகலாமா?”

 “ஹலோ என்ன மிஸ்டர் யார் நீங்க? தனியா இருக்கிற பெண்கள் கிட்ட வம்பு பண்றீங்களா?”சங்கமித்ரா படபடவென பொரிந்தாள்.அவளுடைய கேள்வியில் லேசாக திகைத்தாலும் உடனே சமாளித்துக் கொண்டு அதற்கான பதிலை சொல்ல சிறிதும் தயங்காமல் பதில் சொல்லலானான் அவன்.

“ஒரு சின்ன கரெக்ஷன்…நான் வம்பு பண்ணத் தான் வந்து இருக்கேன்.ஆனா உங்க ரெண்டு பேர்கிட்டயும் இல்ல.உன்கிட்ட மட்டும்.”அவன் ஆட்காட்டி விரலை நேராக நிமிர்த்தி சங்கமித்ராவை நோக்கி நீட்டினான்.

“என்ன மிஸ்டர்…கொழுப்பா?இந்த ரோமியோ வேலை எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோங்க.அவங்க அப்பா யார்னு தெரியாம விளையாடாதீங்க…உயிரோட இருக்கணும்னா பேசாம போய்டுங்க” இப்பொழுது தோழிக்காக தனுஜா பரிந்து பேசலானாள்.

“அயய்யோ பயமா இருக்கே…இவங்க இன்ஸ்பெக்டர் தர்மராஜோட பொண்ணு சங்கமித்ரா தானே…காலேஜ் நேரத்தில் கட் அடித்து விட்டு இப்படி ஊரை சுத்துறீங்க…உங்க அப்பாகிட்ட சொல்லட்டுமா?” அவன் கூலாக கேட்டான்.

‘இவன் யாரு…இவனுக்கு எப்படி என்னோட அப்பாவை தெரியும்?ஒருவேளை அப்பாவுக்கு தெரிஞ்சவரா இருப்பாரோ…பேசாமல் சைலண்டா இடத்தை காலி பண்ணிட வேண்டியது தான்.’ என்று நினைத்தவள் மெல்ல தனுஜாவின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்து கிளம்பலாம் என்பது போல கண்களால் சமிஞ்சை செய்யவும் மெல்ல அவனை முறைத்தவாறே அங்கிருந்து நழுவ தொடங்கினர்.

சங்கமித்ராவின் கண்களில் ஒவ்வொரு நிமிடமும் தோன்றிய உணர்ச்சிகளை தன் கண்களில் நொடி கூட தாமதிக்காமல் படமெடுத்து அதை எல்லாம் இதயத்தில் சேமித்து ரசித்துக் கொண்டு இருந்தான் அவன்.குழப்பத்தில் அவள் தன்னுடைய விரல் நகங்களை கடித்தது,பயத்தில் தன்னுடைய கருவிழிகளை அங்கும் இங்கும் சுழற்றியது,என்று அவள் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் லேசர் போன்ற விழிகளால் கூர்மையாக அளவிட்டுக் கொண்டு இருந்தான்.

அவர்கள் மெல்ல நழுவுவதை பார்த்ததும் உரத்த குரலில் , “என்னங்க இப்படி என்னை தனியே விட்டுட்டு போறீங்க…பயப்படாதீங்க…நீங்க சாப்பிட்டதுக்கும் சேர்த்து நானே பணம் கொடுத்திடறேன்.என்னையும் கூட கூட்டிப் போங்க.ப்ளீஸ்!”அவனுடைய குரலில் இருந்த சிரிப்பு சங்கமித்ராவிற்கு ஆத்திரத்தை கொடுக்க,அவனுக்கு முன்னே நடந்து கொண்டு இருந்தவள் நடையை நிறுத்தி விட்டு அவனை திரும்பிப் பார்த்து முறைக்க ஆரம்பித்தாள்.

அது தான் சாக்கென்று அவன் நன்றாக நின்று அவளின் உச்சி முதல் உள்ளங்கால் வரை பொறுமையாக பார்வையிட சங்கமித்ராவின் கோபம் தான் இன்னும் எல்லையை கடந்தது.அவள் அவனை நன்றாக முறைக்க அவனோ அவளது கண்களை நேராக பார்க்கலானான்.நொடிக்கு நொடி அவனுடைய பார்வையில் கூர்மை ஏற அவள் தான் அவனுடைய பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் பார்வையை திருப்ப வேண்டியதாயிற்று.சில நொடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டு மீண்டும் அவனை கோபமாக முறைக்க அவள் முயற்சி செய்ய,ஒரே கண் சிமிட்டலில் அவளை அலற வைத்தான் அவன்.

‘என்ன இவன் இப்படி செய்து வைக்கிறான்.முழியை பாரு முழியை…இரு இரு என் அப்பாகிட்ட சொல்லி உன் கண்ணை நோண்ட சொல்றேன்’ என்று மனதுக்குள் திட்டியவாறே கோபத்துடன் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.அவளுடைய நடையில் கோபத்தை விட தடுமாற்றம் இருப்பதை உணர்ந்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.‘இன்னும் இவ என்னோட போட்டோவை பார்க்கலையா…இல்லை இவங்க அப்பா கல்யாண விஷயத்தை வீட்டில் பேசவே இல்லையா?’ என்ற யோசனையோடு அவள் செல்லும் பாதையை பார்த்தவாறே அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தான் பிரபஞ்சன்.

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
Previous PostIntroduction
Next PostVanavil Sirpame – Episode 2
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here