Vanavil Sirpame – Episode 16 Tamil Novels

6
1215
அத்தியாயம் 16

மாலை நெருங்கிய பிறகும் கூட மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வராமல் போகவே ஏன்? என்ன காரணம்? என்று மற்றவர்கள் குழம்பித் தவித்துக் கொண்டு இருக்கச் சங்கமித்ரா மட்டும் மகிழ்ச்சியாக இருந்தாள்.பின்னே இருக்காதா? யார் என்றே தெரியாதவன் முன்னிலையில் அலங்கரித்துக் கொண்டு நிற்க வேண்டிய தேவை இல்லாமல் போயிற்றே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

சாவித்திரியும்,தர்மராஜும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வருத்தத்துடன் உலாவி கொண்டு இருக்க,தன்னுடைய மகிழ்ச்சி வெளியே தெரியாதவண்ணம் காட்டிக் கொள்ள முயன்றாள் சங்கமித்ரா.அவளை பெற்றவர்களோ இப்படிப் பெண் பார்க்கும் வைபவம் நடக்காததைக் குறித்து மகள் வருந்திக் கொண்டு இருக்கும் வேளையில் மேற்கொண்டு வேறு எந்தக் கேள்வியும் கேட்டு அவளைத் துன்புறுத்தக் கூடாது என்று விட்டு விடவே அது அவளுக்கு இன்னும் வசதியாகப் போனது.முதல் நாள் கோபமாகப் பேசியதில் இருந்து சத்யா அவளிடம் பேசுவது இல்லை.எனவே அவளை அந்த வீட்டில் யாரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் விட்டு விட்டார்கள்.

முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு மாலை வரை அவர்கள் முன் நடமாடியவள் அன்னையிடம் அனுமதி வாங்கிய பிறகு தன்னுடைய அலங்காரத்தை எல்லாம் கலைத்துக் கொண்டாள்.அணிந்து இருந்த நகை,புடவை எல்லாவற்றையும் களைந்து விட்டு புடவைக்கு மாறிய பிறகு அவள் செய்த முதல் காரியம் போனை எடுத்துப் பிரபஞ்சனிடம் இருந்து ஏதாவது அழைப்பு வந்து இருக்கிறதா என்று பார்த்தது தான்.
அது தான் அவனைப் பிடிக்கவில்லை என்று முடிவு செய்தாயிற்றே.அப்புறம் எதற்கு அவனது அழைப்பை இப்படி எதிர்பார்க்கிறாய்?’நக்கலாகக் கேலி பேசியது அவளின் மனச்சாட்சி.

அது …அது வந்து இன்னும் அந்த முடிவை பிரபஞ்சன் கிட்டே சொல்லலியே அது தான்.தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள முயன்றாள் சங்கமித்ரா.

ஓஹோ! அந்த அளவிற்கு உன் முடிவில் நீ உறுதியாக இருந்தால் நீயே போன் செய்து அவனிடம் சொல்லி விடேன்

இல்லை…இல்லை அதெல்லாம் வேண்டாம்.எனக்கு அதுக்கெல்லாம் அவசியம் இல்லை

ஹ…உனக்குப் பயம்.அவனிடம் பேச…பேசினால் உன்னை எப்படியும் சம்மதிக்க வைத்து விடுவான் என்று உனக்குத் தெரியும்.அதனால் தான் அவனை நீ அவனுக்கு அழைக்க மறுக்கிறாய்அவளின் மனசாட்சி அவளின் உண்மை மனநிலையைப் பிட்டு பிட்டு வைத்தது.

அதெல்லாம் எனக்கு ஒண்ணும் பயமில்லை.அவன் ரௌடியாக இருந்தால் இருந்து விட்டு போகட்டுமே எனக்கு என்ன பயம்?”

அப்படின்னா இப்பவே அவனுக்குப் போன் பண்ணி பேசு பார்க்கலாம்

அதெப்படி?”

இதோ பார் சும்மா எதையாவது பேசி நேரத்தை வீணாக்காதே…ஒன்று அவனுடன் பேசி உனக்கு அவனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை என்ற உண்மையைச் சொல்லிவிடு.இல்லையென்றால் உனக்கு அவனிடம் மயங்கி விடுவோம் என்ற பயம் இருப்பதை ஒத்துக்கொள்.கிடுக்குப்பிடி போட்டது அவளின் மனசாட்சி.

சற்று நேரம் யோசனையில் மூழ்கியவள் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுத் தன்னைச் சமபடுத்திக் கொள்ள முனைந்தாள்.பிரபஞ்சனை வேண்டாம் என்று மறுத்து பேச முதலில் அவளின் மனதை அவள் சமாதானம் செய்ய வேண்டியதாய் இருந்தது.வெறும் மூன்றே நாட்களில் அவள் மனதில் நுழைந்து விட்ட ஒருவன் தான்.அவனைத் தூக்கி எறிவது சுலபம் என்று தான் அவளும் நினைத்தாள்.

ஆனால் இப்பொழுது கேலி பேசி சிரிக்கும் தன்னுடைய மனசாட்சியின் குரலுக்காக என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாலும் கூட அவளால் அதை இலகுவாகச் செய்ய முடியவில்லையே!.அப்பொழுதே அவளுக்குப் புரிந்து போனது பிரபஞ்சன் தன்னுள் எத்தனை ஆழமாகப் பரவி இருக்கிறான் என்று.இருந்தாலும் மனக்கண்ணில் முதல் நாள் அவன் நடந்து கொண்ட மிருகத்தனம் நினைவுக்கு வரவே வலுக்கட்டாயமாக அவனை விலக்கி நிறுத்தியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் அதே எண்ணத்துடன் வேகமாக மொபைலை எடுத்து பிரபஞ்சனுக்கு அழைப்பு விடுத்தாள்.

பிரபஞ்சன் போனை எடுத்ததும் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று மனதுக்குள் ஒருமுறை தனக்குத்தானே பேசி பார்த்துக் கொண்டாள்.அவனைப் பிடிக்கவில்லை என்று சொன்னதும் நிச்சயம் மறுத்து பேசுவான்.அப்படி பேசும் பொழுது உண்மை(!) நிலையை எடுத்து சொல்லி அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.அவனுக்குக் கோபம் வருவது போல எதையும் செய்து விடக் கூடாது.

பொறுமையாகத் தனக்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டவள் அழைப்புப் போகாமல் சுவிட்ச் ஆப் என்று வரவும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சற்று நேரம் குழம்பிப் போனாள்.ஒருவேளை போனில் சார்ஜ் குறைந்து போய் இருக்கும் என்று எண்ணி கொஞ்ச நேரம் மனதை சமாதானம் செய்து கொண்டாள்.சற்று நேரம் பொறுத்து மீண்டும் முயற்சிக்க,மீண்டும் சுவிட்ச் ஆப் என்ற பதிலே வந்தது.இரவு வரை அவள் எவ்வளவோ முறை முயற்சித்தும் அதே பதில் வரவே கொஞ்சம் அரண்டு தான் போனாள் சங்கமித்ரா.

ஒருவேளை என்னைப் பயமுறுத்த இப்படிச் செய்கிறாரோ என்று எண்ணியவள் உடனே அந்த நினைப்பை தூரத் தள்ளினாள். அவனுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்.என்னை பயமுறுத்த நினைத்தால் அடுத்த நிமிடம் என் வீட்டில் சுவர் ஏறி குதித்து உள்ளே வருவானே தவிர வெறுமனே சுவிட்ச் ஆப் செய்து வைத்துச் சின்னப் பிள்ளை போல விளையாட மாட்டான்.

ஒருவேளை நேற்று நான் போன் எடுக்காததால் கோபமாக இருக்கிறானோ?’

கோபமா?…அதுவும் உன் மீதா? நிச்சயம் இல்லை.அவனைப் பார்த்து சந்தித்த இத்தனை நாட்களில் ஒருநாள் கூட அவன் உன் மீது ஆத்திரப்பட்டுப் பேசியது இல்லை.நான் அவன் மீது வெறுப்பாக இருந்த சமயங்களில் கூட அவன் என்னிடம் இதமாகத் தான் நடந்து கொண்டான்.அவனைப் பார்த்து பழகிய ஆரம்ப நாட்களில் எல்லாம் நான் அவன் மீது வெறுப்பை மட்டும் தானே காட்டினேன்.அப்பொழுதெல்லாம் அவன் இவ்வளவு கோபப்பட்டது இல்லையே!

அப்படி என்றால் இப்பொழுது அவன் நடந்து கொள்ளும் விதத்திற்கு என்ன தான் அர்த்தம்?”

அப்பொழுது தான் அவளின் மனதுக்கு ஒரு விஷயம் உறைத்தது.அவனுடைய போனுக்கு அழைப்பு போய் அது எடுக்கப்படாமல் இருக்கவில்லை.போன் சுவிட்ச் ஆப் ஆகி இருக்கிறது என்று.அவளின் மனம் ஏதேதோ கற்பனை செய்து மருங்கித் தவித்தது.

ஒருவேளை நேற்று யாரோ சிலரை போட்டு அடித்தானே,அவர்களில் யாரேனும் அவனை ஏதேனும் செய்து இருப்பார்களோ?’ என்ற ஒரு எண்ணம் தோன்றி அவளின் உள்ளத்தை அதிர வைத்தது.நேரம் ஆக ஆக அப்படித்தான் நடந்து இருக்கும் என்று அவள் நிச்சயமாக நம்பத் தொடங்கினாள்.ஆனால் இதை எப்படி உறுதி செய்து கொள்வது என்று தெரியாமல் துடித்துப் போனாள் சங்கமித்ரா.

அவனைப் பற்றிய எந்த விபரமும் அவளுக்குத் தெரியாதே.இந்த சில நாள் பழக்கத்தில் அவன் என்ன செய்கிறான்? அவனுடைய வீடு எங்கே இருக்கிறது?உற்றார்,உறவினர்,நண்பர்கள் இப்படி யாரைப் பற்றியும் அவள் கேட்டுக் கொள்ளவே இல்லையே.அவனும் தான் அவளிடம் அதையெல்லாம் தெரிவிக்கவும் இல்லையே.

இப்பொழுது என்ன செய்வது யாரிடம் போய்க் கேட்பது என்று தெரியாமல் குழம்பித் தவித்தாள்.அவனிடம் தான் பேச விரும்பியது அவனைத் தான் முழு மனதாக வெறுப்பதாகத் திட்டவட்டமாகச் சொல்லிவிட எண்ணித் தான் என்பது பேதையவளுக்கு அந்தக் கணம் மறந்து போனது என்னவோ நிஜம்.

மென்மையான உள்ளம் கொண்ட அவளால் துயரம் தாங்க முடியவில்லை.அறைக்குள்ளேயே அழுது கரைந்தாள்.அவளின் அழுகை சத்தம் வெளியே கேட்டாலும் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அவளைச் சமாதானம் செய்ய முன்வரவில்லை.ஏனெனில் அவர்களின் கருத்துப்படி வந்து பார்ப்பதாகச் சொன்ன மாப்பிள்ளை வராததால் தான் அவள் அழுகிறாள் என்று நினைத்துக் கொண்டவர்கள் அவளைச் சமாதானம் செய்ய முன்வரவில்லை.

அவளைச் சமாதானம் செய்வதற்கு முன் பிரபஞ்சன் ஏன் வரவில்லை என்ற காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய தர்மராஜ் அவனுடைய எண்ணுக்கு அழைத்தார்.அது சுவிட்ச் ஆப் என்று வரவே நேராக அவன் தங்கி இருக்கும் வீட்டிற்குச் சென்று அவனைப் பார்க்க சென்று இருந்தார்.

ஆனால் அங்கே அவனின் பூட்டப்பட்ட வீடு தான் அவரை வரவேற்றது.பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்களிடம் ஒரு போலீசாக இல்லாமல் பெண்ணைப் பெற்ற தந்தையாக அவர் விசாரிக்க அவருக்குக் கிடைத்த பதில் அவருக்குத் திகைப்பைக் கொடுத்தது.முதல்நாள் காலையில் வீட்டை விட்டு கிளம்பிய பிரபஞ்சன் இன்னும் வீடு திரும்பவில்லை என்ற சேதி அவருக்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்த்த அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சோர்ந்து போனார்.

அப்படி அவர் சோர்ந்து போய் அமர்ந்தது ஒரு சில நிமிடங்களே அதற்குள் அவருக்குள் இருக்கும் போலீஸ் மூளை விழித்துக் கொள்ளக் கடகடவென்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினார்.

போலீஸ் உள்ள தனது நெருங்கிய நண்பர்களை அழைத்தவர் பிரபஞ்சனின் மொபைல் எண் கடைசியாக எந்த ஏரியாவில் இருந்தது என்பதை விசாரிக்கச் சொல்ல அவருக்கு வேண்டிய தகவல் ஐந்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தது.அதே நேரம் பிரபஞ்சனின் மொபைல் எண்ணை டெலிபோன் டிபார்ட்மெண்ட்டில் கொடுத்துக் கடைசியாக எந்த எண்ணிற்கு எல்லாம் பேசி இருக்கிறான் என்பது போன்ற தகவல்களை வாங்கிக் கொண்டவர் மளமளவென விவரங்களைச் சரிபார்த்தார்.

இரவு நேரத்தில் கடைசியாக அவருடைய மகளின் எண்ணிற்குத் தான் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.போன் கால் வேறு எந்தப் புது எண்ணிற்கும் போகவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டார்.கடைசியாகப் புரசைவாக்கம் பகுதியில் அவனது மொபைல் பயன்படுத்தி இருப்பது தெரியவர விரைந்து செயல்பட்டு அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்துத் துறை நண்பர்களைத் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார்.

அந்த ஏரியாவில் உள்ள எல்லாச் சிக்னலிலும் பதிவாகி இருக்கும் சிசிடிவி பதிவில் சரிபார்க்க சொல்லி பிரபஞ்சனின் வண்டி எண்ணை கொடுத்து இருந்தார்.அவரின் நண்பர்களின் மூலம் எல்லா வேலைகளையும் துரிதகதியில் செய்து முடித்தார்.அரைமணி நேரத்திற்குள் அவருக்கு வேண்டிய எல்லாத் தகவல்களும் அவருக்கு வந்து சேர்ந்து விட்டது.

புரசைவாக்கம் பகுதியில் உள்ள சிக்னலில் கடைசியாக அவனுடைய வண்டி தெரிந்தது.அதன் பிறகு அவனது வண்டி நேர் ரோட்டில் செல்லும் காட்சி அதில் பதிவாகி இருக்க,அந்த பகுதியில் உள்ள சிக்னலில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களை அவர் பரிசோதித்த பொழுது அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பிரபஞ்சனின் வண்டி அந்த இடத்தைக் கடந்து செல்லவே இல்லை என்பதைக் கண்டு கொண்டவரின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் விழுந்தது.

மீண்டும் பழைய வீடியோவை ஒருமுறை பார்த்து வண்டி சென்ற திசையைச் சரிபார்த்தவர் களத்தில் சீரியசாக இறங்கி தகவல்களைச் சேமிக்கத் தொடங்கினார்.அதன் விளைவாக அவர் கண்டுபிடித்த பதில் தான் அவரை அதிர வைத்தது.விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான் பிரபஞ்சன்.
சிற்பம் செதுக்கபடும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

6 COMMENTS

  1. Acho enna achu prabanjan ku mithra vida nan romba miss panren pa avana seekiram adutha ud podunga pa waiting eagerly for prabanjan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here