Vanavil Sirpame – Episode 2

2
1648

 

இரவு நேரம் படுக்கையில் தூக்கம் வராமல் அங்கும் இங்கும் புரண்டு கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.தூக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்து கொண்டு இருந்தது.அதையும் மீறி விழிகளை இறுக மூடினால் மூடிய விழிகளுக்குள் வந்து நின்றான் அவன்.வந்து நிற்க மட்டுமா செய்தான்? அவளையே உற்றுப் பார்த்தான், சிரித்தான், ரசித்தான், கண்ணடித்தான். மொத்தத்தில் அவளை தூங்க விடாமல் செய்தான் அவன்.

ஒரு கட்டத்தில் இனி கண்டிப்பாக தூங்க முடியாது என்ற நினைவுடன் போர்வையை விலக்கி விட்டு எழுந்து விட்டாள் சங்கமித்ரா.இதுவரை யாரும் அவளிடம் இப்படி நடந்து கொண்டதில்லை.அதற்கு காரணம் அவளுடைய தந்தை.போலீஸ்காரரின் மகள் என்று தெரிந்து இருந்ததால் அவளிடம் வாலாட்ட யாரும் முயன்றது இல்லை.அதுவும் அவளுடைய தந்தை ஒரு என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேறு.அதற்கு பிறகும் அவளிடம் வம்பு செய்ய யாருக்கும் துணிவு கிடையாது.

இதுநாள் வரை தன்னை நெருங்க யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள் என்ற கர்வத்துடன் தான் இருந்தாள் அவள் அதில் அவளுக்கு நிச்சயம் பெருமை இருந்தது.அது அத்தனையும் இவன் இப்படி ஊதி தள்ளி விட்டானே.கொஞ்சம் கூட பயம் இல்லாமல் ஒரு பொது இடத்தில் வைத்து எப்படி பார்த்தான் அவன்.அவனுடைய பார்வையை பற்றி நினைக்கும் இந்த நொடி கூட அவளுடைய மேனியில் மெல்லியதொரு சிலிர்ப்பு தோன்றியது.

‘ஹ்ம்ம் … இது வேலைக்கு ஆகாது.பேசாம கொஞ்ச நேரம் தோட்டத்தில் கால் வலிக்கும் வரை உலாத்தி விட்டு வந்து தூங்க வேண்டியது தான்’ என்ற முடிவுக்கு வந்தவள் மெல்ல அறையை விட்டு வெளியேறினாள்.அறையை விட்டு வெளியேறும் போது பக்கத்தில் இருந்த அவளுடைய அக்கா சத்யமித்ராவின் அறையில் விளக்கெரிய, ‘இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாள்? ஒருவேளை அக்காவின் குழந்தைக்கு எதுவும் உடம்பு சரி இல்லையோ’ என்ற எண்ணம் தோன்றவும் நொடியும் தாமதிக்காமல் அவளுடைய அறைக்குள் நுழைந்தாள்.

அறையில் சத்யா இல்லை.குழந்தை மட்டும் கட்டிலுக்கு அருகே இருந்த தொட்டிலில் அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தது. ‘குழந்தையை தனியா விட்டுட்டு எங்கே போனா இவ’ என்ற யோசனையுடன் பாத்ரூமில் இருக்கிறாளா என்று பார்த்தாள்.அங்கேயும் அவள் இல்லாததால் அறையை விட்டு வெளியேறி ஒவ்வொரு இடமாக அக்காவை தேட ஆரம்பித்தவள் ஹாலில் இருந்த கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்த நிலையில் தூங்கி கொண்டு இருந்த தமக்கையை பார்த்ததும் சிரிப்பும் வருத்தமும் சேர்ந்தே வந்தது.

சத்தம் போடாமல் மெதுவாக பூனை போல அடிமேல் அடி வைத்து சத்யாவை நெருங்கியவள் தன்னுடைய மிமிக்ரி திறமையால் குரலை மாற்றி அப்படியே அக்கா கணவன் சுரேஷின் குரலில் மெதுவாக பேசி ஒருமுறை சரி பார்த்துக் கொண்டு அதில் திருப்தி அடைந்த பின் அக்காவின் காதருகில் மெதுவாக குனிந்து பேசலானாள்.

“சதுமா…பேபி…ஐ மிஸ் யூ டா”

அரைத் தூக்கத்தில் தூங்கிக் கொண்டு இருந்தவள் கணவனின் குரல் காதில் கேட்கவும் விழுந்து அடித்துக் கொண்டு எழுந்தாள்.தூக்க கலக்கத்திலேயே எழுந்து ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு கம்ப்யூட்டரை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

“நானும் தான் சுரேஷ்…எப்போ வருவீங்க…சீக்கிரம் வாங்க…எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலை.நீங்க இல்லாம எனக்கு ஒருநாள் கூட…” என்று பேசிக் கொண்டே போனவள் அப்பொழுது தான் கம்ப்யூட்டர் திரையை கவனித்தாள். அதில் ஸ்கைப்பில் கணவனின் முகம் தெரியவேயில்லை. ‘பின்னே குரல் மட்டும் எங்கிருந்து வருகிறது?’என்று யோசனையுடன் சுற்றும் முற்றும் பார்த்தவள் அருகிலேயே நின்று தன்னை பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டு இருந்த சங்கமித்ராவை பார்த்ததும் கோபம் கொண்டாள்.

“ஏன்டி உன் வேலை தானா இது…நான் கூட அவர் தான் ஸ்கைப்பில் வந்துட்டாரோனு நினைச்சேன்.எதுக்குடி இப்ப இந்த வேலை பார்த்த?”பட்டாசாக பொரிந்து தள்ளினாள் சத்யா.
“வாடி ராசாத்தி…உங்க ஹஸ்பண்டுக்காக வெயிட் பண்ணி அப்படியே தூங்கிட்டியே…அத்தான் ஸ்கைப்பில் வந்தா கூட உனக்கு தெரியாதே அப்படின்னு எழுப்பி விட்டா நீ ரொம்ப ஓவரா பேசுற…உன்னை அப்படியே தூங்குனு விட்டுட்டு போய் இருக்கணும்.என் தப்பு தான்.”

“இல்லடி…அவருக்கு இன்னும் அங்கே பொழுது விடிஞ்சு இருக்காது.இன்னும் ஒரு அரைமணி நேரம் கழிச்சு தான் அவர் பேசுவார்.”

“அப்புறம் எதுக்கு இப்பவே இங்கே வந்து இப்படி கம்ப்யூட்டர் முன்னாடி தூங்கி வழிஞ்சுகிட்டு இருக்க.போ போய் ரூம்ல படு.அலாரம் வச்சு ஒரு அரைமணி நேரம் கழிச்சு எழுந்திரு.போ”

“இல்லடி…அலாரம் அடிச்சா பாப்பா முழிச்சுப்பா…இப்ப தான் அவளை தூங்க வச்சுட்டு வந்தேன்.மறுபடி எழுந்தா தூங்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்.”

சகோதரியை பார்க்க பாவமாக இருந்தது சங்கமித்ராவுக்கு.ஏற்கனவே 6 மாத கைக்குழந்தை இருப்பதால் அவளால் ஒழுங்காக தூங்க முடிவதில்லை. அவளுடைய குழந்தை சின்ன சத்தம் கேட்டால் கூட விழித்து விடுவாள். பகலிலும் கம்மியான நேரம் தான் தூங்குவாள்.பகலிலும் தூங்காமல் இரவும் தூங்காமல் முகம் பொலிவிழந்து கண்களை சுற்றி கருவளையம் தோன்றி சகோதரியை பார்க்கவே கொஞ்சம் பாவமாக இருந்தது சங்கமித்ராவுக்கு.

“ஏன் சத்யா இந்த வேலை உனக்கு? நீ தானே அத்தானை கட்டாயப்படுத்தி அமெரிக்காவுக்கு அனுப்பி வச்ச…உனக்கு தெரியும் தானே அவர் ட்ரைனிங் முடிஞ்சு திரும்பி வர இரண்டு வருஷம் ஆகும்னு…உன்னால தான் அவரை விட்டு இருக்க முடியலைல.அப்புறம் ஏன்?”

“என்ன செய்ய சொல்றடி…இது அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு…ரொம்ப நாளா அவர் எதிர்பார்த்துகிட்டு இருந்த விஷயம் இது.இப்போ எனக்காக அவரை தடுத்து நிறுத்த நான் விரும்பலை.அதுவும் இல்லாம இந்த ட்ரைனிங் முடிச்சு வந்துட்டார்னா அவங்க கம்பெனில அவருக்கு கண்டிப்பா ப்ரமோஷன் கிடைக்கும்.அதுக்காக தான்”குரலில் இருந்த வருத்தத்தை கொஞ்சம் குறைத்துக் காட்ட முயற்சித்தாள் சத்யமித்ரா.

“சரி சரி எப்படியோ போ…ஹ்ம்ம்..கல்யாணப் பேச்சு வீட்டில் எடுத்தப்போ எனக்கு கல்யாணமே வேணாம்னு அந்த குதி குதிச்ச.இப்ப என்னடானா?” என்று கேள்வியாக நிறுத்திவிட்டு சகோதரியைப் பார்த்து கேலிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள் சங்கமித்ரா.
“என்னை சொல்றியே…அங்கே மட்டும் என்ன வாழுதாம்?தினமும் ஒன்பது மணி ஆனதும் இழுத்து போத்திக்கிட்டு தூங்குறவ இப்போ என்ன அலுவலுக்கு இவ்வளவு நேரம் முழிச்சுகிட்டு இருக்க.எல்லாம் உன் ஆள் நினைப்பில் தானே”

சத்யாவின் பேச்சில் விதிர்த்துப் போனாள் சங்கமித்ரா.அவள் என்ன அவளுக்கு பார்த்து வைத்து இருக்கும் மாப்பிள்ளையின் நினைவிலா தூங்காமல் இருந்தாள்.இது எவ்வளவு பெரிய தவறு.யாரோ ஒருவன்.அவன் பெயர் கூட தெரியாது.மறுபடி வாழ்க்கையில் அவனை சந்திப்பாளா என்று கூட தெரியாது.அப்படி இருக்கும் ஒருவன் தன்னுடைய் தூக்கத்தை கெடுக்கும் அளவிற்கு அவ்வளவு பலவீனமான மனதா தனக்கு? என்று தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டவள் தலையை உலுக்கி அந்த மாயையில் இருந்து வெளிவந்தாள்.

“என்னடி இப்படி மாட்டிக்கிட்டோம்னு யோசிக்கிறியா? நானும் உன் வயசை கடந்து தானே வந்து இருக்கேன்.போ போய் தூங்கு.” என்றவள் மீண்டும் திரும்பி கம்ப்யூட்டர் திரையை வெறிக்கத் தொடங்கினாள்.

விட்டால் போதுமென்று அங்கிருந்து வேகமாக தன்னுடைய அறைக்கு வந்தவள் பொத்தென்று கட்டிலில் விழுந்தாள். ‘ரொம்ப நல்லா இருக்குடி நீ செய்யுறது.காலையில் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்த.இப்ப என்னடானா பேர் கூட தெரியாத ஒருத்தனை பத்தி நினைச்சுக்கிட்டு தூங்காம உட்கார்ந்து இருக்க.இனி அவனை பத்தி நினைக்கவோ அவனை பார்க்கவோ கூடாது’ என்று தன்னை தானே திட்டியவள் போர்வையை போத்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.
விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டு இருந்தவள் நேரம் ஆனதை அறிந்து  அலறி அடித்துக் கொண்டு காலேஜ்க்கு கிளம்பலானாள்.சாப்பிடும் போது உணவில் கவனம் இல்லாமல் ஏதோ பேருக்கு என்று கொறித்த மகளை தாயும் தந்தையும் ஆராய்ச்சியாக பார்ப்பதை எல்லாம் கொஞ்சமும் உணராமல் அவள் போக்கில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.

‘இதோ இன்னும் ஒரு தெரு தான்.அதை தாண்டி விட்டால் போதும் பஸ் ஸ்டாண்ட் வந்துவிடும்’ என்று வேகமாக நடந்து கொண்டு இருந்தவள் அப்படியே பிரேக் அடித்தது போல நின்று விட்டாள்.எதிரே இருந்த டீக் கடையில் அவன்.

சட்டென்று அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தின் பின் ஒளிந்து நின்று கொண்டு அவனை பார்க்கத் தொடங்கினாள்.அவன் கையில் இருக்கும் டீயை ஒரு மிடறு குடிப்பதும் இவள் வந்து கொண்டு இருந்த பாதையை கண்களால் துலாவுவதுமாக இருந்தான்.

‘யாரை தேடுகிறான்?என்னையா…சே!சே! இருக்காது.அவனுக்கு எப்படி என் வீடு இருக்கும் இடம் தெரியும்.அதற்கு வாய்ப்பே இல்லை….பிறகு இங்கே இந்த நேரத்தில் வந்து நின்று என்ன செய்து கொண்டு இருக்கிறான்?’என்று தன்னை தானே கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.

ஏது எப்படி இருந்தாலும் சரி இப்பொழுது அவன் கண்ணில் படாமல் இருப்பது தான் நல்லது.பேசாமல் அடுத்த தெருவை சுத்திக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் போய் விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தவள் நைசாக அடுத்த தெருவில் புகுந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி வேகமாக நடந்தாள் சங்கமித்ரா.

‘நீ விடாக் கண்டன்னா நான் கொடாக் கண்டன்’ என்று சொல்லாமல் சொல்வது போல அவளுக்கு முன்னே சென்று அடுத்த தெருவின் முன்னே பைக்கோடு நின்று கொண்டு இருந்தான் பிரபஞ்சன். ‘இவன் எப்படி இங்கே வந்து தொலைத்தான்’ என்று அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பைக்கை ஓரமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அழுத்தமான நடையுடனும், தீர்க்கமான பார்வையுடனும் அவளை நோக்கி வர ஆரம்பித்தான்.

சிற்பம் செதுக்கப்படும்…..

Facebook Comments Box

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here