Vanavil Sirpame – Episode 20 Tamil Novels

10
1279

அத்தியாயம் 20


மல்லிகையின் மணம் நாசியை நிறைக்க,மெலிதான கொலுசு ஒலியுடன் பாதம் தரையில் பதியாமல் வானில் இருந்து இறங்கி வந்த தேவதையென அவனுடைய கண் முன்னே வந்து நின்றாள் சங்கமித்ரா.முதன்முதலாக அவளைப் புடவையில் பார்க்கிறான்.கண்களை அவளிடம் இருந்து பிய்த்து எடுக்கப் போராடிக் கொண்டு இருந்தான் அவன்.

அதுநேரம் வரை அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்த படபடப்பும்,பயமும் காணாமல் போய் அந்த இடத்தை காதல் பிடித்துக் கொண்டது. இளம் சந்தன நிறத்தில் சிகப்பில் பூக்களால் நெய்த சேலையில் பூவையவள் சந்தன சிலை போல மாறி இருந்தாள்.அவளின் யவ்வனம் கண்டு ஆணவனின் கண்கள் போதை கொண்டது.தளிர் விரல்களில் காபி ட்ரேவை ஏந்தி பொம்மை போல வந்தவள் அவனுக்கு அருகில் வந்து அவன் முன் நீட்டினாள்.

எதிரில் அமர்ந்து இருப்பவனின் பார்வை தன்னையே ஊடுருவும் பார்வையால் அலசுவது தெரிந்தாலும் ,அவனுடைய ஷூ அணிந்த பாதங்களை தாண்டி அவளின் பார்வை செல்லவில்லை.தலை கவிழ்ந்தவாறே நின்று கொண்டு இருந்தவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அவள் உடலில் ஒருவித விறைப்புத் தன்மை இருப்பதை உணர்ந்து கொண்டான். ‘எவ்வளவு நேரம் இப்படி இருக்கப் போகிறாள்? வந்து இருப்பது நான் என்று தெரிந்த பிறகு இந்த நிலை நிச்சயம் மாறி விடும்’ என்று இறுமாப்புடன் நினைத்துக் கொண்டான்.கைகளில் மெல்லிய நடுக்கம் இருப்பதை உணர்ந்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தான்.

“சுவீட்டுக்கு பதிலா கேசரி கிடைச்சா நல்லா இருக்கும்”விஷமம் நிறைந்த அவனின் குரலில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.அவனை நிமிர்ந்து பார்த்த அவளுடைய கண்ணின் கருமணிகள் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று போனது.அவளின் முகத்தில் நவரசமும் வந்து போனது. 

பிரபஞ்சன் அவனுடைய பார்வையை அவளிடம் இருந்து கொஞ்சமும் திருப்பாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவளுடைய உடலில் இருந்த விறைப்புத் தன்மை குறைந்து மெல்ல இளகியது.ஆடாமல் இருந்த அவளுடைய கண்களின் கருவிழிகள் படபடவென்று சுழன்று ஒருமுறை அவனைத் தலைமுதல் கால் வரை பார்வையால் வருடியது.

அவனுக்கு ஒன்றுமில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட அவளது செய்கையைக் கண்டு உள்ளுக்குள் உருகித் தான் போனான் பிரபஞ்சன்.ஆனால் அதற்குப் பின் அவளின் முகத்தில் ஒரே ஒரு நிமிடம் பயமும் , தவிப்பும் மின்னி மறைந்தது ஏன் என்பது தான் அவனுக்கு புரியவில்லை. அவளுடைய நடவடிக்கைகள் அனைத்தையும் ஆழமாக ஊடுருவிப் பார்த்துக் கொண்டு இருந்தான் பிரபஞ்சன். 

‘நல்லவேளை வெளியே தெரியும்படி எந்த தழும்பும் இல்லை’ என்று நினைத்துக் கொண்டவன் அவளுடைய பயமும்,தவிப்பும் எதனால் என்று காரணம் புரியாது குழம்பினான். ‘ஒருவேளை கடைசி நாள் நான் அவர்களை அடித்ததை நினைத்து பயப்படுகிறாள் போலும்’ என்று எண்ணிக் கொண்டவன் முகத்தில் குறும்பை ஏந்திக் கொண்டு அவளை சீண்டத் தயாரானான்.

 “பொண்ணு கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்.” 

‘இதுவரைக்கும் நீங்க பேசினது பத்தாதா…இன்னுமா?’ என்று மனதில் நினைத்துக் கொண்ட தர்மராஜ் வெளியில் எதுவும் சொல்லாமல் சங்கமித்ராவை பார்த்து புன்னகையுடன் அனுமதி தந்தார்.

 “மாப்பிள்ளையை மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போ சங்கமித்ரா” 

 “அத்தை…உங்க பொண்ணு கிட்டே மறக்காம கேசரி கொடுத்து விடுங்க” என்று விஷமத்துடன் சொன்னவன் துள்ளலுடன் படிகளில் தாவி குதித்து ஏறி அவளுக்கு முன்பாக மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.உடலில் ஏற்பட்டு இருந்த காயங்களோ,வலியோ எதுவும் அந்த நிமிடம் அவனுக்கு தோன்றவில்லை.உடலும்,மனமும் காதலால் நிரம்பி இருக்க வலிகள் ஏனோ வெகுதூரம் சென்று விட்டது போல ஒரு உணர்வு.

 மாடியில் பாதி இடத்தை மறைத்து போடப்பட்டு இருந்த கூரையின் கீழே அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.அவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் சங்கமித்ரா சீக்கிரமே அங்கு வந்து சேர்ந்தாள்.மாடி ஏறி வரும் வரை அவளின் நடையில் இருந்த வேகம் அவனைப் பார்த்ததும் மெல்ல குறைய ஆரம்பித்தது.மாடியில் ஒரு மூலையில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் நிமிர்ந்து வாசலைப் பார்க்க அடிமேல் அடி வைத்து தயங்கி , தயங்கி வரும் அவளைப் பார்த்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

“ஹே குஜிலி சீக்கிரம் வா…நீ நடந்து வர்ற வேகத்தை பார்த்தா இன்னும் பத்து வருஷம் ஆகும் போல”

 “…”


மெல்ல நடந்து அவனுக்கு அருகில் வந்தவள் டேபிளில் கையில் கொண்டு வந்து இருந்த கேசரியையும்,பஜ்ஜியையும் வைத்து விட்டு அவனை நிமிர்ந்து கூட பாராமல் உடல் இறுகிப் போய் நின்று கொண்டு இருந்தாள். 

“என்னடா…இன்னும் ஷாக் குறையலையா? நான் தான் உனக்கு பார்த்து வச்ச மாப்பிள்ளை…எனக்கு உன்னை போட்டோவில் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சுப் போச்சு.உங்க வீட்டுலயும் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னபிறகு தான் உன்கிட்டே நேரில் பார்த்து பேசி உன்னோட சம்மதத்தை தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்.ஆனா உனக்கு என்னை அடையாளமே தெரியலை. 

அந்த நிமிஷம் உண்மையில் ரொம்பவே ஹர்ட்(Hurt) ஆகிட்டேன்டா குஜிலி.எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருந்தது.அதே மாதிரி உனக்கும் என்னை பிடிக்கணும்னு ஆசைப் பட்டேன்.அதான் கல்யாணத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு விளையாட்டு.எல்லாம் நான் நினைச்ச மாதிரி தான் நடந்துச்சு.ஆனா கடைசி நாள் தான் கொஞ்சம் உல்டாவாகிடுச்சு. ஆமா அன்னைக்கு ஏன் என்னைப் பார்த்து அப்படி தலை தெறிக்க ஓடின குஜிலி.என்னைப் பார்த்தா அவ்வளவு பயமாவா இருக்கு?” பேசியபடியே மெல்ல அவளை நெருங்கி இருந்தான் பிரபஞ்சன்.

வந்ததில் இருந்து அவன் மட்டும் தான் பேசிக் கொண்டு இருந்தான்.அவனை நிமிர்ந்து கூட அவள் பார்க்கவில்லை.அவளுடைய பார்வை இப்பொழுதும் அவனுடைய பாதத்திலேயே இருப்பதை கண்டு லேசாக புருவங்கள் முடிச்சிட அவளை நெருங்கி அவளின் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினான். 

 “என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாயா மித்ரா…அதற்கு காரணம் என்ன? உனக்கு என் மீது இருக்கும் பயமா… இல்லை வெறுப்பா?” அவளுடைய கண்களை ஊன்றிப் பார்த்தவாறே பேசினான் பிரபஞ்சன். 

பட்டென்று அவனுடைய கைகளை தள்ளி விட்டவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள். 

அவளுடைய கோபத்தை எதிர்பார்த்தே வந்து இருந்ததால் பிரபஞ்சனும் தன்னை சமாளித்துக் கொண்டு பேசத் தொடங்கினான். 

 “ஹே! மாமனை பார்த்ததும் ஓடி வந்து நீயே கட்டிப் பிடிச்சுப்பன்னு பார்த்தா…இப்படி தட்டி விடறியே…தப்பு பேபி…இனி இப்படி செய்யாதே…மாமன் மனசு தாங்காது.சரியா?” என்று கேட்டவாறு மீண்டும் அவளை நெருங்கியவன் அவள் முரண்டு பிடித்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவளின் கைகளை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஊஞ்சலில் அவளின் தோள் பற்றி அமர வைத்து விட்டு தானும் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.

“உன்னோட கோபம் புரியுதுடா.ஆனா என்னோட நிலைமையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ…நான் கல்யாணம் செஞ்சுக்கப் போற பொண்ணு என்னை நேசிக்கணும்னு நினைச்சேன்.அது தப்பா?…ப்ளீஸ்டி…என்னை புரிஞ்சுக்கோ”தவிப்புடன் வெளிவந்தது வார்த்தைகள்.

அவளிடம் கொஞ்சமும் அசைவில்லை. அவளுடைய கைகளை எடுத்து தன்னுடைய கைகளில் அடக்கிக் கொண்டவன் தொடர்ந்து பேசினான்.

 “உண்மையை சொல் மித்ரா…என்னோட பழகின அந்த நாட்கள்ல உனக்கு என்மேல ஒருதுளி கூட காதல் வரவே இல்லையா?நான் உன்மேல வச்சு இருந்த காதல் நிஜம் மித்ரா.அதுல எந்த மாற்றமும் இல்லை.உன்கிட்ட நான் தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு சொல்லாம மறைச்சது மட்டும் தான் நான் செஞ்ச தப்பு.

அதையும் கூட நான் வேணும்னு செய்யலையே…இன்னும் சொல்லப் போனா உனக்கு என்னை அடையாளம் தெரியும்னு நினைச்சு தான் முதன்முதலா உன்கிட்டே நான் பேச வந்ததே.வீட்டில் கொடுத்த போட்டோவை பார்க்காமல் போனது உன் தப்பு.என் தப்பு அதுல ஒண்ணுமே இல்லையே…”

 “…”

 “கொஞ்சம் என் மேல இருக்கிற கோபத்தை தள்ளி வச்சிட்டு நம்ம காதலை மட்டும் நினைச்சு பாருடி” அவனிடமிருந்து கைகளை மெல்ல விலக்கிக் கொண்டவள் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

 “இந்த கல்யாணம் வேண்டாம் நிறுத்திடுங்க” 

 “ம்ச்…இவ்வளவு தூரம் சொன்ன பிறகும் கூட இதென்ன விளையாட்டு மித்ரா…நான் வேணும்னா தோப்புக்கரணம் போடவா?”கைகளால் காதுகளை பிடித்துக் கொண்டு குறும்பாக கெஞ்சினான் பிரபஞ்சன்.

 “சொன்னது காதில் விழலையா? இந்த கல்யாணம் வேண்டாம்.நிறுத்திடுங்க.” 

லேசாக திடுக்கிட்டான் பிரபஞ்சன்.ஆனால் வெளியே தெரியாதவண்ணம் அழகாக சமாளித்தவன் சுளித்த புருவங்களுடன் பேச ஆரம்பித்தான்.

 “என் மேலே நீ கோபமா இருப்பன்னு எனக்கு தெரியும் மித்ரா.ஆனா இனியொரு முறை விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லாதே.என்னால அதை தாங்கிக்க முடியலை.”

 “எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை”மரத்துப்போன குரலில் பேசினாள் சங்கமித்ரா.

 “ஏய்!” ஆத்திரத்தில் அவளை அடிக்க கை ஓங்கியவனைக் கண்டு அவள் உடல் லேசாக அதிர , அதை கவனித்தவன் பெரும்பாடுபட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

 “ப்ளீஸ்! மித்ரா…நான் செஞ்சது தப்பு தான்.ஆனா அதுக்காக இன்னொருமுறை இப்படி பேசாதே.என்னால என்னை இந்த விஷயத்தில் கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை.நம்ம கல்யாணத்தை நிறுத்துறது அப்படிங்கிற பேச்சுக்கே இடமில்லை மித்ரா.”

இறுக மூடிய அவனது கை விரல்களும்,இறுக்கமான அவனது உடல் மொழியும் அவன் ஆத்திரத்தை கட்டுப்படுத்துவதை உணர்த்த,உள்ளுக்குள் லேசாக பயந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் அதையே வறுபுறுத்தினாள் சங்கமித்ரா.

 “நான் மறுத்தா?…” 

 ஒரே ஒரு நிமிடம் அவளை தன்னுடைய கூர்பார்வையால் அளவிட்டவன் பின் எப்பொழுதும் போல தன்னுடைய வசீகரப் புன்னகையை முகத்தில் தேக்கி வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து பேசத் தொடங்கினான்.


 “சரி உன் இஷ்டம்”புன்னகை மாறாமல் இலகுவாக விட்டுக் கொடுத்தான் பிரபஞ்சன்.


 நம்பவே முடியாமல் ஆச்சரியத்தோடும்,அதிர்ச்சியோடும் அவனைப் பார்த்த சங்கமித்ராவின் முகத்தில், கேட்டது கிடைத்த மகிழ்ச்சி துளி கூட இல்லை.


“அது தான் நீ கேட்டதுக்கு சம்மதம் சொல்லிட்டேனே…இன்னும் ஏன் மூஞ்சியை அப்படி தூக்கி வச்சுக்கிட்டு இருக்க…கொஞ்சம் சிரிக்கலாமே?” 

சிரிக்க முயன்றாள் அவளால் முடியவில்லை.

‘ஏன்டி இப்படி உன்னையே கஷ்டபடுத்திக்கிற?உண்மையிலேயே உனக்கு என்னை பிடிக்கலைன்னா இந்நேரம் உன்னோட முகம் சந்தோஷத்தில் பூரிச்சு போய் இருக்கணுமே.ஏன் அப்படி இல்லை…ஏன் இப்படி எதையோ இழந்த மாதிரி நிற்க்கிற…ஏதோ கொஞ்சம் விளையாட்டுத்தனமா நடந்துகிட்டேன்.தப்புதான்.அதுக்காக இப்படியா என்னை தண்டிப்ப’மனதில் அவன் பேசிய பேச்சுக்கள் எதுவும் அவளை எட்டவில்லை.

 “சரி உனக்கு பிடிச்ச மாதிரி இந்த கல்யாணம் நிற்கப் போகுது…அதை கொண்டாடலாமா?” தன்னுடைய இதழ்க் கடையோரம் மின்னிக் கொண்டிருந்த விஷமம் வெளியே தெரியாதவண்ணம் இயல்பாக கேட்பது போல கேட்டான் பிரபஞ்சன். 

 “…” 

 “ஸ்வீட் எடு…சாப்பிடலாம்”அவன் பார்வை தன்னை துளையிடுவதை உணர்ந்தாலும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.லேசான தடுமாற்றத்தோடு நடந்தவள் டேபிளில் இருந்த ஸ்வீட்டும்.,பஜ்ஜியும் அடங்கிய தட்டை எடுத்து அவளிடம் நீட்டினாள். 

 “கீழே போய் நீங்களே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடுங்க” 

 “சரி” 

‘என்ன இவன் எது சொன்னாலும் சரி என்கிறானே இவன் இப்படி எதையும் சட்டென ஒத்துக்கொள்ளும் ஆள் கிடையாதே.நினைத்ததை எவ்வளவு பிடிவாதம் பிடித்தாவது செய்து முடிப்பவன் ஆயிற்றே…’என்று அவள் உள்ளுக்குள் குழப்பத்துடன் நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவளது கையை பற்றி தன்னருகே இழுத்து தன்னுடைய கை வளைவுக்குள் அவளைக் கொண்டு வந்து இருந்தான் பிரபஞ்சன் நடந்ததை நம்ப முடியாமல் சங்கமித்ரா அதிர்ந்து விழித்தாள்.

பார்த்த முதல் நாளில் இருந்து பிரபஞ்சன் அவளை நெருங்கியது கிடையாது.அன்று கடற்கரையில் அவளை அவன் முத்தமிட்ட பொழுது கூட,அதற்கு மேல் அவன் நெருக்கத்தை கூட்டவில்லை.அதன்பிறகு அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்த நாட்களில் கூட தன்னுடைய காதலை அவனுடைய பார்வையால் மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறான்.அப்படிப்பட்டவன் இன்று இப்படி செய்வது அவளை திகைப்பில் ஆழ்த்தியது.

 அவளை தன்னுடைய கை வளைவுக்குள் கொண்டு வந்து அவளை சிறைப் பிடித்து இருந்தானே தவிர இருவருக்கும் இடையில் போதிய அளவு இடைவெளி இருந்தது.அந்த நெருக்கத்தை குறைக்க அவன் முயலவில்லை.அதே நேரம் தன்னுடைய பிடியை விலக்கவும் அவளை அனுமதிக்கவில்லை.அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தவாறே பேசினான் பிரபஞ்சன்.

 “நீ சொல்ற மாதிரி எல்லாத்தையும் நான் செய்றேன்.அதுக்கு பதிலா நான் சொல்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீ செய்.”

 ‘என்ன’என்று பார்வையில் பயத்தை கலந்தவாறே அவள் கண்களால் கேட்க

 “என்னைத் தவிர வேற யாரை கல்யாணம் பண்ணிக்க தயாராய் இருக்கன்னு மட்டும் சொல்லு?”

இப்படி ஒரு கேள்வியை அவள் நிச்சயம் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவளின் உடலில் தோன்றிய அதிர்வு அவனுக்கு உணர்த்தியது. 

“சரி…அட்லீஸ்ட் இந்த கேள்விக்காவது பதில் சொல்…என் மேல் உனக்கு கொஞ்சமும் காதல் இல்லைன்னு சொல்.இப்பவே நான் இங்கே இருந்து கிளம்பிடறேன்.அதுக்கு அப்புறம் உன்னோட பார்வையில் படவே மாட்டேன்.ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு எங்கேயாவது போயிடறேன்”

 அவள் கண்களில் சட்டென ஒரு பதட்டம்…அவளையும் அறியாமல் ஒரு நொடி அவனுடைய தோள்களை இறுகப் பற்றியவள் மறுநொடி அவனை விட்டு விலகி ஓட முயற்சி செய்தாள்.ஆனால் அப்படி ஓட அவன் விடுவானா என்ன?

 “ஹம்…நல்ல விஷயம் சொல்லி இருக்க…ஸ்வீட் சாப்பிடுவோமா?” என்று கேட்டவன் அதுவரை இருந்த இடைவெளியை குறைத்து பட்டென அவளுடைய இதழில் தன்னுடைய முதல் முத்திரையை ஆழமாக பதித்தான். 

 மென்மையாக… 

 நிதானமாக… 

 மிருதுவாக… 

 காதலாக… 

 முதன்முறையாக ஒரு வன்முறையாளன் மென்மையை கையாண்டான்.கவிபாடும் அவனின் செய்கையில் சிக்கித் தவித்தது கன்னி மனம்.  சிற்பம் செதுக்கப்படும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

10 COMMENTS

  1. நீ சரியான கேடி பிரபஞ்சா…… உனக்கு பேச சொல்லியா கொடுக்கனும்….. பேசியே அவங்க நினைக்கற விசயத்த சொல்ல வச்சிடுவ………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here