Vanavil Sirpame – Episode 21 Tamil Novels

8
1294
அத்தியாயம் 21
நிதானமாக அவளை தன்னுடைய பிடியில் இருந்து விடுவித்தான் பிரபஞ்சன்.உள்ளுக்குள் உற்சாகம் குமிழியிட அவளை தோள் பற்றி அருகில் இருந்த ஊஞ்சலில் அமர வைத்து விட்டு அவளை விட்டு விலகாமல் நெருங்கி அமர்ந்து கொண்டான்.
அவன் முகம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது.காதலியின் அருகாமையா?காதலியே மனைவி ஆகப் போகும் சந்தோசமா? இல்லை முதல் முத்தத்தின் தித்திப்பா? இனம் காண முடியவில்லை அவனால்.அத்தனை காதலையும் குரலில் தேக்கி வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் அவளை அழைத்தான்.
“மித்ரா…”
“…”
“இந்த நிமிஷம் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா.அதுக்கு காரணம் நீ தான்.சின்ன வயசுலேயே என்னோட அப்பா,அம்மா இறந்துட்டாங்க.நல்லவேளை என் பேர்ல கொஞ்சம் சொத்து இருந்ததால சாப்பாட்டுக்கு பிரச்சினை வரலை.என்னோட கார்டியனா இருக்க,சொந்த பந்தங்கள் நிறைய பேர் போட்டி போட்டாங்க.பாசம்னு நினைச்சுடாதே.
என்னை யார் பார்த்துக்கறாங்களோ,அவங்களுக்கு என்னோட வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி போய் சேரும்னு எங்க அப்பாவோட உயில்ல எழுதி இருந்தது தான் காரணம். மாசா மாசம் வருமானம் வந்ததால என்னை அவங்க வீட்டில் தங்க வச்சுக்கிட்டாங்க.
சாப்பாடு,துணி,மணி இதைபத்தி எந்த குறையும் இல்லாம கிடைச்சது.ஆனா அன்பு,பாசம்…இதெல்லாம் எனக்கு கிடைக்கவே இல்லை.” என்று கூறியவனின் பார்வை தொலைதூரத்தில் எங்கோ பதிந்து இருந்தது.துயரம் மிகுந்த அந்த நாட்களை எண்ணி அவன் முகத்தில் வந்து போன கவலைக் கோடுகளை சடுதியில் துடைத்து விட்டு அவளை பார்த்தான்.
“இப்படி எல்லாம் தான் என்னோட ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது மித்ரா…அதனால தான் நம்ம கல்யாண விஷயத்தில் உனக்கு பிடிக்கலேன்னா பரவாயில்லைன்னு என்னால ஈசியா எடுத்துக்க முடியலை.இதுவரைக்கும் நான் வாழ்ந்த வாழ்க்கை எப்படி வேணா இருக்கலாம்.ஆனா இனி நான் வாழப் போற வாழ்க்கை முழுசும் அன்பும்,காதலும் நிறைஞ்சு இருக்கணும்”
 “…”
“எனக்குனு ஒரு குடும்பம்…வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கையை வாழணும்னு மத்தவங்க நினைக்கிற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழணும்.பணம் எப்போ வேணா சம்பாதிக்கலாம் மித்ரா…ஆனா காதல்,நேசம் ,அன்பு,இதெல்லாம் அப்படிப்பட்ட விஷயம் கிடையாது.” தன்னுடைய கடந்த காலத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டவன்,எதிர்காலத்தை பற்றியும் அவளுடன் சேர்ந்து திட்டமிடத் தொடங்கினான்.
ஆனா அதில் எதிலுமே அவள் ஆர்வம் காட்டவில்லை என்பதை கவனிக்கத் தவறினான் பிரபஞ்சன்.அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டு இருக்க,அவளின் வருத்தம் நிறைந்த குரல் அவனை தன்னுணர்வுக்கு கொண்டு வந்தது.
 “இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி என்னால அப்பாகிட்டே பேச முடியாது.அதனால் தான் உங்ககிட்டே சொல்றேன்.இந்த கல்யாணம் வேண்டாம்.இது நடக்காது.நடக்கவும் கூடாது.”
 “ம்ச்…சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும் என்ன விளையாட்டு மித்ரா?”
 “நானும் சீரியஸா தான் சொல்றேன்”
“ஓஹோ…ஒருவேளை இந்த கல்யாணம் நடந்தா….”அவன் குரலில் தீவிரம் இருந்தது.
“செத்துடுவேன்…கண்டிப்பா நான் செத்துடு….ஆஆஆஆ”
“சாவுடி…” என்று ஆத்திரமாக கத்தியவாறே அவளின் கழுத்தை இரு கைகளாலும் இறுக்கினான் பிரபஞ்சன்.மூச்சுக் காற்றுக்கு அவள் தவிப்பது தெரிந்தும் அவன் கொஞ்சமும் இளகவில்லை.
“எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டே இப்படி ஒரு வார்த்தை சொல்லுவ…என்னை கல்யாணம் செய்றதுக்கு பதிலா சாகலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா…நீ என்னடி சாகுறது…இரு நானே உன்னை கொன்னுடறேன்” என்று ஆத்திரமாக பேசிக் கொண்டே போனவன் அவளுடைய விழிகள் மேலே சொருகுவதை பார்த்து வேண்டா வெறுப்பாக கையை எடுத்தான்.
 “ஏன்டி…நான் என்ன அவ்வளவு பெரிய தப்பா பண்ணிட்டேன்…உனக்கு பார்த்த மாப்பிள்ளை நான் தான்னு உன்கிட்டே சொல்லாம விட்டது தவிர என்கிட்டே என்ன குறை கண்ட… நான் அழகா இல்லையா?படிக்கலையா?நல்ல வேலை பார்க்கலையா? என்ன குறை என்கிட்டே சொல்லுடி…”அவளின் தோள்பட்டைகள் இற்று விடும் அளவிற்கு பற்றி உலுக்கினான் பிரபஞ்சன்.
“நானும் குழந்தைக்கு சொல்ற மாதிரி பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்கேன்.கொஞ்சமாவது காதில வாங்குறியா?என்னை என்ன கிறுக்கன்னு நினைச்சியா? லவ் பண்ணுவாளாம்…ஆனா கல்யாணம் மட்டும் பண்ணிக்க மாட்டாளாம்…கேட்டா செத்துப் போயிடுவேன்னு சொல்லுவாளாம்…
இதுவரைக்கும் என்னோட சாப்ட்டான நேச்சரை மட்டும் தான் பார்த்து இருக்க…இன்னொரு முறை இதே மாதிரி பேசின…மகளே கழுத்தை சடக்குன்னு ஒரு ஒடி…ஒடிச்சு போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்.யாருகிட்டே உன் வேலையை காட்டுற…பிச்சு புடுவேன் ராஸ்கல்…” அச்சு அசல் ஏசிபியாக மாறி அவள் முன்னே நின்று மீசையை முறுக்கிக் கொண்டே கர்ஜித்தவனைக் கண்டு அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது.
அவனுடைய ஆத்திரத்தாலும்,அவனுடைய உலுக்களாலும் பயந்து போனவள் கண்கள் அவன் மீதே நிலைக்குத்தியவாறு இருக்க ,அவளையும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.அவளுடைய நிலை கண்டு அவனுடைய மனதுக்குள் கொஞ்சமும் இரக்கம் வரவில்லை.மாறாக கோபம் வந்தது.
‘நான் இல்லாத வாழக்கையை வாழ முடியுமா இவளால்…அப்படி என்றால் என்ன அர்த்தம்?இவ்வளவு தானா இவள் என் மீது வைத்து இருக்கும் நேசத்தின் அளவு…வாழ்நாள் முழுக்க திகட்ட,திகட்ட இவளுக்கு காதலையும்,அன்பையும் வாரி,வாரி வழங்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டு இருக்க,இவள் என்னவென்றால் இப்படி நடந்து கொள்கிறாளே’என்று எண்ணியவன் உறுதியான குரலுடனும்,தீர்க்கமான பார்வையுடனும் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
 “இதோ பார் மித்ரா…இந்த கல்யாணம் நடந்தே தீரும்.உனக்கு பிடிக்கலைன்னா கூட… இனியொரு முறை இப்படி ஒரு எண்ணம் கூட உனக்கு வரக் கூடாது.மீறி வந்துச்சு…”ஒற்றை விரலை உயர்த்தி அவளை எச்சரித்து விட்டு அவளை உறுத்து விழித்தான்.அந்தப் பார்வையில் அவளுடைய உச்சி முதல் பாதம் வரை நடுங்கிப் போனது.
 “உன்கிட்டே நான் சாக்லேட் பாய் மாதிரி ரொமாண்டிக்கா நடந்துக்கணும்னு தான்டி ஆசைப்பட்டேன்.ஆனா நீ… அப்படி என்னடி உனக்கு வீம்பு…மனசுக்கு பிடிச்சவன் கூட நடக்கிற கல்யாணம் நின்னாலும் பரவாயில்லை. உனக்கு உன்னோட கோபம் தான் பெருசா தெரியுது இல்ல… ஊரு உலகத்தில எத்தனையோ பொண்ணுங்க காதலிச்சவனே கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க.ஆனா நீ… சே! தமிழ் பொண்ணு தானேடி நீ…”அவனது ஒவ்வொரு வார்த்தையும் குத்தீட்டியாய் அவளின் இதயத்தை சல்லடை ஆக்கியது.
அவன் அவ்வளவு திட்டியும் அவள் அவனை தடுக்கவோ,மறுத்து பேசவோ முயற்சிக்கவில்லை.
 “இதோ பார்…இப்போ நான் கீழே போய் எல்லார்கிட்டயும் கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்க சொல்லி சொல்லப் போறேன்.நீயும் ஒழுங்கா வந்து நல்லபிள்ளையா ஒத்துக்கிற…ஒத்துக்கணும்.அதை விட்டுட்டு இப்ப பேசின மாதிரி ஏடாகூடமா பேசின….உங்க அப்பா கண்ணு முன்னாலேயே உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவேன்.ஜாக்கிரதை…”என்று இறுதியாக ஒரு எச்சரிக்கையை விடுத்தவன் கீழே செல்லும் வழியில் இரண்டு அடி எடுத்து வைத்தவன் மீண்டும் அவளை நோக்கி வந்தான்.
‘இப்ப எதுக்கு மறுபடி கிட்டே வர்றான்…அடிக்கப் போறானோ’ என்று எண்ணி பயந்தவள் லேசாக நடுங்கியவாறே பின்னுக்கு நகர, வேகமாக அவளுக்கு அருகில் வந்து சேர்ந்தவன் எந்த வித தயக்கமும் இல்லாமல் அவளது முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.
லேசாக கலைந்து இருந்த அவளது தலைமுடியை அவனாகவே சரி செய்து விட்டான். அழுததில் கலைந்து போன அவளின் கண் மையை தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து விட்டான்.முகத்தை சரி செய்து விட்டு மீண்டும் ஒருமுறை அவனுடைய கைகளில் அவளது முகத்தை ஏந்தியவன் கொஞ்ச நேரம் அவளது கண்களை காதலுடன் நோக்கினான்.
 ஒவ்வொரு வினாடிக்கும் அவனது பார்வையில் கூடிக் கொண்டே போனது காதல். திணறிப் போய் அவள் பார்வையை திருப்ப முயல, அவளை அனுமதிக்கவில்லை அவன். அவனுடைய காதலுக்கு பயந்து அவள் கண்களை மூட மென்மையாக அவளின் நெற்றியில் இதழ் பதித்தான் பிரபஞ்சன்.
“எனக்கு தெரியும் மித்ரா நீயும் என்னை ரொம்பவே நேசிக்கிறன்னு. சும்மா சின்ன பிள்ளை மாதிரி அடம்பிடிக்காம ஒழுங்கா நடந்துக்கோ.என்ன நடந்தாலும் சரி ….நம்ம கல்யாணம் நடந்து தான் ஆகணும். நீ என்னோட மனைவியாகப் போற நாளை நான் ரொம்பவே ஆர்வமா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்.”என்று சொன்னவன் மெல்ல குனிந்து அவளின் இரு கன்னங்களிலும் லேசாக இதழை ஒற்றி விட்டு அவளின் கன்னத்தில் மிருதுவாக தட்டினான்.
 “புடவை எல்லாம் சரி பண்ணிட்டு கீழே வா”சற்று முன் வரை சிங்கம் போல கர்ஜித்தவன் இவன் தான் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.அந்த அளவிற்கு அவன் குரலில் இனிமையும்,இதமும் இருந்தது.அவளைப் பார்த்து வசீகரமான புன்னகை ஒன்றை வீசியவன் மாடிப்படிகளில் இறங்கும் முன் அவளைப் பார்த்து குறும்புடன் பேச ஆரம்பித்தான்.
“கேசரி சூப்பர்ன்னு நான் சொன்னேன்னு அத்தை கிட்ட சொல்லிடு”என்றவனின் பார்வை அவளுடைய இதழில் படிய அவசரமாக தலையை குனிந்து கொண்டாள் மித்ரா. அவளின் வெட்கம் ஆணவனை சிலிர்க்க செய்ய முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவளைப் பார்த்து குறும்புடன் கண் சிமிட்டி விட்டு கீழே சென்று விட்டான்.
சங்கமித்ரா அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.அவளுக்கு அழ வேண்டும் போல இருந்தது.ஆனால் கண்களில் கண்ணீர் வரவில்லை. எப்பாடுபட்டாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி விடு என்று உள்ளுக்குள் ஒரு குரல் அலறியது.ஆனால் யாரிடம் போய் என்னவென்று சொல்வது…
‘நான் செய்து வைத்து இருக்கும் முட்டாள்த்தனமான காரியத்தை சொன்னால் முதலில் கேட்பவர்கள் நம்புவார்களா…எனக்கு பைத்தியம் பிடித்து உளறுகிறேன் என்று தானே நினைப்பார்கள்.இப்பொழுது நான் என்ன செய்வது ஆண்டவா?நடப்பது எல்லாம் விதிப்படி நடக்கட்டும் என்று விட்டு விடட்டுமா…இல்லை அவரிடம் மட்டுமாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தி விடட்டுமா?’
 ‘கல்யாணத்தை நிறுத்துவதா?’தாங்க முடியவில்லை அவளால்.இதயத்தை யாரோ கசக்கி பிழிவது போல ஒரு வலி… ‘அவரே சொன்னது போல இந்த திருமணம் நின்று போனால் அத்தோடு எல்லாம் முடிந்து விடுமா? அப்பா நிச்சயம் வேறு மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்த மாட்டாரா… என்னால் நிச்சயம் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது.அதே சமயம் அவரை திருமணம் செய்து அவரது வாழ்க்கையையும் வீணடிக்க முடியாது.’
தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.
என்ன ஆனாலும் சரி தன்னால் பிரபஞ்சனை இழக்கவும் முடியாது.அதே சமயம் வேறு யாரையும் ஏற்கவும் முடியாது என்பதை உளமாற உணர்ந்தவள் முகத்தையும்,உடைகளையும் சீர் செய்து கொண்டு கீழே இறங்கினாள். கீழே அனைவரும் ஹாலில் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.
பிரபஞ்சன் கொஞ்சம் கூட மாப்பிள்ளை கெத்தை காட்டாமல் சாவித்திரி,தர்மராஜ்,சத்யா என்று எல்லாரிடமும் சகஜமாக பேசி மதிப்பெண்களை அள்ளிக் கொண்டு இருந்தான்.அடுத்தவர்களை மயக்க அவனுக்கு சொல்லியா தர வேண்டும். எல்லாரையும் வசியம் செய்தான்.பேச்சில்,சிரிப்பில்,உடல் அசைவுகளில்,மீசையை முறுக்கும் அந்த நொடியில் கூட இயல்பாக நெஞ்சள்ளி போனான் பிரபஞ்சன்.
சங்கமித்ராவால் இயல்பாக அவர்களிடம் பேசி சிரிக்க முடியவில்லைபுடவையை மாற்றப் போவதாக காரணம் சொல்லி விட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.அவர்களின் பேச்சு சத்தம் காதில் தெளிவாக விழுந்து கொண்டே இருந்தது. உடையை மாற்றிவிட்டு கட்டிலில் மல்லாக்க படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்தபடி படுத்து இருந்தாள்.
வரும் வாரத்தில் திருமண நிச்சயதார்த்தமும்,அதற்கு அடுத்த முஹூர்த்தத்தில் திருமணமும் செய்யலாம் என்று அனைவரும் ஒன்று கூடி முடிவெடுப்பது அவளின் காதுகளில் விழத் தான் செய்தது.காதுகளை இரு கைகளாலும் இறுக மூடிக் கொண்டாள். ‘ அவருக்கு துரோகம் செய்கிறேன் நான்…பிரபஞ்சன் இதை நிச்சயம் தாங்க மாட்டார்’ வாய் விட்டு கதற முடியாமல் அவளது மனம் புலம்பியது.
சிற்பம் செதுக்கப்படும்….
Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

8 COMMENTS

  1. மித்து அப்படி என்ன பண்ணா??????? ஆனா ஒரு விஷயம் நீ தப்பே செய்து இருந்தாலும் பிரபஞ்சன் நிச்சயம் உன்னை விட மாட்டான்

  2. Sema ud madhu dear prabanjan kovathula kuda kadal seiran appadi enna velai senju vachu irruka mithra seekiram adutha ud potu suspense open pannunga pa waiting eagerly

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here