Vanavil Sirpame – Episode 23 Tamil Novels

4
1145

அத்தியாயம் 24 

 தர்மராஜ் இன்று விடுப்பு எடுத்து இருந்ததால் அவர் ஒருபுறம் மகளின் நிச்சயதார்த்த வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார். 

 “வாங்க … வாங்க…எல்லாரும் வந்து உட்காருங்க…” வந்திருக்கும் சொந்தங்களை வரவேற்கும் வேலையில் மும்மரமாக இருந்தார் சாவித்திரி.

 “என்னங்க…ஹோட்டல்ல இருந்து எல்லாருக்கும் சாப்பாடு வந்துடுச்சா? அப்படியே கொஞ்சம் வெத்தலையும், பாக்கும் வாங்கி வச்சிடுங்க…விருந்து முடிஞ்சதும் எல்லாருக்கும் கொடுக்கணும்.” 

 “சரி சாவித்திரி…வேற எதுவும் வேணுமான்னு ஒருமுறை பார்த்துக்கோ…அப்புறம் கடைசி நேரத்தில் வந்து அதைக் காணோம் இதைக் காணோம்னு சொல்லக் கூடாது.”“சரி…சரி…ரொம்ப அலட்டிக்காதீங்க…இவ்வளவு வேலையும் ஒத்தையா நான் தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.ஏதாவது மறந்து போனாலும் உடனே போய் வாங்கிட்டு வர்றதுக்கு தான் உங்களை இன்னைக்கு லீவு போட சொல்லி இருக்கேன்.நியாபகம் இருக்கட்டும்”என்று அசால்டாக சொல்லிவிட்டு நகர தர்மராஜ் தான் கொஞ்ச நேரம் வாயை பிளந்த படி நின்று விட்டார்.

 அவரை கண்டுகொள்ளாமல் வேகமாக நகர்ந்த சாவித்திரி நேரே சத்யாவிடம் போய் நின்றார். “சத்யா எல்லாருக்கும் காபி கொண்டு வந்து கொடு…பாப்பாவை மேலே இருக்கிற ரூம்ல தூங்க வச்சிட்ட தானே?”

 “ம் ஆமா அம்மா…தூங்கிட்டு தான் இருக்கா…இப்போ தான் பால் குடிச்சா..எப்படியும் இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் அவ எழுந்திரிக்க…”

 “சரி …சரி…நீ சாப்பிட்டுட்டு அப்படியே சங்கமித்ராவுக்கும் டிபன் எடுத்துக் கொண்டு போய் கொடுத்துடு…அவ இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டா…” 

 ‘சரி’ என்று அன்னையிடம் ஆமோதிப்பாக தலை அசைத்தவள் தட்டில் இட்லிகளை எடுத்துக் கொண்டு தங்கையின் அருகில் போய் அமர்ந்து தட்டை நீட்டினாள். வாய் திறந்து தங்கையை சாப்பிடும்படி சொல்லவில்லை.சங்கமித்ரா அன்று கோபமாக பேசியதில் இருந்தே சத்யா அவளுடன் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தாள்.முன்பாவது எப்பொழுதேனும் மற்றவர்களுடன் பேசி சிரிப்பவள் தங்கையின் கோபத்தை தாள முடியாமல் அதற்குப் பிறகு கம்ப்யூட்டரே கதி என்று மாறிப் போனாள்.
பிரபஞ்சனை கண்ணில் காணும் முன்பு வரை தன்னுடைய கவலையிலேயே மூழ்கி இருந்த சங்கமித்ராவுக்கும் சத்யாவின் இந்த ஒதுக்கம் ஆரம்பத்தில் பெரிதாக படவில்லை.ஆனால் இப்பொழுதோ சத்யாவின் ஒதுக்கம் அவளை அதிகம் பாதித்தது. சங்கமித்ரா சாப்பிட்ட பிறகு கிளம்பலாம் என்று அந்த அறையிலேயே காத்துக் கொண்டு இருந்த சத்யா எதேச்சையாக திரும்ப அங்கே கண்களில் யாசிப்புடன் நின்று கொண்டு இருந்த தங்கையை பார்த்ததும் ஒரு கணம் பேச்சிழந்து போனாள்.அடுத்த நொடி ஒன்றுமே பேசாமல் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறி விட்டாள். 

 ‘அவளின் ஒதுக்கத்திற்கு முழுக்காரணமும் நான் தானே?அவளிடம் எப்படியாவது பேசி அவளை சமாதானம் செய்து விட வேண்டும்.அவளுடைய கணவர் கண்டிப்பாக தன்னுடைய கல்யாணத்திற்கு வருவார்.திருமணம் முடிந்த பிறகு கையோடு அக்காவையும் கூட்டி சென்று விடுவார் என்பதை அறிந்து வைத்து இருந்ததால் இன்று நிச்சயம் முடிந்த பிறகு எப்படியாவது சத்யாவை சமாதானம் செய்து விட வேண்டும்’ என்று உள்ளுக்குள் உறுதியாக எண்ணிக் கொண்டாள். 

 பிரபஞ்சன் அவளுக்காக தேர்ந்தெடுத்து கொடுத்த பச்சை நிற பட்டுப் புடவையில் கை தேர்ந்த சிற்பி செதுக்கிய சிற்பம் போல பொலிவுடன் இருந்தாள் சங்கமித்ரா.ஆனால் முகத்தில் கல்யாணப் பெண்ணுக்குரிய மகிழ்ச்சி இல்லை.ஒரு பெண்ணுக்கு அழகு தருவது வெறும் ஆடையும்,ஆபரணங்களுமா… நிச்சயமாக இல்லை.அவள் முகத்தில் தவழும் சிரிப்பே அவளுக்கு அழகை கொடுக்கும்.புன்னகையின்றி இருக்கும் பெண் எத்தனை விலை உயர்ந்த நகைகளை அணிந்து இருந்தாலும் அது அவளுக்கு அழகை கொடுக்காது.அந்த நிலை தான் இங்கே சங்கமித்ராவுக்கும்.
‘என்னுடைய புன்னகையை யாரேனும் பறித்துக் கொண்டார்களா? இல்லை யாரேனும் எடுத்து சென்று விட்டார்களா?…யாரேனும் மீட்டுத் தருவார்களா?’ என்று கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தை பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.

 “மாப்பிள்ளை வந்தாச்சு” வீட்டிற்குள் கலவையான குரல்கள் கேட்க சட்டென்று சங்கமித்ராவின் உடலில் ஒரு இன்ப பரபரப்பு ஏற்பட்டது.உடை தேர்ந்தெடுக்க போன அன்று நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவளுடைய மனக்கண்ணில் வந்து போனது. 

 அன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக காரில் புறப்பட்டு ஒரு பிரபல துணிக்கடைக்குள் நுழைந்தனர்.மகள் மறுக்காமல் கிளம்பி வந்து இருந்தாலும் முகத்தில் கொஞ்சமும் மலர்ச்சி இல்லாமல் இருந்தது இன்னமும் சாவித்திரியை உறுத்திக் கொண்டு தான் இருந்தது.எனவே அவ்வபொழுது மகளை பார்வையால் கண்காணித்த வண்ணம் இருந்தார் சாவித்திரி.

அவர்களுக்கு முன்பாகவே அங்கே காத்திருந்த பிரபஞ்சன் எல்லாரையும் பார்த்து லேசாக சிரித்து வைத்தவன் கண்களை மட்டும் சங்கமித்ராவின் புறம் வைத்து இருந்தான். “முதல்ல பட்டுப்புடவை எடுத்திடலாம் அத்தை” என்று சொன்னவன் பேசிக்கொண்டே நடையில் பின்தங்கி சங்கமித்ராவுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான்.

 தர்மராஜும்,சத்யாவும் அதை கண்டுகொள்ளாமல் நகர்ந்து விட சாவித்திரியோ கண்களை மகளிடம் இருந்து திருப்பவே இல்லை.ஏனெனில் அவருக்கு இன்னும் சங்கமித்ராவின் மனநிலை குறித்து தெளிவு ஏற்படவில்லை. 

 பட்டுப்புடவை பிரிவிற்குள் நுழைந்ததும் சாவித்திரியும்,சத்யா,தர்மராஜ் மூவரும் புடவைகளை அலச,மற்றவர்களின் கவனத்தை கவராத வண்ணம் மெல்ல சங்கமித்ராவை நெருங்கி நின்ற பிரபஞ்சன்.அவளின் காதோரம் குனிந்து மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

 “குஜிலி…செம்மயா இருக்க…கொஞ்சமா சிரிச்சா இன்னும் ரொம்ப அழகா இருக்கும்.கொஞ்சம் சிரியேன்” .

ஒன்றுமே பேசாமல் எதிரில் கொட்டிக் கிடந்த புடவைகளை வெறித்தவாறு நின்று கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.

 “ஏய் ! இப்படி ஒண்ணுமே பேசாம நிற்காதே…ஏற்கனவே உங்க அம்மா என்னை சந்தேகமா பார்க்கிறாங்க.நீ இப்படி நடந்துக்கிட்டா அவங்க சந்தேகம் உண்மை தான்னு தோண ஆரம்பிச்சுடும்.கொஞ்சம் சிரிச்ச முகமா இரு பேபி” 

 “ஈஈஈ…இவ்வளவு சிரித்தால் போதுமா”கோபத்தில் தன்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் ஒன்றாக காட்டியவாறு சிரித்து வைத்தாள் சங்கமித்ரா.
அவளின் செய்கையை பார்த்து பிரபஞ்சன் அடக்க மாட்டாமல் சிரித்து விட சட்டென்று அவர்களை திரும்பிப் பார்த்த அவளுடைய குடும்பத்தினரும்,கடையில் அவளை கடந்து சென்றோரும் கூட சேர்ந்து சிரித்து விட கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் சங்கமித்ரா. 

 ‘சே! எல்லார் முன்னாடியும் இப்படி ஆகிப் போச்சே…என்னை பார்த்தவங்க எல்லாரும் என்ன நினைச்சு இருப்பாங்க…லூசுன்னு தானே நினைச்சு இருப்பாங்க.எல்லாம் இவனால் வந்தது’என்று மனதுக்குள் பிரபஞ்சனை தாளித்து கொட்டியவள் அதே விறைப்போடு நிமிர்ந்து பிரபஞ்சனை முறைக்கத் தொடங்கினாள்.

 “குஜிலி நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சொல்லிட்டேன்…நான் உன்னை சிரிச்ச முகமா இருன்னு தான் சொன்னேன்.அதுக்கு நீ ஓவரா ரியாக்ட் பண்ணி வச்சா அதுக்கு நானா பொறுப்பு?”ஒன்றுமறியா பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டான் பிரபஞ்சன்.

 “ஆமா… நீங்க தான் காரணம்…”செல்ல சிணுங்கலாக வெளிவந்தது அவள் குரல் 

“அடப்பாவி…நான் உன்னை கலகலன்னு சிரிக்க சொன்னேன்.நீ சந்திரமுகி மாதிரி லகலகன்னு சிரிச்சு வச்சுட்டு என்னை குறை சொன்னா என்ன அர்த்தம்…” கண்களில் கள்ளச்சிரிப்புடன் நியாயம் கேட்டான் பிரபஞ்சன். 

 “பேசியே ஆளை மயக்குங்க…” 

 “நீ பேசாமலேயே மயக்கறியே”

 “…” 

 “குஜிலி…” 

 ஊடுருவும் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டாள் சங்கமித்ரா
“நான் உன்னை மயக்கணும்னு நினைக்கிறது என்னவோ உண்மை தான்.என்கிட்டே நீ மயங்கி இருக்கியா இல்லையானு தான் எனக்கு தெரியலை…” இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் இதழ் கடித்து அமைதி காத்தாள் சங்கமித்ரா.

பிரபஞ்சனின் பார்வை ஆர்வத்துடன் அவளுடைய இதழில் பதிய அவசரமாக வேறுபுறம் திரும்பி புடவைகளை பார்வையிடுவது போல ஒவ்வொரு புடவையாக கையில் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். கைகளில் எல்லா புடவைகளையும் எடுத்து பார்த்தாளே தவிர,அவளுடைய மனம் அங்கே லயிக்கவில்லை.மாறாக பிரபஞ்சன் கேட்ட கேள்வியே அவளது காதுகளில் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

 ‘உன்னிடம் நான் எந்த அளவிற்கு மயங்கி இருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா?இத்தனை வருடங்கள் என்னை பெற்று வளர்த்த தாய்,தந்தையை விட நீ தான் எனக்கு உயிராக தெரிகிறாய்….அப்படி இருந்ததால் தான் அந்த முட்டாள்த்தனமான காரியத்தை செய்து வைத்தேன்’ என்று தனக்குள்ளேயே அவள் பேசிக் கொண்டு இருந்தாள்.

 அவளுக்கு அருகில் வந்து நின்ற பிரபஞ்சன் அடர் சிகப்பில் தங்கத்தில் கரையிட்ட புடவையை எடுத்து சங்கமித்ரா தோளில் வைத்துப் பார்த்தான்.அதை அவள் உணர்ந்தது போலவே இல்லை.சட்டென்று அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்த கண்ணாடிக்கு அருகில் இழுத்து சென்றவன் அவளின் கையில் லேசாக அழுத்தி தன்னுணர்வுக்கு கொண்டு வந்தான். 

 “இந்த புடவை அழகா இருக்கு குஜிலி…இதையே நீ முஹூர்த்தத்துக்கு கட்டிக்கோ…”என்று சொன்னவன் கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்தை கண்களால் விழுங்கினான். எதேச்சையாக நிமிர்ந்து கண்ணாடியை பார்த்தவள் அவனின் பார்வையில் மேனி சிலிர்க்க பார்வையை தளர்த்திக் கொண்டாள். 

 பிரபஞ்சன் சும்மாவே அவளை அந்த பார்வை பார்த்து வைப்பான்.இதில் அவள் வெட்கப்படுகிறாள் என்று தெரிந்த பின்னும் சும்மா இருப்பானா அவன்… புடவையை அவள் தோளில் வைத்துப் பார்க்கும் சாக்கில் கொஞ்சம் அவளை நெருங்கி நின்றான்.

 “குஜிலி”கிறக்கத்துடன் ஒலித்தது அவன் குரல்.

 ‘சுற்றி இத்தனை பேர் இருக்கும் இடத்தில் என்ன இவன் இப்படி வம்பு செய்கிறான்’என்று எண்ணியவள் அங்கிருந்து நகர முயல புடவையின் மறைவினில் அவளின் கைகளை இறுகப் பற்றி அவளை நகர முடியாமல் செய்தான் பிரபஞ்சன்.

 “எனக்கு கேசரி சாப்பிடணும் போல இருக்கு”காதோரம் தாபச் சீறலாக கேட்ட அவன் குரலில் அவளை பதட்டம் தொற்றிக் கொண்டது. 

 ‘யாராவது பார்த்துட்டா என்ன ஆகுறது?ரொமான்ஸ் பண்ற இடத்தை பாரு’ என்று சலித்துக் கொண்டவள் அவன் அசந்த நேரம் அவனிடம் இருந்து கைகளை உருவிக்கொண்டு, மற்றவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டாள். 

 எதுவுமே நடக்காதது போல நிதானமான நடையுடன் மீண்டும் அவளருகில் நெருங்கி நின்று கொண்டவன் மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம் குரல் தாழ்த்தி பேச ஆரம்பித்தான். 

“இன்னைக்கு தப்பிச்சிடலாம் மித்ரா…கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி தப்பிப்ப… மாமன் கேட்டதை நீ கொடுத்து தான் ஆகணும்.உனக்கு வேற வழியில்லை” அவன் குரலில் இருந்த உறுதியில் மிரண்டவள் அவனை பயத்துடன் பார்த்து வைத்தாள்.
“அச்சச்சோ! நீ என்ன இப்படி பயப்படுற…வெறும் கேசரிக்கே இப்படி பயந்தா எப்படி?அதுக்கு அப்புறம் இன்னும் எவ்வளவோ இருக்கே”அவன் பார்வை உணர்த்திய செய்தியில் அவள் முகம் செந்தூரமானது. அவளின் வெட்கம் அவனை சிலிர்க்க செய்ய மேலும் நெருங்கி அவளை சீண்டினான்.ஆணவனின் காதல் கொண்ட மனம் கர்வத்தால் திமிறிக் கொண்டு நின்றது.

 “புல் மீல்ஸ் (FULL MEALS) எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.இப்போதைக்கு எனக்கு கேசரி மட்டும் போதும்.ஏன்னா…நான் ரொம்ப நல்ல பையன் தெரியுமா?” 

 என்ன தான் அவனிடம் காதலை காட்டக் கூடாது என்று அவள் நினைத்து இருந்தாலும் அவனுடைய அருகாமையில் அவள் சித்தம் கலங்கித் தான் போனாள். அவனை வெறுத்து இருந்தால்,அவளுக்கு அது சாத்தியமாகி இருக்கும்.

 உள்ளம் முழுவதும் கடல் போல அவன் மேல் நேசம் நிரம்பி வழிகையில் அவனை ஒதுக்கத் தான் அவளால் முடியாமல் போனது. நிச்சயத்திற்கும்,திருமணத்திற்கும் அவளுக்கு வேண்டிய உடைகளை அவனே தேர்ந்தெடுத்தான்.அதே போல அவனது உடைகளை அவளையே தேர்வு செய்ய வைத்தான்.வெளியே வேண்டாவெறுப்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவனை அதிகமாகவே நேசித்தாள் சங்கமித்ரா.

 சங்கமித்ரா அவனை நேசித்தாள்…அவன் இயல்பை நேசித்தாள்…அவனுடைய செய்கைகளை நேசித்தாள். அவனை மொத்தமாக நேசித்த அவளால் அதை அவனிடம் வாய் விட்டு சொல்ல முடியாமல் போனது யார் செய்த சதியோ?இல்லை விதி விரித்த வலையோ?
எல்லாருக்கும் உடைகளை எடுத்து முடித்த பின் பார்சலை தூக்கி வர துணைக்கு அவளையும் தன்னோடு வைத்துக் கொண்டவன்,வெறுமனே இரண்டு பைகளை மட்டும் அவளிடம் கொடுத்து விட்டு மீதி இருந்த பார்சல்களை அவன் எடுத்துக் கொண்டான்.

மற்றவர்கள் யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் மெல்லிய குரலில் அவளுக்கு உத்தரவிட்டான்.

 “நிச்சயதார்த்தம் நடக்கிற அன்னைக்கு எனக்கு கண்டிப்பா கேசரி வேணும் குஜிலி…தரமாட்டேன்னு அடம் பிடிச்ச….அப்புறம் நானே எடுத்துக்குவேன்.ஜாக்கிரதை” என்று சொல்லி விட்டு அவளுக்கு முன்னால் போக அவளோ திக்பிரமை பிடித்தது போல அங்கேயே நின்று விட்டாள்.


 சிற்பம் செதுக்கப்படும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here