Vanavil Sirpame episode 25

4
1120

அத்தியாயம் 25

கண்களுக்கு முன் எறிந்து கொண்டு இருந்த தீயின் உக்கிரத்தை விட அதிகமான உக்கிரத்தை கண்களில் காட்டியபடி மணமேடையில் அமர்ந்து இருந்தான் பிரபஞ்சன்.அய்யர் சொல்வதை எல்லாம் கர்ம சிரத்தையாக சொல்லிக் கொண்டு இருந்தவனின் முகத்தில் மருந்துக்குக் கூட மலர்ச்சி இல்லை. “பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ”அய்யரின் குரல் கேட்டதும் அவனது உடல் மேலும் இறுகிப் போனது.அவனது பார்வை வட்டத்தில் அவள் நடந்து வருவது தெரிந்தாலும் அவன் பார்வையை உயர்த்திப் பார்க்கவில்லை.காரியமே கண்ணாக அய்யர் சொன்ன மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தான்.

 பிரபஞ்சன் ஆசை ஆசையாக தேர்ந்தெடுத்த அடர் சிகப்பில் தங்க நிறத்தில் நெய்த புடவையில் தங்கப் பதுமையென மெல்ல நடந்து வந்தவள், அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள். மாலையை சரி செய்யும் சாக்கில் ஓரவிழியால் திரும்பி அவனைப் பார்த்தாள் சங்கமித்ரா.

உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் தனக்கு அருகில் அமர்ந்து இருந்தவனை பார்த்து அவளுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.அவனிடம் தானாக சென்று பேசவும் அவளுக்கு பயமாக இருந்தது.அவனது அந்த இறுகிய தோற்றத்தின் காரணம் தன்னுடைய பேச்சு தான் என்று தெளிவாக தெரிந்தாலும்,தன்னுடைய நிலையை விட்டு கீழே இறங்கிப் போய் அவனிடம் மன்னிப்பு கேட்க அவள் விரும்பவில்லை.அவளுக்கு அவன் தன்னை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அன்று அப்படிப் பேசினாள்.

  அன்று இரவு பிரபஞ்சனிடம் அளவுக்கு அதிகமாகவே பேசிவிட்ட குற்றவுணர்ச்சியில் அழுது கரைந்தவள் அதன்பிறகு அவனை சமாதானம் செய்ய எந்த முயற்சியும் செய்யவில்லை.எவ்வளவோ முயற்சித்தும் அன்று கடைசியாக பிரபஞ்சன் அவளைப் பார்த்த அந்த பார்வை அவ்வபொழுது அவளின் நினைவுக்கு வந்து அவளை கொல்லாமல் கொன்றது. 

ஒருமுறை மனம் தாளாமல் அவனது எண்ணுக்கு முயல,முழுமையாக ரிங் போன பிறகு கட் ஆனது.ஒருவேளை குளிக்க எதுவும் சென்று இருப்பானோ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கையிலேயே அப்படி இல்லை என்று நிரூபிக்கும் விதமாக அவள் வீட்டு எண்ணுக்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசியவர் சாவித்திரி தான். 

“ஹலோ…சொல்லுங்க மாப்பிள்ளை”

 “…” 

“நாங்க யாரும் போன் பண்ணலையே மாப்பிள்ளை…” 

“…”

 “ஓ…சரி சரி…என்ன மாப்பிள்ளை இன்னைக்கு காலையில வீட்டுக்கு வரவே இல்லை.நீங்க வருவீங்கன்னு இடியாப்பம் செஞ்சு வச்சு இருந்தேன்.”

 “…” 

“ஓ…சரி மாப்பிள்ளை உங்க உத்தியோகமே அப்படித்தானே…இங்கே உங்க மாமாவும் அப்படித்தான்.நேரத்திற்கு வீட்டுக்கு வர மாட்டார்.சாப்பிடவும் மாட்டார்.நீங்களும் வேலை என்று வந்து விட்டால் அப்படித்தானா?”

 “…” 

“உடம்பை கெடுத்துக்காதிங்க…நேரத்திற்கு சரியா சாப்பிடுங்க மாப்பிள்ளை” அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த சங்கமித்ராவின் விழிகளில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.அவளைக் காண்பதை தவிர்க்கத் தான் அவன் வீட்டுக்கு வரவில்லை என்பது அவளுக்கு புரிந்தது.

அதே நேரம் தன்னுடைய அழைப்பை அவன் வேண்டுமென்றே எடுக்காமல் இருந்து இருக்கிறான் என்பதும் புரிந்தது. தான் எண்ணியபடி அவன் தன்னை வெறுக்கத் தொடங்குகிறான் என்பது அவளுக்கு கடுகளவு கூட மகிழ்ச்சியை தரவில்லை.உயிரை கசக்கும் வேதனையை அனுபவித்தாள்.

யாரிடமும் சொல்லக் கூட அவளால் முடியவில்லை.யாரிடமும் சொல்லுவதென்றால் என்னவென்று காரணம் சொல்லுவாள்? உண்மையை அவளால் யாரிடமும் சொல்லி விட முடியுமா என்ன?பிரபஞ்சன் அவளைக் கொடுமைப் படுத்தினால் வெளியே சொல்லலாம்…இங்கே அவள் தானே அவனையும் அவனது காதலையும் முழுமையாக உணர்ந்த பின்னரும் கூட அவனை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறாள். 

முகத்தில் வருத்தம் இழையோட சோர்ந்த முகத்துடன் காலை உணவை உண்ண வந்த மகளை ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்தார் சாவித்திரி.முதல்நாள் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவளிடம் கேட்டு விட வேண்டும் என்று எண்ணியவராய் சுற்றும் முற்றும் பார்த்து அருகில் யாரேனும் இருக்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக் கொண்டார்.யாரும் இல்லாததை கண்டு சமாதானம் அடைந்தவர் மெல்ல மகளிடம் பேச்சுக் கொடுத்தார். 

“ஏன் சங்கமித்ரா முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு” 

“நைட் சரியா தூங்கலை அதுதான்மா”தாயின் உள்நோக்கம் புரியாமல் தட்டையே பார்த்தபடி குனிந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். 

“உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லையா பாப்பா?” தாய் திடீரென்று இப்படிக் கேட்கவும் உணவை வாயிற்கு அருகில் கொண்டு சென்றவள் உணவைக் கூட உண்ணாது தாயை வெறித்துப் பார்க்கத் தொடங்கினாள். 

“நானும் உன்னை கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன் பாப்பா…கல்யாணம் முடிவானதில் இருந்து நீ ஆளே சரியில்லை.அதுக்கு முன்னாடி மாப்பிள்ளை பொண்ணு பார்க்க வர முடியாம போச்சே அப்ப இருந்து நீ ஆள் ரொம்பவே மாறிட்ட…முன்னே மாதிரி கலகலப்பா இருக்கிறதே இல்லை.என்னடா விஷயம் அம்மா கிட்டே சொல்லக் கூடாதா?”

 “அப்படி எல்லாம் எதுவும் இல்லைமா…சும்மா நீயா ஏதாவது நினைச்சுக்காதே…நான் நல்லா தான் இருக்கேன்”என்று பேசியவள் அன்னையின் பேச்சை ஒதுக்கி விட்டு சாப்பாட்டை உண்ணலானாள். அவளின் அதீத அமைதியே சாவித்ரியை மேலும் பேசுமாறு தூண்டவே தொடர்ந்து கேள்விகளை கேட்கத் தொடங்கினார்.

 “ஏன் பாப்பா நீ…நீ…வந்து …காலேஜ்ல …இல்லை வெளியில் யாரையாவது லவ் பண்ணுனியா?”எப்படியோ திக்கித்திணறி தான் கேட்க வந்ததை கேட்டு விட்டார் சாவித்திரி. சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாடு அப்படியே தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது அவளுக்கு.

  ‘அன்றே பிரபஞ்சன் அன்னைக்கு தன்னுடைய நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக சொன்னாரே அதை கண்டுகொள்ளாமல் விட்டது தவறோ?’ என்று காலம் கடந்து சிந்தித்தாள் சங்கமித்ரா. சாவித்திரி தன்னுடைய பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்தவள் கேலி போல பேசி நிலைமையை சமாளிக்க எண்ணினாள்.

 “அம்மா ஏற்கனவே ராத்திரி பூரா நான் தூங்கலை.ஏதோ சாப்பிட்டு ஆகணுமேன்னு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.நீங்க வேற ஏம்மா இப்படி காமெடி பண்றீங்க?”

 “என்கிட்டே நீ எதையும் மறைக்க வேண்டாம் பாப்பா…எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு…நான் அப்பாக்கிட்டே பேசி உனக்கு பிடிச்ச பையனையே…” “அம்மா தயவு செஞ்சு கொஞ்சம் நிறுத்தறியா?ஏன்மா இப்படி காலையில உளறிக்கிட்டு இருக்க…நைட் ஏதாவது கெட்ட கனவு வந்துச்சா?”ரொம்ப அக்கறையாய் கேட்பது போல கேட்டாள்.

 “என்னடி…கிண்டலா பண்ற…சும்மா இப்படி ஏதாவது பேசி என்னை ஏமாத்திடலாம்ன்னு பார்க்காதே.நானும் உனக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சதில் இருந்து உன்னோட நடவடிக்கை எல்லாம் பார்த்துக்கிட்டு தானே இருக்கேன்.எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரி தானே இருக்க…கொஞ்சமாவது கல்யாண பொண்ணு மாதிரி கலகலப்பா இருக்கியா?” 

“எப்படிம்மா கலகலப்பா இருக்க சொல்ற…படிப்பு இன்னும் முடியக் கூட இல்லை… ஒரு செமஸ்டர் பாக்கி இருக்கு.அதுக்குள்ள இப்படி என்னை தள்ளி விடப் பார்க்கறீங்க…அக்காவெல்லாம் படிப்பு முடிச்சு ஒரு வருஷம் வீட்டில உங்க எல்லாரோடையும் எப்படி ஜாலியா இருந்தா … என்னை மட்டும் இப்படி படிச்சுக்கிட்டு இருக்கும் போதே கல்யாணம் செஞ்சு துரத்தப் பார்க்கறீங்களே…”முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கோர்வையாக பேசினாள் சங்கமித்ரா.

 “என்ன பாப்பா நீ இப்படி எல்லாம் பேசுற…அப்பாவோட வேலை பத்தி உனக்கு தெரியாதா? தான் நல்லா இருக்கும் பொழுதே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்னு அவர் ஆசைப்பட்டார்.அதுவும் இல்லாம அவருக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சு போச்சு.அதுதான்…”

 “அதுதான் தெரியுமே…எப்ப பாரு மாப்பிள்ளைக்கு நல்லா ஜால்ரா போடுறாரே…”கைகளால் ஜால்ரா போடுவது போல அபிநயம் பிடிக்க ஆரம்பித்தவள் அன்னையின் முகம் போன போக்கில் கடகடவென்று சிரிக்கத் தொடங்கினாள்.

 “ஏய்!என்னடி கிண்டலா பண்ணுற என் புருஷனை”என்று கேட்டவாறே அவளின் காதை பிடித்து நன்றாக திருக அவள் கத்திய கத்தில் மொத்த வீட்டிலும் எதிரொலித்தது.

 “ஆமா…பெரிய இவரா உங்க வீட்டுக்காரர்…நான் யாரை கல்யாணம் செஞ்சுக்கப் போறேன் தெரியுமா? அசிஸ்டெண்ட் கமிஷனரை…ஒழுங்கா பார்த்து மரியாதையா நடந்துக்கோங்க இரண்டு பேரும்”

 “மரியாதை தானே கொடுத்துட்டா போச்சு…இங்கே கிட்டே வா”என்று கூறியபடியே தன்னை நெருங்கிய அன்னையின் விழிகளில் அவர் எப்பேர்பட்ட மரியாதை தரப் போகிறார் என்பது தெரிந்து விட சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் அங்கிருந்து சிட்டாக பறந்து அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக் கொண்டாள்.கதவில் சாய்ந்து நின்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

  ‘இனி கண்டிப்பாக அம்மாவுக்கு இந்த கல்யாணம் குறித்து எந்த சந்தேகமும் வராது’என்று எண்ணி தன்னைத்தானே தேற்றிக் கொண்டவள் மனதுக்குள் தாயிடம் முறையிட்டாள். ‘நீ ஏம்மா இப்படி மாறிட்ட…நீ மட்டும் சரியா இருந்து இருந்தா எனக்கு இப்படி ஒரு பிரசின்னையே வந்து இருக்காதோ என்னவோ…ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது’ என்று எண்ணியவள் அதன்பிறகு மீதம் இருந்த நாட்களையும் கண்ணீரிலேயே கழித்தாள்.

ஒவ்வொரு நாளும் காலையில் விடியும் பொழுதே ஒருவித பதட்டத்துடன் தான் அவளுக்கு பொழுது விடிந்தது. ‘பிரபஞ்சன் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவானோ’என்று பயம் உள்ளுக்குள் அவளை வாட்டி வதைத்தாலும் அவன் அப்படி செய்யாதது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்த அதே சமயம் வருத்தத்தையும் கொடுத்தது.

 ‘எந்த அளவுக்கு என்னை நேசிச்சு இருந்தா ,நான் அவ்வளவு மோசமா பேசியும் அவர் என்னையே கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்குவார்.கடவுளே இப்படிப்பட்டவரோட வாழ்க்கையை கெடுக்கப் போறேனே நான்’ என்று உள்ளுக்குள் உருகி கலங்கிப் போனாள் சங்கமித்ரா.இடைப்பட்ட காலத்தில் ஒருமுறையாவது அவனிடம் பேசி விட மாட்டோமா என்று தவித்தாள்.ஆனால் அதற்கான வாய்ப்பையே அவன் அவளுக்கு அளிக்கவில்லை.முழுமையாக அவளை ஒதுக்கினான்.

அன்று பிரபஞ்சனை பார்த்த பிறகு இதோ இன்று தான் மணமேடையில் பட்டுவேஷ்டி சட்டையில் பார்க்கிறாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் அவனுடைய உடைமையாகப் போகிறாள்.ஆனால் அவனோ கல் போல இறுகிப் போய் அமர்ந்து இருந்தான்.இன்னமும் பிரபஞ்சன் தன்னை மன்னிக்கவில்லை என்பதை உணர்ந்தாலும் ஏனோ இந்த நிமிடம் அவனுடைய கோபத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 ‘எப்பேர்பட்ட நொடி இது…இந்த நிமிடங்கள் இனி என்றேனும் திரும்பக் கிடைக்கக் கூடியதா…இல்லையே… இனி மீதம் இருக்கும் கொஞ்ச நாட்களையும் இப்படி வெறுப்பிலேயே கழித்து விட்டால் என்ன செய்வது?என்னை கொஞ்சம் பாரேன்’என்று அவள் மனதோடு பேசிய மொழி எப்படி அவனது செவிகளுக்கு எட்டியதோ தெரியவில்லை.

ஒரே ஒரு நிமிடம் லேசாக திரும்பி அவளைப் பார்த்தான்.இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டது. அவளுடைய கலவரம் நிறைந்த முகத்தில் என்ன கண்டானோ ஒன்றுமே பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.அய்யர் மந்திரங்கள் உச்சரிக்க,கெட்டி மேள சத்தத்துடன் திருமாங்கல்யத்தை கைகளில் ஏந்தியவன் அவளை நேராக ஒரு பார்வை பார்த்தான். 

அவனுடைய பார்வையில் தயக்கம் இருந்தது,வருத்தம் இருந்தது. பிடித்தமில்லாமல் அவளை வற்புறுத்தி இப்படி இந்த கல்யாணம் நடந்தே தீர வேண்டுமா என்று யோசித்துக் கொண்டு இருந்தான். தாலியை கையில் வாங்கிக் கொண்டு இன்னும் கட்டாமல் இருக்கிறாரே என்று எண்ணியவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனது முகமே அவனது குழப்பத்தை சொல்லாமல் சொல்ல எங்கே தாலி கட்டாமல் எழுந்து போய் விடுவாரோ என்று அஞ்சியவள் அவனுக்கு அருகில் சற்று நெருங்கி அமர்ந்தவள் அவன் தாலி கட்டுவதற்காக அவனுக்கு அருகில் சென்று தலையை குனிந்து அவன் கட்டுவதற்கு வாகாக அமர்ந்து கொண்டாள். 


இத்தனை நாட்கள் குழப்பத்திலேயே இருந்த பிரபஞ்சனுக்கு இந்த சிறு செய்கையே பெரும் தைரியத்தை கொடுக்க ஆழ்ந்து பெருமூச்சை வெளியேற்றியவன் தன்னுடைய பெற்றவர்களை மனதில் வேண்டிக் கொண்டு அவளின் கழுத்தில் தாலியை கட்டி முடித்தான். 

சங்கமித்ரா இப்பொழுது இந்த நிமிடம் முதல் திருமதி பிரபஞ்சன்.

 சிற்பம் செதுக்கப்படும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

4 COMMENTS

  1. Super da madhu oru vazhiya kalyanam nalla padiya mudinjuthu aduthu appadiyae mithraku enna prechanai appadinu konjam sonningana naala irrukum mudiyala thalaiya pichukuren

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here