Vanavil Sirpame – Episode 26

6
1253
அத்தியாயம் 26 


திருமணம் முடிந்த பிறகு நடந்த சடங்குகள் அனைத்திலும் ஒருவித தவிப்புடனே கலந்து கொண்டாள் சங்கமித்ரா.அய்யர் சொல்லுவதை எல்லாம் செய்தாலும் கூட அவளுடைய கவனம் அங்கே இல்லை.முள்ளின் மேல் நிற்பதை போல தவித்துக் கொண்டே இருந்தாள். ‘ஏன் இப்படி இருக்கிறாள்’என்று யோசனையுடன் பிரபஞ்சன் அவளைப் பார்த்த அதே நேரம் அங்கே வந்த சாவித்திரி மாலையை சரி செய்யும் சாக்கில் குனிந்து அவளிடம் மெல்லிய குரலில் பேசினார்.
 “பாப்பா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…எனக்கு புரியுது இந்த மாலை,புடவை,அலங்காரம் இதெல்லாம் உனக்கு புதுசு.அதனால தான் உன் முகமெல்லாம் வாடி இருக்குனு.ஆனா வந்து இருக்கிற சொந்தக்காரங்க எல்லாம் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுடுவாங்க…போட்டோ வேற எடுக்குறாங்க இல்ல…கொஞ்சம் முகத்தை சிரிச்சா மாதிரி வச்சுக்கோடா” என்று சொல்லி விட்டு கண்களால் பிரபஞ்சனிடம் அவளை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டவர் சிரித்த முகத்துடன் மேடையில் இருந்து இறங்கி கீழே வேலைகளை கவனிக்கப் போய் விட்டார். 

அவர் நகர்ந்ததுமே பிரபஞ்சனுக்கும் ஒருவேளை அதுதான் காரணமோ என்று தோன்ற ஆரம்பித்தது.பிரபஞ்சனின் சொந்த பந்தங்கள் சிலர் முகமெல்லாம் பல்லாக மேடைக்கு ஏறிய பொழுது அவர்களைப் பற்றி ஒரே வார்த்தையில் அறிமுகம் செய்து விட்டு அத்தோடு முடிந்தது என்று அடுத்தவர்களை மேடைக்கு வரவேற்கத் தொடங்கினான். 

அவர்களிடம் பேச்சு வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை என்பது அவளுக்கு நன்றாக புரிந்தது.ஆனாலும் அவர்களை வேண்டுமென்றே இழுத்து வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.பிரபஞ்சனுக்கு அது பிடிக்கவில்லை என்பது அவனது கடுகடுத்த முகத்தை பார்த்த பொழுதே அவளுக்கு தெரிந்தது.இருப்பினும் வேண்டுமென்றே அவர்களோடு பேச்சை வளர்த்தாள். அவர்களோடு அப்படியே ஒட்டிக்கொண்டு வீடு வரை வர முயன்றவர்களை ஒற்றை முறைப்பில் தடுத்து நிறுத்தி விட்டான் பிரபஞ்சன்.

 “ஆரத்தி சுத்தியாச்சு…தட்டுல காசு போடுங்க”வம்பிழுக்க தயாரானது ஒரு வம்பர் கூட்டம்.அவர்களின் கேலிகளுக்கு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் நடந்து கொண்டான் பிரபஞ்சன். இந்த மாதிரி கேலி கிண்டல் எதையுமே அவன் அனுபவித்தது இல்லையே…இது போன்ற ஒரு அழகான குடும்ப சூழலில் வாழத்தானே அவனும் ஆசை கொண்டான். 

சிரித்த முகமாகவே சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்தவன் ஒரு நூறு ரூபாயை அவர்களிடம் எடுத்து நீட்ட, ‘அதை வாங்க முடியாது’ என்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டது அந்த வம்பர் பட்டாளம். 

“எத்தனை ஊரு சுத்தி திரிஞ்சு இருந்தாலும் இவ்வளவு அழகான பொண்ணு உங்களுக்கு கிடைச்சு இருக்குமா?எங்க வீட்டு இளவரசியை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு இருக்கோம்.வெறும் நூறு ரூபாயை போட்டா எப்படி ஆபீசர்…இதெல்லாம் பத்தாது” சிரித்த முகமாகவே சட்டைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தவன் அவர்களுக்கு பதில் அளிக்கவும் தயங்கவில்லை.

 “நான் ஒண்ணும் கோடீஸ்வரன் இல்லை…அதனால இதுக்கு மேல என் பர்சுக்கு வேட்டு வைக்காதீங்க …நான் தாங்க மாட்டேன்”

 “ஹுக்கும்…வெறும் ஆயிரம் ரூபாய்க்கே இவ்வளவு பேச்சா…மாப்பிள்ளை ரொம்பவும் கஞ்சமோ…இப்படி இருந்தால் நாளைக்கு எங்க பொண்ணுக்கு ஒரு முழம் பூ கூட வாங்கித் தர மாட்டீங்க போலவே…” 

“யாரு கஞ்சம்….உங்களுக்கு செய்யாம இருக்கிறதே அவளுக்கு செய்யணும்கிறதால தான்…என்னோட பொண்டாட்டிக்கு பூ என்ன வெறும் முழம் கணக்கிலயா வாங்கித் தருவேன்…கூடை கூடையா வாங்கி குமிச்சிற மாட்டேன்”அவர்களின் பாலை சிக்ஸருக்கு விளாசித் தள்ளினான் பிரபஞ்சன். 

“இதெல்லாம் அநியாயம்…உங்க பொண்டாட்டிக்கு மட்டும் தான் செலவு செய்வீங்களா? எங்களுக்கு எல்லாம் செலவு செய்ய மாட்டீங்களா?”

 “குடும்பஸ்தன் ஆகிட்டேன் இல்லையா? வீண் செலவு எல்லாத்தையும் குறைச்சு ஆகணுமே” கண்களில் கேலிச் சிரிப்போடு பதில் தந்தான் பிரபஞ்சன்.

  “எங்களுக்கு செய்றது அனாவசிய செலவா?இன்னும் சடங்கு எல்லாம் முடியலை அப்புறம் தான் பொண்ணை உங்க வீட்டுக்கு அனுப்பி வைப்போம் நியாபகம் இருக்கா”கோரஸாக அவன் மேல் பாயத் தொடங்கினார்கள். 

“அய்யயோ…அதை மறந்தே போனேனே…நான் வேணும்னா தோப்புக்கரணம் போடட்டுமா?”என்று கேட்டபடி காதுகளை பிடித்து தோப்புக்கரணம் போடத் தயாரானான் பிரபஞ்சன். 

திருமணம் முடிந்ததினால் அவன் மனதிலும் அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகியதால் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தான். சங்கமித்ரா மட்டும் அவனைப் பார்த்து முழு மனதாக நிறைவான புன்னகை ஒன்றை செலுத்தி இருந்தால்,அந்த நிமிடமே அவன் முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கக்கூடும். 

சங்கமித்ரா வாய் திறந்து எதுவும் சொல்லாவிட்டாலும் அவள் இயல்பாக இல்லை என்பதை அவனால் உணர முடிந்தது.பயத்தில் அடிக்கடி வேர்த்து வழிந்தது அவளுக்கு.ஏதோ ஒரு விதமான பரிதவிப்பில் இருந்தாள் அவள்.அவளுடைய நிலைமையை எண்ணி அவள் மேல் பரிதாபம் கொண்டான் பிரபஞ்சன்.

 ‘அன்று ஏதோ வாய் தவறி பேசி விட்டாள் போலும்.இப்பொழுது நானும் அவள் மேல் கோபமாக இருக்கவே அவளிடம் கடுமையாக நடந்து கொள்வேன் என்று பயப்படுகிறாள் போல’ என்று எண்ணியவன் அதற்குப் பிறகு அவளிடம் பாராமுகமாக நடந்து கொள்ளவில்லை.முடிந்தவரை இணக்கமாகவே நடந்து கொண்டான்.ஆனால் அவன் எண்ணியது தவறு என்று அவனுக்கு அப்பொழுது புரிந்து இருக்கவில்லை. 

வீட்டிற்கு வந்த பிறகு பாலும் பழமும் சாப்பிட்ட பிறகு இருவரையும் தனித்தனியே ஓய்வெடுக்க சொல்லி அனுப்பி வைத்து விட்டனர்.எல்லாரும் அவர்களை சுற்றியே நின்று கொண்டு இருந்ததால் பிரபஞ்சனால் அவளிடம் மனம் விட்டு பேச முடியாமல் போனது.சரி எப்படியும் இன்று எல்லாவற்றையும் பேசி தீர்த்து விட வேண்டியது தான் என்று எண்ணியபடியே அறைக்குள் சென்றவன் அசதியில் அப்படியே தூங்கி விட்டான். 

தன்னுடைய அறைக்குள் நுழைந்த சங்கமித்ராவும் யோசனையில் தான் இருந்தாள்.ஆனால் அவள் யோசித்த விதம் தான் வேறு.கல்யாணம் முடிய வேண்டும் என்பது மட்டுமே இதுவரை அவளுக்கு இருந்த வேண்டுதல்.ஆனால் இப்பொழுது கல்யாணம் முடிந்த பிறகோ அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. 

கல்யாணத்தை பற்றி மட்டும் யோசித்து தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டோமோ என்று கலங்கிப் போனாள்.இனி தான் பிரச்சினையே ஆரம்பம் என்பதை ஏன் மறந்து போனாள்… ‘இதுவரைக்கும் பிரச்சினை எனக்கு மட்டும் தான்.ஆனா இப்ப அந்த வலைக்குள்ள அவரையும் சேர்த்து வேற இழுத்து விட்டுட்டேனே…இதை அவருக்கு தெரியாம மறைக்கவும் முடியாது.உண்மை தெரிஞ்சா என்ன செய்வார்? என்னை விட்டு பிரிஞ்சு போய்டுவாரா’என்றெல்லாம் எண்ணி தவித்துப் போனாள் சங்கமித்ரா.

 ஒருநிமிடம் கூட அவள் உறங்கவில்லை.அவள் உறங்கவில்லை என்பதற்காக நேரம் நகராமல் அப்படியே நின்று விடப் போகிறதா என்ன?மாலை மங்கி இருள் சூழ்ந்தது.ஆறு மணி அளவில் இவளை எழுப்பி விட வந்த சாவித்திரி மகளின் முகத்தை பார்த்ததும் முதலில் பதறித் தான் போனார். 

“என்னம்மா கொஞ்ச நேரம் கூட தூங்கலையா நீ…என்ன பொண்ணோ போ…ஊர்ல எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் கல்யாணம் ஆன பின்னாடி இருப்பாங்களா.முகத்தை சந்தோசமா வச்சுக்கணும் பாப்பா…மாப்பிள்ளை வீடு இங்கே இருந்து அரை மணி நேரத்துக்குள்ள வந்திடலாம்.அதுக்கு போய் முகத்தை இப்படி தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா எப்படி…மாப்பிள்ளை பார்த்தா என்ன நினைப்பார்…போ முதல்ல குளிச்சுட்டு வா”என்று சொன்னவர் மகள் குளித்து வந்ததும் அவளுக்கு காபியை தயார் செய்து கொடுத்தார்.

 அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள் உறுதி பூண்டவள் கொஞ்சம் வெளிக்காற்றை சுவாசிக்க எண்ணி அணிந்திருந்த நைட்டியுடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.பிரபஞ்சன் எங்கேனும் இருக்கிறானா என்று பார்வையாலேயே அவள் துழாவ அவன் மட்டும் அவளுடைய கண்களுக்கு சிக்கவே இல்லை.அவள் யாரை தேடுகிறாள் என்பதை அறிந்து கொண்ட சாவித்திரி மகளின் கேள்விக்கு அவள் கேட்காமலேயே பதில் கொடுத்தார்.

 “மாப்பிள்ளை வெளியே போய் இருக்கார் பாப்பா…ஏதோ முக்கியமான போலீஸ் மீட்டிங்காம்…சீக்கிரமே வந்திடறேன்னு சொல்லிட்டு போய் இருக்கார்.உங்க அப்பாவும் சேர்ந்து தான் போய் இருக்கார்.அவங்க வர்றதுக்குள்ள நீ சாப்பிட்டு முடிச்சுடு…உனக்கு வேற அலங்காரம் செய்யணும்” அதன்பிறகு அவர் பேசிய பேச்சுக்கள் எதுவும் அவள் காதில் விழவில்லை.

பொம்மை போல தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.சாவித்திரியோ எல்லா பெண்களையும் போல சங்கமித்ரா திருமண வாழ்வை எண்ணிப் பயப்படுகிறாள் என்று எண்ணிக் கொண்டார்.அவளை தைரியமூட்டும் விதமாக அவர் பேசிய எந்த பேச்சும் அவள் மனதில் பதியவில்லை.அவள் மனமெங்கும் அன்றைய இரவை எப்படி எதிர்கொள்வது என்பதிலேயே நிலைத்து இருந்தது.

  இரவிற்காக அவளை நல்லபடியாக அலங்கரித்து முடித்த சாவித்திரி அவள் கையில் பாலை கொடுத்து அறைக்கு முன்னரே அனுப்பி விட்டார். “மாப்பிள்ளை அங்கே மீட்டிங் முடிந்து கிளம்பி விட்டாராம்.இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்னு சொன்னார்.நீ மாடி ரூம்ல வெயிட் பண்ணு.”என்று சொன்னவர் அவளை அறைக்கு அனுப்பி விட்டு மாப்பிள்ளைக்கும் கணவருக்கும் இரவு உணவை சூடாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.


 மாடியில் அறைக்குள் நுழைந்தவளை முதலில் வரவேற்றது மலர்களின் மெல்லிய நறுமணம் தான்.படத்தில் காட்டுவது போல ஆடம்பரமாக இல்லாமல் சாதாரணமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த அறை. ‘மாப்பிள்ளை தான் அதிக ஆடம்பரம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்’ என்று பேச்சு வாக்கில் அன்னை கூறியது அவளின் நினைவுக்கு வந்து போனது.

 ஜன்னல் ஓரம் நின்று இரவு விளக்கின் வழியே சாலையில் போவோரை எல்லாம் வேடிக்கை பார்க்கத் தொடங்கிய நேரம் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிக் பார்க்க அங்கே அவள் நிற்பதையே உணராதவன் போல விடுவிடுவென குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான் பிரபஞ்சன். 

குளித்து முடித்து இரவு உடையாக ஒரு டி ஷர்ட்டும் பர்மூடாசையும் அணிந்து கொண்டு வெளியே வந்தவன் தலையை துவட்டியவாறே கதவை தாழ் போட்டு விட்டு அழுத்தமான பார்வையுடன் அவளை நோக்கி வர ஆரம்பித்தான். அதுவரை அவள் மனதில் நினைத்து இருந்தது எல்லாம் மறந்து போனது சங்கமித்ராவுக்கு.அவளின் அலங்காரம் அவனை அசைத்துப் பார்த்தாலும் அவளின் அருகே செல்லாமல் கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான் பிரபஞ்சன்.

 “இங்கே வந்து உட்கார்”அவன் குரலில் இருந்தது அன்பா …அதிகாரமா? புரியவில்லை அவளுக்கு.மெல்ல அடிமேல் அடி வைத்து அவனுக்கு அருகில் உட்காராமல் வேண்டுமென்றே சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.

  “மித்ரா…இன்னைக்கு நைட் எதுவும் வேண்டாம்.நீ படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ…”என்று சொன்னவனை ஒன்றுமே புரியாமல் பார்த்தாள் அவள். ‘ஒருவேளை அன்று அப்படி பேசியதால் வேண்டுமென்றே என்னை ஒதுக்கி வைக்கிறாரோ’ என்று பயத்தோடு அவன் முகம் பார்த்தாள். அவளின் குழப்பமான முகத்தை பார்த்ததும் அவனே தொடர்ந்து பேசினான். 

“இந்த முடிவு ஏற்கனவே நான் எடுத்த முடிவு தான்…எனக்கு நல்லா தெரியும்.அன்னைக்கு நீ பேசிய பேச்சு ஏதோ பயத்தில் உன்னை அறியாம வந்த வார்த்தைகள்ன்னு.அதுக்காக நான் இதை செய்யலை.எனக்கு இங்கே உன்னோட வீட்டில் நம்முடைய வாழ்க்கையை தொடங்குவதில் உடன்பாடு இல்லை.அதற்குப் பதிலா என்னுடைய வீட்டில் என்னை பெத்தவங்க ஆசியோட அங்கே ஆரம்பிக்கணும்ன்னு நினைக்கிறேன்.அதுக்காகத்தான் இங்கே கூட பெருசா எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டேன்.”என்று கோர்வையாக பேசிக் கொண்டே போனவன் நன்றாக திரும்பி அவளைப் பார்க்க வசதியாக அமர்ந்து கொண்டான்.

 “இது என்ன இவ்வளவு நகை போட்டுக்கிட்டு வந்து இருக்க…எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு படுத்து தூங்கு.சரியா?”

“ம்”அரைமனதாய் தலையாட்டியவள் எழுந்து செல்ல முனையும் பொழுது அவளின் கை பிடித்து தடுத்து நிறுத்தினான்.

  “புருஷன்காரன் ஒண்ணுமே வேணாம்னு சொன்னா அதுக்காக அப்படியே போறது எல்லாம் ரொம்ப பெரிய பாவம் தெரியுமா?”என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பெசியவனைக் கண்டு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் சங்கமித்ரா. 

மெல்ல அவளை அருகே இழுத்தவன் அவளின் கன்னங்களை மென்மையாக பற்றி அவளுடைய கண்ணோடு கண் கலக்க விட்டவாறே அவளது நெற்றியில் மெல்ல இதழ் பதித்தான் பிரபஞ்சன். 

“எனக்கு உன்மேல இந்த நிமிஷம் மனசு முழுக்க ஆசை இருக்கு மித்ரா.காதலிச்சப்ப கூட நான் இவ்வளவு உறுதியா இருக்கலை.உன்னை பக்கத்தில் வச்சுக்கிட்டு தொடாம இருக்கிறது எல்லாம் எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.இருந்தும் நான் இவ்வளவு உறுதியா இருக்கேன்னா அதுக்கு ஒரே ஒரு காரணம்.எங்க அம்மாவும் , அப்பாவும் வாழ்ந்த வாழ்க்கை… 

அதே மாதிரி…உஹும்…அதை விடவும் காதல் நிறைஞ்ச நிறைவான ஒரு வாழ்க்கையை நாம வாழணும்.அதுதான் என்னோட ஆசை.உனக்கு என்னோட முடிவில் எந்த வருத்தமும் இல்லையே”அவள் மூக்கோடு மூக்கு உரசியபடி பேசினான். தலையை இடமும் வலமுமாக அசைத்து இல்லை என்று சொன்னாள். 

“இதைப்பத்தி பேசத் தான் நம்ம நிச்சயதார்த்தம் நடந்த அன்னைக்கு உன்னை பார்க்க ரூம்க்கு வர்றேன்னு சொன்னேன்.நீ தான் பயந்து போய் கதவை பூட்டிக்கிட்டு திறக்கவே இல்லை.எப்படியாவது உன்கிட்டே இதை பத்தி முன்னாடியே சொல்லிடணும்ன்னு தான் அன்னைக்கு உங்க வீட்டு சுவர் ஏறிக் குதிச்சு வந்தேன்.ஆனா..அப்புறம்…”தலையை அழுந்த கோதி ஏதோ நினைவுகளை புறம் தள்ள முயன்றான்.

  “சரி விடு…இப்போ தான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சே…இப்பவாவது ஐ லவ் யூ சொல்லேன் மித்ரா”அவன் குரலில் எதிர்பார்ப்பு நிரம்பி வழிந்தது.

 சிற்பம் செதுக்கப்படும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here